PDA

View Full Version : புல்லானாலும்



இளசு
09-10-2005, 09:30 PM
புல்லானாலும்

அருகம்புல், சீமைப்புல், கோரைப்புல் என புற்களில்தான் எத்தனை வகை..
வரப்புப்புல் மீது செருப்பில்லாமல் நடக்கும்போது
உள்ளங்காலின் குறுகுறுப்பால் உச்சந்தலையில் உள்ள மூளை
கிளர்ந்து வளருமாம். அறிவியல் உண்மை இது.

இதில் அருகம்புல்லுக்கு கொஞ்சம் சமூக அங்கீகாரம் உண்டு..
அருகு போல் தழைத்து… என்பது வாழ்த்து மொழி.
அப்புறம் விநாயகனுக்கும் நெருக்கம் …
மற்றபடி புல்லர்கள், புல்லுருவிகள் என்று இழித்துப் பேசவும் புல்லின் பெயர் உதவும்.
கருவாச்சி காவியத்தில் வைரமுத்து சொல்கிறார்..
கானம்,மொச்சை,துவரை என்று விதைத்து வளர்வது மதி..
விதைக்காமலே மழை கண்டு பூமி கிளர்ந்தவுடன் மண்டி வளரும் புல் போன்ற களை எல்லாம் விதி…
மதியை வைத்து விதியின் செயலைக் களை எடுக்கிறாள் கருவாச்சி..

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா…

எத்தனை அழகான காட்சி..
மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே…

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…

மூங்கிலும் ஒரு வகை புல்தானே…
அதனால்தான் மூங்கில் தரும் இசைக்கருவிக்கு புல்லாங்குழல் என்று பேர் வந்ததோ?

பாரதியின் மனசைக் கவர்ந்த வால்ட் விட்மன் புல்லைப் பற்றி விதம் விதமாய் கவிதைகள் தந்திருக்கிறார்…

புல்லின் இதழ்கள் என்ற கவிதைத் தொகுப்பில் விட்மனின் வரிகள்..
இப்புல்
தாவர உலகின் குழந்தைகளோ?
குறுகிய இடத்திலும் பரந்த வெளியிலும்
கருப்பர் வெளுப்பர் எவரிடையேயும்
எங்கும் வளர்ந்து
எவரும் சமம் எனும்
அர்த்தம் சொல்லும்
அழகிய எழுத்துகளோ?
புதைத்த உடலில்
பூத்த ரோமங்கள்
பூமி மேல் வந்தனவோ?

புல்லைக் கொடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி…

புல் பூண்டும் முளைக்காத வறட்சி வந்தால் கன்று மாடுகளுக்கு
என்ன போடுவது என்ற கவலையில் விவசாயி பஞ்சம் பொழைக்கப் போய்விடுவான்.
புல்லும் கொள்ளும் குதிரைக்கு..
புல்லும் புண்ணாக்கும் மாட்டுக்கு..
மேயற மாட்டை நக்குற மாடு கெடுத்தது என்பது பழமொழி..
நுனிப்புல் கடித்து மேயும் மாடு மேய்ந்தால் புல் மீண்டும் அங்கு வளரும்.
அடியோடு கடிக்கும் ஆடு மேய்ந்தால் அடுத்த வளர்ச்சிக்கு ஆபத்து…
சிறு வயதில் நான் கேள்விப்பட்டது.
மனிதன் நடந்த தடத்தில் ஏனோ புல் வளருவதில்லை.

புல்லுக்கட்டு தூக்கிக்கிட்டு துள்ளி துள்ளி நடக்கும்போது
மல்லுக்கட்டத் தோணுதடி மாமனுக்கு..
பாட்டு வேண்டுமானால் காதல் சுவை..
நிஜத்தில் வீட்டு அடுப்பெரிய புல் அறுத்து சுமந்து விற்கும்
நம் நாட்டு தாய்களின் வயிற்றுச்சுமை சொல்லும் இந்தத் தலைச்சுமை!

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா?
கபடி ஆடும்போது புல்ல்லின் வேர் அறுத்து கட்டை விரல் அறுபட்ட வீரனைப் பார்த்தனால் இந்த கேள்விக்கு என் பதில் ‘ஆமாம்’ என்பதுதான்!!!!

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான்.. ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர், உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி – கரைத்துக் குடித்தாராம்…. எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.


கேவலம் புல்தானே – இதில் என்ன அந்த வகை..இந்த வகை என்று சாமான்யர்கள் நாம் அதை மிதித்து நடந்தாலும் – ஒரு வகைப் புல்லை ‘’Aegilops incurva, Aegilops incurvata அல்லது Aegilops ovata’’ என்று தாவரவியல் மாநாட்டில் நடக்கும் சண்டை ஒகனேக்கல் எல்லைப் பிரச்னையைவிட சூடு அதிகம்.

பிரச்சினை என்னவென்றால், குறைந்த பட்சம் 5000 வகையில் புல்லினங்கள் இருக்காம்.
புல்லியலில் பெரும்புள்ளிகளே இதை வகைப்படுத்துவதில் நிறைய குழம்பிப் போவார்களாம். ஆதனால் சில வகை புற்களை பல தேசங்களில், பல இடங்களில் பலர் கண்டுகொண்டு ஒரு இனத்துக்கே பலமுறை பெயர் சூட்டிவிட்டார்கள்.
அமெரிக்க தாவரவியல் துறை இந்தக் குழப்பம் தீர்க்க, 200 பக்கங்கள் கொண்ட இரு தொகுதிகளை புற்குடும்ப பிரஜைகளுக்காக வெளியிட்டிருக்கிறது.
‘ ’Manual of the Grasses of the United States''என்று… இது அந்த ஒரு நாட்டின் புல் கணக்குதான்..
நம் பாரத தேசத்து புல்லையும் சேர்த்தால் இன்னும் எத்தனை தொகுதிகள் சேரும்?
நினைத்தாலே புல்லரிக்கிறது!

Narathar
09-10-2005, 10:15 PM
புல்''லரிக்குது'' இளசு
உங்கள் புல்லார்வ தகவல்களை படிக்கையில்!


புல்லுருவிகள் என்று இழித்துப் பேசவும் புல்லின் பெயர் உதவும்.


புல்லுருவிகள் எனப்படுவது பெருமரங்களில் வளரும் ஒட்டுண்ணி தாவர வகையை குறிக்கும் என்று நான் நினைக்கின்றேன்..........

அதுவும் புல் வகையை சேர்ந்ததுதானா?

இளசு
09-10-2005, 10:22 PM
நாரதர்,
உங்களிடம் இருந்து புல்லரிக்கும் கமெண்ட் எதிர்பார்த்தேன்.. நன்றி..

புல்லுருவி?
முகிலன் போன்ற வேளாண் ஆலோசகர்கள் மன்றத்தில் உண்டு. அவர்கள் விளக்கினால் நானும் சேர்ந்து கற்றுக்கொள்வேன்..

pradeepkt
10-10-2005, 05:17 AM
புல்லை பற்றி அனேகமாக ஃபுல்லாகத் தெரிந்து கொண்டோம் இளசு அண்ணா!

பரஞ்சோதி
10-10-2005, 06:03 AM
அய்யா, இளசு அண்ணா பட்டையை கிளப்ப ஆரம்பிச்சாச்சு.

இனிமேல் எந்த விசயத்தையும் புல்-லா தெரிந்துக் கொள்ளலாம்.

எங்க சக்திக்கு நடக்கும் பயிற்சியை கூட புல்வெளியில் வைத்து தான் சொல்லிக் கொடுக்கிறேன், கீழே விழுந்தாலும் அடி விழாது தானே.

மன்மதன்
10-10-2005, 06:07 AM
கருவாச்சியகாவிய புல் தூண்டிய சிந்தனையில் புல்லோவியம் கொடுத்த இளம்பு(ய)ல் இளசு அவர்களுக்கு நன்றி ... இது மாதிரி தலைப்புகள் நிறைய கொடுத்து எங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவீர்களாக..

gragavan
10-10-2005, 06:26 AM
புல்லானாலும் புருசங்கறத மாத்தி புல்லானாலும் இளசுன்னு சொல்லனும் போல.

கால உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்னு பாரதியாரு சொன்னாராமே...அவரு இந்தக் கட்டுரையைப் படிக்கலைன்னு தெரியுது... ஹி ஹி

அப்புறம் ஒரு செய்தி. அருகு தழைக்காது. வேரோடும். ஆல் போலத் தழைத்து அருகு போல வேரோடி வாழ்கங்குறது வாழ்த்து. நல்ல ஆழமா நெறைய வேரு விடும் அருகம்புல்லு.

அப்புறம் மூங்கிலில் உண்டான புல்லாங்குழலுக்கு அந்தப் பேர்க் காரணமா நீங்க சொன்னது ரொம்பச் சரி. ரொம்பச் சரி.

பாரதி
10-10-2005, 02:23 PM
அண்ணா....

சுவையான பாடல்களுடன் புல்லைப் பற்றி பல விபரங்கள்.

அருகம்புல் என்று பெயர் வரக்காரணம் என்ன..?
ஒரு வேளை அறுக்கும்புல் என்று இருந்திருக்கக்கூடுமோ..?
ஒரு குவளை அருகம்புல் சாறு குடித்துவிட்டுத்தான் யோசிக்க வேண்டும்!

நான் பத்தாவது படிக்கும் வரை செருப்பு அணிந்ததில்லை. அதுவரைக்கும் தோட்டங்களிலும், வயல்களிலும், மெத்தை போன்று வரப்புகளில் படர்ந்திருக்கும் புல்லில் நடப்பதே சுகமாக இருக்கும். தொடர்ந்து உங்கள் ஆய்வுகள் வெளிவரட்டும்.

இளசு
15-10-2005, 10:25 PM
கருத்துகள் தந்த அன்புத் தம்பிகள்
பிரதீப்
பரம்ஸ்
மன்மதன்
பாரதி
அனைவருக்கும் நன்றி..

அன்பு இராகவன் - நீங்கள் சொன்ன திருத்தம் சரி. என் நன்றிகள்..

இளசு
16-09-2007, 09:31 AM
பாரதியின் மனசைக் கவர்ந்த வால்ட் விட்மன் புல்லைப் பற்றி விதம் விதமாய் கவிதைகள் தந்திருக்கிறார்

புல்லின் இதழ்கள் என்ற கவிதைத் தொகுப்பில் விட்மனின் வரிகள்..
இப்புல்
தாவர உலகின் குழந்தைகளோ?
குறுகிய இடத்திலும் பரந்த வெளியிலும்
கருப்பர் வெளுப்பர் எவரிடையேயும்
எங்கும் வளர்ந்து
எவரும் சமம் எனும்
அர்த்தம் சொல்லும்
அழகிய எழுத்துகளோ?
புதைத்த உடலில்
பூத்த ரோமங்கள்
பூமி மேல் வந்தனவோ?


விட்மனின் கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்க -

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=271580#post271580

சிவா.ஜி
16-09-2007, 01:07 PM
நீயெல்லாம் எனக்கு புல்லு, என்று இனி யாரும் நாக்குமேல பல்லு போட்டு பேசமுடியாது.புல்-ஐப்பற்றி இத்தனை ஃபுல்லான தகவலா...மலைக்கிறேன் இளசு உங்கள் தகவல் திரட்டின் சுவையுணர்ந்து.

சங்க காலம்,கவிதைக்களம்,திரைப்பட வரிகள்,நாவலின் சாறு என எங்கெங்கு புல்லின் பெருமை பேசப்பட்டிடிருக்கிறதோ...அதையனைத்தையும் ஒருங்கிணைத்து விருந்து படைத்த இளசுவுக்கு மனமார்ந்த நன்றி+வாழ்த்துக்கள்.

aren
16-09-2007, 03:56 PM
புல் பற்றிய அழகான வரிகள். பலர் வெறும் புல் என்று சொல்லி நகைக்கின்றனர், அவர்களுக்கு இந்த பதிவு ஒரு மாற்றத்தைத் தரும் என்பது நிச்சயம்.

எனக்குப் பிடித்த ஞானி சாணக்கியா அவர்களைப் பற்றியும் எழுதியதைப் படித்ததும் மனதிற்கு திருப்தியாக இருந்தது.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
17-09-2007, 08:21 PM
மிக்க நன்றி சிவா & அன்பின் ஆரென்...

புல்லாகிப் பூண்டாகி பின் பல்கிப் பெருகிய
உயிர்ச்சங்கிலியின் கடைசிக்கணு மனிதன்..

மூதாதையருக்கு நம் மரியாதை இப்பதிவு...

நெல்லும் கோதுமை, சோளமும் வரகும் கம்பும் தினையும்
எல்லாம் புல்லின் பரிணாம வடிவங்களே!

புசித்த வயிறு பகரும் நன்றி இப்பதிவு!

mukilan
18-09-2007, 11:14 AM
புற்கள் பற்றிய அற்புதமான பதிவு.. புதிய விடயங்கள் தெரிந்து கொண்டேன் அண்ணா. புல்லாங்குழலுக்கு யார் அப்படிப் பெயர் கொடுத்தார்கள் என நான் குழம்பியதற்கு அருமையான விளக்கம். மனித இனம் பசியின்றி இருக்கப் புசிப்பது புல் குடும்பத்தைதான்.

புற்கள் பனிக்காலத்தில் காய்ந்து பனியால் மூடப் பட்டு இருக்கும். குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்காவது. ஆனால் வசந்த காலம் மற்றும் கோடைக்காலங்களில் மீண்டும் தழைத்து செழிப்பாக வளரும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பொறுமை மிக அவசியம். நாம் நினைத்த காரியங்களை நடத்திக் கொள்ள காலம் கனிந்து வர வேண்டும் என்ற அறிவுரையை எனக்கு புற்கள் கூறுவதாக ஒவ்வொரு முறை புற்களைப் பார்க்கும் போதும் எனக்கு தோன்றும். பணிய வேண்டிய நேரத்தில் பணிய வேண்டும் என்பதற்குப் புற்களை விட வேறு என்ன பொருத்தமான உதாரணம் இருந்து விட முடிய்ம். புயலில் பணியாத ஆலமரத்தின் நிலை நமக்குத் தெரியுமே.

தாவரங்கள் மீது வளரும் ஒட்டுண்ணித் தாவரங்கள் பலவகைப் பட்டாலும் தமிழருக்கு நன்கறிந்தது Cuscuta-கஸ்குட்டா (டாடர்) எனப்படும் ஒரு வகை தண்டு ஒட்டுண்ணிதான் (வேர் ஒட்டுண்ணிகளும் உண்டு). கஸ்குட்டா பார்ப்பதற்கு நீண்டு புல்லின் தோற்றத்துடன் கொடி போலத் தொங்கும். மரத்தின் மீது இருந்து கொண்டு மரத்தையே உறிஞ்சி விடும். அதனால் தான் "நல்ல மரத்தை அழிக்க வந்த புல்லுருவிகள்"எனக் கூறுவார்கள்.

இளசு
18-09-2007, 08:35 PM
நன்றி முகிலன்..

(புது இடம், பணி, கணினி எல்லாம் நல்லபடியாய் அமைந்து வந்ததா?)

செறிவூட்டும் உன் பின்னூட்டத்துக்காகவே
இன்னும் எழுதலாம்... அருமையான கூடுதல் தகவல்கள்..


(புல்லாங்குழல் என்பது நான் ''குன்ஸா'' அடிச்சுவிட்டது முகில்ஸ்..)

சக்திவேல்
20-09-2007, 11:08 AM
ஆகா அருமையான அலசல் புல்லைப்பற்றி. புல்லானது நம் வாழ்க்கையோடு இத்தனை வழிகளில் உறவாடுகிறதா. வித்தியாசமான ஆய்வு. இளசு அவர்களே மிக நன்றாக இருக்கின்றது. நன்றிகளும் வாழ்த்துக்களும்

அனுராகவன்
27-01-2008, 03:15 PM
புல்லை பற்றி மிக பெரிய ஆராய்ச்சி ..
நாங்கள் புல்லை மாட்டுக்கு அருத்து போடுவோம் தவிர....
அதை இப்படி யோசித்ததுமில்லை..
ம்ம் என் வாழ்த்துக்கள்

இளசு
04-02-2008, 08:40 PM
நன்றி சக்திவேல்.. நன்றி அனு...

அறிவியல் கட்டுரைகள் எழுத உங்களின் பின்னூட்டங்கள் ஊக்குகின்றன..

பூமகள்
06-02-2008, 03:52 PM
மற்றுமொரு பொன்னாரம் கண்டேன்..! :icon_b:

புல்லார்ந்த செய்திகளில்
புலகாங்கிதம் அடைந்தேன்..!

விடிகாலை பொழுதின்
குயில் கூவும் வேளையில்
ஒவ்வொரு புல்லிலும்
வைரமிட்டது ஈரக்காற்று..!

இங்கே..!

வரிகள் கொண்டு
வைரம் செய்து
புல்லுக்கு சூட்டினார்
இளந்தென்றல்
இனிய அண்ணல்..!

விட்மன் முதல் வைரமுத்து வரை
வயக்காடு முதல் மாநாடு வரை
புல்லின் ஆழமும் அடர்த்தியும்
புரிய வைத்த ஞானபிரபஞ்சமே..!

உங்களின் கவிதைகள் கடந்து முதல் படியாய்... மற்றதை சுவைக்க ஆவல் கொண்டு தேடும் சிறு புல்லின் பூவறும்பு நான்..!!

இன்னும் இன்னும் அருகு போல் தழைத்து ஓங்கட்டும் உங்கள் பதிவுகளும் அதனால் எங்கள் அறிவாற்றலும்..!! :icon_b:

நீர் நிலை ஓரத்தில் தலை சாயும் புல்லின் நாணமுடன்,
நன்றிகள் சொல்லி பணிவாய் தலைவணங்கி நிற்கிறேன்...! :icon_03:

இளசு
06-02-2008, 10:28 PM
புல்லுக்கு பூவின் வந்தனம்..

விந்தை..

அன்பினால் விளைந்ததால் ஏற்று சிலிர்க்கிறது புல்லும்..

நன்றிகள் பாமகளே!