PDA

View Full Version : கட்டுநாயக்காவில் பேச்சுக்கள் : நிராகரிப்



இளையவன்
08-09-2005, 10:58 AM
யுத்த நிறுத்தத்தை செயற்படுத்துவது தொடர்பாக சிறிலங்காவின் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேச்சுகள் நடத்தலாம் என்ற நோர்வே யோசனையை தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளனர்.


கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை தன்னைச் சந்தித்த கண்காணிப்புக் குழுவினரிடம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இது குறித்து விளக்கம் அளித்தார்.

இச்சந்திப்பு குறித்து ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

கண்காணிப்புக் குழுத் தலைவரும் அவரது அணியினரும் இன்று வந்திருந்தனர். இப்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைகள் குறித்து முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டது.

அண்மைக்காலத்தில் எங்கள் போராளிகள் மீதும் அரசியல்துறை அலுவலகங்கள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல எண்ணிக்கையான போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையில் எங்களுடைய தலைமைப்பீடம் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து இருக்கிறது.

எங்களுடைய அரசியல் போராளிகள் தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் பணிகளை மேற்கொள்ளலாம் என்பதும் அப்பகுதிகளில் சுதந்திரமாக தங்கள் மக்களுடன் இணைந்து செயல்படலாம் என்பதும் யுத்த நிறுத்த ஒப்பந்தப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் அண்மைக்காலத்தில் இது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எமது நிர்வாகப் பகுதிக்குள் எமது போராளிகளை மீள வரவழைத்து இருக்கிறோம்.


பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் எங்களுடைய போராளிகள் அப்பகுதியில் அரசியல் பணிகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. ஆகவே எமது அரசியல் அலுவலகங்களை மூடிவிட்டு எமது போராளிகளை எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பின்நகர்த்தியுள்ளோம்.

எமது தலைமைப் பீடத்தின் முடிவை கண்காணிப்புக் குழுவுக்கு இன்று எடுத்து விளக்கியதே இன்றைய சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.

'கட்டுநாயக்க விமான நிலையப் பேச்சு யோசனை நிராகரிப்பு'
அதேபோல் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நேற்று வந்த செய்திகளின் அடிப்படையில் எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடும் இன்று கண்காணிப்புக் குழுவிடம் விளக்கப்பட்டது.

கொழும்பு உள்ளிட்ட சிறிலங்காவின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பேச்சுகளை நடாத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்திருக்கிறோம். கிளிநொச்சி அல்லது வேறு ஏதேனும் ஒரு நடுநிலையான நாட்டில் பேச்சுகள் நடத்தலாம் என்று தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் நோர்வே ஒரு யோசனையை முன்வைத்துள்ளது. நோர்வே முன்வைத்துள்ள யோசனையில் உள்ள சிக்கல்கள், நெருக்கடிகள் குறித்தும் இன்று தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்துச் செல்வதால் அதை பாதுகாப்பான இடமாக நோர்வே குறிப்பிட்டிருந்தது.

போக்குவரத்துகளை ஒழுங்கு செய்கின்றபோது தரித்துச் செல்வது என்பது வேறு. பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான உகந்த சூழலை நடத்துவது என்பது வேறு.

இரு முரண்பாடுகளுடைய தரப்புக்கள் ஒரு பேச்சுவார்த்தையை நடாத்துகிற போது இயல்பான சூழலில் நடைபெற வேண்டும்.

நெருக்குவாரங்கள், பதற்றங்கள் உள்ள இடங்களைத் தவிர்ப்பது என்பது உலக நடைமுறையாக இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் மூன்றாம் நிலை நாடுகளில் ஏதாவது ஒரு இடத்தில் பேச்சுகளை முன்னெடுப்பது என்பது வழமை.

சிறிலங்காவின் தலைநகரைப் பொறுத்தவரையில் அது கொழும்பாக இருக்கலாம், கட்டுநாயக்க விமான நிலையமாகவும் இருக்கலாம்...அங்கே இப்போது ஒரு பதற்றமான சூழ்நிலை இருக்கிறது. அரசியல் குழப்பங்களும் பதற்றங்களும் உள்ள ஒரு இடத்தில் போய் பேச்சுகளை இயல்பாக முன்னெடுக்க முடியாது.

இந்த அடிப்படையிலேயே எமது நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக இன்று விளக்கினோம். அதேநேரத்தில் யுத்த நிறுத்தத்தை செயற்படுத்துவது குறித்து விரைவில் பேசவேண்டிய அவசியத்தையும் நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ சிறிலங்கா கட்டுபாட்டுப் பிரதேசத்திலோ பேச்சுகள் நடாத்தப்படுவது என்பதை இருதரப்பும் ஏற்காத நிலையில் நடுநிலைமையான ஒரு மூன்றாம் தரப்பின் இடம்தான் பொருத்தாமனது என்பதை சுட்டிக்காட்டினோம்.

இது இரண்டு தரப்புக்கும் ஏற்கக் கூடிய யோசனையாக இதை எமது தலைமைப்பீடத்தின் சார்பில் முன்வைத்துள்ளோம். இதை நோர்வே தரப்பிடமும் தெரிவித்துள்ளோம்.

சிறிலங்கா தரப்பு, நோர்வேயின் ஓஸ்லோவை நிராகரித்தாலும் வேறு ஏதாவது ஒரு நடுநிலைமையான நாட்டில் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்வைக்கலாம்.

இரண்டு தரப்புக்குமே பக்கச்சார்பற்ற நிலையை எடுக்க வேண்டும் என்று நோர்வேத் தரப்பை நாம் கேட்டிருக்கிறோம்.

தற்போதைய சூழலுக்குத் தீர்வு காணும் யோசனைகள் கொண்டுவரப்பட்டனவா?
எந்தவிதமான யோசனையையும் அவர்கள் கொண்டுவரவில்லை. அண்மைக்காலமாக எங்களுடைய போராளிகள் தொடர்ந்து நாளாந்தம் தாக்கப்படுகிறார்கள்-கொல்லப்படுகிறார்கள். எங்களுடைய அரசியல்துறை பணிமனைகள் மீது குண்டுவீசித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலைமையை சீர்செய்யாமல் முக்கியமான எந்த மாற்றமும் வரப்போவது இல்லை. இந்தத் தீவிரத் தன்மையை அரச தரப்பு உணர்ந்து ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று இன்று வலியுறுத்தி இருக்கிறோம்.

ஆயுதக்குழுவினருடனான கண்காணிப்புக் குழுவின் சந்திப்பு

அண்மையில் கருணா குழுவை கண்காணிப்புக் குழு சந்தித்ததாக செய்திகள் வெளியானது. இது குறித்து நாம் கண்காணிப்புக் குழுவிடம் கேட்டோம். அவர்களும் அப்படியான ஒரு சிலரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சந்தித்ததாகவும் இந்தக் குழுக்கள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை என்றும் தங்கள் பாதுகாப்பில் இல்லை என்றும் சொல்லி வருகிற சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதாரத்துடன் விளக்குவதற்காகத்தான் இச்சந்திப்பு என்றும் தெரிவித்தார்கள்.

ஆயுதக் குழுக்களை அரச தரப்பும் படைத்தரப்பும் ஒழுங்கமைத்து வைத்து இயக்கிக் கொண்டிருப்பது இப்போது உலகறிந்த உண்மையாக வெளிப்பட்டிருக்கிறது. இதன் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் கூட தகர்த்தெறியப்படக் கூடிய நிலைமைதான் உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் ஆயுதக் குழுக்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும்; ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்பது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

ஆனால் சிறிலங்கா அரசு ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி ஆயுதக்குழுக்களை மறைமுகமாக ஆதரித்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பது தெளிவாகியிருக்கிறது. இந்த ஆயுதக் குழுக்களை தங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம்தான் தொடர்ச்சியான குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அப்பிரதேசங்களில் நடைபெறும் படுகொலைகளுக்கு இந்தக் குழுக்கள்தான் காரணம் என்பது இப்போது ஆதாரத்தோடு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தொடருமா சர்வதேச அனுசரணையாளர்கள் பணி?
சர்வதேச சமூகத்தின் அனுசரணையும் ஈடுபாடும் அதிகமாக இருப்பதால் இங்குள்ள நிலைமைகளை தீவிரத் தன்மைகளை சர்வதேச சமூகத்துக்க்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

அந்த அடிப்படையில்தான் தற்போதைய சூழ்நிலையையும் சர்வதேச சமூகத்திடம் எடுத்து விளக்கி இருக்கிறோம்.

இந்தச் சூழலை விளக்கியுள்ளதன் மூலம் சிறிலங்கா அரச தரப்பிடம் எடுத்துக் கூறி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அந்தப் பணியை அவர்கள் செய்வார்கள் என்று தற்போது நம்புகிறோம்.

நெருக்கடிக்குத் தீர்வுதான் என்ன?
தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமெனில் இருதரப்பும் அவசியம் சந்தித்துப் பேசியாக வேண்டும்.

அமைதி, சமாதான முயற்சி உள்ளிட்ட அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது யுத்த நிறுத்த ஒப்பந்தம். அதனால் யுத்த நிறுத்த அமலாக்கம் என்பது மிக மிக முக்கியமானது.

ஆகவே இருதரப்பின் உயர்நிலைக் குழு பேசி ஒரு உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும். இந்தத் தீர்மானங்களை செயற்படுத்துவதன் மூலம்தான் எந்தவிதமான மாற்றத்தையும் இங்கே கொண்டுவர முடியும். இதற்கான அனுசரணையாளர்கள் தீவிரமாக செயற்பட வேண்டும், செயற்படுகிறார்கள் என்று நாம் நம்புகிறோம்.

யுத்த நிறுத்தம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது
யுத்த நிறுத்த ஒப்பந்தம் இப்போது கேள்விக்குறியான நிலைக்கு வந்துள்ளதால்தான் இந்த சந்திப்பும் உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகி இருக்கிறது.

சிறிலங்கா அரசுக்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம்,அமைதி முயற்சிகள் நீடிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருக்குமேயானால் யுத்த நிறுத்தம் நீடிக்கும். நினைப்பது எல்லாம் நடந்துவிடுவதில்லை. அது இருதரப்பினரது கைகளில்தான் உள்ளது.

எங்களுடைய ஒருதரப்பின் நம்பிக்கையை வைத்துக்கொண்டு எதையும் நாம் எதிர்கூறல் இயலாது.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலும் தமிழ் மக்களும்
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலை தமிழ் மக்கள் பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் மாறிமாறி வந்த சிங்களத் தலைமைகள் தமிழ் மக்களுக்கு எதைச் செய்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை.

தமிழ் மக்களின் வாக்கு வங்கிகளைப் பெறுவதை விட தமிழ் மக்களுக்கு எதிராக எப்படியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்கிற இனவாதக் கருத்துகளைத்தான் அண்மைக்காலமாக சிங்கள மக்களிடத்திலே அவர்கள் கூறிவருகிறார்கள்.

எங்கள் மக்கள் ஏற்கனவே தங்களது முடிவை மேற்கொண்டுவிட்டார்கள்.

எங்கள் சொந்தத் தாயகத்தில் தன்னாட்சி உரிமையோடு வாழ வேண்டும் என்பது எங்கள் மக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கிற தீர்மானம்.

அதனால் அவர்கள் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடனான ஆலோசனை செய்வது என்ற மலையக மக்கள் முன்னணி தலைவரின் கருத்து பத்திரிகைகளின் வாயிலாக வெளிவந்திருக்கிறது.

தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசியல் யாப்பு, அரசியல் சட்டங்கள் அனைத்தும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சிங்கள தேசத்திலே வாழ்கிற தமிழர்களுக்காக சில அரசியல் நகர்வுகளுக்கான முடிவுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தி உரிய முடிவெடுக்கப்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.

நன்றி: புதினம் (www.puthinam.com)