PDA

View Full Version : என் நினைவலைகள் கிரிக்கெட் (4)பரஞ்சோதி
10-10-2005, 07:55 AM
என் நினைவலைகள் கிரிக்கெட் (4)

என்னுடைய அம்மாவுக்கு இனிமேல் நான் சத்தியமாக கிரிக்கெட் விளையாட போகமாட்டேன் என்று சத்தியம் செய்த நேரத்தில் என்னால் மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்த முடிந்தது, அதனால் 100, 200மீட்டர் ஓட்டம், நீளம், மும்முறை தாண்டுதலில் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்க முடிந்தது (இது தனிக்கதை). நிறைய புத்தகங்கள் படிப்பது, விவசாயம், தேனீ வளர்ப்பது, காட்டில் வேட்டையாடுவது போன்றவற்றில் என் கவனம் சென்றது.

எத்தனையோ முக்கியப் போட்டிகள் இருந்தாலும் நான் செல்லவில்லை. அதே நேரம் எங்க ஊரில் இரண்டாம் ஆண்டாக கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்து, திருநெல்வேலி அணியிடம் இருந்த சுழல் கோப்பையை வாங்கி வந்து, பணம் வசூல் செய்து, இந்த முறை எங்க ஊர் அணியை இரண்டாக பிரித்து, ஒரு அணிக்கு பாஸ்கர் அண்ணா தலைமையும், அடுத்த அணிக்கு மெல்கி தலைமையும் தாங்கினார்கள். பாஸ்கர் அண்ணா அணியில் எல்லாமே நல்ல வீரர்கள், அது மட்டுமல்லாது பக்கத்து ஊரில் நன்றாக விளையாடும் ஆட்டக்காரர்களையும் சேர்த்து பலமான அணியாக்கி விட்டார்கள். அடுத்த அணியில் வழக்கம் போல் மெல்கி, மனோகர், சார்லஸ், பாக்கியம், ஆசிர்வாதம், குருஸ் என்று சொத்தை அணியை தேர்வு செய்து விட்டார்கள். என்னை அழைத்தும் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

முதல் போட்டியிலேயே எங்க சீனியர் அணி எதிர்பாராத விதத்தில் தோற்று போக, அதிசயமாக எங்க ஜீனியர் அணி வெற்றிப் பெற, ஊரில் ஒரே குழப்பம். சீனியர் அணிக்கு சரியான திட்டு, இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாத அளவுக்கு வருபவர்கள் போகிறவர்கள் எல்லாம் கமெண்ட் அடித்தார்கள். இப்போ செமி பைனலில் எங்க ஜீனியர் அணி, வெற்றி பெற்றால் இரண்டாவது பரிசாவது கிடைக்கும், நான் விளையாடினால் வெற்றி நிச்சயம் என்று நம்பி, எங்க அம்மாவிடம் அனைத்து வீரர்கள், எங்க மாமா, சித்தப்பா எல்லாம் வந்து என்னை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எங்க அம்மாவும் இத்தனை பேர் கேட்கிறார்களே என்று யோசித்து என் சத்தியத்தை பூஜை அறையில் வாபஸ் வாங்கி விட்டார்கள். அதன் பின்பு சத்தியம் சர்க்கரை பொங்கல் என்ற நிலையை நான் எடுத்துக் கொண்டேன்.

செமிபைனலில் உடன்குடி அணியை எதிர்த்து ஆட வேண்டும், அப்போ பார்த்து சென்னையில் இருந்து 2 பேர் எங்க ஊருக்கு விருந்தாளியாக வந்திருந்தார்கள், இருவரும் நல்ல ஆட்டக்காரர்கள் என்று சொல்லி இருவரையும் அணியில் சேர்த்தாச்சு.

முதலில் பேட் செய்த உடன்குடி அணி 25 ஓவரில் 9 விக்கெட்கள் இழந்து 165 ரன்கள் எடுத்தார்கள். சென்னை வீரர் ஒருவர் அருமையாக ஸ்பின் பந்து வீசி 4 விக்கெட்கள் மேல் எடுத்தார், அன்று தான் நாங்க இதுதாண்டா ஸ்பின் பவுலிங் என்று தெரிந்து கொண்டோம். என் பங்கிற்கு 3 விக்கெட்.

பேட்டிங் செய்த போதும் சென்னை வீரர்கள் அருமையாக ஆடி நல்ல துவக்கம் கொடுத்தார்கள், 70 ரன்கள் வரை விக்கெட் விழவே இல்லை, அதன் பின்பு விக்கெட் மழை பொழிய தொடங்கியது, வரிசையாக 5 விக்கெட்கள் காலி, பின்னர் கட்டை மன்னன் சார்லஸிம், கேப்டன் மெல்கியும் தாக்கு பிடித்து 110 ரன்கள் வரை கொண்டு வந்து விட்டார்கள், ஓவரும் 18 முடிந்து விட்டது. சார்லஸால் மெல்கி ரன் அவுட் ஆக, நான் இறங்கினேன். இன்னமும் 56 ரன்கள் தேவை, 7 ஓவர் தான் இருக்குது, பாஸ்கர் அண்ணா தான் போட்டிக்கு அம்பயர், அவர் நான் உள்ளே சென்றதும் தயவு செய்து சார்லஸ் பேட்டிங் செய்ய விடாதே, அவன் கட்டை போட்டு கவுத்துடுவான், ஓவருக்கு 8 ரன் தேவை, சார்லஸால் ஓடவும் முடியாத நிலை, எனவே ஓவருக்கு 2 பவுண்டரி அடிக்கப் பார், விக்கெட் கீப்பருக்கும் பின்னால் பந்தை தட்டி விடப்பார், 5 அல்லது 6வது பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவருக்கு நீயே விளையாடு என்றார்.

நான் எப்போவும் கால் / இடது பக்கம் ரொம்பவும் நன்றாக விளையாடுவேன் (நன்றி. கேப்டன் ரவிகுமார்), முதல் 2 ஓவரில் பயந்து பயந்து ஆடினேன், எனக்கு அப்புறம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆட்டக்காரர்கள் கிடையாது, மேலும் சார்லஸ் கட்டை போடும் மன்னன், ஓடவும் முடியாத நிலை. 5, 6 ரன்கள் என்று தான் எடுக்க முடிந்தது. ரன் ரேட் எகிற, வெளியே வேடிக்கை பார்க்கும் ஓவ்வொருவரும் கத்தி கத்தி, ஒவ்வொன்றாக சொல்ல, அதில் ஒருத்தர், ஏலே, இவங்க மட்டும் அடிக்காம வரட்டும், வெட்டி புடுவேன்லே என்று மிரட்ட, ஒரே டென்சன். சார்லஸீக்கு ரன்னர் கேட்டால் உடன்குடி அணி அனுமதிக்கவில்லை.

அப்போ பார்த்து முதல் நிலை பந்து வீச்சாளர் ஒருவரை கொண்டு வர, அவர் என்னை பயமுறுத்த முதல் பந்தே பவுன்ஸர் போட்டார், எனக்கு நல்லா தெரியும், அம்பயர் பாஸ்கர் அண்ணா, கண்டிப்பாக நோ பால் கொடுப்பார், எனவே கண்ணை மூடிக் கொண்டு ஹீக் சாட் அடிக்க அது சிக்ஸர் பறந்தது, அதே போல் நோ பால் கொடுக்க, எதிரணிக்கு ஒரே டென்சன், அடுத்த பந்தை என் காலைப் பார்த்து வீச, நான் அதை லெக் சைடில் தட்டி விட அது பவுண்டரியாகி விட்டது. அதன் பின்பு அந்த பந்து வீச்சாளரை எதிரணி அசிங்க அசிங்கமாக திட்ட, அடுத்த பந்தில் நான் ஒரு ரன் எடுக்க, சார்லஸ் தன் வேலையை காட்ட, அது மட்டுமல்லாது கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தான், அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது, அத்தோடு சார்லஸீக்கு பாஸ்கர் அண்ணா சரியான திட்டு கொடுத்தார். இப்போ 4 ஓவரில் 32 ரன்கள் தேவை. சார்லஸ் பேட்டிங், மீண்டும் சார்லஸ் பந்தை மட்டை வாங்காமல் விக்கெட் கீப்பரிடம் விட, டென்சன் ஆன பாஸ்கர் அண்ணா வைட் கொடுக்க, சண்டை ஆரம்பித்தது, அப்புறம் நாலாவது பந்தில் சார்லஸ் பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் ஒரு ரன், கடைசி பந்தில் நான் ஒரு ரன், மொத்தம் 7 ரன்கள் கிடைத்தது.

எல்லோருக்கும் டென்சன், 3 ஓவர் 25 ரன்கள். எனக்கு பந்து வீச யார் வருகிறார்கள் என்று ஒரே ஆர்வம், மீண்டும் அவர்கள் புதிய பந்து வீச்சாளரை கொண்டு வந்தார்கள், அந்த ஓவரில் 1 பவுண்டரி, ஒரு 2 ரன் ஒரு வைட், 1 ரன் எடுக்க முடிந்தது, 12 பந்தில் 17 ரன்கள் தேவை. கடைசி ஓவரில் மட்டும் 11 ரன்கள் தேவை. என் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டி, முதல் பந்தில் 0, அடுத்த பந்தில் 4, அடுத்த பந்தில் 0, 4வது பந்தில் 4, ஐந்தாவது பந்து, இன்னும் 3 ரன் தேவை, ஒரே டென்சன், பாஸ்கர் அண்ணா சொன்னார், முடிந்தவரை விக்கெட் கீப்பருக்கு பின்னால் அல்லது சிலிப் பந்தை தட்டி விடப்பார், இரண்டு ரன் எடுத்தால் டை ஆகிவிடும், நாம விக்கெட் கம்மி தான், கடைசி பந்தில் ரன் வரவில்லை என்றால் நான் நோ பால் கொடுத்து விடுகிறேன் என்றார், எனக்கோ என்னமோ நடக்க போகுது என்ற பயம், சார்லஸிடம் சொல்லிவிட்டேன், பந்து வீசும் முன்பே பாதி மைதானம் வந்து விடு.

நானும் இருக்கும் அத்தனை தெய்வங்களையும் வணங்கி விட்டு மட்டையால் பந்த தடவ முயற்சிக்க, அது மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரிடம் போக, பாதி தொலைவில் நின்ற சார்லஸ் பாய்ந்து வர, பந்து எங்கே போனது என்று தெரியாமல் நான் ஸ்டெம்பை மறைத்துக் கொண்டு ஓட, விக்கெட் கீப்பர் என்னை ரன் அவுட் ஆக்க வீசிய பந்து என் காலில் பட்டு ஓட, நான் மீண்டும் இரண்டாவது ரன் எடுக்க விக்கெட் கீப்பரை நோக்கி ஓடி வர, சோம்பேறி சார்லஸ் நின்று கொண்டிருக்க , நான் அவனை விரட்டி விட்டு ஓடு என்று சொல்ல, பந்து சார்லஸ் திசைக்கு வீச, சார்லஸ் பந்தை பார்த்துக் கொண்டே ஓட, ஸ்டெம்ப் விழ, சார்லஸீம் கிரீஸில் விழ ஒரே டென்சன், அனைவரும் பாஸ்கர் அண்ணாவை சூழ்ந்துக் கொண்டார்கள். ரன் அவுட் கேட்டார்கள், அவர் கொஞ்சம் கூச்சப்படாமல் நாட் அவுட், ஷேப்பிலி ரீச்சிடு என்று ஆங்கிலத்தில் சொல்ல, உடன்குடி அணியினரில் சிலர் ஸ்டெம்பை உறுவ, அதுவரை ஆட்டம் பார்த்த எங்க ஊர் மக்கள் சிலர் அரிவாளை எடுத்து வெக்காளி, வேட்டுல உடன்குடிகாரன்களை என்று உள்ளே வர, மற்ற வீரர்கள் என்னையும் சார்லஸையும் சூழ்ந்துக் கொண்டார்கள், ஊர் பெரியவர்கள் அரிவாளை தூக்கியவர்களை திட்டி, சமாதானப்படுத்தி, வெளியே அனுப்பி, நடுவரும் உடன்குடி அணியினரும் சமரசம் பேச ஆரம்பித்தார்கள்.

பாஸ்கர் அண்ணாவிடம் எதிரணியினர் சொன்னது, காலில் பட்டு சென்ற இரண்டாவது ரன் கிடையாது, அப்படியே அது ரன் என்றால் சார்லஸ் அவுட். இதில் எதற்கும் பாஸ்கர் ஒத்து வரவில்லை. கொஞ்ச நேரத்தில் எதிரணியினர் ஒரு ரன் மட்டுமே கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும், கடைசி பந்தில் 2 ரன் என்றால் நாங்க விளையாட வருவோம் என்றார்கள். எங்களிடம் பேசிய சார்லஸ் கவலையே வேண்டாம், நான் கடைசி பந்தில் 2 அடிப்பேன், என்று சொல்ல, அவன் தலையில் ஓங்கி மத்தவங்க அடிக்க, ஒரே டென்சன், ஏலே வாயை மூடிட்டு சும்மா இருலே, ஒரு ரன் ஓட முடியலை, நீ என்னத்தை கிழிப்ப என்று வேடிக்கை பார்க்க வந்தவங்க திட்டினார்கள்.

உடன்குடி அணியினர் எல்லாம் மைதானத்தை விட்டு வெளியே வந்து கூடி பேசத் தொடங்கினார்கள். பாஸ்கர் அண்ணா மற்றும் மற்றவர்கள் என்னையும் சார்லஸையும் போய் மைதானத்தில் நிற்க சொன்னார்கள். நாங்களும் போய் நிற்க, பாஸ்கர் அண்ணா மைக் வாங்கி அதில் உடன்குடி அணிக்கு இன்னமும் 2 நிமிடம் நேரம் தரப்படும், அதற்குள் மைதானத்தில் இறங்கவில்லை என்றால் அவர்கள் டிஸ் கோலிபை, ரத்து செய்யப்படுவார்கள் என்று சொல்ல, உடன்குடி அணியினர் உள்ளே இறங்க வில்லை, உடனே அவசர அவசரமாக உடன்குடி அணியை ரத்து செய்வதாக அறிவிக்க, எங்க ஊர் அணி இறுதிப் போட்டிக்கு தகுது பெற்றது என்று அறிவித்து விட்டார், ஒரே அடிதடி, ரகளை. ஓவ்வொருவரும் மற்றவரை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டார்கள். எங்க வீட்டில் வேலை செய்யும் சுப்பிரமணி அவர்கள் என்னைப் பார்த்து தம்பி, இனிமேல் இங்கே நிக்காதீங்க, வாங்க போகலாம் என்று கையில் அரிவாளை எடுத்துக் கொண்டு எனக்கு பாதுகாப்பாக இருந்து வீடு கொண்டு வந்து சேர்த்தார். நான் அவரிடம் என் அம்மாவிடம் தயவு செய்து சண்டையை சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

மாலையில் பஜார் சென்று என் நண்பர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் சொன்ன வார்த்தை என்னை நிலை குலையச் செய்தது. மயக்கமே வரும் போல் ஆகிவிட்டது.

ஏமாற்றி தோற்கடிக்கப்பட்ட உடன்குடி வீரர்களும், மற்றவர்களும் என்னைத் தான் அதிகம் திட்டினார்களாம், அவன் எப்படியும், ஒடன்குடி வரத்தானே செய்வான், அவனை அங்கே தலையை வெட்டி எடுத்துவிடுவோம் என்று சவால் விட்டு சென்றார்களாம். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு உடன்குடி பக்கம் போகாதே என்று சொல்ல, எனக்கோ சொல்ல முடியாத அளவுக்கு பயம், வாரந்தோறும் உடன்குடி சந்தைக்கும், அடிக்கடி தேங்காய் எண்ணெய் ஆட்டி எடுக்க, கோப்பரை தேங்காயை உடன்குடிக்கு எடுத்துச் செல்வதும், கிணற்றில் மோட்டார் ரிப்பேர் ஆனாலும் கண்டென்சர் வாங்க உடன்குடி போக வேண்டுமே, என்ன செய்வது என்று பயந்தேன். நாலு, ஐந்து மாதம் உடன்குடி பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.

செமி பைனல் அருமையாக விளையாடியதற்கு எனக்கு ஆட்ட நாயகன் பரிசு கொடுப்பதாக சொன்னார்கள். பைனல் போட்டியில் வழக்கம் போல் திருநெல்வேலி அணி வந்தார்கள், சின்னபசங்க எங்களைப் பார்த்து கேலி செய்தது மட்டுமல்லாமல் உடன்குடி அணியை ஏமாற்றியதையும் சொல்லி சிரித்தார்கள். எங்களுக்கு இரண்டாவது பரிசு கிடைத்த மகிழ்ச்சி, அதுவே போதும் என்ற நிலையில் பைனலில் திருநெல்வேலி அணியிடம் தோற்று போனோம். முதலில் பேட் செய்த எங்களை 70 ரன்னுக்கும் குறைவில் ஆட்டமிழக்க செய்து, அதை 8 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து விட்டார்கள். ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, அரையிறுதி, இறுதிப் போட்டியின் நாயகனுக்கான பரிசு எல்லாம் இரவில் எங்க ஊர் எம்.எல்.ஏ கையால் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

எங்க வீட்டில் எங்க அம்மா, மாலையில் 6 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு போக அனுமதி, அதுவும் அவர்கள் வந்தால் மட்டுமே. அன்றைக்கு தான் தேங்காய், பதநீர் திருடும் படலம் நடக்கும் (அடுத்த பதிவில் சொல்கிறேன்).

ஆக மொத்தம் என்னால் அந்த பரிசை வாங்க முடியவில்லை, அடுத்த நாள் போய் எங்க அணியினரிடம் கேட்டால் அந்த பரிசை சுதாகர் அண்ணா தான் வாங்கினார் என்று சொல்ல, நான் கேட்க, அவர் என்னிடம் இல்லையே என்று சொன்னார்கள். எனக்கு சரியான டென்சன், உடனே மரியாதையாக யார் கிட்ட இருக்கு என்று சொல்லுங்க, இல்லேன்னா, என் பரிசை வைத்திருப்பவர் குடும்பத்தையே கெட்ட வார்த்தை சொல்லி திட்டப் போறேன் என்று சொல்லி மிரட்ட, உடனே அந்த எவர்சில்வர் குடம் எனக்கு பரிசாக கிடைத்தது.

அதே காலக்கட்டத்தில் மீண்டும் பல போட்டிகள், அடிதடிகள், தினம் தினம் புதுப் புது அணிகள், புதிய கேப்டன்கள் என்று நிறைய அனுபவங்கள். ஒன்று சொல்ல மறந்துட்டேனே, எந்த அணி என்னை வெட்டுவேன் என்று சொன்னதோ, அதே அணிக்கு 6 மாதம் பின்னர் விளையாடினேன். ஆமாம், ஒரு நாள் உடன்குடி அணியின் ஒரு ஆட்டக்காரர் எங்க ஊர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார், நான் அவரை பார்த்து சிரித்து பேச, அவர் உடனே நாளை நாங்க திசையன்விளையில் ஒரு போட்டி ஆடப் போகிறோம், நீங்க விளையாட தயாரா என்று கேட்டார். நான் ஆகா திட்டம் போட்டு சாத்தப் போறாங்க என்று நினைத்தேன். நான் யோசிப்பதை பார்த்த அவர் நீங்க இன்னமும் பழசை மறக்கவில்லையா, நாங்க எங்கே போனாலும் கப்பு எடுக்கிறோமோ இல்லையோ, தலையை எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு தான் வருவோம், அது எல்லாம் சும்ம, பயப்பட வேண்டாம், வரும் போது மெல்கியையும் அழைத்து வாங்க என்றார், நாங்க இருவரும் போய், உடன்குடி அணிக்கு விளையாடி வென்று கொடுத்தோம். அது மறக்க முடியாத சம்பவம்.

அதன் பின்பு +1, +2 வகுப்புகளில் ஆடிய ஆட்டங்கள் ஏராளம். ஒரு முறை காயல்பட்டிணத்தில் ஒரு போட்டி, செய்தி தாளில் பார்த்து தலைமை ஆசிரியரிடம் சொல்லி அனுமதி வாங்கி அணியின் பெயரை சேர்த்தாசு. முதல் போட்டி தூத்துக்குடி பள்ளி அணிக்கு எதிராக, களவாணிப் பயலுக ஆதித்தனார் கல்லூரி படிக்கும் 3 பேரை பள்ளி மாணவர்கள் என்று கொண்டு வந்துட்டானுங்க, நானோ கல்லூரியில் படிக்கும் மெல்கியை அழைத்து போயிருந்தேன், என்னாலும் அவர்களை குற்றம் சொல்ல முடியவில்லை. எங்க அணியில் நன்றாக ஆடும் மனோகர் முந்தைய நாளில் சரக்கு ஏற்றி, படுத்தானாம், கடைசி வரை மைதானம் வரவில்லை, நல்ல வேளையாக ஆட்டம் பார்க்க எங்க நண்பன் டேனியல் வந்திருந்தான். நான் டாஸ் வென்று பவுலிங்க் எடுக்க, சிமெண்ட் பிட்ச்சில் மேட் போட்டிருந்தார்கள். அது என்னடா என்றால் எக்ஸ்ட்ரா சுவிங்க் ஆகி வைட், தொடர்ந்து 3 வைட், என் பள்ளி அணியில் என்னை பிடிக்காத வின்ஸி, சோமு, எல்லாம் என்னை கிண்டல் செய்ய, சரியான ஆத்திரம், அடுத்த இரண்டு பந்தில் விக்கெட் வீழ்த்தி, அவனை திட்டு திட்டு என்று திட்டி தீர்த்தேன்.

அந்த போட்டியில் தோற்று போனோம், ஆனால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று, அதான் சொல்கிறேன். நான் அவுட் ஆகி வர, வரிசையாக விக்கெட் மழை, இன்னும் 2 விக்கெட் இருக்குது டேனியலை கூப்பிட்டு, நீ ஆட போகிறாயா என்று கேட்க அவனும் ஓகே சொல்லிட்டான், நாங்க இடது காலில் மட்டுமே கால்காப்பு கட்டுவோம், இரண்டு காலில் கட்டுவது இல்லை, நான் வழக்கம் போல் அவனுக்கு இடது காலில் கால்காப்பு கட்டி விட, அங்கே போன அவன், இடதுகை ஆட்டக்காரன் போல் நிற்க, வலது கால், கால்காப்பு இல்லாமல், இடது காலில் கால்காப்பு இருக்க, அம்பயர் முதல் எதிரணி முழுவதும் சிரிக்க, தோற்கும் நிலையில் இருந்த எங்களுக்கும் ஓரே சிரிப்பு, அவனும் அதை வைத்தே ஆடி, அவுட் ஆகி வந்தான்.

என்னால் வெற்றி பெற்ற போட்டிகளை விட என்னால் தோற்ற போட்டிகள் அதிகம் இருக்கும். போன வேகத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து வந்த போட்டிகள் நிறைய, அது மாதிரி ஒரே ஓவரில் 8, 10 வைட் போட்டு அத்தோடு மைதானம் விட்டு ஓட்டம் எடுத்த போட்டிகளும் உண்டு.

+2 படிப்பு முடித்ததும், அதற்கு மேல் கல்லூரியில் படிக்க வீட்டு பொருளாதாரம் கையை விரிக்க, என் அண்ணன்கள் (பெரியப்பா மகன்கள்) உதவ, நான் சென்னை மேற்கு மாம்பலம் வந்தேன், அங்கே பனகல் பார்க்கில் பிரையன்ஸ் அண்ட் பிட்ஸ் என்ற தனியார் கணினி கல்விக்கூடத்தில் டிப்ளமோ படித்தேன். அந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் அதிகம் விளையாட முடியவில்லை. ஒரு வருடம் படித்து, உடனே வேலைக்கு தூத்துக்குடி சென்றேன், அங்கேயும் விளையாட முடியவில்லை, பின்னர் வண்ணாரப்பேட்டையில் ஒரு ஷாப்பிங் செண்டரில் மொத்த கணினி துறையை பார்த்துக் கொள்ளும் வேலை, 3 வருடங்கள், அப்போ ஞாயிற்றுக்கிழமைகளில் வண்ணாரப்பேட்டை பார்க், தியாகராய கல்லூரியில், கல்மண்டபம் பகுதியில் விளையாடி இருக்கிறேன், அப்புறம் இங்கே வந்ததும், என் வாழ்க்கையில் நிறைய பரிசுகள், பதக்கங்கள் வாங்கியது, நம்ம தினேஷ் கார்த்திக்குடன் விளையாடியது போன்றவை இங்கே நிகழ்ந்தன, 10 ஆண்டுகள் ஆகியும், இன்றும் தொடர்கிறது. முதன் முறையாக எங்க கம்பெனியில் இண்டர் கிரிக்கெட் கிரிக்கெட் நினைவலைகள் முடிந்தது.

(நினைவலைகள் ஓய்வதில்லை .)

மன்மதன்
10-10-2005, 09:11 AM
ஒரே மூச்சில் படித்தேன்.. எலே என்னலே.. என்ன கோக்குபுல்ல....... அம்பயரை உங்க பக்கம் வச்சிகிட்டு ரொம்பவே அலம்பியிருக்கே..... அதுவும் அதென்னலே அரிவாளும் கையுமா ஆடியன்ஸு... எங்கேலே இது மாதிரி வயலன்ஸூ கேம் நடக்குது.. கேட்கவே பயமா இருக்குலே. ஒருதடவை நாங்க கிரிக்கெட் ஆடும் போது அதிக பட்சமா அடித்து துவைத்திருக்கிறோம், பேட்டை எரிந்து காயப்படுத்தியிருக்கிறோம்.. ஸ்டம்பை எடுத்து ஓங்கி சீவியிருக்கிறோம்... அதோட முடிச்சாச்சி.. இந்த அரிவாள்மனை வேலல்லாம் இல்லலே.. இதை நாவலா போடலாம்லே..... நன்றாக எழுதியிருக்கேலே... பாராட்டுகளேலேலே.....

pradeepkt
10-10-2005, 09:28 AM
ஏப்பா மம்முதா,
என்னமோ நீங்க எல்லாம் நேரா புத்தர்கிட்ட சீடர்களா இருந்த மாதிரி?
எப்பவுமே எனக்கு வன்முறை பிடிப்பதில்லை... அடிப்பதானாலும் சரி, அடி வாங்குவதானாலும் சரி! :D
அண்ணா, இயல்பாச் சொல்லுறது உங்களுக்கென்னவோ ரொம்ப சுலபமா வருது.
இதை இப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க, நாங்களெல்லாம் தொடர்ந்து வரோம்...

பிரியன்
10-10-2005, 09:31 AM
ஒரே மூச்சில் படித்தேன்.. எலே என்னலே.. என்ன கோக்குபுல்ல....... அம்பயரை உங்க பக்கம் வச்சிகிட்டு ரொம்பவே அலம்பியிருக்கே..... அதுவும் அதென்னலே அரிவாளும் கையுமா ஆடியன்ஸு... எங்கேலே இது மாதிரி வயலன்ஸூ கேம் நடக்குது.. கேட்கவே பயமா இருக்குலே. ஒருதடவை நாங்க கிரிக்கெட் ஆடும் போது அதிக பட்சமா அடித்து துவைத்திருக்கிறோம், பேட்டை எரிந்து காயப்படுத்தியிருக்கிறோம்.. ஸ்டம்பை எடுத்து ஓங்கி சீவியிருக்கிறோம்... அதோட முடிச்சாச்சி.. இந்த அரிவாள்மனை வேலல்லாம் இல்லலே.. இதை நாவலா போடலாம்லே..... நன்றாக எழுதியிருக்கேலே... பாராட்டுகளேலேலே.....

மன்மதா லே போட்டா திருநெவேலி பாசையின்னு எவம்ல சொன்னது.... :)

rajasi13
10-10-2005, 09:45 AM
ஒரே மூச்சில் படித்தேன்.. எலே என்னலே.. என்ன கோக்குபுல்ல....... அம்பயரை உங்க பக்கம் வச்சிகிட்டு ரொம்பவே அலம்பியிருக்கே..... அதுவும் அதென்னலே அரிவாளும் கையுமா ஆடியன்ஸு... எங்கேலே இது மாதிரி வயலன்ஸூ கேம் நடக்குது.. கேட்கவே பயமா இருக்குலே. ஒருதடவை நாங்க கிரிக்கெட் ஆடும் போது அதிக பட்சமா அடித்து துவைத்திருக்கிறோம், பேட்டை எரிந்து காயப்படுத்தியிருக்கிறோம்.. ஸ்டம்பை எடுத்து ஓங்கி சீவியிருக்கிறோம்... அதோட முடிச்சாச்சி.. இந்த அரிவாள்மனை வேலல்லாம் இல்லலே.. இதை நாவலா போடலாம்லே..... நன்றாக எழுதியிருக்கேலே... பாராட்டுகளேலேலே.....
திருனெல்வேலிக்காரவுளுக்கே லே யா ?

பிரியன்
10-10-2005, 09:46 AM
திருனெல்வேலிக்காரவுளுக்கே லே யா ?

சந்தேகமா இருக்குப்பா

மன்மதன்
10-10-2005, 09:50 AM
சந்தேகமா இருக்குப்பா

:D :D :D எனக்கும்தான் :rolleyes: :rolleyes:

மன்மதன்
10-10-2005, 09:52 AM
மன்மதா லே போட்டா திருநெவேலி பாசையின்னு எவம்ல சொன்னது.... :)


:D :D பரம்ஸ் பயபுல்ல சொன்னாம்ல... ஏம்ல உம்பலுக்கு பொறாமை..:rolleyes: :rolleyes:

மன்மதன்
10-10-2005, 09:53 AM
ஏப்பா மம்முதா,
என்னமோ நீங்க எல்லாம் நேரா புத்தர்கிட்ட சீடர்களா இருந்த மாதிரி?


:D கிரிக்கெட்டிற்கும் புத்தருக்கும் என்னாம்ல சம்பந்தம் ... :rolleyes: :rolleyes:

pradeepkt
10-10-2005, 10:05 AM
அகிம்சை வன்முறை புராணத்தைச் சொன்னேன்.
என்னமோ அருவாள எடுத்திட்டு ஓடாத ஒரே காரணத்தை வச்சிட்டு என்னமோ நீங்க எல்லாம் அப்படியே அகிம்சா புத்திரர்கள் மாதிரி பேசுனியேப்பு...

பிரியன்
10-10-2005, 10:06 AM
ரெண்டுமே பேச்சிலர் லைப்தான்

rajasi13
10-10-2005, 10:24 AM
சந்தேகமா இருக்குப்பா
என்னப்பா சந்தேகம்

பிரியன்
10-10-2005, 10:27 AM
திருநெவேலிக்காரவுக மாறி இல்லையே பேச்சு.... வெறும் லே சேர்த்தா திருநெவேலி பாசையாயிடுமா சொல்லுங்கப்பு....

பரஞ்சோதி
10-10-2005, 10:38 AM
பிரியன், முன்னாடி நம்ம பாரதி அண்ணா வட்டார வழக்கு மொழி என்ற பதிவை தொடங்கினாங்க, அதில் நான் திருநெல்வேலி பாசையில் நிறைய சொல்லிருக்கிறேன்.

பரஞ்சோதி
10-10-2005, 10:39 AM
நம்ம ஊரு ராஜாஸி,

எடுத்துவுடுங்கவே நம்ம வூரு பாசையை.

பிரியன்
10-10-2005, 10:45 AM
பிரியன், முன்னாடி நம்ம பாரதி அண்ணா வட்டார வழக்கு மொழி என்ற பதிவை தொடங்கினாங்க, அதில் நான் திருநெல்வேலி பாசையில் நிறைய சொல்லிருக்கிறேன்.

தெரியும் பரஞ்சோதி. திருநெல்வேலி பாசை என்பது எல்லோரும் நினைப்பது போல வெறும் லே என்ற எழுத்தை சேர்ப்பதல்ல என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

பரஞ்சோதி
10-10-2005, 10:58 AM
உண்மை தான் பிரியன், வெறுமனே லே மட்டும் வராது, சில நேரம் வே போடுவாங்க, என்னவே, போவே எப்படியும், அப்புறம் சில வார்த்தைகள் வேறு எங்கேயும் பயன்படுத்த மாட்டாங்க.

குறிப்பாக பாத்திரத்தை விளக்கி வை என்பதற்கு பதிலாக ஞா(யா)னத்தை விளக்கி வை.

பரஞ்சோதி
10-10-2005, 11:08 AM
சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் ஒருவர் திருநெல்வேலி பாசை பேசுகிறார், அவரை கண்டாலே சிரிப்பு தான்.

அது மாதிரி ரமணா படத்தில் ரொம்பவும் சிரியஸான சீன், விஜயகாந்தின் மாணவர்களை போலிஸ் பிடித்து சித்திரவதை செய்யும் போது, தூத்துக்குடி/ திருநெல்வேலி போலிஸின் ரிப்போர்ட் என்று கேட்கும் போது, அந்த இன்ஸ்பெக்டர் பேசுவதை கேட்டு மொத்த தியேட்டரே அதிரும்.

thempavani
10-10-2005, 11:27 AM
மன்மதா லே போட்டா திருநெவேலி பாசையின்னு எவம்ல சொன்னது.... :)

பிரியன் நான் கேக்கோணுன்னு நினைச்சேன்..நீங்களே கேட்டுபுட்டீக...ஏலே மன்மதா எங்கூரு பாச உனக்கு நக்கலா இருக்கோ..

thempavani
10-10-2005, 11:30 AM
அண்ணா பதிவு அருமை...ஆதித்தனார் கல்லூரியைப்பற்றி சொன்னதும் நினைத்தேன் கழவானிப்பயலுகளே என்று...நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்...அப்புறம் இந்த உடன்குடி அணி தலையை எடுப்போம்முனு சொல்லுறது சும்மா இதுதான் என்று இப்போதான் அறிந்தேன்..எங்கள் ஊர் பக்கம் உடன்குடி அணியோடு விளையாடவே விடமாட்டார்கள்...

rajasi13
10-10-2005, 11:40 AM
தெரியும் பரஞ்சோதி. திருநெல்வேலி பாசை என்பது எல்லோரும் நினைப்பது போல வெறும் லே என்ற எழுத்தை சேர்ப்பதல்ல என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.
அதத்தானவே அப்பவேருந்து நானும் சொன்னேன்.(வடிவேலு மாதிரி சொன்னதா படிங்க)

rajasi13
10-10-2005, 11:43 AM
சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் ஒருவர் திருநெல்வேலி பாசை பேசுகிறார், அவரை கண்டாலே சிரிப்பு தான்.

அது மாதிரி ரமணா படத்தில் ரொம்பவும் சிரியஸான சீன், விஜயகாந்தின் மாணவர்களை போலிஸ் பிடித்து சித்திரவதை செய்யும் போது, தூத்துக்குடி/ திருநெல்வேலி போலிஸின் ரிப்போர்ட் என்று கேட்கும் போது, அந்த இன்ஸ்பெக்டர் பேசுவதை கேட்டு மொத்த தியேட்டரே அதிரும்.
சாமி படத்துல சொல்லுவாரே " ஏல அண்ணாச்சி முன்னால கைய நீட்டி பேசுதியால" அவருதான

பாரதி
10-10-2005, 03:07 PM
மிகவும் சுவையான ஆட்டம்தான் பரஞ்சோதி. நன்றாக இருக்கிறது.

பரஞ்சோதி
10-10-2005, 08:18 PM
மிகவும் சுவையான ஆட்டம்தான் பரஞ்சோதி. நன்றாக இருக்கிறது.

பாரதி அண்ணா, என் பதிவை படித்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி.

விரைவில் மற்ற விசயங்களையும் சொல்கிறேன், குறிப்பாக கிராமத்து வாழ்க்கையில் நான் அனுபவித்தவை எல்லாம் சொல்கிறேன்.

அறிஞர்
10-10-2005, 11:42 PM
என்ன அன்பரே.. போட்டியின் பரபரப்பை எங்கள் உள்ளத்தில் விதைத்துவிட்டீர்....

அருமையான் மலரும் நினைவுகள்...

பரஞ்சோதி
11-10-2005, 11:03 AM
நன்றி அறிஞர்.

மேலே சொன்ன போட்டிகள் மாதிரி எத்தனையோ திரில் போட்டிகள் விளையாடி இருக்கிறேன், அதில் முக்காவாசி குவைத்தில் விளையாடியது. கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ஒரு சின்ன தவறால் நான் கொடுத்த சிக்ஸரால் கோப்பை கை விட்டு போனதுண்டு.

அதே மாதிரி கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் 3 விக்கெட் கையில் இருக்கும், அந்த போட்டியில் கடைசி ஓவர் அருமையாக வீசி வெற்றி பெற்றதுண்டு.

பிரியன்
11-10-2005, 11:05 AM
உண்மை தான் பிரியன், வெறுமனே லே மட்டும் வராது, சில நேரம் வே போடுவாங்க, என்னவே, போவே எப்படியும், அப்புறம் சில வார்த்தைகள் வேறு எங்கேயும் பயன்படுத்த மாட்டாங்க.

குறிப்பாக பாத்திரத்தை விளக்கி வை என்பதற்கு பதிலாக ஞா(யா)னத்தை விளக்கி வை.

மதுரையில் சில இடங்களில் இந்த பேச்சுப் புழக்கம் உண்டு..

பரஞ்சோதி
11-10-2005, 11:07 AM
அண்ணா பதிவு அருமை...ஆதித்தனார் கல்லூரியைப்பற்றி சொன்னதும் நினைத்தேன் கழவானிப்பயலுகளே என்று...நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்...அப்புறம் இந்த உடன்குடி அணி தலையை எடுப்போம்முனு சொல்லுறது சும்மா இதுதான் என்று இப்போதான் அறிந்தேன்..எங்கள் ஊர் பக்கம் உடன்குடி அணியோடு விளையாடவே விடமாட்டார்கள்...

நன்றி சகோதரி.

என்னுடைய அடுத்தப் பதிவு ஊரில் எங்க குருப் செய்த கழவானித்தனங்கள் தான். :D

பரஞ்சோதி
11-10-2005, 11:08 AM
மதுரையில் சில இடங்களில் இந்த பேச்சுப் புழக்கம் உண்டு..

இருக்கலாம் பிரியன், ஒரு எடுத்துக்காட்டுக்கு அதை சொன்னேன். :D

பிரியன்
11-10-2005, 11:10 AM
நானும் ஒரு தகவலாகத்தான் சொன்னேன்....

பரஞ்சோதி
11-10-2005, 11:11 AM
வட்டார வழக்கு மொழியை தொடங்குங்களேன், நம்ம ஊரு பாசையில் அங்கே பேசி மகிழலாம்.

rajasi13
11-10-2005, 11:44 AM
மதுரையில் சில இடங்களில் இந்த பேச்சுப் புழக்கம் உண்டு..
மதுரைக்கும் திருனெல்வேலிக்கும் ரொம்ப தூரமாக்கும்?. இருந்தாலும் அடிச்சுக்கறத பாத்தா என்னா சந்தோசம்.

aren
11-10-2005, 03:23 PM
கிரிக்கெட் பதிவு இது என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். பதிவுகள் திருநெல்வேலி தமிழ் பக்கம் சாய்வதாக தெரிகிறது.

திருநெல்வேலி தமிழ் பற்றி தனியாக ஒரு திரி ஆரம்பித்து அங்கே விவாதிக்கலாம் என்பது என் கருத்து.

இங்கே பாவம் நம்ம பரஞ்சோதி அவர்களின் பால்ய விஷயங்களை குறிப்பாக கிரிக்கெட் பற்றி அலசலாமே

உதயா
12-10-2005, 09:14 AM
எங்களிடம் பேசிய சார்லஸ் கவலையே வேண்டாம், நான் கடைசி பந்தில் 2 அடிப்பேன், என்று சொல்ல, அவன் தலையில் ஓங்கி மத்தவங்க அடிக்க, ஒரே டென்சன், “ஏலே வாயை மூடிட்டு சும்மா இருலே, ஒரு ரன் ஓட முடியலை, நீ என்னத்தை கிழிப்ப” என்று வேடிக்கை பார்க்க வந்தவங்க திட்டினார்கள். “)
அலுவலகத்தில் இருந்து தான் படித்தேன், இந்த வரியை படித்ததும் என்னால் சப்தம் இல்லாம் சிரிக்கவே முடியவில்லை. எப்படி இருக்கிறார் சார்லஸ் இப்போ?

இளையவன்
13-10-2005, 04:55 PM
ஜெற் வேகத்தில நாலாம் பாகம் வரை எழுதீட்டீங்க பரஞ்சோதி. இப்பகுதி நல்ல சுவாராசியமாக இருக்கிறது மற்றும் உங்களுடைய திறமைகளை (விளையாட்டு மற்றும் தில்லுமுல்லு) இப்பகுதி மூலம் மன்ற நண்பர்கள் அறிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்

பரஞ்சோதி
13-10-2005, 09:28 PM
நன்றி வெற்றி.

இப்போ சார்லஸ் பம்பாயில் இருக்கிறான், ஐ.டி.ஐ படித்து முடித்து அங்கே சென்றவனை சென்ற முறை (2004) ஊரில் அவன் தங்கை கல்யாணத்தில் சந்தித்தேன்.

பழைய கதை எல்லாம் பேசி மகிழ்ந்தோம்.

பரஞ்சோதி
13-10-2005, 09:32 PM
ஜெற் வேகத்தில நாலாம் பாகம் வரை எழுதீட்டீங்க பரஞ்சோதி. இப்பகுதி நல்ல சுவாராசியமாக இருக்கிறது மற்றும் உங்களுடைய திறமைகளை (விளையாட்டு மற்றும் தில்லுமுல்லு) இப்பகுதி மூலம் மன்ற நண்பர்கள் அறிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி இளையவன்.

நிறைய விசயங்களை சுருக்கி சொல்லியிருக்கிறேன்.

அய்யோ, எங்க தில்லுமுல்லு கதைகள் எல்லாமே கேட்டால், என் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும்.