PDA

View Full Version : தேர்வு...



பாரதி
26-09-2005, 01:26 PM
தேதியில்லா குறிப்புகள்

தேர்வு...

தேர்வை நினைத்தாலே அனேகமாக எல்லோருக்குமே ஒரு வித அச்சம் இருக்கும். சிலருக்கு பதட்டமும் சேர்ந்து கொள்ளும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. சிறு வயதிலிருந்தே விரும்பியும் விரும்பாமலும் எத்தனை தேர்வுகள்...!?

நான் சிறு வயதிலிருந்தே நன்றாகப்படிப்பேன். யாரும் என்னை விட அதிக மதிப்பெண்கள் பெறுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது பெரும்பாலும் முதலாவது இடத்தைத்தான் பெறுவேன். அப்போதெல்லாம் உருவத்தில் மிகச்சிறியவனாக இருப்பேன். அருகில் அமரும் பல பெரிய பையன்கள் மிரட்டி என்னைப் பார்த்துத் தேர்வு எழுதுவார்கள். எங்கே காட்டாவிட்டால் அடிப்பார்களோ என்கிற அச்சத்தால் அதை யாரிடமும் சொல்லமாட்டேன். ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் என்றால் மிகவும் பயப்படுவேன்.

உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற பின்னர் சில வெளியூரில் இருந்து படிக்க வரும் மாணவ,மாணவிகளுடன் தேர்வில் முதலிடம் பெற போட்டி போட வந்தது. சில நேரம் தேர்வில் இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு சென்றதும் உண்டு. பின்னர் வரும் தேர்வில் முதலிடம் பெற்றதும் உண்டு. ஆனால் மனதிற்குள் நம்மை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து விட்டார்களே என்ற ஆதங்கம் எப்போதும் இருந்து வரும்.

வகுப்புகளில் பெரும்பாலும் நானே வகுப்புத்தலைவனாக இருந்து வருவேன். எட்டாவது ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் இந்த படிப்புப் போட்டி அதிகமானது. சில நேரங்களில் ஒழுங்காக படிக்காமல் தேர்வு எழுத சென்றதுண்டு. அதன் காரணமாக சற்று குறைந்த மதிப்பெண்கள் பெற்றதும் உண்டு.

ஒன்பதாவது படிக்கும் சமயத்தில், நடைபெற்ற ஒரு தேர்வில் கணிதத்தில் ஒரு கேள்விக்கு 140 பாகை என்றால் சரியான விடை. நான் 110 பாகை என்று தவறாக கணக்கு செய்திருந்தேன். அதனால் அதைத் தவறு என்று மதிப்பெண் அளிக்காமல் ஆசிரியர் விட்டிருந்தார். முதல் இடத்தை எடுக்க வேண்டும் என்கிற உந்துதலால் முதன் முறையாக தவறு செய்தேன். 110 பாகை என்பதை 140 பாகை என்று மாற்றி ஆசிரியரிடம் காண்பித்து மதிப்பெண்களை உயர்த்திக்கொண்டேன்.

அந்த நேரத்தில் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தயாரிக்கும் வேலையும் என்னிடமே வரும். மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் எப்படியாவது முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவு அறிவுறுத்தியது. அப்படிப்பட்ட நேரத்தில் ஆசிரியர் உணராத வகையில் மதிப்பெண்களை மாற்றி ஒரு தடவை முதல் இடத்தை தவறான முறையில் பெற்றேன்.

அவ்விதம் செய்தது எல்லாம் எவ்வளவு மோசமான செயல் என்பதை உணர்கிறேன். எனக்கு என் மேலேயே கோபம்தான் வருகிறது. நான் செய்த தவறுகளை எல்லாம் என் மேல் கொண்ட நம்பிக்கையால் சோதனையே செய்யாமல் இருந்த அந்த மதிப்பிற்குரிய ஆசிரியர்களிடம் இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. யாருக்கும் தெரியாமல் கேட்பதை விட பகிரங்கமாக எனது தவறை வெளிப்படுத்துவதுதான் சரி என்று தோன்றுவதால் இங்கு எழுதுகிறேன். இவ்வளவு வருடங்களுக்கு பிறகு இதை சொல்வதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தாலும் சொல்கிறேன்.. மதிப்பிற்குரிய ஆசிரியரே... என்னை மன்னித்து விடுங்கள்.

அவ்விதம் தவறு செய்தது கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் ஒரு கர்வத்தையும், நன்றாக தேர்வு எழுதவில்லை என்றாலும், யாருக்கும் தெரியாமல் முதல் இடத்தைப் பெற்று விட முடியும் என்கிற அசட்டுத்தனத்தையும் வளர்த்தது. பள்ளி இறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்று ஓரளவுக்கு முயற்சி செய்தேன். முழுமையாக முயற்சி செய்தேன் என்று சொல்ல இயலாது. இந்த நேரத்தில் ஒன்றைக்குறிப்பிட வேண்டும். எனது தமிழாசிரியராக இருந்த தமிழண்ணா, பள்ளி இறுதித்தேர்வை எப்படி எழுத வேண்டும் என்று சில குறிப்புகள் தந்தார். விடைத்தாளில் பெரிய பெரிய எழுத்துக்களில், அழகாக, குண்டு குண்டாக எழுத வேண்டும். கேட்கப்பட்ட கேள்விகளில் அவசியமான கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர், மீதி நேரம் இருந்தது என்றால் மற்ற கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். விடைத்தாளைத் திருத்துபவர்கள் எந்தக்கேள்விக்கு நாம் நன்றாக பதிலளித்திருக்கிறோமோ அந்த விடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு மதிப்பெண்கள் தருவார்கள்... என்று ஆலோசனைகள் தந்தார்.

பள்ளி இறுதித்தேர்வில் தமிழண்ணா சொன்னதை சிரமேற்கொண்டு செயல்படுத்தினேன். நம்புவீர்களா என்று தெரியவில்லை. வினாத்தாளில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் - ஒரு கேள்வியைக் கூட விடாமல் - பதில் எழுதினேன். விடைத்தாள்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும்! ஆனால் பள்ளி இறுதித்தேர்வு மதிப்பெண் பட்டியல் வந்த போது மனமுடைந்து போனேன். தமிழில் பெற்ற மதிப்பெண்கள் வெறும் 69! குறைந்தது தொன்னூறு மதிப்பெண்களாவது வாங்குவேன் என்று நினைத்திருந்த என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.

பின்னர் தொழிற்கல்வி படிக்கும் போது பள்ளி இறுதித்தேர்வில் செய்த தவறை அங்கு செய்யக்கூடாதென முடிவு செய்தேன். நன்றாகவே படித்தேன். ஆனால் அங்கும் ஆசிரியர் குறிப்பிட்டு தேர்வு செய்த பாடங்களை மட்டுமே படித்தேன். இறுதித்தேர்வில் ஆசிரியர் எந்த எந்தப்பாடங்களை படிக்கத் தேவையில்லை என்று ஒதுக்கி வைத்திருந்தாரோ அவற்றில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கேள்வித்தாளைப் பார்த்த பின்னர் சற்று நேரத்துக்கு எதுவும் எழுதவே தோன்றவில்லை. ஒருவாறு மனதைத்தேற்றிக்கொண்டு எழுதினேன். முடிவு வந்த போது அந்த ஒரே ஒரு பாடத்தைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்றேன். அந்த ஒரு பாடத்தில் மட்டுமே என்னை விட கூடுதல் மதிப்பெண் எடுத்த சுப்புராஜ் முதலாவது இடத்தைப் பிடித்தான். நான் இரண்டாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. ஆசிரியர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தேர்வில் கடைபிடிக்க வேண்டியவற்றை நடைமுறைப்படித்தியதில் நல்ல அனுபவப்பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

தூத்துக்குடியில் வேலையில் சேர்ந்த பின்னர் இந்திராகாந்தி திறந்தவெளிப்பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்திருந்தேன். 12 இடங்களை நிரப்புவதற்கு சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுத வந்திருந்தனர். முதன்முறையாக கணினி மூலம் விடைத்தாள்கள் திருத்தப்படும் என்றும் விடைத்தாள்களில் எழுத பென்சிலை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். உடன் தேர்வு எழுதியவர்கள் திணறிக் கொண்டிருந்த போது நான் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுதினேன். எதிர்பார்த்தது போலவே முதலிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

ஹிந்தி மொழியைக்கற்றுக்கொள்வதிலும் எனக்கு மிக்க ஆர்வம் இருந்து வந்தது. ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் மதிய உணவு இடைவேளையின் போது, பேராசிரியர் பெத்துசெட்டி அவர்களால் நடத்தப்பெற்ற 'தட்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா'வின் ஹிந்தி வகுப்பில் சேர்ந்து "பிராத்மிக்" படித்தேன். உடன் படித்தவர்கள் அனைவரும் பள்ளி இறுதி வகுப்பில் படிப்பவர்களாக இருந்தனர். எனக்கு சரியாக புரியாமலேயே ஹிந்தியைப் படித்தேன். வெறுமனே எழுத்துக்களை அறிந்து கொள்வதற்கு மட்டுமே ஓரளவுக்கு அது உதவியது. ஆனால் ஹிந்தித் தேர்வு நடைபெற்ற போது ஆசிரியரே வந்து சில கேள்விகளுக்கு பதிலை சொல்லி எழுதச்சொன்னது நினைவிருக்கிறது. ஒரு வேளை அவர் நன்றாக பாடம் நடத்தி இருக்கிறார் என்று அனைவரும் கூற வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ என்னமோ...! ஆனால் என்ன காரணங்களாலோ ஒரே வருடத்துடன் பள்ளியில் நடைபெற்று வந்த அந்தப்படிப்பு நிறுத்தப்பட்டது.

வேலைக்கு சேர்ந்து பல வருடங்களுக்குப் பின்னர் மாலை நேர வகுப்பில் சேர்ந்து ஹிந்தி பயின்றேன். அப்போது என்னுடன் படித்தவர்களில் பெரும்பாலோனோர் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்தான். படிப்புக்கும், நடைமுறையில் வழக்கத்தில் உள்ள மொழிக்கும் உள்ள வித்தியாசத்தை மேலும் பல வருடங்களுக்குப் பின்னர்தான் புரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் எப்போதும் போல மனப்பாடம் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்த நான் காலப்போக்கில் சொந்த நடையில் எழுத வேண்டும் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். அப்படியாக உறுதி செய்தபின்னர் நடைபெற்ற தேர்வில் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தைப்பெற்றிருக்கிறேன் என்று பாராட்டுக்கடிதமும் பரிசுப்புத்தகங்களும் வந்த போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

முதலில் பெற்ற அனுபவப்பாடங்களாலும், ஓரளவுக்கு முன்னேற்பாடுடனும் இருந்ததால் அநேகமாக வேலைக்காக இதுவரை கலந்து கொண்ட எல்லா நேர்முகத்தேர்விலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். இந்த சமயத்தில் எல்லாவற்றையும் விவரிக்க தேவையில்லை.

முதலில் மும்பையில் நடைபெற்ற வேலைக்கான தேர்வுக்கு வந்த போது புகைவண்டிப்பயணத்திலும் சரி, மும்பை மாநகரத்திற்குள் சுற்றுவதிலும் சரி, எப்போதோ படித்த ஹிந்தி ஓரளவுக்கு கை கொடுத்தது. கத்தார் ஜெனரல் பெட்ரோலியம் கம்பெனிக்காக நடந்த அத்தேர்வு ஹோட்டல் ஓபராயில் நடந்தது. அது. முதல் முறை என்பதால் சற்று தயக்கத்துடன்தான் இருந்தேன். அராபியர்கள் சிலரும் ஆங்கிலேயர் ஒருவரும் என்னை நேர்காணல் செய்தனர். ஆச்சரியகரமாக அந்த நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்கு பின்னர் நடந்த பல தேர்வுகளையும், நேர்காணல்களையும் மிகவும் சுலபமாக கையாள இந்த முதல் அனுபவம்தான் உதவியாக இருந்தது. சில காரணங்களால் அந்த வேலையில் என்னால் சேர இயலவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன் ஐக்கிய அரேபிய எமிரேட்டுகளில், அபுதாபியில் 'ஜாட்கோ' என்ற மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணல் நடந்தது. அந்தத் தேர்வு ரமதான் மாதத்தில் நடைபெற்றது. என்னை நேர்காணலுக்காக இந்தியாவிலிருந்து அழைத்தவர் செய்த சிறு தவறால், நேர்காணல் நடைபெறும் அலுவலகத்திற்கு சில நிமிடங்கள் தாமதமாக, காலை ஏழுமணி பதினைந்து நிமிடங்களுக்கு செல்ல நேர்ந்தது. தாமதமாய் வந்ததன் காரணமாக நேர்காணலுக்கு வந்திருவர்களில் கடைசி ஆளாகவே என்னை அழைத்தார்கள். மதியம் சுமார் ஒரு மணிக்கு சென்ற என்னிடம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நேர்காணல் நடந்தது. அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது கிட்டத்தட்ட மாலை நான்கு மணி ஆகி இருந்தது. காலையில் இருந்து உணவோ, தண்ணீரோ அருந்த வில்லை என்பது அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது! ஆரம்பத்தில் எதுவும் தெரியவில்லை என்றாலும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு வந்து, இரண்டாயிரத்து மூன்றாம் வருடத்தின் மே மாதத்தில் அந்த வேலைக்கு சேர்ந்தேன்.

ஒரு வருடத்திற்கு முன்னர், இப்போது வேலைக்கு சேர்ந்திருக்கும் நிறுவனத்திற்கு நடைபெற்ற நேர்முகத்தேர்வு வெறும் கலந்துரையாடலாக மட்டுமே அமைந்தது!

சந்தர்ப்பவசத்தாலோ அல்லது விரும்பியோ உங்களால் எத்தனை மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியுமோ அத்தனை மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். வளைகுடா நாடுகளில் வேலை தேட விரும்புவோர் ஆங்கிலம், ஹிந்தி அல்லது உருது, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.

தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான். தன்னம்பிக்கையோடு இருங்கள் - மலர்ச்சியோடு இருங்கள் - பயத்தை விடுங்கள் - உங்களிடம் வினா கேட்பவர் உங்களது முதலாளி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள் - உங்களது சேவை அவருக்குத்தான் தேவைப்படுகிறது என்பதை மறக்காதீர்கள் - தைரியமாக கேள்விகளை எதிர்கொள்ளுங்கள் - பொய் சொல்லாதீர்கள் - தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என்று நேரிடையாக பதில் சொல்லுங்கள் - உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று சொன்னால், சுருக்கமாக உங்களைப் பற்றி சொல்லி விட்டு உங்கள் சிறப்பு என்ன என்று நீங்கள் உணர்கிறீர்களோ அதை வெளிப்படையாக சொல்லுங்கள். சிறப்புப்பயிற்சிகள் ஏதேனும் பெற்றிருந்தால் அதையும் எடுத்துக்கூறுங்கள். இவையெல்லாம் ஒரு வழிகாட்டுதல்தான். வெற்றி பெறுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. முயன்றால் நிச்சயம் உங்களாலும் எல்லாத் தேர்வுகளிலும் வெற்றி பெற முடியும்.

pradeepkt
26-09-2005, 01:37 PM
அருமையாகச் சொன்னீர்கள் பாரதி அண்ணா
உங்கள் தேதியில்லாக் குறிப்புகளின் ஆத்மார்த்த ரசிகன் என்ற முறையில் அடுத்த பதிவை நானும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருந்தேன். வழக்கம் போல் இந்தப் பதிவும் எனது சிறு வயது நினைவுகளைக் கலக்கி எடுத்து விட்டது.
தேர்வுகள் பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் சத்தியமான வார்த்தைகள். நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்துத் தேர்வைத் தைரியமாக எதிர் கொண்டால் எதுவும் தூசுதான். நானும் பல சமயம் வேண்டுமென்றே படிக்காமல் சென்று வினாத்தாள் சுலபமாக இருந்த போதும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததுண்டு. அதே சமயம் சிரமப்பட்டுப் படித்த பிறகு எவ்வளவு கஷ்டமான வினாத்தாளாக இருந்த போதும் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததுண்டு. ஆண்டவன் கிருபை என்று நானே நினைத்துக் கொள்வேன்.

இன்னும் நிறைய எழுதுங்கள். உங்கள் வாழ்க்கைப் படிமன்களைப் படிமன் எடுத்துக் கொள்ள என்னைப் போல் எத்தனையோ பேர் காத்திருக்கிறோம்.

உங்கள் பதிவுகளில் என்னை இழுத்து உள்ளே வைத்துக் கொள்வது முக்கியமாக நீங்கள் காட்டும் நேர்மையும் பதிவுகளில் உள்ள உண்மையும். வாழ்க நீவிர்.

பாரதி
26-09-2005, 06:15 PM
கருத்துக்கு மிக்க நன்றி பிரதீப்.

பரஞ்சோதி
26-09-2005, 07:28 PM
பாரதி அண்ணா பாராட்டுகள், அருமையாக எழுதியிருக்கீங்க.

என் தேர்வுகளை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீங்க.

முதல் மாணவனாக திழந்தால், என்னை விட என் அம்மா தான் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். ஒவ்வொரு வீடாக என்று என்னுடைய மதிப்பெண்களை காட்டி மகிழ்வார்கள்.

தேர்வு என்றதும் எனது தமிழாசிரியர் பாஸ்கர் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்.

ஒவ்வொரு தேர்விலும் தமிழிலில் மதிப்பெண்கள் எடுப்பதற்காக போட்டி வைப்பார்.

மாணவர்களின் முதலிடம் பெறும் எனக்கும், மாணவிகளில் முதலிடம் பெறும் ஜாஸ்மினுக்கும் தான் போட்டி. யார் தோற்றாலும் ஒரு ரூபாய் ஜெயவிலாஸ் கடலைமிட்டாய் வாங்கி கொடுக்க வேண்டும்.

பின்னர் மாணவர்களில் 5 பேர், மாணவிகளில் 5 பேர், அப்புறம் பெஞ்ச் வாரியாக போட்டி.

எதில் வெற்றி பெற்றாலும் பெஞ்ச் வாரியான போட்டியில் தோல்வி தான், காரணம் நான் இருந்தது மாப்பிள்ளை பெஞ்சில்.

பாரதி
27-09-2005, 05:07 PM
நன்றி பரஞ்சோதி. உங்கள் பதிவும் சுவாரஸ்யமே.



எதில் வெற்றி பெற்றாலும் பெஞ்ச் வாரியான போட்டியில் தோல்வி தான், காரணம் நான் இருந்தது மாப்பிள்ளை பெஞ்சில்.

அப்ப நீங்க அப்பவே மாப்பிள்ளைதான்னு சொல்லுங்க..!:p

இளசு
23-10-2005, 01:38 PM
வகுப்பு, பள்ளி முதல்,
ஆசிரியர் சார்பில் விடைத்தாள் திருத்துவது
நேர்முகத்தேர்வுகளில் வெற்றி...
-- இது என் பதிவா?
இல்லை.. தம்பி பாரதியின் பதிவு.
ஆச்சரியம் இல்லை..
ஒத்த அதிர்வலைகள் கொண்ட உள்ளங்கள் ஒரே வார்ப்பில் இருப்பதில்.

உன்னைப் பாராட்டுவது என்னையே பாராட்டிக்கொள்வதுபோல்
இருக்கிறது பாரதி..
அதனால் - அடக்கியே வாசிக்கிறேன்.

gragavan
25-10-2005, 12:43 PM
தேர்வைப் பற்றித் தேரிய வகையில் சீரிய வகையில் ஒரு பதிப்பு. வேறு யாரிடமிருந்து...நம் பாரதியண்ணனிடமிருந்து.

அனுபவங்களைச் சொல்லி அதன் மூலம் நல்ல விஷயங்களைச் சொல்லி......இதெற்கெல்லாம் தமிழைக் குத்தகைக்கு எடுத்திருக்கீர்களா என்ன!

தேர்வு என்பதில் நான் முடிந்த வரை நேர்மையாகவே இருந்திருக்கிறேன். நான் எழுதியவர்களை மற்றவர்களுக்குக் காட்டிய போதிலும் அடுத்தவர்களைப் பார்த்து எழுதாமல் இருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது.

நிறைய எழுதியாகி விட்டது. ஆனால் ஒரு தேர்வு என்னை குடையும். நாம் எடுக்கும் நேர்முகத் தேர்வு. நாம் ஒருவரை வேண்டாம் என்றால் அந்த உணர்ச்சி கொஞ்ச நாள் குத்திக் கொண்டேயிருக்கும்.

பாரதி
25-10-2005, 02:32 PM
ஒத்த அதிர்வலைகளா...?
உங்கள் அலைகளை காண காத்திருக்கிறேன் அண்ணா.


இதெற்கெல்லாம் தமிழைக் குத்தகைக்கு எடுத்திருக்கீர்களா என்ன!

எத்தனை எடுத்தாலும், கொடுத்தாலும் குறையாத அட்சய பாத்திரமல்லவா தமிழ்! ஆனாலும் குத்தகைக்கு எடுப்பதை விட சொந்தமாக்கிக் கொள்ளவே மனம் பேராசைப்படுகிறது இராகவன்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.