PDA

View Full Version : பயணம்



பாரதி
27-09-2005, 05:23 PM
தேதியில்லா குறிப்புகள்


பயணம்

எப்ப நான் மொதல்ல வெளியூருக்குப்போனேன்..?ம்ம்.. ரொம்பச் சின்னப்பயலாஇருக்குறப்ப அத்தப் பொண்ணு கல்யாணத்துக்காக தேவாரத்துக்குப் பக்கத்துல இருக்குற சோலநாயக்கன்பட்டிக்கு போனது நெனவிருக்கு.

அப்பல்லாம் பஸ்ல ஒரு பக்க சன்னலோரமா நீளமா ஒரே ஒரு பெஞ்சு இருக்கும். இன்னொரு பக்கம் நாலு பேரு உக்காருர மாதிரி பெஞ்சுக இருக்கும். இப்ப சிட்டி பஸ்ல போற மாதிரி விசயத்த அப்பல்லாம் நெனச்சுக்கூட பாக்க முடியாது. ஏன்னா ஒரு ஆளு கூட பஸ்ல நின்னுட்டுப் போகக்கூடாது. ஆளுக எல்லா சீட்லயும் இருந்தா, டிரைவர் இடமில்லன்னு கைய விரிச்சிக்காமிச்சு ஆட்டிகிட்டே போயிடுவாரு.
ஒரு பஸ்ஸ போனா அடுத்த பஸ்ஸ ஒரு மணி நேரம் கழிச்சோ இல்லாட்டி ரெண்டு மணி நேரம் கழிச்சோ தெரியாது. வேற ஊருக்கு போறதுன்னாலே வீட்ல எல்லாம் திருவிழா மாதிரிதான். ரொம்ப சீக்கிரமாவே ரெடியாகி, பஸ்ஸ்டாப்ல வந்து மணிக்கணக்கா காத்திருக்குறது எல்லாம் ரொம்ப சாதாரணமான விசயம்.

ஒரு வழியா பஸ்ல இடம் கிடச்சா நீ அங்க உக்காரு, இங்க உக்காரு அப்டீன்னு ஒரே எரச்சலாத்தான் இருக்கும். எத்தன பேரு வந்தாங்கன்னு ரெண்டு மூணு தடவ எண்ணி, டிக்கெட்டு கொடுக்குறதுக்குள்ள கண்டக்டரு வெறுத்துப்போயிருவாரு.

எனக்கு எப்பவும் டிரைவரு பக்கத்துல உக்காரணும்னுதான் ஆச. பஸ்ஸ எவ்ளோ வேகமா போகுதுன்னு காட்டுற முள்ள பாக்குறதுலயும், டிரைவர் ஸ்டியரிங்.. திருப்புற அழகையும் பாத்துகிட்டு இருக்குறதுக்கு சலிக்கவே சலிக்காது.

அப்புறமா.. பஸ்ஸ கொஞ்சம் ஊர விட்டுத் தள்ளிப்போயி ஒரு மரத்தடியில நிறுத்தி, கண்டக்டரு டிரைவருக்கு டிக்கெட் வெவரம் சொல்வாரு. கண்டக்டரு மாதிரியே டிரைவரும் எத்தன பேரு எங்க ஏறுனாங்க அப்டீங்கிற வெவரத்தையெல்லாம் குறிக்கிற காகிதத்த பைல வச்சிருப்பாரு. பஸ்ஸல பின்னாடி இருந்து கண்டக்டரு கொரலு குடுப்பாரு..." அண்ணே.. 18-ல 5 போடி, 20-ல 4 தேவாரம்.. ....." இப்டீன்னு. அந்தா இந்தான்னு அவங்க எழுதுறதுக்கு பத்து நிமிசம் ஆறதெல்லாம் சர்வசாதாரணம். கடேசில கண்டக்டரு "ரைட்..ரைட்" சொன்னாருன்னா பதினாறு கிலோமீட்டர் தொலவுல இருக்குற போடிக்கு ஒரு மணி நேரத்துலேயே பஸ்ஸ சீக்கிரமா போயி சேந்திரும்ல.!

அப்படியா அந்தக் கல்யாணத்துக்குப் போனதுல கைல இருந்த ஒரு தங்கமோதிரம் காணாமப் போனதத் தவிர வேற எதுவும் நெனப்புல இல்ல.

அப்புறம் ரெண்டாப்பு படிக்கும் போது மொத தடவயா ரெயில்ல போனேன். நானு, அம்மா, பழனித்தாய் சித்தி எல்லாரும் நெல்லிக்குப்பத்துக்குப் போனோம். திண்டுக்கல்லுல இருந்து விழுப்புரம் வரைக்கும் ரெயிலு. அங்க இருந்து குதிர பூட்டுன சாரட்டு வண்டில பஸ்ஸ்டாண்டுக்குப் போனோம். அங்க இருந்து நெல்லிக்குப்பத்துக்கு பஸ்ல போனோம்.

மாமா இருந்த வீட்டுக்கு போற வழில எல்லாம் கருவாட்ட தெருவுல போட்டு வித்துகிட்டு இருந்தாங்க. ஒரே நாத்தம். தாங்க முடியல. அப்புறம் பேப்பர எல்லாம் கத்தரிச்சு பேப்பர் பையா ஒவ்வொரு வீட்டிலும் தயார் பண்ணிகிட்டு இருந்தாங்க.

மாமா இருக்குற வீட்டக்கண்டு பிடிச்சு, அவர் இருக்காரான்னு கேட்டாங்க அம்மா. அவரா... தோட்டத்துல இருப்பாரு..னு சொன்னாங்க..! வீட்டுக்கு பின்னாடி இருக்குற கொல்லைதான் தோட்டம்னு நாங்க புரிஞ்சிக்க ரொம்ப நேரம் ஆச்சு. ஏன்னா நம்ம ஊருல எல்லாம் தோட்டம்னா, ஊர விட்டு தள்ளி ஏக்கர் கணக்கில பயிர் பச்ச வெளைய வைக்கிற எடத்தைத்தான் தோட்டம்னு சொல்லுவோம். அதே போல வீட்லேயே கிணறு இருக்கும்கிற வெசயமும் மொத தடவயா எனக்கு தெரிய வந்துச்சு. அஞ்சாறு குடித்தனம் இருந்த வீடு அது. விசுப்படத்துல வர்ற மாதிரி இருக்கும்னு வச்சுக்குங்க. மாமா ஜவுளி எல்லாம் மொத்தமா எடுத்துட்டு வந்து சில்லறைல விக்கிற வேல பண்ணிகிட்டு இருந்தாரு.மாமாவுக்கு ஒரே புள்ளதான. எனக்கு அவரு மேல அலாதிப்பிரியம். நான் கேக்குறதெல்லாம் அப்ப அப்ப வாங்கி தர்றவராச்சே.

அங்க இருந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் போய்ட்டு வந்த பின்னாடி ஒரு நாளு அந்த ஊர்ல இருந்த மிட்டாய் ஆலயப் பாக்கப்போகணும்னு எல்லோரும் போனோம். கம்பெனிக்கு வெளியவே வண்டி வண்டியா, லாரிகள்ல இருந்து கரும்பைக் கொட்டுறதைப் பாக்கவே ஆச்சரியமா இருந்துச்சு. ஆனா கம்பெனி பக்கத்துல போறப்பவே கெட்ட வாடை. தாங்க முடியலடா சாமி.

கம்பெனி உள்ள போறதுக்கு ஏதோ எனக்கு வயசுப் பத்தாதுன்னு சொல்லி உள்ள விட மாட்டேன்னுட்டாங்க. நான் கேக்கல. ஒரே அழுகை. எல்லாரும் சமாதானம் சொல்லிப்பாத்தாங்க. ம்ஹம்... நான் போகலன்னா யாரும் போகக்கூடாதுன்னு நெனச்சு ஆர்ப்பாட்டம் பண்ணுனேன். ஆனா... என்னய மதிக்காம கேட்ல விட்டுட்டு எல்லாரும் உள்ள போயிட்டாங்க. அவங்க எல்லாரும் திரும்பி வர்ற வரைக்கும் கண்ணீர் அருவி மாதிரி ஓடிகிட்டு இருந்துச்சு. உள்ள போய்ட்டு வந்தவங்க அங்க அப்படியாக்கும் இப்படியாக்கும்னு கதை சொல்றதக் கேட்க கேட்க எனக்கு அப்படியே காந்திகிட்டு வந்துச்சு. இப்பயும் அந்த பாரீஸ் மிட்டாய்ன்னா எனக்கு கோவம்தான் வருது.

வேற முக்கியமா சொல்லணும்னா அங்க இருந்த கமலா தியேட்டர்ல பூம்புகார் படம் பாத்தோம். அங்க இருந்து வந்த பின்னாடி பள்ளிக்கூடத்துல மறுபடியும் என்னய சேக்க என்ன பாடு படுத்தினாங்க அப்டீங்கிறது தனிக்கத...!!

mukilan
28-09-2005, 03:18 AM
பாரதி அண்ணாவின் தேதியில்லாக் குறிப்புகள் எப்படியும் என் வாழ்விலும் அதையொத்து நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு படுத்தி விடுகின்றன.ஆச்சர்யமாயிருக்கிறது! ஆறு ஆண்டுகள் எப்படிக் கடந்ததென? நான் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கையில் நெல்லிக்குப்பத்தில் உள்ள E.I.D.Parry Sugars என்ற அந்த கரும்பாலைக்கு எங்களின் நண்பர்களை அழைத்துச் சென்றார்கள். அது Post harvest Technolgy என்ற பாடத்திற்காக. அப்பொழுது அந்த ஆலையில் மிட்டாய் செய்யும் அழகு பற்றியும் விதம் விதமாகத் தின்ற மிட்டாய்கள் பற்றியும் அவர்கள் பீத்திக் கொண்டதை நினைத்தால் எனக்கு இன்றைக்கும் ஆத்திரமாய் இருக்கிறது. அருமையாக இருக்கிறது இப் பதிப்பு.

பரஞ்சோதி
28-09-2005, 04:21 AM
அருமையான பதிவு அண்ணா.

சின்ன வயசு விசயங்களை அதே பாணியில் விவரிப்பது உங்கள் சிறப்பு. படிக்க இனிமையாகவும், நம்முடைய நினைவுகளையும் அசை போடவும் வைக்கிறது.

aren
28-09-2005, 04:43 AM
அருமை பாரதி அவர்களே. உங்கள் பஸ் அனுபவம் அருமை. உங்கள் தேதியில்லா குறிப்புகள் ஆட்டோகிராஃப் மாதிரி என்னையும் சிறுவயது நாட்களை அசைபோட வைக்கிறது. பாராட்டுக்கள்.

gragavan
28-09-2005, 08:10 AM
இன்னொரு பாரதி என்னும்படி எழுதுகின்றீர்கள். பாராட்டுகள் அண்ணா.

நானும் இது தொடர்பாக ஒரு பதிவு எழுதுகிறேன். விரைவிலேயே.

pradeepkt
28-09-2005, 08:19 AM
வழக்கம் போல் சின்ன வயது நினைவுகளைக் கிளறி விடும் பாரதி அண்ணாவின் மற்றோர் பதிப்பு.
பாராட்டிப் பாராட்டி எத்தனை தடவைதான் எழுதுறது? நாங்க கொற சொல்ற மாதிரி என்னைக்கு எழுதப் போறீங்க அண்ணா! :D

babu4780
28-09-2005, 08:24 AM
ஒரு ஜாலி டிரிப்பா , எங்கள கூட்டீட்டூப்போய் ஊர் சுத்திக்காமிச்சதுக்கு மிக்க நன்றி !! அடுத்த டிரிப் எப்போங்கறதையும் சொல்லிருங்க !!!

பாரதி
28-09-2005, 05:29 PM
உங்களின் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி முகிலன், ஆரென், பரஞ்சோதி, பிரதீப், இராகவன்,பாபு. தேதியில்லா குறிப்புகளில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலான கிராமத்து மக்களில் பலருக்கும் நேர்ந்திருக்கும் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை. தங்களது நினைவலைகளை படம்பிடித்து மன்றத்தில் தரவிருக்கும் அத்தனை பேருக்கும் என் நன்றி.

இளசு
21-10-2005, 10:50 PM
அட அட அட...
நெல்லிக்குப்பத்துக்கும் எனக்கும் நெருக்கம் அதிகம் பாரதி.
கிரிஜா, விஜயா தியேட்டர்கள்.
ஒற்றைப் பிளாட்பார ரயில் நிலையம் அருகே இருக்கும் குதிரை (ஜட்கா) வண்டிகளில் பயணம்..
ஆலைக்கழிவின் பிரத்தியேக நாற்றம்..
மிட்டாய் ஆலை..
மசூதித் தெருக்கள்..

உன் ரசனையான பதிவுகளைப் படித்து
என் ரகளையான விடலை நினைவுகள் ..

வசியக்காரன் நீ... ஒவ்வொரு குறிப்பாலும்
என் மதிப்பில் உயர்ந்தபடியே...

பாராட்டுகள் பாரதி.

பாரதி
25-10-2005, 02:25 PM
உங்களுக்கும் நெல்லிக்குப்பத்துக்கும் நெருக்கம் அதிகமா..? ஆச்சரியம்தான்.
வழக்கம் போல நன்றிகள் அண்ணா.