PDA

View Full Version : பெண்ணாகிப்போனால்..?!!



poo
24-09-2005, 08:33 AM
புலிக்கு பூனையா பிறக்கும்...
கேள்வியா..கேலியா.?!

கூட்டி மெழுக
இன்னொன்னு கூடனுமா..
ஏளனமா..ஏக்கமா?!..

ஒரே மகன்..
மகன் ஒருவனே..
ஆசையா..ஆணையா?!

அடிவயிற்றை தொட்டு
ஆண்டவனை வேண்டினேன்..

அறிகுறிகளைக் கண்டு கேட்டு
ஆருடம்..
ஆறு கடந்தும் குமட்டினால்
ஆணேதான்..
பெண்ணென்றால் பிண்டமாய் வந்திருக்கும்
மூன்றே மாதத்தில்....

வயிற்றெரிச்சலால் வாய்க்கரிசி..
இல்லத்தரசி!!??..

வீரிய பரம்பரை.. சீறும் சிங்கம்..
சீர்தூக்கினால் அசிங்கம்..
தூக்கிவந்த சீருக்கு செருக்கு..
வாழ்கிறேன் பேருக்கு..

மாற்றான் தோட்ட மல்லிகையில்
மகரந்த சேர்க்கை..
மகவொன்றை ஈன்றதாய்
ஈனப்பிறப்பின் தர்க்கம்..

வக்கிரம் பிடித்த வர்க்கவாதி..
சோரம் போனதை
வீரமாய் பேசும் விலைமகன்..
கொலைமகன் ஆகக்கூடுமோ?!..

கல்லானாலும் கணவன்..
புல்லானாலும் புருசன்..

அடிவயிற்றை தொட்டு
ஆண்டவனை வேண்டினேன்...

அப்பா வந்தார்...
இந்த மாசமே வந்திடு தாயீ..
ஐம்பது வயசிலும் தலைக்கு மைபூச்சு..
தாத்தா ஆகப்போவதில் அத்தனை மகிழ்ச்சி...

கலகல வளையல்கள்..
கமகமக்கும் பூக்கள்..

அம்மிக்குழவியும்....சந்தனக்குமிழும்..

ஆறுவகை சாதம்..
ஐந்துவகை இனிப்பு..
நான்குவகை பழம்..
மூன்றுவகை சீதனம்..

அடிவயிற்றை தொட்டேன்..
ஆண்டவனைத் தொழும்முன்
அசரீரி கேட்டது...

"பிறப்பிலும் இரண்டு வகை
உண்டென்று சொல்லேம்மா...."

உணர்மொழி ஊடாய்...

உள்ளங்கள் அழுதது...

ஊமை கணவரே....ஊன அத்தையே..
என் அடிவயிற்றை தொட்டுப்பாருங்களேன்..
ஒருமுறையேனும்...

பரஞ்சோதி
24-09-2005, 09:19 AM
மீண்டும் தமிழ்மன்ற புரட்சிக்கவிஞனின் கவிதை.

அருமையாக இருக்கிறது நண்பா.

கவிதையை முழுமையாக அர்த்தம் கொண்டப் பின்பு என் விமர்சனம் வரும்.

பிரியன்
24-09-2005, 09:36 AM
புலிக்கு பூனையா பிறக்கும்...
கேள்வியா..கேலியா.?!

கூட்டி மெழுக
இன்னொன்னு கூடனுமா..
ஏளனமா..ஏக்கமா?!..

ஒரே மகன்..
மகன் ஒருவனே..
ஆசையா..ஆணையா?!

அடிவயிற்றை தொட்டு
ஆண்டவனை வேண்டினேன்..

அறிகுறிகளைக் கண்டு கேட்டு
ஆருடம்..
ஆறு கடந்தும் குமட்டினால்
ஆணேதான்..
பெண்ணென்றால் பிண்டமாய் வந்திருக்கும்
மூன்றே மாதத்தில்....


நீண்ட கவிதை. பெண்களின் நீண்ட சோகத்தைப் போலவே.. ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று நினைக்கும் தன் சொந்தங்களை எண்ணி
வேதனைப்படும் கர்ப்பிணியின் வலியை மிகத் துல்லியமாக பதிவு செய்திருக்கிறீர்கள்.. தன் விருப்பங்களை தேவைகளை உணர்ச்சிகளை சொல்லக்கூட உரிமை இல்லாத பெண்ணின் வலியை சொல்லியிருக்கிறது கவிதை வரிகள்


வீரிய பரம்பரை.. சீறும் சிங்கம்..
சீர்தூக்கினால் அசிங்கம்..
தூக்கிவந்த சீருக்கு செருக்கு..
வாழ்கிறேன் பேருக்கு..

செருப்பால் அடித்தது போன்ற வரிகள்... தனக்கு விலை நிர்ணயித்து விலைபேசி விற்றுவிட்ட கேவலத்தை உணராமல் அதை ஆண்மையென்றும் வீரமென்றும் சொல்லித்தான் திரிகிறார்கள் இன்னும் சில ஆண்ம(மாக்)கான்கள்.....

நிறைய நிறைய சொல்லியிருக்கிறீர்கள் கவிதையில். மொத்தத்தில் பெண்ணின் இயலாமை நிரம்பிக் கிடக்கிறது... தடை உடைத்து பெண்கள் முன்னேற வேண்டும்

இன்னும் சொல்ல வேண்டியது இருக்கிறது...

விரைவில் பதிக்கிறேன்

poo
24-09-2005, 09:48 AM
நீண்ட கவிதை. ....




நிறைய நிறைய சொல்லியிருக்கிறீர்கள் கவிதையில்.....


இதனால்தான் ப்ரியன் எழுதவே பயமாயிருக்கு... எப்படி பேச ஆரம்பிச்சா வளவளன்னு இரு(ழு)ப்பேனோ அப்படியே எழுதறதலயும் இருக்கேன்.. படிக்கிறவங்களைப்பத்தி கவலைப்படறதில்லையே நாமன்னு கவலையா இருக்கு!!

சும்மா 4 வரி எழுத நினைச்சு 40 வரியில வந்து நிக்குதுபோல!

(சுருக்கமா எழுதற கலையை கத்துக்கொடுங்களேன்பா..)

poo
24-09-2005, 09:52 AM
... தனக்கு விலை நிர்ணயித்து விலைபேசி விற்றுவிட்ட கேவலத்தை உணராமல் அதை ஆண்மையென்றும் வீரமென்றும் சொல்லித்தான் திரிகிறார்கள் இன்னும் சில ஆண்ம(மாக்)கான்கள்.....



அட.. உங்கள் கோணம் வேறாக (நன்றாக..)இருக்கிறதே!!...

பிரியன்
24-09-2005, 09:52 AM
வரிகள் குறைவாக எழுதினால்தான் கவிதை என்று யார் சொன்னார்கள். சொல்ல வந்த செய்தியைப் பொறுத்து எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் சொல்லலாம்...

இந்த ஆண்பிள்ளை மோகம் ( அவலம் ) இன்னும் பல கிராமங்களில் மறையவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விசயம்.... படித்து நல்ல நிலையில் இருப்பவர்களிடம் கூட இந்த சிந்தனை இருப்பது அதனினும் வேதனைக்குரியது

பிரியன்
24-09-2005, 09:59 AM
மாற்றான் தோட்ட மல்லிகையில்
மகரந்த சேர்க்கை..
மகவொன்றை ஈன்றதாய்
ஈனப்பிறப்பின் தர்க்கம்..

வக்கிரம் பிடித்த வர்க்கவாதி..
சோரம் போனதை
வீரமாய் பேசும் விலைமகன்..
கொலைமகன் ஆகக்கூடுமோ?!..

கல்லானாலும் கணவன்..
புல்லானாலும் புருசன்..

அடிவயிற்றை தொட்டு
ஆண்டவனை வேண்டினேன்...



விலை மகன் - புதிய சொல்லாடல்....
அடிமைத்தனமத்தை பெண்கள் கைவிட வேண்டும் ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது பெண்ணல்ல என்கிற போது சோரம் போனவனோடு ஏன் வாழ வேண்டும்..

சுற்றிச் சுற்றி ஆணை சார்ந்தே வாழவேண்டும் என்ற எண்ணம் என்று பெண்களிடமிருந்து மறைகிறதோ அன்றுதான் விடியல் பிறக்கும்

pradeepkt
24-09-2005, 02:10 PM
அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் பூ!
எல்லா எதிர்பார்ப்புகளுமே சமூகச் சூழலும் வளர்ப்பும் கொண்டுதான் வருகின்றன. அதில் முக்கியமானது பெண் குழந்தைப் பிறப்பை எதிர்ப்பது.

உங்கள் கவிதைக்கு எதிர்ப்பதம் எங்கள் வீட்டில் நடந்தது. நாங்கள் மூவரும் ஆண்களாகப் பிறக்க என் தந்தை வீட்டில் கடுமையான சண்டை மூண்டது. அது ஒரு பெரிய கதை.

mukilan
24-09-2005, 02:49 PM
பெண் குழந்தைகள் தினம் அன்று அற்புதமான படைப்பு. பெண்ணைப் பெற்ற தகப்பன்கள் பாக்கியசாலிகள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் அப்படித்தானே. சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் மற்றுமொரு அவலம். மாறிப் போய் விட்டதாய் நான் நினைத்ததெல்லாம்???....... பாரதியின் எல்லாக் கனவுகளும் நனவானாலும் பெண்ணிய விடுதலை மனதளவில் ஏன் உதட்டளவில் மட்டும் சிறைப் பட்டே இருந்துவிடுமோ?

kavitha
27-09-2005, 06:16 AM
சும்மா 4 வரி எழுத நினைச்சு 40 வரியில வந்து நிக்குதுபோல!

(சுருக்கமா எழுதற கலையை கத்துக்கொடுங்களேன்பா..)

வெகு நாளைக்குப்பின் உங்கள் கவிதையைப்படிக்கிறேன் பூ.. மிக மிக அருமையான கவிதை. கவிதை எழுதுவதற்கு எந்த தடைகளும் வைத்துக்கொள்ளாதீர்கள். வெள்ளோட்டமான கவிதைகள் தான் மனதை நிறைக்கும். கவிதை குறித்தப்பார்வை பிறகு....

gragavan
27-09-2005, 06:52 AM
அடேங்கப்பா! இங்கே பெண்கருவிற்காக வேதனைப் படுகின்றார்கள். ஆனால் அவள் பிறந்த பின் படும் பாடெல்லாம் யாரும் சீந்த மாட்டார்கள். கற்பு, மானம், பண்பாடு இவை அனைத்தையும் தானொருந்த்தியாய்ச் சுமக்கும் பெண்கருக்கள் இருப்பதைக் காட்டிலும் போவதே நல்லது.

இங்கே வக்காலத்து வாங்கும் வக்கீல்கள்
கட்டிலில் மருத்துவராய்ப் பரிசோதனையில்
ஊனம் உடலிலா மனதிலா!

சேலை கட்டிய பெண் பண்பாட்டுச் சின்னம்.
வேட்டி கட்டாத ஆண்?
வேறொருவரை மனதாலும் உடலாலும் நினைக்காத பெண் கற்புக்கரசி?
ஆனால் ஆண்?
பெண்கருக்களே!
பிறக்கும் பொழுது
நெருப்போடு வாருங்கள்
நீங்கள் கொளுத்த வேண்டிய
மடங்கள்
மண்ணில் எக்கச்சக்கம்.

Nanban
27-09-2005, 06:01 PM
திருமணமானதும் நானும் என் மனைவியும் செய்த முதல் திட்டம் - ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பெற்றுக் கொண்ட பின் இந்திய அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதென்று தான்.

ஆனால் முதல் குழந்தை ஆண் பையனாகப் பிறந்தான். இப்பொழுது மீண்டும் விவாதங்கள் - ஐந்து வருடங்களாக - ஒரு பெண் குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று. என்னுடைய ஆசை தான் இறுதியில் வென்றது, மீண்டும் ஒரு பெண் குழந்தைக்கு முயற்சிக்கலாம் என்று.

மிகவும் அடிப்படைவாதங்கள் கொண்ட இந்த சமூகத்தில் ஒரு பெண்ணைப் பெற்றுக் அவளை ஒரு மிக முற்போக்கு சிந்தனைகள் கொண்ட பெண் உரிமைகளுக்கு ஒரு அடையாளமாக வளர்க்க வேண்டும் என்ற என்னுடைய தனியாத தாகம். பெண்களுக்கு எதற்கு படிப்பு என்று கேட்ட குடும்பத்தவர்கள் அனைவருக்கும் காட்ட வேண்டும் - எத்தனை சிறப்பானவள் என் மகளென்று!!!

gragavan
28-09-2005, 05:06 AM
வாழ்த்துகள் நண்பன். உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்.

பென்ஸ்
07-06-2006, 07:09 PM
பூ...
அது என்னவோ...
புரிந்த பிறகும் திரும்ப திரும்ப படித்தேன்...
இதேபோல மனதை கீறி செல்லும் கவிதைகளை படிப்பதில் இருக்கும் அந்த ஒரு உணர்வு தனிதான்....

ஒரே வருத்தம்... இப்போது நீங்க கவிதை பதிப்பதில்லை என்பது மட்டுமே...

இளசு
28-06-2006, 09:27 PM
வீரியக்கவிஞன் பூவின் கவிதை..

புயல் வேக வரிகள்.. தடை எதற்கு..அளவு எதற்கு?

கவீ, பென்ஸின் கருத்துகளை அப்படியே வழிமொழிகிறேன்.

பிரதீப் குடும்ப சண்டை
இராகவனின் ஆதங்கம்
நண்பனின் ஏக்கம்
பிரியனின் கருத்துரை - என

நிறைவான பதிவு இது..

தாமரை
29-06-2006, 04:04 AM
நான் நிதானமாக படித்து விமர்சனம் செய்கிறேன்.. கவிதையின் கரு(கவிதை ஒரு பெண்.. எனவேதான் அதில் கரு உண்டாகிறது) மிக மிக தீர்க்கமானது..நாளை வரை பொறுங்களேன்..

meera
31-08-2006, 08:18 AM
eththanai unmaiyana varikaL aaNmakankaLukku oor sattaiyadi

meera
31-08-2006, 08:23 AM
எத்தனை உண்மையான வரிகள் ஆண்மகன்களுக்கு ஒரு சாட்டையடி இந்த கவிதை

mukilan
01-09-2006, 06:51 AM
எத்தனை உண்மையான வரிகள் ஆண்மகன்களுக்கு ஒரு சாட்டையடி இந்த கவிதை
எல்லா ஆண்மக்கட்குமா?

கண்மணி
02-09-2006, 04:57 PM
உடல் இறுகி
உதிரம் பெருகி
கருப்பை உரித்து

ஒரு
ஆணைப் பெற்றுத்தர மட்டும்
தேவை ஒரு பெண்..

பென்ஸ்
11-09-2006, 01:02 PM
எத்தனை உண்மையான வரிகள் ஆண்மகன்களுக்கு ஒரு சாட்டையடி இந்த கவிதை

மீரா...
தமிழ் மன்றத்தில் உங்களை வரவேற்க்கிறென்....
ஒரு சிறு கண்டனத்துடன் உங்களோடு இந்த அறிமுகம்....

முடிக்கபடாத வார்த்தைகள் ஒரு கவிதையை போன்றது... வாசிப்பவர் விருப்பத்திற்க்கு எடுத்து கொள்வர்.

"ஆண் மகன்களுக்கு ஒரு சாட்டையடி"... திருத்தபட வேண்டிய வாக்கியம் இது...
இந்த கவிதை நண்பர் "பூ"வால் எழுத பட்டது...
அருமையான ஒரு சமூக சிந்தனை கவிதை...

சுமுதாயம் என்று வரும் போது நடக்கும் தவறுகள் எதோ ஒரு சாராருக்கு பலன் கொடுப்பதாகதான் இருக்கும்... இவர்கள் ஆண் மக்களோ மட்டும்தானா.... பெண்கள் இல்லையா.... கவிதையின் கடைசி வரியை பாருங்கள்....புரியும்...

குறிப்பு:
உங்கள் கவிதைகளை வாசிக்கிறென்... அருமை... விமர்சனம் விரைவில்....