PDA

View Full Version : பேர்லின் இறுதி உரை....



Nanban
26-09-2005, 08:12 PM
நண்பனே நாமிருவரும்
எப்பொழுதாவது
சந்தித்துக் கொண்டிருக்கிறோமா?

நமக்குள் தீர்க்கவியலாத
சிக்கல்கள் ஏதுமுண்டா?

என்னை கொல்வதற்கு
உனக்கு என்ன காரணங்கள் உண்டு?

உனக்கென நியாயங்களிருக்கலாம்.

உன் குழந்தைகள்
ஏதோ ஒரு வீதியுத்தத்தில்
என் நாட்டு குண்டுகளில்
வீழ்ந்திருக்கலாம்.

உன் மனைவியை
என் நாட்டின்
யாரோ ஒரு வீரன்
பாழ்பண்ணியிருக்கலாம்.

உன் அழகிய வீட்டின்
சுவர்கள் மீது
கரி பூசியிருக்கலாம்
வெடித்துச் சிதறிய குண்டுகள்.

உன் இனிமையான தோழன்
ஒருவனின் கால்களை
என் நாட்டு டாங்கிகள்
ஏறி சிதைத்திருக்கலாம்.

உன் எல்லாத் துயரங்களின்
அடையாளமாக
என்னை இருத்தி வைத்திருக்கிறாய்.

உன் கையிலுள்ள துப்பாக்கியில்
எத்தனை எதிர்பார்ப்புகள்
மரணிக்கப் போகின்றன தெரியுமா?

மகன் திரும்பப் பிரார்த்திக்கும்
ஒரு தாயின் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்துவிடும்

இரவில் குட்டிக் குட்டிக் கதைகள்
கேட்கக் காத்திருக்கும்
என் சிறு குழந்தைகள்
இனி ஒருபோதும்
தேவதைக் கதைகளை
கேட்கவே போவதில்லை.

இரவின் மௌனத்தில்
காதலின் மொழி பேசிய
என் மனைவியின் அன்பு
இனி உறைந்து போய்விடலாம்.

இதெல்லாம் எனது வருத்தமில்லை
நண்பனே.

என் பரிதாபத்தைப் படமெடுத்து
நான் சார்ந்த அனைத்தையும்
அவமானப்படுத்துகிறாயே
அதை மட்டும் நிறுத்திக் கொள்

சுட்டு விடு.

ஒரே குண்டில்
ஒரே துளைத்தலில்
நான் சாகும்படி சுட்டுவிடு.

நண்பனே
எந்தக் கணக்கானாலும்
என் மரணத்துடன்
நீ சமாதானமாகி விடு.


http://img.photobucket.com/albums/v372/manmathan/Nanban1.jpg

pradeepkt
27-09-2005, 05:26 AM
நண்பன்,
பாகிஸ்தானில் கொலை செய்யப் பட்ட பத்திரிகையாளர் பேர்லின் நினைவலைகள் உங்கள் எழுத்துகளில் பாதிப்பு ஏற்படுத்துவது உண்மை.
அவர்கள் சார்ந்த உணர்வுகளை மட்டும் படம் பிடித்திருப்பது அருமை.

மன்மதன்
27-09-2005, 05:49 AM
உயிருள்ள கவிதை.. அந்த மனநிலையில் கொண்டு சென்று நிறுத்தியது. யாரோ ஒருவனை சுட்டு கொன்றால் அவர்களுக்கென்ன லாபம். அந்த ஒருவனின் மரணத்தால் அவர்கள் எதிர்பார்க்கப்படுவது நிகழ்ந்து விடுமா?
அன்புடன்
மன்மதன்

Nanban
27-09-2005, 06:37 PM
மன்மதன்

நன்றி படத்தை உள்ளே வைத்ததற்கு.

ஆனாலும் பெண்களின் அழகான புகைப்படங்களையெல்லாம் நீ வைத்துக் கொண்டு கடினமான சிரமமான புகைப்படங்களை நம்ம தலையில் கட்டி விட்டாய் பார்த்தாயா? எல்லா புகைப்படங்களிலும் ஒரே ரத்தம். அதுவும் இரத்தம் படிந்த அந்த படிகளில் ஒரு குழந்தை அமர்ந்து பார்ப்பதைப் பார்த்ததும் இதயம் ஒரு நிமிடம் தான் நின்று போய் திரும்ப அடிக்க ஆரம்பித்தது போன்றிருக்கிறது.

என்றாலும் மனதிற்குள் புதைந்து கிடந்த அழுத்தம் குறைந்தது போலிருக்கிறது - ஒரு அப்பாவி பத்திரிக்கையாளனைக் கொலை செய்ததைக் கண்டித்து விட்ட பின்பு.

நன்றி பிரதீப் - படம் பிடித்தது இரு பக்கத்தையும் தான். ஒருவன் முழுக்க முழுக்க அழிவைச் சந்தித்தான். வாழ்வில் சமாதானம் கொண்டுவரும் எதுவுமே அவனுக்கு கொடுக்கப்படவில்லை. மற்றொருபுறம் வாழ்வின் அனைத்து சௌகரியங்களையும் பெற்று வாழக் கூடியவனின் வாழ்க்கை. அவனுக்கு இழப்பதற்கு எல்லாமே இருக்கிறது - அமைதியான வாழ்வில் பிரார்த்திக்க நேரமிருக்கிறது அவனது தாய்க்கு. தேவதைக் கவிதைகள் கேட்க நேரமிருக்கிறது குழந்தைகளுக்கு. காதல் புரிய இடமும் நேரமும் சூழலும் இருக்கிறது.

நான் கவிதை எழுதும் பொழுது என்னுடைய உணர்ச்சிகள் என்னவோ அதைத்தான் சொல்கிறேன். இயல்பாய் உணர்ச்சி பிராவகத்தில் கவிதை வந்தாலும் அதை அப்படியே எழுதுவதில்லை. என் தேவைக்கேற்ப என் உணர்ச்சிகளுக்கேற்பத் தான் எழுதுகிறேன். ஒரு கவிதையை எழுதுவதற்கு சில சமயங்களில் ஐந்து நிமிடங்கள் - சில சமயங்களில் மாதக்கணக்காய் ஆகலாம். ஆனாலும் எழுதப்படும் உணர்வுகள் எப்பொழுதுமே ஒன்றாகத் தான் இருக்கும்.

ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் என் வலிகளையும் என் நியாயங்களையும் சொல்ல வரும் பொழுது மற்ற பக்கத்து நியாயங்களையும் சேர்த்தே சொல்லி விடுகிறேன்.

இந்தக் கவிதை பேர்ல்-லோட துயரம் மட்டுமல்ல - எந்த ஒரு காரணமுமின்றி யுத்தத்திற்குட்படுத்தப்பட்ட மக்களின் துயரமும் ஆகும் - இன்னும் சொல்லப்போனால் பேர்லின் துயரத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன் அடிபட்ட மக்களின் துயரத்தைச் சொல்ல.

கவிதைகளை பல தளத்திலும் சொல்லலாம்.....

இது ஒரு வகை....

Iniyan
28-09-2005, 02:29 AM
ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் என் வலிகளையும் என் நியாயங்களையும் சொல்ல வரும் பொழுது மற்ற பக்கத்து நியாயங்களையும் சேர்த்தே சொல்லி விடுகிறேன்.


நியாயங்கள் பற்றி உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் வலிகளை உணர்த்துவதில் உங்கள் கவிதை வெற்றி பெற்று விட்டது. அருமை

poo
28-09-2005, 08:34 AM
மிக மிக அருமை நண்பன்!!

உலுக்கியெடுக்கும் உரை.. உறைக்கிறது.. உறையவும் வைக்கிறது!

பாராட்டுக்கள்!

poo
28-09-2005, 08:35 AM
மன்மதன் நமக்கும் சில படங்களை தள்ளுங்கள்..

Nanban
28-09-2005, 04:44 PM
நன்றி பூ, இனியன்

தொடர்ந்து வாசியுங்கள்...

பின் நிறைய எழுதுங்கள்.

மனதின் அழுத்தம் குறைய எழுதச் சொல்கிறார்கள். எழுதியதைப் பிறருக்குப் படிக்கக் கொடுக்கச் சொல்கிறார்கள்.

இது ஒரு நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை ஒன்றில் எனக்குச் சொல்லப்பட்டது.

உண்மைதான்.

ஆகவே எழுதுங்கள், எழுதுங்கள் எழுதுங்கள்

பாரதி
28-09-2005, 05:38 PM
வன்முறைகளை கையாளும் குழுக்கள் அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலமாகவே தாங்கள் நினைப்பதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். விஞ்ஞானத்தின் முன்னேற்றங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, உலகத்தை உறைய வைக்கப்பார்க்கிறார்கள். சாதாரண மனிதனின் மனநிலை என்றைக்கு அவர்களுக்கு புரியுமோ..? நல்ல பதிவு நண்பன்.

Nanban
28-09-2005, 07:25 PM
நன்றி பாரதி....

அறிஞர்
29-09-2005, 12:30 AM
அப்பாவி மனிதனின் வலிகளின் பிரதிபலிப்பாக தங்கள் கவிதை.....
-----
மன அழுத்தம் குறைய அனைவரையும் எழுத சொல்லி ஊக்குவிப்பதற்கு நன்றி அன்பரே.

Nanban
29-09-2005, 02:43 PM
நன்றி அறிஞர்.

நீங்கள் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள் - எழுதினால் - படைப்பாளியாக எழுத ஆரம்பித்தால் உங்கள் மனம் ஒருவித அமைதியும் தெளிவும் பெறுகிறதா இல்லையா?

இளசு
12-10-2005, 09:50 PM
நிறுவனமாக்கப்பட்ட பெரும் கொடுமைகள்..
பாதிக்கப்பட்டவர்களின் மென் இலக்குகள்..
காய்த்துப்போன வன்மையான வெறுமை ஒரு பக்கம்..
நசுங்கப்போகும் தனிமையான மென்மை மறுபக்கம்..

உறையச் செய்ய உதவும் ஊடகங்கள்...

தொடர்கதையின் தொடக்கம்... நிகழ்காலம் புரிகிறது..
முடிவு எப்போது?

நண்பனின் பார்வையில் மீண்டும் உறைய வைத்த நிகழ்வு..

Nanban
13-10-2005, 01:37 PM
......
......
தொடர்கதையின் தொடக்கம்... நிகழ்காலம் புரிகிறது..
முடிவு எப்போது?

நண்பனின் பார்வையில் மீண்டும் உறைய வைத்த நிகழ்வு..

முடிவு -

எளிதாக முடிக்கலாம் -

-----தூண்டிவிடும் வல்லரசுகள் நினைத்தால். உலகின் எந்த ஒரு மூலையிலாவது சில சகோதரர்கள் அடித்துக் கொண்டால் கூட அதை தன் நாட்டுப் பாதுகாப்போடு சம்பந்தப்படுத்தி நடுநடுங்கும் சில நாடுகள் தங்கள் இயல்பை மாற்றிக் கொண்டால்....

-----உரிமைகளுக்காகப் போராடுபவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற ஆணவமிக்க ஆட்சியாளர்கள் திருந்தி விட்டால்....

நன்றாகக் கவனித்துப் பாருங்கள் - தீவிரவாதிகள் அனைவருமே விடுதலை வேட்கை கொண்டு எழுந்தவர்கள் தான்.

சேகுவாரா, ஃபிடல் காஸ்ட்ரோ, சுபாஷ் சந்திர போஸ். பகத் சிங் இப்படியாகத் தொகுத்தால் முடிவே இருக்காது....

ஆனால் இந்த வரிசையில் சில சமயம் தனிமனித எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாலே போதும் என்று எண்ணும் தனிமனித தீவிரவாதம் சமீபத்தில் தான் தொடங்கியிருக்கிறது.

முன்னர் - தீவிரவாதிகளுக்கும் அரசின் நிறுவனமாக்கப்பட்ட ராணுவ இயந்திரத்துக்கும் படைபலங்களின் ஏற்றத்தாழ்வு மிகக் குறைவு. ஆனால் இன்று இருவருக்குமிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஏராளாம். அதனால் கூட போராட்டங்களை இந்தக் குழுக்கள் தனி மனித அடையாளங்களை நோக்கித் திரும்பி இருக்கிறது. இராணுவ தாக்குதல்களை விட ஒரு நாட்டின் பெருமிதத்தைப் பறை சாற்றும் இலக்குகளைத் தாக்குவது தான் அவர்களின் குறியாக இருக்கிறது. இந்தப் பெருமிதம் பறைசாற்றும் இடங்களில் எல்லாம் சிக்கிக் கொள்வது தனிமனிதர்கள் தான்.

இந்தப் பெருமிதம் பறைசாற்றும் தளங்களில் ஒன்று - பத்திரிக்கை - தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் - இவற்றை குறிவைத்து தாக்குவது - ஆட்கடத்துவது - பிணையம் வைப்பது - கொலை செய்வதெல்லாம். இந்த தீவிரவாதிகள் அரசு இயந்திரத்துடன் போரிடுவது வரையிலும் அவர்களிடத்தில் இருக்கும் நியாயங்களை ஏற்றுக் கொள்ள முடிவதும் - தனி மனிதர்களைத் துன்புறுத்துவதை மட்டும் இந்தத் தீவிரவாதிகள் நிறுத்திக் கொண்டால் - மிக நன்றாக இருக்கும். இவர்களின் நியாயத்தையும் பலரும் வெளிப்படையாகப் பேசுவார்கள்.