PDA

View Full Version : உலகளந்தவர் (அ. மை. 7)



இளசு
25-10-2005, 08:13 PM
உலகளந்தவர்

எரடோஸ்தீன்ஸ் ( கி.மு. 276 -194)


அறிவியல் மைல்கற்கள் -


ஆறாம் பாகம் - அறிவியல் நெம்புகோல் இங்கே -http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5832

----------------------------------------------------------




பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம்
பூமியின் விட்டத்தைப்போல் 12000 மடங்கு.

அதனால் சூரியனின் ரேகைகள் பூமியில் படும்போது
ஒன்றுக்கொன்று இணையானவையாய்த்தான் இருக்கவேண்டும்;
அது ஆஸ்திரேலியாவில் விழுந்தாலும் சரி.
ஆப்பிரிக்காவில் விழுந்தாலும் சரி.

இந்த சரியான அனுமானந்தான் இந்த மைல்கல்லை நட்ட
எரடோஸ்தீன்ஸ் நம் பூமியின் குறுக்களவை ( டயாமீட்டர்)
அளப்பதற்கு அடிப்படை.

இன்றைய லிபியாவின் ஷாஹத் அன்று சைரீன் என்று அழைக்கப்பட்டது.
அங்கே பிறந்து, நம் முந்தைய மைல்கள் நாயகர்கள் சிலரைப்போல்
இவரும் அலெஸாண்ட்ரியா அறிவுக்கூடலில் சங்கமம் ஆனவரே.
கணிதப்புலி;பூகோளச் சிங்கமான இவர்- அலெக்ஸாண்ட்ரியாவின்
மகா நூலகத்தின் இயக்குநராகவும் இருந்தார்.


பதவி உயர்ந்தவுடன் படிப்பதை நிறுத்தாத எரடோஸ்தீன்ஸ் அங்கிருந்த
பழைய பாப்பிரஸ் ( அன்றைய காகிதம்) நூல்களை ஆவலுடன் வாசித்தபோது
ஒரு தகவல் அவர் கவனத்தைச் சட்டென ஈர்த்தது -
எகிப்தின் தென்னெல்லையில் , நைல் நதியின் முதல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள
இடம் சையீன் ( இன்றைய அஸ்வான்) . இங்கு நீளமான பகல் கொண்ட
ஜூன் 21 அன்று உச்சிப்பொழுதில் தரையில் நட்ட குச்சிகளின் நிழலே விழுவதில்லை
என்ற தகவல்தான் அது. அந்த நேரத்தில் சூரியனின் பிம்பம் மிக ஆழமான கிணறுகளின்
அடியில் இருக்கும் நீரில் தெளிவாய் தெரியும்.


அதைப் படித்த நம் எரடோஸ்தீன்ஸ் மனதில் ஒரு கேள்வி.
சையீனில் அப்படி என்றால் அதற்கு வெகுதூரம் வடக்கே தள்ளி உள்ள
அலெக்ஸாண்ட்ரியாவில் அதே ஜூன்21 உச்சிப்பொழுதில் நேராய் நிற்கவைத்த
குச்சியின் நிழல் விழுகிறதே? அது எப்படி?
இணையாக வரும் சூரியனின் கதிர்கள் இருவேறு இடங்களில் இருவகை
பிம்பங்களைத் தருகிறது என்றால் - அது ஏன்?
ஆம்... பூமி சமதளமாய் இருக்க சாத்தியமில்லை. அது ஒரு உருண்டையாய் இருந்தால்
மட்டுமே இந்த வித்தியாசம் நிகழும்.


என்ன ஒரு மூளை நம் எரடோஸ்தீன்ஸக்கு. அலெக்ஸாண்டிரியா மண்ணில் விழுந்த
குச்சி நிழலை அளந்தவர், செங்குத்துக்கும் நிழலுக்கும் உள்ள தூரம்
ஒரு வட்டத்தின் 50-ல் ஒரு பாகம் பாகை ( டிகிரி) அளவுள்ளது எனக் கணக்கிட்டார்.
அதாவது 360 -ல் ஐம்பதில் ஒரு பாகம். அதாவது 7 டிகிரிக்கும் கொஞ்சம் கூட.
இப்போது அவர் தீர்மானித்தார் - சையீனுக்கும் அலெக்ஸாண்டிரியாவுக்கும் இடைப்பட்ட தூரம்
பூமிப்பந்தின் சுற்றளவின் ஐம்பதில் ஒரு பாகம்.


சுற்றளவு என்பது 2(பை)*r.
r = பந்தின் ஆரம் ( ரேடியஸ்)
சுற்றளவு தெரிந்தால், பூமியின் விட்டம் விளங்கிவிடும்.
கணக்குப் போட்டுத் தெளிந்த நம் எரடோஸ்தீன்ஸ் , நேராய் அளந்து பார்க்கக் கிளம்பினார்.
(பூகோளச் சிங்கம் ஒன்று புறப்பட்டதே எனப் பாடத்தோணுதில்ல..)


ஒரு ஆளை அமர்த்தி, அடி மேல் அடியாக நிதானமாய் நடக்க வைத்து
எண்ணிக்கொண்டே வந்து, இந்த தூரத்தை அளந்தார். என்ன ஆச்சரியம்.
(இன்றைய கணக்குக்குக் கிட்டத்தட்ட நெருங்கி 800 கி.மீ என அறிந்தார்.)
அதை ஐம்பதால் பெருக்கி சுற்றளவு அறிந்தார். பின் ஆரம், விட்டம் என
எல்லாமே இன்றைய அறிவியல் அளந்ததற்கு மிக நெருக்கமான விடையை
அன்றே சொன்னார்.

ஆம், வெறும் குச்சியின் நிழல், கூலி ஆளின் நடை - இவற்றைக்கொண்டு
உலகளந்த மாமேதை அவர்.
ஓங்கி உலகளந்த முதல் மனிதர்!

aren
25-10-2005, 11:11 PM
தெரியாத புரியாத பல விஷயங்களை எங்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொல்லி எங்களுக்கும் கொஞ்சம் அறிவை ஏற்றுகிறீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி.

அப்படின்னா பூமி உருண்டை என்பதை இவரா கண்டுபிடித்தார்?

உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒரு கோப்பாக மாற்றி பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.

இன்னும் கொடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பரஞ்சோதி
26-10-2005, 05:45 AM
அண்ணா, மிக அருமையாக செல்கிறது.

அறிவியல் மைல்கற்களை நான் இப்போவே சேகரிக்கத் தொடங்கி விட்டேன். கண்டிப்பாக நம் அறிவை வளர்க்க உதவும் பதிவு.

தொடருங்கள், மாணவர்களாக நாங்கள் இருக்கிறோம்.

gragavan
26-10-2005, 12:21 PM
இளசு அண்ணா, நீங்களும் ஆண்டாளும் ஒன்று. பின்னே...இருவரும் ஓங்கி உலகளந்த உத்தமர் பேர் பாடியிருக்கின்றீர்களே. நல்ல பதிவு. கொஞ்சம் சிக்கலான விஷயங்களைக் கூட எளிமையாகப் புரியும்படிச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக நன்று. மிக நன்று.

gragavan
26-10-2005, 12:23 PM
அப்புறம்....இதையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம். நல்ல தொகுப்பாக இருக்கும்.

பாரதி
26-10-2005, 01:59 PM
அட.. பாதயாத்திரை இதற்கும் உதவியிருக்கிறதே! இது மாதிரி ஆச்சரியமான தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது அண்ணா. நன்றி.

இளசு
30-10-2005, 10:42 PM
கருத்துகள் தந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி..


.

அப்படின்னா பூமி உருண்டை என்பதை இவரா கண்டுபிடித்தார்?

நன்றி வணக்கம்
ஆரென்

அன்பின் ஆரென்
உங்கள் கேள்வி மிக முக்கியமானது.
இவருக்கு மன்னேயே உலகம் உருண்டை என்று சொன்னவர் இருக்கிறார். மைல்கல்லில் அவரை மறந்துவிட்டேன்.
மிக அழகாய் அதை நினைவு படுத்தியதற்கு நன்றி.

உலகம் உருண்டை என முதலில் சொன்னவர்
ஒரு தேற்றத்தால் உலகப்புகழ் பெற்ற பிதாகரஸ்.
கிமு 580 -500.
பிறந்தது கிரேக்கம்; வாழ்ந்தது - இத்தாலி.
உலகம் உருண்டை என உணர அவர் மூன்றை சுட்டினார்:
1) வடக்கு நோக்கி நாம் நகர நகர துருவ நட்சத்திரம் இன்னும் இன்னும் உயரே தோணும்.
2) கப்பலின் பின்பக்கம் முதலில் நாம் பார்வையில் இருந்து மறையும்.
பாய்மரம் பிறகுதான் மறையும்.
3) சந்திர கிரகணங்களின்போது, பூமியின் நிழல் வட்டமாகத்தான் தோணும்.

இத்துடன் பூமி உருண்டை தன்னைத்தானே சுற்றுகிறது, அதனால்தான்
சூரியன், சந்திரன் இவை மாறி மாறித் தெரிகிறது என்றும் சொன்னவர் அவர்.
எல்லாவற்றையும் வடித்துப் பார்த்தால் எஞ்சும் ரசம் எண்களே என நம்பினார்.
எல்லாமும் இறுதியில் வெறும் எண்களே என்பது அவர் கோட்பாடு.
யாழின் நரம்பு நீளத்துக்கும் அது எழுப்பும் சுருதிக்கும் உள்ள உறவை ஆராய்ந்தவர்.
அதை கோள் மண்டலத்துக்கும் பொருத்திப்பார்த்து
கோள்களின் அளவு, அவற்றுக்கிடையே உள்ள தூரம் , அவற்றின் பயண வேகம்
எல்லாவற்றையும் ஒரு இசையாய்... த்வனியாய், லயமாய் விவரித்தவர்.
கோள்களை இசைக்கோலம் போடும் கருவிகளாய்க் கண்ட கலைஞர் அவர்.
.