PDA

View Full Version : நான் படித்த புத்தகங்கள்.



Nanban
28-08-2005, 07:24 PM
இப்பொழுது கொஞ்சம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் - ஆமாம்

புத்தகங்கள் வாங்கி வாங்கி குவித்துக் கொண்டே இருந்தாலும் அவற்றை முழுமையாக வாசித்ததில்லை. எல்லாமே குறிப்பெடுத்துக் கொள்ளும் நோக்கத்திலே தான் புத்தகங்களை வாசிப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. இனி இணையத்தில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்வது எனவும் அதற்குப் பதிலாக நிறைய வாசிப்பது எனவும் முடிவு செய்து கொண்டு இந்தத் தலைப்பில் நான் அவ்வாறு வாசித்த வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி சிறு சிறு குறிப்புகள் மட்டும் எழுதுகிறேன்.

அன்புடன்

பரஞ்சோதி
28-08-2005, 07:36 PM
மிகவும் நல்ல தலைப்பு நண்பன் அவர்களே!

என்னிடம் கூட நிறைய புத்தகங்கள் இருக்கின்றன, ஆனால் படிக்க நேரம் கிடைப்பதில்லை. இரண்டு பக்கங்கள் படிக்கும் முன்பே பல வகையான தொந்தரவுகள்.

நீங்கள் படிக்கும் புத்தகத்தின் பெயர், அதன் சாரம்சம், ஆசிரியர், புத்தகம் கிடைக்குமிடம், விலை போன்ற தகவல்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

pradeepkt
29-08-2005, 04:44 AM
அப்புத்தகங்களைக் குறித்த உங்கள் விமர்சனங்களையும் வரவேற்கிறோம்.

gragavan
29-08-2005, 07:07 AM
மிகவும் நல்ல முயற்சி நண்பன். முன்பு நாம் படித்த புத்தகங்களை விமர்சனம் செய்து கொண்டிருந்தோம். நடுவில் நின்றதை நீங்கள் தொடங்கியிருக்கின்றீர்கள். கண்டிப்பாகத் தாருங்கள். காத்திருக்கின்றோம்.

aren
29-08-2005, 03:10 PM
இது ஒரு நல்ல முயற்சி, அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் மன்றத்திற்கு வருவவதைமட்டும் குறைத்துக்கொள்ளவேண்டாம்.

Nanban
29-08-2005, 08:10 PM
சோளகர் தொட்டி.
ஆசிரியர் ச.பாலமுருகன்
வனம் வெளியீடு, 17 பாவடித் தெரு, பவானி 638 301
தொலை பேசி எண்: 94432 133501.
விலை 100 ரூபாய்.

வீரப்பனைப் பற்றி அனைவரும் அறிவோம். ஆனால் அவனைச் சுற்றி வாழ்ந்த மக்களை அறிந்திருந்தோமா
என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த மக்களின் எளிய வாழ்க்கை முறை, வனத்துடன் இணைந்து வன விலங்குகளுடன் தாங்கள் வாழ்ந்த வெளியை பங்கிட்டுக் கொண்டு இயைந்து வாழ்ந்த பாங்கு, அவர்களின் இசை, நடனம், இவற்றோடு எளிய மருத்துவமாக கஞ்சா புகைத்தல் என்று ஒரு சிற்றோடை போல வாழ்க்கை இனிதாக ஓடிக் கொண்டிருக்கும்
பொழுது அத்தகைய வாழ்க்கை நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வியாபித்து நிற்கையிலே, மலையினூடாக மர்மமனிதர்கள் இரவில் தீவட்டிகளுடன் நடமாடுகின்றனர்.

வனத்தின் வளங்களைத் தொடுவது தெய்வ குற்றம் என்று அறிவுறுத்தி வளர்த்தெடுக்கப்பட்ட அந்த மனிதர்கள் அச்சத்துடன் இரவுகளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். மர்ம மனிதர்கள் நடமாட்டம் அதிகரிக்க அதிகரிக்க காவல்துறையும் வந்து சேருகிறது. அத்துடன் அரசின் அதிகாரிகள் என்று நகர நாகரீகம் வந்து சேர, லஞ்சம், அதிகாரம் என்று அனைத்துக் கூறுகளும், புரியாத அந்த மக்களின் வாழ்க்கை முறையை நாசம் செய்யத் துவங்குகின்றன.

தங்கள் வயல்களை இழக்கத் தொடங்குகின்றனர். காவல்துறையைக் கண்டு அஞ்சி காட்டிற்குள்ளே ஓடி ஒளிகின்றன. என்றாலும் காவல்துறை விரட்டுகிறது. ஒன்று கர்நாடகம் அல்லது தமிழ்நாடு. நமக்கெல்லாம் தான் மாநில எல்லைகள் அத்துபடி. ஆனால் அந்த மலைவாழ் மக்களுக்கு எந்த எல்கைகளும் இல்லை. உறவுகள் அந்த எல்லை என்ற மாயக்கோட்டின் இரு பக்கங்களிலும் விரிந்திருக்கின்றன. ஆனால் காட்டிற்குள்ளே செல்லவே அச்சப்படுகின்றனர்.

மற்றொருபுறம் அவர்களுக்கு வனக்குற்றவாளிகளிடமிருந்து சிறு சிறு வேலைகள் - பல மடங்கு சம்பளத்துடன். சிலர் அதனால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவவும் ஆரம்பிக்கின்றனர். ஒரு கிராமத்தில் ஒருவர் அல்லது இருவரென.

காவல்துறை தன் பங்குக்கு எந்த குற்றச்சாட்டுமின்றி கிராமம் கிராமமாக கைது செய்து இழுத்து வருகின்றனர். ஆண்கள் சிக்கவில்லையென்றால் அவர்களுக்குப் பகரமாக - பிணையாக பெண்கள். அத்துடன் அவர்களது பெண்மையும். தெய்வமாக கருதப்பட்ட வனத்தின் புதர்களிலே கிடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஒருவரால் அல்ல பலரால். அது போதாதென்று மற்ற சித்திரவதைகள். பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு துன்புறுத்தல், வலியிலும் வேதனையிலும் துடிக்கும் அவர்களை மேலும்
அவமானப்படுத்த பலரின் முன்னிலையில் நிர்வாணமாக்கி கட்டிப் போடுதல் என்று பலவகையிலும் வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. யாராவது கொடுமைகள் தாங்காது பலவீனமாகி சாகும் தருவாயில் இருந்தால், உடன் அவர்களுக்கு வீரப்பன் ஆட்களின் உடைகள் உடுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு காட்டில் வீசப்பட்டுவிடுவர் - மோதலில் குண்டடிபட்டு இறந்ததாக.

கதையின் நாயகனாக பிரதானப்படுத்தப்படும் சிவண்ணா என்ற சோளகன் கதை தான் அது. சோளகர்களின் பழக்கவழக்கம் சற்று விநோதமானது. பெண் தன் கணவனல்லாத பிறனுடன் போக வேண்டுமென்றால், பிரிந்து கொள்கின்றனர் - பெரிய வருத்தமின்றி. கணவனை இழந்த பெண் அவனது தம்பியை உரிமை கோரிப் பெறுகிறாள். இன்னும் இன்னும் இது போன்ற பல பழக்க வழக்கங்களும் இயல்பாய் வெளிப்படுகிறது. பிள்ளைகளை அடிப்பது என்ற வழக்கமே இல்லாத அவர்கள், பிறகு தங்கள் குழந்தைகள் காவல் துறையால் அடிக்கப் படும் பொழுது துடித்துப் போய் விடுகின்றனர்.

சந்தர்ப்ப வசத்தால் சிவண்ணாவும் - வனத்துறையில் பணி செய்தாலும் - காவல்துறையால் கைது செய்யப்படுகிறான் - எந்தக் காரணமுமின்றி. காவல்துறையின் கொடூரம் தாங்காது காட்டிற்குள்ளே தப்பி ஓடும் பொழுது தற்காலிகமாக வீரப்பனைச் சந்திக்க சில நாட்கள் அவனுடனே வாழ நேரிடுகிறது. காவல்துறையோ அவனது மனைவியையும், மகளையும் கடத்திக் கொண்டு போய் துன்புறுத்துகின்றனர். பாலியியல் பலாத்காரத்திற்குள்ளாகின்றனர்.

சிவண்ணா இறுதியாக நீதிமன்றத்தில் சரண்டைவதாகக் கதையை முடித்துக் கொள்கிறார் ஆசிரியர். எல்லாம் நீதிமன்றம் தான் வழி. ஆனால் நீதிமன்றத்திற்கு அனைத்தும் வருமா?

பத்திரிக்கைகள் கட்டிய கதைகளை மட்டும் தான் கேட்டோம். ஆனால் அந்த மக்களுடன் பலவருடங்கள் பழகி, அவர்களுக்காக உழைத்து வரும் ஒரு வழக்கறிஞரால் எழுதப்பட்டுள்ளது. எளிய அலங்காரமில்லாத மொழி நடை. இலக்கிய இசங்களில் வழுக்கி விழுந்துவிடாமல் ஆனால் அதே சமயம் சுவை குன்றி விடாமல் விறுவிறுப்பாக எழுதியதற்காக பாராட்டலாம். மொழி நடை, கதை சொல்லும் உத்தி என்பனவற்றையெல்லாம் மீறி வாசிக்க வைக்கிறது என்றால் அதற்குக் காரணம் கதையின் கரு தான்.

ஒரே நாள் இரவு - 240 பக்கங்கள்.

வாசித்துப் பாருங்கள் - ஆரம்ப பக்கங்களில் அந்த இடங்களிலெல்லாம் போய் வாழ்ந்து பார்க்கலாம் என்று தோன்ற வைத்து பின்னர் நாட்செல்லச்செல்ல இப்படிக் கூட மனித மிருகங்கள் சட்டத்தின் துணை கொண்டு நடந்து கொள்ளுமா என்று அஞ்சச் செய்யும்.

கதையை வாசித்து முடித்த பொழுது தோன்றியது:

வீரப்பனைக் கொன்றாகிவிட்டது. ஆனால் வீரப்பன் அளவிற்குக் கொடுமை செய்த அந்த சிறப்புப் படை
குற்றவாளிகளுக்கு தண்டனையே கிடையாதா?

நீதி தெருவில் தான் வழங்கப் படும் என்றால் - வீரப்பன் செத்துப் போகவில்லை என்றே தோன்றுகிறது. ஆமாம்
அந்த காவல்துறை குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை என்றால் இன்னும் சிலபல வீரப்பன்கள் தோன்றக் கூடும்.

பரஞ்சோதி
30-08-2005, 04:53 AM
நன்றி நண்பன் அவர்களே!

எனக்கும் நான் அறியாத மக்களைப் பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறையைப் பற்றியும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அதிகம்.

நீங்க சொன்ன கதையும், அதன் கருவும் அனைவரையும் படிக்கத் தூண்டும்.

கடைசியில் நீங்க சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உண்மை.

pradeepkt
30-08-2005, 05:38 AM
மிக்க நன்றி நண்பன் அவர்களே.
இந்தக் கதையைப் பற்றி ஒரு சில மாதங்களுக்கு முன் இந்தியா டுடேவிலும் விமர்சனம் வந்திருந்தது.
மனிதத் தன்மை உள்ள மிருகங்களைக் கண்டு வாழ்ந்த மக்களுக்கு மிருகத் தன்மை வாய்ந்த மனிதர்களைக் கண்டு ஏற்பட்ட அச்சமே இந்தப் புதினத்தின் அடிநாதம்.
நானும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன்.

kavitha
31-08-2005, 07:01 AM
நல்ல தொகுப்பு.
சோளகர் தொட்டி, ஒரே நாள் இரவு இரண்டு நூல்களைப்பற்றித் தெரிந்துகொண்டோம். தொடர்ந்து நீங்கள் வாசித்ததை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

பிரியன்
31-08-2005, 07:08 AM
நல்ல தொகுப்பு.
சோளகர் தொட்டி, ஒரே நாள் இரவு இரண்டு நூல்களைப்பற்றித் தெரிந்துகொண்டோம். தொடர்ந்து நீங்கள் வாசித்ததை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

தவறாக புரிந்து கொண்டீர்கள் கவிதா. அந்த புத்தகத்தை ஒரே நாள் இரவில் வாசித்ததாக குறிப்பிட்டதை நீங்கள் இன்னொரு புத்தகம் என்று நினைத்துக் கொண்டீர்கள்

kavitha
31-08-2005, 11:04 AM
அப்படியா? சரி சரி

பாரதி
31-08-2005, 01:53 PM
நல்ல முயற்சி நண்பர் நண்பனே. புத்தகங்களை தேர்வு செய்வதற்கும் நல்ல புத்தகங்களை அறிந்து கொள்வதற்கும் மிகவும் உதவியாக இப்பதிவு அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. சோளகர் தொட்டி குறித்து முதலில் வந்த விமர்சனங்கள் உண்மைதான் என்பதை உங்கள் பார்வையும் உறுதி செய்திருக்கிறது. நன்றி.

Nanban
31-08-2005, 08:53 PM
நன்றி பாரதி,கவிதா,பிரியன்,பிரதீப்.பரஞ்சோதி.

ஒரே நாள் இரவில் 240 பக்கங்களை வாசித்த அனுபவத்தைத் தான் சொல்லுகிறேன். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது ஒரு புத்தகத்தைத் திறந்து, முழுவதும் வாசித்து விட்டு மூடுவது என்பது. அந்த மாதிரி வாசித்த நூல்களில் சில பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், ஜலதீபம் போன்ற சரித்திர நாவல்கள் தான். சமூக பின்னணியில் எழுதப்பட்ட நாவல்கள் அத்தனை வசீகரிப்பதில்லை. பெரும்பாலும் முதல் பத்து பக்கங்களில் ஈர்க்கவில்லை என்றால் தூக்கி தூர எறிந்து விடுவேன். பல கதைகளை விட என்னுடைய கற்பனைகள் சிறப்பானதாக இருக்கும் என்பது போல இருக்கும். இப்படி ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது மனதிற்குள்ளே அதற்கு சமமாக வேறு ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கும்.

கதையில் இதையெல்லாம் மீறி ஒரு ஈடுபாடு வந்தால் தான் வாசிக்க முடியும். என்னுடைய தமிழ் ஆசிரியர் கூறுவர் - கதை வாசிப்பதில் ஈடுபாடு வரவேண்டும் என்றால், கதையினுள் வரும் ஒரு பாத்திரத்துள் நம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அதன் வாயிலாக கதையை நுகர்ந்தால் தான் முழுமையான வாசிப்பனுபவத்தைத் தரும் உதாரணத்திற்கு பொன்னியின் செல்வன் வாசிக்கும் பொழுதெல்லாம் நானே வந்தியந்தேவன்!!!

ஆனால் இன்று அந்த மயக்கங்களில் இருந்து வெளிவந்த பின்பு, கதை வாசிக்கும் பழக்கமும் பெரும் பாலும் குறைந்தே போய்விட்டது. இப்பொழுது மமீண்டும் வாசிக்கத் துவங்கியிருக்கிறேன் - ஆனால், இந்த முறை தேர்ந்தெடுப்பதெல்லாம் - ஓரளவிற்கு அறிமுகமான இலக்கியவாதிகளின் கதைகள் தான்.

என்றாலும் சோளகர் தொட்டி கதை நாயக போற்றுதல்களைத் தவிர்த்த மக்களின் வாழ்க்கை முறையை உண்மையாக சொன்ன கதையாக இருக்கின்றது.

அடுத்தது

தவிப்பு

ஞாநி

பரஞ்சோதி
01-09-2005, 07:50 PM
ஆகா அருமையான விளக்கம்.

நண்பன் அவர்களே!

உண்மையாக சொன்னீங்க, நான் கூட எந்த நாவல் படித்தாலும் அதில் முக்கிய கதாபாத்திரமாக என்னை நினைத்துக் கொள்வேன், அந்த வர்ணனைகளில் என்னை கற்பனை செய்துக் கொள்வேன்.

குறிப்பாக சரித்திரக்கதைகள் என்றால் வந்தியதேவன், இளமாறன், பரஞ்சோதி, கருணாகரன், கரிகாலன் போன்ற கதாப்பாத்திரங்களில் என்னை இணைத்துக் கொண்டு, கதை படித்து முடித்தப் பின்பும், தனிமையில் கண்ணை மூடிக் கொண்டும், போர்களக்காட்சிகள், சாதனைக்காட்சிகளில், படித்த கதையை விட அதிகப்படியாக சம்பவங்களை இணைத்து கற்பனை செய்வேன்.

மேலும் எனக்கு பிடித்த கதாபாத்திரங்களை, எனக்கு பிடித்த நடிகர்களையும் கற்பனை செய்து படிப்பேன். சிவாஜி கணேசனும், கமலும், ரஜினியும் அடிக்கடி கற்பனையில் என்னுடன் வருவார்கள்.

மேலும் சமுகக்கதைகள் மிகவும் பிடிக்கும், அதுவும் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழும் சூழ்நிலை, சந்திக்கும் சம்பவங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் படிக்க பிடிக்கும்.

தொலைக்காட்சியில் கூட பிற இனமக்களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சி பார்த்தால், அது முடியும் வரை வேறு எங்கேயும் செல்ல மாட்டேன்.

குடும்ப கதைகள் சுத்தமாக பிடிக்கவெ பிடிக்காது.

உங்கள் பதிவால் நிறைய விசயங்கள் தெரிந்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

kavitha
02-09-2005, 09:47 AM
குடும்ப கதைகள் சுத்தமாக பிடிக்கவெ பிடிக்காது.
ஆச்சரியமாக உள்ளது.

நீங்கள் படித்த நூல்களைப்பற்றியும் தரலாமே!
மற்றவர்களும் இங்கே தொடரலாமா நண்பன்?

Nanban
02-09-2005, 04:24 PM
தாராளமாகத் தொடரலாம் - ஒரு நிபந்தனையுடன்.

ஒரு முறை விவாதிக்கப்பட்ட நூல்களையே மீண்டும் மீண்டும் விமர்சிக்க வேண்டாம். புத்தகங்கள் உங்கள் நூலகத்தைச் சேர்ந்த்தாக இருக்கட்டும். அல்லது விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் மற்றொரு நண்பருடன் பகிர்ந்து கொள்ளப்படும் புத்தகங்களாக இருக்கலாம். எப்பொழுதுமே புத்தகத்தை வாங்கி வாசிப்பதையே நான் விரும்புவேன். இரவல் வாங்கி வாசிப்பதில் அத்தனை விருப்பமில்லாதவன்.

இது புத்தகம் எழுதுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்த என்னாலான எளிய உதவி.

இந்தக் கொள்கைகளைப் பயன்படுத்துவோர் இங்கு தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றி தாராளாமாக எழுதுங்கள். அத்துடன் குறிப்பிட்டு சொல்லி விடுங்கள் - புத்தகம் கொடுத்து உதவிய நண்பரின் பெயரையும். இது புத்தகத்தை விலை கொடுத்து வாசிக்கும் பழக்கமுள்ள அன்பரை உற்சாகப்படுத்தும்.

சரிதானே!!!

kavitha
03-09-2005, 04:49 AM
தாராளமாகத் தொடரலாம் - ஒரு நிபந்தனையுடன்.

ஒரு முறை விவாதிக்கப்பட்ட நூல்களையே மீண்டும் மீண்டும் விமர்சிக்க வேண்டாம். புத்தகங்கள் உங்கள் நூலகத்தைச் சேர்ந்த்தாக இருக்கட்டும். அல்லது விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் மற்றொரு நண்பருடன் பகிர்ந்து கொள்ளப்படும் புத்தகங்களாக இருக்கலாம். எப்பொழுதுமே புத்தகத்தை வாங்கி வாசிப்பதையே நான் விரும்புவேன். இரவல் வாங்கி வாசிப்பதில் அத்தனை விருப்பமில்லாதவன்.

இது புத்தகம் எழுதுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்த என்னாலான எளிய உதவி.

இந்தக் கொள்கைகளைப் பயன்படுத்துவோர் இங்கு தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றி தாராளாமாக எழுதுங்கள். அத்துடன் குறிப்பிட்டு சொல்லி விடுங்கள் - புத்தகம் கொடுத்து உதவிய நண்பரின் பெயரையும். இது புத்தகத்தை விலை கொடுத்து வாசிக்கும் பழக்கமுள்ள அன்பரை உற்சாகப்படுத்தும்.

சரிதானே!!!
__________________
-----------------------------------------------

அன்புடன்

நண்பன்



நிபந்தனை ஆக்கப்பூர்வமாகவே உள்ளது. என்னைப்போல் வெளியே அதிகமாக செல்லமுடியாமல் நூலகங்களில் வாங்கிப்படிப்பவர்கள் என்ன செய்வது?

எங்களது திருமண நாள் அன்று அவர் எனக்கு ஒரு புடவை எடுத்துத்தருவதாக சொல்லியிருந்தார். அந்த பணத்திற்கு நெட் தேர்வுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கித்தரும்படி கேட்டுக்கொண்டேன். இவ்வாறு, எனது கல்விக்காக வாங்கும் புத்தகங்களுக்குச் செலவிடுவதற்கே வேறு ஏதாவது ஒன்றை ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. நானாக வாங்கிய புத்தகங்கள் மிகக்குறைவு. :(

சென்ற வாரம் நூலகத்தில் எடுத்த "கவிதை மொழி" என்ற புத்தகத்திலிருந்து சங்க கால பெண்பால் புலவர்கள் பற்றியச் செய்திகள் கிடைத்தன. அதைக்கொடுக்கலாம் என்றிருந்தேன்.

kavitha
03-09-2005, 04:54 AM
வாங்கிப் படிக்கும் மற்றொரு நண்பருடன் பகிர்ந்து கொள்ளப்படும் புத்தகங்களாக இருக்கலாம்
அப்படியானால் நான் இந்த ஆட்டத்திற்கு வரமுடியாதா?


எப்பொழுதுமே புத்தகத்தை வாங்கி வாசிப்பதையே நான் விரும்புவேன். இரவல் வாங்கி வாசிப்பதில் அத்தனை விருப்பமில்லாதவன்.


எனக்கும் கூட சொந்த நூலகம் (பாட நூல் தவிர) அமைக்கும் ஆசை உண்டு. அலமாரியில் பாட நூல்கள் தான் நிறைந்துள்ளன.
ஆசைப்படுவதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன!!

பரஞ்சோதி
03-09-2005, 05:26 AM
நான் புத்தகங்களை ஓசியில் வாங்கி படிப்பதை விட, வாங்கி படித்த புத்தகங்களை நண்பர்களுக்கு கொடுத்து படிக்கச் சொல்வேன். என்னிடம் படித்து சும்மா கிடப்பதை விட மற்றவர்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று நினைப்பது, அதன் காரணமாக பல புத்தகங்களை இழந்திருக்கிறேன்.

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் நடந்த சதி வழக்குகள் என்ற புத்தகம் இருக்கின்றது, அதனைப் பற்றி எழுதுகிறேன்.

gragavan
05-09-2005, 06:37 AM
நண்பனைப் போலத்தான் நானும். முடிந்தவரை புத்தகங்களை வாங்கியே படிப்பது. இரவல் என்பது கிடைக்காத போதோ அல்லது விலை மிகவும் அதிகமாக இருக்கும் பொழுதோ தான். சொந்தப் புத்தகம் படிப்பதின் சுகமே தனிதான். ஆனால் சில புத்தகங்கள் கிடைப்பதில்லை. அவற்றை ஈ-காப்பி வடிவில் கிடைத்தால் பயன்படுத்தலாம்.

Nanban
09-09-2005, 07:39 AM
விதிமுறைகளை சற்றே தளர்த்திக் கொள்ளலாம். நூலகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைந்த பட்சம் அந்த நூலகங்கள் முறையான நூலகங்களாக இருக்கட்டும். வெறும் சுற்று நூலகமாக இருந்துவிடாமல் இருக்கட்டும். இரண்டாவது புத்தகங்கள் தரமானதாக அனைவரும் படித்து பயன் பெறும் வகையில் இருக்கட்டும்.

நூலகங்களில் எடுத்துப் படிப்பதை ஆதரிக்க வேண்டும் தான். ஆனால் அதே சமயம் கொஞ்சமாவது புத்தகங்கள் வாங்க வேண்டும் - ஒருவரின் சக்திக்கு உட்பட்டு. ஒவ்வொரு முறையும் புத்தகக் கடைக்குள் நுழைந்தால் கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நின்று தேவையான பலவகை புத்தகங்களையும் புரட்டிப் பார்த்து விட்டு பின்னர் இறுதியாக ஒரு புத்தகம் வாங்கி விட்டு வெளியேறி விடுவேன். இப்படியே மாதத்திற்கு ஆயிரத்தைத் தாண்டி விடும். நிறைய தடவை கற்பனையாக நினைத்துக் கொள்வேன் - கடைக்காரரிடம் பேரம் பேசுவதாக - புத்தகக் கடையின் மொத்த விலை என்ன? ஆனால் அதே போல் ஒரு காலத்தில் புத்தகம் என்ன ஒரு பத்திரிக்கைக் கூட வாங்க இயலாத காலங்களைத் தாண்டியும் வந்திருக்கிறேன். அப்பொழுது ஒவ்வொரு சமயமும் மனதிற்குள் ஒரு பிரார்த்தனையாக சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன் - நன்றாக சம்பாதிக்கும் பொழுது எத்தனை முடியுமோ அத்தனை புத்தகங்களை வாங்குவது என்று.

Nanban
09-09-2005, 07:00 PM
தவிப்பு

ஞாநி

அறிவாலயம் பதிப்பகம், 107/7,கௌடியா மடம் சாலை, சென்னை 600 014

விலை ரூ. 60.


ம.பொ.சி.யின் நினைவாக என்ற சமர்ப்பணத்துடன் புத்தகம் தனது பக்கங்களை விரிக்கிறது.

நீங்கள் அறிந்தவர் தானே ம.பொ.சி.? மாறுபட்ட கருத்தியல்களின் மோதல்களில் மடிந்து போன பரிதாபத்திற்குரிய தலைவர். ஒன்றை எதிர்ப்பதற்காக மற்றொன்றை ஆதரித்தவர். அதனாலேயே தனது கனவுகள் எவை கருத்துகள் எவை என்ற கருத்தியல் மோதல்களுக்குள் சிக்கி, சமரசம் செய்து கொள்ளத் தொடங்கி சிறிது சிறிதாக தன்னை இழந்தவர்.

கதையும் அவரைப் போலவே ஆக்ரோஷமான கருத்துகளுடன் மோதுகிறது. தமிழ் மொழியின், நிலத்தின் மீட்சியைக் கனவாகக் கொண்டு கதையை எழுதும் ஆசிரியரின் பார்வை ஏற்கனவே அறிமுகமானது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன்பாகவே இது பற்றிய விரிவானதொரு விவாதம் நம் தளத்தில் இருக்கிறது. அதில் பங்கு பெற்று நான் எழுதியவற்றைப் படித்தாலே போதும் இந்த புத்தகம் முன் வைக்கும் கருத்தியல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் கதை எழுதுவதற்கு கருத்தியல்கள் மட்டுமே போதுமானவை அல்ல. விறுவிறுபான பின்னணியுடன் கதை நகர்கிறது. கொள்கை பிடிப்புள்ள கதாபாத்திரங்கள் உற்சாகமூட்டுகின்றனர். சிறிது சிறிதாகப் புத்தகங்களின் பக்கங்கள் வளரும் பொழுதே அந்த இயக்கமும் வளர்ந்து விடுகிறது. அந்த இயக்கத்தை அரசியல்வாதிகள் எவ்வாறு தங்கள் சுயநலத்திற்காக பேரம் பேசுகின்றனர் என்பது தான் கதையின் சுவராசியமான பகுதி. மத்தியில் ஆளும் வர்க்கம் மாநிலத்தில் ஆளும் வர்க்கத்தை மட்டம் தட்ட முயலுவதும், மாநில அரசுகள் போர்க்குழுக்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் - ஒருவர் மீது மற்றவர் சேறு வாரி இறைக்கும் அழகை கவனப்படுத்துகிறது. செய்திகள் எவ்வாறு திரிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் - ஓரளவிற்கு அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரும் வாசகர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாமேயன்றி, புதிதாக கதை வாசிக்கும் நபர்களுக்கு மிக்க விறுவிறுப்பான அம்சமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

இவ்வாறு போகும் கதை இறுதியை நெருங்கும் பொழுது, நாயகன் தேர்தல் களத்தில் குதித்து வெற்றி பெற்று இந்த மோசமான அரசியல்வாதிகளை எதிர்கொள்கிறான் என்று கதையை முடிக்கும் பொழுது, சப்பென்று போய்விடுகிறது. கதையின் நோக்கமே சிதைந்து போகிறது. ஆனால் வேறு எப்படியும் கதையின் முடிவை எழுதவும் முடியாது - இந்தியாவிற்குள் இருந்து கொண்டு என்பதும் உண்மை. ஆசிரியர் கதையின் தொடக்கத்தில் முன்னுரையில் குறிப்பிட்டு விடுகிறார் - பல்வேறு இனங்களின் போராட்ட வரலாறுகளை மனதில் கொண்டு தான் கதையை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். என்றாலும் அவர் மிக அதிகமாக தன் கவனத்தில் எடுத்துக் கொண்டது பெரும்பாலும் அஸ்ஸாம் மாணவ போராட்டத்தைத் தான் என்றே எண்ண வைக்கிறது. மிகப் பெரும் உத்வேகத்துடன் போராடிய மாணவர்கள் இறுதியாக அறவழி என்று தேர்தல் களத்தில் குதித்து வெற்றி பெற்று பின்னர் அரசியல் அரங்கில் எவ்வாறு தோற்றுப் போனார்கள் என்று எல்லோரும் அறிந்தவையே.

ஒருவேளை அதனாலயே - எந்தப் போராட்டத்திற்கும் இந்தக் கதி வந்து விடக்கூடாது - மறைமுகமாக அந்தப்பின்னணியைக் கொண்டு எழுதினாரோ என்று தெரியவில்லை. ஆனால் சில தர்க்கங்கள் - எதற்காக தமிழ்ப் போராளிகள் இந்திய இறையாண்மையிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறார்கள் என்ற தர்க்கங்கள் - நியாயமானவை. அரசு அதை இப்பொழுது கவனிக்கத் தவறினால் பின்னர் அதற்காகப் பெரிய விலை கொடுக்க
வேண்டி வரும்.

எல்லாத் தமிழ் உணர்வாளர்களும் படிக்க வேண்டிய புத்தகம். கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுமா - படாதா என்பது விவாதத்துக்குரியது.

Nanban
11-09-2005, 07:13 PM
சென்ற வாரம் நூலகத்தில் எடுத்த "கவிதை மொழி" என்ற புத்தகத்திலிருந்து சங்க கால பெண்பால் புலவர்கள் பற்றியச் செய்திகள் கிடைத்தன. அதைக்கொடுக்கலாம் என்றிருந்தேன்.

ஐய்யோ.... இந்த மாதிரியான புத்தகங்களைப் பற்றிய குறிப்புகள் எழுதுவதற்கெல்லாம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உடனே அது பற்றி எழுதுங்கள்.

எந்த குறிக்கோளுமற்ற நாவல்களையோ அல்லது வியாபர நோக்கம் மட்டுமே இலக்கு என கருதி எழுதப்படும் பல புத்தகங்கள் தான் இன்று நூலகங்களில் இருந்து எடுத்து வாசிக்கப் படுகின்றன. இத்தகைய புத்தகங்களை யாரும் காசு கொடுத்து வாங்கப் போவதில்லை. அதனால் தான் காசு கொடுத்து வாங்கிய தரமான புத்தகங்களைப் பற்றி எழுதுங்கள் என்று வேண்டுகோள் வைத்தேன்.

ஆனால் நூலகங்களிலிருந்து தரமான புத்தகங்களை எடுத்து வாசிக்கும் உங்களுக்கு இதிலிருந்து விடுதலை. எல்லோருக்குமே - பெரும்பாலும் கடைகளில் கிடைக்காத இத்தகைய நல்ல புத்தகங்களை வாசித்தால் கண்டிப்பாக அது பற்றி எழுதுங்கள்.

நன்றி

Nanban
13-09-2005, 06:58 PM
இந்த வரிசையில் மற்றவர்களும் எழுதலாம் என்று அனுமதி கொடுத்த பின்னரும் யாரும் எழுதவில்லையே - ஏன்?

சரி அடுத்த புத்தகம் - ஆங்கிலம்.

எழுதலாமா என்று சொல்லவும்.

சரித்திர நிகழ்வுகளைப் பின்புலத்தில் வைத்து இந்த நவீன காலத்தின் வேகத்தோடு செல்லும் ஒரு புத்தகம்.

சரி என்றால் எழுதுகிறேன். இல்லையென்றால் காத்திருக்க வேண்டும் - அடுத்து ஒரு தமிழ் புத்தகம் கையில் எடுத்து வாசித்து முடிக்கும் வரையில்.

சரி. மேலே சொன்ன அந்த ஆங்கிலப் புத்தகம் எது என்று கண்டு பிடியுங்களேன் பார்க்கலாம்....

பரஞ்சோதி
13-09-2005, 07:56 PM
நண்பன் ஆங்கில புத்தகம் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம்.

ஆங்கிலப் புத்தகம் பக்கம் தலைவைத்து படுக்காத என்னைப் போன்றோருக்கு உங்க பதிவு கண்டிப்பாக உதவும்.

புத்தகத்தை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.

Nanban
14-09-2005, 05:41 PM
அது சரி.

அந்தப் புத்தகம் என்ன என்று கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேனே. பார்க்கவில்லையா?

பரஞ்சோதி
14-09-2005, 06:00 PM
டான் பிரவுனின் டாவின்ஸி கோட் என்ற புத்தகமா ?

Nanban
14-09-2005, 06:19 PM
டான் பிரவுனின் டாவின்ஸி கோட் என்ற புத்தகமா ?

ஆமாம்.

ஆங்கிலத்தில் படிக்கக்கூடிய சில புத்தகங்களில் அதுவும் ஒன்று.

கிறிஸ்துவின் வாழ்க்கையைக் குறித்து பல கேள்விகள் உள்ளன. மற்ற அனைவரும் அவருடைய வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் மர்மத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் வடிவில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருந்த பொழுது - இவர் மட்டும் அந்த ஆராய்ச்சிப் புத்தகங்களை அடிப்படையாக வைத்து விறுவிறுவிறுப்ப்ப்ப்ப்பான கதையை எழுதினார். பல மில்லியன் விற்றுத் தீர்ந்ததும் அவர் கதை எழுத அடிப்படையான ஆதார நூல்களும் விற்பனையில் சூடுபிடித்தன. அவர் குறிப்பிட்ட நூல்கள் இரண்டை நானே வாங்கி இருக்கிறேன். முதன்முதலில் கிறிஸ்துவைப் பற்றிய ஆர்வம் வந்தது - குரானில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வாக்கியம் - அவர்- யேசு - மறிக்கவுமில்லை - உயிர்த்தெழவுமில்லை. அப்படியானால் உண்மை தான் என்ன? என்ற ஆவல் எழுந்த பொழுது தான் - Is Jesus lived in India என்ற புத்தகம் கிடைத்தது, தொடர்ந்து - டாவின்ஸி கோட். பின்னர் டாவின்ஸி கோட்-ல் இருந்து The Templar Revelation பிறகு Holy Blood Holy Grail . நேற்று சும்மாவாச்சும் புத்தகக் கடையில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது - மேலும் இரண்டு புத்தகங்கள் - கிறிஸ்துவின் மர்மத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள் வந்திருக்கின்றன. டாவின்ஸி கோட் என்ற புத்தகத்தின் வெற்றி - கிறிஸ்துவைப் பற்றிய மறுபரீசீலனைக்கு வித்திட்டிருக்கிறது. அத்துடன் இப்பொழுது பணத்தை அள்ளிக் குவிக்கும் கருப்பொருளாகவும் கிறிஸ்து மாறியிருக்கிறார்.

தட்டுங்கள் திறக்கப்படும் - கேளுங்கள் தரப்படும் என்று கூறியவரை இப்பொழுது எல்லோரும் தட்டிக் கொண்டிருக்கின்றனர். பணம் புகழ் வேண்டி.

இனி புத்தகத்தைப் பற்றி......

Nanban
16-09-2005, 02:37 PM
The Da Vinci Code

Author : Dan Brown.

புத்தக விற்பனை ஒரு மில்லியனைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தான் மட்டும் பிரபலமானது மட்டுமல்ல. அந்த புத்தகம் எழுதுவதற்கு அவர் வாசித்த புத்தகத்தின் பட்டியலைக் கொடுக்க அந்த புத்தகங்களும் விற்பனையில் சூடு பிடித்தன.

புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்படும் கலைப்படைப்புகளும், பேசப்படும் இயக்கங்களும் பிண்ணனி சரித்திரங்களும் உண்மையே என்று ஆசிரியர் அறிவித்து விடுகிறார்,

கதையின் சாராம்சம் இது தான்:

இரண்டாயிரம் வருடங்களுக்கு சற்று முன்னர் இயேசு கொல்லப்படும் பொழுது அவருடைய சீடர்களில் சிலர் மத்தியத் தரைகடல் வழியாக தப்பிச் செல்கின்றனர் - பிரான்ஸ் தேசத்திற்கு. அப்பொழுது அவர்கள் கூட்டிச் சென்ற மிக முக்கியமான நபர் - மேரி மகதாலீன். சரி. இந்த மகாதலீன் யார்?

அவர் - இயேசுவின் காதலி. (மனைவி என்றும் சொல்கின்றனர்.) இயேசுவின் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் அவரைக் கொலைகாரர்கள் மத்தியிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக பல ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து கொண்டு போய்விடுகின்றனர். பிரான்ஸ் தேசத்தில் இயேசுவின் குழந்தை பிறக்கிறது. இயேசு யூதர்களின் அரச பரம்பரையில் தோன்றியவர். ஆதலால் அவர் வழித்தோன்றல்களும் ''blue blooded royals" என்று கருதப்பட அவர்கள் பத்திரமாக வளர்த்தெடுக்கப்படுகின்றனர். இது முதல் நுற்றாண்டு சரித்திரம்.

கிறிஸ்துவ மதம் வேகமாக வளர்கிறது ஐரோப்பாவில். அப்பொழுது ரோம் நகர மன்னனாக இருக்கும் கான்ஸ்டாண்டைன் என்ற மன்னன் கிறிச்துவ மதத்தின் ஆற்றலை உணர்ந்து கொள்கிறான். அதனால் அந்த மதத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டால் மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு உயரும் என்று நினைக்கிறான். ஆனால் அதுவரையிலும் அவன் இருந்திருந்த இயற்கை வழிபாட்டு முறைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

இயேசு அது வரையிலும் ரத்தமும் சதையுமான ஒரு மானிடனாகத் தான் மதிக்கப்பட்டார் - இறைவனாக அல்ல. அவர் ஒரு மனிதப் பிறவி தான். ஆனால் கான்ஸ்டாண்டைன் இயேசுவை ஒரு கடவுளாக உயர்த்தினான். பழைய பைபிளை அழிக்க உத்தரவிட்டான். புதிய பைபிளை எழுத ஆட்களை நியமித்தான்.

இந்த கலப்படத்தை ஏற்காத கிறிஸ்துவர்களைக் கொலை செய்ய ஏற்பாடுகள் செய்தான். பழைய பைபிளை வைத்திருப்பது குற்றமாக்கப்பட்டது. வைத்திருந்தவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். church என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இயேசுவின் வாழ்க்கையில் பங்கு பெற்ற மேரி மகதாலீனை எவ்வாறு கழற்றி விடுவது என்று விவாதிக்கப்பட்டு இறுதியில் அவர் ஒரு விபச்சாரியாக மாற்றப்பட்டாள். இவ்வாறு கிறிஸ்துவ மதம் தலைகீழ் உருமாற்றப்பட்டு வளர்க்கப்பட்டது. இதற்கு முழுமையாக துணை நின்றது சர்ச்.

இதற்கிடையே மேரி மகாதலீனின் மூலமாகப் பிறந்த அரச ரத்தங்கள் மேலும் தீவிரப்பாதுகாப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேரியையும் அவர் இயேசுவுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் பத்திரப்படுத்தி அவற்றை குறிப்பதற்காக ஒரு குறியீடு உருவாக்கப்பட்டது - அது தான் ஹோலி க்ரெய்ல். (Holy Grail) இந்த ஆவணங்கள் எல்லாம் அவ்வப்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பாதுகாப்பு இயக்கத்தின் பெயர் தான் Priory of Sion.

இதற்கிடையே 13ஆம் நூற்றாண்டில் வாடிகன் சில அரசர்களின் துணையோடு இந்த ஆவணங்களைக் கைப்பற்றி அழிக்க முயல்கிறது. அந்த வேட்டையாடுதலில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிறிஸ்துவர்கள் - வாட்டிகனின் அதிகாரத்தை ஏற்காதவர்கள் - தேவாலயத்தின் படைகளால் கொலை செய்யப்படுகின்றனர்.

ஆபத்தை உணர்ந்த மேரியின் ஆதரவாளர்கள் தலமறைவாக இயங்க ஆரம்பிக்கின்றனர். அனைத்து ஆதாரங்களையும் இன்று வரையிலும் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றனர் - இன்றளவும். ஆம. Priory Of Sion என்பது கற்பனையல்ல. இதன் உறுப்பினர்களின் பெயர்களைக் கேள்விப்பட்டால் அசந்து விடுவீர்கள் - சர் ஐசக் நியூட்டன், லியார்னாடோ டா வின்சி, போன்ற பிரபலங்களெல்லாம் இதில் உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர்.

(இப்பொழுது வாட்டீகன் ஒத்து கொண்டுள்ளது - மேரி மகதாலீன் விபச்சாரி அல்ல - கிறிஸ்துவின் காதலி என்று. இதன் மூலம் வாட்டீகன் மறைமுகமாக ஏற்றுக் கொள்வது இந்து மத தத்துவங்களை. இது பற்றி தேவைப்பட்டால் வேறிடத்தில் பதிவுகள் செய்யலாம்.)

இது தான் சரித்திரப் பின்ணணி.

நாவல் எப்படி எழுதப் பட்டிருக்கிறது? சங்கேத குறியீடுகளை ஆராய்வதும் அதை மாணவர்களுக்குச் சொல்லித்தருவதும் தான் வேளையாகக் கொண்டுள்ள ராப்ர்ட் லாங்டன் என்ற பேராசிரியரைச் சந்திக்க விரும்புகிறார் - பாரீஸ் கலைகூடத்தின் பாதுகாவலர். அந்த சந்திப்பு நிகழ்வதற்கு முன்னரே அவர் கொலை செய்யப்படுவிடுகிறார். ஆனால் இறந்த அவர் சில குறிப்புகளை விட்டுச் செல்கிறார். அது அவரது பேத்தியை லாங்டனுடன் சேர்க்கிறது. இருவரும் இணைந்து குறிப்புகளைப் பின் தொடர்ந்து வந்து தேடிச் செல்கின்றனர். ஆங்கில சரித்திர ஆய்வாளர் ஒருவரும் துணைக்கு வர கதை லண்டன் நகருக்கு போகிறது. அங்கு சில தேடல்களுக்குப் பிறகு இறுதியாக குறிப்பிட்ட தேவாலயத்தை அடைகின்றனர். அங்கு அவர்கள் தேடி வந்த ஆவணங்க்ள் கிடைக்கவில்லை என்றாலும் சோபியா - பாரீஸ் கலைகூடத்தின் தலைவரின் பேத்தி தன் தம்பியைக் கண்டுபிடிக்கிறாள்.

இதுதான் கதை.

கதையில் லியானார்டோ டாவின்சியின் ஓவியங்களில் மறைந்து காணப்படும் குறியீடுகளைப் பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டே போகிறார் ஆசிரியர். கதையை மேலும் நன்றாக ரசித்துப் படிக்க வேண்டுமென்றால் Breaking the Da Vinci Code என்ற குறுந்தகடை
ஒரு முறை பார்த்து விடுங்கள்.

இந்தப் புத்தகம் வெளி வந்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்றாலும் இதில் சொல்லப்படும் செய்தியை மறுத்தோ ஏற்றோ எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் மௌனம் காத்தது. பின்னர் தயக்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டது அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்று. ஆனால் அந்தப் புத்தகம் எழுப்பிய பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் சொல்லவில்லை. அடக்கி அடக்கி வைத்தே பழக்கப்பட்ட சர்ச் அமைப்புகள் இன்னமும் அதே கொள்கையில் தான் நிற்கின்றனர்.

வாங்கிப் படித்துப் பாருங்கள். விறுப்பான புத்தகம்.

பரஞ்சோதி
19-09-2005, 08:32 PM
இந்த புத்தகத்தத இணையத்தில் இருந்து பிரிண்ட் எடுத்திருக்கிறேன், ஆனால் படிக்கவில்லை. விரைவில் படிக்கிறேன்.

நன்றி நண்பன்.

kavitha
20-09-2005, 08:16 AM
இந்த புத்தகத்தத இணையத்தில் இருந்து பிரிண்ட் எடுத்திருக்கிறேன், ஆனால் படிக்கவில்லை. விரைவில் படிக்கிறேன்.



முடிந்தால் எனக்கும் அனுப்பி வையுங்கள் அண்ணா. ஆச்சரியமாக இருக்கிறது. எது கதை என்று தெரியவில்லை. வேதாகமப்படி அவர் சுத்தமான பிரம்மச்சாரியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறார். அவரைப்பிரேமித்தவர்கள் ஏராளம். அவர் அனைவரையுமே சமமாகவே பாவித்தார். தேவகுமாரனை சந்தேகிப்பது என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் எழுத்தாளரின் திறமையைக்காணவேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன்.

kavitha
20-09-2005, 08:21 AM
Quote:
Originally Posted by kavitha
சென்ற வாரம் நூலகத்தில் எடுத்த "கவிதை மொழி" என்ற புத்தகத்திலிருந்து சங்க கால பெண்பால் புலவர்கள் பற்றியச் செய்திகள் கிடைத்தன. அதைக்கொடுக்கலாம் என்றிருந்தேன்.


ஐய்யோ.... இந்த மாதிரியான புத்தகங்களைப் பற்றிய குறிப்புகள் எழுதுவதற்கெல்லாம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உடனே அது பற்றி எழுதுங்கள்.

எந்த குறிக்கோளுமற்ற நாவல்களையோ அல்லது வியாபர நோக்கம் மட்டுமே இலக்கு என கருதி எழுதப்படும் பல புத்தகங்கள் தான் இன்று நூலகங்களில் இருந்து எடுத்து வாசிக்கப் படுகின்றன. இத்தகைய புத்தகங்களை யாரும் காசு கொடுத்து வாங்கப் போவதில்லை. அதனால் தான் காசு கொடுத்து வாங்கிய தரமான புத்தகங்களைப் பற்றி எழுதுங்கள் என்று வேண்டுகோள் வைத்தேன்.

ஆனால் நூலகங்களிலிருந்து தரமான புத்தகங்களை எடுத்து வாசிக்கும் உங்களுக்கு இதிலிருந்து விடுதலை. எல்லோருக்குமே - பெரும்பாலும் கடைகளில் கிடைக்காத இத்தகைய நல்ல புத்தகங்களை வாசித்தால் கண்டிப்பாக அது பற்றி எழுதுங்கள். பணி நிமித்தம் நேரம் கிடைப்பது குறைவாக உள்ளது. வீட்டில் கணினி பழுதுபார்க்கப்பட்டவுடன் கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பன்.

பரஞ்சோதி
20-09-2005, 08:24 AM
முடிந்தால் எனக்கும் அனுப்பி வையுங்கள் அண்ணா. ஆச்சரியமாக இருக்கிறது. எது கதை என்று தெரியவில்லை. வேதாகமப்படி அவர் சுத்தமான பிரம்மச்சாரியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறார். அவரைப்பிரேமித்தவர்கள் ஏராளம். அவர் அனைவரையுமே சமமாகவே பாவித்தார். தேவகுமாரனை சந்தேகிப்பது என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் எழுத்தாளரின் திறமையைக்காணவேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன்.

விரைவில் அனுப்பி வைக்கிறேன்.

Nanban
20-09-2005, 05:30 PM
முடிந்தால் எனக்கும் அனுப்பி வையுங்கள் அண்ணா. ஆச்சரியமாக இருக்கிறது. எது கதை என்று தெரியவில்லை. வேதாகமப்படி அவர் சுத்தமான பிரம்மச்சாரியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறார். அவரைப்பிரேமித்தவர்கள் ஏராளம். அவர் அனைவரையுமே சமமாகவே பாவித்தார். தேவகுமாரனை சந்தேகிப்பது என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் எழுத்தாளரின் திறமையைக்காணவேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன்.

நீங்கள் சொல்லும் வேதாகமமே உண்மையில்லை. அது இடைச்செருகல் நிறைந்தது. 4ஆம் நூற்றாண்டிலிருந்து பலவகையான இடைச் செருகல்கள் புகுத்தப்பட்டது. இயேசுவை இறைவனாக உயர்த்தும் முயற்சியில் அந்தக் காலத்தில் தூய்மையாகக் கருதப்பட்ட பிரம்மாச்சாரியாக்கப்பட்டார். மேலும் அவருடைய வாரிசுகளை அவருடன் தொடர்பற்றுச் செல்ல வைக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. இல்லையென்றால் இறைவனின் வாரிசுகள் இவ்வுலகில் கிறிஸ்துவின் பெருமைக்கும் புகழுக்கும் பங்கு கேட்டு வந்துவிட மாட்டார்களா? அதனாலும் அவரைப் பிரம்மாச்சாரியாக்கி விட்டால் இந்தத் தொல்லையே இல்லை அல்லவா? அவருடைய காதலியை வேசி என்று தூற்றுவதன் மூலம் இயேசுவின் வழித்தோன்றல்களும் அழிந்து விடுவர் என்று நம்பப்பட்டது. என்றாலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். யாருமே இயேசுவின் நடவடிக்கைகளைக் குறை சொல்லவில்லை. அவரை மோசடிக்காரர் என்று அழைக்கவில்லை. என்ன அவரைப் பற்றிய உண்மைகளை மறைத்து அவருடைய புகழையும் செல்வாக்கையும் தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது - மத குருமார்கள் கொண்ட குழு. அதன் மூலம் அவர்கள் தங்களை வலுவாக்கிக் கொண்டனர். இன்று அவர்களே கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்கு சகலமும் நாங்களே என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆனால் உண்மைகள் சுட்டெரிக்கத் தொடங்கும் பொழுது சில உண்மைகளை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு அவர்கள் ஒப்புக் கொண்டது தான் - மேரி மகாதலீன் வேசி அல்ல ஆனால் அவர் இயேசுவின் காதலி என்று. காலம் கடந்த ஞானோதயம். என்றாலும் வரவேற்கத்தக்கது.

இந்த வரலாற்றுத் திருத்தங்களுக்கு முந்தைய அழிக்கப்பட்ட பைபிளின் பிரதிகள் கிடைத்துள்ளன. அவை உண்மையானவையா என்ற விஞ்ஞானப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

கேள்வி கேட்காமல் ஏற்கப்பட்ட நம்பிக்கைகள் மத அடிப்படைவாதங்களைத் தோற்றுவிக்கிறது. நம்பிக்கைகள் குறித்து கேள்வி எழுப்புவதும் அது குறித்து தேடுதலில் இறங்குவதும் - எந்த வகையிலும் இறைவணக்கத்தைப் பாதிப்பதில்லை - மாறாக மதங்களை அடிப்படை வாதத்தில் இருந்து மீட்டெடுக்கும். மேலும் எப்பொழுதுமே வரலாற்றில் உண்மைகளை மறைத்துவிட முடியாது. ஏனென்றால் அவ்வாறு மறைக்க முயலும் பொழுது அது நிழலுலகில் வாழ ஆரம்பிக்கிறது. ரகசிய குழுவாக மாறுகிறது. உண்மைகளை தலைமுறை தலைமுறையாக அழியாமல் பாதுகாக்கிறது. அவ்வாறான சில உண்மைகள் தான் இந்தக் கதையின் பின்னணியும்.

இன்னமும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன - இரண்டு தளத்தில். ஒன்று இயேசுவின் தந்தை யார்? இயேசு மறிக்கவில்லை - சிலுவையில் அறைந்த பொழுது. தப்பித்துவிட்டார். அப்படியானால் அவர் எங்கே சென்றார்? எப்படி வாழ்ந்தார்? இந்த ஆராய்ச்சிகளின் விடையாக சில குறிப்புகள்:

இயேசு பிறக்கும் காலத்திற்கு சற்று முந்தைய காலத்தில் - நசரைன் என்று குறிப்பிடப்படும் சன்னியாசிகள் ஜெருசலம், நாசரேத் இந்த நகரங்களைச் சுற்றியுள்ள வனாந்திரங்களின் குகைகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் யூத மதங்களின் மீது அவநம்பிக்கைக் கொண்டு, இறைவனை அடைய மாற்று வழி தேடியவர்கள். கிட்டத்தட்ட புத்த மதங்களின் சாயலுள்ள கொள்கைகளில் பிடிப்புடன் வாழ்ந்துள்ளனர். இவர்களுக்குக் குடும்பங்கள் கிடையாது. ஆனால் தங்கள் இனம் அழிந்து விடாமல் காப்பதற்காக பெண்களுடன் குழந்தை பேற்றிற்காக மட்டும் உறவு கொண்டு அந்தக் குழந்தைகள் குறிப்பிட்ட வயதடைந்ததும் தங்களுடன் வந்து இணைந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறையைப் பின்பற்றினார்கள். இது அந்த காலகட்டத்தில் தவறாகப் படவில்லை யாருக்கும். கிட்டத்தட்ட இதை மகாபாரதக்கதையுடன் ஒப்பிட்டு நோக்கலாம். குழந்தை பேற்றிற்காக முனிவருடன் கூடி பிள்ளை பெற்றுக் கொண்டது போல. மரபுகளை ஒட்டியே இந்த வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. ஆகையால் யாரும் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுபோல மேரியுடன் இணைந்த ஒரு துறவியின் மகன் தான் இயேசு. இயேசு பிறந்த பொழுது வானில் தோன்றிய அறிகுறிகளை வைத்து கிட்டத்தட்ட கிறிஸ்துவின் வயதையும் அனுமானித்துக் கூறிவிட்டார்கள். ( எல்லாம் விஞ்ஞானம், விஞ்ஞானம்... ) அவர்களைத் தேடி வந்த அந்த கீழை நாட்டு அறிஞர்கள் யார் தெரியுமா? லாமாக்களை வழிபடும் புத்தர்கள். ஆம் - இயேசு பிறந்த பொழுது தோன்றிய அறிகுறிகள் - லாமாக்களைக் குழந்தையாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கமுள்ள புத்த பிக்குகளிடமிருந்து தான் அந்த மூவரும் பயணம் செய்து அந்தக் குழந்தையை - இயேசுவை - வாழ்த்தி தகுந்த வயதில் அழைத்துச் செல்வதாகக் கூறி சென்றார்கள். பின்னர் இயேசு தனது பதின்மூன்றாவது வயதில் இந்தியா வந்தார். நம்புங்கள் - இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - எட்டு வருடங்களாக - அதாவது ஜெருசலத்திற்கு இருபத்தோராவது வயதில் திரும்பும் வரை. இந்த எட்டு வருடங்களில் அவர் புத்த மதத்தைக் கற்று கொண்டார் - பல்வேறு மடங்களில் - இமயத்தின் மடியில் உள்ள மடங்களிலிருந்து. ஜெருசலம் திரும்பும் முன்பு ஒரு வருடம் பூரி ஜெகன்னாத் கோயிலில் தங்கிய்ருந்து வேதங்கள் கற்றுக் கொண்டார். பின்னர் அவர் ஜெருசலம் திரும்பினார். பிரச்சாரத்தில் ஈடுபட்டார் - எந்த பிரச்சாரம்? தான் கற்றுக் கொண்ட புத்த+இந்து மத கொள்கைகளைப் பற்றி. யூதர்களின் நம்பிக்கைக்கு மாறான இந்த பிரச்சாரம் கோபம் கொள்ள வைத்தது. அவரை வேட்டையாடத் தொடங்கினார்கள். அவர் உயிருக்கு ஆபத்து வருவதை அறிந்த அவரது சீடர்கள் - அவரைப் போல உருத்தோற்ற ஒற்றுமை உள்ள ஒருவரை யூதர்களிடம் ஒப்படைத்து விட்டு அவரை கடத்திக் கொண்டு போய்விட்டனர். எங்கே?

நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் - ஆம், இயேசு இந்தியாவிற்குக் கடத்தி வரப்பட்டார் - அவருடைய சீடர்களால். மீதமிருந்த அந்த நாட்களை அவர் இமயத்தின் மடியில் காஷ்மீரத்தில் - இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் - காலம் கடத்தினார். ஏன் அவர் காஷ்மீரத்தில் கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபிக்கவில்லையா? இல்லை. ஏனென்றால் அவர் எப்பொழுதுமே ஒரு மதத்தை நிறுவ வேண்டும் என்று எண்ணியதேயில்லை. அவர் அன்பையும் நேர்மையையும் பிரச்சாரம் செய்தார். தன் சீடர்களிடம் அவ்வாறே செய்யுமாறு கூறினார். அப்படியானால் இப்பொழுதுள்ள கிறிஸ்துவமதம் எப்படி வந்தது. இயேசுவின் பேரால் - கிறிஸ்துவமதத்தின் பல கூறுகளையும் நிறுவியவர் - பால் - இத்தாலியிலிருந்து. ஆமாம் நவீன உலகின் கிறித்துவம் இயேசுவின் பெயரை மட்டும் தான் உபயோகித்து கொண்டதே தவிர - இயேசு போதித்தது அன்பை மட்டும் தான். இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் படியுங்கள் - Is Jesus Lived in India என்ற புத்தகத்தை. இன்னமும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. ஒன்று மட்டும் உண்மை - இவ்வுலகில் இயேசுவுக்கு கிடைத்ததெல்லாம் இறைவனாக உயர்த்தப்பட்டு வணக்கத்திற்குரியவாராக ஆக்கப்பட்டது மட்டுமே. ஆனால் அதற்காக அவர் கொடுத்த விலை - குடும்பம் என்ற அமைப்பை.

Da Vinci Code - இந்த புத்தகம் மொத்தம் 490 பக்கங்கள் உடையது. எப்படி பிரதியெடுத்தீர்கள்? அல்லது சுருக்கப்பட்ட பதிப்பா? ஒருமுறை சரி பாருங்கள்.

பரஞ்சோதி
21-09-2005, 05:06 AM
Is Jesus Lived in India இந்த புத்தகமும் என் வீட்டில் இருக்கிறது, இதுவரை படிக்கவில்லை. அதில் நிறைய படங்களோடு ஆதாரம் காட்டியிருப்பார்கள். குறிப்பாக தற்போதைய பாகிஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் அவர் வாழ்ந்த அடையாளங்கள் சொல்லியிருப்பார்கள். ஒரு ரஷ்ய எழுத்தாளர் எழுதிய புத்தகம் என்று நினைக்கிறேன்.

டாவின்ஸி கோட் 383 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இ-புக் கிடைத்தது, அதை பிரிண்ட் எடுத்தேன்.

பொதுவாக பிற மதங்களைப் பற்றிய சர்ச்சைக்குறிய புத்தகங்களை படிப்பது இல்லை, அவ்வாறு படித்தால் அதைப் பற்றி விவாதிக்க பிற மதத்தவரையே நாட வேண்டும், அது அவர்களின் மனதை துன்புறுத்தும் என்று நினைக்கிறேன்.

பரஞ்சோதி
21-09-2005, 05:07 AM
விரிவான விளக்கத்திற்கு நன்றி நண்பன்.

பரஞ்சோதி
21-09-2005, 05:08 AM
டாவின்ஸி கோட் இ-புத்தகத்தை தமிழ்மன்ற கூகிளில் அனுப்பியிருக்கிறேன்.

Nanban
21-09-2005, 04:43 PM
பிற மதங்களைப் பற்றிய தெளிவும் வரலாறும் அறிந்திருப்பதும், விவாதங்களில் உணர்ச்சி வசப்படாமல் இருக்கவும் முடிந்தால் மதங்களைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடலாம். பிற மதங்களைப் பற்றி கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். பள்ளிப் பாடப் புத்தகங்களில் கொடுத்திருப்பது போல மேம்போக்காக அல்லாமல் அதன் முழுகோட்பாடுகளையும் நிறுவியவர்களின் வரலாற்றையும் ஆராய்ந்து தெளிவது இன்றைய காலத்தின் கசப்புகளையும் பேதங்களையும் நீக்கும் என்பது தெளிவு.

Is Jesus lived in India என்ற புத்தகத்தை எழுதியவர் ஜெர்மனிக்காரர். பாதிரியார். ஆராய்ச்சியாளர். இயேசுவின் கல்லறை என்று கூட ஒரு கல்லறையை அடையாளம் காட்டி இருக்கிறார்.

Nanban
21-09-2005, 04:44 PM
சரி அடுத்த புத்தகம் -

மனுஷ்யபுத்திரன் எழுதிய - யாரோ என் படுக்கை அறையில் ஒளிந்திருக்கிறார்கள்.

மன்மதன்
21-09-2005, 04:48 PM
டாவின்ஸி கோட் இ-புத்தகத்தை தமிழ்மன்ற கூகிளில் அனுப்பியிருக்கிறேன்.

கிடைத்தது பரம்ஸ்.. நன்றி..

பரஞ்சோதி
21-09-2005, 05:06 PM
நண்பன், கீழ்கண்ட தளம் சென்று பாருங்களேன்.

http://www.atmajyoti.org/spirwrit-the_christ_of_india.asp

http://www.atmajyoti.org/ul_unknown_lives_forward.asp

Nanban
29-09-2005, 02:39 PM
மேற்கண்ட தளங்களில் எதுவும் வருவதில்லை பரஞ்சோதி - ஒருமுறை சரிபார்த்து சொல்லுங்களேன்.

நன்றி.

பரஞ்சோதி
29-09-2005, 05:40 PM
நண்பன் அவர்களே!

நான் கொடுத்த லிங்க் எனக்கு வேலை செய்கிறதே.

அதில் இயேசு அவர்கள் 50 வயதையும் தாண்டி வாழ்ந்தார், இந்தியாவில் இருந்த காலத்தில் புத்தமதக் கொள்கைகளை கற்று தேர்ந்தார் என்ற விபரங்கள் இருக்கின்றன, வேறு விசேஷம் இல்லை.

Nanban
09-10-2005, 04:35 PM
இதுவரையிலும் வாசித்து ஊக்கப்படுத்தியவர்கள்:

பரஞ்சோதி - 13
கவிதா ----- 7
பிரதீப் ----- 2
ராகவன் ---- 2
மன்மதன் --- 1
ஆரென் ---- 1
பாரதி ------ 1
பிரியன் ----- 1

இவர்களுக்கு நன்றி.

என்றாலும் தொடர்ந்த வாசிப்பு என்று பார்த்தால் இருவர் தான் மிஞ்சுகின்றனர். கவிதா, பரஞ்சோதி மட்டுமே - எங்கே மற்றவர்கள்?

என்றாலும் தொடர்கிறேன் ஒருவர் அல்லது இருவர் வாசிக்க இருக்கிறார் என்ற தைர்யத்தினால்.

pradeepkt
10-10-2005, 05:13 AM
நண்பன்,
நான் அதிகமாக ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதில்லை.
உங்கள் விமர்சனம் படித்த பிறகுதான் டாவின்சி கோட் புத்தகத்தை வாங்கி வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். நல்ல விறுவிறுப்பான நடை. எனினும் எனக்கு மிகப் பிடித்தது அந்த விவரிப்பு - detailed connotations - புத்தகம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.
அடுத்ததாக நிறைய அத்தியாயங்கள். நான் படித்த கதைகளில் அத்தியாயங்களை முடிந்த அளவு குறைத்து விடுவார்கள். காரணம், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பு உருவாக்க முயற்சிப்பார்கள். இந்தப் புத்தகத்திலும் அப்படித்தான். ஆனால் இத்தனை வளைவுகள் இருந்தும் கதை வெகு வேகமாகச் செல்கிறது. ஒரு 300+ பக்கங்கள் படித்திருக்கிறேன். முழுவதும் படித்துவிட்டு மேலும் சொல்கிறேன்.

அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

gragavan
10-10-2005, 09:22 AM
நண்பன்...இந்தப் பதிவை நான் இத்தனை நாள் ஒழுங்காகப் பார்க்கவில்லை. இனிமேல் பார்க்கின்றேன்.

ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் உண்டு. ஆனால் கிருத்துவ மதப் புத்தகங்களை நான் படித்ததில்லை. எனக்குத் தெரிந்த வகையில் எல்லாருக்கும் தெரிந்த ஏசு கதைதான் எனக்குத் தெரியும். டாவின்சி கோடு புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. நண்பன் புத்தகத்தை படிக்க எடுத்துக் கொண்டு போயிருக்கின்றான். ஆனால் நீங்கள் சொல்லும் தகவல்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன என்றால் மிகையில்லை. இன்னும் தகவல்களைத் தாருங்கள். தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

rajasi13
10-10-2005, 10:02 AM
இன்றுதான் இதை வாசித்தேன். இத்தனை தினம் வீணாகி விட்டதே, தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

Nanban
10-10-2005, 06:22 PM
பிரதீப் - ராகவன் - ராஜாஸி

நன்றி நண்பர்களே....

அடுத்த புத்தகமாக - ஏற்கனவே சொன்னது போல -

''யாரோ என் படுக்கையறையில் ஒளிந்திருக்கிறார்கள்''

எழுதியவர் மனுஷ்யப்புத்திரன்.

பரஞ்சோதி
10-10-2005, 07:12 PM
நண்பன், மனுஷ்யப்புத்திரன் அவர்களைப் பற்றி வலைப்பூக்களில் படித்திருக்கிறேன், அவரின் கதையை விமர்சனமாக படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

Nanban
10-10-2005, 07:22 PM
கதை?

பரஞ்சோதி - அவர் கவிதை எழுதுபவர்.

கொஞ்சம் பிடிபடாத வகையில் கூட எழுதுபவர்.

உயிர்மை என்ற இதழை நடத்திக் கொண்டிருக்கிறார்.

உயிர்மை பதிப்பகமும் வைத்திருக்கிறார்.

பல நல்ல நூல்களை வடிவமைத்துத் தந்துள்ளார் - குறிப்பாக சுஜாதாவின் நூல்களை.

அவர் சிறுகதையோ நாவலோ எழுதியதாக எனக்குத் தெரியவில்லை....

பரஞ்சோதி
10-10-2005, 07:30 PM
யாரோ என் படுக்கையறையில் ஒளிந்திருக்கிறார்கள்நான் இத்தலைப்பில் கதை எழுதியிருக்கிறார், அதைத் தான் விமர்சனம் செய்யப் போறீங்க என்று நினைத்தேன்.என்னிடம் இவர் தீராநதிக்கு கொடுத்த நேர்க்காணல் இருக்கிறது, உங்க விமர்சனம் கொடுத்தப் பின்பு கொடுக்கிறேன். நிறைய புரியாத விசயங்களை சொல்கிறார். அவர் எண்ணங்களை அறிய முடியும்.

பிரியன்
11-10-2005, 12:24 AM
நான் படித்த புத்தகம்- சுப.வீரபாண்டியனின் பெரியாரின் இடதுசாரித் தமிழ்தேசியம். தமிழ் தேசியத்தை பற்றியும், பெரியாரைப்பற்றியும் நல்ல அறிமுகத்தை தரும் புத்தகம்.... என் விமர்சனம் இன்று மாலை தருகிறேன்

gragavan
11-10-2005, 09:10 AM
பிரதீப் - ராகவன் - ராஜாஸி

நன்றி நண்பர்களே....

அடுத்த புத்தகமாக - ஏற்கனவே சொன்னது போல -

''யாரோ என் படுக்கையறையில் ஒளிந்திருக்கிறார்கள்''

எழுதியவர் மனுஷ்யப்புத்திரன்.மனுஷ்ய புத்திரனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவருடைய புத்தகங்களைப் படித்ததில்லை. இதில் பிரச்சனை என்னவென்றால் பெங்களூரில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் மிகக் குறைவு. அதிலும் புத்தகங்கள் மிகக் குறைவு. சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தகங்களை எங்கே வாங்குவது என்று தெரியாது. ஹிக்கின்பாதம்ஸ் போனால் கொஞ்சம் கிடைக்கிறது. வானதி, பழநியப்பா, அல்லயன்ஸ் போன்ற இடங்கள் தெரிந்திருப்பதால் அங்கு செல்வதும் உண்டு. வேறு ஏதேனும் நல்ல இடங்கள் இருக்குமானால் அவைகளை இங்கே சொல்லுங்களேன்.

பிரியன்
11-10-2005, 09:20 AM
தி. நகர் உஸ்மான் சாலையில் இருக்கும் நியூ புக் லேண்ட்ற்கு போங்கள். எல்லா விதமான தமிழ் இலக்கிய புத்தகங்கள் பெரும்பாலும் 90% கிடைக்கும்.. ஆர்,எம்,கே.வி.யிலிருந்து நடக்கும் தூரம்தான்......நான் முகவரியையும். தொலைபேசி எண்ணையும் அறைக்கு சென்றவுடன் தருகிறேன்

gragavan
11-10-2005, 09:52 AM
தி. நகர் உஸ்மான் சாலையில் இருக்கும் நியூ புக் லேண்ட்ற்கு போங்கள். எல்லா விதமான தமிழ் இலக்கிய புத்தகங்கள் பெரும்பாலும் 90% கிடைக்கும்.. ஆர்,எம்,கே.வி.யிலிருந்து நடக்கும் தூரம்தான்......நான் முகவரியையும். தொலைபேசி எண்ணையும் அறைக்கு சென்றவுடன் தருகிறேன்நன்றி பிரியன். கண்டிப்பாக அனுப்புங்கள். ஆரெம்கேவி பார்த்திருக்கிறேன். ஆரெம்கேவியிலிருந்து எந்தப் பக்கம் நடக்க வேண்டும்? திநகர் பேருந்து நிலையம் நோக்கியா? இல்லை அதற்கு எதிர்ப்புறத்தில் செல்ல வேண்டுமா? எந்தத் திசையில் போகவேண்டும் என்பதைச் சொல்கையில் எந்தக் கைப்பக்கம் என்றும் சொல்லுங்கள்.

பிரியன்
11-10-2005, 09:58 AM
தி. நகர் பேருந்து நிலையச்சாலைக்கு எதிராக நடக்க வேண்டும். ஆர். எம். கே.வி க்கு முன் நின்று கொண்டால் இடது கை புறம் வரும். ஆர்.எம். கே.வி. தாண்டியவுடன் சாலை நேராக மற்றும் வளைந்து என இரண்டாக பிரிவதில் நீங்கள் நேராக செல்ல வேண்டும்,.. 5 முதல் 10 நிமிட நடைதான்...( மணிக்கு 60கிமீ வேகத்தில் அல்ல :D :D :D )

பரஞ்சோதி
11-10-2005, 09:59 AM
பாண்டிபஜார், மாம்பலம் ரெயில்வே ஸ்டேசன், தி.நகரை சுற்றி சுற்றி நிறைய புத்தக நிலையங்கள் உண்டே.

gragavan
11-10-2005, 10:42 AM
தி. நகர் பேருந்து நிலையச்சாலைக்கு எதிராக நடக்க வேண்டும். ஆர். எம். கே.வி க்கு முன் நின்று கொண்டால் இடது கை புறம் வரும். ஆர்.எம். கே.வி. தாண்டியவுடன் சாலை நேராக மற்றும் வளைந்து என இரண்டாக பிரிவதில் நீங்கள் நேராக செல்ல வேண்டும்,.. 5 முதல் 10 நிமிட நடைதான்...( மணிக்கு 60கிமீ வேகத்தில் அல்ல :D :D :D )புரிகிறது. பாண்டலூன் கடையும் ARR கட்டிடமும் இருக்கும் திசையில்.

அது சரி. அந்த 60கிமீ...பிரதீப்ப கிண்டல் அடிக்கத்தானே..........

பிரியன்
11-10-2005, 10:52 AM
புரிகிறது. பாண்டலூன் கடையும் ARR கட்டிடமும் இருக்கும் திசையில்.

அது சரி. அந்த 60கிமீ...பிரதீப்ப கிண்டல் அடிக்கத்தானே..........

இல்ல உங்கள:D :D

gragavan
11-10-2005, 10:53 AM
இல்ல உங்கள:D :Dஅப்படியா! ரொம்ப சந்தோசம். :D :D :D

Nanban
11-10-2005, 07:15 PM
மனுஷ்யப்புத்திரனைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்....

கவிஞர் மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் எஸ்.அப்துல் ஹமீது. 1967-ல் பிறந்த இவரின் சொந்த ஊர் துவரங்குறிச்சி. இது திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது. எண்பதுகளில் எழுத ஆரம்பித்தார். 1994 முதல் காலச்சுவடு இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தற்போது சமீபத்தில் தொடங்கிய உயிர்மை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். உயிர்மை என்கிற பதிப்பகமும் நடத்தி வருகிறார். கவிஞரானாலும் பத்திரிகைத் துறையில் அனுபவம் மிக்கவர். பல இலக்கிய, சமூக, விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு, "மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்" (1983). தொடர்ந்து- "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" (1993), "இடமும் இருப்பும்" (1998), "நீராலானது" (2001) ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

கவிஞர் குறிப்பிடுவது - 1993ல் வந்த கவிதைத் தொகுதியான ''யாரோ....'' வைத் தான் முதல் புத்தகமாகக் குறிப்பிடவேண்டுமென்கிறார். ''கவித்துவத்தின் ஆதாரமான தருணங்களை இத்தொகுப்பின் மூலமே நெருங்கி வந்தேன். இந்தப் பத்தாண்டுகளில் என் சொற்களின் வாசனையையும் வழிமுறையும் எவ்வளவோ சிதைந்து உருமாறிவிட்டன. இருந்தும் இக்கவிதைகளுக்குள் இடைவிடாது தேம்பிக் கொண்டிருக்கும் ஒரு மனமும் உதற முடியாத சாபத்தின் நிழல்களுமே இப்போதும் என்னை வெவ்வேறு ரூபங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன"

அவருடைய கவிதைகளின் இந்தத் தொகுப்பை மட்டுமே நான் வாசித்து முடித்திருக்கிறேன் என்பதால் அவர் குறிப்பிடும் மாற்றங்களை உணர்வதற்கு தேவையில்லை - இன்றைய பொழுதில். ஆனால் அவர் குறிப்பிடும் கவிதை தருணங்களை அவர் மட்டும் உணரவில்லை - நம்மாலும் உணர முடியும். கவிதைகளைப் பற்றிய ஒரு எளிய சிறிய புரிதல் இருந்தால் கூட.

எல்லோரும் மிரட்டியது போல் மனுஷ்யபுத்திரன் புரிய இயலாத புதிரல்ல. ஆனால் தன் குறைகளை கவிதை சொல்லி விரட்டியடிக்க முயலும் ஒரு எளிய மனிதராகவே உணர்கிறேன்.

''கால்களின் ஆல்பம்'' என்ற முதல் கவிதையிலேயே சிதைந்த உடலின் வலியை வாழும் வெளியுடன் பொருத்திப் பார்த்து பேசுகிறார்.

'...
ஒட்டுவேன்
என் கால்களின் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்துவைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும் '

இது தனிப்பட்ட சோகம் தான். தனிப்பட்ட சோகம் கவிதை ஆகிவிடுமா? கவிதைகளின் வலி தனி மனித சோகம் மட்டுமே அல்ல. ஆயிரக்கணக்கான பேர் - தடுப்பூசிகளின் வலிமையையும் தாண்டி - வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த போலியோ கால்களுடன். அவர்களுடைய வலியையும் சேர்த்துத் தானே கவிதை பேசுகின்றது. இழந்த காதல் போல ஒரு கற்பனை வெளியில் நிகழும் இழப்பல்லாது, சொந்த வாழ்வின் சோகங்களை சுமக்கும் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதியாகத் தானே இந்தக் கவிதை இருக்கின்றது?

இந்த சோகங்கள் கவிதை தொகுதி முழுவதும் வருகின்றன - வெவ்வேறு வடிவங்களில். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தொடரும் இயலாமை சில சமயங்களில் நம்மை வெட்கப்படவைக்கும் - இப்படியெல்லாம் சங்கடங்கள் நேருமா ஒரு மனிதனுக்கு என்று.?

வந்த விருந்தாளிகள் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் வேளை - கழிவறையில் மாட்டிக் கொண்டவர் - அவர்கள் எழுந்து போகும் வரை கழிவறையினுள்ளே தவமிருக்கிறார் - 90 நிமிடங்களுக்கும் மேலாக - வெளியே வருவதற்காக. மனிக்கணக்கு ஒரு அளவிற்காக மட்டுமே. தன்னம்பிக்கை குறைவினால் மறைந்திருக்க வேண்டிய அவசியமானதாலா - இந்தத் தவம். இல்லை. ஒரு கவிஞனாக இருப்பவனுக்கு முதலில் தன்னம்பிக்கை, சுயமரியாதை எல்லாம் இருக்க வேண்டும். இல்லையேல் எங்கே கவிஞனாக மின்னுவது? சுயமரியாதை - இது தான் தடை செய்கிறது. வந்தவர்கள் போகட்டும். அல்லது அநாவசியமான பரிதாபங்கள் கொட்டப்படலாம். அதைத் தவிர்க்க வேண்டும், அதனால் அவர்கள் பார்வையில் இருந்து மறைந்து கொள்ளலாம். ஏனென்றால் இந்த ஊனமும் வாழ்வில் ஒரு அங்கம் தான் என்ற பக்குவம் இன்னமும் பல மனிதர்களுக்கும் வந்து விடவில்லை.

இதைப்பற்றியும் அவர் முன்னுரையில் குறிப்பிடுகிறார் -

இத்தொகுப்பில் பல கவிதைகள் ஒரு கலாச்சார வெளியில் குறைவுபட்ட உடலொன்றின் வாதைகளைப் பேசுகின்றன. இக்கவிதைகளை நான் எழுதியபோது மனோரீதியான ஆசுவாசம் கருதியோ சுய பிலாக்கணங்களாகவோ எழுத முற்படவில்லை. உண்மையில் சிதைந்த உடலை வாழ்வினது வினோதத்தின் ஒரு பகுதியாக அடையாளம் காணும் பொருட்டே எழுதினேன். ஆனால் மிகையுணர்ச்சி கொண்ட தமிழ் வாசகப் பரப்பில் அக்கவிதைகள் தனிப்பட்ட ஒருவரின் வேதனைக் குரலாக இனம் காணப்பட்டு என்னை நோக்கி அன்பும் ஆறுதல்களும் வந்து சேர்ந்தன. இது எனக்கு ஆழ்ந்த சங்கடங்களை ஏற்படுத்தியுண்டு. உடல் குறித்த சித்திரங்களை எழுதுவதில் பெரும் மனத்தடையும் உண்டாக்கின.

இவ்வாறு தான் எழுதுகிறார். ஆனாலும் ஊனத்தின் வலியையும் வலுவாக ஒரு கவிஞன் சொன்னால் தானே நமக்குப் புரிகிறது? இல்லையென்றால் நமக்கு அதைக் கண்டு கொள்ளக் கூட இயலாது. ஆனால் இந்த ஊனத்தையும் தாண்டி பல விஷயங்களைத் தொடுகிறார்.

குறிப்பாக - ஓர் அடையாளமில்லாத முஸல்மானின் விருப்பங்கள் என்ற கவிதையில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக ஆட்டம் கொள்ளச் செய்யப்படுகின்றனர் என்று கவிதை வரிகளில் அழகாகத் தெரிவிக்கிறார், கவிதை எழுதப்பட்டது பிப்ரவரி - 1990. அதாவது பாப்ரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பாக.

ஓர் அடையாளமில்லாத
முஸல்மானின் விருப்பங்கள்
ஷாரியத் பற்றியதோ
சல்மான் ருஷ்டி பற்றியதோ அல்ல -

என்று தொடங்கும் இக்கவிதையில் ஒரு சாதாரண முஸ்லிம் எப்படி வாழ விரும்புகிறான் என்று மதவாதியல்லாத பெரும்பான்மை முஸ்லிம்களின் மனஓட்டத்தை பிரதிபலிக்கிறார். (இந்த வகையில் இவரும் நானும் ஒன்றே - இப்பொழுது தான் முதன்முறையாக இவரின் கவிதைகளை வாசித்தாலும்.

ஓர் அடையாளமில்லாத
முஸல்மானை ஆள்வது
ஔரங்கசீப்பா
சிவாஜியா என்பது
ஒருபோதும்
அவனுடைய பிரச்சினை அல்ல

அவனை
எப்போதும் ஆள்வது
கண்ணீர்

இரத்தத்தைவிட
அடர்த்தியான கண்ணீர்.

இங்கே இது தான் பிரச்சினையே. அடையாளமில்லாத முஸல்மானை எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு இழுக்கப்பார்க்கின்றனர் - தங்கள் வலைக்குள். எல்லா அரசியல் கட்சிகளும். அதற்காக அவர்களுக்காக சலுகைகள் அள்ளி வீசப்படுவதாக ஒரு மாயத்தோற்றத்தையும் உண்டாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அடையாளமில்லாத முஸல்மானின் வறுமை மட்டும் நீங்காது நின்று விடுகிறது. இக்கவிதையில் அடையாளமில்லாத முஸல்மானுக்கு வழிகாட்டி செல்பவர்கள் தவறான பாதைகளில் அழைத்துச் செல்கின்றனர் என்று சாடும்பொழுது சரியான பாதையில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற மாற்று வழிமுறைகள் ஏதும் சொல்லப்படாது போய்விடுகின்ற பொழுது சற்றே ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஒருவேளை சரியான பாதையில் வருவதற்கு வழி சொல்வது கவிஞனின் பணியல்லவாக இருக்கலாம். நிகழ்வுகளை அதன் வலிகளை தாக்கங்களை பதிவு செய்கிறேன் என்று சொல்லி நிகழ்வுகளைப் பாடுவதோடு நின்று போகும் பொழுது எழும் கேள்வி - இனி எந்த ஒரு நாளுமே தீர்க்கதரிசன கவிதைகள் தமிழில் தோன்றாதோ என கேட்க வைக்கிறது.

இது புதுக்கவிதையின் பலமா? பலவீனமா? எதிர்காலம் பற்றிய உள்ளுணர்வுகள் அற்று வெறும் நிகழ்வுகளையும், கடந்த கால தாக்கங்களையும் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதில் மட்டும் தான் இலக்கியம் இருக்கின்றதா?

நிறைய புதுக்கவிதைகளைப் படிக்கும் பொழுது எதிர்காலம் பற்றிய பிரக்ஞை இல்லாமல் நிகழ்ந்தவற்றையும் இறந்தவற்றையும் பதிவு செய்யும் ஆவல் மட்டுமே மேலோங்கி நிற்பதாகப் படுகிறது. ஒருவரில் இருந்து மற்றவர் வித்தியாசப்படுத்துதல் கூட இல்லாமல் ஒரே மாதிரியாக பதிவுகள்....ஆனால் இத்தகையவற்றிலிருந்து சற்றே மாறுபட்டு எழுதியிருக்கிறார் - எந்த எதிர்கால கனவுகளைப் பற்றியும் கவலையுறாமல்.... ஒருவேளை இந்த எதைப்பற்றியும் கவலையுறாத சிந்தனைகள்... தான் எல்லாக் கவிஞனும் தேடுகிறானோ.... ? இந்தக் கேள்விக்குப் பதிலும் நான் தேடியே ஆக வேண்டும்.! (பின்னெ எப்படி நான் கவிஞன் என்று சொல்லிக் கொள்வது?)

மனுஷ்யப்புத்திரனின் ஒரு கவிதையோடு எதிர்காலத்திற்கு விடை என்ன என்ற கேள்வியை நிறுத்தி விட்டு - அவர் கண்ணுக்குத் தெரியாதவன் கண்காணிக்கிறான் என்று எழுதிய என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறான் என்ற கவிதை தன்னுள்ளே ஒரு உள்முகமான பயணம் செல்கிறது. ஒளிந்திருக்கும் அந்த நபரை விரட்ட எத்தனிக்கும் பயணம் - சில சமயங்களில் தனக்கு வெளியேயும் அவர்களைக் கண்டு விடுகிறான். தன்னுடைய மனசாட்சியாக வெளியே இருக்கும் வேற்று மனிதர்கள் - அவர்களின் கட்டளைகள். தான் தனக்காக வாழாமல் கூடியிருக்கும் பலருக்காகவும் வாழும் வாழ்க்கை. இவர்களெல்லாவற்றையும் கடந்து காற்றோடு கலந்து என்ன வேண்டுமானாலும் செய்பவனாகி எப்படி வேண்டுமானாலும் வாழ்பவனாகி - ஒரு கவிஞருக்கே உரிய பறக்கத் துடிக்கும் மனம்.... கடைசியில் தன் விடுதலையை வாங்க பிறரை ஊனப்படுத்தக் கூட தயங்காத எச்சரிக்கை. ஆம் ஒளிந்திருப்பவன் யாராக இருந்தாலும் சரி - ஒரே வார்த்தை - விலகிக்கொள்ளுங்கள்.

சரி இந்த நிலை எப்பொழுதாவது சாத்தியப்படுமா? பிற மனித சார்புகளற்ற தனித்து இயங்கும் சக்தி பெற்ற தனித் தீவாக ஒரு மனிதன் வாழ முடியுமா? முடியாது. ஆனால் குறைந்த பட்சம் ஒருவரின் தனிமையில் (பிரைவசி?) மற்றவர் குறுக்கிடாது இருந்தாலே போதுமானது. இந்த தனிமையைக் குலைக்கும் அந்த ஒளிந்திருப்பவன் - ஒவ்வொருவருக்கும் உண்டு. குறிப்பாக தனிமையில் அமர்ந்து சிந்திக்கவோ எழுதவோ முனையும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த ஒளிந்திருப்பவன் படுத்தும் பாடு சிக்கலானது தான்.

என்ன எழுதுகிறேனென்று
கழுத்தில் மூச்சுவிட்டுக்கொண்டு
எட்டிப் பார்க்கிறார்கள்

இந்த அவஸ்தையை நான் ஒவ்வொரு தடவையும் பரிட்சை எழுதும் பொழுது அனுபவித்து இருக்கிறேன். ஆசிரியர் என்ன எழுதுகிறான் என்று பின்னாலிருந்து எட்டிப்பார்க்க சட்டென்று நிறுத்திக் கொண்டு விடுவேன். கழுத்துப் பகுதி அத்தனை குறுகுறுப்பானது. இப்பொழுதும் கூட எழுதும் பொழுது கூடவே வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்களிடத்தில் சொல்லிவிடுவது - பக்க வாட்டில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று தான்.

தொடர்ந்து சொல்லிக் கொண்டே போக பல கவிதைகள் எழுதியிருக்கின்றார். என்றாலும் அம்மா இல்லாத முதல் ரம்ஜானின் வலியை உணர கவிதைத் தொகுதியை வாங்கி வாசித்தால் தான் சரி.

பத்தாண்டுகள் காத்திருக்கிறார் - தன் இரண்டாவது கவிதைத் தொகுதியை வெளியிட.

நானும் இருக்கிறேனே - முதல் தொகுதியை வெளியிட என்ன தகுதி இருக்கிறது என்ற தயக்கத்தில் இன்னமும்.....

Nanban
11-10-2005, 07:30 PM
ஊக்கம் தரும் ஆக்கங்களை மட்டும் பதிவு செய்யுங்கள் நண்பர்களே - மற்றவற்றை நீங்கள் தனிமடலிலோ அல்லது இதற்கென நீங்கள் வைத்திருக்கும் தனித்திரிகளிலோ செய்து கொள்ளலாம் இல்லையா?

Nanban
13-10-2005, 01:52 PM
புத்தகம் பற்றிய விபரங்கள் -

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

முதல் பதிப்பு - 1993 இரண்டாவது 2003

வெளியீடு - உயிர்மை பதிப்பகம்.

1/29 சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை -18

தொலை பேசி : 0091 44 24993448

மின்னஞ்சல் - uyirmai@yahoo.co.in

பரஞ்சோதி
13-10-2005, 01:55 PM
நண்பன், மனுஷ்யப்புத்திரன் அவர்களின் நேர்க்காணலை இங்கே கொடுக்கலாமா?

Nanban
13-10-2005, 01:57 PM
தாராளமாகக் கொடுங்கள் -

இதற்கெல்லாம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்காதீர்கள் -

அவரின் பேட்டியைப் பற்றி ஒரு அலசல் செய்வதற்குள் அடுத்த புத்தகத்தை எழுதுவதற்கு தயார் படுத்திக் கொள்வேன் என்னை....

thempavani
13-10-2005, 02:00 PM
மனுஷ்ய புத்திரன் பற்றி வலைப்பதிவுகளில் வேறு மாதிரி செய்திகள் இருந்ததே..அது எப்படி...

பரஞ்சோதி
13-10-2005, 02:03 PM
முழுமையான நேர்காணல் - மனுஷ்ய புத்திரன் -


http://img.photobucket.com/albums/v166/desikann/hameed_pic.jpg

தீராநதி: 1983லில் வெளிவந்த உங்களது 'மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்' தொகுப்பிலிருந்து 2005இல் வெளிவந்த ஐந்தாவது தொகுப்பான 'மணலின் கதை' வரை உங்கள் கவிதைச் செயல்பாட்டில் காணப்படும் தொடர்ச்சியும் மாற்றமும் என்ன?

நான் மிகவும் இளமைக் காலத்தில் எழுதத் தொடங்கி அவை பிரசுர வாய்ப்பையும் பெற்றுவிட்டன. நான் உருவாகி வந்த பாதைகள் அனைத்திற்குமான தடயங்கள் அச்சுவடிவில் இருக்கின்றன. என்னுடைய சூழலில் பெரிய பத்திரிகைகளின் வழியே வந்து சேரும் எழுத்துக்கள் மட்டுமே ஒரே வாசிப்பனுபவமாக அப்போது இருந்தது. வைரமுத்துவும் மு.மேத்தாவும் அந்தச் சூழலில் கொடிகட்டிப் பறந்தார்கள். அவர்கள் இருவருமே மிகவும் எளிமையான சுலபமாக யாரும் உருவாக்கிவிடக்கூடிய கவிதை மாதிரியை உருவாக்கினார்கள். என்னுடைய முதல் தொகுப்பும் அந்த வகைமாதிரியிலிருந்து பிறந்ததுதான். ஒரு காலகட்டத்தில் இது தவிர்க்கவே முடியாத ஒருவிதி. உள்ளீடற்ற சமூக அக்கறைகளும் கற்பனாவாதமும் மிகுந்த அம்மொழியிலிருந்து விடுபட முதலில் பெரியாரியமும் வெகு சீக்கிரத்தில் மார்க்சியமும் உதவி செய்தன. தீவிர இடதுசாரிப் பார்வைகொண்ட கவிதைகளை மன ஓசை, புதிய கலாசாரம் இதழ்களில் எழுதினேன்.

எண்பதுகளின் பிற்பகுதி எனது அரசியல் நம்பிக்கைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடும் வீழ்ச்சிகளை சந்தித்த காலம். என் மன அமைப்பு சிதைந்து வேறொன்றாக உருமாறிக் கொண்டிருந்தது. என் கவிதையின் மொழியும் உள்ளடக்கமும் மாறத் தொடங்கியது. நான் அந்தக் கவிதைகளை மன ஓசைக்கு அனுப்பினேன். அவை வெளியிடப்படவில்லை. மாறாக மன ஓசை ஆசிரியர் குழுவுக்கும் எனக்கும் ஒரு நீண்ட கடிதப் பரிவர்த்தனை நடந்தது. புரட்சிக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றிய பிரச்சினைகள் அவை. நான் மிகவும் மனம் சோர்ந்து போனேன். அப்போது கோவை ஞானியின் தொடர்பின் மூலம் சிறுபத்திரிகைகளுடனான அறிமுகம் கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது. கோவை ஞானி என் கவிதைகளை நிகழ் இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார். அது என் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம். அங்கிருந்துதான் நவீன இலக்கியம் தொடர்பான எனது எல்லாப் பாதைகளும் துவங்கின.

எனது முதல் கவிதைத் தொகுப்பிற்கும் ஐந்தாவது கவிதைத் தொகுப்பிற்குமான இந்த நீண்ட தொலைவில் சொல்முறைகளிலும் அர்த்த தளங்களிலும் பல்வேறு மாறுதல்களையும் உடைப்புகளையும் இக்கவிதைகள் சந்தித்திருக்கின்றன. ஆனால் இக்கவிதைகள் அனைத்தும் தீர்க்கவே முடியாத நிம்மதியின்மையையும் கேவல்களையும்தான் திரும்பத் திரும்ப சொல்லி வந்திருக்கின்றன. இவை அவற்றை எழுதுகிறவனின் கேவல்கள் மட்டுமல்ல, வேறு எப்படியும் இருக்கமுடியாத, பொய்யான நம்பிக்கைகளுக்குகூட சாத்தியமற்ற ஒரு தலைமுறையின் சுய அழிவுப் பாடல்கள். மேலும் இக்கவிதைகள் ஒரு வாசகனின் முன்னிலையை திட்டவட்டமாக நிறுத்தி எழுதப்பட்டவை. உரையாடலின் சாத்தியங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தவே இக்கவிதைகளில் முயன்றிருக்கிறேன். சில சமயம் அது மயானத்தின் தனித்த அழுகுரல். சில சமயம் மலைகளில் எதிரொலித்து பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்லும் நீண்ட அழைப்பு.

தீராநதி: எழுத்து அல்லது கவிதை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது அந்தரங்கத்தில் ஏற்படுத்தும் அர்த்தம் என்ன?

இப்போதும் நிழலாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் அர்த்தமின்மையை, சாரமின்மையை கடக்கிற ஒரு முயற்சியாகத்தான் எழுதுவதைப் பார்க்கிறேன். இந்த உலகத்தில் எனக்கு வேறு எந்த வேலையும் செய்யத் தெரியாது. நான் யார் என்று சொல்லிக்கொள்வதற்கு எனக்கு வேறு பெயர்களே இல்லை. வாழ்க்கையில் எங்கோ ஒரு எலிப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். எழுத்து அங்கிருந்து வெளியேறும் ஒரு ரகசிய மார்க்கமாக இருக்கிறது. ஆனால் அது அப்படித்தான் நிகழ்கிறதா என்று சில சமயம் சந்தேகமாக இருக்கிறது. எழுத்து எந்த அளவுக்கு நம்மை விடுதலை செய்கிறதோ அதே அளவுக்கு நமது விதியின் அறுக்க முடியாத தளைகளை ஸ்தூலமடையச் செய்தும்விடுகிறது.

படைப்புச் செயல் ஒரு தந்திரம் அல்லது விளையாட்டு என்றுகூடத் தோன்றுகிறது. தன்னைத் திரும்பத் திரும்பக் கண்டுபிடித்துக் கொள்ளும் விளையாட்டு. தன்னுடைய இருப்பைத் தனக்கே மறைத்துவிடும் தந்திரம். சொற்கள் சமுத்திரத்தின் நீரைப்போல சூழ்ந்துகொண்டிருக்கின்றன. என்னுடைய கயமைகள், இடையறாது பெருகும் கசப்புகள், துரத்தப்படும், கைவிடப்படும் புராதன பயங்கள், காதல்களின் உதிரப்பெருக்குகள், நான் குழந்தையாக இருந்தபோது கண்ட பரிசுத்தமான கனவுகள் என எத்தனையோ தீவுக்கூட்டங்கள் அச்சமுத்திரத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. சொற்களின் சமுத்திரம் அத்தீவுகளின் கரைகளைத் தொடர்ந்து நனைத்தவண்ணம் இருக்கிறது.

தீராநதி: நீங்கள் இதை மிகவும் உருவகப்படுத்துகிறீர்கள் என்று தோன்றுகிறது

இதை வேறு எப்படிச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. வேறு சில நேரடியான பதில்கள்கூட இருக்கின்றன. ஒரு முறை ஏன் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு பெண்களை கவர்வதற்காக என்று பதில் சொன்னேன். நார்சிஸம், புகழாசை, பிம்பம் கட்டுதல் என்றெலாம் கூட இவற்றிற்கு பதில் சொல்லலாம். அதெல்லாம் பொய்யில்லை. ஆனால் படைப்பனுபவம் தரும் கொந்தளிப்புகளும் பேரமைதிகளும் அவ்வளவு எளியதாக இல்லை. திடீரென ஏதோ ஒன்று கலங்கிவிடுகிறது. அதைச் சொல்வதற்கு வேறு உபகரணங்கள் தேவையாக இருக்கின்றன.

தீராநதி: உங்கள் கவிதையின் பரப்பை நிர்ணயிக்கும் அக-புற தூண்டுதல்களாக எதையெல்லாம் கருதுகிறீர்கள்? உங்கள் கவிதைகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டவையா அல்லது தற்செயலானவையா?

கவிதைகளுக்கான தேர்வுகள், மன நிலைகள் தற்செயலானவை. ஒரு பைத்திய நிலையின் சிதறடிக்கபட்ட கனவு. அது அசட்டுத்தனமோ தரிசனமோ சட்டென ஸ்திதியிலிருந்து நிகழும் ஒரு பிறழ்வு. இந்தப் பிறழ்வு அறியபட்ட ஒன்றிற்கு இதுவரை அறியப்படாத ஒரு கோணத்தையும் அர்த்தத்தையும் கொடுக்கிறது. இந்த மேசையின்மேல் இருக்கும் கரடிபொம்மை நேற்றுக் காலை என்னைப் பார்த்து கண் சிமிட்டியது என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் என் கவிதையில் நான் அதை உண்மை என்று நம்ப வைத்துவிடுவேன். பிறகு ஒரு நாள் நீங்கள் சொல்வீர்கள், அந்தக் கரடிபொம்மை என்னையும் பார்த்து கண்சிமிட்டியது என்று. இனி அந்தக் கவிதையோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அது ஒரு சாதாரண கரடிமொம்மையல்ல. அது ஒரு அனுபவம், குறியீடு. இவ்வாறு மந்தமான அல்லது இறுக்கமாக உருவாக்கப்பட்ட எதார்த்த உலகின் விதிகளை தொடர்ந்து கலைப்பதுதான் படைப்புச் செயலுக்கான முக்கியமான தேர்வு. வேறு தேர்வுகளும் இருக்கலாம். ஆனால் எழுத்தின் புறவயமான நோக்கங்கள் பற்றி இங்கு நான் பேசவில்லை. கலைப் படைப்பிற்கான அடிப்படை உந்துதல் பற்றியே குறிப்பிடுகிறேன்.

ஆனால் ஒரு தீவிரமான இலக்கியப் பிரதி என்பது பிறழ்வினாலோ பைத்திய நிலையினாலோ மட்டும் உருவாவதில்லை. அது ஒரு முதல் பொறி. ஒரு ஆயத்த நிலை. அவ்வளவே. அதற்கு ஒரு திட்டம், கட்டுமானம் தேவையாக இருக்கிறது. பயிற்சியும் கடும் உழைப்பும் தன்மேல் கனத்துக்கொண்டிருக்கும் பிரதிகளின் பெரும் சுமையினைக் கடந்து மேலெழும் வைராக்கியமும் தேவையாக இருக்கிறது. நாம் உருவாகுவதில் பெரும்பாலானவை மின்மினிகள். ஆனால் ஒரு பெரும் கானகத்தை எரித்து மேலெழும் நெருப்பை கையாளுபவனே மகத்தான கலைஞனாகிறான். அந்த வகையில் இந்த யுகத்தின் கலைஞன் ஒரு புராதன மாந்திரீகனாக இருக்கும் அதே சமயத்தில் ஒரு அறிவியலாளனாகவும் இருக்கிறான். உள்ளுணர்வின் பாதைகளும் அழகியலின் தர்க்கங்களும் இயல்பாக சந்தித்துக் கொள்ளும் ஒரு புள்ளியில்தான் இந்த யுகத்தின் கலையும் இலக்கியமும் பிறக்கிறது. அதற்காக எவ்வளவோ தூரம் போகவேண்டியிருக்கிறது.

தீராநதி: உங்கள் ஆரம்பகாலக் கவிதைகளில் இடதுசாரிப் பார்வைகொண்ட சமூக அக்கறைகளும் பிற்கால கவிதைகளில் இருத்தலியல் சார்ந்த நெருக்கடிகளும் இடம்பெறுகின்றன. இந்த மாற்றம் சமூக பிரக்ஞை என்ற தளத்தில் தொடங்கி தனிமனிதவாதம் என்ற கூட்டிற்குள் முடங்கும் ஒரு பொதுவான போக்கின் விளைவு என்று கருதலாமா?

உங்களுடைய இந்தக் கணிதம் சரி என்றால் இன்னும் பத்தாண்டுகளில் நான் தீவிர ஆன்மீகவாதியாகி விடுவேன். ஆனால் அது அவ்வளவு எளிதான சூத்திரம் அல்ல. சமூகம், வாழ்க்கை குறித்த நமது விழிப்பு நிலைகள் சஞ்சரிக்கும் புள்ளிகள் தொடர்ந்து நகர்ந்தவண்ணம் இருக்கின்றன. நமது மையமாக இருப்பவை, நமது அனுபவங்களாக நான் நம்புபவை ஏதோ ஒரு கணத்தில் பனிப்பாறையில் மோதும் கப்பலைப்போல சுக்கல் சுக்கலாக நொறுங்கிவிடுகின்றன. இவை முரண்பாடுகள் அல்ல. உருமாற்றம் தொடர்ந்து நமக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கலையும் அனுபவமும் இதை மிகவும் துரிதப்படுத்துகின்றன. ஒரு கதவை திறக்கும்போதே திறக்கபடாத பத்துக் கதவுகள் அதற்குப் பின்னிருக்கின்றன.

சமூக அக்கறை, தனிமனிதவாதம் என்ற முரண்பாடு ஸ்டாலினிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக் கதை. தமிழில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த அபத்தமான புள்ளியைச் சுற்றியே இலக்கிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமூக அரசியல் பிரச்சினையை ஒட்டிய கவிதையாகட்டும், ஒரு காதல் கவிதையாகட்டும் இரண்டையுமே எனது மிக அந்தரங்கமான பிரச்சினையாகத்தான் சந்திக்கிறேன். எனக்கு சமூக அக்கறை கிடையாது. ஒரு பிரச்சினையின் வெளியே இருப்பவர்கள்தான் அதன்மீது அக்கறை காட்ட முடியும். சமூக நிகழ்வுகள், அதன் இடையறாத கொந்தளிப்புகளின் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன். பத்திரிகையாளனாகவும் படைப்பாளியாகவும் அவற்றிற்கு நான் தொடர்ந்து எதிர்வினையாற்றியிருக்கிறேன். மனித உறவுகளில் படியும் நாடகங்களை, தீர்க்க முடியாத துக்கங்களைப் பேசும் 'நீராலானது' தொகுப்பில்தான் 'அரசி', 'நீரடியில் கொலைவாள்' போன்ற கவிதைளும் இருக்கின்றன.

தீராநதி: அரசி கவிதை பற்றிக் குறிப்பிட்டீர்கள். அது உங்களுடைய மிகவும் பேசபட்ட கவிதைகளில் ஒன்று. அக்கவிதையை எழுதக் காரணமாக உங்களுக்கு தி.மு.க. அல்லது கலைஞருக்கு ஆதரவாக இருந்த ஒரு நிலைப்பாடுதான் காரணம் என்றும் ஒரு விமர்சனம் சிலரால் முன்வைக்கபட்டதே?

அத்தகைய நிலைப்பாடுகளை வைத்துக்கொள்வதுகூட ஒரு எழுத்தாளனின் உரிமைதான். நான் ஒரு திமுக காரனாக இருக்கும்பட்சத்தில் அதைச் சொல்லிக் கொள்வதில் எந்தக் கூச்சமும் கிடையாது. ஆனால் கருணாநிதியின் அரசியல்மீது நான் தொடர்ந்து முன்வைத்திருக்கும் விமர்சனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த விமர்சனம் அர்த்தமற்றது. 'அரசி' கருணாதிக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட ஜெயலலிதா எதிர்ப்பு நிலைப்பாடு என்று சொல்வது அந்தக் கவிதையின் பல்வேறு சாத்தியங்களை மறுக்கிற ஒரு முயற்சி.

ஜெயலலிதா சம்பந்தமான விவகாரங்கள் ஏதோ தவறு செய்கிற ஒரு அரசியல்வாதி சம்பந்தபட்ட பிரச்சினையல்ல. நீங்கள் அவரைத் தவறுகள் செய்கிற வேறு யாரோடும் சமப்படுத்தவே முடியாது. அவருடைய விசித்திரமான இயல்புகளும் அதிகாரத்தை அவர் சோதித்துப் பார்க்கும் விதங்களும் சுதந்திர இந்தியாவில் நடந்திராத ஒன்று. இந்திரா காந்தி எமெர்ஜென்சி மூலம் செய்த காரியங்களை இவரால் அப்படி ஒன்று இல்லாமலேயே செய்ய முடியும். மேலும் அதிகாரத்திலிருக்கும் ஒருவர் விரும்பினால் நம்முடைய அதிகார அமைப்பையும் நீதி அமைப்பையும் தனது துர்நோக்கங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் எந்தத் தடையும் இன்றி பயன்படுத்தலாம் என்பதை கடந்த சில ஆண்டுகளில் அவர் நிரூபித்திருக்கிறார். நாம் பாசிசத்திற்கு எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம் என்பதன் ஒரு அடையாளம்தான் ஜெயலலிதா என்ற சூழல். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது முழுக்க முழுக்க திகிலும் மர்மங்களும் நிரம்பியதாக மாறிவிட்டது. ஒடுக்குமுறைகள், அதிகார வர்க்கக் கொலைகள், நீதித் துறையின் அழிவு என ஒரு மிகப் பெரிய சமூக விரோத, சட்ட விரோத ஆட்சியின் கீழ் வாழ்வதன் பயங்கரத்தையும் அபத்தத்தையுமே அக்கவிதை பேசுகிறது. ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய வாழ்நாளில் ஜெயலலிதா போன்ற ஒரு பன்முகத் தன்மைகொண்ட கதாபாத்திரம் கிடைப்பது மிகவும் அரிது.

தீராநதி: உங்களுடைய கால்களின் ஆல்பம் போன்ற கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டதன் காரணம் அவை தமிழ்மனோபாவத்தில் புரையோடிப்போயிருக்கும் சென்டிமெண்ட் என்ற அம்சத்தை தூண்டுவதே என்று தோன்றுகிறது. அதாவது வெகுசன எழுத்து எவ்வாறு ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட மிகையுணர்ச்சியின் மூலம் உடனடியான கவனத்தைப் பெறுகிறதோ அதே போல நவீன படைப்பாளிகளும் வேறொரு தளத்தில் இதைக் கையாளுகிறார்கள் என்று சொல்லலாமா?

கால்களின் ஆல்பம் சென்டிமெண்ட்டான காரணங்களுக்காக கவனிக்கப்பட்டிருந்தால் அது அக்கவிதைக்கு நேர்ந்த ஒரு விபத்து என்றே சொல்லலாம். ஆனால் அக்கவிதையின் நோக்கம் அதுவல்ல. உடலுக்கும் பொதுக் கலாச்சாரவெளிக்கும் இடையிலான முரண்பாடுகளை பாலியல் சார்ந்த தளத்தில் பேசினாலும் சரி, அல்லது வேறு எந்தத் தளத்தில் பேசினாலும் சரி அவை உடனடியான சலனங்களையும் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்குவதைத் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. அக்கவிதையில் வெளிப்படும் துக்கம் தமிழ்வாசகனுக்குப் புதியது. அதுவரை அது எழுதப்படவில்லை. அது சட்டென ஒரு திடுக்கிடலை, சஞ்சலத்தை, குற்ற உணர்வை உண்டாக்கிவிடுகிறது. இந்தக் குற்ற உணர்வு எத்தனையோ விஷயங்களில் நம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருப்பதுதான். ஆனால் அது கவிதையின் துக்கமாக வாழ்க்கையின் துக்கமாக பார்க்கப்படுவதற்குப் பதில் கவிஞனின் துக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை எழுதுகிறவன் அந்த மாபெரும் துக்கத்தை எழுதுவதற்கான ஒரு கருவி மட்டுமே. கால்களின் ஆல்பம் என்னுடைய பிரச்சினை அல்ல. அக்கவிதையிலிருந்து என்னை விடுவிக்காதவரை அக்கவிதையின்மீதான வாசிப்பு சாத்தியமே அல்ல.

கவிதைக்கு உணர்வு பூர்வமான ஒரு வலுவான தளம் இருக்கிறது.. ஆனால் அது மிகையுணர்ச்சியாக மாறாமல் ஒரு படைப்பாளி கண்காணிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் மிகையுணர்ச்சி என்பது வாசகனின் ஆன்மீக நிலையின்மீதான ஒரு சுரண்டல்.

தீராநதி: வன்முறையின் அழகியல்தான் அதிகமும் உங்கள் கவிதையின் மையமாக இருந்து வருகிறது என்பதுதான் பரவலான உங்கள் கவிதைகள் பற்றிய பார்வையாக இருக்கிறது. அன்பும் நெகிழ்ச்சியும் கூட உண்டு. வன்முறையும் அன்பும் சந்திக்கும் இடமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

நான் இதை திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். வன்முறையும் குரூரமும் நம்முடைய காலத்தின் ஆதாரமான அனுபவமாக இருக்கிறது. படுகொலைகளும் சித்ரவதைகளும்தான் வன்முறை என்பதில்லை. அன்றாட வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியாமல் ஆயிரக்கணக்கான ஊசிகள் நம்முள் இறங்கிக்கொண்டிருக்கின்றன. சமூக உறவுகள், அந்தரங்க உறவுகள் என அனைத்திலும் வெளிப்படும் நுண்ணிய அதிகாரத்தை, பிறருடைய இருப்பை கசக்கி அழிக்கும் உத்திகளை, நமக்கு நாமே தேடிக்கொள்ளும் தன்னழிவுகளை எப்படி கடப்பது என்றே தெரியவில்லை. என் கவிதைகள் இதைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. அது என் விழிப்புணர்வின் மிக ஆதாரமான ஒன்றாக இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் கவிதையில் குரூரத்தைப் பற்றிய பேச்சு கருணைக்கான ஆழ்ந்த கேவலிலிருந்துதான் எழுகிறது. அன்பு என்பதே இல்லாத உலகில் வாழ்வதன் துக்கம் அளப்பரியதாக உள்ளது என்று ஆத்மாநாம் எழுதினானே, அதுதான் நான் இங்கே குறிப்பிட விரும்புவது.

சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல

அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்

விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை ரத்தம்
பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி

என்று ஒரு கவிதையில் எழுதினேன். வெளிப்பார்வைக்கு மிகவும் வன்முறை தோய்ந்ததாகக் காட்சியளிக்கும் இக்கவிதையில் வெளிப்பாட்டிற்கான பெரும் வேட்கையும் வாழ்வின் அநீதியை எதிர்கொண்டு மேலெழும் உக்கிரமும்தான் அடிப்படையாக இருக்கிறது. மேலும் அதன் இறுதியான அர்த்தத்தில் அது கசப்பையல்ல மன நெகிழ்ச்சியையே வேண்டி நிற்கிறது

தீராநதி: கவிதையை அழகுபடுத்துகிறீர்கள் என்றும் உங்கள் கவிதைகள் தொடர்பாக ஒரு விமர்சனக் கருத்து வைக்கப்படுகிறது. அதுபோல் அடுத்தடுத்து வரிகளில் ஒன்றையே பல்வேறு விதமாக அடுக்கிக்கொண்டே செல்கிறீர்கள் என்றும் விமர்சனம் இருக்கிறது. அந்த வகையில் வைரமுத்து கவிதைகளின் தன்மை உங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கான உங்கள் பதில் என்ன?

ஒரு சொல்லை அல்லது ஒரு படிமத்தை முன் பின்னாக நகர்த்துவதன் வாயிலாகவும் அதை இடம் மாற்றி கலைத்துப் போடுவதன் மூலம் அச்சொல் அல்லது படிமம் ஒரு புதிய அர்த்த வெளியைப் படைக்கிறது. சில சமயம் சொல்லின் உள்ளார்ந்த இசையை கண்டுபிடிப்பதற்கும் அத்தகைய உத்தியை கையாண்டிருக்கிறேன்.

உதாரணத்திற்கு ஒரு கவிதையைப் பாருங்கள்.

பிறகு
அவை கவனிக்கப்படவில்லை
பிறகு
அவை சரி செய்யப்படவில்லை
பிறகு
அவை பரிசீலிக்கப்படவில்லை
பிறகு
அவை சொல்லப்படவில்லை
பிறகு
அவை அனுமதிக்கப்படவில்லை
பிறகு
அவை புரிந்துகொள்ளப்படவில்லை
பிறகு
அவை மன்னிக்கப்படவில்லை
பிறகு
அவை மறக்கப்படவில்லை.

இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஒரு வாக்கிய அமைப்பில் பிறகு என்ற சொல் முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டதாக மாற்றப்படுகிறது. இதை அலங்காரம் என்றோ வைரமுத்து கவிதையின் சாயல் என்றோ சொல்வது ஒரு எளிமையான அனுமானம். தொப்பி போட்ட அனைவரையும் எம்.ஜி.ஆர் என்று சொல்வது போன்றது இது.

தீராநதி: கவிதை எழுதுபவர்கள் பலரிடமும் கவிதை கதைத்தன்மை கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. சிலர் இந்த மாற்றத்தை ஆரோக்கியமானதாகவும் சிலர் கவிதைக்கு எதிரானதாகவும் பார்க்கிறார்கள். நீங்கள் இந்த மாற்றத்தை குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?

தமிழ்க் கவிதை மரபே கதைகளின்மீது கட்டப்பட்டதுதான். எனவே இது ஒரு மாற்றம் அல்ல, தொடர்ச்சி. ஒரு கவிதை கதைத் தன்மையை கொண்டிருப்பதோ இல்லாமல் இருப்பதோ தம்மளவில் முக்கியமில்லை. அந்தக் கவிதை கவித்துவ தரிசனங்களை அடைந்தால் அது கவிதையாகப் பரிணமிக்கிறது, அடையாமல் போனால் ஒரு பதிவாக எஞ்சிவிடுகிறது. ஆனால் இந்தப் பிரச்சினைக்கு வேறொரு பரிமாணமும் இருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக எழுதப்பட்ட நவீன கவிதைகளில் பெரும்பகுதி அரூபமான உணர்வுகளின் சொற்கூட்டங்களாக இருந்திருக்கிறது. அது தமிழ் எதார்த்தத்தை, தமிழ் வாழ்க்கையை, தமிழ் நிலக் காட்சியை நிராகரித்திருக்கிறது. கலாச்சார அடையாளங்களோ பூகோள அடையாளங்களோ அற்ற ஒரு விசித்திரமான கவிதை மொழியின் மூலம் அர்த்தமற்ற புகைமூட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது. நவீன கவிஞர்கள், இடதுசாரிகள், வெகுசனக் கவிஞர்கள் யாருக்குமே சுயமான நிலப்பரப்பு கிடையாது. இது வாசகனை பெருமளவு சோர்வடையச் செய்துவிட்டது. அப்போது ஒரு கவிதையில் தெளிவான ஒரு கதையை ஒருவர் எழுதும்போது கவிதை நிலத்திற்குத் திரும்பிவரும் உணர்வையும் அணுக்கத்தையும் உண்டாக்கிவிடுகிறது. தமிழில் நவீன தமிழ் வாழ்க்கை சார்ந்த கதைகளை, அதன் சிதைவுகளை கலாப்ரியா மிகுந்த உக்கிரத்துடன் எழுதினார். பழமலய் வெற்றிபெறும் இடமும் கவிதை சார்ந்த சவால்கள் தோல்வியடையும் இடமும் இதுதான்.

தீராநதி: உங்கள் கவிதைகளைப் பாதித்தவர்கள் அல்லது உங்களது கவிதைகளுக்கான வடிவத்தை, பார்வை நீங்கள் கண்டடைய காரணமாக இருந்தவர்கள் என்று யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்.

எனக்குள் கவித்துவ பேருவகையைப் பொங்கச் செய்யும் பெரும் சக்தியாக இப்போதும் பாரதியே இருக்கிறான். இது உங்களுக்கு சம்பிரதாயமான பதிலாகக்கூடத் தோன்றலாம். ஆனால் பாரதி ஒரு வெளிச்சமாக கூடவே வந்துகொண்டிருக்கிறான். பிரமிளது படிமங்களின் காட்டாறும் நகுலனின் அச்சுறுத்தும் தனிமைப் பெருவெளியும் இரண்டு மாறுபட்ட கவித்துவ சாத்தியங்களைத் திறந்துகாட்டின. ஆத்மாநாமும் சுகுமாரனும் எனது படைப்பு மொழியில் மிகத் தீவிரமான செல்வாக்கினைக் கொண்டிருக்கிறார்கள். அன்னியமாதல், தன்னழிவு, மனமுறிவு என முடிவற்ற வெயிலால் நிரம்பிய தமிழ்க் கவிதையின் பெருநகர்ப் பரப்பை இவர்களே தீவிரத்துடன் உருவாக்கியவர்கள். தேவதேவனின் கவிதைகளில் வெளிப்படும் கருணையும், தேவதச்சனின் வினோதங்களும், எம்.யுவனின் தர்க்கப் புதிர் வெளியும் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மலைச்சாமியும் மு.சுயம்புலிங்கமும் மிகவும் முக்கியமானவர்கள். தொடர்ந்து எழுதாமல் போனார்கள் என்பது பெரும் இழப்பு. கே. சச்சிதானந்தன் கவிதைகளது மொழிபெயர்ப்புகள் ஒரு காலகட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

என்னுடைய கவிதைகளை கவிஞர்கள் பாதித்த அளவுக்கு சில புனைகதையாளர்களும் பாதித்திருக்கிறார்கள். மௌனியும் லா.ச.ராமாமிருதமும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் தங்களது கதைகளில் வெளிப்படுத்திய கவித்துவ செறிவு பல கவிஞர்களுடையதைக் காட்டிலும் மூர்க்கமானது.

தீராநதி: புதிய கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் என்று யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?

யாரைப் புதியவர்கள், யாரைப் பழையவர்கள் எனப் பிரிக்க முடியாத ஒரு சிக்கலான வயதில் இருக்கிறேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் காலத்தில் எழுதிவருபவர்களில் யூமா வாஸகி, ரமேஷ்-பிரேம், பாலை நிலவன், சங்கரராம சுப்ரமணியன், குட்டிரேவதி, மாலதி மைத்ரி, முகுந்த் நாகராஜன் ஆகியோர் மிகவும் படைப்பூக்கமுள்ள கவிகள். தமிழ்க் கவிதையின் சொல்லையும் பொருளையும் அவர்கள் தொடர்ந்து புதுப்பிக்கிறார்கள்.

தீராநதி: பெண் எழுத்தாளர்கள் இன்று மிகுந்த கவனம் பெற்று வருகிறார்கள். அவர்களது எழுத்துக்கள் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று ஒரு புத்தக மதிப்புரையில் குறிப்பிடுகிறீர்கள். இது வளர்ந்துவரும் ஒரு புதிய போக்கிற்கு எதிரான குரல் ஆகாதா?

என்னுடைய அந்தக் கருத்தை காலச்சுவடு பெண் எழுத்தாளர்கள் தொடர்பாக கசடற இதழ் வெளியிட்ட ஒரு இழிவான குறிப்புடன் சேர்த்து உள்நோக்கத்துடன் பிரசுரித்தது. பெண் எழுத்தாளர்களின் காவலனாக காலச்சுவடு ஆடிவரும் நாடகத்திலிருக்கும் வேடிக்கை பற்றி இங்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் இன்று உருவாகும் பெண் எழுத்தாளர்கள் தொடர்பாக எழும் கவனம், சர்ச்சைகள் அவர்களது பாலியல் அடையாளங்கள் சார்ந்ததே தவிர, அவர்களுடைய பிரதிகளின் உள்ளார்ந்த பிரச்சினைகள் பற்றியல்ல என்பதைத்தான் அதில் எழுதியிருந்தேன். துயரமும் வலியும் நிறைந்த பெண்களின் சொற்கள் ஊடகங்களின் பாலியல் கிளுகிளுப்புகளாக சர்ச்சை என்ற பெயரில் மாற்றப்படுகின்றன. மேலும் பெண்களின் பிரதிகள்மீதான அர்த்தமுள்ள பேச்சுக்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. வெகுசன ஊடகங்கள், சிறுபத்திரிகை காழ்ப்புகள்தாண்டி பெண்கள் தங்களுக்கான பேச்சுக்களையும் விவாதங்களையும் சுயேச்சையாகவும் தீவிரமாகவும் நடத்த வேண்டும்.


தீராநதி: ஒரு பத்திரிகையாசிரியராகவும் பதிப்பாளராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த வகையில் புதியதாக எழுத வருபவர்களின் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகம் இருக்கிறது. நீங்கள் வாசித்த வரைக்கும் புதிய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகளின் நோக்கம் அல்லது வாழ்க்கை தொடர்பான பார்வை, அதன் கலகம் குறித்த உங்கள் விமர்சனம் என்ன?

நான் முக்கியமானவர்களாக கருதும் சில இளம் கவிஞர்களிடம் கூட மொழியின்மீதான பிடிமானம் மிகவும் பலவீனமாக இருப்பதாகவே தோன்றுகிறது. நோக்கமின்றி சிதறடிக்கப்பட்ட சொற்களும் படிமங்களும் பெரும் ஆயாசத்தை உண்டாக்குகின்றன. இளம்படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வை பற்றிக் கேட்கிறீர்கள். இன்று ஒரு உதிரிக் கலாசாரம் ஏற்படுத்தும் குருட்டு வன்முறையும் குழப்பங்களும் தாண்டி பெரிய கலாச்சார பிரக்ஞை எதுவும் தமிழ் கவிஞர்களிடம் செயல்படவில்லை. கலகங்களில் ஒளிந்திருக்கும் பாசாங்குகள் மிகவும் புளித்துவிட்டன. எதார்த்த வாழ்க்கையின் குரூரமான வன்முறை எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத இந்தக் கலகங்கள் ஒரு சௌகரியமான மத்தியதர வாழ்க்கைக்கான ஏக்கம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கொண்டவையல்ல.

இன்னொருபுறம் பொய்யும் அசட்டுத்தனமும் சுயமோகமும் வக்கிரமும் கவிதையின் முகமூடியை அணிந்து கொள்ள முற்படும் சூழல் தீவிரமடைந்துவிட்டது. இன்று தமிழில் வெளிவரும் பெரும்பாலான கவிதைத் தொகுப்புகளைக் காட்டிலும் தினப்பத்திரிகைச் செய்திகளும் சாலையோர விளம்பரப் பலகைகளும் அர்த்தச் செறிவு கொண்டவையாகவும் சுவாரசியமானதாகவும் உள்ளன. பிரசுர வாய்ப்புகள் பெருகிவிட்டன. எல்லாமே பார்வைக்கு வந்துவிடுகிறது. எந்தக் குப்பையின் மீதும் சாதகமான விமர்சனங்களை உருவாக்கும் வழிமுறைகள் இன்று அனைவருக்கும் தெரியும். தனக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்தோ தனது சம காலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்தோ எந்த அக்கறையும் கவலையும் இன்றி ஒருவர் தன்னைப் பற்றிய பிம்பங்களைக் கட்டமைக்க முடியும். இலக்கியம் சார்ந்த பேச்சுக்களைவிட வெகுசன ஊடகங்களில் தம்மைப் பற்றி வரும் குறிப்புகளும் புகைப்படங்களும் முக்கியமாகிவிட்டன.

தீராநதி: முந்தைய சிறுபத்திரிகைச் சூழலுடன் ஒப்பிடும்போது, தற்போது இலக்கிய மதிப்பீடுகள் மிகமோசமாகச் சரிந்திருக்கிறது என்னும் கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

மதிப்பீடுகள் என்பது ஒரு பொது கலாச்சார உணர்வு. நம்முடைய சமூகப் பண்பாட்டு வாழ்வில் என்ன மதிப்பீடுகள் நிலவுகின்றனவோ அவைதான் சிறுபத்திரிகைச் சூழலில் வெளிப்படும். ஒரு கதை எழுதுபவரோ கவிதை எழுதுபவரோ இதைத் தாண்டிய மதிப்பீடுகளைக் கொண்டவராக இருக்க முடியும் என்பது நம்முடைய ஒரு கற்பனை. பொற்காலம் குறித்த கற்பிதங்கள் என்பதே மரபான மனோபாவம்தான். முக்கியமானதும் முக்கியமல்லாததுமான காரியங்கள் எல்லாக் காலங்களிலும் இலக்கிய உலகில் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

முன்பு சிறுபத்திரிகைச் சூழலில் இயங்கியவர்களுக்கு இல்லாத பல வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. மிகத் தீவிரமான இலக்கிய மதிப்பீடுகளைப் பேசியவர்கள் வெகுசன ஊடகங்களில் அவர்களுக்காக ஒரு ஜன்னல் திறந்ததும் அதற்கேற்ப எவ்வளவு வேகமாக தன்னை ட்யூன் செய்துகொள்கிறார்கள் என்று பார்ப்பது மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. வெளிப்படையான சமரசங்கள், பிறழ்வுகள் பற்றித்தான் வாசகர்கள் பார்க்கிறார்கள். மதிப்பீடுகளின் காவலர்கள் பலர் ரகசியமாக மேற்கொள்ளும் பேரங்களும் சமரசங்களும் மிகக் கடுமையானவை. உன்னத மதிப்பீடுகள் இன்று அப்பாவி வாசகனை ஏமாற்றும் ஒரு இலக்கிய அதிகாரம். ஒரு வியாபாரப் பொருளும்கூட.

அய்யன் வள்ளுவன் சிலையைவிட ஒரடியேனும் உயரமாக தங்கள் சிலையைச் செதுக்கிவிடவேண்டும் என்பதுதான் பல தமிழ் எழுத்தாளர்களின் கனவு. அதற்குத்தான் இவ்வளவு பதட்டம், ஆள் சேர்ப்பு, சக எழுத்தாளன் மீதான வன்முறை எல்லாம். யாரையும் மிகச் சிறிய விலைகளைக் கொடுத்து விலைக்கு வாங்கலாம். இந்தக் காலகட்டம் மிகவும் குழப்பமானது. இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

தீராநதி: காலச்சுவடு பத்திரிகை இரண்டாவதாக தொடங்கப்பட்டதிலிருந்து நீண்ட காலம் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தீர்கள். திடீரென்று அதிலிருந்து பிரிந்து வந்து உயிர்மை பத்திரிகையைத் தொடங்கினீர்கள். இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்றைக்கு வரைக்கும், ஏன் நீங்கள் காலச்சுவடு பத்திரிகையிலிருந்து பிரிந்து வந்தீர்கள் என்பது தொடர்பாக எதுவும் சொன்னதில்லை. ஏன் இந்த மௌனம்?

இது மௌனம் அல்ல, நான் எந்த விதத்திலும் பொருட்படுத்தத் தேவையில்லாத நபர்களை முற்றாக புறக்கணிக்க விரும்புகிறேன். உயிர்மையின்மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் அற்பத்தனமான பல தாக்குதல்கள் காலச்சுவடினால் ஏற்பாடு செய்யப்பட்டன. நேரடியான மறைமுகமான பல குறிப்புகள் தொடர்ந்து சளைக்காமல் எழுதப்படுகின்றன. இவற்றை எழுதும் கைகளுக்கு இவற்றைத் தாண்டி பொருட்படுத்தத் தக்க வேறு எதையுமே உருவாக்க முடியாது. உயிர்மை ஓராண்டு நிறைவு விழாவில் பேசிய எழுத்தாளர்கள் அனைவரையும் அவமானப்படுத்தி ஒரு பொய்யான பதிவை காலச்சுவடு பிரசுரித்தபோது மட்டும் கடுமையாக எதிர்வினையாற்றி ஒரு கடிதம் அனுப்பினேன். அதைப் பிரசுரித்து பதில் சொல்வதற்குப் பதில் ஒரு கோழைத்தனமான குறிப்பு மறைமுகமாக எழுதப்பட்டது. தம்முடைய எதிரிகளை பத்திரிகை முதலாளிகளுக்கும் போலீசிற்கும் காட்டிக் கொடுப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் என்னைக் காட்டி கொடுப்பவன் என அதில் கிசு சிசு எழுதினார்கள். என்னுடைய செயல்பாடுகள் வெளிப்படையானவை. காட்டிக் கொடுப்பதை பற்றிய பயம் எனக்குக் கிடையாது.

தமிழ் இலக்கிய சூழலில் காலச்சுவடு பத்திரிகை ஒரு காலத்தில் ஆற்றிய பங்கு நேர்மறையானது. ஆனால் ஒரு காலகட்டத்தில் காலச்சுவடிற்குள் அற்பத்தனமும் சிறு ஆதாயங்களுக்காக ஏற்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணிகளும் முதலாளியை சந்தோஷப்படுத்துவதற்காக அதன் இலக்கிய தொழிலாளிகளுக்குள் நடந்த அடிபிடிகளும் மூச்சுத் திணற வைத்தன. புண்ணைத் தேடி அலையும் ஈக்களைப்போல எதிராளியின் பலவீனங்களை தொகுத்தே உயிர்வாழும் ஒரு நபரின் கீழ் வேலை செய்வது ஒரு கட்டத்திற்கு மேல் சாத்தியப்படவில்லை. இது குறித்த தகவல்கள் ஒரு வாசகனுக்கு எந்த விதத்திலும் முக்கியமல்ல.

தங்கள் கம்பெனி எழுத்தாளர்களின் செத்தப் பிரதிகளை ஊடகங்களின் வெளிச்சத்தில் உயிரூட்டுவதற்காக கூச்சமற்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு புறம், தங்களுக்கு உவக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக ஒரு கூலிப்படையையே வளர்த்துக்கொண்டிருப்பது இன்னொரு புறம் இதுதான் இன்றைய காலச்சுவடின் இலக்கியச் செயல்பாடு. இத்தகைய வேலைகளைச் செய்யும் நபர்களை இலக்கியம் சார்ந்த பேச்சுக்களில் ஒரு தரப்பாகக்கூட எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. காலச்சுவடை முன்னிட்டு தமிழ்ச் சூழலில் அவ்வப்போது ஏற்படும் சர்ச்சைகள் அனாவசியமானவை.

தீராநதி: சுந்தர ராமசாமியுடனான உங்கள் நீண்ட கால உறவு இதனால் பாதிக்கப்பட்டதா?

என்னுடைய வாழ்வில் என் தந்தையைவிட எனக்கு முக்கியமானவராக அவர் இருந்திருக்கிறார். ஆனால் இந்த உலகில் சொந்தப் பிள்ளைகளின் தரப்பு மட்டுமே முக்கியமானது என்பதை மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அவர் எனக்கு உணர்த்தினார். காலச்சுவடிலிருந்து நான் வெளியேறிய சந்தர்ப்பத்தில் எனது முடிவு பற்றி ஒரு வார்த்தை கேட்பார் என்று மிகவும் எதிர்பார்த்தேன். அது அவருடைய ஆறுதலையோ சகாயத்தையோ எதிர்பார்த்து அல்ல. அவர் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர் மௌனமாக அமர்ந்திருந்தார். அது மிகவும் தந்திரமான மௌனம். உயிர்மை இதழை ஆரம்பித்தபோது அதில் எழுதப்போகும் எழுத்தாளர்களைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்தபோது அதில் ஜெயமோகன் பெயரும் இருந்தது. உடனே அமெரிக்காவில் இருந்து சுராவிடமிருந்து மௌனம் கலைந்து ஒரு மின்னஞ்சல். 'காலச்சுவடில் ஜெயமோகனை எதிர்த்து எழுதிவிட்டு இப்போது எப்படி அவரை உயிர்மையில் எழுதச் சொல்லலாம்?' என்று கேட்டு. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஜெயமோகனை நான் எதிர்த்து எழுதினால் நான் அவரை வாழ்நாளெல்லாம் எதிரியாகப் பாவிக்கவேண்டுமா? அப்படி பாவிக்கும் சந்தர்ப்பம் வந்தால்கூட எனது தலைமுறையின் மாபெரும் கலைஞன் என்று சொல்லிவிட்டுத்தான் அதைச் செய்யவேண்டியிருக்கும். ஜெயமோகன் சம்பந்தமாக எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் சுராவுக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கும் மனச்சிக்கல்கள் எதுவும் எனக்குக் கிடையாது. 'உங்களுடைய எந்த தார்மீக மதிப்பீடுகளிலும் எனக்கு நம்பிக்கையில்லை' என்று சுராவுக்கு எழுதினேன். ஏனெனில் அவை சமயசந்தர்ப்பங்களுக்கேற்ப தன்னை இடம் மாற்றி சுயசமாதானம் தேடிக்கொள்பவை.

தீராநதி: முன்பு காலச்சுவடு பத்திரிகை ஆசிரியராகவும் இப்போது உயிர்மை பத்திரிகை ஆசிரியராகவும் நீங்கள் கவனித்த வரையில் சமீபகாலங்களில் தீவிர இலக்கியங்களுக்கு வாசகர்கள் கூடியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்வீர்களா?

கல்வியும் மக்கள்தொகையும் விரிவடைந்திருக்கும் விதத்தோடு தர்க்க ரீதியாக ஒப்பிட்டால் இந்தப் பரப்பு சுருங்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் தனிப்பட்ட முறையில் எழுத்தாளனுக்கும் சிறு பத்திரிகையாளனுக்கும் செயல்படுவதற்கான களங்கள் சற்றே அதிகரித்திருக்கிறது என்று தோன்றுகிறது. இது ஒரு சாதகமான மாற்றம்.

தீராநதி: பதிப்பும் பத்திரிகையும் உங்கள் முழுநேரத் தொழிலான பிறகு நீங்கள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது. ஒரு படைப்பாளியாக இந்த இழப்பு உங்களுக்கு மிகவும் கடுமையானது இல்லையா?

பதிப்பு, பத்திரிகைத் தொழிலால் எழுதுவது குறைகிறது என்று சொல்ல மாட்டேன். சில சமயம் மன வறட்சி நிரம்பிய பருவங்கள் வருகின்றன. வேறொரு பருவத்திற்காகக் காத்திருக்கிறேன். ஆனால் எழுதாத காலங்களில் இழப்புணர்வு கடுமையானதாக இருக்கிறது. மிகுந்த பதட்டம் வந்துவிடுகிறது.

தீராநதி: எழுத்து எழுத்தை ஒட்டிய பணிசார்ந்து உங்களுடைய உடனடியான மற்றும் நீண்ட கால கனவுகள் என்ன?

எனக்கு பெரிய திட்டங்கள் இல்லை. தற்செயல்களினால் உருவாகும் விதியின் பாதையில் நான் அதிகம் நம்பிக்கை கொண்டவனாகி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்னும் சில வேலைகள் செய்வேன். அவை முக்கியமானதாகவோ முக்கியத்துவமற்றதாகவோ இருக்கலாம்.

தீராநதி: ஒரு கவிஞராக இன்றைய சமூக சூழ்நிலை குறித்த உங்கள் அவதானிப்பு என்னவாக இருக்கிறது?

சமூகம் குறித்த பொதுவான கருத்துக்களால் பயனில்லை. நாம் குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்தே நிலைப்பாடுகளை விவாதிக்க முடியும். ஆனால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு வெளியை தீவிரமாகப் படைத்து வருகிறோம் என்ற ஒரு உணர்வு எனக்குள் ஆழமாக இருக்கிறது.

சந்திப்பு : தளவாய் சுந்தரம் ( குமுதம் தீராநதி )

Nanban
13-10-2005, 02:29 PM
மனுஷ்ய புத்திரன் பற்றி வலைப்பதிவுகளில் வேறு மாதிரி செய்திகள் இருந்ததே..அது எப்படி...

விளங்கவில்லை - கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்?

Nanban
13-10-2005, 03:04 PM
முதல் வாசிப்பில் என்னுடைய விமர்சனத்தை ஆமோதித்த அவருடைய வார்த்தைகள் -


தனக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்தோ தனது சம காலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்தோ எந்த அக்கறையும் கவலையும் இன்றி

இதைத் தான் நான் விமர்சனத்திலும் வைத்திருக்கிறேன். நேற்றைய / இன்றைய வாழ்க்கையைப் பற்றிய பார்வைகளும் மதிப்பீடுகளும் தான் முக்கியமானவைகளாக இருக்கின்றனவே ஒழிய எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளோ திட்டங்களோ பேசப்படவே இல்லை. அது தான் நான் கேட்கிறேன் - தீர்க்க தரிசனப் பார்வைகள் இனி ஒரு போதும் வரவே போவதில்லையா?

என்னுடைய மற்றொரு அனுபவம் - எழுதாமல் போகும் நாட்களில் எப்படி ஒரு பைத்தியம் போல உணர்கிறேனோ - அதை அப்படியே பிரதிபலிக்கும் -




எழுதுவது குறைகிறது என்று சொல்ல மாட்டேன். சில சமயம் மன வறட்சி நிரம்பிய பருவங்கள் வருகின்றன. வேறொரு பருவத்திற்காகக் காத்திருக்கிறேன். ஆனால் எழுதாத காலங்களில் இழப்புணர்வு கடுமையானதாக இருக்கிறது. மிகுந்த பதட்டம் வந்துவிடுகிறது.

இதைப் பற்றி எத்தனையோ கவிதை விமர்சனங்களில் எழுதிவிட்டேன். எழுதுங்கள் - எழுதிக் கொண்டே இருங்களென்று. என்னைப் போலவே எழுதுவதை தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கிறார்களென்று உணரும் பொழுது ஆறுதலாக இருக்கிறது. மிகப் பெரிய படைப்பாளிகள் என்று புகழப்பட்டவர்களும் கூட இறுதியில் என்னையும் உங்களையும் போன்ற மனிதர்கள் என்று அறியும் பொழுது.

தொடரும் - மறு வாசிப்பும் - மேலும் விமர்சனங்களும்.

வெளியிட்ட பரஞ்சோதிக்கு -இதுபோன்ற ஆக்கபூர்வமான ஒத்துழைப்பிற்கும் ஊக்கத்திற்கும் - மிக்க நன்றியும் அன்பும்....

இளசு
15-10-2005, 12:58 AM
நண்பன்,
உங்களின் இந்தப்பதிப்பில் மனுஷ்யபுத்திரனில் இருந்து என் கணக்கைத் துவக்குகிறேன்.
முதலில் படித்தவற்றை இத்தனை விசாலாமாய் விரித்துப் பதிவு செய்யும் நேர்த்திக்கும், முனைப்புக்கும் பாராட்டுகள்.
எனக்கும் மனுஷ்ய புத்திரன் ஒரு புதிர்தான். உங்கள் பதிவும் பரம்ஸ் தந்த தீராநதி பேட்டியும் ஓரளவு வெளிச்சம் காட்டுகின்றன.
என் நண்பர் மௌரியன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்னேயே இவரின் படைப்புகள் பரிச்சயம் என்றாலும், விளங்கக் கடினமாய் இருந்ததால் இதுவரை விலகியே இருந்திருக்கிறேன்.
(அதிகம் விளங்காமலேயே திஸ்கி மன்றத்தில் இவரின் கவிதைகளை ஒரு திரியில் பதித்திருக்கிறேன்.)
அவரின் முதல் கவிதைத் தொகுப்பு என்னிடம் உண்டு. மீண்டும் வாசிக்க தூண்டிவிட்டது உங்களின் பதிவு.

கவிஞர்களின் நிலப்பரப்பு, சமூக அக்கறை/தனிமனித தாக்கம், உதிரிக்கலாச்சாரம்.. போன்ற அவரின் கருத்து வீச்சுகள் ஆழமாய்ப் பாய்கின்றன.. தீராநதி பேட்டியில்.
ஆனாலும் சிற்றிலக்கிய குழுக்களுக்குள் தீராமல் நடக்கும் சண்டை இங்கேயும் வெளிப்பட்டு மனம் வருந்துகிறது.

நண்பனுக்கும் , பரம்ஸூக்கும் நன்றி..

Nanban
15-10-2005, 08:01 PM
நண்பன்,

ஆனாலும் சிற்றிலக்கிய குழுக்களுக்குள் தீராமல் நடக்கும் சண்டை இங்கேயும் வெளிப்பட்டு மனம் வருந்துகிறது.



இங்கேயா....? விளங்கவில்லை. இலக்கியச் சண்டைகளுக்குள் மூக்கை நுழைக்கும் எண்ணமில்லை. நீங்கள் தான் குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

மேலும் எந்த ஒரு சிற்றிலக்கிய பத்திரிக்கைகளையும் வாசித்ததில்லை. அதனால் அங்கு நிகழும் சச்சரவுகள் பற்றிய அறிமுகம் இல்லை.

தய்வு செய்து எதனால் அப்படி உணர்ந்தீர்கள் என்று எழுதுங்கள்.

அறிய ஆவலாக உள்ளது....

இளசு
15-10-2005, 10:01 PM
நண்பன்,
நான் சொன்னது - மனுஷ்யபுத்திரன், சுந்தரராமசாமி பிரச்னை - ஜெயமோகன் பற்றிய அவர்களுகிடையேயான சர்ச்சை - இவை தீராநதி பேட்டியில் வெளிப்பட்டதைப்பற்றி.
அரிய படைப்பாளிகள் ஒருவருக்கொருவர் மனதை அரித்துக்கொள்ளும் நிகழ்வால் எப்போதும் மனம் வருந்தும் என் வேதனை அது.
(இதைப்படித்தது நேற்று - இன்று சுரா-வின் மரணச்செய்தி)..

என்ன சொல்ல? ஏன் இவ்வளவு சிக்கல் முடிச்சுகள் ? நிலையில்லா மனித வாழ்வின் உறவுகளுக்குள்?
பெருமூச்செறிகிறேன்..

Nanban
16-10-2005, 04:04 PM
ஆமாம் - சிற்றிலக்கியப் பத்திரிக்கைகளில் தங்கள் குழு மனப்பான்மையை வெளிப்படுத்தி சண்டையிடத்தான் செய்கின்றனர். என்றாலும் சில சமயங்களில் இலக்கியவாதிகளுக்கு ஏதாவது ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் முடிவெடுக்காமல் நடுநிலைமையில் இருக்க முடியாதே - அவர்கள் அறிந்திருக்கத் தான் செய்கிறார்கள் - எல்லோருக்கும் நல்லவராக எப்பொழுதும் எல்லாவிடத்தும் இருக்க முடியாது என்று. இன்னும் சொல்லப்போனால் நாமும் கூட அந்தச் சூழ்நிலையில் ஏதாவது ஒருபக்கம் சாய்ந்தே தான் ஆவோமோ என்னவோ?

Ignorance is the bliss என்பார்கள்.

அதுவரையிலும் அது தான் சிறந்தது.....

rambal
05-11-2005, 02:05 AM
அருமையான பதிவு..
இந்தப் பதிவை கவனிக்காமல் நான் வேறு விளிம்பின் நுனியில் ஆரம்பித்து விட்டேன்.
அதை இங்கு சேர்த்து விடலாமா? நண்பனின் அனுமதியும் அண்ணனின் தயவும் தேவை..
ஏனெனில், இரண்டு பேரின் எழுத்தும் கதை தேர்வும் வேறு ரகமாக இருந்தாலும் நோக்கம்
ஒன்றுதான். நல்ல கதைகளை மன்றத்திற்கு அறிமுகப்படுத்தவும் அதை விவாதிப்பதும்தான்
கலந்து சொல்லுங்கள்.
உங்களின் பதிலை எதிர்பார்த்து

இளசு
05-11-2005, 06:30 AM
ராம்.
உன் தொடர் அப்படியே இருக்கட்டும்.
சட்டென தேடிப்படிக்க ஏதுவாய்.
பின்னர் தொகுக்கும் நிலை ஏற்பட்டால் ஒன்றாக்கலாம்- நண்பர் நண்பனின் அனுமதியுடன்.