PDA

View Full Version : ஃபீனிக்ஸ் பறவைmukilan
26-08-2005, 11:02 PM
ஃபீனிக்ஸ் பறவை

மதுரையில் இருந்து வந்த ஜெயவிலாஸ் பேருந்து விளாத்திகுளத்துக்குள் நுழைந்ததுமே பிரத்யேகமாய் அடிக்கும் முந்திரி தோடு எரிந்த வாசனை மூக்கைத் துளைத்து தூக்கத்தை துரத்தியது. நன்றாக இழுத்து சுவாசித்தேன்.
சிறு வயதில் உடல் நிலை சரியில்லை யென்றால் மருத்துவரிடம் போக அப்பா என் கிராமத்தில் இருந்து இங்கு அழைத்து வருவார். அப்பொழுதில் இருந்தே எனக்கும் இந்த முந்திரித் தோடு எரிந்த வாசனைக்கும் சினேகம்.
அப்பா! தாத்தா பாட்டி வீட்டுக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்?... என் மகள் மிர்ரா கேட்டாள்.
என் சொந்தக் கிராமத்திற்குச் செல்ல பேருந்து எப்பொழுது வரும் எனத் தெரியாதால் விசாரித்துச் சொல்கிறேன் என்றேன்.

விளாத்திகுளமும் நன்கு பரிச்சயமான ஊர்தான் என்றாலும் நான் ஊரை விட்டுச் சென்று 10 ஆண்டுகள் ஆகி விட்டதால் ஊரின் அமைப்பு மாறிப் போயிருந்ததில் ஒன்றும் பிடிபடவில்லை.என் ஊர் செல்லும் பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டோம்.

பாரதி ராஜாவின் படங்களில் வரும் வாய் பிளந்து கிடக்கும் கரிசக்காடுதான் என் ஊர்ப்பக்கம். அவர் சொல்கின்ற படியே "நாளை மழை பெய்யும்" என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையாய் வாழும் மனிதர்கள் உள்ள பூமி! அந்தக் கரடு முரடான சாலையில் ஓட்டுனரின் அதி திறமையால் மட்டுமே 18 கி.மீ தூரம் உள்ள என் ஊரை 1 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
சிறு வயது நினைவுகள் வந்து எனை அவ்வப்பொழுது தாலாட்டுவதுண்டு. ஆனால் இன்று என் மகளோடு நானும் குழந்தையாகிக் குதூகலித்துக் கொண்டிருந்தேன்.என் முக மாறுதல்கள் கண்ட என் மனைவி என்னை வியப்போடு பார்த்ததில் எனக்கு அசாதாரணமாகத் தோன்றவில்லை.பாவம் அவளுக்கு என் மனதின் ஓட்டங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்னங்க ஊர் வந்திட்டது என எழுப்பினாள் என் மனைவி.
பேருந்து விட்டு இறங்கியதும் அப்பாவைத் தேடினேன். கூட ஒரு வாலிபனை அழைத்து வந்திருந்தார். எங்கள் சுமைகளை வாங்கிக் கொள்ளவாம்.சரி யென்று அவனிடம் கொடுத்து விட்டு அவன் பெயர் கேட்டென். முத்துவேல் என்றான்.மிர்ராவை அப்பா தூக்கிக் கொண்டே எங்களை வரவேற்றார். ஊரின் மாற்றங்களைக் கவனித்தேன். புதிது புதிதாக டிஷ் ஆண்டனாக்கள் வீடுகளில் முளைத்து இருந்தன. கண்மாய் ஓரமாய் ஒரு பெரிய தண்ணீர்த் தேக்கத் தொட்டி "சீவலப் பேரிக் கூட்டுக் குடி நீர்த் திட்டம்" என்ற பெயருடன் நின்றிருந்தது. கூரை வீடுகள் ஒன்று கூட இல்லை.
தெருக்கள் சிமெண்ட் பூச்சுத்தரையாய் இருந்தன. வீடுகள் கூட மாறிப் போயிருந்தன. சித்தப்பா, மாமா, அத்தை என எல்லோரையும் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தேன்.

நம்ம ஊரு இப்போ ரொம்ப மாறிடுச்சு போலத் தெரியுது மாமா என ஆச்சர்யப் பட்டுக்கொண்டே கேட்டாள் என் மனைவி.

ஆமாம்மா! முன்ன விட இப்பொ நிறைய வசதிகள் வந்திட்டது என்றார் அப்பா.

வரும் வழி நெடுக விசாரிப்புகள். எப்போ வந்தே? இப்பொழுதுதான் பேருந்தில் இருந்து இறங்கி வந்ததைப் பார்த்தாலும் "நல்லா இருக்கியா?" என்பதன் மாற்றாக எங்கள் ஊரில் வழங்கப் படும் ஒரு சொற்றொடர்.
எப்போ வந்தீன்னு ஒரு வார்த்தை கேக்கக் காணமத்தா! என்று பெரும் பாலான பெண்கள் வேறு ஊர் செல்லும் போது உறவினர்கள் தங்களைக் கண்டு கொள்ளாமை பற்றி அங்கலாய்த்துக் கொள்வார்கள்.
இப்போதான், என அனைவருக்கும் பதில் கூறிக் கொண்டே வந்தேன். ஊர் சிறிய ஊர் என்பதால் அனைவரும் முறை வைத்து அழைப்பது வழக்கம். அதனால் கூப்பிடுபவருக்குத் தகுந்தாற் போல இப்போதான் அத்தை, இப்போதான் மாமா, பெரியம்மா எனக் கூறிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

வீடு வந்ததும் ஆரத்தழுவி அம்மா வரவேற்றாள் மருமகளையுந்தான்.அவர்கள் இருவரும் தூரமாக இருப்பதாலோ என்னவோ என் மனைவிக்கும் , அம்மாவிற்கும் இடையில் மாமியார் மருமகள் சண்டை வந்ததே இல்லை.அதோடு மட்டுமில்லாமல் என் மனைவி மிகச் சாந்தமானவளுங்கூட.

குளித்து சாப்பிட்டவுடன் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என முத்து வேலுவை அழைத்தேன்.
மிர்ரா அப்பா நானும் வருவேன் எனத் தொற்றிக் கொண்டாள். முத்துவேலுவுடன் கண்மாய்க் கரைக்குச் செல்லும் வழியில் இன்னும் பல விசாரிப்புகள்.
ஆளே மாறிப் போயிட்டேயப்பா எனவும், அவங்க தாத்தா போல நல்லா ஓங்கு தாங்கா வளர்ந்திருக்கான் என்றும் பல விமர்சனங்கள். ஊரின் மாற்றங்கள் இன்னும் பிரமிக்க வைக்கக்கூடிய அளவில் இருந்தது. சந்தோஷப் பட்டுக்கொண்டேன்.
என்ன படிச்சிருக்கே முத்துவேல் என்றேன்.
பத்தாவதுங்க! அதுக்கப்புறம் ஆத்தா பள்ளியூடம் போதுன்னுருச்சி, அதான் உங்கப்பாருகிட்ட வேலைக்குச் சேந்துகிட்டேன் என்றான்.

கண்மாய்க் கரையின் பட்டாம் பூச்சிகளைக் கண்டதும் மிர்ராவின் குதூகலத்திற்கு அளவேயில்லாமல் இருந்தது. முத்துவேல் அவற்றைப் பிடித்துக் கொடுத்தான். மிர்ராவுக்கு இது போதாதா நன்கு ஒட்டிக் கொண்டாள்.
நீண்ட நாள் கழித்து ஊரைப் பார்த்ததில் மனது நிறைந்திருந்தது. இங்கேயே தங்கி விட மனது துடித்தது. வீடு திரும்பினால் சிறு கூட்டம் ஒன்று. எல்லாம் உறவினர் தான்.
என்ன தம்பி ஊரெல்லாம் எப்படி இருக்கு என்று அன்போடு விசாரித்தனர்.
இங்கேயே தங்கலாம்னு இருக்கேன் எனச் சொன்னதும் அம்மாவிற்குச் சந்தோஷம்.
என் மனைவி குழப்பத்துடன் பார்த்தாள்.
வந்திருந்த கூட்டத்தில் மிர்ரா வயதை விட ஒரு 2 வருடம் மூத்த பருவமுடைய பையன் ஒருவனும் இருந்தான்.

டே சுரேஷ்! பாப்பாவைச் சேர்த்து கிட்டு விளையாடப் போங்க என அப்பா அந்த சிறுவனிடம் கூறினார். மிர்ராவும் அவனுடன் விளையாடச் சென்றாள்.
என்ன இது கையில என்றான்.
இதூ ப்பட்டாம் பூச்சி! முத்துவேல் மாமா பிடிச்சிக் கொடுத்தாங்க என்றாள் மிர்ரா.

எந்த முத்துவேல் மாமா -இது சுரேஷ் அந்த சிறுவன் தான்
அதோ அங்க இருக்காரே! அவருதான் என முத்து வேலுவைக் காட்டினாள்.

அதைக் கேட்ட சுரேஷோ சிரிக்க ஆரம்பித்து அது முத்து வேலு; முத்து வேல் மாமா எல்லாம் இல்லை என்றான்.

அய்யோ வயசில மூத்தவங்களை மாமான்னுதான் சொல்லனும்னு எங்கப்பா சொல்லி இருக்காங்க- மிர்ரா

அவனை எல்லாம் மாமானு சொல்லக் கூடாதுனு எங்கப்பா சொல்லி இருக்காங்க ஏன்னா அவன் கீழ் சாதி என்றவன் ஏ! முத்து வேலு என்றான்.
சுரேஷின் சத்தம் கேட்டு என்னங்க கூப்பிட்டீங்களா ? என்று ஓடோடி வந்தான் அந்த 20 வயது வாலிபன்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பேரதிர்ச்சியாகப் போய் விட்டது.

எல்லோரும் போன பின் என் மனைவியப் பார்த்து நாளை ஊருக்குக் கிளம்புகிறோம் எடுத்து வை என்றேன்.இப்பொழுதும் குழப்பத்துடனேயே பார்த்தாள் என் மனைவி.

அம்மாவும் கூட ஏண்டா என்றாள்.

பல அறிவியல் மாற்றங்கள் வந்தும், பல அறிஞர்கள், பண்பாளர்கள் எனப் பலருங் கூடி அழிக்க முற்பட்ட சாதி மட்டும் இன்னும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுவதை எப்படிப் புரிய வைப்பேன் எனக் குழப்பத்தில் இருந்தேன்.

சாதின்னா என்ன தாத்தா? ஏன் முத்து வேல் மாமாவை மாமானு சொல்லக் கூடாதுன்னு மிர்ரா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிட்டாலும் நான் இந்த ஊரில் இருந்தால் மிர்ரா எதிர் நோக்கப் போகும் பயங்கரம் அறிந்து எனது மாற்றத்திற்கான காரணம் புரிந்து எங்கள் பயணத்திற்கான் ஆயத்த வேலைக்குத் தயாரானார். அம்மாவும் தான். என் மனைவி மட்டும் வழக்கம் போல குழம்பிக் கொண்டே என் தோளில் வந்து சாய்ந்தாள்.

இது எனது முதற் சிறு கதை! எனவே தவறாமல் சீர் தூக்கிப் பார்த்து தங்களின் விமர்சனங்களைப் பதிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
முகிலன்.

pradeepkt
27-08-2005, 06:47 AM
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாடியது போய்
என்று தணியும் இந்த மேல்சாதி மோகம் என்று பாட வேண்டி இருக்கிறது.
உங்கள் முதல் கதை நன்றாக அமைந்து விட்டது முகிலன். இன்னும் நீங்கள் செல்லப்போகும் நீண்ட பாதைக்கு அருமையாக ஒரு அடி முன்னால் எடுத்து வைத்து விட்டீர்கள்.
வாழ்த்துகள்.

மன்மதன்
27-08-2005, 06:50 AM
நல்ல ஆரம்பம்.. குடும்ப சூழ்நிலை, கிராமப்பக்கம், பாசம், சாதிவெறி அனைத்தையும் தொட்டு முதல் கதை படைத்த முகிலன் இனி நிறைய எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. முதல் கதை மாதிரி தெரியவில்லை.. வாழ்த்துக்கள்..

பிரியன்
27-08-2005, 06:54 AM
வாழ்த்துக்கள் முகிலன்.....

ஒரு படைப்பாளியின் சிந்தனை மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் பொழுதுதான் அந்த படைப்புகள் அர்த்தப்படுகின்றன். இன்றைக்கு சமுதாயாத்தில் தீர்க்க முடியாத புற்றூநோயாய் இருக்கும் சாதியையும் அது எந்த அளவிற்கு மனிதர்களின் இதயங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக ஆனால் கூர்மையாக சொல்லிவிட்டீர்கள். மிகச் சிறப்பான சிறுகதை. அதை உணர்த்தும் மிகச் சரியான தலைப்பு.

தங்கள் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்...

வாழ்த்துக்கள் முகிலன்..

mukilan
27-08-2005, 07:01 AM
நண்பர்கள் பிரதீப், மன்மதன் மற்றும் பிரியனின் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி. சந்தோஷம் கொடுக்கிறது தங்களின் ஊக்கம்.

பாரதி
27-08-2005, 03:29 PM
முதலில் என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேர்த்தியாகவும் நேரடியாகவும் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சமூகபார்வையின் அவசியம் எத்தனை பேருக்கு புரிகிறது?? இதுவரை கற்பனையில் மட்டுமே கேள்விப்பட்ட ·பீனிக்ஸ் பறவையாய் சாதியும் மதமும் கற்பனையான விசயங்களாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

mukilan
29-08-2005, 06:21 AM
முதலில் என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேர்த்தியாகவும் நேரடியாகவும் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சமூகபார்வையின் அவசியம் எத்தனை பேருக்கு புரிகிறது?? இதுவரை கற்பனையில் மட்டுமே கேள்விப்பட்ட பீனிக்ஸ் பறவையாய் சாதியும் மதமும் கற்பனையான விசயங்களாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
நன்றி பாரதி! நான் சற்று தாமதமாகவே தங்களின் பதிவைக் கண்ணுற்றேன். தங்களின் பெயர் கொண்ட முண்டாசுக் கவிஞன் நீதி, உயர்ந்த மதி, கல்வி அன்பு உடையவர்தான் மேல்சாதி எனக் கூறிச் சென்றான். அப்படியானால் இங்கே யார் மேல் சாதி?

gragavan
29-08-2005, 07:34 AM
அற்புதமான கதை மிகிலன். ரசித்துப் படித்தேன்.

ஊர்ப்பக்கங்களை விவரிக்கும் பொழுது எனக்கு அப்படியே அந்த ஊர்க் காட்சிகள் கண்ணில் படமாக ஓடியது. பழக்கமான இடமென்பதால் இருக்கலாம்.

முடிவுதான் முத்தாய்ப்பு.

சரி. அதென்ன பெயர் மிர்ரா? கனடா நாட்டுப் பெயரா?

mukilan
29-08-2005, 08:01 AM
நன்றி நண்பர் ராகவன். நமது ஊர்ப்பக்கம் தான். மிர்ரா என்பது புதுவை அன்னை மிர்ரா அல்பஸ்ஸா. பிரெஞ்சு நாட்டிலே பிறந்து அரவிந்த ஆசிரமத்தின் பால் உள்ள் ஈர்ப்பால் இந்தியாவிலேயே தங்கி விட்டார்.

gragavan
29-08-2005, 08:05 AM
ஓ அரவிந்த ஆசிரம அன்னையா?

அதை மிஹ்ஹா அல்லது மிழ்ழா என்று பிரெச்சுக்காரர்கள் ஒலிப்பார்கள். நானும் பிரஞ்சு கற்றுக்கொள்ள முயன்று வாந்தி எடுத்து விடாதே என்று ஆசிரியர் சொல்ல வேண்டியதாயிற்று.

அப்புறம் இந்த முந்திரி ஓட்டு வாசன....அடாடா! எனக்க்கு ரொம்பப் பிடிக்கும் மோந்து பாத்ததுமே மயக்கும்....எங்கயாச்சும் முந்திரி வறுத்த ஓடு கெடந்துச்சுன்னா மோந்து பாக்குறது வழக்கமாவே ஆயிருச்சி.

mukilan
29-08-2005, 08:14 AM
ஓ அரவிந்த ஆசிரம அன்னையா?

அதை மிஹ்ஹா அல்லது மிழ்ழா என்று பிரெச்சுக்காரர்கள் ஒலிப்பார்கள். நானும் பிரஞ்சு கற்றுக்கொள்ள முயன்று வாந்தி எடுத்து விடாதே என்று ஆசிரியர் சொல்ல வேண்டியதாயிற்று.

அப்புறம் இந்த முந்திரி ஓட்டு வாசன....அடாடா! எனக்க்கு ரொம்பப் பிடிக்கும் மோந்து பாத்ததுமே மயக்கும்....எங்கயாச்சும் முந்திரி வறுத்த ஓடு கெடந்துச்சுன்னா மோந்து பாக்குறது வழக்கமாவே ஆயிருச்சி.

நான் எனக்கு மட்டுந்தான் பிடிக்கும்னு நினைச்சேன் உங்களுக்கும் முந்திரி தோடு வாசனை பிடிக்குமா? அரவிந்த ஆசிரமம் போய் உள்ளீர்களா? மிக ரம்யமான அமைதி தவழும். முடிந்தால் சென்று வாருங்கள்.மணக்குள விநாயகரும் அருகில்தான் உள்ளார்.

gragavan
29-08-2005, 08:54 AM
நான் எனக்கு மட்டுந்தான் பிடிக்கும்னு நினைச்சேன் உங்களுக்கும் முந்திரி தோடு வாசனை பிடிக்குமா? அரவிந்த ஆசிரமம் போய் உள்ளீர்களா? மிக ரம்யமான அமைதி தவழும். முடிந்தால் சென்று வாருங்கள்.மணக்குள விநாயகரும் அருகில்தான் உள்ளார்.அரவிந்தர் ஆசிரமத்திற்கும் சென்றிருக்கின்றேன். மணக்குளத்தாரையும் பார்த்திருக்கின்றேன்.

பொதுவாகவே நான் ஆசிரமங்களிலிருந்து தள்ளியே இருப்பவன். ஆகையினால் அந்த ஆசிரமம் எனக்குள் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. ஆனால் ஆசிரமத்தைப் பராமரிக்கும் பாங்கும் பூக்களின் மேல் அவர்கள் காட்டும் அன்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

kavitha
30-08-2005, 09:58 AM
முகிலன் அவர்களுக்கு,
கதை... இதைக்கதை என்றுகூடச் சொல்லமுடியாது இன்றும் நடக்கும் அவலங்கள் தான். அருமையாய் எழுத்தில் வடித்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதுவதை விடவும் நிறைய படிப்பவர் என்பது எழுத்திலேயே தெரிகிறது. தேவையற்ற வாக்கியங்களோ, உவமைகளோ இல்லை. சிறுகதைக்குரிய அனைத்து அம்சங்களுடன் முத்தாய்ப்பான முடிவுடன் எல்லோருமே புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் அமைந்தது சிறப்பு. வட்டார வழக்கில் ஆங்காங்கே கொடுத்த வரிகளும் ரசிக்கும்படியே இருந்தது. ஆனால் நீங்கள் முழுமையாக அப்படியெழுதியிருந்தால் எங்களால் புரிந்துகொள்வதும் சிரமம் என்பதுவும் புரிந்தது.

மண்வாசனையை எத்தனை முறை முகர்ந்தாலும் நாசி அலுப்பதில்லை. அது போல்தான் பூர்வீகக்கதைகளும். என்னதான் அதன் வளமைகளைப்பற்றி பெருமைக்கொண்டாலும் இது போன்ற சிறுமைகள் இன்றும் மனதினை பிசைபவைகள்தாம். ஆற்றாமைப் பெருமூச்சு தான் மேலிடுகிறது.

எங்கள் ஊரில் இப்போது நிலைமை எவ்வளவோ மாறிவிட்டது. எந்த சாதியானாலும் ஆண்களில் 12 வயதுக்கு மேற்பட்டோரை ஊரில் காண்பதே அரிது. ஏதாவது ஒரு கடல் கடந்த தேசத்தில் அவன் திரவியம் தேடப்போயிருப்பான்.
சாதி என்ற சாக்கடை இப்போது பணம் என்ற ஊதுபத்தியால் மெல்ல மெல்ல வாசம் இழக்கிறது.
பெண்கள் நிலை தான் காணச்சகிக்காதவை! இன்றும் மண்புழுக்களாக அடுப்படியில்.

ஊருக்குக்கிளம்புகிறோம் என்றாலே எனக்குள் கிலி பிடிக்க ஆரம்பித்துவிடும்.
சரியான மணித்துளியில் கட கட பேருந்தில் கால் கடுக்க நின்று பிரயாணிப்பதிலிருந்து ஊரில் பேசுப்படும் கயிற்றுக்கதைகள் வரை. குழந்தைகள் மனதில் சிறிய வயதில் எது பட்டாலும் அது பசு மரத்தாணி என்பதால் நீங்கள் செய்தது சரி தான். ஆனால் யோசித்துப்பார்த்தால் இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடுகிற மாதிரி தெரியவில்லையா?

mukilan
30-08-2005, 04:09 PM
சகோதரி கவிதா
தங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் என் நன்றி! "நீங்கள் எழுதுவதை விடவும் நிறைய படிப்பவர் என்பது எழுத்திலேயே தெரிகிறது"
இது சத்தியமான வார்த்தை (நிறையப் படிக்கிறேனா எனத் தெரியவில்லை). பள்ளி நாட்களில் கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டதோடு சரி. எனது அரங்கேற்றம் நம் மன்றத்தில் அதுவும் நமது நண்பர்கள் முன்னிலையில் தான். நம் நண்பர்களின் விமர்சனங்கள், கருத்துக்கள் ஒவ்வொன்றும் எனக்கு நிச்சயம் உதவும்.

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடுகிற மாதிரி தெரியவில்லையா?
விடை தெரியாமல் தான் விழிக்கிறேன்.மன மாற்றம் என்பது மனிதர்களிடையே எளிதாக வந்து விட்டால் பிரச்னை என்பதே இல்லாமல் போய் விடுமே!

kavitha
31-08-2005, 06:56 AM
மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடுகிற மாதிரி தெரியவில்லையா?
விடை தெரியாமல் தான் விழிக்கிறேன்.மன மாற்றம் என்பது மனிதர்களிடையே எளிதாக வந்து விட்டால் பிரச்னை என்பதே இல்லாமல் போய் விடுமே!

உண்மைதான் முகிலன். எனக்கும் விடை தெரியாததால் தான் பொதுவாக ஒரு கேள்வியை எழுப்பினேன். நல்ல விசயங்கள் என்றாலும் சில சமயங்களில் பெரும்பான்மை ஓட்டு இல்லாததாலே செல்லாதது ஆகிவிடும். அது போன்ற விசயங்களில் சாதிப்பிரச்சனையும் ஒன்று.

Nanban
02-09-2005, 07:29 PM
அருமையான கதை முகிலன். வாழ்த்துகள்.

சாதிய கட்டமைப்பை எதிர்த்துப் போராடும் பலரும் அஞ்சுவது - இளம் சிறார்கள் உள்ளத்தில் அழுந்த பதியவைக்கப்படும் சாதீய உணர்வுகள் தான். அங்கு தான் தங்கள் அடையாளம் என சாதியம் போதிக்கப் படுகிறது. இளம் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிந்து போகும் அந்த அவலம் தான் பின்னாளில் பலப்பல வடிவங்களில் வெளிப்படுகிறது.

இன்று சாதிய வன்கொடுமைகள் பொது இடங்களில் நிகழுவதில்லை. ஆனால் அது தனியார் நிலங்களில், மனங்களில் நிகழத்தான் செய்கிறது. இங்கு சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. மனமாற்றம் மட்டுமே சாத்தியம். அது நிகழ வேண்டுமென்றால் தனி மனித மாற்றங்களால் மட்டுமே சாத்தியம். தனி மனித மாற்றங்கள் அந்த மனிதனின் முயற்சியால் மட்டுமே நிகழும்.

தனி மனித முயற்சி நிகழ வேண்டுமென்றால், அந்த மனிதர்களை ஆக்கிரமிக்கும் வலிமை மிக்க ஆளுமை மிக்க தலைவர்கள் தேவை. ஆனால், நாம் இன்று பெற்றிருப்பதோ சுயநலமிக்க தலைமை மட்டுமே. அரசியல் என்று மட்டுமல்ல. ஆன்மீகம், திரைத்துறை, இலக்கியம், கலாச்சார துறைகள் என எல்லா மட்டங்களிலும் கீழ்மையும் கயமையும் நிறைந்த தலைகளே நிரம்பிக் காணப்படுகின்றன.

சமீபத்தில் படித்த ஒரு விமர்சனம் - இந்தியா தான் அடைய வேண்டியவற்றை ஒரு தலைமுறையாவாது தாமதமாகத் தான் அடைகிறது - சரியான தலைமை இன்றி போனதால் மட்டுமே என்பது தான்.

இன்று தனிமனித மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள் மிகக் குறைவானது. இந்த சூழ்நிலையில் தாய் தந்தையர் ஆசிரியர் இவர்களே இந்த மாற்றங்களை நிகழ்த்துவதில் முன் நிற்க வைக்க வேண்டும். சமயத் தலைவர்களிடமிருந்து இத்தகைய வழிகாட்டுதல்களை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளை மட்டுமே முன் நிறுத்துவார்கள். மததலைவர்களை ஆழ்ந்து வாசித்தால் / நோக்கினால், பல சமயங்களில் தனக்கு மாற்றான கருத்து கொண்டவர்களை மனிதனாக மதிக்க மறுக்கின்றனர். அது மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்தில் தங்கள் விருப்பம் போல தலையிடுகின்றனர். துவேஷத்தை முன்னெடுத்து செல்கின்றனர். பெணகளை இழிவாக நடத்துகின்றனர். இத்தகைய மத தலைவர்களை வழிகாட்டுதலாக ஏற்றுக் கொள்வதை விட, தனி மனித வழிகாட்டுதல்களாக ஏற்றுக் கொள்ளத் தக்கவர்கள் தான் தாய் தந்தை ஆசிரியர். ஆனால் இந்த கால ஆசிரியர்கள் உயர்வான கொள்கைகளைக் கொண்டு இயங்குவதில்லை. மாற்றாக பல சாதி சங்கங்களின் மூளையாக செயல்படக் கூடியவர்களே இவர்கள் தான். இவர்களையும் விட்டுவிட்டால் பின்னர் எஞ்சுவது இருவர் தான் - அதிலும் தாயானவளின் பங்கு அன்பு நேசம் குடும்பப் பொறுப்பு என்ற அளவில் நின்று போய்விடுகிறது.

ஆக மீதமுள்ள ஒரே ஆள் - தந்தை.

அந்தத் தந்தையே தன் மகள் பயங்கரத்தைச் சந்திக்கப் போகிறாள் என்று எண்ணிக் கொண்டு விலகிப் போவதாகச் சொன்ன பொழுது மிக கவனம் பெறுகிறது. அது மட்டுமல்ல ஒரு தந்தையின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் கொள்ள வைக்கிறது.

தன் தனித்த நடவடிக்கைகளால் தன் பிள்ளைகளின் கவனம் பெறுபவர் தந்தையே. பிள்ளைகளும் பெரும்பாலும் தந்தையின் குணங்களை தழுவி நடந்து கொள்வதில் தான் முழுமை அடைகின்றனர். அதனாலயே பல அப்பாக்கள் தங்கள் பிள்ளைகள் முன் சிகரெட் புகைப்பதையோ அல்லது மது அருந்துவதையோ தவிர்க்கின்றனர். (குறைந்தபட்சம் நான் அவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றேன் - இப்பொழுது அவ்விரண்டையும் முற்றிலுமாக தவிர்த்து விட்டேன்) இவ்வாறு தங்கள் குழந்தைகள் தங்கள் தனி மனித ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று விரும்புபவர்கள் பிற மனிதனுடனான உறவுகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மிக மோசமாக தோற்றுப் போகிறார்கள். அவனுடன் சேராதே அவன் நம் இனத்தான் இல்லை என்று சொல்லிச் சொல்லியே அரண் எழுப்புகிறார்கள்.

இந்த உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலித்தது உங்கள் கதை. இலக்கியங்களின் பயன் என்பதே மனித மனங்களை உலுக்கியெடுத்து புரையோடிப்போன எண்ணங்களைக் கீறியெடுத்து உண்மை உலகைப் பிரக்ஞையில் கொண்டு வருவதே. அதைச் செய்தது கதை. கதையின் முதல் பகுதியில் வெற்றி பெற்று விட்டீர்கள். உள்ளடக்கம், நோக்கம் இரண்டிலும் வெற்றி பெற்று விட்டீர்கள்.

சொல்வதில் இன்னமும் கவனம் தேவை. பல நேரங்களில் யார் கதை சொல்கிறார்கள் என்பதில் குழப்பம் நிகழ்கிறது. தொடர்ந்து வாசித்து வாருங்கள் எழுதியும் வாருங்கள். வாசித்துக் கொண்டே மட்டும் இருந்தாலோ அல்லது எழுதிக் கொண்டே மட்டும் இருந்தாலோ போதாது. இரண்டையும் சேர்த்தே செய்ய வேண்டும்.

Nanban
02-09-2005, 07:43 PM
அரவிந்தர் ஆசிரமத்திற்கும் சென்றிருக்கின்றேன். மணக்குளத்தாரையும் பார்த்திருக்கின்றேன்.

பொதுவாகவே நான் ஆசிரமங்களிலிருந்து தள்ளியே இருப்பவன். ஆகையினால் அந்த ஆசிரமம் எனக்குள் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. ஆனால் ஆசிரமத்தைப் பராமரிக்கும் பாங்கும் பூக்களின் மேல் அவர்கள் காட்டும் அன்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அட!

இந்தப் பூக்களைப் பற்றி அவர்கள் ஒரு புத்தகமே போட்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்குச் சென்ற பொழுது அங்கு எங்களுக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார்கள் - அது, அன்னையின் ஆசிரமத்தில் வளரும் ஒவ்வொரு வகைப் பூவையும் புகைப்படமெடுத்து அவற்றைப் பற்றிய குறிப்புகளுடன் புத்தகமாக்கி விட்டிருக்கிறார்கள். புத்தகம் என்றதும் ஏனோதானோ என்றல்ல. உலகத் தரத்திலான புத்தகமது. பத்திரமாக வைத்திருக்கிறேன் - அந்தப் புத்தகத்தை எனது இல்லத்தில். பூக்கள் மீது அலாதி அக்கறையுள்ள என் மனைவி மிகவும் பாராட்டினாள் - ' சமயத்தில் புத்திசாலித்தனமாகக் கூட புத்தகங்கள் வாங்குகிறீர்கள் என்று. ' என் புத்தகம் வாங்கும் வழக்கம் அத்தனை பிரசித்தி பெற்றது - அச்சு நேர்த்திக்காகக் கூட புத்தகம் வாங்குவேன்.

நல்ல பதிவாக இருக்கிறது, நண்பர்களே....

mukilan
02-09-2005, 08:16 PM
நன்றி நண்பன் அவர்களே!

தங்களின் விமர்சனங்களுக்கும் ஆலோசனைகட்கும் மிக்க நன்றி. நான் என் வாசிக்கும் பழக்கத்தையும் எழுதும் பழக்கத்தையும் இன்னமும் அதிகப் படித்துகிறேன். நம் மன்றத்து உறுப்பினர்களின் ஆதரவும் என் பிழைகளைப் பொருட் படுத்தாமல் அதே சமயம் சுட்டிக் காட்டவும் செய்யும் அவர்களின் நற்குணமும் இருக்கும் வரையில் நான் கவலையின்றி இது போன்று எழுதிக் கொண்டே இருப்பேன்.

மலர்களை அன்னை சிறப்பானதாக கருதச்சொல்வது மலர்கட்கான ஏற்புத்தன்மையைக் கருத்தில் கொண்டுதான்.மலர்கள் காலையில் மலர்ந்து இருக்கும் பொழுது அப்படியே அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்வேன் என் அழகாகச் சிரிக்கும் படியாக இருக்கும். இறைவன் எதைக் கொடுத்தாலும் அதை மலர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே மலர்கள் மறை முகமாகத் தெரிவிக்கும் செய்தி.
மலர்களைப் பற்றிய அப்புத்தகத்தில் மலர்களின் விபரங்கள் மட்டுமன்றி அன்னையே அவற்றிற்கு பெயரும் இட்டுள்ளார். இறை நம்பிக்கை இல்லாதோர் கூட மலர்கள் ஒரு இடத்தில் ஏற்படுத்தும் மறுமலர்ச்சியையும் புத்துணர்வையும் ஒப்புக் கொள்வர்.

Nanban
02-09-2005, 08:37 PM
எங்கள் ஊரில் இப்போது நிலைமை எவ்வளவோ மாறிவிட்டது. எந்த சாதியானாலும் ஆண்களில் 12 வயதுக்கு மேற்பட்டோரை ஊரில் காண்பதே அரிது. ஏதாவது ஒரு கடல் கடந்த தேசத்தில் அவன் திரவியம் தேடப்போயிருப்பான்.
சாதி என்ற சாக்கடை இப்போது பணம் என்ற ஊதுபத்தியால் மெல்ல மெல்ல வாசம் இழக்கிறது.
பெண்கள் நிலை தான் காணச்சகிக்காதவை! இன்றும் மண்புழுக்களாக அடுப்படியில்.

ஊருக்குக்கிளம்புகிறோம் என்றாலே எனக்குள் கிலி பிடிக்க ஆரம்பித்துவிடும்.
சரியான மணித்துளியில் கட கட பேருந்தில் கால் கடுக்க நின்று பிரயாணிப்பதிலிருந்து ஊரில் பேசுப்படும் கயிற்றுக்கதைகள் வரை. குழந்தைகள் மனதில் சிறிய வயதில் எது பட்டாலும் அது பசு மரத்தாணி என்பதால் நீங்கள் செய்தது சரி தான். ஆனால் யோசித்துப்பார்த்தால் இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடுகிற மாதிரி தெரியவில்லையா?

பணம் என்ற ஊதுவத்தியில் சாதியம் என்ற சாக்கடை மணமிழக்கிறது என்று சொல்கிறீர்கள். அது தவறு. பணம் எப்பொழுதுமே சாதீயத்துடன் கூட்டமைக்குமே தவிர அதை பலவீனப்படுத்தாது. இன்னும் சொல்லப் போனால் பணமே சாதீயத்தை இன்னமும் வலுவாக்கும். பணம் படைத்தவனுக்குத் தான் தன் இனத்தைச் சார்ந்தவனின் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. பணம் அற்றவன் ஒரு கட்டத்தில் சாதியத்தைத் துறக்கவும் தயாராகிவிடுகிறான் - தான் வாழ்க்கைப் போராட்டம் பொருட்டு. ஆனால் பணம் படைத்தவன் எங்குமே தன் சாதியை மட்டுமே நம்புகிறான்.

மற்றவர்களை தன் அலுவலுக்கு மட்டுமே உபயோகித்துக் கொள்வானே தவிர சாதியத்தை உதறி விட்டு அல்ல. அதற்கு வசதியாகத் தான் பல மத வழிபாட்டு முறைகளில் கூட சாதிய அடையாளங்களை பதித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாதியைச் சார்ந்தவர்களின் நடைமுறைகளைப் பார்த்தாலே இது புரியும்.

மூட்டைப் பூச்சிக்குப் பயந்து ஊரையே காலி செய்தது போல ஆகிறது - இதற்குக் காரணம் வேறு யாதொன்றுமில்லை. ஒரு கொடுமையை எதிர்த்து நின்று கேள்வி எழுப்பும் தலைமைப் பண்பற்ற மனிதர்களாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்பது தான்.

அந்தத் தலைமைப் பண்பு - எதிர்த்து நின்று கேள்வி எழுப்பும் அந்தத் தலைமைப் பண்பு - துரதிர்ஷ்டவசமாக பல தரம் குறைந்த நபர்களிடமிருந்து விடுகிறது. இரண்டு விஷயங்களில் அவர்கள் நம்மிடமிருந்து வேறுபடுகிறார்கள் - ஒன்று அவர்கள் உழைத்து உண்ண வேண்டிய அவசியமில்லாத அளவிற்கு சொத்தும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தில் வந்து விடுகிறார்கள். அல்லது இழப்பதற்கு எதுவுமற்ற ஏழ்மை நிலையில் இருந்து விடுகிறார்கள். இதனால் இந்த இரு வகுப்பாருக்கும் கேள்வி கேட்பதிலோ பிரச்னைகளிலோ சிக்கிக் கொள்வதிலோ எந்த சிக்கலும் இருப்பதில்லை. இடையில் இருக்கும் இந்த இரண்டும் கெட்டான் மத்தியதர வர்க்க மக்களிடையே தான் பயமிருக்கிறது. குறையிருக்கிறது. எதைக் கண்டாலும் அச்சம் எழுகிறது. ' நெஞ்சு பொறுக்குதில்லையே ' என்றெல்லாம் மனம் கொதித்தாலும் உடனே பயம் என்ற நீர் ஊற்றி அனைத்து விடுகின்றனர் மனதினுள்ளே.

ஒவ்வொரு மனிதனும் தெருவில் இறங்கிப் போராட வேண்டியதில்லை. எது நன்மை எது தீமை என்று விளங்கிக் கொள்ள வேண்டும். பிறகு தீமைகளை விட்டு விலகிக் கொள்வதும் நேர்மையாக நடந்து கொள்வதிலும் எப்படி இயங்க வேண்டும் என்ற மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்வதிலும் அதை தங்கள் குழந்தைகளிடத்திலும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இங்கு இந்தத் தந்தை தன் மகளிடத்தில் இத்தகைய மதிப்பீடுகளை ஏற்பட்டுத்த வேண்டும். ஆனால் குழந்தை சிறியவள் என்பதை கதையில் தெரிந்து கொள்கிறோம். இத்தகைய மதிப்பீடுகளைப் புரிந்து கொள்ளவும், அதில் உறுதியாக நிற்கவும் கற்றுக் கொள்ள காலம் ஆகும். அதுவரையிலும் அந்தக் குழந்தையின் மனதில் மாற்று மதிப்பீடுகள் புகுந்து கொள்ளாமல் காப்பதே கூட அந்தத் தந்தையின் கடமையாகும்.

என்னுடைய குழந்தைகள் என் சொந்த ஊருக்கு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வருகிறார்கள். என் குழந்தைகள் யாருடன் பழக வேண்டும். எத்தகைய மதிப்பீடுகளைப் பெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மாற்று மதிப்பீடுகள் சில சமயங்களில் என் சொந்த மனிதர்களிமிருந்தே அவர்களுக்குப் போய் விடுமோ என்ற பயம் எனக்கு உண்டு. சாதிய உணர்வுகளைப் பற்றிய பயமல்ல அது. ஆனால் மதம் என்ற பெயரில் பல மூடநம்பிக்கைகள் போகக் கூடும் என்ற பயம் உண்டு. அதிலும் ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் பலப்பல மூட நம்பிக்கைகள் உள்ளன. என் மகள் - இப்பொழுது ஏழு வயது தான் ஆகிறது - இந்த மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன். அந்த ஊரின் சூழல் மட்டுமல்ல என் சொந்த மனிதர்களின் மீதும் கூட எனக்கு நம்பிக்கை கிடையாது.

இந்த விதத்தில் என் தந்தையின் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. எனக்குத் திருமணமாகி முதன்முதலாக மனைவியுடன் ஊருக்கு வந்ததும் வீட்டிற்குள் வரவேற்ற என் தந்தை இருக்கைகளை எடுத்துப் போட்ட என் தந்தை என் மனைவியை நோக்கி சொன்னவை - உட்காருங்கள் என்று தான். புது மணமக்களைப் பார்க்க வந்திருந்த ஒரு பெண் கேட்டாள் "நீ என்ன மருமகப் பொண்ணை நீங்க நாங்க என்று மரியாதை கொடுத்து பேசற " என் தந்தை சொன்ன பதில் - ' நம் வீட்டுப் பெண்ணை நாம் மதிக்கவில்லை என்றால் வேறு யார் மதிப்பார்கள்? ' இந்தப் பக்குவம் என்னிடத்திலும் இருக்கிறது என்றே எண்ணுகிறேன். நான் என் மனைவியை பன்மை விகுதிகள் கூட்டி விதிப்பதில்லை. அது காதலால். என் மனைவியும் என்னை ஒருமையிலே அழைக்கிறார். ஒரு முறை என் மனைவியின் இல்லத்தில் உணவருந்தும் பொழுது - அதுவும் திருமணம் முடிந்த சில தினங்களில் தான் எப்பொழுதும் போல என் மனைவி என்னை ஒருமையில் அழைத்து விட, என் மனைவியின் தாயார் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அறிவுரை கூற நான் தலையிட்டு அது எங்கள் விருப்பம் என்று கூற, நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் ஆனால் பொது இடத்தில் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று சொல்ல அதைப் புறக்கணித்து விட்டு நாங்கள் எப்பொழுதும் போல தொடர்கிறோம். ஆனால் இப்பொழுது பொது இடங்களில் ஒருமையில் விளித்துக் கொள்வதில்லை - அநாவசியமான விமர்சனங்களைத் தவிர்க்கலாமே என்று தான். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் நம்முடைய மதிப்பீடுகளை நாம் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே பெறுகிறோம். அதில் தாய் தந்தை முதலிடம் வகிக்கிறார்கள். அதையடுத்து நாம் சந்திக்கும் பிற மனிதர்கள். நம்மைப்பாதிக்கும் அண்டை வீட்டார் - தெருவினர் - அடுத்த தெருவினர் - கிராமத்தினர் - என்று பல தரப்பினர் இருக்கின்றனர். இங்கிருந்து எத்தகைய மதிப்பீடுகள் பெறப்படுகின்றன என்பதில் கவனம் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. சில சமயங்களில் எதிர்மறையான மதிப்பீடுகள் நம்மிடையே நுழைந்து விடாமல் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய மதிப்பீடுகளையும் தாக்கத்தையும் நம்மிடையே ஏற்படுத்த வல்ல சூழலில் இருந்து விலகி நிற்பது என்பது தேவையானதே. இது அச்சம் கொண்டு விலகி ஓடுவதே அல்ல, அதனால் மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தியதாக எண்ணுவதோ அல்லது ஊரை விட்டு விலகுவது கோழைத்தனமானதோ அல்ல. அது தேவையான ஒரு உத்தியாகக் கூட இருக்கலாம்.

அதனால் தான் இந்தக் கதை என்னை இத்தனை கவர்ந்தது என்று கூட கூறலாம். இந்தக் கதையில் வரும் இந்த தந்தை நானே தானோ என்று கூட எண்ண வைக்கிறது. என் மகனை விட எனக்கு என் பெண் தான் மிகவும் செல்லம். நான் மிகப் பெரிய மேதை என்ற எண்ணம் அவளிடத்தில் இருக்கிறது. ( மகனுக்கு அம்மா..) தவறான எண்ணங்களை என் மகள் பெற்று விடக்கூடாது என்பதில் நானும் கவனமாக இருக்கிறேன். என் ஊரில் என் மீது நிறைய அன்பு கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். என்றாலும் மதிப்பீடுகள் என்று வரும் பொழுது அவர்களுடைய அத்தனை கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்பதால் மிகவும் விலகி விட்டேன். ஒருவேளை என் குழந்தைகள் முற்றிலுமாக சிந்திக்கும் திறன் பெற்றுவிட்டால் பின்னர் மீண்டும் நான் என் வேர்களைத் தேடி என் கிராமம் திரும்புவேனோ என்னமோ?

kavitha
03-09-2005, 09:36 AM
சமீபத்தில் படித்த ஒரு விமர்சனம் - இந்தியா தான் அடைய வேண்டியவற்றை ஒரு தலைமுறையாவாது தாமதமாகத் தான் அடைகிறது - சரியான தலைமை இன்றி போனதால் மட்டுமே என்பது தான்.
கால விரயம் - எத்தனை கொடுமை?


மலர்களை அன்னை சிறப்பானதாக கருதச்சொல்வது மலர்கட்கான ஏற்புத்தன்மையைக் கருத்தில் கொண்டுதான்.மலர்கள் காலையில் மலர்ந்து இருக்கும் பொழுது அப்படியே அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்வேன் என் அழகாகச் சிரிக்கும் படியாக இருக்கும். இறைவன் எதைக் கொடுத்தாலும் அதை மலர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே மலர்கள் மறை முகமாகத் தெரிவிக்கும் செய்தி.மலர்களைப் பற்றிய அப்புத்தகத்தில் மலர்களின் விபரங்கள் மட்டுமன்றி அன்னையே அவற்றிற்கு பெயரும் இட்டுள்ளார்

நாங்கள் சென்றவருடம் புதுச்சேரி சென்ற போது ஆசிரமத்தை மலர்களால் அலங்கரித்திருந்ததைப் பார்த்து தரிசித்துவிட்டு வந்தோம்.
புத்தங்கள் எனக்குப்பிடிக்கும் என்பதால் அவராகவே "ஏதாவது புத்தகம் வாங்குகிறாயா?" என்று கேட்டார். பொதுவாக புத்தகத்தை படிப்பதற்கு முன்பு புத்தகத்தின் தரம் எப்படி இருக்கிறது. அதன் சாராம்சம் என்ன? என்பதெல்லாம் ஒரு புரட்டு புரட்டி அலசியபின்னர்தான் தேர்ந்தெடுப்பேன்.
ஆதலால், நானும் என் மகளும் படிப்பதற்கேற்றார்போன்ற "அமர கதைகள்", "ஒளிபொருந்திய பாதை" இரண்டு நூல்களை வாங்கினேன். அட்டைப்படமும் கூட மிகவும் வழவழப்பாக இருந்தது.

பூக்களைப்பிடிக்காத பெண்கள் இருப்பார்களோ... சில காலம் அப்படியும் இருந்ததுண்டு. அது ஒரு தனி கதை.
மற்றபடி பூக்கள் என்றாலே கொள்ளைப்பிரியம் தான். படிக்கும் காலத்தில் செம்பருத்தியிலிருந்து, கனகாம்பரம் வரை எல்லா பூக்களின் பொட்டானிக்கல் பெயர்களைச் சேகரித்து வைத்ததுண்டு. ஆனால் நீங்கள் கூறிய புத்தகத்தைப்படித்ததில்லை. நீங்கள் கூறுவது இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. மீண்டும் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் வாங்கிப்பார்க்கிறேன்.


பணம் என்ற ஊதுவத்தியில் சாதியம் என்ற சாக்கடை மணமிழக்கிறது என்று சொல்கிறீர்கள். அது தவறு. பணம் எப்பொழுதுமே சாதீயத்துடன் கூட்டமைக்குமே தவிர அதை பலவீனப்படுத்தாது.
நேரிலேயே பார்த்த எனது அனுபவத்தால் சொல்கிறேன் நண்பரே. முன்பெல்லாம் வீட்டிற்கு வந்து வேலை செய்வார்கள், தினமும் வந்து உணவுப்பொருட்களை கேட்டு வாங்கிக்கொண்டு போவார்கள். துணிகளெல்லாம் கூட அவர்கள் வெளுத்து தான் தருவார்கள். இதிலெல்லாம் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு கிடையாது; பல நிர்ப்பந்தங்களில் கூட அடங்காப்பிடாரி , படித்த திமிர் என்றெல்லாம் எங்கள் வீட்டாரிடமே வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கேனே தவிர ஒரு போதும் ஆதரித்ததில்லை. எனது காரியங்களைச் செய்வதில் யார் தலையிட்டாலும் அதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. இதைப்பற்றியெல்லாம் நான் எழுதவேண்டுமாயின் இன்னொரு பதிவு போட வேண்டி இருக்கும். இப்போது சிறுவர்கள் படிக்க ஆரம்பித்து விட்டதாலும், பெரியவர்கள் கடல்கடந்து பணிபுரிய போய் விட்டதாலும், மகளிர் மட்டுமே அந்த நிலையில் இருக்கிறார்கள். அதிலும் பணம் இருப்பவர்களுக்கு அத்தகைய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.


அப்படி பரம்பரையாக வேலைப்பார்த்த ஒருவர் தற்போது பணவசதியாலும், தங்களது மக்களின் படிப்பினாலும் அரசாங்க வேலையில் இதே சென்னையில் பல அடுக்கு மாடிக் கட்டி தமது கிரக பிரவேச விழாவிற்கு பத்திரிகையுடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்ததாகவும், அவர்களது அழைப்பின் பேரில் எங்கள் குடும்பத்தினர் அந்த ஞாயிறு செல்ல இருப்பதாகவும் எனது மாமியார் என்னிடம் சொன்னார்கள். எனக்கு கேட்டபோது மிகவும் சந்தோசமாக இருந்தது.


இடையில் இருக்கும் இந்த இரண்டும் கெட்டான் மத்தியதர வர்க்க மக்களிடையே தான் பயமிருக்கிறது. குறையிருக்கிறது. எதைக் கண்டாலும் அச்சம் எழுகிறது. ' நெஞ்சு பொறுக்குதில்லையே ' என்றெல்லாம் மனம் கொதித்தாலும் உடனே பயம் என்ற நீர் ஊற்றி அனைத்து விடுகின்றனர் மனதினுள்ளே.

திரிசங்கு சொர்க்கம் தான் மத்தியவர்க்கத்தினரின் நிலை.
தனி மனித வழிகாட்டுதல்களாக ஏற்றுக் கொள்ளத் தக்கவர்கள் தான் தாய் தந்தை ஆசிரியர். ஆனால் இந்த கால ஆசிரியர்கள் உயர்வான கொள்கைகளைக் கொண்டு இயங்குவதில்லை. மாற்றாக பல சாதி சங்கங்களின் மூளையாக செயல்படக் கூடியவர்களே இவர்கள் தான். இவர்களையும் விட்டுவிட்டால் பின்னர் எஞ்சுவது இருவர் தான் - அதிலும் தாயானவளின் பங்கு அன்பு நேசம் குடும்பப் பொறுப்பு என்ற அளவில் நின்று போய்விடுகிறது.
ஆரம்ப பள்ளியில் மட்டுமே ஆசிரியருக்கு அறிவுரைகள் வழங்குவது சாத்தியமாகிறது.

பெண்கள் இன்னும் தங்கள் நிலையே உணராதபோது எங்கே நாட்டு நிலை பற்றி அறிய முடியும்!!

என் தந்தை சொன்ன பதில் - ' நம் வீட்டுப் பெண்ணை நாம் மதிக்கவில்லை என்றால் வேறு யார் மதிப்பார்கள்? ' இந்தப் பக்குவம் என்னிடத்திலும் இருக்கிறது என்றே எண்ணுகிறேன். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை மதிக்கவேண்டும் என்று நீங்கள் கூறியிருப்பது நன்று. இது அவசியமான ஒன்றும் கூட.

shafi8466
03-09-2005, 09:47 AM
சாதி என்பது ஒரு கவுரவமாக சிலருக்கு இருக்கலாம். ஆனால், பலர் அதனால் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அதனாலேயே சாதியை அது சம்பந்தப்படவர்களும் வெறுக்க காரணம் என நினைக்கிறேன். சாதியால் நன்மையை விட தீமைகளே அதிகம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது நாகரிகமான செயலாகும். சாதி பற்றி பாரதியார் சொன்னது பாப்பாகளுக்கு மட்டும் இல்லை. நாகரீகமாக வாழ விரும்புபவர்களுக்கு சொன்னது. இல்லை. நான் கிராமத்தான். எனக்கு என் கவுரவம்தான் முக்கியம் என்று நினைப்பவர் தொடரட்டும். அவரது செயல்களை. உணர்பவர்கள் உணரட்டும்.

பரஞ்சோதி
03-09-2005, 10:28 AM
முகிலன் அருமையான கதை. இன்று தான் படித்தேன். பாராட்டுகள்.

நீங்க சொன்ன கதையின் சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்தவையே தான்.

நானும் கூட வயது மூத்தவர்களை ஏன் என்று கூடத் தெரியாமல் பெயர் சொல்லி அழைத்திருக்கிறேன், அவ்வாறு அழைக்கவில்லை என்றால் என்னுடன் இருப்பவர்கள் என்னை கேலி செய்வார்கள். அவர்களின் குழந்தைகள் என்னை பெயர் சொல்லி அழைத்தாலும், என் நண்பர்களுக்கு கோபம் வரும், உன்னை ஏன் முதலாளி, அய்யா என்று அழைக்கவில்லை என்று சொல்வார்கள்.

ஆனால் என் தாயார் எங்க ஊர் மக்களிலிருந்து மாறுப்பட்டவர், அனைவரையும் ஒன்றாக கருதுபவர். வீட்டில் அனைவரும் ஒன்றாகவே டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவோம், ஒரே மாதிரி உணவு. அவர்கள் வீட்டு பண்டிகைக்கு என்னை அனுப்பியும் வைப்பார்கள். அப்படி போகும் போதும், திரும்பி வரும் போது என் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியாமல் வரவெண்டும் என்று படாதப்பாடு பட்டிருக்கிறேன். இன்றைக்கு அதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

கண்டிப்பாக அடுத்த தலைமுறை அவ்வாறாக இருக்காது.

சுவேதா
03-09-2005, 09:52 PM
முகிலன் அண்ணா கதை சூப்பர். இன்றுதான் படித்தேன் தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்!

mukilan
09-09-2005, 06:22 AM
நன்றி சஃபி ,பரஞ்சோதி, சுவேதா.நிச்சயம் தொடர்கிறேன்.

இளசு
09-10-2005, 12:29 AM
முகிலன் அவர்களுக்கு
உங்கள் முதல் கதையையே கவிதா சொல்வது போல் மிக நேர்த்தியாய் வடித்து கவர்ந்துவிட்டீர்கள்...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

முந்திரி தோலின் சுட்ட வாசம்..... பலருக்கு நினைவலைகளை சலசலக்க வைத்துவிட்டது..
எனக்கும்தான்!

பஸ் பயணம், வட்டார வழக்கு விசாரிப்புகள், மாமியார் மருமகள் நல்லுறவு பற்றிய நச் கருத்து, பட்டாம்பூச்சி என எங்கும் தெளிக்கப்பட்ட நிகழ்வுகள்..
எல்லாருக்குமே கதையின் உள்ளாடும் உணர்வைக் கொடுக்கும்.
நண்பன், கவிதா உள்ளிட்ட நம் நண்பர்களின் அலசல்கள் இந்தக் கதையின் பாதிப்புக்கு சான்று.
நண்பனின் நிலையே எந்நிலையும்-- அந்தத் தந்தை நானேதானோ என என்னையும் எண்ண வைத்தது.

கதையின் வெற்றிக்கு இதைவிட வேறென்ன வேண்டும்..?

மீண்டும் என் பாராட்டுகள் முகிலன் ...

mukilan
10-10-2005, 07:59 AM
நன்றி இளசு அண்ணா (மன்றத்தில் அனைவருக்கும் அண்ணனாகி விட்டு இன்னும் இளசாகவே இருப்பதெப்படி?). எனது கணிணியில் சற்று பிரச்னை ஆதலால் மன்றம் கூட வர முடியவில்லை.

kiruba_priya
18-11-2005, 11:34 AM
நல்ல அருமையான கதை.
கன்னி முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

நான் நேற்றிருந்துதான் Tmail Mandram படிக்க அரம்பித்தேன்.
படித்த 5 - 6 கதைகளில் இது Best.
முயற்சி தொடர்க...

இதற்காக மற்றவை சரியில்லை என்றர்த்தமில்லை.
சிலது மனசில் பசக்குனு ஒட்டிக்கம்...
அந்த வகை இது.

mukilan
18-11-2005, 05:57 PM
நன்றி கிருபா பிரியா! நேற்றுதானே ஆரம்பித்தீர்கள், நீங்கள் இனி இம்மன்றத்தை ஒருநாள் கூட பார்வையிடாமல் இருக்கவே முடியாது! நம் மன்றத்து நண்பர்களின் அன்புக்கு அப்படியொரு அற்புத சக்தி!

poo
21-11-2005, 06:01 AM
முகிலன்.. முதலில் மன்னிக்க.. நான்கூட இன்றுதான் இந்தக்கதை படித்தேன்.. நான் எழுத ஆரம்பித்தவுடன்தான் கதைகள் பக்கம் வருகிறேனென நினைத்துவிட வேண்டாம்.. சிறுகதைகள் படிக்கவே எனக்கு பயமாக இருக்கும்.. நமக்கு சரியாக புரியுமாவென தயக்கமாக இருக்கும்..


உங்கள் கதையில் வரும் அபத்தங்கள் இன்றும் என் கிராமங்களில் நடக்கிறது.... உண்மையில் உங்கள் கதையின் கருவை ஒட்டி எனக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு கதை.. நல்லவேளையாக உங்களுடையதை படித்துவிட்டதால் அதை எழுதவேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டேன்!

நீங்கள் சிறிய பிள்ளைகளை வைத்து சொல்லியிருப்பது அருமை. அடுத்த தலைமுறையை குறிவைப்பதுதான் இந்த விஷயத்தில் சரியானதாக இருக்கும்..

பாராட்டுக்கள் முகிலன்.

இளசு
21-11-2005, 07:39 AM
நல்ல அருமையான கதை.
கன்னி முயற்சசிக்கு வாழ்த்துக்கள்.

நான் நேற்றிருந்துதான் Tmail Mandram படிக்க அரம்பித்தேன்.
படித்த 5 - 6 கதைகளில் இது Best.
முயற்சி தொடர்க...

இதற்காக மற்றவை சரியில்லை என்றர்த்தமில்லை.
சிலது மனசில் பசக்குனு ஒட்டிக்கம்...
அந்த வகை இது.

வாருங்கள் கிருபாப்ரியா..
வந்தவுடன் புதிர், அடுத்து கதை விமர்சனம்
என ஆர்வமுடன் பங்களிப்பு.
வரவேற்பும் வாழ்த்துகளும்.

meera
05-08-2008, 04:09 AM
நல்ல கதை கரு முகிலன். இது உங்கள் முதல் கதை என்றால் நம்புவதற்கில்லை. வேதனை தரும் ஒரு விஷயம் இந்த ஜாதி பாகுபாடு. இன்றும் நீங்கள் சொன்ன கிராமங்களின் பக்கம் குழந்தைகள் அந்த சிறுவனைப்போல் தான் வளர்க்கபடுகிறார்கள். ஜாதி இன்னும் சாகவில்லை உங்கள் ஃபீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்து கொண்டிருப்பது தான் வேதனை.

mukilan
05-08-2008, 03:06 PM
கருத்துக்கும் விமர்சனத்திற்கும் நன்றி மீரா. என் முதல் சிறுகதை முயற்சி இதுதான். ஜாதி பாகுபாடுகள் வெகு இயல்பாக கிராமங்களில் இன்னமும் ஊறிக்கிடக்கின்றன. தமிழினத்திற்குள்ளேயே இவ்வளவு பாகு பாடு பார்க்கும் நாம் நிற வெறியர்களைக் குறை கூறுவதில் நியாயம் இல்லை. படித்த இளைய தலைமுறையினராவது சிறிது மாற்றத்தைக் கொண்டுவருவதை கண்கூடாகக் காண்கிறேன். பாரதியின் கனவு பலிக்கும் என நாமும் கனவு காண்போம்.

Keelai Naadaan
05-08-2008, 03:33 PM
அருமை முகிலன். அருமை.
எப்போது பள்ளிகளில் சாதிப் பெயரை கேட்காமல் இருக்கிறார்களோ அது வரை சா'தீயை' அணைக்க முடியாது.
அதுவரை ஒவ்வொரு சாதியும் சங்கங்கள் அமைத்து இந்த இழிவும் பெருமையென்று, பெருமை பேசிக் கொண்டிருக்கும்.

பூமகள்
05-08-2008, 06:50 PM
அசந்தேன்... மிக எதார்த்தமான கதை..!!

கிராமத்து வாசத்தோடு கதை ஆரம்பித்த விதமே அருமை..!!

எனது சின்ன வயது கிராமத்து அனுபவம் பலவற்றை கதை நினைவூட்டிவிட்டது..!!

மிர்ரா கேட்ட அந்த கேள்வி என்னுள் அந்த சின்ன வயதில் எழுந்தாலும் நாம் அப்படி இருக்க கூடாதென்ற அந்த நினைப்பு பாட புத்தகங்கள் மூலமும் தந்தை சொல்லின் மந்திரத்தின் மூலமும் அறிந்திருந்த படியால்
என்னுள் வைராக்கியமாக வைரமாய் பதித்துவிட்டேன்..

இன்றும் என்னுள் கனன்று கொண்டிருக்கும் தீயில் முதல் தீ இந்த ஏற்றத்தாழ்வை ஒழிப்பதே..!!

மனிதர்களில் இனம் பிரிக்க விரும்புவதில்லை.. இன்று வரை பழகுவதிலும் அதை காட்டியதில்லை.. மனநிறைவோடு இவ்வகையில் நிறைய நல்ல தோழிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது..

எல்லா மனிதர்களையும் சமமாய் பார்க்க.. நடைமுறையிலேயே கற்றுத் தந்த என் தந்தைக்கு நன்றி சொல்ல இந்த நேரத்தில் கடமைப்பட்டிருக்கிறேன்..

மிக முக்கியமான சமூக அவல நிலையைப் படம் பிடித்த இக்கதை முதல் முயற்சி என்று ஒப்புக் கொள்ளவே முடியவில்லை..

மனமார்ந்த பாராட்டுகள் முகிலன் அண்ணா..!! :)

பூமகள்
05-08-2008, 07:00 PM
படித்த இளைய தலைமுறையினராவது சிறிது மாற்றத்தைக் கொண்டுவருவதை கண்கூடாகக் காண்கிறேன். பாரதியின் கனவு பலிக்கும் என நாமும் கனவு காண்போம்.
படித்த இளைய தலைமுறையில் இன்னும் கொஞ்சம் அது ஒட்டிக் கொண்டிருப்பதற்கான சான்றை இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=362817&postcount=126) கொடுத்துள்ளேன்..

ஆயினும்.. பலர் கூடி தேர் இழுக்க முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது.. அந்த ஒருசிலரும் வந்து தேர் இழுக்க சம்மதித்தே ஆக வேண்டிய நிலை வர விரும்புகிறேன்..!

மனிதம் என்று முளைக்குமென விழித்துக் காத்திருக்கிறேன்..!:icon_rollout:

mukilan
05-08-2008, 07:08 PM
படித்த இளைய தலைமுறையில் இன்னும் கொஞ்சம் அது ஒட்டிக் கொண்டிருப்பதற்கான சான்றை இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=362817&postcount=126) கொடுத்துள்ளேன்..

ஆயினும்.. பலர் கூடி தேர் இழுக்க முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது.. அந்த ஒருசிலரும் வந்து தேர் இழுக்க சம்மதித்தே ஆக வேண்டிய நிலை வர விரும்புகிறேன்..!

மனிதம் என்று முளைக்குமென விழித்துக் காத்திருக்கிறேன்..!:icon_rollout:

அவ்வாறு தவறு செய்பவர்களைக் கண்டு பொங்குகின்ற இந்த மனதைத்தான் நான் "படித்த" இளைய தலைமுறையினர் எனச் சொன்னேன்.

இப்படியான தெளிவான சிந்தையை விதைத்த உன் தந்தைதான் இங்கு நன்றிக்கு உரியவர்.

தங்கையின் விமர்சனத்திற்கு என் நன்றி.