PDA

View Full Version : என்ன கண்டேன் ?



thirukanaga
15-10-2005, 10:36 PM
என்ன கண்டேன் ?

கருவில் வாழ்ந்து கனவு கண்டேன்
கண்களின் முன்னால் தாயைக் கண்டேன்
தொட்டிலில் இட்டதும் தந்தை கண்டேன்
தொட்டுப்பார்த்ததும் பாட்டி கண்டேன்
எழுந்த ஒலியில் தமிழைக் கண்டேன்
எண்ணும் எழுத்தும் நானும் கண்டேன்
சொல்லிக் கொடுக்கும் ஆசான் கண்டேன்
சொந்த பந்தங்கள் சூழக் கண்டேன்
சொர்க்கத்தில் வாழ்வதைக் கண்முன் கண்டேன்
பாட்டியும் தாத்தாவும் இறக்கக் கண்டேன்
பருவ வயதை நான் அடையக் கண்டேன்

மலரோடு பேசுகின்ற வண்டு கண்டேன்
மனதோடு பேசுகின்ற பாடல் கண்டேன்
உயிரோடு கலக்கின்ற காதல் கண்டேன்
உண்மைக் காதலால் மனைவி கண்டேன்
பிரியாமல் வாழ இரு பிள்ளை கண்டேன்
அவர் பிரிந்து போகும் நிலமை கண்டேன்
தொடர்ந்து வந்த சொந்தம் கண்டேன்
அவர் தொலைந்து போன மாயம் கண்டேன்
இளமை போறதை உணர்ந்து கண்டேன்
இறப்பு நிஜமெனும் உண்மை கண்டேன்
இதுதான் முடிவா என்ன கண்டேன்

இளசு
15-10-2005, 11:03 PM
எல்லாம் கண்ட பின்னால்
என்ன கண்டேன் என்றால்
என்ன சொல்வது?
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில்
ஒன்றும் இருக்காது என்பார்கள்..
இத்தனையும்தான் வாழ்க்கை..
இதையும் தாண்டி ஒரு தேடல் என்றால்..
ஆத்ம தாகமா?
தேடுவது என்ன என்று
இன்னும் புரிப்டாத சோகமா?
வீடுபேறு என்று ஓர் இலக்கை
இது போன்ற வினாக்களுக்கு விடையாய்
முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள்..

உங்கள் வினா -- உலகளாவிய வினா..

பழைய கவியரசு வரிகள் போல் ஒரு சரளமான நடை.
பாராட்டுகள்..திருகனகா!

thirukanaga
16-10-2005, 08:43 AM
என் கவிதைகளை தட்டிக்கொடுக்கும் உங்களை நன்றியோடு பார்க்கிரேன்.15 வருடங்களாக கிடைக்காத சந்தோசம் இப்பொழுது காண்கிறேன் .தமிழ் வாழ்க
நன்றி

இளசு
16-10-2005, 11:05 AM
நண்பர் திருகனகா,
பரவசமும் மகிழ்ச்சியும் இருபக்கமும்தான் நண்பரே..
நல்ல படைப்பு படித்தவனையும் படைக்கத் தூண்டுமாம்..
உங்கள் கவிதையின் தூண்டலில் எனக்குள்ளும் ஓர் கவிதை வேர் விட்டிருக்கு..
விரைவில் பதிக்கிறேன் -- உங்கள் கவிதைக்கு நன்றி சொல்லி..

தமிழ்ப்பயணம் இணையத்தில் இணைந்து தொடரட்டும்..

பாரதி
16-10-2005, 01:10 PM
அன்பு நண்பரே... உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் கவிதைகளை எல்லாம் பல வருடங்களுக்கு முன்னரே எழுதியது போல தோன்றுகிறது. உங்கள் கவிதை முயற்சிகள் மென்மேலும் தொடருட்டும்.

thirukanaga
16-10-2005, 01:19 PM
15 வருடங்களுக்கு முன்னர் என் மனைவிக்காக (அப்போதய காதலி)எழுதிய கவிதைதான் முதல் கவிதை.என் முழு நேரத்தையும் வேலையிலும் குடும்பத்திலும் செலுத்தினேன். இப்பொழுது வேலை இல்லை பிள்ளைகள் வளர்ந்த்தால் நேரம் கிடைக்கிறது.ஆனால் என் வயது 34 தான்(உண்மையில்)