PDA

View Full Version : வானத்தைப் பார்த்தேன் (2)



இளசு
20-10-2005, 08:27 PM
வானத்தைப் பார்த்தேன்



நம் மன்றத்தில் பாரதி படைத்த 'இயற்கை' கவித்தொடர் மட்டுமல்ல
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5651


-
ஆதியில் அறிவியல் ஆரம்பித்ததும் வானத்தைப் பார்த்துதான்.
ஆதியன் அண்ணாந்து வானம் பார்த்தான்.
அங்கே சில நிரந்தரங்கள் - சில மாற்றங்கள் இவற்றின் கலவையைப் பார்த்தான்.
கண்ணுக்குப் புலப்பட்ட 4000த்துச் சொச்ச நட்சத்திரங்கள்
நினைவில் நிற்கும்படி நிரந்தர வடிவங்களில் நித்தமும் தோன்றக் கண்டான்.
இந்த மாறாப் பின்னணித் திரையில் ஏழு நடிகர்கள்
இப்படியும் அப்படியும் கலாய்ப்பாய் நடமாடக் கண்டான்.
எழுவரில் இருவர் வட்டத் தட்டுகள் - சூரியன், நிலா.
வான மேடையில் ஒரு பாதை போட்டு வைத்துக்கொண்டு
இவர்கள் நடை போடுவதைக் கவனித்தான்.
ஒவ்வோர் இரவும் நிலவின் வடிவம் மாறியது. வளர்தல், தேய்தல் இப்படி
முறையாய் மாறி மாறி...
'எண்ணிப் பார்த்தான்'.
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=132100#post132100


29.5 தினங்களில் ஒரு முழுச்சுற்று முடிந்து, தொடங்கிய உருவம் நிலவுக்கு அன்று
திரும்பக்கண்டான். மாறாத இந்த சுற்றுதான் மாதம் என்பதின் மூலம். அதை
அளவிட ஆதியன் முனைந்ததுதான் 'எண்ணுவதன்' முதல் பயணம்.
சூரியனும் அது தனிக்கட்சி, தனி விதி என்பதுபோல் ஒரு கட்டுக்கோப்பாய்
நடந்துகொண்டது. சூரியன் உதிக்கும் மறையும் கோணம், உச்சிப்பொழுதில்
வீற்றிருக்கும் இடம் ஆகியவை லேசா லேசா மாறி மாறி வருவதை ஆதியன் கவனித்தான்.
அந்த மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் - காற்றின் திசை, வேகம், தப்ப -வெப்பம், ஏன்
செடி -கொடி -விலங்கினங்களின் பழக்கங்கள் கூட ஒரு சக்கரம் போல் மாறி மாறி
வருவதை ஆதியன் அவதானித்தான்.
இரண்டையும் முடிச்சுப் போட்டான். ஆண்டுக்கணக்கு அங்கே உதயம்!
அந்த ஆண்டையும் கோடை, வசந்தம், பனி, மழை என பருவங்களாய்ப் பகுத்தான்.
கோடை, குளிர்கால நடுவாக்கிலும், வசந்தத்தின் தொடக்கத்திலும் திருவிழாக்கள்
கொண்டாடத் தொடங்கினான்.
வேட்டை ஒழித்து, விவசாயம் பார்க்க ஆரம்பித்த அத்தனை ஆதியன் தேசங்களிலும்
அறுவடையை ஒட்டிய திருவிழா ஒன்று நிச்சயம் இருந்தது.
எல்லாப் பெருமைகளையும் ஆரம்பத்தில் ஆதியன் ஆதவனுக்கே அளித்தான்.

கண்ணுக்குத் தெரிந்த ஒளி -சக்தி - கடவுளாய் ஆனது.
ஸ்டோன்ஹெட்ஜ் என்னும் இங்கிலாந்து ஊரில் சூரியனை நோக்கி வணங்கும்
தூண்கள் இன்றும் ஆதியனின் முதல் பக்திக்கு சான்றுகள். கோடை உச்சத்தில் சூரிய
கிரணங்கள் உதிக்கும் திசையை மிகச்சரியாய் இந்தத் தூண்கள் சுட்டி நிற்கின்றன.
ஒரிசாவின் கொனாரக் கோயிலிலும், இன்னும் சில தமிழக ஆலயங்களிலும்
குறிப்பிட்ட தேதியில் உதிக்கும் சூரியனின் கிரணங்கள் மூலவரின் மேல் பரிமளிக்கும்
விதம் கட்டிய செயல்கள் -- சூரியப்பாதையை எத்தனைத் துல்லியமாக மனிதன்
கவனித்து வந்தான் என்பதற்கு கட்டியங்கள்.

எகிப்தின் பிரமிடுகளும் அதன் பக்கங்கள் கிழக்கு-மேற்கு; வடக்கு-தெற்காய்
சூரியப்பாதைக்கு இணக்கமாய் கட்டப்பட்டன. உள் உத்தரங்களும் சிரியஸ்,துபான் போன்ற
முக்கிய நட்சத்திரங்களைச் சுட்டும் வண்ணம் கட்டப்பட்டன.
மண்ணில் வாழ்ந்த மனிதனின் செயல்களை வானத்தில் இருந்துகொண்டே
சூரியசந்திர நட்சத்திரர்கள் எப்படி ஆட்டுவித்தார்கள் பாருங்கள்!

ஆனாலும் மாதம் என்பது 29.53 நாட்கள்; வருடம் என்பது 365+கால் நாட்கள்
என்ற பின்னக்கணக்கு அந்தக்கால வானியலாளர்கள் சிந்தனையை சதா அறுத்து
சின்னாபின்னமாக்கியபடியே இருந்தது. இந்தக் குறை நாட்களை எப்படி விளக்குவது என்பதை விட
அவரவர் சமயக் காலண்டர்களை இந்த சிக்கலான எண்ணிக்கைக்குள் எப்படி அடக்குவது
என்பதில் மிகவும் பிஸி.
இப்போது சில வானமேடையின் துணை நடிகர்களையும் கவனித்தபோது
மெர்க்குரியும், வீனஸ் (வெள்ளி)யும் சுப்ரீம் ஹீரோ சூரியனை விட்டு அதிகம் அகலாமல்
ஒட்டிக்கொண்டே வருவதைக் கண்டான்.
ஆனால் மார்ஸ் (செவ்வாய்), ஜூபிடர், சனி ஆகியோர் மேற்கிலிருந்து கிழக்காக
வருடாந்திரப் பயணம் போகக் கண்டான். உற்றுக்கவனித்தால் அதிலும் தலைசுற்றல்.
ஆண்டுக்கொரு தரம், இவற்றின் பயணம் கொஞ்சம் நிற்பதும், அப்புறம் போனபாதையில்
ரிவர்ஸ் அடித்து கொஞ்ச தூரம் போய், பிறகு பழையபடி முன்னோக்கி வந்தன.
இந்த ரிவர்ஸ் பயணத்தின் விஸ்தாரம் இவர்களுக்குள் கூடக்குறைய இருந்தன.
அவற்றின் வேகமும் பிரகாசமும் கூட ஒன்றுக்கொன்று வித்தியாசம்.
இந்த ரிவர்ஸ் பயணப்புதிரை அவிழ்க்க நூற்றாண்டுக் கணக்கில் சிண்டைப் பிய்த்துக்கொண்டார்கள்.
ஆனாலும் முயற்சியைக் கைவிடாத வேதாளங்கள் அவர்கள்.


அந்த வேதாள முன்னோர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை சொன்ன
விக்கிரமாதித்தர்கள் - பின்னாளில் வானியியலில் பட்டை கிளப்பிய மூவர்:
கோபர்நிக்கஸ், கெப்ளர், நியூட்டன் என்ற மூவேந்தர்கள்.

பாரதி
21-10-2005, 02:13 PM
ஆதியன் - என்ன அருமையான சொல்! ஆதிமனிதன் என்பதை விட ஒரு பெயரைப் போல "ஆதியன்"!

வான அறிவியல் ஆரம்பித்த விதம் குறித்த உங்கள் அனுமானம் நன்றாகத்தான் இருக்கிறது. இந்தியாவிலும் வானசாஸ்திர ஆய்வாளர்கள் நிர்மாணித்த, காலத்தை அளவிடக்கூடிய, பல பழங்கால கருவிகளை ஜெய்ப்பூரிலும், புது தில்லியிலும் பார்த்து வியந்திருக்கிறேன் அண்ணா. வெகு சில நிமிடங்கள் வித்தியாசத்தில் இன்னும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த கருவிகள் செயல்பட்டு வருகின்றன.

நீங்கள் கூறியது போல பல புராதன சின்னங்களும் வானவியலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்டவையாகத்தான் இருக்கின்றன!

தொடரும் உங்கள் பார்வைகளுக்காக தொடர்ந்து எதிர்பார்த்திருப்போம்.

இளசு
21-10-2005, 08:27 PM
நன்றி பாரதி. நம்மூர்த் தகவல்களை இதுபோல் சேர்த்து இந்த வகைக் கட்டுரைகளை செழுமையாக்கிய பணிக்கு நன்றி.

இந்தக் கட்டுரைத் தகவல்கள் என் அனுமானம் அல்ல.
சேகரித்த, படித்த தகவல்களை தமிழில் தட்டச்சும் கருவி மட்டுமே நான்.

உன் ஊக்கத்துக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.
ஆதியன் என்ற சொல்லைக் கவனித்துப் பாராட்டியதற்கு சிறப்பு நன்றி பாரதி.

மன்மதன்
23-10-2005, 04:50 AM
வானத்தைப் பார்த்தேன்


அந்த வேதாள முன்னோர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை சொன்ன
விக்கிரமாதித்தர்கள் - பின்னாளில் வானியியலில் பட்டை கிளப்பிய மூவர்:
கோபர்நிக்கஸ், கெப்ளர், நியூட்டன் என்ற மூவேந்தர்கள்.

மூவேந்தர்கள் பற்றிய பதிவு அடுத்த பதிவில் கொடுங்கள் இளசு அண்ணா.. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்......

இளசு
23-10-2005, 10:03 AM
நன்றி மன்மதன்.
அறிவியல் ஒரு பூவாய் மொட்டவிழந்த கதையை
சின்ன சின்ன பாகங்களாய்ச் சொல்ல ஆசை.
இந்த மூவரும் அந்தக் கதையில் முக்கியமானவர்கள்..
காத்திருங்கள்.
உங்கள் ஆர்வம் கலந்த ஊக்கம் எனக்கு தெம்பு தருகிறது. மீண்டும் நன்றி

aren
23-10-2005, 11:36 PM
வானத்தைப் பார்த்தேன்

ஆனால் மார்ஸ் (செவ்வாய்), ஜூபிடர், சனி ஆகியோர் மேற்கிலிருந்து கிழக்காக
வருடாந்திரப் பயணம் போகக் கண்டான். உற்றுக்கவனித்தால் அதிலும் தலைசுற்றல்.
ஆண்டுக்கொரு தரம், இவற்றின் பயணம் கொஞ்சம் நிற்பதும், அப்புறம் போனபாதையில்
ரிவர்ஸ் அடித்து கொஞ்ச தூரம் போய், பிறகு பழையபடி முன்னோக்கி வந்தன.
இந்த ரிவர்ஸ் பயணத்தின் விஸ்தாரம் இவர்களுக்குள் கூடக்குறைய இருந்தன.
அவற்றின் வேகமும் பிரகாசமும் கூட ஒன்றுக்கொன்று வித்தியாசம்.
இந்த ரிவர்ஸ் பயணப்புதிரை அவிழ்க்க நூற்றாண்டுக் கணக்கில் சிண்டைப் பிய்த்துக்கொண்டார்கள்.


ஏழு நடிகர்கள் இப்படியும் அப்படியும் கலாய்ப்பாய் நடமாடக்கண்டான். அருமையான வரிகள்.

ஆதியன் ஆதவனை கவனித்ததால் பல நன்மைகள் நமக்கு கிடைத்திருக்கின்றன.

இது என்ன ரிவர்ஸ் விஷயம். நான் இப்பொழுது மண்டையை பிய்த்துக்கொள்கிறேன் என்னவென்று தெரியாமல். கொஞ்சம் விளக்காமாக எழுதி எனக்கு உதவுங்களேன், நானும் கொஞ்சம் தெரிந்துகொள்கிறேன்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்