PDA

View Full Version : தோட்டம்



பாரதி
29-09-2005, 05:03 PM
தேதியில்லா குறிப்புகள்

தோட்டம்

எனக்கு வெவரம் தெரியும் போது ரெண்டு ஏக்கர்ல தோட்டமும், கொஞ்சம் வானம் பாத்த பூமியும் எங்களுக்கு சொந்தமா இருந்திச்சு. தோட்டம்னா நல்ல பெரிய கெணறு, பம்புசெட் வசதியோட இருந்துச்சு. தாத்தா அவரோட புள்ளங்க நாலு பேருக்கும் சரியா இடத்த பிரிச்சு கொடுத்திருந்தாரு. ஊருக்கு வடமேக்க, வடக்காறு ஓரமா, வண்டியோட பக்கத்துலயே இருந்துச்சு. தோட்டத்துக்கு வடக்கயோ இல்லாட்டி மேக்கயோ நடந்தா கொஞ்ச தூரத்துலேயே ஆறு வந்திரும். அதனால கெணத்துல எந்தக்காலத்துலயும் தண்ணி வத்துனதே கெடயாது. கெணறுன்னா சரியான கருங்கல்லுதான். ஊத்து கணக்கா அங்க அங்க கல்லுல இருந்து தண்ணி வரும். எப்படியும் கிட்டத்தட்ட இருபதடிக்கு இருபதடி அளவுக்கு கெணறு இருக்கும். பம்புசெட் எங்க தோட்டத்துல இருந்தாலும் கெணறும் பம்புசெட்டும் சித்தப்பாவுக்கும் எங்களுக்கும் பொதுவானது.

பக்கத்துல ரெண்டு மூணு கெணத்துக்கு பம்பு செட்டு வசதி கெடயாது. அங்க எல்லாம் என்ன செஞ்சிருப்பாங்கன்னா.. கெணத்துக்கு மேல ஒரு பக்கமா சரிவா மண்ணு குமிச்சு மேடா செஞ்சி வச்சிருப்பாங்க. கெணத்த ஒட்டி கமல மாட்டுறதுக்கு ஒரு நெலப்படி மாதிரி மரத்துல செஞ்சி வச்சிருப்பாங்க. பெரிய தோலுல பண்ணுன கொடம் மாதிரி இருக்குறத கயித்துல கட்டி தண்ணி எறைக்க தோதா வச்சிருப்பாங்க. ரெட்டை மாட்டை பூட்டிகிட்டு சரிவா இருக்குற மண்மேட்டுல மேல இருந்து கீழ இருந்து மேல வரும் போது கெணத்துல இருக்குற தண்ணில அது முங்கிக்கும். மேல இருந்து கீழ மாட்ட பத்திகிட்டு வரும் போது நெறஞ்சிருக்கிற தண்ணி வாய்க்கால்ல வந்து கொட்டும். தண்ணி எறைக்க ஒரு ஆளு, தண்ணி பாய்ச்ச ஒரு ஆளுன்னு ரெண்டு பேரு கண்டிப்பா வேலைக்கி வேணும். நாளு முழுக்க வேலையப்பாக்கணும். பாவம்.

எங்க தோட்டத்துக்கு மத்தியில, நல்ல ஒசரத்துல கரண்டுகம்பிக போகும். தோட்டத்துல பம்புசெட்டுக்கு வடக்க இருந்த எடம் மாத்திரம் கொஞ்சம் ஒசரமா இருக்கும்.

தோட்டத்துக்கு வடக்கு பக்கம் மாத்திரம்தான் வேலி இருந்திச்சு. வேலின்னா, கருவேலமரம், கொடுக்காப்புளி மரம், அத்திமரம், பூவரச மரம், வேப்ப மரம் ...இப்படி தினுசா மரங்க இருக்கும். மத்த மூணு பக்கமும் தோட்டந்தாங்கிறதால எல்லாம் வரப்பு மட்டும்தான் எல்லையா இருக்கும். கெணத்து பக்கத்துல அஞ்சாறு தென்னமரம் வரப்போரமா இருக்கும்.

வரப்புக ஓரமா தண்ணி போறதுக்கு வசதியா சின்ன வாய்க்கால் மாதிரி நெடுக இருக்கும். வரப்போரத்துல அங்கங்க வெண்டக்கா செடிக, ஆமணக்கு செடிக எல்லாம் இருக்கும். வரப்புகளும் கூட புல்லு வெளஞ்சு... சும்மா அப்படியே மெத்தை கணக்கா... நடக்குறதுக்கு ரொம்ப சுகமா இருக்கும்.

தோட்டத்துல என்ன என்ன போட்டுருக்கோம் தெரியுமா! மிளகா, கத்தரிக்கா, கேழ்வரகு, சீனி அவரக்கா, வெங்காயம், தட்டாம்பயிறு, தக்காளி, சோளம், இப்படி நெறய... அப்ப அப்ப மாறிகிட்டே இருக்கும். ஆனா அடிக்கடி போட்டது பருத்திதான். அது என்னமோ பணப்பயிராம். காசு நெறய கெடைக்குமாம்...ஹம். பக்கத்து தோட்டங்கள்ல சூரியகாந்திப்பூ, எள்ளு, கானம், மக்காச்சோளம், நெலக்கடல, சக்கரவள்ளிக்கெழங்கு இதெல்லாம் கூட போட்டிருக்காங்க.

தோட்டம் ஊருல இருந்து கிட்டத்தட்ட ஒண்ணரை இல்லாட்டி ரெண்டு கிலோமீட்டர் தூரமிருக்கும். அப்பா வெள்ளனயே தோட்டத்துக்கு போயிருவாரு.

அப்பல்லாம் போஜராஜா மில்லுல ஆறேமுக்காலுக்கு சங்கு அடிக்குதுன்னா எல்லோரும் வேலைக்கு ரெடியா இருப்பாங்க. தோட்டத்துக்குப் போறவங்க எல்லோரும் பழயசாதத்தை தூக்குவாளியில எடுத்துகிட்டு கெளம்பிருவாங்க. எல்லாரோட தூக்குவாளிக காதுலயும் வெங்காயமோ, வத்தலோ, ஊறுகாயோ தொங்கிகிட்டு இருக்கும்.

அப்பல்லாம் ஒழவு வேல, தோட்டத்துக்கு மருந்தடிக்கிறது, தண்ணி பாய்ச்சுரதத் தவிர கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் பொம்பளைங்களே செஞ்சு முடிச்சுருவாங்க. களையெடுக்குறது, காய் புடுங்குறது, பருத்தி எடுக்குறது இப்படி...

தோட்டம் வச்சிருக்குற சம்சாரிகளுக்கு, ஒவ்வொரு மகசூலுக்கு அப்புறமும் தோட்டத்துக்கு குப்ப உரம் போட்டு, நல்லா உழுது, வெள்ளாமைக்கு தக்கன தண்ணி பாச்சி, அடியுரம், மேலுரம் போட்டு, களையெடுத்து, மருந்தடிச்சு, காவ காத்து, மறுபடி மகசூல் எடுக்குற வரைக்கும் வேல சரியாத்தான் இருக்கும்.

அப்ப அப்ப நானும் தோட்டத்துக்குப் போவனே... அங்க போனா எப்படி அப்பா தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சுராருன்னு சூதானமா பாத்துகிட்டு இருப்பேன். பம்புசெட் ரூமு ரெண்டு அடுக்கா இருக்கும். ரூமுக்கு உள்ள நுழையற இடத்துல தரையெல்லாம் இருக்காது. வெறுமனே பலகைகளை வச்சு அடச்சி, தரை மாதிரி செஞ்சிருப்பாங்க. ஒரு ஓரமா சின்ன வாசல் மாதிரி இருக்கும் பலகையை தூக்குனா.. ஏணிப்படி வழியா கீழ பம்புசெட் இருக்குற இடத்துக்கு போகலாம். மம்பட்டி, கொத்து, சாக்கு இப்படி கொஞ்சம் ஒழவு சாமானுங்க இருக்கும். அப்புறம் வேலக்கி வர்றவங்களோட தூக்குவாளி வைக்கிறதுக்கு, மத்தியானம் வெயிலா இருந்துச்சுன்னா ஒக்காந்து சாப்புடறதுக்கு - இதுக்கெல்லாம் வசதியா இருக்கும்.

மோட்டார போடுறதுக்கு முன்னாடி முக்கியமா ஒண்ணு செஞ்சாகணும். பம்புசெட்டுல இருந்து தண்ணி வந்து விழுற இடத்துல தொட்டி மாதிரி கட்டியிருப்போம்ல.. அதுல அரையடிக்கு எப்பயும் தண்ணி தேங்கிதான் இருக்கும். அதுல இருந்து ஒரு டப்பா வச்சுகிட்டு தண்ணிய மோண்டு மோண்டு தண்ணி வர்ற பைப்ல ஊத்தணும். பம்புல இருக்குற சின்ன வால்வ தெறந்து வச்சுருக்கணும். எப்ப அந்த வால்வுல தண்ணி பீச்சிகிட்டு அடிக்குதோ, அப்ப வால்வ மூடிட்டு ஒடனே மோட்டாரைப் போடணும். மொதல்ல மெயின் சுட்சு மாதிரி இருக்கும்ல, அந்த சுட்ச கீழ அமுக்கணும், அப்புறமா மேல தூக்கிவிட்ரணும். அப்பத்தான் மோட்டாரு நல்லாத் தண்ணி எறைக்குமாம்.

தொட்டியில விழுந்து, வழிஞ்சு ஓடுற தண்ணிய வசதிக்கு தக்கன அங்கங்க மடைகட்டி திருப்பி விட்டுக்குவாங்க. தோட்டத்துல ஒவ்வொரு பாத்தியாதான் தண்ணிய பாச்சணும். ஒரு பாத்தி முடிஞ்சிருச்சுன்னா அதுக்கு வர்ற தண்ணிக்கு அணை போட்டுட்டு அடுத்த பாத்திக்கு தண்ணியத் திருப்பி விடணும்.

அருவில விழுற தண்ணி கணக்கா, அந்த தண்ணித்தொட்டில நின்னுகிட்டு குழாத்தண்ணில குளிக்கிறதும் ரொம்ப நல்லா இருக்கும். நாளு முழுக்க வேல பாத்துட்டு, வேகமா வர்ற பம்புசெட்டு தண்ணியில குளிச்சா அம்புட்டு அலுப்பும் தூசா பறந்து போயிரும்ல.

--- தொடரும்.

பாரதி
30-09-2005, 04:32 PM
தோட்டம் - 2

தோட்ட வேலக்கி அப்புறம் கபகபன்னு வயிறு பசிக்கிறப்ப என்ன சோறுன்னாலும் சரி.. சும்மா சல்லுன்னு வயித்துக்குள்ள போகும். வீட்டுல சாப்புடுறத விட அங்க போனா நாங்கூட நல்லா சாப்புடுவேன்.

தோட்டத்துக்கு போனாலே பச்சையா வெண்டிக்கா, பழுத்த தக்காளி, நெலக்கடல,கெழங்கு, கரும்பு கணக்கா ருசிக்குற சோளத்தட்ட, பிஞ்சு பருத்திக்கா, கேப்பக்கதுரு, மக்காச்சோளம், கொடுக்காப்புளி, எளநி.. இப்படீன்னு திங்கிறதுக்கு ஏதாச்சும் கெடைக்கும். அப்பாக்கு மாயண்ணன்னா ரொம்பப் புடிக்கும். நான் தோட்டத்துல இருக்குறப்ப அவரு வந்தா போதும் எங்கிட்டு இருந்தாச்சும் (!) எளநி வெட்டிகிட்டு வந்துருவாரு.

தோட்டத்துக்கு போற வழில, ஓடையில கத்தாழைப்பூவும் பழமும் ரொம்ப அழகா இருக்கும். அந்தப்பழத்த பிச்சுப்பாத்தா சீனிக்கணக்கா இருக்கும். கோவப்பழம், மயில்தோகைப்பூ, மஞ்சப்பூ, வெத்தலைப்பாக்கு செடி, இன்னும் விதவிதமா... கலர்கலரா, பேரு தெரியாத செடிக எல்லாம் ஓடை ஓரத்துல தானா மொளச்சு கெடக்கும். பாக்குறதுக்கு கொள்ள அழகா இருக்கும்.

தோட்டத்துக்குப் போனா காலைல ஒரு வாட்டி, சாயந்திரம் ஒரு வாட்டி.. தூரமா மலையடிவாரத்துல போடிக்கோ இல்லாட்டி மதுரைக்கோ போற ரெயிலுவண்டிய பாக்கலாம்ல... கருப்பா புகைய கக்குனாலும் "சிக்குப்புக்கு... சிக்குப்புக்கு"ன்னு அது போற அழக பாத்துகிட்டே நிக்கலாம். அப்புறம் பூவரச மரக் காய எடுத்து பம்பரம் விடலாம். பூவரச எலய சுருட்டி, பீப்பி ஆக்கி ஊதலாம்.

ஒருக்கா எனக்கு கெணத்துல நீச்சலடிச்சு குளிக்கணும்னு ஆச. அப்பாகிட்ட சொன்னனா, அவரும் சரின்னு சொல்லிட்டாரு. கெணத்துல சைடுல நீட்டிகிட்டு இருக்குற கல்லுகதான் படி. ரொம்பவும் சூதானமா எறங்கணும். இல்லாட்டி அவ்ளோதான். கீழ இருக்குற படிக்கு போன பின்னாடி, அப்பா என்னோட சட்ட டவுசர எல்லாம் கழட்டிட்டு, அருணாக்கயிற பிடிச்சுகிட்டு நீச்சலடிக்க சொன்னாரு. நானும் அடிச்சேன். ரெண்டு மூணு நிமிசம் கழிச்சு பாத்தா என் இடுப்புல இருந்த அருணாக்கயிறு அப்பா கைல மாத்ரம்தான் இருக்கு! கெணத்தோட ஆழத்த நான் பாக்குறதுக்கு முன்னாடி தலமயிரைப் பிடிச்சு அப்பா இழுத்துகிட்டு மேல கொண்டு வந்தாரு. தண்ணியக்குடிச்சு வயிறெல்லாம் ரொம்பிப்போச்சு. அதுக்கப்புறம் அப்பா எனக்கு நீச்சலடிக்க சொல்லியே தரல.

அக்காவுங்க, அம்மா எல்லாரும் தோட்ட வேலக்கி வருவாங்க. ஏழாப்பு, எட்டாப்பு படிக்கும் போது நானும் தோட்டத்துல கூடமாட வேல செய்வேன்.

அந்த நேரத்துல நவமணியக்காவுக்கு மாப்ள பாத்துகிட்டு இருந்தாங்க. என்னாச்சுன்னே தெரியல. ஒரு நா அப்பா கட்டுகட்டா பணத்தோட வீட்டுக்கு வந்தாரு. மொத்தம் அறுபதாயிரம் இருக்குன்னாரு. என்னான்னு கேட்டா கல்யாணச் செலவுக்கு பணம் வேணும்ல. அதனால தோட்டத்த வித்தாச்சு. கல்யாணத்துக்கு செலவு பண்ணுனது போக மீதி இருக்குற பணத்துல ஏதாச்சும் வயலு குத்தகைக்கு எடுத்து வெவசாயம் பண்ணலாம்னு பேசிகிட்டாங்க.

அதுக்கப்புறம் நான் தோட்டத்துப் பக்கமே போகல. கிட்டத்தட்ட இருவத்தஞ்சு வருசம் கழிச்சு, இந்த வருசம் தோட்டத்துப்பக்கம் போனேன். ரெண்டு மூணு சினிமா கொட்டக வந்த பின்னாடி தேனி பாலத்துல இருந்து பூதிப்புரம் வரைக்கும் தார்ரோடு போட்ருந்ததால தோட்டத்த பாக்க வண்டியிலயே போயிட்டேன்.

போற வழில ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் பாத்தா அநேகமா தோட்டம் எதையும் பாக்க முடியல. எல்லாத் தோட்டமும் கம்பெனியாவும் கட்டடமாவும் மாறிக்கெடக்கு!

இத்தன வருசத்துக்கு அப்புறமும் தோட்டத்த பாக்குறதுல எனக்கு எந்த செரமமும் இல்ல. என்னைக்கும் பாத்துகிட்டு இருந்த மாதிரி ஒடனே கண்டு பிடிச்சிட்டேன். ஆனா... என்னத்த சொல்ல..? அங்க தோட்டம் ஒரு சம்சாரியோட கனவு மாதிரி வரண்டு போயில்ல கெடந்துச்சு. எங்க தோட்டம் மாத்திரமில்ல..அங்கன இருந்த எந்த தோட்டத்துலயும் வெவசாயம் எதுவும் நடக்கல. ஹம்... இப்பவும் எங்க தோட்டம்னு சொல்றது எனக்கே சரியாப்படல. எங்க கிணத்து பம்பு செட் ரூமு சுவத்துலயும், ஒரு போர்டுலயும் 'மணிநகர் - வீட்டு மனைகள் விற்பனைக்கு' அப்டீன்னு எழுதி இருந்தாங்க. வரப்பு எதுவும் இல்ல. வேலி, மரங்க, செடிக எதுவும் இல்ல. வெவசாயிக, மாடு கண்ணுங்க ஒண்ணையும் பார்க்க முடியல. நான் பாத்ததுல பம்புசெட்டு ரூமும் கெணறும் மாத்திரம்தான் அப்படியே இருக்கு. ரோட்டுல இருந்து ஒரு ஒத்தையடிப்பாத மாத்திரம் கெணத்து பக்கத்துல போகுது.

இப்ப அந்த இடத்துல வீட்டு மனை செண்டு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபா போகுதாம். உயிருள்ள பச்சை செடிக, மரங்க இருந்த எடத்துக்கு இல்லாத மதிப்பு வெறும் எடத்துக்கு இருக்குன்னு நெனக்கிறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. எத்தனையோ வெதைகள தாங்குன அந்த நெலம் இன்னைக்கு ஒரு சம்சாரியோட கனவ பொதைச்சு வச்சுகிட்டு இருக்குற மாதிரி தோணிச்சு.

இருந்தாலும், இப்ப மாத்திரம் அந்தத் தோட்டம் நமக்கு சொந்தமா இருந்தா ராஜா மாதிரில்ல..... அப்டீங்கிற நெனப்பு என்னமோ வரத்தான் செய்யுது.

இளசு
10-10-2005, 11:16 PM
சலசலவென வாய்க்கால் நீரோட்டமா போய்கொண்டிருந்த தோட்டாத்துக் குறிப்பு, கடைசியில் கலங்க வச்சிடுச்சி..
வயல் வேலை செஞ்சா பசி அகோரமாய் வரும்தான்.
வீட்டுல சாப்புடுறத விட கூடுதலாய் இறங்கும்தான்..
அப்புறம் அரணாக்கயிறு அறுபடாம என்ன செய்யும்?

சிறுவயதில் என் தாத்தா நிலத்தில் நான் அனுபவித்த பல நினைவுகளைக் கீறி விட்டாய் பாரதி.
ஆனால் அது நஞ்சை...
உன் போன்ற பலவகைப் பயிர்கள் பரிச்சயம் இல்லை.
நெல் அதை விட்டால் வெற்றிலை, கரும்பு இப்படித்தான்.

ஆமாம், கருவாச்சி காவியத்தில் படிக்கும்போதே யாரிடமாவது கேட்கணும் என நினைத்தேன்..
அது என்ன - கானம் பயிறு?

உன் குறிப்புகளைத் தேடி அலைந்த எனக்கு 'இலக்கியங்கள்' பகுதி பார்க்கச் சொல்லி குறிப்பால் உணர்த்தியதற்கு நன்றி..

பாரதி
11-10-2005, 01:33 AM
ஆமாம், கருவாச்சி காவியத்தில் படிக்கும்போதே யாரிடமாவது கேட்கணும் என நினைத்தேன்..
அது என்ன - கானம் பயிறு?


அண்ணா....

கானம் பயிறு என்பது உண்மையில் குதிரைக்கு வைக்கும் கொள்ளாக பயன்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் அறிந்த வரையில் கானம் வானம் பார்த்த பூமிகளில் அதாவது தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் விளையும் பயிர். குட்டையான செடியில் விளையும் கானம் பயிறு சிறிதாக, தட்டையாக பழுப்பு நிறத்தில் இருக்கும். கிட்டத்தட்ட அவரை விதை அமைப்பில் ஆனால் மிகவும் சிறியதாக இருக்கும் இதை நன்றாக இடித்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து உருண்டை செய்து தருவார்கள். அந்த கானத்தை வேக வைத்த நீரில் ரசம் வைப்பார்கள். இரண்டுமே மிகவும் நன்றாக இருக்கும். நானும் கூட கானத்தைப் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. கானம் இப்போ காணோம்..!?

pradeepkt
11-10-2005, 06:18 AM
பாரதி அண்ணா,
திரும்ப பலரது நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். நான் வளர்ந்தது பெரிய கிராமமான மதுரையில். பக்கத்தில் தத்தனேரியில் தாத்தா வயல்களை எல்லாம் குத்தகைக்குத்தான் விட்டிருந்தார்கள். அதனால் சிற்சில சமயம் பம்பு செட்டில் போய் குளிப்பதைத் தவிர வேறேதும் அனுபவம் இல்லை. ஆனால் வருடா வருடம் மாசி மாதம் சிவராத்திரி திருவிழாவுக்காக எங்கள் குலதெய்வம் இருக்கும் கிராமத்துக்குப் போவோம். அப்பா வழி குலதெய்வம் அருப்புக் கோட்டையில் இருந்து கமுதி செல்லும் வழியில் ரமண மகரிஷி பிறந்த திருச்சுழி. அம்மா வழி பக்கத்தில் புலியூரான் கிராமம். இரண்டு கோயில்களுக்கும் நடுவில் இருக்கும் பச்சென்ற வயல்களைக் கடந்து மிளகாய்த் தோட்டங்களில் காய் பறித்துச் செய்த குறும்புகளை எல்லாம் உங்கள் பதிவுகள் நினைவூட்டின.

கொள்ளு இப்போது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறதே. சிறுநீரகக் கோளாறுகளுக்குக் கொள்ளுச் சாறு ஒரு அருமருந்து. கொள்ளு சுண்டலும் அருமையானதே, ஒரே பிரச்சினை கொள்ளை நன்றாக அரிக்காவிட்டால் கல் சிக்கும்.

gragavan
11-10-2005, 06:25 AM
பாரதியண்ணா கானாம் பயிறு என்பதை எங்களூர்ப் பக்கத்தில் கானப்பயறு என்பார்கள். இதை இன்றைக்கு எங்கும் காணாம் பயறுதான். கொள்ளு என்றால் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

குறிப்பாக காய்ச்சலில் விழுந்து எழுந்தவர்களுக்கு கானத் துவையல் அரைத்துக் கொடுப்பார்கள். உடல் வலிக்கும் நாக்கிற்கும் சிறந்தது.

gragavan
11-10-2005, 06:32 AM
பூவரசுப் பம்பரம் எனக்கும் பழக்கமே. நொங்கு வண்டி உருட்டுவதும் பருத்தி மாறு வீசித் தட்டான் பிடிப்பதும் பழக்கமுண்டு.

குளக்கட்டாங்குறிச்சி புதூரில் வட்டக் கிணறு என்று ஒன்று உண்டு. எங்கள் தோட்டத்துக் கிணற்றுக்குள் நீச்சல் பழக முடியாது. ஆனால் அருகிலுள்ள மற்றொரு தோட்டத்து வட்டக் கிணற்றில் சுற்றுச் சுவர் கட்டப் பட்டிருக்கும். ஆகையால் நீச்சல் அடிப்பர்களுக்கு அந்தக் கிணறு ஒரு வரப் பிரசாதம்.

ஊரிலிருக்கும் சொந்தக்காரப் பிள்ளைகள் கிணற்றுக்குள்ளே நீர்த்தேளு இருக்கிறது என்பார்கள். நானும் எட்டிப் பார்ப்பேன். கோணமாணியா ஒன்று மிதந்து கொண்டிருக்கும். பெரிதாக இருக்கும். அடடா! இதுதான் நீர்த்தேளா என்று வீட்டில் வந்து நீர்த்தேள் பார்த்தேன் என்றால் சிரிப்பார்கள். காரணம் அவர்கள் சோளத்தட்டையையோ கம்பந்தட்டையோ போட்டு ஏமாத்தியிருப்பார்கள். ஹா ஹா ஹா

பாரதி
13-10-2005, 01:36 PM
மிக்க நன்றி பிரதீப், இராகவன். முன்பெல்லாம் எங்கள் ஊரில் அநேகமாக எல்லா கிணற்றிலும் தண்ணீர் நிறைந்தே இருக்கும். இருபதடி, முப்பதடி ஆழம் எல்லாம் சாதாரணமாக இருக்கும். பலரும் கிணற்றின் மேலிருந்து தலைகீழாக குதிப்பதை மெய்சிலிர்க்க பார்த்துக்கொண்டிருப்பேன். சிலர் தரைக்கு சென்று மண் எடுத்து காண்பிக்க வேண்டும் என்றெல்லாம் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். எனக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

pradeepkt
13-10-2005, 01:56 PM
எனக்கு எங்கள் வீட்டுக் கிணறு பக்கத்துக் கலியாண மண்டபத்தில் போட்ட போர் பைப்பால் தூர்ந்து போனதுதான் நினைவுக்கு வருகிறது.
எத்தனையோ சண்டை சமாதானங்களுக்குப் பிறகு என் தாத்தா அதை மண் வைத்து மூடிய நாள் நான் கண்ணீர் விட்ட வெகு சில நாட்களில் ஒன்று.

பாரதி
22-03-2008, 08:17 AM
கருத்துக்கு நன்றி பிரதீப்.