PDA

View Full Version : தமிழீழத்தில் 'நடைமுறை அரசு' இயங்குகிறதுஇளையவன்
16-09-2005, 12:53 PM
தமிழீழத்தில் நடைமுறையில் ஒரு அரசு இயங்கிவருவதை நான் நேரில் சென்று பார்த்தேன் என்று அவுஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் மாநில ஸ்ரத்பீல்ட் தொகுதியின் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினா ஜட்ஜ் தெரிவித்தார்.


நியூ செளத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அவர் ஆற்றிய உரை:

சிறிலங்கா இப்போது பிரச்சனையில் உள்ளது. அங்கே குடியுரிமை, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. சிறிலங்காவிற்கு கடந்த வாரம் நான் சென்றிருந்தேன். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய அங்கு சென்றபோதுதான் இதை நான் பார்க்க நேரிட்டது.

என் ஸ்ரத்பீலட் தொகுதியில் உள்ள மூவாயிரம் தமிழர்களிடம் நான் வேண்டுகோள் வைத்து இந்த உதவிகளைப் பெற்றேன். 20 ஆண்டுகால யுத்தத்தினால் இங்கே அகதிகளாக வந்தவர்கள் அவர்கள். அவர்கள் அவுஸ்திரேலியராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். நமது சமூகத்திற்கான பங்களிப்பை அவர்கள் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களது சொந்தத் தாயகம் குறித்தும் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அக்கறையோடு இருக்கின்றனர்.

தமிழர்கள் தனித்துவமாக சொந்த மொழி, கலாசாரம், பண்பாட்டு, சமயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை சுதந்திரமடைந்த 1948 ஆம் ஆண்டிலிருந்தே அதிகாரங்கள் சிங்களவர்களுக்கு-மேலாதிக்கம் பெற்ற புத்த மதத்தினருக்குரியதாக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர்கள் 80 விழுக்காட்டினராக அந்நாட்டில் இருக்கிறார்கள். தமிழர்கள்-இந்துக்கள் 20 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் இனத்தவரும் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்ச் சிறுபான்மையினரது உரிமைகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்தே உள்ளன. அவர்கள் ஒடுக்குமுறைகளுக்கும் அழித்தொழிப்புகளுக்கும் உள்ளாயினர். தமிழர்கள் தேர்வுகளில் உயர் மதிப்பெண் பெற்றிருந்தாலும் சிங்களவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் அனுமதி அளிக்கப்பட்டது. வேலை வாய்ப்புக்களிலும் திட்டமிட்டு தமிழர்கள் தடுக்கப்பட்டு சிங்களவர்களுக்கே பணிகள் வழங்கப்பட்டன. தமிழர்களது வர்த்தக வாய்ப்புகளை சிங்களவர்கள் நிராகரித்தனர். தமிழர்கள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்டே நடத்தப்பட்டதாக கத்தோலிக்க மதகுருமார்கள் என்னிடம் தெரிவித்தனர்.

என்னைச் சந்தித்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் ஆறு பக்க அளவிலான அறிக்கை ஒன்றை அளித்தார். அதில் இலங்கையின் வடபகுதியில் தாக்குதலுக்குள்ளான, விமான குண்டுவீச்சுகளுக்கான தேவாலயங்கள் பற்றிய விவரங்கள் இருந்தன. 93 தேவாலயங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன. 186 தேவாலயங்கள் பகுதியாகவும் 20 தேவாலயங்கள் சிறிய அளவிலும் பாதிக்கபப்ட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் அம்மக்களை நம்பிக்கையிழக்க வைத்துள்ளன.

சிறிலங்காவின் பெரும்பான்மை ஆதிக்கம் உள்ள அரசாங்கமும் ஊடகங்கள் வாயிலாக சிறுபான்மையினருக்கான எதிரான பிரச்சாரங்களையே உருவாக்கி வருகிறது. இனவெறியையும் அச்சத்தையும் அரச்சாங்கமே வளர்த்தெடுத்துள்ளது.

அந்நாட்டின் உண்மையான நிகழ்வுகள், உலகத்தின் பார்வையில் மறைக்கப்பட்டுவிட்டன. நான் தமிழீழத்துக்குச் செல்வதை தடுக்கின்ற முயற்சிகளையும் சிலர் மேற்கொண்டனர். 'ஏசியன் றிபுயூன்' இணையத் தளத்தின் அவுஸ்திரேலிய பிரிவினர், நான் இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் எடுத்துச் செல்வதாக செய்தி பரப்பினார்கள். அது உண்மையாக இருக்குமானால் அவுஸ்திரேலிய அரச சட்டத்தை மீறியதாகவும் என் வாழ்க்கை ஆபத்தை நோக்கியதாக இருந்திருக்கும். இவையெல்லாம் என்னுடைய அவுஸ்திரேலிய பயணத்தைத் தடுக்க போடப்பட்ட முட்டுக்கட்டைகள். இவைகள் என்னை பாதிக்கவில்லை.

இந்த மூன்று ஆண்டுகால காலத்தில் தமிழர்கள் தங்களுக்கான ஒரு அரசை- நடைமுறை அரசை இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் உருவாக்கி செயற்பட்டு வருகிறார்கள்.

தமிழீழத்தின் நீதித்துறை குறித்தும் நீதிமன்றம், சட்டக்கல்லுரி, காவல்நிலையம், காவல் பயிற்சி மையம், மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கல்லுரிகள், சிறுதொழிற்சாலைகள், தமிழீழ வைப்பகம், சிறார் இல்லங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டேன்.

ஆழிப்பேரலையாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட 278 சிறார்கள் அங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மீளமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சிறப்பாக செய்து வருகிறது. தங்களது செயற்றிட்டங்களுடன் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு அவர்கள் இயங்கி வருகின்றனர். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நோர்வே அனுசரணையோடு யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நோர்வேக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

சிறிலங்கா அரசானது அதிகாரப்பரவலாக்கத்தை செயற்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் சுயாட்சியான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய கூட்டாட்சி முறையாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் தங்களது கலாசார, அரசியல், பொருளியல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தங்களது சொந்தத் தாயகம் என்று ஒரு மனிதன் அழைக்கின்ற பிரதேசத்தில் சமத்துவமாகவும், சமூக நீதியோடும் சுதந்திரமாகவும் வாழ உரிமை உண்டு. அதேபோல் தான் ஐக்கிய இலங்கை என்ற அமைப்புக்குள் தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெற்றவர்களாக சமத்துவமாக வாழுகிற கூட்டாட்சி முறையை ஏற்படுத்த வேண்டும். யுத்தம் இருதரப்பிலும் பாரிய சேதங்களை உருவாக்கி இருக்கிறது.

தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் உதவி தேவை. இலங்கையின் உண்மை நிலையை அறிய சர்வதேச சமூகமானது சுயாதீனமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழர் பிரதேசங்களைப் பார்வையிட்டு அங்கே என்ன நடந்து கொண்டிருப்பதை என்பதை உணர வேண்டும். இதுவே எனது வேண்டுகோளாம் என்றார் அவர்.

நன்றி: புதினம்.

அறிஞர்
16-09-2005, 03:06 PM
தமிழர்களை பற்றி உலகிற்கு உணர்த்தும் உரை..... நன்றி அன்பரே.... பல நாடுகளில் உதவி கரம் விரைவில் நீள வாழ்த்துக்கள்