PDA

View Full Version : வெற்றியான தோல்வி...



Nanban
01-10-2003, 11:44 AM
வெற்றியான தோல்வி...


என் உலகம்
உன்னால் சிருஷ்டிக்கப் படுகிறது
எனக்கு இடம் இல்லாமலே....

என் உடலின் வெப்பம்
உன்னால் போக்கப் போட்டது
என் உயிரின் அனுமதியில்லாமலே.....

என் ப்ரார்த்தனைகள்
எல்லாம் நிறைவேறுகிறது -
நீ நன்றாக இருக்கிறாய்.

என் காதல் கவிதைகள்
எல்லாம் சிலாகித்துப் பேசப்படுகிறது -
உன்னை மட்டும் சேரவில்லை.

என் வெற்றிகள் எல்லாம்
தோல்வியினால் மிதிக்கப்படுகிறது -
சமர்பித்தது உன் காலடியில் தானே.

என் நுரையீரல்
இன்னமும் சுவாசிக்காமலே காத்திருக்கிறது -
நீ விட்ட மூச்சுக் காற்றைத் தேடி.

எல்லாம் நீ
என்றிருந்த என்னை
நீ எனக்குக் காட்டினாய் -
என் பெயரிடப்பட்ட
உன் குழந்தையை அழைத்து.

உனக்குப் புரியாது,
இதுவும் எனக்குத் தோல்வி தான் -
பிரசவித்து வெளியேற்றி விட்டாய் என்னை.

karikaalan
01-10-2003, 11:52 AM
நண்பரே:

நல்ல கவிதை தந்தீர். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

இளசு
01-10-2003, 11:06 PM
நத்தையாய் நடந்து
பெற்றதைக் காட்டியதும்...
பேர் சொல்லி அழைத்ததும்
தைத்த மனதில் வடியும்...
ரத்தம் தீர்ந்தும் நிணம்...

பாராட்டுகள் அறிவார்ந்த நண்பனுக்கு!

puppy
01-10-2003, 11:08 PM
மறுபடியும் பிரசவித்து விட்டாள் கூடவே இருக்க வேண்டும் என்று....
அருமை நண்பனே........

karavai paranee
04-10-2003, 03:34 PM
நெஞ்சை வருடிய வரிகள்

பிரசவித்து வெளியேற்றிவிட்டாய் என்னை

உண்மைதான். காதல் தோல்வி கொடியது வறுமையிலும் கொடிது

ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். உங்கள் கவிதையை வாசித்தபோது. என்னை விட வலிசுமந்தவராய் எழுதியுள்ளீர்கள். இதுவரை நான்தான் வலிகண்டவன் என எண்ணியிருந்தேன். இன்று உங்கள் வலிகண்டு என் வலி தாழ்வதை எண்ணுகின்றேன்

நன்றி நண்பா

ஒரு தோல்விதான் இன்னொரு வெற்றிக்கு அத்திவாரம்.

( எனது தோல்வி இன்று புதியதோர் பாதையை காட்டியது.)

Nanban
08-10-2003, 06:24 AM
ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன்..... இதுவரை நான்தான் வலிகண்டவன் என எண்ணியிருந்தேன். இன்று உங்கள் வலிகண்டு என் வலி தாழ்வதை எண்ணுகின்றேன்


கவிதை எழுதுவதை ஒரு பொழுது போக்காகத் தான் கொண்டிருந்தேன். பின்னர், நம் மனதிலிருப்பதைக் கொட்டி, பிறருடன் பகிர்ந்து கொள்வதால், மனம் இலகுவாகி அமைதியடைகிறது என்பதையும் கண்டுகொண்டேன். அதனால் மனதில் tension, stress, இவையெல்லாம் உண்டாக்கி உபத்திரவம் செய்யாமலிருக்க, கவிதை, கதை, நகைச்சுவை,
அல்லது ஏதாவது ஒரு விவாதத்தில் கலந்து கொள்வது நலம் பயக்கும். இதை நானாகச் சொல்லவில்லை. Stress Management for Senior Managers என்ற ஒரு கருத்தரங்கிற்கு, என்னையும் அனுப்பி வைத்தார்கள். அதில் கூறப்பட்ட பலவகையான வழிமுறைகளில், 'வேலை சம்பந்தப்படாத விஷயங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள், பிறர் யாருக்காவது வாசித்துக் காட்டுங்கள், இத்தகைய ஒத்த மனநிலையுடைய - எழுதுவது, பிறருடன் பகிர்ந்து கொள்வது, பிறரின் கருத்தை அறிவது, (அது உங்களுக்கு சாதகமாக இல்லாத பொழுதும் கூட), பிறர் எழுதியதற்குக் கருத்து கூறுவது - நண்பர்களுடன் நீங்கள் நடத்தும் இந்த கருத்துப் பரிமாற்றங்கள், அனுபவங்களைப் பகிர்தல் என்பவை நிறைய கற்றுக் கொடுக்கும், ஆறுதலைக் கொடுக்கும்.' தமிழ்மன்றம் இதைத் தான் செய்கிறது.

இன்று உங்கள் பதிலைக் காணும் பொழுது, பிறர் மனதிற்கும் ஆறுதல் அளிக்கிறது என்பதைக் காணும் பொழுது இன்னமும் மகிழ்வு கூடுகிறது.

மிக்க நன்றிகள், உங்கள் பதிலுக்கு.........