PDA

View Full Version : மாறிப் போன பயணங்கள்



gragavan
28-09-2005, 10:16 AM
நமது அன்பு அண்ணன் பாரதியின் கீழ்க்கண்ட திரியிலுள்ள பயணத்தின் உந்துதலால் நான் எழுதிய ஒரு பயணம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?goto=newpost&t=5657

மாறிப் போன பயணங்கள்

மிகச்சிறிய வயதில் (எனக்கு வயது நினைவில்லை. நம்புங்கள். என்னைக் கைக்குழந்தையாக கையில் வைத்துக் கொண்டு எனது அத்தை உறங்கிக் கொண்டிருந்த அம்மாவைக் காட்டி, "யாரு அது சொல்லு" என்று கொஞ்சியதும் நினைவில் இருக்கிறது.) தூத்துக்குடியில் எனது அத்தை வீட்டில் இருந்தேன். இரண்டு வயதிலிருந்து எனது அத்தைதான் கொஞ்ச காலம் வளர்த்தார்கள்.

விளாத்திகுளம், நாகலாபுரம் தாண்டி இருக்கும் புதூர்தான் எங்கள் தந்தை வழி மூதாதையர்களின் சொந்த ஊர். தூத்துக்குடியிலிருந்து நேர் பஸ் உண்டு. ஆனால் அடிக்கடி இருக்காது. விளாத்திகுளம் போய் மாறுவதும் சில சமயம் செய்திருக்கிறோம்.

இரண்டு பஸ் கம்பெனிகள். பெயர்கள் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. மீரான் டிரான்ஸ்போர்ட், லயன் டிராஸ்போர்ட். இரண்டு வண்டிகளுமே கொஞ்சம் பழைய வண்டிகள். சொல்லி வைத்தாற்போல் இரண்டிலுமே கொஞ்சம் வயதில் பெரியவர்தான் ஓட்டுனராக இருப்பார். கட்டபொம்மன் பேருந்துகளில் கொஞ்சம் இளவயது ஓட்டுனர்கள் இருப்பார்கள்.

அந்தச் சின்ன வயதில் நான் லயன் வண்டியில்தான் போக வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறேன். காரணங்கள் இரண்டு.
1. அது நேராகப் புதூருக்குப் போகும்.
2. அதில் இடப்பக்க ஜன்னலை ஒட்டி ஒரே நீளமாக ஒரு சீட் இருக்கும்.

விளாத்திகுளத்திற்கு கட்டபொம்மன் வண்டிகள் நிறைய உண்டு. அங்கு போய்விட்டால் அருப்புக்கோட்டை போகும் பல வண்டிகள் கிடைக்கும். அந்தப் பேருந்துகள் புதூர் வழியாகத்தான் போகும். தூத்துக்குடியிலிருந்து புதூர் வழியாக அருப்புக்கோட்டை செல்லும் கட்டபொம்மன் பேருந்துகளும் உண்டு. ஆனால் எனக்குப் பிடித்தது லயனும் மீரானும்தான்.

கட்டபொம்மன் வண்டிகளைக் கேடீசி (கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன்) என்பார்கள். மதுரைக்குப் பாண்டியன். கோவைப் பக்கம் சேரன். சென்னையில் பல்லவன். தஞ்சைப் பக்கம் சோழன். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்து முதலில் இருந்த போக்குவரத்துக் கழகங்கள். இவை பல்கிப் பெருகி இன்றைக்கு எல்லாம் ஒன்றே என்று ஆகிவிட்டன.

இந்த லயன் வண்டியிலும் மீரான் வண்டியிலும் போவது பெரியவர்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால் அவை மெதுவாகச் செல்லும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் அவை புறப்படும். காலையில் ஒன்று. மாலையில் ஒன்று. நாங்கள் பெரும்பாலும் மாலையில்தான் செல்வோம்.

அதுவுமில்லாமல் லயன் வண்டி எல்லா இடங்களிலும் நிற்குமாம். அதுவும் தாமதத்திற்குக் காரணம். நான் இரண்டு பக்கங்களிலும் உள்ள ஊர்களைப் பார்த்துக் கொண்டே செல்வேன். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டிருக்கின்றேன். அந்த வயதில் சரியான அந்தக் கேள்விகள் இந்த வயதில் கேணத்தனமாகத் தோன்றுகின்றன.

எட்டையாபுரம் போகும் வழியில் எப்போதும் வென்றான் என்று ஒரு ஊர் உண்டு. "எப்பொதென்றான்" என்று வேகமாகச் சொல்லும் போது கேட்கும். நடத்துனர் அடிக்கடி அப்படிச் சொல்வதால் என் காதில் "எப்போண்டா" என்று விழுந்திருக்கிறது. "ஏந்த்த இந்த ஊருல போண்டா போடுவாங்களா? நம்ம புதுக்கிராமம் டீக்கட போண்டா மாதிரி இருக்குமா?" என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு எப்போதும் வென்றானுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேணத்தனமாக ஒரு கதையை என் அத்தையிடம் சொல்லியிருக்கிறேன். அதை நிச்சயமாக ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டிருப்பார். "ஹர்ஷா எப்ப சண்ட போட்டாலும் ஜெயிச்சாராம். அதான் இந்த ஊருக்கு எப்போதும் வென்றான்னு பேரு." அங்கே அதிசயமாக ஓரு இடத்தில் கொட்டியிருந்த செம்மண்ணைக் காட்டி, "ரொம்ப சண்ட போட்டப்போ...ரெத்தம் சிந்தித்தான் செக்கச் செவேல்னு இருக்கு." இதையெல்லாம் கேட்கும் பொழுது என் அத்தைக்கு எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்து அவர் மேல் பரிதாபப் படுகிறேன்.

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் லயன் வண்டி குறுக்குச்சாலை வழியாகப் போகும். அதென்ன குறுக்குச்சாலை? அது நான்கு ஊர்ச்சாலைகள் கூடுமிடம். பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய நான்கு ஊர்ச்சாலைகளும் கூடும் சாலை குறுக்குச்சாலை. அந்தக் காலத்திலேயே எப்படி பெயர் வைத்திருக்கின்றார்கள் பாருங்கள்.

அதற்கப்புறம் உள்ள ஊர்களின் பெயர்கள் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை. ஆனால் யாராவது சொன்னால் கண்டிப்பாகத் தெரியும். அடுத்து நினைவிருக்கும் ஊர் விளாத்திகுளம்தான்.

விளாத்திகுளத்திற்கு முன்னால் சிறிய பாலம் உண்டு. வழக்கமான பாலங்களைப் போல கீழே நீர் ஓடுவதும் தூண்கள் சாலையைத் தாங்கிக் கொண்டிருக்கும் படியும் இருக்காது. பாலம் குழிந்து தரையோடு இருக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி ஓடும். அப்பொழுதெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால் அதெல்லாம் நான் கைக்குழந்தையாக இருந்த காலங்களில். எனக்கு விவரம் தெரிந்து அந்தப் பாலத்தில் வெள்ளத்தைப் பார்த்ததில்லை.

விளாத்திகுளத்தை விட்டு வெளியில் செல்லும் இடத்தில் ஒரு பெரிய கண்மாய் உண்டு. அதில் நான் சிறுவயதில் தளும்பத் தளும்பத் தண்ணீரைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அந்தக் கண்மாய் ஆக்கிரமிப்பால் குறுகிக் காய்ந்து வெடித்துப் போயிருக்கிறது.

அடுத்தது நாகலாபுரம். அதுவும் ஒரு சிற்றூர்தான். அங்கு கூட்டமாக இருக்கும். நாகலாபுரம் வந்தாலே புதூர் வந்து விட்டது போல இருக்கும். ஊருக்கு வெளியே ஒரு டெண்ட்டு கொட்டகை. அதைக் கடந்து போகையில் எந்தப் படம் அங்கே ஓடுகிறது என்று எனக்குக் கண்டிப்பாய்ப் பார்க்க வேண்டும். ஜன்னல் ஓரத்தில் எட்டி எக்கிப் பார்ப்பேன்.

புதூருக்குள் நுழையும் போதே இருக்கங்குடி விலக்குக்குப் பக்கத்தில் இருக்கும் வெற்றிலைக் கொடிக்கால்கள் தெரியும். அடுத்தது முருகன் கோயில். அப்படியே புதூர் பேருந்து நிலையம். அங்கும் பெரிய தட்டி வைக்கப் பட்டிருக்கும். சினிமா போஸ்டர்களோடு. ரத்னா, சீதாராம் என்று இரண்டு டெண்ட்டு கொட்டகைகள். இவற்றில் சீதாராம் கொட்டகை எங்கள் நிலத்தில் அமைந்திருந்தது. ஆகையால் அங்கே வீட்டின் பெயரைச் சொன்னால் ஓசியிலேயே படம் பார்க்கலாம்.

புதூரில் இறங்கியதும் அங்கே தெரிந்தவர் கடையில் பெட்டி படுக்கைகளை வைப்போம். காரணம் ஒரு அரைக்கிலோமீட்டர் ஊருக்குள் நடக்க வேண்டும். ஒன்றும் பெரிய தொலைவு இல்லை. ஆனாலும் அப்படித்தான். பிறகு வீட்டிற்கு நடந்து போய் அங்கிருந்து யாரையாவது சைக்கிளில் அனுப்பி எடுத்து வருவோம். சுற்றி பெரும்பாலும் எப்படியாவது உறவாகத்தான் இருப்பார்கள். ஆகையால் இளம் பையன்களை சைக்கிளில் பை எடுக்க பெரியவர்கள் அனுப்புவார்கள்.

இப்பொழுது லயன் பேருந்துகள் ஓடுவதில்லை. கட்டபொம்மனைத் தூக்கிப்(ல்) போட்டாயிற்று. பெரும்பாலும் தேவைப்படுகின்ற சமயங்களில் கார் வைத்துக்கொண்டுதான் போகின்றோம். நாங்கள் பை வைத்த கடை இன்னும் இருக்கிறது. ஆனாலும் பைகள் காரில் நேராக வீட்டிற்குப் போகின்றன. நாகலாபுரம் கொட்டகையில் என்ன படமென்று கூட எட்டிப் பார்க்கவில்லை. சீதாராம் கொட்டகைக்குக் குத்தகை முடிந்தது. ஆகையால் அவர்கள் கொட்டகையைக் கலைத்து விட்டார்கள். ரத்னா மட்டும் இன்னும் இருக்கிறது. போன முறை போயிருந்த பொழுது Lord of the rings தமிழில் பார்த்ததுதான் மிச்சம்.

அன்புடன்,
கோ.இராகவன்

பிரியன்
28-09-2005, 11:03 AM
அருமையான பதிவு ராகவன், மாற்றங்கள் ஒன்றே மாறாதது இந்தப் புவியில். இந்த தலைமுறைக்காவது பழைய வாழ்க்கையின் சுவடுகள் தெரிந்திருக்கிறது. அடுத்து வரும் தலைமுறைகள் பார்க்கப் போவது எல்லாம் இயந்தரதனாமான நிகழ்வுகளையும் இயந்திரத்தனமாம மனிதர்களைத்தான்...

ஆனால் எனக்கு சிறுவயதில் இது போன்ற அனுபவங்கள் ஏதும் கிடையாது... திருச்சி திருச்சியை விட்டால் மதுரை அவனியாபுரம் பாட்டி வீடு- மீனாட்சி அம்மன் கோவில் - எப்போவது சொந்த ஊருக்கு சென்றது மட்டும்தான்....

pradeepkt
28-09-2005, 11:06 AM
எனக்கும் மிகச் சிறப்பான அனுபவங்கள் கிடையாது.
ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் பயன் படுத்திக் கிருத்துவம் செய்து அடி வாங்கியது உண்டு. தாத்தா அம்மாச்சி செல்லம் என்பதால் அவர்கள் இல்லாத நேரம் அடி வாங்காது பார்த்துக் கொள்வேன்.

ராகவா, அப்படியே உங்கள் எண்ணங்களை நினைப்பது போலே எழுத்துகளைக் கொண்டு வடிக்கும் கலையில் நீங்கள் பெருமாள் !!!

பிரியன்
28-09-2005, 11:10 AM
ஆனால் ஒரே ஒரு சுவாரஸ்யமான சேட்டை செய்து அடி வாங்கியது உண்டு. அது நானும் என் தம்பியும் சேர்ந்து மண்ணெண்ணையில் அப்பளம் பொறிக்க முயன்றதுதான்......:p :p :p :p :p

gragavan
28-09-2005, 11:47 AM
கருத்திட்ட பிரியனுக்கும் பிரதீப்பிற்கும் நன்றி பல.

பிரியன்...மண்ணெண்னெயில் அப்பளமா! அடேங்கப்பா! கடைசியில் என்ன ஆச்சு?

பிரியன்
28-09-2005, 11:53 AM
ஒன்னும் ஆகலை. வேகமா அடுப்பு பத்த வைக்க போனப்ப விழுந்தது ஒரு அடி பொடனில... மாமா ஒருத்தர் அடித்து அழைத்து போய்விட்டார், அன்று ஒரு நிமிடம் அவர் வர தாமதமாயிருந்தால் இன்றைக்கு செத்து 14 வருடம் ஆகி இருக்கும். இன்னைக்கும் அதச் சொல்லி அந்த மாமா செல்லமாக அடிப்பதுண்டு......

gragavan
28-09-2005, 12:17 PM
அட மக்கா....நானும் நிறைய செய்திருக்கிறேன். பொட்டு வெடியை பாட்டி உக்காந்திருக்கும் போது அடுப்புல போட்டிருக்கேன். பொம்மைப் பாம்பு வெச்சிக்கிட்டு பாட்டிய ஓட ஒட வெரட்டீருக்கேன். இன்னும் நெறய நெறய.

pradeepkt
28-09-2005, 12:22 PM
அப்ப டீவியில மகாபாரதம் பாத்திட்டு நண்பர்களோட துவந்த (அதாவது ஒவ்வொரு அணியிலும் இருக்கும் ஒருவர் எதிரணியின் ஒருவருடன்தான் யுத்தம் செய்வார் - எல்லாம் அந்த வயசில் மகாபாரதம் படிச்ச ஞானம் :D) யுத்தம் செஞ்சுருக்கேன். வீட்டில இருந்து வெளக்கமாத்துக் குச்சியில வில்லும் அம்பும் செஞ்சு எடுத்திட்டுப் போய் எதிரணி (இப்ப இல்லை :D) தலையில அம்பு விட்டிருக்கேன். ஒவ்வொரு தடவையும் பிரின்சிபால் எங்க தாத்தாவை வரச் சொல்லும்போது அவர் வந்து நான் இந்திரன் சந்திரன்னு சொல்லி என்னை விடுவிச்சுக் கூட்டிட்டுப் போவாரு.

mukilan
28-09-2005, 03:37 PM
ராகவன், உங்களின் பதிவில் உள்ள அனைத்து அனுபவங்களும் (முழுவதுமாக இல்லாவிடினும்) எனக்கும் உண்டு நீங்களும் நானும் மிக மிக அருகே உள்ள ஊர்களைச் சார்ந்தவர்கள் என்பதால். எப்போதும்வென்றானுக்கு அருகில் சிவஞானபுரம் என்றொரு ஊர் இருக்கிறது. அங்கே எனது சித்தி இருக்கிறார்.சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களைக் கழிக்கப் போவதுண்டு. ஆனால் உங்களைப்போல யாருக்கும் பெயர்க்காரணம் குறித்த கதை நான் கூறவில்லை.:D :D தூத்துக்குடியில் இருந்து வரும் மீரான் டிரான்ஸ்போர்ட் இன்னமும் இருக்கிறது.அதில் வயதான முஸ்லிம் பெரியவர் ஒருவர் இருப்பார். அவர் எப்பொழுதும் முன் படிக்கட்டுக்கு அடுத்த சீட்டில் தான் அமர்வார். "செக்கிங்" என்று அழைப்பார்கள். சிலர் "சாயபு" என்றும் சொல்வார்கள்.மீரான் பேருந்தின் இறுதி நிறுத்தம் ஊர் மாதலப்புரம் தங்களுக்கு நினைவிருக்கிறதா?. மாதலப்புரத்தில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள கந்தசாமிபுரம் என்ற ஊரில் தான் நான் 5ம் வகுப்பு படித்தேன். அடுத்த ஆண்டு 6ம் வகுப்பு விடுதிக்குச் செல்ல இருந்ததால் ஒரு ஒத்திகைக்காக ஒரு ஆண்டு என் பெற்றேர்ரை விட்டுப் பிரிந்து என் தாத்தா வீட்டில் இருந்து படித்தேன்.ரத்னா தியேட்டரில் "நேற்று இன்று நாளை" படம் பர்த்துள்ளேன். லயன் டிரான்ஸ்போர்ட் முரளி என மாறிப் போய் விட்டதாக நினைக்கிறேன். ஆனால் திருநெல்வேலியில் இருந்து லயன் டிரான்ஸ்போர்ட் எனது சொந்த ஊருக்கு ஒரு பேருந்து வந்தது. இப்பொழுது உரிமையாளர் மாற்றம். பெயர் மாற்றம் என்றாலும் என் ஊர் பெரிசுகள் இன்னமும் அதை லயன் வண்டி என்றுதான் கூப்பிடுகிறார்கள்.நாகலாபுரத்தின் வெளிப்புறம் இருந்த அந்த டூரிங் டாக்கீஸின் பெயர் " சங்கரலிங்கபாண்டியன்" . அதுவும் கால ஓட்டத்தில் கட்டை மண்ணாக மட்டுமே இருக்கிறது.நமது முந்தைய சந்ததியினர் அனுபவித்த இன்பங்கள் நம்க்கு கிட்டாமல் போனது போலவே எதிர்வரும் சந்ததியினருக்கு நாம் களிப்புற்ற இத் தருணங்கள் கிட்டாமல் போகலாம். எப்படியாயினும் சிறு பிராயத்தில் எதிர்நோக்கும் புதுமையான அனுபவங்கள் எல்லாமே மனதை விட்டு அகலாது அவ்வப்போது பூக்கத்தான் செய்கின்றன.ஒரு மணி நேரம் ஒன்றுமே செய்ய விடாமல் மனதைக் கட்டிப் போட்ட இது போன்ற பதிவுகள் இனியும் எழுதி ஏனய்யா என் சாபத்தை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறீர்.

mukilan
28-09-2005, 03:47 PM
ஆனால் ஒரே ஒரு சுவாரஸ்யமான சேட்டை செய்து அடி வாங்கியது உண்டு. அது நானும் என் தம்பியும் சேர்ந்து மண்ணெண்ணையில் அப்பளம் பொறிக்க முயன்றதுதான்......:p :p :p :p :p
மண்ணெண்ணையில் அப்பளமா? முதுகில் நன்றாகப் பொரித்திருப்பார்களே! ஆமாம் இப்படியே அவதார் மாற்றிக் கொண்டே இருந்தால் நாங்கள் எப்படி அடையாளம் காண்பதாம். ஒழுங்காக இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லை கண்டனக் கூட்டம் கூட்டிடுவேன்.

பாரதி
28-09-2005, 05:22 PM
அட்டகாசமாக இருக்கிறது இராகவன். பாராட்டுக்கள். எழுதத் தொடங்கி விட்டீர்கள் அல்லவா...? இனி உங்களால் நிறுத்த இயலாது. தொடர்ந்து உங்களின் நினைவலைகளை எதிர்பார்க்கிறேன். ஆமாம்.. இது நாவலா என்ன..? ஹஹஹா..

பிரியன்
29-09-2005, 06:36 AM
மண்ணெண்ணையில் அப்பளமா? முதுகில் நன்றாகப் பொரித்திருப்பார்களே! ஆமாம் இப்படியே அவதார் மாற்றிக் கொண்டே இருந்தால் நாங்கள் எப்படி அடையாளம் காண்பதாம். ஒழுங்காக இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லை கண்டனக் கூட்டம் கூட்டிடுவேன்.

எனக்கான முகம் என்னவென்பதை நான் இன்னும் இறுதி செய்யவில்லையே. என்ன செய்வது. வேண்டுமானால் நானே கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன்....

gragavan
29-09-2005, 06:47 AM
ராகவன், உங்களின் பதிவில் உள்ள அனைத்து அனுபவங்களும் (முழுவதுமாக இல்லாவிடினும்) எனக்கும் உண்டு நீங்களும் நானும் மிக மிக அருகே உள்ள ஊர்களைச் சார்ந்தவர்கள் என்பதால். எப்போதும்வென்றானுக்கு அருகில் சிவஞானபுரம் என்றொரு ஊர் இருக்கிறது. அங்கே எனது சித்தி இருக்கிறார்.சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களைக் கழிக்கப் போவதுண்டு. ஆனால் உங்களைப்போல யாருக்கும் பெயர்க்காரணம் குறித்த கதை நான் கூறவில்லை.:D :D

இந்தப் பெயர்க்காரணம் நான் ஊர்களுக்கு மட்டும் சொல்வதில்லை முகிலன். எதுக்கெல்லாம் தோணுதோ அதுக்கெல்லாம் சொல்வேன். தண்ணியில்லாம தூத்துத் தூத்துக் குடிச்சதால தூத்துக்குடின்னு பெயர்க்காரணம் சொல்லீருக்கேன். நடுவில் தண்ணீர்ப் பிரச்சனை இருந்ததாகவும் குருஸ் பெர்ணாந்து என்பவர் முயற்சியில் தண்ணீர் வந்ததாகவும் சொல்வார்கள். அவரை ஊருக்கு நடுவில் காக்காய் ஸ்டாண்ட் வைத்திருக்கின்றார்கள். பாவம். ஆனால் தூத்துக்குடி என்னும் பெயர் பழைய பெயர். கட்டபொம்மன் காலத்திலேயே தூத்துக்குடியாகத்தன் இருந்திருக்கிறது.


தூத்துக்குடியில் இருந்து வரும் மீரான் டிரான்ஸ்போர்ட் இன்னமும் இருக்கிறது.அதில் வயதான முஸ்லிம் பெரியவர் ஒருவர் இருப்பார். அவர் எப்பொழுதும் முன் படிக்கட்டுக்கு அடுத்த சீட்டில் தான் அமர்வார். "செக்கிங்" என்று அழைப்பார்கள். சிலர் "சாயபு" என்றும் சொல்வார்கள்.மீரான் பேருந்தின் இறுதி நிறுத்தம் ஊர் மாதலப்புரம் தங்களுக்கு நினைவிருக்கிறதா?.[mukilan]
அந்த ஊரின் பெயர்தான் மறந்து விட்டது முகிலன். ஒரு வேளை பூதலபுரமாக இருக்குமோ என்று நினைவு. மறந்து போய் விட்டதால் எழுதாமல் விட்டு விட்டேன்.

ஆமாம் சாயுபு நினைவிற்கு வருகிறார். சொல்லச் சொல்ல தெரியுதடா! (மரியாதையில்லாம சொன்னதுக்கு மன்னிச்சுக்குங்க)

[quote=mukilan] மாதலப்புரத்தில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள கந்தசாமிபுரம் என்ற ஊரில் தான் நான் 5ம் வகுப்பு படித்தேன். அடுத்த ஆண்டு 6ம் வகுப்பு விடுதிக்குச் செல்ல இருந்ததால் ஒரு ஒத்திகைக்காக ஒரு ஆண்டு என் பெற்றேர்ரை விட்டுப் பிரிந்து என் தாத்தா வீட்டில் இருந்து படித்தேன்.ரத்னா தியேட்டரில் "நேற்று இன்று நாளை" படம் பர்த்துள்ளேன். லயன் டிரான்ஸ்போர்ட் முரளி என மாறிப் போய் விட்டதாக நினைக்கிறேன். ஆனால் திருநெல்வேலியில் இருந்து லயன் டிரான்ஸ்போர்ட் எனது சொந்த ஊருக்கு ஒரு பேருந்து வந்தது. இப்பொழுது உரிமையாளர் மாற்றம். பெயர் மாற்றம் என்றாலும் என் ஊர் பெரிசுகள் இன்னமும் அதை லயன் வண்டி என்றுதான் கூப்பிடுகிறார்கள்.நாகலாபுரத்தின் வெளிப்புறம் இருந்த அந்த டூரிங் டாக்கீஸின் பெயர் " சங்கரலிங்கபாண்டியன்" . அதுவும் கால ஓட்டத்தில் கட்டை மண்ணாக மட்டுமே இருக்கிறது.

சங்கரலிங்கபாண்டியன்..ஆமாம்...நினைவிற்கு வருகிறது. அட இப்ப அந்த கொட்டகை இல்லையா! அடக் கொடுமையே.....


நமது முந்தைய சந்ததியினர் அனுபவித்த இன்பங்கள் நம்க்கு கிட்டாமல் போனது போலவே எதிர்வரும் சந்ததியினருக்கு நாம் களிப்புற்ற இத் தருணங்கள் கிட்டாமல் போகலாம். இல்லை முகிலன் இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. காரணம். நம் பெற்றோர்கள் அனுபவித்தவை நமக்கு இல்லை. எனது தந்தை புதூரில் பிறந்து வளர்ந்தவர். அவரது சிறுவயதில் புதூர்க் கண்மாயில் ஆண்டாண்டு வெள்ளம் வருமாம். எனக்குத் தெரிந்து நான் வெள்ளத்தைப் பார்த்ததில்லை. நமக்குப் பின் வருகின்றவர்களுக்கும் இனிய நினைவுகள் நிச்சயம் இருக்கும். ஏனென்றால் இப்பொழுது இருப்பவை நாளை இருக்கப் போவதில்லை.


எப்படியாயினும் சிறு பிராயத்தில் எதிர்நோக்கும் புதுமையான அனுபவங்கள் எல்லாமே மனதை விட்டு அகலாது அவ்வப்போது பூக்கத்தான் செய்கின்றன.ஒரு மணி நேரம் ஒன்றுமே செய்ய விடாமல் மனதைக் கட்டிப் போட்ட இது போன்ற பதிவுகள் இனியும் எழுதி ஏனய்யா என் சாபத்தை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறீர்.
இன்னும் நிறைய இருக்கிறது முகிலன். எக்கச்சக்கமாக. நேரந்தான் பிரச்சனை. ஆனாலும் உங்கள் சாபத்தை அடிக்கடி வாங்கிக் கட்டுவேன் என்று நினைக்கிறேன்.

gragavan
29-09-2005, 06:49 AM
அட்டகாசமாக இருக்கிறது இராகவன். பாராட்டுக்கள். எழுதத் தொடங்கி விட்டீர்கள் அல்லவா...? இனி உங்களால் நிறுத்த இயலாது. தொடர்ந்து உங்களின் நினைவலைகளை எதிர்பார்க்கிறேன். ஆமாம்.. இது நாவலா என்ன..? ஹஹஹா..நாவல் இது இல்லை அண்ணா. சின்னப் பையன் கதை என்ற பெயரில் எழுத இருக்கிறேன். ஆனால் அதற்கு நேரம் பிடிக்கும். ஏனென்றால் அதற்கு முடிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன.

பரஞ்சோதி
01-10-2005, 11:46 AM
இராகவன் அண்ணா, இப்போ தான் படித்தேன், அட்டகாசமாக இருக்குது. என்கிட்டவும் சொல்ல ரொம்ப இருக்குது, ஆனால் என் எழுத்துநடையை நினைத்தால் பயமாக இருக்குது.

pradeepkt
01-10-2005, 03:04 PM
அண்ணா,
எழுத்து நடை பற்றியெல்லாம் கவலைப் படக் கூடாது.
நானெல்லாம் எழுதலையா?
நீங்க உங்க பதிவுகளை இட நேரம் வந்து விட்டது.