PDA

View Full Version : திருட்டு(த்)தேன்!!



poo
22-10-2005, 09:23 AM
அந்த சந்தைத்தோப்பு களேபரமாகிக் கொண்டிருந்தது...

பெரிய மைதானம்.. தலையை விரித்துபோட்ட புளியமரங்கள்..
வாராவாரம் செவ்வாய்க்கிழமை சந்தை அந்த மைதானத்தில்தான் கூடும்.. அதனால் புளியந்தோப்பு சந்தைத்தோப்பாகிவிட்டது. சுற்றுவட்டாரம் ஐம்பது மைல் தூரத்திலிருந்துகூட மாடுகள் வரும்.. மாடுகளை நல்ல போஷாக்கானவைகளாக காட்டுவதற்கு சந்தைக்கு அரை மைல் தூரத்தில் இருந்தே பல அழகு நிலையங்கள். அந்த ஏரியாவாசிகள் அநேகம்பேருக்கு தவிட்டு வியாபாரமும், தண்ணீர்த்தொட்டிகளும்
வாரம்தோறும் வரப்பிரசாதங்கள்..

திங்கட்கிழமை இரவே சலசலவென சலங்கை குலுங்க குலுங்க ஒற்றைமாட்டு வண்டிச்சத்தம் கேட்க ஆரம்பித்துவிடும்...அந்த சலங்கை சங்கீதம்தான் வண்டியிழுக்கும் மாடுகளுக்கு ஐலசா பாட்டு...

குறைந்தது பத்து வண்டிகளில் வளையல்கடைகள்.....மாடு வாங்க வந்திருந்த அறுபது வயசுக்கு அதிகமான குமரர்கள் சிலர் சந்தைக்கு எதிரில் இருக்கும் சாராயக்கடையில் சுதி ஏற்றிக்கொண்டு நேரே வளையல் கடைக்கு வந்து ரவுசுகட்ட ஆரம்பித்த்திருந்தார்கள்... அவர்களின் ஆசை மனைவியிடம் வாசம் மறைக்க.. வாசம் மணக்க டஜன் கணக்கில் கண்ணாடி வளையள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

சந்தையின் ஒரு பக்கம் நேர்வரிசையில் பல மண் மேடுகள் அழகான மேடைகளாக காட்சி அளித்துக் கொண்டிருந்தன.. அவைகள்தான் இந்த சந்தையின் காம்ப்ளக்ஸ் கார்னர்...

ஒரு கடையில் அரைக்கீரை, சிறுக்கீரை, மொளகா நாத்து , கத்தரி நாத்து என குவித்து வைத்திருந்தனர். கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டிருந்த மாடுகள் அந்த பச்சையைப் பார்த்து உச்சு கொட்டிக் கொண்டிருந்தன.. அதை கவனிக்காமல் அவைகளை கேராளாவிற்கு அனுப்ப விலை பேசிக்கொண்டு இருந்தனர் கக்கத்தில் குடையோடு பல புண்ணியவான்கள்...

கீரை மேட்டுக்கு பக்கமா.. வரிசையாக நாலு கடை..கலர் கலரா பேண்ட்டு, சட்டை, அரைக்கால் டவுசர், புடவைன்னு தொங்கவிட்டிருக்க.. அங்கே பிழைப்புதேடி வந்திருந்த ஐந்தாறு இந்திக்காரர்கள் ஒவ்வொன்னா எடுத்து எடுத்து அளவு பார்த்துக்கொண்டு இருந்தனர்.. இங்க இருக்கற இளசுங்க எல்லாம் இப்போ சந்தையில துணி எடுக்கிறது இல்ல.. டவுனு பக்கம் போய் தார் ரோட்டுல
கொட்டியிருக்கிற மார்க்கெட்டுலதான் துணிகளை எடுப்பாங்க.. இதே மக்க பம்பாய் பக்கம் வேலைக்கு போனா அங்க இருக்கிற சந்தையிலதான் துணி எடுப்பாங்கங்கிறது தனிக்கதை..
ம்ம்.. சும்மா சொல்லிவைச்சங்க அக்கரைக்கு இக்கரை பச்சைன்னு..

கடைசி துணிக்கடைக்கு பக்கத்துல பார்த்தா குடைக்கார பாய் நாலைஞ்சு கிழிஞ்ச குடையையும் ரெண்டு கட்டு துரு ஏறன குடைக்கம்பிகளையும் வைச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தார்..அவரோட பேரன் தொழில்ல அடுத்தபடின்னு பூட்டு ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்க.. அவன்கிட்ட ஒரு லொல்லு பிடிச்ச ஆசாமி குடியில சாவியை தொலைச்சுட்டேன்னு பழைய சைக்கிளை தூக்கியாந்து நிறுத்திட்டு கொத்து சாவியில ஒவ்வொன்னா விட்டு விட்டு தொறக்க .. . எப்படியும் உடைக்காம
திறக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட குடிமகனை பாராட்டியே ஆகனும்.

அந்த பாய்க் கடை பக்கமா பாயாசக்கடை..

பாய்க்கடைன்னா படுக்கற பாய் இல்ல.. அதையெல்லாம் சைக்கிள்ள கட்டி வைச்சி அப்படியே விப்பாங்க..அதுக்குன்னு தனி எடம்.. தனிக்கடை கிடையாது.. வித்தா பார்ப்பாங்க.. இல்லனா சைக்கிளை உருட்டிக்கிட்டு தெருமேல போய்டுவாங்க.. இந்த பாய்க்கடை குடைக்கார பாய் கடை..

பாய்க்கடை பக்கத்துல பாயாசக்கடையை போட்டதுக்கு பாசமும்கூட ஒரு காரணம்... ஆமாம்.. அந்த பாயோட அக்கா மவந்தான் பாயாசக்கடைக்கு சொந்தக்காரன்.. பாயாசம்னா கல்யாண
வூட்ல ஊத்தற சவ்வரிசி வெள்ளைப்பாயசமில்ல.. இது கலர் கலரா இருக்கும்.. பள்ளிக்கூடத்துல வடிச்சி ஊத்தன தண்ணியில சக்கரை போட்டு கலர் போட்டா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்..
காலையில 11 மணியில இருந்து ஒரு பத்து பதினைஞ்சு நிமிசம் பாயால உட்கார முடியாது.. அப்படி கூட்டம் நெருக்கும்.. ஏன்னா அதான் சந்தைத்தோப்பு பக்கமா இருக்கற பள்ளிக்கூடத்து இண்ட் ரோல் டயம். அவுர்ற டவுசரை ஒரு கையால தூக்கிவுட்டுக்கிட்டு ஒரே கையால டம்ளர் டம்ளரா உள்ளாற வுட்டுக்கிட்டு இருப்பானுங்க.. வெலையும் ரொம்ப குறைச்சல்.. இந்த பாயசத்துக்காகவே அம்மா தெனம் குடுக்கற காசை செலவு பண்ணாம சேர்த்து வைச்சிருப்பானுவ..இண்ட்ரோல் முடிஞ்சி ஸ்கூலுக்கு ஓடற பசங்க சட்டை கையை பார்த்தா ராமர் அணிலுமேல போட்ட கோடுபோல ரோடு போட்டிருப்பானுங்க..

சந்தையில காய்கறி கடைக்குன்னு தனி கட்டடம் கவர்மெண்ட் கட்டிவுட்டுருந்தாலும் அதுல விக்காம சந்தைக்குன்னே இருக்கற பாரம்பரிய மண்மேட்டுலதான் காய்கறிக்கடையும்.. நாம வாடினாலும் காய்ங்க வாடிடக்கூடாதுன்னு நிழலுக்கு வெள்ளை சாக்கை பிரிச்சி தைச்சு நாலு மூலையில குச்சியை நட்டு மேல கட்டி வைச்சிருப்பாங்க.. பொடிசுகளோட காய்கறி வாங்கப்போற பொம்பளைவ திட்டு வாங்காம திரும்பவே முடியாது.. பின்ன கையை கால வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம மூலையில நிக்கற குச்சியை பிடிச்சி ஆட்டிக்கிட்டு...

காய்கறி வியாபாரம் ஜரூராய் போய்க்கொண்டிருந்தது.

அந்த காய்கறிக்கடைகளுக்கு கட்டப்பட்ட கட்டடங்களில்தான் களேபரம் நடந்து கொண்டிருந்தது.. அங்கேதான் ஒரு முப்பது பேர் கொண்ட நரிக்குறவர் கூட்டம் காலம்காலமாக தங்கியிருக்கிறது..

அவர்களுக்குள்தான் அந்த களேபரம்..

ஓய்... ஏன் இப்டி அடிச்சிக்கிற.. ஓன் சொத்தா பூடுச்சி..

சொத்து பத்து இருந்தா கவலையெல்லயே.. இப்டி கண்னு முழிச்சி கடிவாங்கி கொண்டாந்ததை அந்த களவாணிப்பையன் கொண்டு போய்ட்டான்.. அத்த கேக்காம வுட்டா எப்டி?

சாமி... ஒன்கிட்ட எத்தனையோமொறை சொல்லிட்டேன்.. அவனை கூட்டத்தைவுட்டு தொறத்துன்னு.. நீதான் கேக்கல..

அவனை தொரத்திப்புட்டா அவன் எங்க போவான்...கோலியனூரைவுட்டு
நாம கெளம்புன அன்னைக்கே நம்பகூட வந்துட்ட அவன் உசுரு போறவரைக்கும் இங்கதான் இருப்பான்..

அப்போன்னா.. அந்த நாய் வரட்டும்.. கொடலை உருவிடறேன்..

உருவிப்பாரு தெரியும்..

அந்த .... இன்னைக்கு ஒருவழி பண்ணல.. நான் நாட்டுக்கொறவனே இல்ல..

...............................

..........

- புரியாத பாஷைகளில் சண்டைகள் நீண்டுகொண்டே இருந்தது... ஒருவர் பின் ஒருவராக தொடங்கியவர்கள் இப்போது கூட்டாக கத்த... சந்தையின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின்மேல் திரும்பிக் கொண்டிருந்தது. மாடு படியவில்லையென்று கிளம்பியவர்களில் சிலர் அந்த சண்டைகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

******

கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்..

ஐயா.. எப்படியாச்சும் வர்ற புதனுக்குள்ள கெடைக்க வழி பண்ணுங்கய்யா....

ம்ம்... முயற்சி பண்றேன்..

ஐயா..காதுல கழுத்துல கெடந்ததை வித்து கைபோரு போட்டு தண்ணியும் கெடைச்சிடுத்து.. இப்போ கரண்ட்டு கொடுக்கறவன், பட்டா சிட்டு வாங்கியாந்தான் கரண்ட்டு தர முடியும்னு சொல்லிட்டான்..
இப்படியே போச்சுன்னா பருவம் தவறிடும் சாமி..

இதையே எத்தனை முறைதான்யா சொல்லுவ...

..........

நான் இன்னா பண்றது.. ஆபிசருங்க எல்லாம் சீட்ல உட்காரனும்யா.. ஒன் நேரம் தாசில்தாரை மாத்திட்டாங்க..

ஐ..ய்..யா....

இப்போ இழுத்து இன்னாய்யா புண்ணியம்.. நீதான் இடுப்புக்கட்டை கழட்டறதுக்கே யோசிக்கறயே..

இருந்தாத்தானுங்களே கழட்ட..

இந்த நக்கலு.. கிண்டலு எல்ல்லாம் இங்க வைச்சுக்காத..

அய்யோ.. சாமி.. நான் நெசத்தை சொன்னேன்ங்க.. ஒரு துண்டுசீட்ல நான் இங்கதான் குடியிருக்கேன்னு இப்போ எழுதிக்குடுங்க சாமி.. அதையாச்சும் கொண்டான்னு கரண்ட்டுக்காரன் சொல்றான் சாமி..

ம்ம்.. யோவ்.. இப்போ வேணாம்யா.. வெளியில இருக்கானே அவன் ஒரு கிரிமினல்.. நீ நாளைக்கு வா நான் தர்றேன் - அவர் சொன்னது வெளியில் தேமே என்று உட்கார்ந்திருந்த தலையாரியை.

சரிங்க.. பட்டா வெவகாரம் முடிக்க இன்னும் எவ்வளவு ஆகும்..

ஒரு நாலு தாள் ஆகும்.. புரட்டி கொண்டா உடனே முடிச்சிடறேன்.. இல்லைனா வுடு.. நான் கையெழுத்து போட்டுத்தர்றேன்.. நீயே தாலுக்கா ஆபிஸ்போய் பார்த்துக்க..

கொஞ்சம் குறைச்சி பாருங்களேன் சாமி..

யோவ்.. எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.. நான்போனா நின்னு எல்லாம் வேலை வாங்கமாட்டேன்..தூக்கிப்போட்டு காரியத்தை முடிச்சிக்கினு வந்துரனும்..

சரிங்க.. கொண்டாறேன்..

நான் கெளம்பறேன்.. பணத்தை இங்க கொண்டாறாத.. வீட்டுக்கிட்ட எடுத்துக்கிட்டு வா.

.............

சேகர் சார் கொஞ்சம் நில்லுங்க...மழை வர்றாப்போல இருக்கு.போற வழியில என்னை வீட்டுக்கிட்ட இறக்கிவிட்டுங்களேன்..ப்ளீஸ்..

அதுக்கென்ன பேஷா வாங்க.. இதுக்குதான் ஒரு வண்டியை வாங்கிப்போடும்னு சொன்னா கேக்கமாட்றீங்களே...

உம்மபோல பக்கத்து தெருவில் இருந்துகிட்டு வண்டியில வேலைக்கு வர்ற பாக்கியம் நமக்கெல்லாம் கிட்டுமா சார்.. - நமட்டுச்சிரிப்பு சிரித்தார் வாத்தியார்.

- மழை நின்று இலேசான தூரல் மட்டும் விழுந்து கொண்டிருந்தது.. மழைக்காக ஒதுங்கி நின்றுகொண்டிருந்த அந்த நரிக்குறவ இளைஞனுக்கு அங்கே நடந்தவைகள் புரிந்ததாவென தெரியவில்லை.

******

சாமி.. ஒரிஜினல் தேனு சாமி..

ம்ம்க்கும்.. எங்களுக்கு தெரியாதா.. ஜீரா காய்ச்சி ஊத்தற மேட்டரெல்லாம்..

சாமி.. அது உங்களைப்போல படிச்சவங்க செய்யற வேலை சாமி..

ஏய்.. ரொம்ப பேசற நீ.. நரிக்குறவ நா....

ஏன் சாமி நிறுத்திட்ட .. முழுசா சொல்லிப்புடு.. ஆனா அதுங்கக்கூட எங்களைப்பார்த்தா வுடமாட்டுதே சாமி..

ஆண்டவன் அளந்துதாண்டா வைச்சிருக்கான்..சரி.. எவ்வளவு சொல்ற..

மொத்தம் ரெண்டேகால் லிட்டரு இருக்கு சாமி..

ம்ம்ஹ்..ஹ.. அதான் நைட் காலி பண்ண பாட்டில்ல ஊத்தியாந்திருக்கியே...எப்படிடா நீ ஒருத்தனே மூணு பாட்டிலை காலி பண்ண.. உன் பொண்டாட்டியும் சாப்பிடுவா இல்ல..

சாமி.... தப்பா பேசாத சாமி.. வயித்துப் பொழப்புக்கு வந்தவன்கிட்ட கண்டதை பேசாத சாமி..

சரி.. நீ தத்துவம் பேசாத.. என்ன ரேட்டு சொல்லு..

நீயே சொல்லு சாமி..

அம்பது ரூபா தர்றேன்..

ஒரு பாட்டலுக்கா சாமி..

டேய்.. உனக்கு நக்கலு ரொம்பவே ஜாஸ்திடா..

பின்ன இன்னா சாமி.. கண்ணு முழிச்சு.. கடிவாங்கி கொண்டாந்த கஷ்டம் தெரியாம பேசற..

ஆமாம்.. ஆமாம்.. உங்க கூட்டத்தைப்பத்தி தெரியாதா.. ஒருத்தன் எடுத்துக்கிட்டு வந்திருப்பான்.. அதை இன்னொருத்தன் திருடிக்கிட்டு வந்திருவான்..

கூட்டம்பத்தி பேசாத சாமி.. - சுருக்கென்று உணர்ந்தான்.

ஆமாம்.. பெரிய வீரபாண்டி பரம்பரை.. ஹ்ஹ்.. எனக்கென்ன அதைப்பத்தி.. சரி எவ்வளவு சொல்லு?

மூணுக்கும் சேர்த்து நூத்தியெழுவது ரூவா தா சாமி..

சான்ஸே இல்ல.. வேனும்னா எழுவத்தி அஞ்சு ரூபா தர்றேன்..

சாமி.. இன்னா சாமி.. பாதிவெல சொல்ற..

சரி.. எனக்கு வேலை இருக்கு.. ·பைனலா நூறு ரூபா தர்றேன் எடுத்து வை..

கூட இருவது ரூபா சேத்துக்குடு சாமி..

ம்ஹஹம்..

சாமி.. ஒனக்கு புண்ணியமா போவும்சாமி.. குடு சாமி,..

சரி..பிடி.. இலேசுல வுடற பயலுவலா நீங்க...

- பணத்தை எண்ணி வாங்கிக்கொண்டு திரும்ப மீண்டும் மழை.

******
மழையினால் சந்தையின் கலகலப்பும் களேபரமும் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து கொண்டிருந்தது..
******

டேய் சேகரு.. கால் வலி தாங்கலடா..

இப்போ இன்னா அதுக்கு.. - கையில் இருந்த தேன் பாட்டில்களை டேபிளில் வைத்தபடி கேட்டார்.

டாக்டரு சத்து ஊசி போடனும்னு சொல்றாருடா..

போட்டுக்க..

இப்படி சொன்னா எப்படிடா.. ஊசிக்கு காசு வேணாமா..

ஏன்.. தர்ம ஆஸ்பத்திரி எல்லாம் போவ மாட்டீங்களா..

அங்கபோனா சரியா கவனிக்க மாட்றாங்கடா...

என்னை அங்கத்தான பெத்த.. அப்போ தெரில்லயா உனக்கு..

இப்படி ஏட்டிக்கு போட்டியா ஏண்டா பேசற..

ஆமாம்.. உன்கூட வெளையாட எனக்கு ஆசை.. போம்மா.. போ.. எதிர்ல வராத..

ஒரு அம்பது ரூபா இருந்தா 3 ஊசி போட்டுக்குவேண்டா..

ஒரே ஊசியில போறமாதிரி இருந்தா சொல்லு.. ஐநூறு ரூபாக்கூட தர்றேன்..

அது எப்படிடா ஒரு ஊசியில சரியாகும்..

ம்ம்க்கும்.. ரொம்ப முக்கியம்.. உனக்கு சரியாகி என்ன சாதிக்கப்போற.. ஒரேடியா போறமாதிரி ஒரு ஊசிவேணா போட்டுக்கன்னு சொல்றேன்..
...........

- உள்ளக்குமுறலை கொட்டுவதற்கு துணை வேண்டும்.. வெளியே கொட்டிக்கொண்டிருந்த வானத்தைப்பற்றி கவலைப்படாமல் வாசல் நோக்கி நகரத் தொடங்கினாள்...

******

வெளியில் நின்ற அந்த நரிக்குறவ இளைஞனுக்கு உள்ளே நடந்தது நன்றாக புரிந்தது...
கையில் இருந்த பணத்தைப் பார்த்தான்..
திருட்டுத் தேன்....திருட்டுதேன்.. திருட்டுத் தேன். மனம் அவனையறியாமல் பேசியது.. மாலையில் கூட்டம் திரும்பினால் என்ன நடக்கும்...நடக்கட்டும்., கையில் இருந்த நோட்டுகளில் இருபது ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு நூறு ரூபாயை வாசலில் தவறவிட்டு வீதியில் இறங்கினான்.

- கூட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவன் அண்ணாந்து பார்த்தான்.. வானம் இப்போது தெளிவாக இருந்தது..

இளசு
22-10-2005, 06:07 PM
சந்தை வர்ணனைகள் அருமை.
பல காதாபாத்திரங்களின் உலாவல் - சற்றே குழப்பம்.
தொடர்பு படுத்தி, தொடர்ந்து படித்தால் -
ஏழையின் இளகிய மனது,
கல்லுக்குள் ஈரம்.

பூவின் சிறுகதைக்கு வாழ்த்துகள்.

கோலியனூர் பக்கம் என்றால், இது எந்த ஊர் சந்தை?
ம்ம்ம்ம்ம்.. யோசிக்கிறேன்..

mukilan
22-10-2005, 08:42 PM
கோலியனூர் விழுப்புரம் பக்கம். பாண்டிச்சேரிக்கும் தான். இதில் எங்கே என பூ அவர்கள் தான் சொல்ல வேண்டும்

பாரதி
23-10-2005, 01:33 PM
ஒரு கேமரா கண் கொண்டு, சந்தையின் ஒரு ஓரத்தில் இருந்து ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக கதையைக் கொண்டு வந்து, வெட்டி, வேறு கதாபாத்திரங்களைக் காண்பித்து, கதைக்கு தொடர்புடைய பாத்திரங்களைக் கொண்டு வந்து முடித்த விதம் ஜோராக இருந்தது. இதைத்தான் திரைக்கதை என்று சொல்கிறார்களோ..? உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் பூ. கதையில் வரும் நடை மட்டும் அங்கங்கே மாறுபடுகிறது. மற்றபடி சிறப்பான முயற்சி பூ.

poo
24-10-2005, 08:17 AM
பாராட்டுகளுக்கு நன்றிகள்..

அண்ணா.. இது மதகடிப்பட்டு (கோலியனூரில் இருந்து 10 கி.மீ புதுவை நோக்கி..) சந்தை. சந்தையை இன்னும் நிறையவே சொல்லியிருக்கலாம்.. (திட்டமிட்டு எழுதாததால் சொல்லவில்லை..) அந்தளவு அந்த சந்தை எனக்கு பரிச்சயம். அந்த சந்தைத்தோப்பு பள்ளியில்தான் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அந்த குழப்பம் வரக்கூடாதென நினைத்தேன்.. ஆனால் நீள..நீள வந்துவிடுகிறது. இருமுறை படித்துவிடுங்கள் அண்ணா.

முகிலன்.. நேர்ல வாங்க இந்த கதையில சொன்ன சந்தையையும் காட்றேன்.. எதிர்ல இருக்க ...கடையையும் காட்றேன்..

அன்பு பாரதி அவர்களுக்கு... மிக்க நன்றி.. உண்மைதான் நடுநடுவே நடையில் மாற்றங்கள்.. நான் இப்படி எழுதவேண்டும்.. இதை எழுதவேண்டுமென யோசிக்காமல் கைபோன போக்கில் தட்டிக் கொண்டிருந்தேன்.. அதனால்தான் அப்படி. இந்தக் கதையை முடிக்கும்போது எதையும் திட்டமிட்டு செய்தால்தான் சரியாக வருமென புரிந்து கொண்டேன்..

தைரியமாக இனி முயற்சிக்கிறேன்!

நன்றி!

gragavan
24-10-2005, 08:46 AM
பூ மிகவும் அற்புதமான கதை. என்ன இயல்பான நடை. அப்படியே சந்தைக்குள் புகுந்து மேலெல்லாம் ஒரு கசகசப்பான சுகத்துடன் வெளியே வந்த உணர்வு. இந்தக்கதை எக்ஸிஸ்டன்ஷியலிசத்தில் சேருமா? ஏனென்றால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதாவரு இருக்கும். ஆனால் எல்லாம் ஒன்றாய் இருக்கும். இல்லையா? விளக்குங்களேன்.

செல்வா
19-02-2008, 09:00 PM
ஒரு வித்தியாசமான கதை வாசிக்கக் கொடுத்து வைத்தேன். இத்தகைய கரு கொண்ட கதைகள் பல வாசித்திருந்தாலும் இந்த கதையின் போக்கு. சந்தையில் துவங்கி சந்தில் திரும்பி கிராம அலுவலகம் சென்று அஙகிருந்து இரவல் வண்டியில் வீட்டுக்கு வந்து திருட்டுத் தேன் குடித்து மழைநின்றபின்னும் மனதில் அழகிய கதையின் சாரல்....

மனம் போன போக்கில் எழுதினேன் என ஆசிரியர் கூறியதால் அவர் எங்கோ போக நினைத்து வழியில் திரும்பிய பாதையில் பயணித்ததை தெரிந்து கொள்ள முடிகிறது ... ஆனாலும் என்ன பயணம் இனிக்கிறதே...