PDA

View Full Version : தாவரவியலின் தந்தை (அ.மை. 4)



இளசு
22-10-2005, 08:32 PM
தாவரவியலின் தந்தை

தியோப்ராஸ்டஸ் கி.மு.372 - 287.


அறிவியல் மைல்கற்கள் - 4

மூன்றாம் பாகம் - அறிஞர் வந்தார் இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5815


--------------------------------------------------------------

(தாவரவியல் வல்லுநர் நண்பர் முகிலன் போன்றோரெல்லாம்
உலவும் மன்றத்தில் - கொஞ்சம் கூச்சத்தோடு இந்த பாகம்.)

அறிஞர் அரிஸ்டாட்டில் பிளாட்டோவின் சீடர் என்றால்
தியோப்ராஸ்டஸ் அரிஸ்டாட்டிலின் சீடர்.
குரு வம்சத்தில் பிளாட்டோவின் பேரர்.
குரு அரிஸ்டாட்டிலும், சீடர் தியோப்ராஸ்டஸம் சேர்ந்து
ஏதென்ஸின் புகழ்பெற்ற லைசியம் தத்துவக் கல்லூரியை நிறுவினார்கள்.

சீடரே கல்லூரித் தலைவராக பல காலம் விளங்கினார்.
திறமைகள் சில நேரம் இருக்கும் இடத்தாலே வெளிக்கொணரப்படுகின்றன -
குன்றின் உச்சிக்கு போன ஜோதி போல.
லைசியம் கல்லூரித் தலைவராக தியோப்ராஸ்டஸ் பணியாற்றிய காலத்தில்
இரு முக்கிய நூல்களை வெளியிட்டார்:
1) தாவரங்களின் இயற்கை வரலாறு
2) தாவரங்களின் வளர்ச்சிக்கான காரணங்கள்

இந்த இரண்டும் அடுத்து 1500 ஆண்டுகளுக்கு தாவரவியலின்
அசைக்க முடியாத மேற்கோள் நூல்களாகத் திகழ்ந்தன.
இன்று பதிப்பித்து, நாளை பரணில் தூங்கும் நூல்களை
எழுதியவர்களுக்கெல்லாம் இந்த சாதனை - ஓர் அமில ஊற்று!
'கர்வப்படாதே சகோதரா ' என்று அறிவுரை சொல்லும் கானா பாட்டு!!

15 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் இவை காஸாவின் தியோடர் என்பவரால்
ஆராதனையோடு மொழி பெயர்க்கப்பட்டன. வாசகர் வட்டம் இன்னும் அதிகரித்து,
காலத்தை வென்று சாதனை படைத்தன.

இந்த இருநூல்களிலும் தாவரவியலின் அத்தனை அடிப்படைகளும்
அழகாக அலசப்பட்டிருந்தன.
500க்கும் மேற்பட்ட தாவரங்களின் அடையாளங்கள்..
பொருத்தமாய் அன்றாட கிரேக்க சொலவடைகளில் இருந்து அவர் சூட்டிய பெயர்கள்..
செடிகொடிகளின் அங்க அமைவுகள், உள்கட்டமைப்பு,
விதைகளின் வீரிய முளைப்பு
வெட்டி ஒட்டி வளர்த்தலின் சூட்சுமம்
விவசாயம், மகசூல்
செடிகளைத் தாக்கும் நோய்கள்
மனித நோய்களுக்கு மருந்தான செடிகள்..

இப்படி இந்த அறிவியல் பிரிவின் அகல-நீளங்களை அடையாளம் காட்டி இருந்தார் தியோப்ராஸ்டஸ்.
பனைமரங்களின் பூக்களைக் கண்டு
தாவரங்களிலும் ஆண்-பெண் உண்டு
என அன்றே சொன்னவர் இவர்.
அதை ஆராய்ச்சி மூலம் நிருபணம் செய்தவர்
1700 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த ரூடோல்ப் காமாரியஸ் என்பவர்.
ஆம் -- கவனித்து பதிவதே அறிவியலின் ஆரம்பம்.
ஆராய்ச்சி, நிரூபணங்கள் இவை மிகப் பின்னால் வரும்; வராமலும் போகக்கூடும்.

கவனி..கவனி.. கவனமாய் எதையும் கவனி..
இந்தத் தாரகமந்திரத்தால் குருவின் கடற்குள அறிவூற்று போலவே
சீடருக்கும் லைசியக் கல்லூரியின் தோட்டம் களமாய் அமைந்தது.
உலகின் முதல் பொட்டானிக்கல் தோட்டம்?

சீராட்டி வளர்த்த செடிகளின் ஞானம் இந்தத் தோட்டம் தந்தது.
மற்றவை சக சீடர் அலெக்ஸாண்டர் செ(வெ)ன்ற போர்முனைகளுக்குச் சென்றுவந்த
வீரர்கள் தந்தது.
அருகில் இருந்ததையும், அருகாமையில் இருந்து தேடி வந்ததையும்
ஒருங்கே ஆராய்ந்து தியோப்ராஸ்டஸ் எழுதிய இந்த அறிவுக்காவியங்கள்
காலம் நமக்கு அவர் மூலம் அளித்த பொக்கிஷ ஆரம்பங்கள்.
அவர் ஆரம்பித்த தாவர பரம்பரைக் கிளை (டாக்ஸானமி) இன்று எத்தனை
எத்தனை பரந்து விரிந்து ...

அதானால்தான் 18ம் நூற்றாண்டின் டாக்ஸானமி ஜாம்பவான் கரோலஸ் லின்னேயஸ்
நம் தியோப்ரஸ்டஸை , 'தாவரவியலின் தந்தை' எனப் பொருத்தமாய் புகழாரம் சூட்டி அழைத்தார்.

மன்மதன்
23-10-2005, 04:41 AM
தாவிரவியலை பற்றி அறிய தந்த இளசுவுக்கு நன்றி..... இது மாதிரி கட்டுரைகள் நிறைய கொடுக்க வேண்டும் என்பது இந்த அன்பு தம்பியின் வேண்டுகோள்...

இளசு
23-10-2005, 10:14 AM
அன்புத்தம்பியின் உற்சாகக் கருத்துக்கு
அண்ணனின் நன்றி.

என்னால் முடிந்த அளவு சிறுசிறு தலைப்புகளில்
அறிவியலின் முழுப்பயணத்தைச் சொல்ல ஆசை.
எல்லாம் படித்த சேதிகள் தான்.. பரிச்சய ஞானம் இல்லை. ஆதலால் இவை தலைப்புகளின் சுருக்கமான குறிப்புகளே..

கணக்கியல் வந்தால் இக்பால் அவர்கள், தாவரவியல் வந்தால் முகிலன், இயற்பியல் வந்தால் நண்பன் - என அந்தந்த தலைப்புகளில் அனுபவ, கல்வி ஞானம் உள்ள மன்ற நண்பர்கள் பின்னூட்டம் இட்டு செழுமைப்படுத்த வேண்டுகிறேன்.

நன்றி

பாரதி
23-10-2005, 01:06 PM
தாவரவியலின் மூதாதையர்கள் பற்றி இதுவரைக்கும் நான் அறிந்திருந்திராத விசயங்கள் அண்ணா... மிக்க நன்றி.

இளசு
23-10-2005, 01:17 PM
நன்றி பாரதி.
நாம் எல்லாரும் கூடி இன்னும் தகவல்கள் பரிமாறி
அறிவியல் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் ..சரியா?

பாரதி
23-10-2005, 01:23 PM
சரி அண்ணா.. அறிவியல் - விஞ்ஞானம் :- படிக்கும் காலத்தில் எனக்குப் பிடித்த பாடங்களில் முக்கிய இடம் பிடித்தவை இவை. ஆகவே நிச்சயம் உங்கள் பயணத்தில் பங்கு பெறுவதில் எனக்கு ஆர்வமே!

aren
08-11-2005, 09:42 AM
மன்றத்தின் மூலம் இப்படி பல விஷயங்கள் நமக்கு தெரிகின்றன. இதற்காகவே தினமும் மன்றம் வரவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. தொடருங்கள் இளசு அவர்களே.

பரஞ்சோதி
08-11-2005, 04:02 PM
இளசு அண்ணா, இந்த தொகுப்பை கணினியில் சேமித்து வைத்திருங்க, பின்னர் முடிந்தப் பின்னர் உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கு பிரதி எடுத்தோ, அல்லது கோப்பாகவோ பரிசாக கொடுங்க.

பரிசு வாங்க சக்தி தயார்.

mukilan
09-11-2005, 02:57 AM
அன்புள்ள இளசு அண்ணா! உங்களின் கருத்துக்கு நன்றி. நான் தாவரவியலில் நிபுணரெல்லாம் இல்லை. வேளாண் அறிவியல் ஓரளவிற்குத் தெரியும். வேளாண்மையும் தாவரவியலும் ஒன்று போலவே தோன்றினாலும் தாவரவியல் தாவரங்களின் செயல்பாடு, இயக்கவியல், போன்றவற்றைப் பற்றி ஆழமாகப் படிப்பது. வேளாண் அறிவியல் தாவரம், நிலம், நீர், நுண்ணுயிரிகள், பூச்சிகள் போன்ற பல சூழ்நிலையியல் காரணிகள் ஒன்றொடொன்று இயங்குவது பற்றியும் அவற்றை பயன்படுத்தி மனித குலம் மேம்பாடு அடைய செய்வ்து பற்றிக் கற்றுத்தருவது. (மான்சான்டோ போன்ற தனியார் நிறுவனங்கள் மரபியல் மாறுபாடு செய்யப்பட்ட தாவரங்கள் மூலம் வளர்ந்து வரும் தேசங்களை கொள்ளை அடிக்க முயல்வது தனிக்கதை!). என்னால் இயன்ற அளவு சரியான தகவல்களை இங்கு கொடுக்க முயல்கிறேன். ஆனாலும் பொதுவாக அறிவியல் பற்றிய தங்களின் தொடர் படிக்கும் பொழுது இது போல எழுத முடியுமா எனத் தயக்கமாய் இருக்கிறது. .

"கணக்கியல் வந்தால் இக்பால் அவர்கள், தாவரவியல் வந்தால் முகிலன், இயற்பியல் வந்தால் நண்பன் - என அந்தந்த தலைப்புகளில் அனுபவ, கல்வி ஞானம் உள்ள மன்ற நண்பர்கள் பின்னூட்டம் இட்டு செழுமைப்படுத்த வேண்டுகிறேன்.

இதுபோல அனுபவம் எல்லாம் எனக்கு இல்லை என்பதும் என் தயக்கத்தை அதிகரிக்கின்றது. விரைவில் எழுதுகிறேன்

அறிஞர்
11-11-2005, 04:31 PM
வாவ் அருமை இளசு.... புதிய தகவல்களை காணும்போது மகிழ்ச்சி தருகிறது...

நல்ல தகவலகள்

முகிலனின் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்

இளசு
11-11-2005, 10:43 PM
அன்பின் ஆரென், இளவல் பரம்ஸ், நண்பர் அறிஞர்-

கருத்துகள் ஊக்குகின்றன. நன்றி சொந்தங்களே.

அன்பு முகிலன்,
அண்ணனைப்பார்த்துமா தயக்கம்?
படித்துத் தெரிந்ததைக் கூச்சத்துடனாவது பதித்துத் தள்ளுகிறேன்.
(மற்றபடி அனுபவ அறிவு எனக்கு பூச்சியம்)

ஊக்கம்தர நண்பர்கள் பலருண்டு. எழுதுங்கள் முகிலன்.
இது நம் தளம் .நம் களம்.
கற்று, கற்பித்து
மகிழ்ந்து, மகிழ்வித்து
ஊக்கப்பட்டு, ஊக்கம் தந்து
வளர்வதே நம் நோக்கம்...

தயக்கம் உதறுங்கள்.... எண்ணியதை எழுதுங்கள்..