PDA

View Full Version : என் நினைவலைகள் - கிரிக்கெட் (2)பரஞ்சோதி
04-10-2005, 09:21 AM
(நண்பர்களே! என் நினைவலைகள் வாயிலாக என் வாழ்க்கையில் நடந்த அனைத்து சுவாரஸ்யமான விசயங்களை சொல்ல இருக்கிறேன், முதலில் கிரிக்கெட், கபாடி, இப்படி அனைத்து விளையாட்டுகளை சொல்கிறேன்)


என் நினைவலைகள் கிரிக்கெட் (2)

இப்போ எங்க அணியைப் பற்றி சொல்கிறேன், எங்க தெருவில் இரு குருப், ஒன்று மூர்த்தி அண்ணா தலைமையில், அடுத்தது பிர்லா போஸ் அண்ணாவின் தலைமையில். பிர்லா போஸ் அண்ணாவும், அணியினரும் எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் அஜிதா நர்சரி பள்ளியின் பின்புறம் விளையாடுவோம், அருகிலேயே எங்க சித்தப்பாவின் தோட்டம் உண்டு. ஒரு பிரச்சனையும் இருக்காது, பந்து மட்டும் அடிக்கடி ஏதாவது மரத்தில் மாட்டிக் கொள்ளுங்க, அதை எடுக்க எறிந்த செறுப்புகள் மாட்டி, அதை எடுக்க பட்டப்பாடுகள் வேறு.

பிர்லா போஸ் அண்ணாவின் அணியில் குறைந்த ஆட்டக்காரர்கள் தான், ஒரு பிரச்சனையும் கிடையாது, எல்லோருக்கும் சம வாய்ப்பு, மரியாதை, ஆனால் தினமும் விளையாட மாட்டோம் அது தான் பிரச்சனை. போஸ் அண்ணா கிரிக்கெட் நுணுக்கங்களை பொறுமையாக சொல்லிக் கொடுப்பாங்க.

மூர்த்தி அண்ணாவின் அணி அப்படியே எதிர்மறை, எக்கச்சக்கமான ஆட்டக்காரர்கள், முரட்டு ஆட்டக்காரர்கள், வந்தோர் போனோர் எல்லாம் ஆட்டக்காரர்கள், தெருவில், ரோட்டில், வீட்டில், எங்கேயாவது 10 மீட்டர் இடம் கிடைத்தால் அதில் விளையாடுவார்கள். அதில் அதிக அதிகாரம் மூர்த்தி அண்ணாவுக்கு, அடுத்தது குருஸ் பெண்டாண்டஸ் அவன் அடிக்கடி பந்து வாங்கி கொடுப்பான் (அவங்க அப்பா கப்பலில் வேலை செய்தார்), அப்புறம் சார்லஸ், அவனிடம் ஒரு உண்மையான பேட் இருந்தது. அவர்கள் மூவரும் களைத்துப் போனால் தான் மற்றவர்களுக்கு பேட்டிங்க் கிடைக்கும். சார்லஸ் மட்டை போட்டால் கவாஸ்கர் தோற்றுவிடுவார், அதனால் அவனுக்கு கவாஸ்கர் என்று பெயர். நான் எப்படியும் கபில்தேவ் என்ற பெயரை வாங்க வேண்டும் என்ற வெறி, அதுக்கு முதல் போட்டி மூர்த்தி அண்ணா தான். அவரை முந்த வேண்டும் என்ற வெறி, பொறாமை மனதில் தோன்றியது.

அப்போ நான் பந்து வீச பழக ஆரம்பித்தேன், எனக்கு ஒரு குறை என்னுடைய இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டச் சொன்னால் அது நேர்க்கோட்டில் இராமல் வளைந்து போய் நிற்கும், என்னை கோணக்கையன் என்பார்கள். நான் முதலில் ஸ்பின் போட்டேன், அப்போ நான் துரோ செய்கிறேன் (அப்போவே எங்க மக்க இத்தனை டிகிரியில் தான் வீச வேண்டும் என்று சட்டம் போட்டிருந்தார்கள்) என்றார்கள். அப்போ துரோ செய்வது தெரியாமல் இருக்க வேகப்பந்து போட ஆரம்பித்தேன். அப்போவும் துரோ என்பார்கள்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/monkeyjump.jpg

வேகமாக ஓடி வந்து, குரங்கு மாதிரி குதித்து போடுவேனா, மக்களுக்கு என் கையை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். என் கையை நேராக்க என் தம்பியை மிதிக்கச் சொல்வேன், அம்மாவிடம் ஏன் என் கை இப்படி வளைந்து போய் இருக்குது என்பேன், அதற்கு தாயைப் போல பிள்ளை என்று அவரது கையை காட்டுவார்.

அப்புறம் என் கையை நன்றாக சுத்த, வீட்டில் சும்மா இருக்கும் போது எல்லாம் பந்து வீசுவது போல் வீசிக் கொண்டிருப்பேன், வெள்ளாளன் விளையில் பிஷப் அசரியா பள்ளியில் படிக்க 3 கிலோமீட்டர் நடக்க வேண்டும், அப்படி செல்லும் போது ரோட்டில் கிடைக்கும் கருங்கல், கொமட்டிக்காய், பனங்கொட்டை எல்லாம் எடுத்து வீசிக் கொண்டே செல்வேன். என் புத்தகமூட்டையை என் தம்பி முதுகில் ஏற்றி, அவனை ஏதாவது ஒரு சைக்கிளில் கெஞ்சி, கூத்தாடி ஏத்தி அனுப்பி விடுவேன். சில சமயம் நான் வீசும் கருங்கல் பந்து ரோட்டில் போற சைக்கிளை தாக்க, அவங்க விரட்டி விரட்டி அடித்தது எல்லாம் உண்டு.

இப்படியாக வெறித்தனமாக பவுலிங்க் தான் முக்கியம் என்று எந்த நேரமும் பந்து வீசுவதிலேயே இருந்தேன். சில சமயம் மூர்த்தி அண்ணா என்னை ஏமாற்றி தொடர்ந்து மணிக்கணக்கில் பந்து வீச வைத்து, அவர் காய்ச்சு காய்ச்சுவார். நானும் ஏமாளி போல் பந்து வீசி, பேட்டிங்க் பண்ண வந்தால், நேரமாகிவிட்டது, மாலையில் விளையாடலாம், நீ தான் முதலில் பேட் செய்வாய் என்று அல்வா கொடுத்த நாட்கள் எண்ணிக்கையில் அடங்காது.

இப்படியாக நான் தொடர்ந்து பந்து வீசி, மூர்த்தி அண்ணாவுக்கு அடுத்து பந்து வீசும் பந்து வீச்சாளர் ஆனேன், சில நேரம் அவரை விட நான் அதிக விக்கெட்களை வீழ்த்தினால் அன்று முழுவதும் என்னை ஏதாவது சொல்லி கடுப்பேத்துவார்.

இப்படியாக நான் எங்க ஊரில் மாணவப்பருவத்தில் பந்துவீச்சாளனாக அடையாளம் காணப்பட்டேன். பின்னர் வெள்ளாளன் விளையில் பள்ளி நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் அணியை தொடங்கினேன், அதே அணியை நான் தலைமை தாங்கி, என் சொந்த/மூர்த்தி அண்ணாவின் அணியை தோற்கடித்து மகிழ்ந்தேன். அப்போ அங்கே தேவ ஆசிர்வாதம், இம்மானுவேல், மெல்கி, தங்கதுரை, நைனார், சேகர், சித்திரைக்குமார், ஐசக், கிருஷ்ணகுமார், குமரன் ஒரு அணியை தொடங்கியாச்சு. 8ம் வகுப்பு எங்க அணி 12வது வகுப்பு மாணவ அணியையே தோற்கடித்து பிரமிப்பு உண்டாக்கினோம், ஆசிரியர்கள் எல்லாம் உலக நிலைமை புரியாமல் நீ கண்டிப்பாக இந்தியாவுக்காக ஆடுவாய் என்று சொல்ல, நானோ தினமும் கனவில் மிதந்தேன், பஸ் ஏறி தூத்துக்குடி போகத் தெரியாத நான், டெல்லிக்கு போவது போல் கனவு கண்டேன், என் குரு கபில்தேவுடன் சேர்ந்து கடைசி ஓவரில் இம்ரான் கானின் 6 பந்தையும் சிக்ஸர் அடித்து கோப்பை வாங்குவது போல் கனவுகள் அடிக்கடி வரும்.

எங்க ஊரில் ஒருவழியாக ரப்பர் பந்தை விட்டு, கிரிக்கெட் பந்தில் விளையாடும் நிலைக்கு வந்தேன், நான் எட்டாவது படிக்கும் போதே கல்லூரி மாணவர்கள் அணியில் விளையாடத் தொடங்கினேன், நான் தான் போர்ட் கருப்பட்டி, அதாவது கடைக்குட்டி. பந்து பொறுக்குதல், தண்ணீர் கொண்டு போய் கொடுப்பது, பேட்ஸ்மேனுக்கு கால்காப்பு கட்டி விடுவது, பந்து கிழிந்து போனால் போய் தைத்து வருவது, போட்டி முடிந்ததும் ஸ்டெம்ப் மூட்டைகளை தூக்கி வருவது, போட்டியில் ஸ்கோர் போடுவது எல்லாம் எனது வேலை.

எனக்கு கிரிக்கெட் பந்தை கண்டால் கொஞ்சம் பயமுண்டு, எங்க ஊரு மாக்கான் (தடி) பந்து வீச்சாளர்கள் மத்தவங்க உடம்பை பதம் பார்த்தது கண்டு மிரண்டு போயிருக்கிறேன்.

நாங்க கிரிக்கெட் பந்தில் விளையாடும் மைதானம் எங்க ஊர் நூலகத்தின் பின்னால் இருந்தது, சாப்பிட்டு விட்டு 3 மணிக்கே நூலகத்தின் முன்னால் இருக்கும் கிணற்றின் மேல் அமர்ந்திருப்பேன், நூலகம் திறந்தால் அங்கே போய் பத்திரிக்கைகள் படிப்பேன் (அங்கே தான் புத்தகம் படிக்கும் ஆவல் தொடங்கியது), ஒவ்வொருத்தராக வர வர மகிழ்ச்சியாகி கிரிக்கெட் மைதானம் செல்வேன், அங்கே சென்ற காலத்தில் தான் என்னுயிர் நண்பன் தேவகுமாரை சந்திக்கவும், பேசவும், பழகவும், உருகவும் வாய்ப்பு கிடைத்தது.

கிரிக்கெட் பந்தில் விளையாட சென்ற போது அங்கே மூர்த்தி அண்ணாவுக்கு பதில் ரவிகுமார் என்ற எங்க ஊரு கல்லூரி அணித் தலைவர் எனக்கு எமன் ஆனார். முதலில் அவருக்கு வடக்குத் தெரு ஆள் என்பதால் பிடிக்காது, இரண்டாவது என்னுடைய பந்து வீச்சு. பாவம் மனுசன் சில நேரம் என்னை பந்து வீச சொல்லி பேட்டிங் செய்யலாம் என்று நினைப்பார், நானோ அவரை போல்ட் செய்து விடுவேன், உடனே சுதாகர் அண்ணா, மதி அண்ணா, பாஸ்கர் அண்ணா எல்லோரும் அவரை கிண்டல் செய்ய அவருக்கு என் மீது கடுப்பு கூடும். உடனே ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லி, என்னை மீண்டும் பந்து வீசச் சொல்லுவார், என் கெட்ட நேரம் அடுத்த பந்திலும் அவர் போல்ட், இப்படி ஓவருக்கு இரண்டு முறை போல்ட் ஆகி விடுவதால் என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது. மேலும் அவர் தன் கடுப்பை தீர்க்க, எல்லோரும் விளையாடிய பின்பு கொஞ்சம் இருட்டத் தொடங்கும் நேரம், தம்பி நீ வா, பேட்டிங் செய்ய வா என்று அண்ணாவைப் போல அன்பாக அழைப்பார், என்னை கால்காப்பு கட்டவும் விட மாட்டார், சீக்கிரம் வா, நேரமில்லை, 2 ஓவர் விளையாடு என்று கூறி, என் காலை குறிவைத்து பந்து வீசுவார், நானோ பெரிய மட்டையின் பின்னால் ஒளிந்துக் கொள்வேன், என்னுடைய மகா கெட்ட நேரம், அது மட்டையில் பந்து வீக்கெட் கீப்பரை தாண்டி 4 ரன்கள் போக, அவருக்கு இன்னமும் சூடு ஏறி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீச ஓடி வருவார், சில நேரம் பேட்டை போட்டு விட்டு ஓடியும் இருக்கிறேன்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/fastbowler.gif

இப்படியாக இருக்க ஒரு நாள் புத்தம் புது பந்து பளபளக்க, சும்மா இருந்த என்னை வா, பேட்டிங் பண்ணு என்று சொல்ல, சதி விளையாட, விதி சிரிக்க, நானோ வழக்கம் போல் மட்டையை நேராக தூக்கி பிடிக்க, அவர் வீசியதோ சரியான யார்க்கர், அது என் கால் பாதத்தின் நடுவிலும், எலும்புகள் சேரும் இடத்தில் குறி வைத்து தாக்க, அவ்வளவு தான் என்னட அம்மே என்று ஒரு சுத்து சுத்தி விழுந்தேன், அவ்வளவு தான் தெரியும், அடுத்து விவேக் மாதிரி நான் எங்கே இருக்கேன் என்று கேட்க, எதிரே ஊசியோடு டாக்டர் மாமா தம்பிராஜ் நிற்க, கண்ணீரோடு அம்மா. ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்தேன், அதன் பின்பு கிரிக்கெட் பக்கம் ஒரு மாதம் வரை தலைவைத்து படுக்கவில்லை.

ஒருநாள் மனதில் இருக்கும் கிரிக்கெட் மிருகம் விழித்துக் கொள்ள, மீண்டும் மைதானம் சென்றேன், அங்கே ரவிகுமார் அண்ணனை பார்த்து, உலகில் இருக்கும் அத்தனை கெட்டவார்த்தைகளையும் மனதுக்குள் திட்டி தீர்த்துக் கொண்டேன், பின்ன, நேரில் திட்டி, அடுத்து மண்டையை உடைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

அதன் பின்பு நான் கால்காப்பு இருந்தாலும், இல்லை என்றாலும் ஒவ்வொரு பந்தையும் மிகவும் கூர்ந்து கவனமாக கவனித்து, அவசரப்படாமல் விளையாடத் தொடங்கினேன், குறிப்பாக ரவிகுமார் அண்ணன் பந்தில் மட்டும் அவுட் ஆகக்கூடாது என்ற வெறி. அந்த காலக்கட்டத்தில் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக என்னை தயார் செய்து கொண்டேன்.

அப்போ எங்க ஊர் மாயாண்டி சுவாமி கோயில்கொடையில் பிர்லா போஸ் அண்ணா தன் செலவில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தினார்கள். நான் ஒரு அணித்தலைவன், மூர்த்தி அண்ணா ஒரு அணித்தலைவர், அவர் அணியில் எல்லாம் நல்ல ஆட்டக்காரர்கள். என் பக்கம் எல்லாம் சின்ன பசங்க, ஆனால் நல்ல பசங்க.

1983 உலககோப்பை கபில்தேவ் அணி வென்ற மாதிரி எங்க அணி அபார வெற்றி, அதில் என்னுடைய பங்கை மறக்க முடியாது 24 ரன்கள் அதில் 4 பவுண்டரிகள். 4 ஓவர் வீசி 3 மெய்டன், 4 விக்கெட், 1 ரன். எனக்கு சிறந்த ஆட்டக்காரர் பரிசு, அது ஒரு எவர் சில்வர் தட்டு, அதை விம்பிள்டனில் கொடுப்பது போல் கொடுத்தார் பிர்லா போஸ் அண்ணா.

ரப்பர் பந்தில் எனக்கு ஆசான் பிர்லா போஸ் அண்ணா என்றால் கிரிக்கெட் பந்திற்கு ஆசான் ஜெயராஜ் அண்ணன். அவர் எங்க ஊரில் தட்டச்சு, ஜெராக்ஸ் கடை வைத்திருந்தார்கள், அவரிடம் ஆர்டர் கொடுக்க வருபவர்கள் கிரிக்கெட் மைதானம் தான் வரவேண்டும், நாள் முழுவதும் அங்கே தான் இருப்பார்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/peoplewatching.gif

எங்க பள்ளியில் எங்க வகுப்பிற்கும், சார்லஸ் (1 வருடம் சீனியர்) அணிக்கும் வெள்ளாளன் விளை சர்ச் அருகில் போட்டி நடந்தது, அதில் நான் அபாரமாக விளையாடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்து எங்க அணி வெற்றி பெற்றது, முதன் முறையாக ஊர் மக்கள் முன்னாடி விளையாடியது அதிக சந்தோசம் கொடுத்தது. சிறந்த வீரர் பரிசை ஜெயராஜ் அண்ணா கொடுத்தார்.

அதன் பின்பு எக்கச்சக்கமான போட்டிகள், சீறுடையார் புரம் என்ற ஊரில் இரண்டு இன்னிங்க்ஸ் கொண்ட போட்டியில் நாங்க முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் சேர்த்தோம், எதிரணி முதல் இன்னிங்க்ஸில் 30க்கும் குறைவு, இரண்டாவது இன்னிங்க்ஸில் 50 ரன்கள் வரை எடுத்து ஆட்டம் இழந்தது, அந்த போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்கள் கிடைத்தது, மொத்தம் 15 விக்கெட்கள் மேல், அதை எங்க பள்ளிப் பருவ சாதனையாக இருந்தது.

நாங்க எங்க ஊர் மட்டுமல்லாது பக்கத்து ஊரில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமதான் விழாக் காலத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்துக் கொண்டோம். அப்படி அடுத்த ஊரில் போய் விளையாடுவது திரில்லாக இருக்கும். திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆலந்தலை, உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், தூத்துக்குடி, காயல்பட்டிணம் இப்படி சுற்று வட்டாரத்தில் அனைத்து ஊர்களுக்கும் போய் விளையாடி இருக்கிறேன். பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் போய் வந்த கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(நினைவலைகள் ஓய்வதில்லை .)

என் நினைவலைகள் கிரிக்கெட் (1)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5677

பிரியன்
04-10-2005, 09:28 AM
மிக நல்ல பதிவு. நல்ல நடையில் அலுக்காமல் சொல்லி அசத்திட்டீங்க பரஞ்சோதி......

எழுத்தின் அழகும் கூடிக்கொண்டே இருக்கிறது பரஞ்சோதி.....

மனம்நிறைந்த பாராட்டுகள்

pradeepkt
04-10-2005, 09:31 AM
கலக்குறீங்க அண்ணா.
எனக்கு இனிமேல் கிரிக்கெட்டில் சொல்ல ஒண்ணுமே இல்லைன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு...

பரஞ்சோதி
05-10-2005, 06:24 AM
தம்பி, கிரிக்கெட் மட்டுமல்ல, கில்லி தண்டா, சோடா புட்டி, பம்பரம், கண்ணாமூச்சி, இப்படி ஒரு ஜோடி விளையாட்டு பதிவுகள் வரும்.

பரஞ்சோதி
05-10-2005, 06:25 AM
மிக நல்ல பதிவு. நல்ல நடையில் அலுக்காமல் சொல்லி அசத்திட்டீங்க பரஞ்சோதி......

எழுத்தின் அழகும் கூடிக்கொண்டே இருக்கிறது பரஞ்சோதி.....

மனம்நிறைந்த பாராட்டுகள்

நன்றி பிரியன்,

கிரிக்கெட் மட்டுமே சொல்ல இன்னமும் 3 பதிவுகள் தேவைப்படுகிறது, பின்னர் என் கிராம வாழ்க்கை, கோயில் கொடை, சந்தை, தசரா என்று நிறைய சொல்ல இருக்கிறேன், படிக்கத் தான் யாரையும் காணவில்லை.

pradeepkt
05-10-2005, 06:53 AM
தம்பி, கிரிக்கெட் மட்டுமல்ல, கில்லி தண்டா, சோடா புட்டி, பம்பரம், கண்ணாமூச்சி, இப்படி ஒரு ஜோடி விளையாட்டு பதிவுகள் வரும்.
அப்பல்லாம் தம்பி பாஞ்சு வந்து சேந்திருவேன்ல?
இன்னும் நம்ம முகிலன் இருக்காரு... மம்முதன் இருக்கான்... தலை அவரு அனுபவங்களை நைஸா மறைக்கிறாரு..
நீங்க கவலையே படாதீங்க.

pradeepkt
05-10-2005, 06:54 AM
நன்றி பிரியன்,

கிரிக்கெட் மட்டுமே சொல்ல இன்னமும் 3 பதிவுகள் தேவைப்படுகிறது, பின்னர் என் கிராம வாழ்க்கை, கோயில் கொடை, சந்தை, தசரா என்று நிறைய சொல்ல இருக்கிறேன், படிக்கத் தான் யாரையும் காணவில்லை.
அண்ணா,
தைரியமாக எழுதித் தள்ளுங்கள். நான் தனிப்பதிவு போடாததற்குக் காரணமே உங்கள் பதிவுகளில் எழுதினால் நிறையப் பேர் படிப்பார்களே என்பதுதான்.

மன்மதன்
05-10-2005, 07:19 AM
அசத்துறியே நண்பா.. படிக்க ஆட்கள் இல்லையென்றால் கவலை இல்லை நண்பா.. நீ நேரிலே சொல்வது மாதிரி இருக்கிறது.. உன் அனுபவங்களை இன்னும் எடுத்து வையி... நாங்க படிக்கிறோம்ல..

மன்மதன்
05-10-2005, 07:21 AM
உனக்கு கை எப்படி ஒரு பிரச்சனை தந்ததோ எனக்கு கால் அப்படி தந்தது.. நான் ஓடி வந்து ஒரு ஜம்ப் பண்ணி பந்து வீச, அதை என் நண்பர்கள் கிண்டல் செய்ததுண்டு.. அப்போது 'ஊர்வசி' பாட்டு செம ஹிட். அந்த பாட்டில் வடிவேலு ஒரு ஜம்ப் பண்ணுவார் பாரு அது மாதிரி.. :D :D ரொம்ப கஷ்டப்பட்டு என் பௌலிஸ் ஸ்டைலை நான் மாற்றிக்கொண்டேன்.. :D

பிரியன்
05-10-2005, 08:05 AM
நன்றி பிரியன்,

கிரிக்கெட் மட்டுமே சொல்ல இன்னமும் 3 பதிவுகள் தேவைப்படுகிறது, பின்னர் என் கிராம வாழ்க்கை, கோயில் கொடை, சந்தை, தசரா என்று நிறைய சொல்ல இருக்கிறேன், படிக்கத் தான் யாரையும் காணவில்லை.

மனதைப்படிப்பவர்கள் தடங்களை பதிப்பதில்லை என்று கவலை வேண்டாம்....... அந்த மெளனம்தான் உங்களுக்கு கிடைத்த வெற்றி...:)

பரஞ்சோதி
05-10-2005, 09:34 AM
நன்றி பிரியன்,

கிரிக்கெட் அடுத்த பாகம் தயார், விரைவில் கொடுக்கிறேன்.

குவைத் கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி தனிப்பதிவு கொடுக்கிறேன்.

பாரதி
05-10-2005, 05:11 PM
அன்பு பரஞ்சோதி, இடையில் பயணத்தில் இருந்ததால் என்னால் படிக்க இயலவில்லை. உங்கள் பதிவு நன்றாக, சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் எழுதுவது உங்களுக்கு திருப்தியையும், மகிழ்வையும் தரக்கூடியதாக இருந்தால் மற்ற எதையும் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்..? கீதை சொல்வதுதான் என் நினைவுக்கு வருகிறது.. "கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே". உங்கள் தயக்கத்தை எல்லாம் மீறி, உங்கள் எண்ணங்களுக்கு அருமையாக உருவம் கொடுப்பதை கண்டு மிகவும் மகிழ்கிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.