PDA

View Full Version : சினிமா... சினிமா...

பாரதி
28-09-2005, 05:50 PM
தேதியில்லா குறிப்புகள்

சினிமா... சினிமா...

இதப்பாத்ததும் உடனே எல்லாரும் வருவாங்கன்னு எனக்கும் நல்லாத்தெரியும். ஏன்னா நானும் ஒரு காலத்துல சினிமான்னா கிறுக்கா இருந்திருக்கேனே..! இந்தப்பதிவுக்கு முடிவு எல்லாம் இருக்காது. வேணும்கிறப்ப எழுதி தொடர்ச்சி 2... தொடர்ச்சி 3..ன்னு போட்டுகிட்டே இருக்கலாம்.

எனக்கு வெவரம் தெரிஞ்சப்ப சினிமா கொட்டகையில தரை டிக்கட்டு 25பைசா இருந்துச்சு. வீட்டுல இருந்து சினிமா போறாங்கன்னா அதுவே பெரிய கூட்டம் மாதிரிதான். எப்பவும் தர டிக்கட்டுக்குத்தான் போவோம். தேனியில ஸ்ரீராம், லெச்சுமின்னு ரெண்டு தியேட்டர்ங்க அப்ப இருந்துச்சு. எங்க ஊருலயும் அப்புறமா பழனியப்பா திரையரங்கம்னு ஒரு டூரிங் டாக்கீஸ் ஆரம்பிச்சாங்க.

ஸ்ரீராமுலயும் லெச்சுமிலயும் தர டிக்கட்டுன்னாலும் பள்ளிக்கூட புள்ளங்க படிக்கிற மாதிரி பெஞ்சுக போட்டிருப்பாங்க. ஆனா டூரிங் டாக்கீஸ்ல தர டிக்கட்டுன்னா மணல்லதான் ஒக்காந்து பாக்கணும். அநேகமா எல்லாத்தியேட்டர்லயும் தர டிக்கட்டுதான் கூட இருக்கும். அங்கதான் கூட்டமும் இருக்கும்.

டூரிங் டாக்கீஸ்ல தர டிக்கட்டுல சின்னப் புள்ளக பூராவும் மணல குமிச்சு, அதுக்கு மேலே உக்காந்து பாக்குங்க. ஏன்னா முன்னாடி ஒக்காந்துருக்குற பெரிசுக தல திரைய மறைக்கும்ல. அங்க கூட்டமில்லன்னு வச்சுக்கங்க, வசதியா துண்ட விரிச்சு படுத்துகிட்டே சினிமா பாக்கலாம். அந்த வசதியெல்லாம் ஏசி தியேட்டர்கள்ல கூட வராதுப்போய். குளுகுளுன்னு இருக்குற அந்த மணல்ல படுத்துக்கிட்டே சினிமா பாத்தோம்னு வைங்க... அப்பா என்னா ஒரு சுகம்.. அதெல்லாம் அனுபவிச்சுப் பாத்தவங்களுக்குத்தான் தெரியும்.

பொம்பளைங்க உக்காருர இடத்துக்கும், ஆம்பளைங்க உக்காரு இடத்துக்கும் நடுவுல மண்ணால ஒரு தடுப்புச்சுவரு கட்டியிருப்பாங்க.
மொதல்ல எல்லாம் நான் அம்மா, அக்காவுங்க கூடத்தான் சினிமாக்கெல்லாம் போவேன். மாசத்துக்கொருக்கா இல்லாட்டி ரெண்டு தடவ போயிட்டு வருவோம். போகும்போதெல்லாம் கும்மாளத்தோட போற நானு, வர்றப்ப எல்லாம் கும்பகர்ணந்தான். யாராச்சும் நம்மள தூக்கிட்டுத்தான் வரணும். நடந்தெல்லாம் வரமுடியாதுன்னு கண்டீசனா சொல்லிப்புடுவேன். டூரிங் டாக்கீஸ்ன்னா பரவால்ல... கொஞ்சம் கிட்டக்கத்தான். ஆனா லெச்சுமி டாக்கீஸ நல்ல தூரம். அவ்ளோ தூரமும் தூக்கிட்டுத்தான் வரணும்னு ரொம்ப அடம் பிடிப்பேன்.

எந்த சினிமாவ முதல்ல பார்த்தேன்னு சரியா சொல்ல முடியல. மணி சித்தப்பா தேவதானப்பட்டி மஞ்சளார் டேமுக்கு மாட்டு வண்டி கட்டிகிட்டு போய் சுத்திப் பார்த்திட்டு, அப்படியே "சூரியன் சந்திரன்" படத்துக்கு கூட்டிட்டு போனாரு. மாயாஜாலக் கதைங்கிறதால நல்லாத்தான் இருந்துச்சு. அப்புறம் முன்னாடியே சொன்ன மாதிரி நெல்லிக்குப்பத்தில் "பூம்புகார்" படம் பாத்துருக்கேன்.

அப்புறமா ஐந்து பூமார்க் பீடிக்காரங்க விளம்பரத்துக்காக செளடம்மன் கோயிலு திடல்ல, சின்னதா தெர கட்டிக் காமிச்ச 'ஜக்கம்மா' படம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. வீரபாண்டி திருவிழா வந்தாப்போதும், ஒரு வாரத்துக்கு ஏகப்பட்ட சினிமா ஓசிக்கு பாக்கலாம். ஆனா சின்னப்பையங்கிறதால நம்மல எல்லாம் வீட்ல விடமாட்டாங்க. சிவராத்திரின்னா போதும் , கொட்டாயில ரெண்டு படம் போடுவான். ஒரு தடவ காசு கொடுத்தா போதும் ரெண்டு படம்லன்னு கூட்டமும் ஜேஜேன்னு இருக்கும். ரெண்டு படத்துல ஒண்ணு கண்டிப்பா சம்பூர்ண ராமாயணமா இருக்கும். அந்த ஒரு படத்தயே நான் முழுசா பாத்ததில்ல! அடுத்தப்படத்த பத்தி என்ன சொல்ல..?

நான் ரெண்டாவது மூணாவது படிக்கிற சமயம். ஒரு பண்டிகை நாள்ல - உள்ளூரு கொட்டாயில எம்ஜியாரு படம் 'இதய வீணை' போட்டிருந்தாங்களா, அக்காவுங்க எல்லாரும் என்னையும் கூட்டிகிட்டு சினிமாவுக்கு போனாங்க. தீப்பெட்டிக் கம்பெனி பக்கத்துல போகும் போதே விநாயகனே.. வினைதீர்ப்பவனே... பாட்டு ஸ்பீக்கர்ல கேட்டதும் அவசர அவசரமா எல்லாரும் ஓடுனோம். ஏன்னா.. படம் போடுறதுக்கு முன்னாடி கடைசியா போடுற பாட்டு அதுதான்.

அன்னைக்கு பாத்து என்னடான்னா... கூட்டம் சும்மா கங்குகரையில்லாம கெடக்கு. நாங்களும் அடிச்சு பிடிச்சு உள்ள போய்ட்டோம்ல. ஆம்பளங்க கூட்டம் நெறய ஆனதால, வர்ற ஆம்பளங்க எல்லாரும் பொம்பளங்க ஒக்காருர பக்கத்துலயும் வந்து உக்காந்திட்டாங்க. கூட்டம் வந்துகிட்டே இருக்கு. படத்த வேற போட்டுட்டாங்க. காஷ்மீர்..பியூட்டிபுல் காஷ்மீர்..ன்னு பாட்டு வந்துச்சோ இல்லையோ... கீத்து கொட்டகைதான...கூரையில இருந்த கம்ப உருவி ஒரு ஆள் சொழட்ட ஆரம்பிச்சாம் பாருங்க. கூட்டம் ஹே..மா..ன்னு கத்திகிட்டு வெளிய ஓடப்பாக்குது. உள்ள கலாட்டா வேற ஆரம்பிச்சிருச்சா.. நாங்களும் ஓட ஆரம்பிச்சோம். வெளிய வர சின்னதா ரெண்டு வழிதான் இருந்திச்சு.

அக்கா என் கைய பிடிச்சுகிட்டே ஓடும் போது முன்னாடி போன என்ன யாரோ வேகமா தள்ளி விட்டாங்களா.. சரியா வாசலுக்கு நேரா கீழ விழுந்துட்டேன். பின்னாடி வர்ற சனம் எல்லாம் அப்படியே திமுதிமுன்னு எம்மேல வந்து விழுறாங்க. அக்கா என்ன கூப்புடுற சத்தமும் கேக்குது. ஆனா பதில் பேச முடியல. கொஞ்ச நேரம் கழிச்சு யாரோ தூக்கிவிட்டாங்க. அதுக்கப்புறம் பாத்தா நான் வீட்ல படுத்துகிட்டுருக்கேன். அக்காவுங்க எல்லாருக்கும் சரியான திட்டு. நெஞ்செல்லாம் ஒரு மாதிரி அடைக்கிறாப்ல இருந்திச்சு. வலி வேற. அம்மா தேங்கா கஞ்சி காய்ச்சிட்டு வந்து ஊட்டி விட்டாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு சினிமாங்கிற பேச்சையே யாரும் எடுக்கல.

-- இதன் தொடர்ச்சி எதிர்காலத்தில் வெளிவரக்கூடும்.

gragavan
29-09-2005, 07:10 AM
அடேங்கப்பா சினிமாவுல எத்தன வம்பு......இதப் பத்தியும் இனிமே எல்லாரும் பேசுவாங்களே. அவங்கவங்க பாத்த சினிமா...ம்ம்ம்ம்.

நான் மொதல்ல பாத்த படமெல்லாம் நெனவுல இல்லை. ஆனால் நெறய படங்கள் நினைவில் இருக்கு. எப்ப பாத்தோமுன்னு தெரியாம நினைவுல இருக்கு. மதுரை ஜெயராஜ் தேட்டருல சிவாஜி பெரிய கொட்டு வெச்ச படம் பெருசாஆஆஆஆஆ வெச்சிருந்தாங்க. ஆனா படம் பாத்த நினைவில்லை. உள்ள போய் தூங்கிருப்பேன்.

Mano.G.
29-09-2005, 08:53 AM
தம்பியின் பாரதி நல்ல (அந்த) இளமை கால அனுபவம்
அருமை,

எனக்கு விபரம் (7 வயதில்) தெரிஞ்சு 1965ம் ஆண்டு மலேசியாவுல நான் தியேட்டரில் கண்டுகளித்த முதல் சினிமா "அன்பே வா", எனது தந்தை தாயார் தம்பி மற்றும்
தங்கையுடன் கண்டு களித்த திரைப்படம்.
அந்த சினிமாவுக்கு போவதற்கு செய்யபட்ட ஏற்பாடுகள் அப்பப்பா!!
அந்த நினைவுகள் இன்னமும் என்னை விட்டு அகலவில்லை

மனோ.ஜி

பாரதி
29-09-2005, 04:58 PM
மிக்க நன்றி இராகவன், மனோ. இந்த சினிமா பதிவு வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் போது சில பகுதிகளாக வெளிவரும்.

மன்மதன்
11-10-2005, 08:14 AM
நல்லா இருந்தது சினிமா அனுபவங்கள்..

நானும் ஒரு சினிமா பைத்தியம்தான்.. ஆனாலும் ஒரு தடவை பார்த்த சினிமாவை மறுமுறை தியேட்டர் சென்று பார்ப்பதில்லை.. நான் அதிக தடவை தியேட்டரில் சென்று பார்த்த படம் 'மின்னலே' (தேவி தியேட்டரில் மட்டும் 5 முறை)... அப்புறம் 'துள்ளாத மனமும் துள்ளும்' 3 தடவை.. அப்புறம் 2 தடவை பார்த்த படங்களும் கை விட்டு எண்ணிவிடலாம்...

முதல் நாள் முதல் ஷோவுக்கு முட்டி மோதியோ, அல்ல பணம் நிறைய கொடுத்தோ பார்க்கப்பிடிக்காது.. சில சமயம் நண்பர்கள் வற்புறுத்துதலால் போக வேண்டி வரும்.. 'தேவி'யில் ஆளவந்தான் முதல் காட்சி அப்படி பார்த்தோம். டிக்கெட் விலை 1000 ரூ. நாகை பாண்டியன் , சென்னை தேவி, நான் அதிகம் சென்று படம் பார்த்த தியேட்டர்கள்.

சிறு வயது முதலே நான் கமல் ரசிகன் ...........

பரஞ்சோதி
11-10-2005, 09:03 AM
இனிமையான பதிவு அண்ணா.

எனக்கு சினிமா அதிகம் பழக்கம் இல்லை. +2 முடிக்கும் வரை நான் தியேட்டர் போய் பார்த்த படங்கள் 20க்கும் குறைவாகவே இருக்கும். இருந்தாலும் சின்ன வயதில் சினிமா கொட்டகை சென்ற அனுபவத்தை விரைவில் சொல்கிறேன்

பாரதி
13-10-2005, 01:40 PM
மிக்க நன்றி மன்மதன், பரஞ்சோதி. என்னுடைய சினிமா அனுபவங்களை வாய்ப்பு வரும் போது தொடர்வேன். அப்படி சினிமா பைத்தியமாக இருந்தது நான் தானா..? என்று என்னாலேயே நம்ப முடியவில்லை. உங்களின் இனிமையான அனுபவங்களையும் படிக்க காத்திருக்கிறேன் நண்பர்களே.

இளசு
20-10-2005, 11:30 PM
பாரதி,
உன் தேதியில்லாக் குறிப்புகளை ஒவ்வொன்றாய் படித்து வருகிறேன்.
உன் எழுத்து மேல் காதல் கூடிக்கொண்டே....

தம்பிக்கேற்ற அண்ணன்....
கல்லூரி முதல் ஆண்டு டயரியில் --- நான் பார்த்த படங்களின் எண்ணிக்கை 100!

சென்ற ஞாயிறு பக்கத்து நகருக்கு கஜினி படம் பார்க்க இணையம் வழி டிக்கட்டும் பதிந்துவிட்ட பின்பு -
ஒரு படம் பார்க்க பயணம் உட்பட 8 மணி நேரமா என
சும்மா இருந்துவிட்டேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

உன் ஒவ்வொரு பதிவும் என்னை நிறைய்ய்ய்ய்ய பின்னூட்டம் இடத் தூண்டுகிறது-- அடக்கி வாசிக்கிறேன்.

நினைவுகளின் ஊர்வலம் - நேர்த்தி!
மீண்டும் பாராட்டுகள் பாரதி!

pradeepkt
21-10-2005, 05:32 AM
இளசு அண்ணா
ஏன் பின்னூட்டம் இட அடக்கி வாசிக்கிறீர்கள்.
பாரதி அண்ணன் பதிவுகள் தேன் என்றால் உங்கள் பதிவுகளும் இன்னும் தேன். எழுதுங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்

பாரதி
21-10-2005, 02:36 PM
அண்ணா... என்ன ஒரு ஒற்றுமை..!!

எனது ஆரம்பகால குறிப்பேடுகளில் இடம் பெற்றவை எல்லாம் திரைப்படங்களே..! ஒரு வருடத்திற்கு குறைந்தது 100 படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஒப்பற்ற (!) குறிக்கோளுடன் உழைத்து, வெற்றிப் பெருமிதம் கொண்ட நாட்களும் உண்டு.

ஆனால் இப்போது... மாற்றம்தான். எல்லாம் நன்மைக்கே...!

உங்களுக்கு என் அன்பு.

sadeekali
27-09-2008, 02:59 AM
நான் என்னவோ ஏதோ என்று தான் இங்கே வந்தேன். ஆனா ரொம்பத்தான் அருப்பு. தாங்கலேடா சாமீ..

mukilan
27-09-2008, 03:07 AM
நான் என்னவோ ஏதோ என்று தான் இங்கே வந்தேன். ஆனா ரொம்பத்தான் அருப்பு. தாங்கலேடா சாமீ..
வாங்க நண்பரே! உங்களை அறிமுகப் படுத்திக்கோங்க. மன்றத்தோட விதி முறைகளைப் படித்து அதைப் பின்பற்றுங்க. உங்கள் படைப்புகளையும் இங்கே காண ஆவலோடு இருக்கிறோம். மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடும் பொழுது மனம் புண்படும் வகையில் இருக்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

poornima
27-09-2008, 07:24 AM
டூரிங் டாக்ஸ் நினைவுகள் ஓட்டம் அருமை பாரதி..

விழாக் காலங்களில் மட்டுமே மேட்டினி.. மாலைக் காட்சிக்கு முன்னால் ஊரையே அழைக்கும் ஒலிபெருக்கிப் பாடல்கள்..இடைவேளையில் விற்கப்படும் கைமுறுக்கும் - கடலைமிட்டாயும் எப்போதாவது அரிதாகப் போடப்படும் முட்டை போண்டாவும்..

ரீல் மாற்றும்போது எரியும் மஞ்சள் விளக்கும் சடாரென மணல் சுவற்றுக்கு அப்பால் இழுத்துக் கொள்ளும் கள்ளத்தனமான கைகளும்...

எங்கே இருக்கின்றன இப்போது டூரிங் டாக்கீஸ்கள்.. எல்லாமே தன் அடையாளம் இழந்து வணிக வளாகங்களாகவும் தானிய கிடங்குகளாகவும்..

உதயசூரியன்
27-09-2008, 08:29 AM
எண்ணங்களை.. எனது ஏக்கங்களையும் வெளியே வர வழைக்கும் பதிவு...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

தீபன்
01-10-2008, 04:34 PM
வித்தியாசமான சூழலை உணரவைத்த படைப்பு. எங்களைப்பொறுத்தவரை எனக்கு நினைவு தெரிந்த காலங்களில் எங்களூரில் சினிமாவே இல்லை. அதனால் அந்த அனுபவங்களும் இல்லை. உயர் வகுப்புகளுக்கு வந்தபோதுதான் சினிமாவும் எங்களூருக்கு அனுமதிபெற்று நுழைந்தது.

சிவா.ஜி
01-10-2008, 05:33 PM
ஆஹா....வாசிக்கவே சுகமாக இருக்கே. இருக்காதா பின்னே. எங்கம்மா இடுப்புல உக்காந்து பாக்க ஆரம்பிச்சதுலருந்து இப்ப வரைக்கும் சினிமான்னாலே எனக்கு தனி ஈர்ப்புதான். இளசுவாவது தன் கல்லூரியின் முதலாண்டில் 100 படம் பார்த்தார். நான் கோவையில் படித்தபோது ஒரு வருடத்தில் 240 படம் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம். படத்துக்கான டிக்கெட்டின் பின்புறத்தில் யாருடன், என்று அந்த படத்தைப் பார்த்தேன், அன்று ஏதாவது விசேஷ நிகழ்ச்சி நடந்திருந்தால் அதையும் அதில் எழுதி சேமித்து வைப்பேன். திருமணமான புதிதில் நான் வேலைக்குப் போய்விட்டால் கட்டுக்கட்டாய் இருக்கும் அந்த டிக்கெட்டுகளை எடுத்துப் படிப்பதுதான் என் மனைவியின் பொழுதுபோக்கு.

இப்போதும் ஊருக்கு விடுமுறையில் சென்றால் தியேட்டரில் படம் பார்ப்பதைத்தான் விரும்புவேன். இங்கே என்றால் இணையத்திலிருந்து, அல்லது சிடி வாங்கி பார்ப்பேன்.

பாரதியின் எழுத்துக்களில் அவரின் சினிமா அனுபவத்தைப் படிக்கும்போது வெகு சுவாரசியமாக இருக்கிறது. ரசனைக்கார மனிதர். என்னமா ரசிச்சு எழுதியிருக்கார். அசத்துறீங்க பாரதி.

பென்ஸ்
01-10-2008, 05:55 PM
சுகமான நினைவுகள் பாரதி...
காளை வண்டியில மைக்செட் வச்சி, பாட்டு போட்டு
"உங்கள் எழில் டிரையரங்கில்..."
என்று குளத்தங்கரையில வரும் போதே டவுசரை ஒரு கையில் பிடித்து கொண்டு வண்டிய பாத்து ஓடுவோம்...
குளத்தோட இருக்கிற கிணத்து சுவரில ஒரு கலர் போஸ்டர் ஒட்டுவாங்க...
கூடவே சிறியதாய் ஒரு போஸ்டரும்...
பெரிய போஸ்டரில் படம் எல்லாம் இருக்கும்...
சின்னதில் படத்தோட பெயரும், நடிச்சவங்களோட பெயரும்,
அதுக்கு கீழ எப்போதும் வழக்கமாய் "பட்டு பைட்டு சூப்பர்" என்ற வசனமும்....

அப்ப இரண்டாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன்.
அப்பாகிட்ட ரொம்ப நாளா படத்துக்கு போகனும்ன்னு கேட்டு முதன்
முதலா "வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்துக்கு பன்னீர் அக்காவோட அனுப்பி வச்சார்.
அங்க போயி தரை டிக்கட் வாங்கி, அப்புறமா நெரிசலில் இடிவாங்கி,
பொரி கடலை சாப்பிட்டு, படம் பாத்து..
அந்த வசனக்களை த்ப்புதப்பாய் பல காலம் பேசி திரிந்து....

அப்பூரம்... விடியோவில் படம் என்று ஒரே இரவில ஐந்து திரைபடங்களை மக்கள் பார்க்க துவங்க...
எழிலுக்கு யாரும் போவலை...

சன்டீவி வந்ததோட அந்த கொட்டகையை மூடிட்டாங்க...

செல்வா
02-10-2008, 12:02 AM
திரைப்படம் திரையரங்கில் சென்று பார்ப்பது இனிமையான அனுபவம் தான். ஆனால் எனக்கென்னவோ அந்த அனுபவம் அத்தனை இனிமையாக இல்லை...
இத்தனை ஆண்டுகளில் நான் திரையரங்கு சென்று பார்த்த படங்களின் எண்ணிக்கை 20-25ஐத் தொட்டாலே பெரிய விசயம்தான். அது என்னவோ எனக்கு ஊர்சுற்றுவதில் இருந்த ஆர்வம் திரைப்படங்கள் பார்ப்பதில் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் இப்போது தான் நான் திரைப்படங்கள் பார்க்கிறேன். அதுவும் பலமொழிப் படங்கள். இங்கே இருக்கும் தொலைக்காட்சியில் தமிழ் சானல்கள் எதுவும் இல்லை... எனவே பிறமொழித்திரைப்படங்கள் பார்ப்பதற்கு சிறந்த வாய்ப்பு

ஆனாலும் அண்ணன்மார்களெல்லாம் சினிமாவுக்காக அலஞ்சிருக்கிறதப் பார்க்கும் போது.... என்னத்தச் சொல்ல..... எல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் இருந்திருக்காய்ங்க.. இதுல விழுப்புண்கள் வேற...

அது சரி தொடரும்னு போட்டுட்டு ... தொடராம உட்டுட்டீங்களே ஞாயமா?

பாரதி
03-10-2008, 04:50 PM
நான் என்னவோ ஏதோ என்று தான் இங்கே வந்தேன். ஆனா ரொம்பத்தான் அருப்பு. தாங்கலேடா சாமீ..

அன்பு நண்பரே,
நீங்கள் இரசிக்கும் வண்ணம் எழுதாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் மனம் திறந்த பதிவிற்கும், இப்பதிவை மேலெழுப்பியமைக்கும் மிக்க நன்றி.

டூரிங் டாக்ஸ் நினைவுகள் ஓட்டம் அருமை பாரதி..

விழாக் காலங்களில் மட்டுமே மேட்டினி.. மாலைக் காட்சிக்கு முன்னால் ஊரையே அழைக்கும் ஒலிபெருக்கிப் பாடல்கள்..இடைவேளையில் விற்கப்படும் கைமுறுக்கும் - கடலைமிட்டாயும் எப்போதாவது அரிதாகப் போடப்படும் முட்டை போண்டாவும்..

ரீல் மாற்றும்போது எரியும் மஞ்சள் விளக்கும் சடாரென மணல் சுவற்றுக்கு அப்பால் இழுத்துக் கொள்ளும் கள்ளத்தனமான கைகளும்...

எங்கே இருக்கின்றன இப்போது டூரிங் டாக்கீஸ்கள்.. எல்லாமே தன் அடையாளம் இழந்து வணிக வளாகங்களாகவும் தானிய கிடங்குகளாகவும்..

எல்லாமே இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கையில், சினிமா சென்று வந்ததைக்குறித்து மாதம் முழுவதும் பேசிய பேச்சுகள் எல்லாம் கானல் நீராகி விட்டன. பல இடங்களில் திரையரங்கம் இருந்ததற்கான அடையாளமே இப்போது இல்லை. பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி பூர்ணிமா.

எண்ணங்களை.. எனது ஏக்கங்களையும் வெளியே வர வழைக்கும் பதிவு...
உங்களது ஏக்கங்களையும் எழுதுங்களேன் உதயா... நாங்களும் படிக்க காத்திருக்கிறோம். நன்றி.

வித்தியாசமான சூழலை உணரவைத்த படைப்பு. எங்களைப்பொறுத்தவரை எனக்கு நினைவு தெரிந்த காலங்களில் எங்களூரில் சினிமாவே இல்லை. அதனால் அந்த அனுபவங்களும் இல்லை. உயர் வகுப்புகளுக்கு வந்தபோதுதான் சினிமாவும் எங்களூருக்கு அனுமதிபெற்று நுழைந்தது.

நன்றி தீபன். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளே போதுமென்ற நிலை வந்து விட்டது. நாகரீக வளர்ச்சியில் நாம் இழந்திருப்பதையும் பெற்றிருப்பதையும் ஒரு முறை மீள்ப்பார்வை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஹும்.....

ஆஹா....வாசிக்கவே சுகமாக இருக்கே. இருக்காதா பின்னே. எங்கம்மா இடுப்புல உக்காந்து பாக்க ஆரம்பிச்சதுலருந்து இப்ப வரைக்கும் சினிமான்னாலே எனக்கு தனி ஈர்ப்புதான். இளசுவாவது தன் கல்லூரியின் முதலாண்டில் 100 படம் பார்த்தார். நான் கோவையில் படித்தபோது ஒரு வருடத்தில் 240 படம் பார்த்திருக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம். படத்துக்கான டிக்கெட்டின் பின்புறத்தில் யாருடன், என்று அந்த படத்தைப் பார்த்தேன், அன்று ஏதாவது விசேஷ நிகழ்ச்சி நடந்திருந்தால் அதையும் அதில் எழுதி சேமித்து வைப்பேன். திருமணமான புதிதில் நான் வேலைக்குப் போய்விட்டால் கட்டுக்கட்டாய் இருக்கும் அந்த டிக்கெட்டுகளை எடுத்துப் படிப்பதுதான் என் மனைவியின் பொழுதுபோக்கு.

இப்போதும் ஊருக்கு விடுமுறையில் சென்றால் தியேட்டரில் படம் பார்ப்பதைத்தான் விரும்புவேன். இங்கே என்றால் இணையத்திலிருந்து, அல்லது சிடி வாங்கி பார்ப்பேன்.

ஆஹா....! வருடத்திற்கு 240 படங்களா.....!!!! ஆனாலும் ரொம்ப அநியாயமாத்தான் தோன்றுகிறது. சீட்டில் விடயங்களை எழுதி வைத்திருந்தது - எப்படி இப்படியெல்லாம் தோன்றியது உங்களுக்கு? வட்டின் மூலமாக வீட்டில் திரைப்படம் பார்ப்பதில் அவ்வளவாக எனக்கும் பிடிப்பதில்லைதான். பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சிவா.

சுகமான நினைவுகள் பாரதி...
காளை வண்டியில மைக்செட் வச்சி, பாட்டு போட்டு
"உங்கள் எழில் டிரையரங்கில்..."
என்று குளத்தங்கரையில வரும் போதே டவுசரை ஒரு கையில் பிடித்து கொண்டு வண்டிய பாத்து ஓடுவோம்...
குளத்தோட இருக்கிற கிணத்து சுவரில ஒரு கலர் போஸ்டர் ஒட்டுவாங்க...
கூடவே சிறியதாய் ஒரு போஸ்டரும்...
பெரிய போஸ்டரில் படம் எல்லாம் இருக்கும்...
சின்னதில் படத்தோட பெயரும், நடிச்சவங்களோட பெயரும்,
அதுக்கு கீழ எப்போதும் வழக்கமாய் "பட்டு பைட்டு சூப்பர்" என்ற வசனமும்....

அப்ப இரண்டாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன்.
அப்பாகிட்ட ரொம்ப நாளா படத்துக்கு போகனும்ன்னு கேட்டு முதன்
முதலா "வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்துக்கு பன்னீர் அக்காவோட அனுப்பி வச்சார்.
அங்க போயி தரை டிக்கட் வாங்கி, அப்புறமா நெரிசலில் இடிவாங்கி,
பொரி கடலை சாப்பிட்டு, படம் பாத்து..
அந்த வசனக்களை த்ப்புதப்பாய் பல காலம் பேசி திரிந்து....

அப்பூரம்... விடியோவில் படம் என்று ஒரே இரவில ஐந்து திரைபடங்களை மக்கள் பார்க்க துவங்க...
எழிலுக்கு யாரும் போவலை...

சன்டீவி வந்ததோட அந்த கொட்டகையை மூடிட்டாங்க...

ஆஹா... உங்களுக்கும் அந்த இனிய நினைவுகளா பெஞ்சமின்!
உங்கள் நினைவுகூறல்கள் எல்லாம் பசுமையாக அமைகிறது. அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.

திரைப்படம் திரையரங்கில் சென்று பார்ப்பது இனிமையான அனுபவம் தான். ஆனால் எனக்கென்னவோ அந்த அனுபவம் அத்தனை இனிமையாக இல்லை...
இத்தனை ஆண்டுகளில் நான் திரையரங்கு சென்று பார்த்த படங்களின் எண்ணிக்கை 20-25ஐத் தொட்டாலே பெரிய விசயம்தான். அது என்னவோ எனக்கு ஊர்சுற்றுவதில் இருந்த ஆர்வம் திரைப்படங்கள் பார்ப்பதில் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் இப்போது தான் நான் திரைப்படங்கள் பார்க்கிறேன். அதுவும் பலமொழிப் படங்கள். இங்கே இருக்கும் தொலைக்காட்சியில் தமிழ் சானல்கள் எதுவும் இல்லை... எனவே பிறமொழித்திரைப்படங்கள் பார்ப்பதற்கு சிறந்த வாய்ப்பு.

அது சரி தொடரும்னு போட்டுட்டு ... தொடராம உட்டுட்டீங்களே ஞாயமா?

பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா. உண்மைக்கலையில் ஊறி இருந்ததால் கற்பனைப்படங்களை காண உங்கள் மனம் விரும்பி இருந்திருக்காது போலும்.

இப்போதுதான் நானும் பிறமொழிப்படங்களை சற்றேனும் காண ஆரம்பித்திருக்கிறேன். நல்ல திரைப்படங்களுக்கு மொழி என்றுமே ஒரு தடையில்லை என்பதை சில படங்கள் உணர்த்தி உள்ளன.

அப்புறம் நான் "தொடரும்" போடலை செல்வா... வெளிவரக்கூடும் அப்படீன்னுதான் போட்டிருக்கேன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இறுதியில் அடுத்த தயாரிப்பு "தென்னாப்பிரிக்காவில் ராஜு" அப்படீன்னு எழுத்துக்கள் வரும். ஆனா அப்படி ஒரு படம் வந்ததா...?!!

சிவா.ஜி
03-10-2008, 06:20 PM
அப்புறம் நான் "தொடரும்" போடலை செல்வா... வெளிவரக்கூடும் அப்படீன்னுதான் போட்டிருக்கேன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இறுதியில் அடுத்த தயாரிப்பு "தென்னாப்பிரிக்காவில் ராஜு" அப்படீன்னு எழுத்துக்கள் வரும். ஆனா அப்படி ஒரு படம் வந்ததா...?!!

ஆஹா உலக மகா குசும்புங்கறது இதுதானா....மக்களே நீங்களே பாருங்க இந்த அநியாயத்தை....!!

rajatemp
05-10-2008, 01:13 PM
சினிமா கற்பனையின் களம்
தியேட்டர் கற்பனையின் விரிவு
மக்கள் அந்த கற்பனையின் குப்பைதொட்டிகள்
இன்றைய சினிமாவின் நிலை இதுதான்

கண்ணதாசனோடு பாடல்கள் செத்துவிட்டன
விஸ்வநாதனோடு இசை செத்துவிட்டது

இன்று டபராக்கள் உருட்டப்படுகின்றன
காக்காய்கள் கத்துகின்றன (தேவா போல்)
பாடல்கள் கிறுக்கப்படுகின்றன (நாக்க மூக்க போல்)