PDA

View Full Version : கோதுமைக் களவாணி



gragavan
12-10-2005, 08:07 AM
கோதுமைக் களவாணி

எனது சின்ன வயதில் நடந்தது அது. இன்றும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது அந்த நினைவு. தெளிந்த நீரோடைகுள்ளே கிடக்கும் கல்லைப் போல. பையைத் தூக்கிக்கொண்டு படியில் தடதடவென இறங்கினேன். கும்மாளமும் உற்சாகமும் கூடி வந்தது அன்று. சுந்தரும் அவன் பள்ளிக்கூடப் பையைத் தூக்கிக்கொண்டு வந்தான். வழக்கமாக பள்ளிக்கூடம் போகும் நேரமது. கையைக் கோர்த்துக்கொண்டு வேகமாக நடந்தோம். கதிருகடைக்கு பக்கத்திலேயே குமாரும் காத்திருந்தான். மூவரும் சேர்ந்து நெல்லிக்காய் தண்டிக்கு பொடிப்பொடியாக கற்களைப் பொறுக்கிக் கொண்டோம். விருவிருவென வேகத்தைக் கூட்டினோம். பின்னே! கோதுமைக் களவாணி இல்லாமல் போய்விட்டால்! அந்த நினைப்பே வேகமாக நடக்க வைத்தது.

கோதுமைக் களவாணியை அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும், அடிக்கடி போவோர் வருவோருக்கும் நன்றாகத் தெரியும். பைத்தியம் என்று எல்லோராலும் முடிவு கட்டப்பட்டவள். அறுபதை நெருங்கும் வயது. ஒட்டுப் போட்ட கந்தல். குளித்தறியாத அழுக்கு மேனி. சடை விழுந்த செம்பட்டைத் தலை. அவளது ஊரும் பேரும் யாருக்கும் தெரியாது. ஏதோவது ஒரு நேரத்தில் நல்ல மனநிலையில் இருக்கையில் கேட்டால் "பாப்பா மேரி பாத்தீமா தேவி" என்ற சர்வமத பெயரைச் சொல்வாள். ஆளும் பேரும் மாறிமாறி கேட்டாலும் வேறு எந்தப் பெயரையும் அவள் சொல்லியதேயில்லை. இப்படியொரு பெயரை எங்கே பிடித்தாளோ? ஆனால் எல்லோருக்கும் பிடித்ததென்னவோ கோதுமைக் களவாணி என்ற பெயர்தான். எங்கே களவாண்டாள்? எப்போது களவாண்டாள்? யார் வீட்டில் களவாண்டாள்? யாருக்கும் இந்த விவரங்கள் தெரியாது. ஆனாலும் எப்படியோ அவளுக்கு அந்த பெயர் வந்து விட்டது. மூட்டை கோதுமையைக் காயப் போட்டிருந்த வேளையில் திருடி விட்டாளென்று சொல்வார்கள். இத்தனைக்கும் அந்தத் தெருவில் கோதுமையை பயன்படுத்துகிறவர்கள் மிகக் குறைவுதான். அதிலும் கோதுமையை மூட்டையாக வாங்கிக் கொண்டிருந்தது மளிகைக் கடை கதிரு மட்டும்தான். ஆனால் கதிரும் கோதுமையைக் காயப் போட்டதுமில்லை. திருட்டு கொடுத்ததுமில்லை. எது எப்படியோ? பாப்பா மேரி பாத்தீமா தேவிக்கு கோதுமைக் களவாணி என்ற பெயர் நின்று நிலைத்து விட்டது.

எல்லோருக்கும் பிடித்த அந்தப் பெயர் அவளுக்கு ஏனோ பிடிக்காமலே போனது. அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது உறுதியாக அவளது சுயமரியாதையைச் சுட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பெயரை யாராவது சொல்லக் கேட்டால் அவள் அகோர பத்ரகாளியாக அவதாரமெடுப்பாள். வாயில் சொல்லும் கையில் கல்லுமாய் அந்தத் தெருவையே வதைப்பாள். தமிழில் எத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளதோ அத்தனையும் சொல்லி அர்ச்சிப்பாள். அவள் வீசியெறியும் கற்களுக்கு பயந்து கொண்டு அந்தப் பக்கம் போவதற்கு யோசித்தாலும் அவள் சிந்தும் செந்தமிழ் மொழிகளை நன்றாகக் கேட்டு உள்ளூற ஊர் மகிழும். யாருடைய நல்ல நேரமோ! அவள் கல்லெறி குறிக்கு எல்லோரும் தப்பிக் கொண்டே இருந்தார்கள்.

அவள் யார்? எந்த ஊர்? என்கின்ற ஆராய்ச்சியில் இறங்குவார் யாருமில்லை. எல்லாம் விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர் கதைதான். ஆனாலும் அவளைப் பற்றிய வதந்திகள் ஆயிரமாயிரம். பாகிஸ்தான் உளவாளி. இலங்கை இராணுவக்காரி. அமெரிக்க ஏஜெண்ட். பெரிய விஞ்ஞானி. மில் ஓனர் வைப்பாட்டியாயிருந்து கைவிடப்பட்டவள். பிள்ளைகள் கைகழுவிய பெரிய பணக்காரி. ஜமீந்தார் ராணி. இசைப் பைத்தியம் பிடித்த பாடகி. பெற்ற மகனைக் கொன்றவள். ஹைதராபாத் நிஜாமின் ஆசைநாயகி. இப்படியெல்லாம் பத்தாதென்று அந்தக் காலத்து அரக்கி பரம்பரையில் வந்தவளென்று நம்புகிறவர்களும் உண்டு.

அவளுடைய சொத்து என்று சொல்லப் போனால் ஒரு பெரிய துணிமூட்டை. அதை துணி மூட்டை என்பதை விட பொதிமூட்டை என்பதே பொருந்தும். எல்லாம் எங்கிருந்து பொறுக்கினாளோ! அவ்வளவு துணிகள். பிறகு ரெண்டு ஊசி. பழைய பேப்பரில் சுற்றி வைத்திருப்பாள். அப்புறம் நூல்கண்டு. கதிரு கடையில் அவளுக்கு நூல்கண்டு சும்மாவே கிடைக்கும். அவள் காலை வேளையில்தான் போய் நூல்கண்டு கேட்பாள். அவள் வந்து நூல்கண்டு கேட்டால் அன்றைக்கு கடையில் வியாபாரம் கொழிக்கும் என்பது கதிரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் இன்று வரைக்கும் பொய்த்ததேயில்லை. எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள். மூட்டையிலிருந்து துணியை உருவி அணிந்திருக்கும் துணியோடு சேர்த்துத் தைப்பாள். அப்படித் தைத்து தைத்து அவளது ஆடை பலவண்ண நிறங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும்.

இது போக இன்னும் சில அசையாச் சொத்துகள் உண்டு அவளிடம். சாப்பிட அலுமினியச் சொம்பும் தட்டும். அந்தச் சொம்பில் எப்போதும் ரெண்டு மூன்று பெரிய கற்கள் இருக்கும். கோதுமைக் களவாணி என்று யாரவது சொன்னால் முதலில் பறப்பவை அந்த கற்களாகத்தான் இருக்கும். வீசியெறிந்த பின் மீண்டும் அதே கற்களை தேடிப் பொறுக்கி வைத்துக் கொள்வாள். அந்தக் கற்களின் மேல் அவளுக்கு என்ன பாசமோ! வீட்டுக் கல்லு என்று சொல்லிக் கொஞ்சுவாள். எந்த வீட்டுக் கல்லோ! எப்போதோ இடிந்து போன அவளது வீட்டுக் கல்லாகக் கூட இருக்கக் கூடும். எங்கேயாவது செடிகளில் கொடிகளில் பூ பூத்திருக்கக் கண்டால் இரண்டு பூக்களைப் பறித்து கல்லிருக்கும் சொம்பிற்குள் போடுவாள். பூஜை செய்கிறாள் என்று கேலி செய்வோம். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் போவாள்.

பசித்தால் ஏதாவது வீட்டு வாசலில் நின்று கொண்டு "அக்கா!" என்று அழைப்பாள். எல்லோருமே அவளுக்கு அக்காதான். சின்னக் குழந்தையிலிருந்து கோயில் ஐயர் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோருமே அக்காக்கள்தான். அவள் கேட்டால் இல்லையென்று பொதுவாக யாரும் சொன்னதேயில்லை. முதலில் சொம்பில் தண்ணி கேட்பாள். கற்களையும் தட்டையும் கழுவிவிட்டு தட்டில் போடுவதை வாங்கிக் கொள்வாள். சைவம் அசைவம் என்றெல்லாம் அவள் பாகுபாடு பார்த்ததில்லை. போட்டதைத் தின்பாள். தின்ற வீட்டு வாசலருகே அமர்ந்து இராகம் போட்டு பாடுவாள். கேட்டால் ஒரு சொல்லும் காதில் தெளிவாக விழாது. விழுந்தாலும் புரியாது. அவளது இராகம். அவளது பாடல். அப்படிப் பாடுகையில் அவள் குரல் குழைந்திருக்கும். ஒரு மகிழ்ச்சி தெரியும்.

அன்றைக்கு அவளுக்கு கிடைத்தது அல்வா டீச்சர் வீட்டு இட்லி. அலமேலு டீச்சருக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர் அல்வா டீச்சர். நான், சுந்தர், குமார் மூவரும் பொறுக்கி வைத்திருந்த கற்களோடு அவளை நெருங்கினோம். கற்கள் போட்டு வைத்திருந்த சொம்பில் தண்ணீர் ஒரு மடக்கு குடித்துக் கொண்டும் இட்டிலியை துண்டு துண்டாக விழுங்கிக் கொண்டுமிருந்தவள், முதலில் எங்களைக் கவனிக்கவில்லை. பிறகு தலையைத் தூக்கிப் பார்த்து முகத்தைக் கோணி பழிப்புக் காட்டினாள். மூவரும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தோம். பதிலுக்கு எங்களைப் பார்த்து வக்கனை காட்டினாள். அப்படிக் காட்டும் பொழுது வாய்க்குளிருந்த இட்டிலி பிதுங்கி வெளியே விழுந்தது. கொஞ்சம் கடைவாயில் அசிங்கமாக ஒட்டிக் கொண்டிருந்தது. "உர்ர்ர்ர்ர்ர்ர்" குரங்கு போல கத்தினோம். அவள் கண்டுகொள்ளாமல் இட்டிலி மேல் கவனத்தைச் செலுத்தினாள்.

எங்கள் பொறுமை எல்லை மீறியது. "கோதுமக் களவாணி!!!!!!!!!!" அவள் காது கிழிய கத்திவிட்டு நாங்கள் மூவரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினோம். அவளுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. தட்டைக் கீழே வைத்துவிட்டு முதலில் இரண்டு கெட்ட வார்த்தைகளை வீசியவள், சொம்பைக் கவிழ்த்து வீட்டுக் கற்களை கையில் எடுத்து எங்கள் மேல் வீசினாள். மூவரும் மூன்று பக்கங்களில் நின்று கொண்டிருந்தோம். ஆளுக்கொரு கல்லாக ஒவ்வொருவர் மீதும் வீசினாள். நாங்களும் பதிலுக்கு அவள் மேல் பொறுக்கி வைத்திருந்த கல்லை கல்லை வீசினோம். இரண்டொரு கற்கள் அவள் மேலே விழுந்தன. அவளது ஆத்திரம் கூடியது. வசவும் நாறியது. அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக குமார் விட்டெறிந்த கல் நேராக வந்து எனது நெற்றியைத் தாக்கியது. "அம்மா!!!!!!" அலறிவிட்டேன். நெற்றியில் சின்னதாய் தோல் கிழிந்து இரத்தம் லேசாய்த் துளிர்த்தது. அது வலித்தது. குமாரும் சுந்தரும் பயந்து ஒடி விட்டனர். நான் வலியில் கையால் நெற்றியைப் பொத்திக்கொண்டு முனகினேன்.

என் மேல் கல் விழுந்ததைப் பார்த்ததும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள் கோதுமைக் களவாணி. மூட்டையிலிருந்து ஒரு துணியை உருவி என்னிடம் நீட்டினாள். நான் வாங்கவில்லை. அவளும் விடவில்லை. துணியை வாங்கச் சொல்லி வற்புறுத்தினாள். நான் அழுதுகொண்டே விலகிப் போனேன். கடைசியில் அவளே நெற்றியைத் துடைக்க வந்தாள். நான் பயந்து அலறினேன். இதற்குள் வாசலில் சத்தம் கேட்டு டீச்சர் வெளியே வந்தார்கள். என்னை அவர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்று புண்ணைத் துடைத்து மருந்து போட்டார்கள். நடந்தவைகளை கேட்டு ஒன்றிரண்டு அறிவுரைகளைச் சொன்னார்கள். எல்லாம் கேட்டுவிட்டு டீச்சர் கொடுத்த காபியையும் குடித்துவிட்டு வெளியே வந்தேன். கோதுமைக் களவாணி வீட்டுக்கல்லை தேடியெடுத்துக் கழுவிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததுமே சின்னதாய் சிநேகமாய் சிரித்தாள். நான் ஒதுங்கி ஒதுங்கி ஓடிப் போனேன். அதற்குப் பிறகு யாராவது கோதுமைக் களவாணி என்று அழைத்தால் அவளுக்கு கோவமே வருவதில்லை. கல்லையும் சொல்லையும் எறிவதேயில்லை. நாளாவட்டத்தில் அந்தப் பெயரை நாங்கள் மறந்தே போனோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

பிரியன்
12-10-2005, 08:35 AM
மன நோயாளிகளுக்கும் மனசு உண்டு. அதை மட்டும் ஏனோ இந்த உலகம் புரிந்து கொள்வதில்லை, மேலும் அக்கறையான கவனிப்புகள் அணுகுமுரை இருந்தாலே அந்த நோயிலிருந்து அவர்கள் விடுதலையடைந்து விடுவர். தனிமைதான் அவர்களின் எதிரி. உங்கள் வாழ்க்கைச் சம்பவம் அதற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு. பாப்பா மேரி பாத்தீமா தேவி அவர்களுக்குள் (கோதுமை களவாணி என்று சொல்லுவதில் இனியும் அர்த்தமில்லை என்பதால்) இருந்த மனித நேயம்தான் காயம்பட்டதை கண்டு துடித்தது... அந்தவகையில் நீங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறீர்கள்....

gragavan
12-10-2005, 08:47 AM
பிரியன் மேலே நான் எழுதியிருந்தது ஒரு கற்பனைக் கதையே. என்னுடைய வாழ்வில் நடந்தது அல்ல.

மனநோயாளிகள் பற்றிய உங்கள் கருத்து நிச்சயம் பொறுப்புள்ளது. இதை அனைவரும் உணர வேண்டும்.

பிரியன்
12-10-2005, 08:54 AM
அதுதான் நான் கதாநாயகனுக்கு பதில் சொல்லாமல் கதையின் நாயகனுக்கு பதில் சொல்லிவிட்டேன்.........

gragavan
12-10-2005, 08:58 AM
அதுதான் நான் கதாநாயகனுக்கு பதில் சொல்லாமல் கதையின் நாயகனுக்கு பதில் சொல்லிவிட்டேன்.........நயமான பதில். இந்தக் கதையை நமது மன்றத்து ராஜேஷ் அவர்கள் கேட்டதால் எழுதியது. எங்கோ கதைப் போட்டி நடக்கிறது. ஒரு கதை எழுதுங்களேன் என்றார். எழுதி முடித்தபின்னே தான் தெரிந்தது அவர்கள் ஒரு தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்று. கதையை அனுப்ப நேரமாகி விட்டது. ஆகையால் இந்தக் கதை எங்கோ சிஸ்டத்தின் இடுக்கில் ஒளிந்து கொண்டது. தேடி எடுத்து இன்று இட்டேன். :)

பிரியன்
12-10-2005, 09:03 AM
நான் இலக்கிய பகுதியில் பதிந்திருக்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன். உங்கள் பதிலுக்கு பிறகுதான் சிறுகதைகள் பகுதியில் இருப்பதை கவனித்தேன்.

ஆனால் என் முதல் பதில் கதையின் வெற்றிதானே.

gragavan
12-10-2005, 09:22 AM
நான் இலக்கிய பகுதியில் பதிந்திருக்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன். உங்கள் பதிலுக்கு பிறகுதான் சிறுகதைகள் பகுதியில் இருப்பதை கவனித்தேன்.

ஆனால் என் முதல் பதில் கதையின் வெற்றிதானே.நிச்சயமாக. உறுதியாக. கண்டிப்பாக. :)

மன்மதன்
12-10-2005, 09:47 AM
ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். நிகழுலகத்தை மறந்து தனக்கென ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் பிளாஷ்பேக் கதையை கேட்டால் நமக்கு ஆச்சரியங்கள் கிடைக்கலாம்.. கற்பனை கதை என்று ராகவன் சொல்லியதால் நம்புகிறேன்.. எழுத்து நடையில் ஒரிஜினாலிட்டியே பளிச்சிடுகிறது............ அருமை ராகவா...

gragavan
12-10-2005, 09:54 AM
ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். நிகழுலகத்தை மறந்து தனக்கென ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் பிளாஷ்பேக் கதையை கேட்டால் நமக்கு ஆச்சரியங்கள் கிடைக்கலாம்.. கற்பனை கதை என்று ராகவன் சொல்லியதால் நம்புகிறேன்.. எழுத்து நடையில் ஒரிஜினாலிட்டியே பளிச்சிடுகிறது............ அருமை ராகவா...நன்றி மன்மதா...இது உண்மையிலேயே கற்பனைக் கதைதான். ரோட்டில் பார்த்த ஒரு மனநோயாளியே இன்ஸ்பிரேஷன். ஆனால் அவர் மேல் என்னுடைய சொந்தக் கற்பனைகளை நிறைய ஏற்றி வைத்து விட்டேன்.

Narathar
12-10-2005, 11:06 AM
ராகவா...........
இது உங்கள் கற்பனன கதையா?
நயம்பட எழுதியுள்ளீர்கள் ஐயா....
உங்கள் உரை நடை வெகுவாக என்னை கவர்ந்தது.
வாழ்த்துக்கள்

gragavan
12-10-2005, 12:07 PM
நன்றி நாரதரே. உங்கள் ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது.

pradeepkt
12-10-2005, 04:01 PM
ராகவா, நிஜமாகவே உங்கள் வாழ்வில் நடந்தது என்றே நானும் நினைத்தேன்.
உங்கள் நடை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
என்னைத் தைத்தது கடைசியில் சிறுவனின் மற்றும் அந்தப் பெண்ணின் மனநிலையில் அனைவரையும் கொண்டு வைத்ததுதான்.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் முதல் தொகுதியில் இது போன்றே ஒரு கதை உண்டு. அதில் இது போன்ற ஒரு பெண்ணின் குழந்தையை அவளே தவறிக் கீழே போட்டு அது இறந்துவிடும். அதிலிருந்து அவள் இப்படி கிடைத்ததைத் தின்று, வைதவர்களை வசை பாடி எப்படியோ இருப்பாள்.
அந்தக் கதையும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து எழுதப் பட்டது.

பாரதி
13-10-2005, 03:05 PM
அன்பு இராகவன்,
கதை சிறப்பாக இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு - கற்பனையின் நயம் தெரியாத வகையில் மிகவும் இயல்பாக இருந்தது. கோதுமைக்களவாணி... எப்படி இந்தப்பெயரை தேர்வு செய்தீர்கள்..? மனப்பிறழ்வு உடையவர்கள் பலரையும் பற்றி பல உண்மை சம்பவங்களைப் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல அவர்கள் கடைக்கு வந்து போனால வியாபாரம் அதிகமாக நடக்கும் என்பது போன்ற சம்பவங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பர்கள் கூறி இருப்பது போல சமூகத்தில் அது போல கவனிப்பாரற்று இருக்கும் பலரைப்பற்றியும் சிந்திக்கவும், முறையாக கவனிக்கவும் அரசு முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.

gragavan
15-10-2005, 06:01 PM
ராகவா, நிஜமாகவே உங்கள் வாழ்வில் நடந்தது என்றே நானும் நினைத்தேன்.
உங்கள் நடை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
என்னைத் தைத்தது கடைசியில் சிறுவனின் மற்றும் அந்தப் பெண்ணின் மனநிலையில் அனைவரையும் கொண்டு வைத்ததுதான்.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் முதல் தொகுதியில் இது போன்றே ஒரு கதை உண்டு. அதில் இது போன்ற ஒரு பெண்ணின் குழந்தையை அவளே தவறிக் கீழே போட்டு அது இறந்துவிடும். அதிலிருந்து அவள் இப்படி கிடைத்ததைத் தின்று, வைதவர்களை வசை பாடி எப்படியோ இருப்பாள்.
அந்தக் கதையும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து எழுதப் பட்டது.நன்றி பிரதீப். சுஜாதாவின் சீரங்கத்து தேவதைகள் முழுதும் படித்ததில்லை. ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் கதையின் கருவும் மனதை உலுக்குகிறது.

gragavan
15-10-2005, 06:08 PM
அன்பு இராகவன்,
கதை சிறப்பாக இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு - கற்பனையின் நயம் தெரியாத வகையில் மிகவும் இயல்பாக இருந்தது. கோதுமைக்களவாணி... எப்படி இந்தப்பெயரை தேர்வு செய்தீர்கள்..? மனப்பிறழ்வு உடையவர்கள் பலரையும் பற்றி பல உண்மை சம்பவங்களைப் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல அவர்கள் கடைக்கு வந்து போனால வியாபாரம் அதிகமாக நடக்கும் என்பது போன்ற சம்பவங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பர்கள் கூறி இருப்பது போல சமூகத்தில் அது போல கவனிப்பாரற்று இருக்கும் பலரைப்பற்றியும் சிந்திக்கவும், முறையாக கவனிக்கவும் அரசு முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.நன்றி பாரதியண்ணா.

இந்தப் பெயரைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு என்னிடம் விடையில்லை. எப்படியோ அந்தப் பெயரைப் பிடித்து விட்டேன். அந்தப் பெயரைப் பிடித்த பிறகு மற்றவையெல்லாம் தானாக வந்தன.

அரசு முயற்சி என்பது இருக்கட்டும். தனிமனித சமூகம் இவர்களை நடத்தும் முறைமை மிகக் கேவலமாகவே உள்ளது. சென்னையில் ஒருமுறை கிண்டியிலிருந்து அண்ணா நகர் செல்லும் பேருந்தில் ஏறினேன். ஒரு வயதான தாயும் அவரது மனநலம் குன்றிய வளர்ந்த மகளும் ஏறினார்கள். உட்கார இடமில்லை. நான் உடனே எழுந்து இடம் கொடுத்தேன். ஏனென்றால் இவர்களுக்கு மூளைச் சமன்படுத்தும் திறம் குறைவாக இருக்கும். ஆகையால் நேராக நிற்க முடியாது. அதுவும் ஓடும் வண்டியில். உட்கார்ந்த பிறகு அந்தப் பெண்-குழந்தை வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு பேசாமல் வந்தாள். இது என் மனதைப் பாதித்த நிகழ்ச்சி.

இன்னொன்று. ஒரு தாய். இளம் தாய். இத்தகைய கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பொது வைத்துக் கொண்டிருந்தார். சின்னக் கைக்குழந்தை. என்னைப் பார்த்துச் சிரித்தது. கையை நீட்டியது. அப்பொழுது அந்தக் குழந்தையுடன் சாதாரணமாகப் பழகினாலும், உள்ளுக்குள் மிகவும் நெருங்கிப் போயிருந்தேன்.

இளசு
16-10-2005, 11:01 AM
உண்மைச் சம்பவம் என்றே எண்ண வைக்கும் தத்ரூப நடை..
சர்வ மதப்பெயர், கதிரு கடை, அல்வா டீச்சர்..
அற்புதம் இராகவன்..
இன்றுதான் ஆற அமர வாசிக்க நேரம் அமைந்தது.
மனநலம் குன்றியவர்களைக் கவனித்து, கனிவாய் நாம் நடத்தும் காலம் வந்துவிட்டால்--
பாரதம் நிச்சயம் அன்று முன்னேறிய தேசமாய் இருக்கும்.

gragavan
18-10-2005, 07:47 AM
உண்மைச் சம்பவம் என்றே எண்ண வைக்கும் தத்ரூப நடை..
சர்வ மதப்பெயர், கதிரு கடை, அல்வா டீச்சர்..
அற்புதம் இராகவன்..
இன்றுதான் ஆற அமர வாசிக்க நேரம் அமைந்தது.
மனநலம் குன்றியவர்களைக் கவனித்து, கனிவாய் நாம் நடத்தும் காலம் வந்துவிட்டால்--
பாரதம் நிச்சயம் அன்று முன்னேறிய தேசமாய் இருக்கும்.நன்றி இளசு. இதில் அலமேலு டீச்சர் என்று எனக்குத் தெரிந்தவர் உண்டு. எனக்குப் பாடம் எடுத்தவரில்லை. ஆனால் தூத்துக்குடி புதுக்கிராமத்தில் இருந்தவர். அவருக்கு அல்வா டீச்சர் என்ற பட்டப் பெயர் கிடையாது. கதையின் சுவாரசியத்திற்காகச் சூட்டியதுதான் அந்தப் பெயர்.

அமரன்
21-05-2007, 04:02 PM
கதையைப் படித்தபோது காட்சிகளைக் கண்முன்னே நிழலாடச்செய்துவிட்டது. உங்கள் கதை நடையில் அப்படி ஒரு தத்ரூபம். வாழ்த்துகள் இராகவன். சின்ன விண்ணப்பம். தொடர்ந்து கதை எழுதலாமே.

சக்தி
21-05-2007, 04:19 PM
மிக நல்ல கதை. நெஞ்சை நெகிழவைக்கும் கரு. வாழ்த்துக்கள்.

மயூ
21-05-2007, 04:27 PM
ஆகா.. என்ன விளையாட்டிது.. எங்கள் இராகவன் அண்ணாவா இது..!!! உங்கள் பின்னாலும் இப்படி வீரதீர வரலாறுகள் உள்ளதா!!!!!!

மாதா கோயில் வாசலில் நின்று ஐயாசாமி என்று சொன் பைத்தியம் ஞாபகத்திற்கு வந்தது..!!! பைத்தியங்களானாலும் அவர்களுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதைக் காட்டும் கடைசி வரி நெகிழ வைத்துவிட்டது...

எங்கள் ஊரிலும் பல பைத்தீயங்கள் இருந்திச்சு.. தனித் திரியில போடுறன் எங்கள் ஊர் பைத்தியங்களைப் பற்றி ஒரு அனாலிசிஸ்!!!

அறிஞர்
21-05-2007, 04:46 PM
படிக்காமல் விட்ட கதை..

முதல் வரியில்.. சொந்த கதை போல் அனைவரையும் ஈர்த்து... சென்றது அருமை...

மயூ
21-05-2007, 04:48 PM
அட.. அப்ப சொந்தக் கதையில்லையா??

அக்னி
21-05-2007, 04:58 PM
இதுபோன்ற சிலர் எனது வாழ்விலும் தென்பட்டிருக்கிறார்கள்...
அவர்கள் வாழ்வில் என்ன சோகங்களோ, அதிர்ச்சிகளோ..?

உதாரணமாக, ஒருவர்...
1990களின் ஆரம்பத்தில், ஈழத்தின் ஒரு அகதிமுகாமில், (இலங்கையின் ஒரு புகழ் பெற்ற புண்ணிய தலம், மடுத்திருப்பதி), அவ்வகதிமுகாம் ஒரு மாதா கோயிலாகையால், அங்கு மக்களிடையே கட்டுப்பாடுகளை இலகுவாக்க, தலத்தின் பங்குத்தந்தையர்களால், மக்களிடமிருந்து கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவரை (பெயர் நினைவிலில்லை), எல்லோரும் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்றே அழைப்பர். எனெனில், யாரைக் கண்டாலும் அவ்வாறு அன்பாகச் சொல்லி கடமை செய்தவர்.

அகதி முகாம் வாழ்க்கையின் பின் பல ஆண்டுகள் கழித்து, 1990 களின் பிற்பகுதியில், வவுனியா என்கின்ற நகரில் அவரை மீண்டும் சந்தித்தபோது மனநலம் குன்றியவராக வீதிகளில் அலைந்து திரிந்தார். என்ன நடந்ததோ ஏது நடந்ததோ தெரியாது அவருக்கு.

அந்தச் சிறந்த மனிதரின் அவலம் இன்னமும் எனக்குள் அவ்வப்போது ஊசலாடும்.

மனநலம் குன்றியவர்களின் இலகு மனதின் கடினம், எங்களில் பெரும்பாலோருக்குப் புரிவதில்லை என்பது வேதனைக்குரிய விடயம்தான்...

ஓவியா
15-08-2007, 12:53 AM
கதை பிரமாதம். ஊணமுற்றாவர்களின் உணர்வை உயர்ந்த எண்ணமுல்ல மானிடர்கள் மட்டுமே இக்காலத்தில் புரிந்துக்கொள்ள முடியும், கலியுகம் அப்படி.

நன்றி கோ.ராகவன்.

SathishVijayaraghavan
16-08-2007, 08:50 AM
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் முதல் தொகுதியில் இது போன்றே ஒரு கதை உண்டு. அதில் இது போன்ற ஒரு பெண்ணின் குழந்தையை அவளே தவறிக் கீழே போட்டு அது இறந்துவிடும். அதிலிருந்து அவள் இப்படி கிடைத்ததைத் தின்று, வைதவர்களை வசை பாடி எப்படியோ இருப்பாள்.
அந்தக் கதையும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து எழுதப் பட்டது.

ச*ரியாக* சொன்னீர்க*ள்... இக்க*தையைப் ப*டிக்கையில் என*க்கு எங்க*ள் ஊரில் (ஸ்ரீரங்கம்) இருந்த* அந்த* மூதாட்டியின் நினைவுதான் வ*ந்த*து... அருமையான* ஆக்க*ம் இராக*வ*ன்...

மனோஜ்
22-08-2007, 04:35 PM
அருமையான கதை நன்றி ராகவன் அவர்களே