PDA

View Full Version : ராமு



பாரதி
27-08-2005, 02:24 PM
தேதியில்லா குறிப்புகள்

ராமு

தூத்துக்குடில புதுசா கட்டுன வீட்டுக்கு போயிருந்த சமயம். சகுந்தலாக்கா ஒரு தடவ ஊர்ல இருந்து வர்றப்பதான் ராமுவ கொண்டு வந்திருந்தாங்க. அக்காதான் அதுக்கு ராமுன்னு பேரு வச்சாங்க.

ராமு பொறந்து பத்து பதினஞ்சு நாள்தான் ஆகியிருக்கும். சின்ன ஒரு பீடிங் பாட்டில்ல கொஞ்சம் பால மாத்திரம் எடுத்துகிட்டு கைல கொண்டு வந்திருந்த கூடைலயே கொண்டு வந்திருந்தாங்க. கண்ணக்கூட திறக்காம ம்ங்..ம்ங்.. ந்னு ராமு முனகுனத பாக்க ஒரு பக்கம் சந்தோசமா இருந்துச்சு. இன்னொரு பக்கம் பாவமா இருந்துச்சு. அத மாத்ரம் அவங்க அம்மாகிட்ட இருந்து பிரிக்கிறது சரியான்னு அக்கா மேல கொஞ்சம் கோவம் கூட வந்துச்சு. இருந்தாலும் ராமுவ பாக்க பாக்க ஆசயா இருந்துச்சு.

கிட்டத்தட்ட மஞ்சளும்,காவியும் கலந்த மாதிரி ஒரு கலர்ல ராமு இருந்துச்சு. நெத்தில மாத்திரம் வெள்ள வெளேர்னு நாமம் இழுத்த மாதிரி கலர். அதுவும் கூட அதுக்கு நல்லாத்தான் இருந்துச்சு.

அதுக்கு பாலு கொடுக்குறதுக்குன்னு ஒரு பீடிங் பாட்டில் வாங்குனோம். சீனி எல்லாம் சேக்கக்கூடாதுன்னு கேள்விப்பட்டிருந்ததால வெறும் பால மாத்ரம்தான் கொடுத்தோம். நைட்ல தூங்கும் போது அதுக்கு குளிருமோ என்னமோ, என் பக்கத்துல வந்து ஒராஞ்சுகிட்டே படுத்துக்கும்.

கொஞ்ச நாள்ளேயே அது எல்லார்கிட்டயும் நல்லா ஒட்டிகிச்சு. அடையாளமும் தெரிஞ்சுகிச்சு. பக்கத்துலயே ஒரு சின்ன வெர்ட்டினரி ஆஸ்பத்திரி இருந்துச்சு. அங்க கொண்டு போயி காண்பிச்சு தேவையான ஊசி எல்லாம் போட்டுகிட்டு வந்தோம்.

சாதம், பிஸ்கட்..னு சாப்பிட்டு மடமடன்னு வளர ஆரம்பிச்சிருச்சு ராமு. அதுல ஒரு சின்ன சுவாரஸ்யம் என்னன்னா... ராமு தூங்குறப்ப மனுசன் தூங்குற மாதிரிதான் அதாவது நாலு காலயும் மேலே தூக்கிகிட்டுதான் தூங்கும். நானும் எத்தனயோ தடவ அத மாத்த முயற்சி பண்ணி தோத்துப்போயிட்டேன். ஒரு வேள அதுக்கும் தானும் ஒரு மனுசந்தான்னு நெனப்போ என்னமோ..!

சின்னப்புள்ளயா இருக்குற வரைக்கும் வீட்டுக்குள்ளேயே அது பண்ற அட்டகாசத்த அம்மா பொறுத்துகிட்டாங்க. ரெண்டு மூணு மாசத்துக்குள்ளேயே ராமு பெரிசாயிட்டதால அத மாடிப்படிக்கு கீழ கொண்டு போயி விட்டாங்க. ஒடனே வீட்டுக்குள்ள ஓடி வந்து படுத்துகிச்சு. இது வேலைக்காகாதுன்னு ஒரு செயின் வாங்கிட்டு வந்து அத அதோட கழுத்துல கட்டுறதுக்குள்ள படாத பாடு படுத்திருச்சு. சரி பகல்லதான் வேண்டாம். நைட்லயாவது வீட்டுக்கு வெளியில படுக்க வைக்கணும்னு முயற்சி பண்ணோம். மொத நாளு அது பிடிச்ச முரண்ட பாக்கணுமே... ஒரே சத்தம். அழுகுற மாதிரி... நைட்ல தூங்க முடியல. சரின்னு வீட்டுக்குள்ள கொண்டு வந்திட்டோம்.

அடுத்த நாளு முயற்சி தொடர்ந்திச்சு. ஒரே அழுகைதான். ஆனா நாங்க கண்டுக்கல. ரெண்டு மூணு நாள்ல சத்தம் எல்லாம் நின்னுருச்சு. சரி..பரவால்ல..பழகிருச்சு போலன்னு நாங்க நெனச்சோம். ஒரு நாள் ராத்திரில ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு வெளிய வந்து பாத்தோம். ராமுவ எங்க காணோம்ன்னு தேடுனா... கடசிலதான் கண்டு பிடிக்க முடிஞ்சது.. ரெண்டாவது மாடியில, தண்ணித்தொட்டிக்கு கீழ இருந்த இடத்துல போயி சுகமாத் தூங்கிகிட்டு இருக்குது..!!

நான் வேலைக்கு போறதுக்கு முன்னாடியும் வந்ததுக்கு அப்புறமும் என்னோட விளையாடணும்னு தினம் எதிர்பார்க்கும். நான் எப்படா வருவேன்னு வாசல் கேட்கிட்டேயே காத்துகிட்டு இருக்கும். வண்டி சத்தம் தெருமுனையில கேட்கும் போதே வாசல்ல ரெடியா இருக்கும். நான் வந்துட்டாப்போதும்.. வால ஆட்டுறதும்,நாக்கால காலத்தடவுறதுமா ரொம்ப பாசமா இருக்கும். நான் உட்காந்துகிட்டு இருந்தா மடியில வந்து படுத்துக்கும். படுத்தா உடனேயே சுகமா வேற தூங்கிரும். மெதுவா அத தடவிக்கொடுத்துகிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்கும். வேற வேலையில்லைன்னா நானும் அப்படித்தான் செஞ்சுகிட்டு இருப்பேன்.

கொஞ்ச நாள் பந்து விளையாடுவோம். நான் பந்த தூக்கிப்போட்டா அத வாயில கவ்விகிட்டு வந்து கொடுக்கும். மறுபடி தூக்கி எறிவேன். இப்படியா பொழுது நல்லா போகும். பக்கத்து வீட்ல குடியிருந்தவங்க கூடவும் ராமு நல்லா பழக ஆரம்பிச்சிருச்சு.

ராமுவுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லாம இருந்துச்சு. கொஞ்ச நாள் கழிச்சுதான் ராமுவுக்கும் அந்தப்பழக்கம் இருந்துச்சுன்னு தெரிய வந்துச்சு. அதாவது வீட்ல இருக்குற சின்ன சின்ன பொருட்கள எல்லாம் எடுத்துட்டுப்போய் வீட்டுக்குப்பின்னாடி தோட்டத்துல போயி யாருக்கும் தெரியாம குழி தோண்டி புதச்சு வக்கிறது. எனக்குத் தெரியும்னு
நான் காண்பிக்கல.

ஒரு ரெண்டு நாளு நான் வெளியூருக்கு போயிட்டு வந்தேன். அதுல ராமுவுக்கு கொஞ்சம் கோபம் போல. என்னடா சரியா விளையாட வரலயேன்னு அத சமாதானப்படுத்தலாம்னு பந்து எங்க இருக்குன்னு தேடுனா காணோம். கடைசில அது எங்க இருந்துச்சு தெரியுமா...? ராமு அந்தப் பந்த தோட்டத்துல ஒரு குழி தோண்டி ஒளிச்சு வச்சிருந்திச்சு!!

அடிக்கடி மண்ணத்தோண்டுறதாலயோ என்னமோ தெரியல... ராமுவோட பாதங்கள்ல எல்லாம் ஒட்டுண்ணி வந்திருச்சு. அப்பப்ப அத எல்லாம் எடுத்துட்டு அத ரொம்ப சுத்தமா வச்சுக்க முயற்சி பண்ணினோம். அப்ப எல்லாம் ஒழுங்கா கீழ்படிஞ்சு நடந்துக்கும் ராமு. எந்த சேட்டையும் செய்யாது.

இப்படியா ராமு வாழ்க்கையில ஒரு அங்கமா மாறிடிச்சு. ராமுன்னு ஒரு வார்த்தை கூப்பிட்டா போதும். உடனேயே முன்னாடி வந்து நிக்கும். நில்லுன்னா நிக்கும்; உக்காருன்னா உக்காரும். வீட்ல ராமு இருந்ததால திருடன் பயம் எதுவும் இல்லை. யாராவது புது ஆளுன்னா குரைச்சு அடையாளம் காண்பிச்சுரும். ஆனா யாரையும் அது கடிச்சதே இல்லை..!!

வீட்டுக்கு வர்ற விருந்தாளிக எல்லாம் மொதல்ல பயப்படுவாங்க. ஆனா அது என்கூட இருக்குறத பார்த்த பின்னாடி கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க.

இப்படி இருக்கும்போது வீட்ல எல்லோரும் ஊருக்கு போயிருந்த போது நான் இல்லாதப்ப பக்கத்து வீட்ல இருக்குறவங்க அதுக்கு வேண்டியதெல்லாம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. ஒரு நாளு காலைல வெளியில வந்து பாக்கும் போது ராமு வழக்கமா இருக்குற மாதிரி இல்ல. பாலு, சோறு எதையும் மோந்து கூடப்பாக்கல.

சரீன்னு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன். அங்கேயும் அது அமைதியில்லாம இருந்துச்சு. டாக்டர் ரெண்டு ஊசி போட்டாரு. அப்புறமா பாலுல கலந்து கொடுக்கணும்னு ரெண்டு மாத்திரையும் கொடுத்தாரு. ஆனா பாலுல கலந்து கொடுத்தாலும் அத அது குடிக்கல. வாயில இருந்து லேசா எச்சில் வடிய ஆரம்பிச்சிகிட்டு இருந்துச்சு. சரி.. ஒரு வேளை இனிப்பை சேர்த்து கொடுத்தா குடிக்கும்னு பார்த்தா..ம்ம்..ஹம்ம்... பிரயோசனமே இல்ல.

அன்னைக்கு முழுக்க அது எதுவுமே சாப்பிடல. எதுத்த வீட்ல இருந்த பாய்க்கு இந்த விசயம் தெரிஞ்சதா.. உடனே அவரும் ராமுவ பாக்க வந்தாரு. அவரு சொன்னாரு... ராமுவுக்கு யாரோ மருந்து வச்சிருக்குற மாதிரி இருக்கு. மந்திரிச்சா சரியாப்போயிரும்னு சொன்னாரு. எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் ராமுவுக்கு உடம்பு சரியானா போதும்னு இருந்துச்சு. அவர் வெளக்குமாத்தையும் தண்ணியையும் தெளிச்சி ஏதோ சொல்லி ராமு தலையில தட்டினார். எல்லாம் சரியாப்போயிடும்னு சொன்னார்.

அடுத்த நாள் நிலமை இன்னும் மோசமாச்சு. என்ன பக்கதுலய போக விடாம உர்.உர்ன்னு கிட்டு இருந்துச்சு. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. பக்கத்து வீட்ல இருந்த அன்புவோட மனைவிதான் அப்ப அப்ப பாலு வச்சாங்க. ஆனா அது குடிக்க முயற்சி பண்ற மாதிரியே தெரியல.

அன்னைக்கு வேலைக்கு நடுவுல ராமுவ பாக்க வீட்டுக்கு வந்தேன். அது மாடிப்படிக்கு கீழ இல்ல. அத எல்லாம் விட்டுட்டு தோட்டத்துல நல்ல வெயில்ல படுத்து கெடந்துச்சு. வயிறெல்லாம் ஒட்டிகிட்ட மாதிரி இருந்துச்சு. வெயிலுக்கு மறைவா இருக்கட்டும்னு ஒரு கட்டிலை எடுத்து வந்து போட்டு ஒரு போர்வை போட்டு நிழலா இருக்குற மாதிரி செஞ்சேன். பக்கத்துலேயே தண்ணி எல்லாம் கொண்டு போய் வச்சேன். வெறும் தண்ணிய மாத்திரம் அது கொஞ்சம் கொஞ்சம் குடிச்சது.
அதுக்கு அடுத்த நாளு சாயந்திரம் ராமு பக்கத்துல போனா லேசா வாடை அடிக்கிற மாதிரி இருந்துச்சு. அப்பவும் அது என்ன பக்கத்துல வர விடல. எந்திரிச்சி நடக்குற அளவுக்கு அதோட உடம்புல சக்தி சுத்தமா இல்ல. டாக்டர் கிட்டே போய் சொன்னேன். வந்து பாத்துட்டு அவர் கை விரிச்சிட்டார்.

ராமு படுற வேதனைய கண்கொண்டு பாக்க முடியல. அதையெல்லாம் சொல்றதும் அத்தன ஈஸியில்ல. அன்பரசன்கிட்ட பேசினேன்.ஏதாச்சும் செய்யணுமேன்னு... அவர் சொன்னார் : இனிமேல் ராமு இருக்குறது கஷ்டம்னு சொல்றாங்கண்ணே. என்ன செய்யலாம். யார்கிட்டயாவது தூக்கிட்டு போகச் சொல்லிடலாமான்னு கேட்டார். துக்கம் எனக்கு தொண்டைய அடைக்க வேற வழி தெரியாம தலைய ஆட்டுனேன். நான் வெளிய போயிட்டு வர்றதுக்குள்ள அவர் சொன்ன ஆட்கள் வீட்டுக்கு வந்து ராமுவத்தூக்கிட்டுப் போயிட்டாங்க. எங்க கொண்டு போனாங்கன்னு கேட்குற அளவுக்கு கூட மனசுல தெம்பு இல்ல.

அந்த நேரத்துல அன்பு செஞ்ச உதவிய வாழ்நாள் முழுசுக்கும் மனசுல வச்சிருப்பேன். அதுக்குப்பின்னாடி யாரையும் வீட்ல சேத்துக்க எனக்கு விருப்பமே இல்ல. எதையும் எதிர்பார்க்காம நம்ம அன்பை மாத்திரமே எதிர்பார்த்த அது மாதிரி ஒரு ஜீவன பிரிஞ்சது பத்தி என்னத்த சொல்ல....

அன்பு வச்சிட்டு, அதத் தொலைச்சிட்டு வேதனைப்படுறது மாதிரி உலகத்துல துன்பமான விசயம் எதுவுமே இல்லை. அதுக்கு அன்பை வைக்காமலே இருக்கலாம்னு தோணிச்சு.

இக்பால்
27-08-2005, 02:41 PM
போன முறை ஊருக்குப் போனபொழுது இளைய மகள் கோழிக்குஞ்சு கேட்டார். வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த முறை ஊருக்குப் போனவுடனே சென்னையிலே அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் MGM போய் விட்டு ஒரு நாள் முழுவதும் கழித்துவிட்டு திரும்பியவுடன் ஓடிச் சென்று கோழிக்குஞ்சைப் பார்த்த குழந்தைகள் நான்கும் சத்தமே இல்லை. உணவு ஒத்துக் கொள்ளாமல் இறந்து இருந்தது. வீட்டில் இல்லாமல் வெளியில் கூட்டிப் போன நான் தான் காரணமாம். இனி கோழிக்குஞ்சு வேண்டாம் என இப்பொழுதே இளைய மகள் சொல்லி விட்டார்.

பாரதி தம்பி...மனதில் சுமையாக உங்கள் தேதியில்லா குறிப்புகள் தங்குகிறது.

-அன்புடன் இக்பால்.

pradeepkt
27-08-2005, 02:49 PM
இன்னொரு கனமான பதிவு.
பாரதியண்ணனின் பதிவுகளைப் படிப்பதே ஒரு மாதிரி கனம் கூடிக் கொள்கிறது மனதில். அப்படியே எங்கள் சின்ன வயது நினைவுகளைக் கிளறி விடுகிறீர்கள் அண்ணா.

hemavathi
27-08-2005, 03:49 PM
நெஞ்சை உருக்கும் பதிவு......

pradeepkt
27-08-2005, 03:54 PM
வாருங்கள் ஹேமாவதி
உங்களைப் பற்றி அறிமுகம் பகுதியில் சொல்லுங்களேன்

mukilan
27-08-2005, 05:50 PM
அன்பு வச்சிட்டு, அதத் தொலைச்சிட்டு வேதனைப்படுறது மாதிரி உலகத்துல துன்பமான விசயம் எதுவுமே இல்லை. அதுக்கு அன்பை வைக்காமலே இருக்கலாம்னு தோணிச்சு
அனுபவ பூர்வமான வார்த்தைகள்.அதுவும் என்ன காரணம் என்றே தெரியாமல் கை நழுவும் அன்பு சற்றுக் கொடுமைதான்.எல்லோருக்குமே இந்த துக்க தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.அவ்வப் பொழுது இது போன்ற நிகழ்வுகளை படிக்கும் பொழுது மீண்டும் வந்து வருடி விட்டுப் போகின்றன.வழக்கம் போலவே நண்பர் பாரதியின் சிறந்த படைப்பு.

பாரதி
31-08-2005, 02:00 PM
கருத்துக்கள் கூறிய திரு. இக்பால், பிரதீப், ஹேமாவதி, முகிலன் ஆகியோருக்கு நன்றி. உங்கள் மனதில் கனம் ஏற்படுத்தும் எண்ணம் இல்லை. ஆனாலும் நான் அடிக்கடி கூறி வந்தது போல மனதை பாதித்த நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

pradeepkt
06-09-2005, 04:34 AM
நான் நீங்கள் கனம் ஏற்படுத்துவதாகச் சொல்லவில்லை.
உங்கள் பதிவுகள் எங்களை அறியாமலே உட்சென்று இப்பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் எங்களாலும் இவற்றை எங்கள் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளோடு ஒத்துப் போக முடிகிறது.

gragavan
06-09-2005, 08:01 AM
தூத்துக்குடியில் பழைய ஹார்பருக்கு எதிர்ப்பக்கம் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் மூன்றாண்டுகள் இருந்தோம். அது தந்தையார் அங்கு வேலை செய்து கொண்டிருந்த நேரம். நல்ல பெரிய காம்பவுண்டு சுவருக்குள் மூன்று வீடுகள். சில கெஸ்ட் ஹவுஸ்கள். நிறைய இடம். நிறைய மரங்கள்.

ஒரு நாள் பகற்பொழுதில் எல்லாரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டிற்கு முன்னேயும் நிறைய இடம். இங்கே எல்லாரும் என்பது நான், என்னுடைய தங்கை மற்றும் பாட்டி. அம்மா வீட்டுக்குள்ளும் அப்பா அலுவலகத்திலும் இருந்தார்கள்.

ஒரு நாட்டு நாய்க்குட்டி எப்படியோ பெரிய காம்பவுண்ட் கதவைத் தாண்டி உள்ளே வந்து விட்டது. சின்ன நாய். மெல்லிசாக இருந்தது. அழகென்று சொல்ல முடியாது. நாங்கள் மூவரும் இருப்பதைப் பார்த்து அங்கு வந்தது. பாட்டி ஒரு பிஸ்கட்டை எடுத்துப் போட்டார்கள். சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக் கொண்டது. பிறகு கொஞ்சம் சோறு. கொஞ்சம் அது. கொஞ்சம் இது என்று வீட்டில் ஒட்டிக் கொண்டது.

வந்த நாளிலேயே அதற்கு ராஜா என்று பெயரைச் சூட்டியாகி விட்டது. அதுவும் அந்தப் பெயருக்கு அன்றே பழகிக் கொண்டது.

வீட்டுக்குள் விட மாட்டோம். வெளியில் திரிய எவ்வளவு இடமிருக்கிறது. நன்றாகத் திரியும். கட்டிப் போடுவோம். குளிப்பாட்டுவோம். பேசாமல் இருக்கும். பொதுவாக நாய்கள் குளிக்க மறுக்கும் என்பார்கள். ஆனால் இந்த நாயை நானே தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டுக் குளிப்பாட்டினாலும் பேசாமல் இருக்கும்.

போட்டதைச் சாப்பிடும். அதே நேரத்தில் மீன் முள்ளுக்கும் அலையும். வீடு மீன்பிடித் துறைமுகத்துக்கு எதிரில் இருந்ததால் மரத்திற்கு அடைய வரும் பறவைகள் மீன்களையும் மீன் முட்களையும் போடும். அதற்கு அலையும் ராஜா. இத்தனைக்கும் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் அசைவம் இருக்கும்.

வீட்டிற்கு வருகின்றவர்களிடம் மரியாதையாக இருக்கும். அதே நேரத்தில் சிலரை விடவே விடாது. அதற்கு பால்காரன் மேல் அப்படி ஒரு கோவம். அவர் வரும் பொழுதெல்லாம் குலைத்துத் தள்ளிவிடும். அவரும் குச்சியைப் பிறக்கிக் கொண்டு அடிக்க வருவார். நாங்கள் வந்து இருவரையும் சமாதானப் படுத்துவோம்.

மற்றொன்று குறிப்பிட்டே ஆக வேண்டும். மீன் முள் பொறுக்கினால் நாங்கள் அடிப்போம். நான் அல்லது என் தங்கை. அப்பொழுதெல்லாம் பேசாமல் இருக்கும். அடியை வாங்கிக் கொள்ளும். எடுத்து வந்த மீன் முள்ளைத் தொடாது. நாம் அடிப்பதை நிறுத்தியதும் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அல்லது படுத்துக் கொள்ளும். வேறு யாராவது வெளியாட்கள் கையை ஓங்கினால் அவ்வளவுதான்.

நன்றாக வளர்ந்தது ராஜா. வீட்டு நாய்க்குரிய அத்தனை பண்புகளுடனும் வளர்ந்தது. வீட்டில் ஒரு அங்கத்தினராகவே ஆனது.

ஒரு நாள் காலை வீட்டு வாசலில் நாயைக் காணவில்லை. இரவில் அவிழ்த்து விட்டிருப்பதால் எங்கேயாவது வெளியே போயிருக்கும் என்று தேடினோம். ஆனால் கிடைத்ததோ ராஜாவின் உடல்தான். வண்டி எதுவும் அடித்த மாதிரியும் தெரியவில்லை. உடம்பில் ஒரு காயமில்லை. ஆனால் இறந்திருந்தது.

தங்கையினரின் கண்ணீர் ரெண்டு நாட்களுக்கு நிற்கவில்லை. எல்லாருக்கும் ஒருவித தவிப்பும் துக்கமும் இருந்தது. யாரும் நிலையில்லை. இப்படியே எல்லாரும் இருப்பதைச் சகிக்க மாட்டாமல் அப்பா யாரிமோ இருந்து ஒரு நாயை வாங்கி வந்தார்.

மாலையில் நான் நாயை எங்கே என்று தேடிப் போனால் பாத்ரூமுக்குள் முயலைப் போல குட்டியாகப் படுத்திருந்தது. அது ஒரு பாமரேனியன் நாய்க்குட்டி. வெள்ளை வெளேரென்று.

அதற்குப் பெயரே குட்டி என்று நிலைத்து விட்டது. ராஜாவைப் பராமரித்ததிலும் குட்டியைப் பராமரித்ததிலும் வேறுபாடுகள் பல உண்டு. குட்டி எப்பொழுதும் வீட்டிற்குள்தான் இருக்கும். மெத்தை மேலெல்லாம் தேவைப்பட்டால் ஏறும். அதுவும் கூட அதற்கு எப்பொழுதாவது தோன்றினால்தான். இந்தக் களேபரத்தில் நாங்கள் ராஜாவை மறந்திருந்தோம்.

அதை அடிக்க முடியாது. எல்லாரையும் கடிக்க வரும். அப்பாவிடம் மட்டும் அதற்குப் பயம். அம்மாவிடமும் அடி வாங்கும். நான் அடிப்பதேயில்லை. தங்கைகள் சில சமயம் அடிப்பார்கள். நான் வேலைக்கு வந்து விட்ட பொழுது. ஆகையால் எனக்கும் குட்டிக்கும் அவ்வளவு தொடர்பில்லாமல் போயிற்று.

பிறகு கோயில்பட்டிக்குக் குடி பெயர்ந்தோம். ஒரு முறை நான் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். குட்டி என்னிடமும் பாசமாகத்தான் பழகும். அன்றும் அப்படித்தான் பழகியது. நான் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அது கீழே முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது.

ஏதோ சொன்னேன். பேசாமல் இருந்ததும் அதட்டலாக ஏதோ சொன்னேன். படக்கென்று தவ்வி என் கைவிரல் நுனியைக் கடித்து விட்டது. லேசாக சதை கிழிந்து விட்டது. நான் குய்யோ முய்யோ என்று கத்தவும் எல்லாரும் ஓடி வந்தார்கள்.

பாட்டி வெங்காயத்தை இடித்து விரலில் கட்டினார்கள். குட்டிக்கு ஊசி போட்டிருந்ததால் பிரச்சனையில்லை. இருந்தும் நானும் ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டேன்.

அன்றைக்குத்தான் மீண்டும் ராஜா எங்கள் நினைவுக்கு வந்தது.

gragavan
06-09-2005, 08:02 AM
நான் நீங்கள் கனம் ஏற்படுத்துவதாகச் சொல்லவில்லை.
உங்கள் பதிவுகள் எங்களை அறியாமலே உட்சென்று இப்பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் எங்களாலும் இவற்றை எங்கள் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளோடு ஒத்துப் போக முடிகிறது.உண்மை பிரதீப். பாரதியண்ணன் குறிப்பிடும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நமது வாழ்வில் நிகழ்ந்தவைகளோடு ஒத்துப் போய் பழைய நினைவுகளைக் கிண்டி விடுகின்றன.

pradeepkt
06-09-2005, 12:41 PM
உங்கள் நினைவலைகளைத் தூண்டி அருமையான பதிவுக்கும் வழி வகுத்திருக்கிறது ராகவன்.
அருமை.

sarcharan
07-02-2006, 09:56 AM
வணக்கம் ஹேமாவதி
உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் சொல்லுங்களேன்....
தங்கள் படைப்பு நன்றாக இருந்தது.

பென்ஸ்
07-02-2006, 10:12 AM
அதுதான் தலை சொல்லியாச்சுல்ல... அது மாமி ஐடி என்று...

sarcharan
07-02-2006, 01:26 PM
"உயிர்களிடத்தில் அன்பு வேணும்..." சொன்னது பாரதி..
"உயிர்களிடத்தில் அன்பு வைத்தது..." இந்த பாரதி..

இளசு
02-12-2006, 08:26 PM
நன்றி பாசம் வைப்பதில் இந்த ஜீவனுக்கு ஈடு ஏது?

சிறுவயதில் முறைப்படி அடக்கம் செய்து அடுத்தநாள் பாலூற்றிய
அந்த அனுபவத்துக்குப் பின் , பாரதி சொன்னதுபோல் மீண்டும்
அன்பு வைத்து வளர்க்க மனதில் தெம்பில்லை!

சில மாதங்களில் வளர்ந்துவிடுவதைப்போல்
சில வருடங்களில் நிச்சயம் மறைந்துவிடுவதும் நிதர்சனம்..
அந்த நிச்சயம் தரும் பயம்...

பாரதியின் மனவயல் பதியன்களில் மற்றொரு நற்செடி இப்பதிவு...

பாரதி
04-12-2006, 05:04 PM
தன் மனதில் இருந்த நினைவுகளை நெஞ்சில் நிற்கும் படி கருத்துத்தந்த இராகவனுக்கு நன்றி. கருத்து தெரிவித்த சரவணனுக்கு நன்றி. இப்பதிவை மேலெழுப்பிய அன்பான அண்ணனுக்கு என் உளமார்ந்த அன்பு.

ஓவியா
04-12-2006, 06:38 PM
பாரதியண்ணாவின் ராமுவும்
ராகவனின் குட்டியும் என் மனக்கண்ணில் எங்கள் ஜானியை நினைவுக்கூர்ந்தன....


சான்றோர்களின்
பதிவுக்கு நன்றிகள் பல

pradeepkt
05-12-2006, 03:52 AM
தன் மனதில் இருந்த நினைவுகளை நெஞ்சில் நிற்கும் படி கருத்துத்தந்த இராகவனுக்கு நன்றி. கருத்து தெரிவித்த சரவணனுக்கு நன்றி. இப்பதிவை மேலெழுப்பிய அன்பான அண்ணனுக்கு என் உளமார்ந்த அன்பு.
பாரதியண்ணே, எங்ஙன இருக்காப்புல... ஒண்ணும் செய்தியே இல்லை??? இந்தியப் பயணம் அடுத்து எப்போ?

பாரதி
07-12-2006, 07:39 AM
கருத்துக்கு மிக்க நன்றி ஓவியா.

அன்பு பிரதீப், தற்போது நான் வீட்டில்தான்..!!

பூமகள்
30-01-2008, 05:26 AM
ரொம்பவே கனக்க வைத்த பதிவு..!! மன உணர்வுகளை இத்தனை எதார்த்தமாய் யாராலும் விவரிக்க முடியாது. அப்படியே நான் பேசுவது போல இருந்தது.

அதிலும் அந்த கடைசி வரிகள்...!

அன்பு வச்சிட்டு, அதத் தொலைச்சிட்டு வேதனைப்படுறது மாதிரி உலகத்துல துன்பமான விசயம் எதுவுமே இல்லை. அதுக்கு அன்பை வைக்காமலே இருக்கலாம்னு தோணிச்சு.
உண்மை உண்மை...!

மனம் உடைந்து கண்கள் பனிக்க வைத்த பதிவு..!!
பாராட்டவும் தெம்பில்லை. இன்னும் இன்னும் நிறைய எழுதனும் பாரதி அண்ணா. :icon_b:

பாரதி
22-03-2008, 07:55 AM
கருத்துக்கு நன்றி பூமகள்.