PDA

View Full Version : பெரியம்மா



பாரதி
26-08-2005, 01:38 AM
தேதி இல்லா குறிப்புகள்

பெரியம்மா

ஊர்ல இருந்து பெரியம்மா வர்றாங்கன்னு கொஞ்ச நாளக்கி முன்னாடியே கடுதாசி வந்துச்சா, எப்படா அவங்களப் பாக்கப்போறோம்னு இருந்துச்சு.. அவங்கள நானு அது வரைக்கும் பாத்ததே இல்ல. அம்மா கூடப் பொறந்தவங்க அந்தப் பெரியம்மா.
அப்ப நான் ரெண்டாப்பு படிச்சுகிட்டுருந்தேன். வயல்ல நெல்லு நடவு நட்டுகிருந்தத வேடிக்க பாத்துகிட்டு இருந்தனா அப்பதான் சொன்னாங்க பெரியம்மா வந்திருக்காங்கன்னு..! ஓரே ஓட்டமா... வாய்க்கால எல்லாம் தாண்டி மூச்சிரைக்க வீட்டுக்கு வந்துப் பாத்தா....

பெரியம்மா நல்ல ஒசரம். வெள்ளக்கலர்ல சேல - இங்ஙன கட்டுற மாதிரி கட்டாம, வித்தியாசமா கட்டிருந்தாங்க. மொழங்கை வரைக்கும் சட்டை போட்டிருந்தாங்க. தலமுடியெல்லாம் சுத்தமா நரச்சுப் போயிருந்துச்சு. கொண்ட எல்லாம் போடாம கிராப்பு மாதிரி முடி வச்சுகிட்டு. பாக்க சிரிச்ச முகத்தோட இருந்தாங்க. சுருக்கமா சொல்லணும்னா பெரியம்மா சும்மா அப்படியே இந்திராகாந்தி கணக்கா இருந்தாங்க.

என்னைய பாத்ததும் அடையாளம் தெரிஞ்சது போல. வாரி கட்டிப்புடிச்சுகிட்டு ரொம்ப அன்பா விசாரிச்சாங்க. எனக்கு சந்தோசம் தாங்கல.

பெரியம்மா ரொம்ப சின்ன வயசுலயே டெல்லி போயிட்டாங்களாம். அப்பல்லாம் கடுதாசி போட்டாலே போயி சேரறதுக்கு மாசக்கணக்காகும். அதனால குடும்பதுல நடந்த நல்லது பொல்லாதத பத்தி எல்லாம் வெலாவாரியா தெரிஞ்சுக்க வேணாமா...? அப்படி விசயங்கள எல்லாம் பேசுறதுக்கே ரெண்டு மூணு நாளக்கி மேலாகி போச்சு. நாள் முச்சூடும் வர்றவங்க கிட்ட பேசுறதுக்கே பெரியம்மாவுக்கு நேரம் சரியா இருந்துச்சு. டெல்லில எம்ஜியாரு, இந்திராகாந்திய எல்லாம் பாத்து பேசி இருக்காங்க, போட்டோ எல்லாம் எடுத்திருக்காங்கன்னு அவங்க சொன்னத கேட்டதும் இங்க கேட்ட அத்தன பேரு வாய ஆன்னு பொளந்துட்டாங்க.

எல்லார் கூடயும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்குற மாதிரி பழகுனாங்க. வீட்டு வேலைல கூடமாட ஒத்தாசய இருந்தாங்க. டெல்லில என்ன பண்றாங்க.. பக்கத்துல யாரெல்லாம் இருக்காங்க.. எப்படியெல்லாம் பழகுவாங்க... என்னென்ன பண்டிகை எல்லாம் கொண்டாடுவாங்க.. வெலவாசி எல்லாம் எப்படி? மழ விழுதா இல்லையா..ன்னு பலதையும் பேசிகிட்டாங்க. அப்படிப் பேசிகிட்ட்டு இருக்கும் போது பெரியம்மா சொன்னாங்க... இன்னும் எத்தன வருசந்தான் ஊர மறந்துட்டு, சொந்தக்காரங்கள எல்லாம் விட்டுட்டு தன்னந்தனியா இருக்குறது. எனக்கென்ன குடும்பமா குட்டியா...?அங்க இருக்குறத எல்லாம் விட்டுட்டு இங்கனயே வந்து குடும்பத்தோட தங்கிரலாம்னு நெனச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. சொந்தக்காரங்க எல்லாரும் அதாஞ்சரி, அப்படித்தான் செய்யணும்-னு சொன்னாங்க.

ஊர்ல இருந்து வர்றப்பயே பெரியம்மா விதவிதமா பலகாரம் கொண்டு வந்திருந்தாங்க. அந்த ஊரு துணிமணி,பண்டபாத்திரம் கூட கொண்டு வந்திருந்தாங்க. கிண்ணம், டம்ளர், பாத்திரம் எல்லாம் மஞ்சளா பித்தளைல இல்லாம, பளபளன்னு வெள்ளி மாதிரி இருந்துச்சு. என்னமோ எவர்சில்வராம்ல அதுல செஞ்சதாம். துருப்பிடிக்காது, கருக்காதுன்னு சொல்லிகிட்டாங்க. அது வரைக்கும் அலுமினியம், பித்தள, வெங்கலம் இல்லாட்டி மண்ணுபாத்திரம்தான் எல்லாரு வீட்லயும் இருக்கும்.பெரியம்மா கொண்டு வந்தது எல்லாம் வித்தியாசமா இருந்துச்சு.

நாங்கூட காப்பி சாப்புடறதுக்குன்னு ஒரு பெரிய டம்ளரை எடுத்து வச்சுகிட்டு அதுலதான் சாப்புடுவேன்.. யாரும் அதத் தொடக்கூடாதுன்னு சொல்லிட்டேன். சின்னது பெரிசுன்னு இருந்த பாத்திரங்க எல்லாம் பாக்கவே கொள்ள அழகு. கூடப்படிக்கிற பசங்க எல்லாம் ஒங்க பெரியம்மா டெல்லிலயா இருக்காங்கன்னு பொறாமையோட கேப்பாய்ங்க... கேக்கும் போதெல்லாம் சொல்லி எனக்கு மாளல. எங்க பெரியம்மா டில்லில இருக்காங்கன்னா அது எனக்கு பெருமைதானே..!

பெரியம்மா வந்து கொஞ்ச நாள் ஆகியிருக்கும். அப்ப பக்கத்துல இருந்த அவங்க பொறந்த ஊருக்கு - அதாங்க தேவதானப்பட்டி பக்கத்துல இருக்குல்ல எருமலநாயக்கம்பட்டி - அங்க போயிட்டு வர்றேன்னு சொல்லி கெளம்புனாங்க. அங்க இருக்குறவங்களயும் பாக்கணுமா இல்லியா...? அங்க இருக்குறவங்களுக்கும் கொடுக்குறதுக்கு, இங்ஙன கொடுத்தத போக மீதியிருந்த சாமான எல்லாம் பொட்டலம் கட்டிகிட்டாங்க.

பஸ்ஸ ஏத்தி விடுறதுக்கு அம்மாவும் நானும்தான் பஸ்ஸ்டாப்புக்கு போனோம். பஸ்ஸ வர்றதுக்கு கொஞ்ச நேரம் ஆச்சு. பெரியம்மா நெறய விசயங்கள அம்மாகிட்ட பேசிகிட்டே இருந்தாங்க. களப்பு கடையில மிக்சரு பலகாரம் வாங்குறதுக்கு பெரியம்மா காசு எல்லாம் கொடுத்தாங்க.

பெரியகுளம் போற பஸ்ஸ வந்துச்சு. சாமான் கட்டி வச்சிருந்த பொட்டலத்த முதல்ல தூக்கி பஸ்ஸக்குள்ள வச்சுட்டு, அதுக்கப்புறமா பெரியம்மாவும் பஸ்ஸல ஏறுனாங்க. படியில நின்னுகிட்டு பெரியம்மா போயிட்டு ரெண்டு மூணு நாள்ல வந்திர்றேன்னு எங்ககிட்ட சொன்னாங்களா... அப்பத்தான் அம்மா பெரியம்மாகிட்ட சொன்னாங்க - இனிமே இங்க வராதன்னு. அப்ப பெரியம்மா மொகத்துல தெரிஞ்ச அதிர்ச்சிய இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியல. அதுக்கப்புறமா அவங்க என்ன ஆனாங்கன்னு தெரியவே இல்ல.

mukilan
26-08-2005, 02:00 AM
அன்பு நண்பர் பாரதி

தங்களின் அனைத்து தேதியில்லா நாட்குறிப்புகளும் படித்துள்ளேன்.நான் தமிழ் மன்றத்தில் பார்வையாளராய் படித்தவை உங்களின் தேதியில்லா நாட்குறிப்பும் ராகவனின் சொல்ல சொல்ல இனிக்குதடாவும் தான். இது உங்களின் சொந்த வாழ்வில் நிகழ்ந்ததால் என்னால் உங்கள் அம்மா ஏன் பெரியம்மாவை திரும்ப வர வேண்டாம் எனச் சொன்னார்கள் எனக் கேட்க முடியவில்லை. ஆனாலும் இது போல முடிக்கப் பட்டது ஏதோ வெறுமையை எனக்குக் காட்டுகிறது அல்லது ஒரு நிறைவைத் தரவில்லை எனப் படுகிறது.தவறாக எண்ண மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.மற்ற படி தங்களின் நடை இப்பதிவில் அப்படியே காணப் படுகிறது. வாழ்த்துக்கள்.!

pradeepkt
26-08-2005, 05:30 AM
ஆமாம் பாரதி அண்ணா,
நீங்கள் சொல்லியவைகளுக்குள்ளேயே காரணங்கள் ஒளிந்திருக்கலாம்.
அல்லது நீங்கள் ஒரு சிறுவனின் பார்வையில் இன்னும் புரியாதவைகளைப் பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் எங்கள் மனதில் ஒரு சின்ன வெறுமை இன்னும் பின்னுகிறது.

எங்கள் வீட்டிற்கும் நான் சின்ன வயதாக இருக்கும்போது அய்யப்பா பாட்டி வருவார்கள். இன்று வரை அவர்கள் யார், அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் என்ன உறவு என்றெல்லாம் தெரியாது. அய்யப்பா என்று பெயர் வைத்திருந்தாலும் அவர்கள் காலப்போக்கில் கிருத்துவ மதத்தைத் தழுவினார்கள். எப்போது வீட்டிற்கு வந்தாலும் இரவில் எங்களுக்கு அருமையாகக் கதைகள் சொல்லிப் படுக்கும் முன் பிரார்த்தனை செய்து நாங்கள் தூங்கியபிறகுதான் தூங்குவார்கள். அவர் பிரார்த்தனை செய்யும்போது கம்மும் குரலும் வழியும் கண்ணீரும் எங்களை என்ன என்னவோ செய்யும்.

காலையில் நாங்கள் எழுமுன்னே எழுந்து குளித்து முடித்துப் போயிருப்பார்கள். எத்தனையோ நாள் அய்யப்பா பாட்டியை வீட்டிலுள்ளவர்கள் தொலைத்து விட்டார்கள் என்று நானே தர்ணா செய்து சாப்பிடாமல் அடி வாங்கி இருக்கிறேன்.

அப்படி இருந்த பாட்டி திடீரென்று ஒரு நாள் இரவு வந்தவர்கள் என்ன நடந்ததோ தெரியாது, எங்கள் அம்மாச்சியிடம் கதறி அழுதார். அப்புறம் தாத்தா வரும்வரை இருவரும் ஒரு அறைக்குள் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். தாத்தா வந்ததற்கப்புறம் என்ன முடிவு செய்தார்களோ, அய்யப்பா பாட்டி எங்களுக்கு ஒரு கதை கூடச் சொல்லாமல் இரவோடு இரவாக அவரது ஊருக்குத் தாத்தா வண்டி ஏற்றிவிடப் போய்விட்டார். அன்றிலிருந்து இன்று வரை அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இந்த முறை ஊருக்குப் போகும்போது அம்மாச்சியிடம் நயந்து கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்..

gragavan
26-08-2005, 05:43 AM
பாரதியண்ணா, உங்கள் பதிப்புகள் என்றுமே ஒரு ஈர்ப்பு கொண்டுள்ளவை. இதுவும் அப்படித்தான். எதிர்பாராத முடிவுதான். ஆனால் காரணத்தை ஊகிக்க முடிகிறது. அதைச் சொல்ல வேண்டாம்.

முகிலன் சொன்னது போல முடிவு போலத் தெரியாவிட்டாலும், அந்தக் காரணத்தை நீங்கள் விளக்குவது ஆண்ட்டி கிளைமாக்ஸ் போல ஆகிவிடும். ஒருவேளை இந்தப் பெரியம்மா பதிப்பு இன்னும் முடியவில்லை. சொல்ல நிறைய இருக்கிறது என்றால் நீங்கள் வளர்க்கலாம். அப்பொழுது சரியாக இருக்கும். இத்தோடு முடிந்ததென்றால் இத்தோடே விட்டு விடுங்கள்.

ஆனாலும் நெஞ்சில் கல்லைத்தான் வைத்து விட்டீர்கள். இதுவரை பேனாவில் குதூககல மையை ஊற்றிய எழுதிய நீங்கள் இந்த முறை ரெண்டு சொட்டு கண்ணீரைக் கலந்து விட்டீர்கள் போல. அதுவும் பாதிப்பை விட்டுத்தான் செல்கிறது.

பாரதி
26-08-2005, 01:55 PM
அன்பு நண்பர் பாரதி

தங்களின் அனைத்து தேதியில்லா நாட்குறிப்புகளும் படித்துள்ளேன்.நான் தமிழ் மன்றத்தில் பார்வையாளராய் படித்தவை உங்களின் தேதியில்லா நாட்குறிப்பும் ராகவனின் சொல்ல சொல்ல இனிக்குதடாவும் தான். இது உங்களின் சொந்த வாழ்வில் நிகழ்ந்ததால் என்னால் உங்கள் அம்மா ஏன் பெரியம்மாவை திரும்ப வர வேண்டாம் எனச் சொன்னார்கள் எனக் கேட்க முடியவில்லை. ஆனாலும் இது போல முடிக்கப் பட்டது ஏதோ வெறுமையை எனக்குக் காட்டுகிறது அல்லது ஒரு நிறைவைத் தரவில்லை எனப் படுகிறது.தவறாக எண்ண மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.மற்ற படி தங்களின் நடை இப்பதிவில் அப்படியே காணப் படுகிறது. வாழ்த்துக்கள்.!

அன்பு முகிலன்,
பல வருடங்களுக்கு முந்தைய ஒரு சிறு நிகழ்வு. இருப்பினும் ஏனோ மனதில் இனம் புரியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வயதில் அதைப் பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. உங்களைப் போலவே இதை எழுதிய பின் நானும் சில முறை படித்துப்பார்த்தேன். நிறைவில்லாமல் இருந்தாலும் இதை அப்படியே சொல்வதுதான் சரி என்று பட்டது. விமர்சனம் செய்வதில் உங்களுக்கு எந்த தயக்கமும் தேவையில்லை. உங்கள் மனதில் பட்டதை நேரடியாக சொல்லலாம். பார்வையாளராய் இருந்த போதும் பதிவுகள் படித்தது குறித்து சற்று மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

பாரதி
26-08-2005, 02:25 PM
அன்பு பிரதீப்,
உண்மைதான். வாழ்க்கையின் சில தருணங்களில் நடக்கும் சம்பவங்கள் அவ்வப்போது மறக்கப்பட்டு விடும். எப்போதாவது நினைவு கூறும் போது மனதை மிகவும் சங்கடப்படுத்தும். ஒருக்கால் அனைவரது வாழ்க்கையிலும் இவ்விதம் சம்பவங்கள் நடந்திருக்குமோ...!! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

அன்பு இராகவன்,
நீங்கள் சொன்னதுதான் சரி. விபரம் தெரிந்த பின்னர் அதைப்பற்றி யாரிடமும் கேட்க எனக்கு விருப்பமில்லாமல் போய்விட்டது. காலம் கடந்து அதைப்பற்றி தெரிந்து யார் மேலாவது குறைப்பட விருப்பமில்லை. அடுத்து பெரும்பாலும் மகிழ்ச்சியான சம்பவங்களை விட, மனதை பாதித்த அல்லது வருந்திய சம்பவங்கள்தான் அடிமனதில் தங்கி இருக்கின்றன.. வழக்கம் போல பாராட்டும் உங்கள் எழுத்துக்களுக்கு மிக்க நன்றி.

பரஞ்சோதி
26-08-2005, 03:15 PM
அண்ணா,

உங்க எழுத்துக்கு நானும் ஒரு ரசிகன், சின்ன வயது சம்பவங்களையும், காட்சிகளையும் மனதை தொடும் அளவிற்கு சொல்லியிருக்கீங்க, என் வாழ்க்கையில் கூட விடை தெரியாத சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளது, காலப்போக்கில் அவற்றை எல்லாம் மறந்தாலும், தனிமையாக இருக்கும் போதோ, அது போன்ற நிகழ்ச்சிகளை படிக்கும் போதோ, அல்லது திரையில் பார்க்கும் போது நினைவுக்கு வரும், மனம் அல்லாடும். அதே நிலை, இந்த பதிவை படித்தப் பின்பு.

பாரதி
26-08-2005, 03:50 PM
அன்பு பரஞ்சோதி,

உங்கள் சிறுவயது நினைவுகளை எழுதப்போகும் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

மன்மதன்
27-08-2005, 04:39 AM
சின்ன வயது நினைவுகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அதன் பிறகு நீங்கள் ஒருதடவை கூட அம்மாவிடம் அந்த நிகழ்வை பற்றி கேட்டதில்லையா?.. பரஞ்சோதியை எழுத தூண்டிய இந்த பதிவிற்கு நன்றி.
அன்புடன்
மன்மதன்

பாரதி
27-08-2005, 01:35 PM
இது வரை கேட்டதில்லை... காரணம் என்னவாக இருக்கும் என்பதை யூகத்தின் அடிப்படையில் எழுத விரும்பவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி மன்மதன்.

இளசு
05-12-2006, 11:46 PM
பாரதி,

மனம் பாரமாகிவிட்டது- இறுதி வரியில்.

சில புதிர்கள் அவிழ்க்கப்படாமலே வாழ்க்கை முடிந்துவிடும்.
இது அந்த வகை.

இது வெறுமையல்ல.. இருள்...

இருளும் வாழ்க்கையின் ஒரு அங்கம்...

முக ஓவியத்தின் நாசிக்கு அடியில் உள்ள இருள் போல...
வாழ்க்கை ஓவியத்தை சில இருள்களே முழுமை ஆக்குகின்றன.

-------------------------------------------------

கிரா காபி வருகை கிராமத்தைக் கலக்கியதைப் படித்தபோது வந்த குதூகலம், இங்கே 'எவர்சில்வர்' அறிமுகப்படலத்திலும் கிடைத்தது...

ஓவியா
06-12-2006, 07:25 PM
சிக்கனமான பதிவு,

படித்தேன்,
மன்னிக்கவும்,
முடிவை யூகிக்க முடியவில்லை...

ராகவன் சொல்வது போல்
முடிவில் நெஞ்சில் கல்லைத்தான் வைத்து விட்டீர்கள் அண்ணா.

பாரதி
07-12-2006, 07:38 AM
உண்மைதான் அண்ணா... காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிய அப்போது வயது போதவில்லை. இப்போது யூகிக்க முடிந்தாலும் யார் மீதாவது குறையை தூக்கி வைக்க வேண்டியதிருக்கும். அதற்கும் எனக்கு விருப்பமில்லை.. எனவேதான் நடந்த நிகழ்வு மட்டும் உங்கள் பார்வைக்கு எழுத்துக்களாய்... வாழ்க்கையை முழுமை செய்யும் உங்கள் கருத்து மிகவும் சரி.

கருத்துக்கு மிக்க நன்றி ஓவியா... மன்னிப்பு எல்லாம் எதற்கு..?

சில கேள்விகளுக்கு எப்போதும் பதில் கிட்டாது... பதிலை தேட விருப்பமில்லை என்பதில்லை.. இப்போது தேடி கிடைக்கும் விடையால் எந்தப்பயனும் இல்லை என்பதே. இது அந்த வகை..