PDA

View Full Version : நவம்பர் 17-இல் அரச தலைவர் தேர்தல்



இளையவன்
05-09-2005, 12:49 PM
மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஜே.வி.பி. ஆதரவு
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளரான மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.


கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பை கைவிடுதல்,

சிறிலங்கா என்ற ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு,

2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தல்,

அமைதி முயற்சிகளில் நோர்வை அனுசரணையாளர் பங்களிப்பை மறுபரிசீலனை செய்தல்,

உள்ளிட்ட 12 நிபந்தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது.

1. ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது. முன்னைய பொதுக்கட்டமைப்பை கைவிட்டு விட்டு ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை அரசினூடாக மேற்கொள்ளப்படும் வகையில் புதிய செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

2. இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது இதர கட்சிகளுடனும் அமைதிப் பேச்சுகள் நடாத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தன்னாட்சி அதிகார சபை உள்ளிட்ட எதுவித அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை அளிக்கும் வகையில் அப்பேச்சுகள் இருக்கக் கூடாது.

3. இனப்பிரச்சனைக்கு முன்வைக்கப்படுகிற எந்தத் தீர்வும் சிறிலங்கா என்கிற ஒற்றையாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.

4. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறிலங்காவின் அரசியல் சாசனத்துக்கு ஏற்பில்லாத, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிற யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் அனைத்தையும் அதிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும்.

5. சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அனுசரணையாளராக செயற்பட்டு வரும் நோர்வே தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பக்க சார்பாக செயற்பட்டு வருகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பணியில் கண்காணிப்புக் குழு முழு அளவில் தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில் அனுசரணையாளராக நோர்வே பணியாற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

6. தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனைகளை முதன்மைப் பணியாகக் கொண்டு சிறிலங்காவில் மூவின மக்களும் எவ்வித அச்சமுமின்றி வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இம்மாகாணங்களில் அனைத்து ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகளும் செயல்படும் வகையில் பல கட்சி அரசியல் முறையை மீளவும் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

7. சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாராம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையானது சிறிலங்காவின் ஜனநாயகத்தை சீர்குலைக்கக் கூடியது. இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையை நீக்குவதை முதன்மைப் பணியாக கொள்ள வேண்டும். இதை 2005 ஆம் ஆண்டு தொடங்க உள்ள 6 ஆவது அரசுத் தலைவரின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே செயற்படுத்த வேண்டும்.

8. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக தாரளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரக் கொள்கையானது சமச்சீரான பொருளாதாரக் கொள்கையாக இருக்க வேண்டும்.

9. தேசியப் பொருளாதாரத்தின் மையமாக விளங்குகிற துறைமுகங்கள், விமான தளங்கள், பெற்றோலியக் கூட்டுத் தாபனம், அரச வங்கிகள், சிறிலங்கா மின்சார சபை உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நீர், கனிம வளங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்கக் கூடாது. தனியார்மயமாக்கல் தொடர்பாக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும்.

10. அனைவருக்குமான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குகிற முயற்சிகள் மற்றும் 1981-இல் கல்வி தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றை கைவிட வேண்டும். கல்வி மேம்பாடு குறித்து புத்திஜீவிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரது கருத்துகளை கவனத்திலெடுத்துக் கொள்ள வேண்டும்.

11. தேசிய உற்பத்திக்குப் பங்காற்றுகிற அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் உள்ளிட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜே.வி.பி. முன் வைக்கிற செயற்திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

12. சிறிலங்கா அரசின் வெளியுவுக் கொள்கையானது அணிசேரா கொள்கையாக இருக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை குறிப்பாக தெற்காசிய பிராந்தியம் மற்றும் ஆசிய நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிற வகையில் இருக்க வேண்டும்.

ஜே.வி.பி.யின் இந்த நிபந்தனைகள் குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து எதுவித கருத்துகளும் வெளியிடப்படவில்லை.

சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் கடந்த ஐந்து நாள் சீனப் பயணத்திற்குள்ளாகவே மகிந்த ராஜபக்சவும், ஜே.வி.பியினரும் பல சுற்று இரகசியப் பேச்சுக்களை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்பாட்டில் மேற்கொண்டனர்.

இந்த இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பான படங்களை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஊடகங்கள் அம்பலப்படுத்திய நிலையிலேயே ஜே.வி.பி. இன்று தனது நிபந்தனைகளுடனான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான தலைமை நீதிமன்றத் தீர்ப்பில் தமக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட்டது குறித்து மிகக் கடும் கோபத்தில் இருக்கும் சந்திரிகா குமாரதுங்க, ஜே.வி.பியுடனான இந்த ரகசியப் பேச்சுகள் குறித்தும் அதிருப்தியில் இருப்பதாகவும் சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:புதினம்

இளையவன்
05-09-2005, 01:02 PM
ஜே.வி.பி போன்ற இனவாதக் கட்சியுடன் கூட்டுச் சேருகிறாரே ராஜபக்ச என ஒருவரும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் ஜேவிபியை விட இனவாதத்தில் மகிந்த சற்றும் சளைத்தவர் அல்ல ஆனாலும் அவர் தற்போது இனவாதத்தை அடக்கி வாசிக்கிறார். ஜேவிபியின் ஆதரவுடன் மகிந்த ஆட்சிக்கட்டிலைப் பிடிப்பாராயின் இலங்கையில் மீண்டும் ஒரு முறை இரத்த ஆறு ஓடுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்காக ரணில் நல்லவர் என்று நான் இங்கு குறிப்பிடவில்லை ஆனால் மகிந்தவுடன் ஒப்பிடும்போது ரணில் ஒரு மென்போக்காளர் என்றே கருதவேண்டும்.

பரஞ்சோதி
05-09-2005, 01:07 PM
ஆக மொத்த அவங்க வாழ்க்கை அவங்க கையில் தான் இருக்குது.

ஆமாம், சிங்களவர்களைத் தான் சொல்கிறேன், அவர்கள் எடுக்கும் முடிவில் தான் இலங்கையில் எதிர்காலமே இருக்குது. ஜெ.வி.பியை வாழ வைத்தால்,அவர்கள் வாழ்வு இழப்பார்கள் என்பது உண்மை.

இளையவன்
05-09-2005, 01:13 PM
http://www.thinakural.com/New%20web%20site/web/2005/September/05/moorthy.gif

இளையவன்
06-09-2005, 05:53 AM
ஜே.வி.பி. முன்வைத்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம் சுதந்திரக் கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளரான மகிந்த ராஜபக்ச போர் முரசறைந்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர் ஜோசப் பரராஜசிங்கம் சாடியுள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

ஜே.வி.பி.யுடனான மகிந்த ராஜபக்சவின் ஒப்பந்தமானது இலங்கையின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் எதுவித அக்கறையும் எவருக்கும் இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு, பொதுக்கட்டமைப்பு கைவிடுதல் உள்ளிட்ட ஜே.வி.பி. நிபந்தனைகளை ஏற்றிருப்பதன் மூலம் இலங்கைத் தீவில் மகிந்த ராஜபக்ச போர் முரசறை எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தவில்லை. ஜே.வி.பி. ஒரு சிங்கள வெறியர் கட்சி. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு எந்தவித தீர்வும் ஏற்படாத வகையில் முடக்குகிற செயற்பாடுகளை இதுவரையில் மேற்கொண்டிருந்தது என்றார் ஜோசப் பரராஜசிங்கம்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது நிலைப்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஒருபொது நிலையை எமது கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சந்திக்குப் பிறகு எமது நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதர சிறுபான்மை அமைப்புகளுடன் நாளை புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை நடத்த உள்ளதாக கூட்டமைப்பின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இருப்பினும் இரு தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு கட்சி வேட்பாளர்களும் நாள்தோறும் வௌ;வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருவதால் கூட்டமைப்பினர் விசனத்தில் உள்ளதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

நன்றி:புதினம்

gragavan
06-09-2005, 08:06 AM
ஆண்டவா............எல்லாம் நன்மைக்கே என்று இருக்க முடியவில்லை. எம் சகோதரர் வாழ்வில் என்று அமைதி மலரும்!

இளையவன்
06-09-2005, 08:44 AM
எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சி முடிவு செய்துள்ளது.


இது தொடர்பிலான உடன்படிக்கையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அரசுத் தலைவர் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரரும் அலரி மாளிகையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஆழிப்பேரலை நிவாரண சபையை இரத்துச் செய்தல், இறுதித் தீர்வு குறித்தே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்பன உட்பட ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த 11 நிபந்தனைகளையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டே இன்று காலை இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.

இதேவேளை ஜே.வி.பி. முன்வைத்த 12 நிபந்தனைகளையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டதையடுத்து அக்கட்சியும் பிரதமர் ராஜபக்சவை ஆதரிக்கவுள்ளதாக நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

கடும் போக்குடைய இரு பெரும்பான்மையினக் கட்சிகளும் அரசுத் தலைவர் தேர்தலின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளையவன்
19-09-2005, 10:02 AM
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் திணைக்களம் இன்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுக் கோரப்படும்.

அதன்பின்னர் எதிர்ப்புகள் தெரிவிப்பதாயின் அதற்கென அரை மணி நேரம் வழங்கப்படும்.

ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாயின் 50 ஆயிரம் ரூபாவையும் ஏனைய கட்சிகள் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்று தேர்தல் திணைக்கம் அறிவித்துள்ளது.

அறிஞர்
23-09-2005, 05:43 AM
அருமையான தகவல்கள் அன்பரே..... கார்டூன் நன்றாக உள்ளது