PDA

View Full Version : அடிமையாய்Nanban
25-08-2005, 04:55 PM
அடிமையாய்


விலக்கி வைத்த
கனியை உண்ட பாவம்
எல்லைகளற்று
விரிந்து கிடக்கின்றது

கனியைக் காட்டித் தந்த
சர்ப்பமோ
கால்கள் போனாலும்
ஊர்ந்து பிழைக்கும் வலியை
கழட்டிப் போட
கற்றுக் கொண்டு விட்டது

விழுங்குமுன்னே
மாட்டிக் கொண்ட ஆதாம்
தண்ணீர் குடிக்கும் பொழுதெல்லாம்
தொண்டையில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
ஒரு ஆப்பிளோடு
தப்பிப் பிழைத்துக் கொண்டார்

விலக்கப்பட்ட கனியும் கூட
விமோசனம் பெற்றுவிட்டது
தினம் தினம்
உண்ணச் சொல்லும்
மருத்துவனின் தயவோடு...

விழுங்கித் தொலைத்த
ஏவாள் மட்டும்,
வயிற்றினுள் திணிக்கப்பட்ட
கர்ப்பப் பையிடம்
இன்றளவும் அடிமையாய்...

Iniyan
25-08-2005, 06:11 PM
எல்லோரும் தப்பித்துக் கொள்ள ஏவாள் மட்டும் இன்னும் மாட்டித் தவிக்கும் அவலத்தை சொல்லும் உங்கள் கவிதை அபாரம். வாழ்த்துக்கள்.

karikaalan
27-08-2005, 10:43 AM
புதிய கண்ணோட்டம், நண்பன்ஜி. யாரிட்ட சாபமோ?

===கரிகாலன்

kavitha
27-08-2005, 11:09 AM
புதிய கண்ணோட்டம், நண்பன்ஜி. யாரிட்ட சாபமோ?

===கரிகாலன்

ஆரம்ப கால கதை. இன்று இது பொருந்தாது. பிறகு வருகிறேன்.

இக்பால்
27-08-2005, 01:30 PM
நண்பர் நண்பனைச் சீண்டாமல் கவிதா தங்கைக்கு தூக்கம் வராதே.

பல நாட்களுக்குப் பிறகு நண்பனின் கவிதை படிக்கிறேன்.

நல்ல கற்பனை. ஆனாலும் பழைய காரம் (ஒரு பஞ்ச்) இல்லையே!

-அன்புடன் இக்பால்.

Nanban
27-08-2005, 05:42 PM
கவிதையைப் பற்றிய முழுமையான கவிதாவின் விமர்சனங்கள் வந்து சேர்ந்த பின்பு விவாதிக்கலாம்.

கரிகாலன்ஜி, இது சாபமல்ல. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் பெண்களைப் பற்றிய என்னுடைய எண்ணம் தான்.

நண்பர் இக்பால், உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நலம் தானே? காரம் இல்லையா? இந்தக் கவிதை மிகுந்த சர்ச்சைக்குள்ளான கவிதை ஆகும். பாருங்களேன்.

இனிய இனியன் - நன்றி.

mukilan
27-08-2005, 05:58 PM
ஆங்கிலத்தில் "ஆதாம் ஆப்பிள்" என்ற தொடர் தொண்டையில் உள்ள முன்னெலும்பைக் குறிக்கும். ராஜேஷ் குமார் கூட தனது கதா நாயகன்

இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதைக் குறிக்க "ஆதாம் ஆப்பிள் அவஸ்தையாய் ஏறி இறங்கியது" எனக் குறிப்பிடுவார். ஆதாம் ஆப்பிள் ஆண்களுக்கு

மட்டும் தான் இருக்கிறதா? இன்று நண்பன் அவர்களின் அர்த்தமுள்ள் இந்த கவிதையால் தான் பெயர்க் காரணம் புரிகிறது. சபிக்கப் பட்ட கனியை

விழுங்கிய பெண்களின் நிலை பரிதாபம் தான். மாற்ற முடியாதா என்ன?

Nanban
28-08-2005, 06:15 PM
மாற்றுவதும், மாற்றாததும் அவரவர் விருப்பம்.

ஆனால் அடுத்தவர் மீது பழி போடுவதும், அவஸ்தைப் படுத்துவதும் வேண்டாமே என்று தான் எண்ணுகிறேன்.

நன்றி முகிலன்

gragavan
29-08-2005, 04:58 AM
கதை புராணத்தனமாக இருக்கலாம். ஏற்க முடியாமலும் இருக்கலாம். ஆனால் அது சுட்டிக்காட்டும் நிலை மிகவும் நிதர்சனமல்லவா.

சுமப்பதும் பெண். உயிரைக் கொடுத்துப் பிழைப்பதும் பெண். அவளுக்கு மட்டுமே அவலம். அதனை விடுவதும் தொடர்வதும் அவள் கையில்தான் உள்ளது.

இந்த விடயத்தில் பொதுவாகவே எந்த ஆணும் பெண்ணுக்கு உதவ வரமாட்டான். ஆகையால் முடிவு பெண்ணின் கையில்.

Nanban
29-08-2005, 04:54 PM
நன்றி ராகவன்.

பெண் விடுதலை என்பது மதம், இறைவன், சமூகம் என்று பலப்பல மனித தேவைகளுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பின்னிப் பிணைத்து இன்று அதை விட்டு வெளியேறினால் இறை மறுப்பு அல்லது எதிர்ப்பு என்றாகி விடுமோ என்ற அச்சத்தை பெண் மனதில் ஏற்படுத்தியதே இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும்...

gragavan
30-08-2005, 05:33 AM
நன்றி ராகவன்.

பெண் விடுதலை என்பது மதம், இறைவன், சமூகம் என்று பலப்பல மனித தேவைகளுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பின்னிப் பிணைத்து இன்று அதை விட்டு வெளியேறினால் இறை மறுப்பு அல்லது எதிர்ப்பு என்றாகி விடுமோ என்ற அச்சத்தை பெண் மனதில் ஏற்படுத்தியதே இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும்...அதனால்தான் பாரதியார் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்றார். அதாவது மாதர்கள் தங்களைத்தாமே இழிவு செய்து கொள்ளும் மடமையைக் கொளுத்துவோம் என்றார்.

kavitha
31-08-2005, 06:33 AM
கதை புராணத்தனமாக இருக்கலாம். ஏற்க முடியாமலும் இருக்கலாம். ஆனால் அது சுட்டிக்காட்டும் நிலை மிகவும் நிதர்சனமல்லவா.

சுமப்பதும் பெண். உயிரைக் கொடுத்துப் பிழைப்பதும் பெண். அவளுக்கு மட்டுமே அவலம். அதனை விடுவதும் தொடர்வதும் அவள் கையில்தான் உள்ளது.

இந்த விடயத்தில் பொதுவாகவே எந்த ஆணும் பெண்ணுக்கு உதவ வரமாட்டான். ஆகையால் முடிவு பெண்ணின் கையில்.

நிதர்சனமான உண்மை. அறிவியல் எவ்வளவோ முன்னேறிவிட்டது. இன்னும் புராணக்கதைகள் பேசி போரடிப்பதில் அர்த்தமே இல்லை.
நல்லவற்றை எடுத்துக்கொள்வதும் தீயவற்றை விடுவதும் பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை.

kavitha
31-08-2005, 06:35 AM
அதனால்தான் பாரதியார் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்றார். அதாவது மாதர்கள் தங்களைத்தாமே இழிவு செய்து கொள்ளும் மடமையைக் கொளுத்துவோம் என்றார்.
அந்த மடமையும் தானே பெண்களுக்கு இருக்கவேண்டிய(?) குணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

kavitha
31-08-2005, 06:40 AM
நண்பர் நண்பனைச் சீண்டாமல் கவிதா தங்கைக்கு தூக்கம் வராதே.
:) :) அப்படியெல்லாம் இல்லை அண்ணா. நண்பரே நீங்களும் அப்படி நினைத்திருந்தால் மன்னியுங்கள்.

மாற்றுப்பொருளில் கவிதை எழுதுவதிலும், சிந்தையைக்கிளறுவதிலும் இவரது கவிதை சளைத்ததில்லை. அவர் பக்குவமுள்ள மனிதர் என்கின்ற எனது அபிப்ராயத்தினாலே தான் இது வரை அவரைப்பார்த்தோ பேசியோ இல்லாத போதும் அவரது எழுத்துக்களை வைத்து உரிமைக்கொண்டாட முடிகிறது.

gragavan
31-08-2005, 06:47 AM
அந்த மடமையும் தானே பெண்களுக்கு இருக்கவேண்டிய(?) குணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.கண்டிப்பாக இல்லை. அந்த மடம் வேறும். இந்த மடம் வேறென்று நினைக்கிறேன்.

அகவியலில் பெண்மைத்தன்மைக்குத் தேவையானவை அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு. அவை பொதுக்குணங்கள் அல்ல.

அதனால்தான் புகழேந்தி தெளிவாகச் சொல்லியிருக்கிறார். "நாற்குணமும் நாற்படையா" காதற் போரில் நான்கு குணங்களும் நான்கு படைகளாக ஆண்மகனைத் தாக்குமாம். இது பொதுப் பண்பு இல்லை என்பதால்தான் அடுத்து உடனேயே "ஐம்புலனும் நல்லமைச்சா"..............ஐந்து புலன்கலை நல்ல படி நெறியோடு அமைச்சாக பயன்படுத்துகிற பொதுப் பண்பை வைத்தார். இது நளவெண்பாவில் வருவது.

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதி குடை கீழ் ஆளுமே
பெண்மை அரசு!

kavitha
31-08-2005, 06:49 AM
கண்டிப்பாக இல்லை. அந்த மடம் வேறும். இந்த மடம் வேறென்று நினைக்கிறேன்.

அகவியலில் பெண்மைத்தன்மைக்குத் தேவையானவை அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு. அவை பொதுக்குணங்கள் அல்ல.

தயவுசெய்து விரிவான விளக்கம் தரவும்.

பிரியன்
31-08-2005, 06:57 AM
அதத்தான் அனா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம் என்கிறார்களோ

இக்பால்
31-08-2005, 07:43 AM
:) :) அப்படியெல்லாம் இல்லை அண்ணா. நண்பரே நீங்களும் அப்படி நினைத்திருந்தால் மன்னியுங்கள்.

மாற்றுப்பொருளில் கவிதை எழுதுவதிலும், சிந்தையைக்கிளறுவதிலும் இவரது கவிதை சளைத்ததில்லை. அவர் பக்குவமுள்ள மனிதர் என்கின்ற எனது அபிப்ராயத்தினாலே தான் இது வரை அவரைப்பார்த்தோ பேசியோ இல்லாத போதும் அவரது எழுத்துக்களை வைத்து உரிமைக்கொண்டாட முடிகிறது.

அவரது புகைப்படத்தைத்தான் முன்னரே நான் மன்றத்தில் கொடுத்து இருக்கிறேனே தங்கை. சாதுவானவர். :)

gragavan
31-08-2005, 07:46 AM
அதத்தான் அனா அந்த மடம் ஆகாட்டி சந்த மடம் என்கிறார்களோநான்கு அகவியல் குணங்களில் வரும் மடமும் பாரதி சொன்ன மடமையும் வேறு வேறு. மடமை என்று பாரதி சொன்னது எதைத் தெரியுமா? பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆண்கள் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்று கருதும் மடமை. ஆண்களைச் சார்ந்தவர்கள் பெண்கள் என்ற அறியாமை நிலையை. பாரதி சொல்ல வருவது "பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்று பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்". அதுதான் சரியாக அமையும். பெண்களுக்குப் பாதுகாப்புக்காகத்தான் செய்கிறோம் என்று ஆண்கள் சொல்வது வெறும் ஆணாதிக்கப் பித்தலாட்டம். பாதுகாப்பின்மை யாரிடமிருந்து வருகிறது? ஆண்களிடமிருந்துதானே....ஆக திருந்த வேண்டியது ஒன்றிருக்க தண்டனையை வேறொருவர் மேல் ஏற்றுவது ஏற்புடையதன்று.

மடம் என்ற அகவியல் பண்பைத் தவறாக நினைக்கின்றார்கள். கலவியில் நேரும் எதிருமே சரியாகச் சேரும். நேருக்கும் எதிருக்கும் பண்புகளில் வேறுபாடு வருகிறது. அதிலொன்றுதான் இது.

தமிழில் ஆழப் படிக்காமையும் தமிழ்ச் சொற்களில் நல்ல பகுத்தறிவு இல்லாமையுமே இது போன்ற சொற்குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.

kavitha
31-08-2005, 11:12 AM
.


மடம் என்ற அகவியல் பண்பைத் தவறாக நினைக்கின்றார்கள். கலவியில் நேரும் எதிருமே சரியாகச் சேரும். நேருக்கும் எதிருக்கும் பண்புகளில் வேறுபாடு வருகிறது. அதிலொன்றுதான் இது.

தமிழில் ஆழப் படிக்காமையும் தமிழ்ச் சொற்களில் நல்ல பகுத்தறிவு இல்லாமையுமே இது போன்ற சொற்குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.

அண்ணா, உண்மையாகவே நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவைகள் என்னவென்று வரையறுத்தெல்லாம் எனக்குத்தெரியாது. அந்த அளவிற்கு தமிழ் நூல்களை நான் படித்ததும் இல்லை. தெரிந்து கொள்வதற்காகவே உங்களிடம் கேட்டேன். நன்றி. :)

-----------


அவரது புகைப்படத்தைத்தான் முன்னரே நான் மன்றத்தில் கொடுத்து இருக்கிறேனே தங்கை. சாதுவானவர்.

அப்படியா அண்ணா? நான் முதன்முதலாக துவக்கு இதழில் வேறொரு புனைபெயரில் தான் அவரது புகைப்படத்தை பார்த்தேன். மன்றத்தில் அதே கதையை படித்ததன் மூலமாக அவர் தான் என்பதை புரிந்துகொண்டேன்.

Nanban
31-08-2005, 09:22 PM
மடம் ஏன்ற அகவியல் பண்பைத் தவறாக நினைக்கிறார்கள். அந்த அகவியல் பண்பு தான் என்ன என்று தெரியவில்லை என்று கேட்கலாமா? கலவியில் நேரும் எதிருமே சரியாகச் சேரும். நேருக்கும் எதிருக்கும் பண்புகளில் வேறுபாடு வருகிறது. அதிலொன்றுதான் இது. மடம் என்பது பெண்மை (எதிர் என்று வைத்துக் கொள்வோமே -) என்றால், ஆண்மைக்கு எந்த பண்பு?

கலவிக்கு பெண்மைக்கு ஒரு பண்பு ஆண்மைக்கு ஒரு பண்பு என்பது விநோதம் தான்.

ஆனால் என் கவிதையின் நோக்கம் அதுவல்ல. பிள்ளை பெறும் இயந்திரமாக இருக்க மறுக்கும் பொழுது தான் அவர்களுக்கான விடுதலை கிடைக்கும் என்பதே மறைமுக செய்தி.

பிள்ளை பெற்றுத் தருவதை மறுக்க முடியுமா? மறுத்தால் அதற்கு ஆண்களிடமிருந்து எத்தகைய எதிர்வினைகள் எழும்? இந்த சமூகம் எப்படி மாறும்? இதையெல்லாம் தான் விவாதிக்க வேண்டியவை என்று நான் கருதுகிறேன். கலவியில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதல்ல கவிதையின் நோக்கம்....

gragavan
01-09-2005, 05:07 AM
நண்பன் புரிகிறது. மடம், மடமை விவகாரத்திற்கும் கவிதைக்கும் தொடர்பில்லை. மடத்தையும் மடமையையும் கவிதா குழப்பிக் கொண்டதால் விளக்கினேன். அவ்வளவே.

gragavan
01-09-2005, 05:17 AM
பிள்ளை பெற்றுத் தருவதை மறுக்க முடியுமா? மறுத்தால் அதற்கு ஆண்களிடமிருந்து எத்தகைய எதிர்வினைகள் எழும்? இந்த சமூகம் எப்படி மாறும்? இதையெல்லாம் தான் விவாதிக்க வேண்டியவை என்று நான் கருதுகிறேன். கலவியில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதல்ல கவிதையின் நோக்கம்....பிள்ளை பெறுவது என்ன? ஆண்கள் சொல்லிய எழுதிய எதையாவது ஒன்றை மறுக்கும் பெண்கள் அடங்காப்பிடாரிகள், வேசிகள், திமிர்பிடித்தவர்கள். உலகம் முழுதும் இதுதான் நிலை.

கணவன் வேண்டாம் குழந்தை மட்டும் போதும் என்று நினைக்கின்ற பெண்களை என்னவெல்லாம் பேசுகிறது உலகம். என்றைக்கு கணவன் என்று ஒருவன் இல்லாமல் ஒரு பெண் குழந்தையோடு வாழ முடிகிறதோ......என்று அந்தக் குழந்தை தந்தை பெயர் தெரியாதவன் என்ற பெயரைக் கொள்ளாமல் இருக்கிறதோ.....அன்றுதான் உண்மையான பெண் சுதந்திரதினம். அதுவரை பண்பாடு, மதம் என்ற பெயரில் பெண்கள் அடங்கிக் கிடக்க வேண்டியதுதான் நடக்கும்.

kavitha
01-09-2005, 05:49 AM
பிள்ளை பெற்றுத் தருவதை மறுக்க முடியுமா? மறுத்தால் அதற்கு ஆண்களிடமிருந்து எத்தகைய எதிர்வினைகள் எழும்? இந்த சமூகம் எப்படி மாறும்? இதையெல்லாம் தான் விவாதிக்க வேண்டியவை என்று நான் கருதுகிறேன்
வரவேற்கத்தக்கது

ஆண்கள் சொல்லிய எழுதிய எதையாவது ஒன்றை மறுக்கும் பெண்கள் அடங்காப்பிடாரிகள், வேசிகள், திமிர்பிடித்தவர்கள். உலகம் முழுதும் இதுதான் நிலை.

கணவன் வேண்டாம் குழந்தை மட்டும் போதும் என்று நினைக்கின்ற பெண்களை என்னவெல்லாம் பேசுகிறது உலகம். என்றைக்கு கணவன் என்று ஒருவன் இல்லாமல் ஒரு பெண் குழந்தையோடு வாழ முடிகிறதோ......என்று அந்தக் குழந்தை தந்தை பெயர் தெரியாதவன் என்ற பெயரைக் கொள்ளாமல் இருக்கிறதோ.....அன்றுதான் உண்மையான பெண் சுதந்திரதினம். அதுவரை பண்பாடு, மதம் என்ற பெயரில் பெண்கள் அடங்கிக் கிடக்க வேண்டியதுதான் நடக்கும்.
நல்ல சிந்தனைதான். அப்படியே அவர்கள் முன்வந்தாலும் ஆண்களை ஒதுக்கிவைப்பதாக ஆகிவிடாதா?

பிரசன்னா
09-09-2005, 05:35 PM
நல்ல கற்பனை.புதிய கண்ணோட்டம்.

Nanban
17-09-2005, 06:16 PM
நல்ல கற்பனை.புதிய கண்ணோட்டம்.

புதிய கண்ணோட்டம் என்பது சரி. கற்பனை என்பது சரியல்ல. இது ஒரு அனுபவம். நம்மைச் சுற்றி நிகழும் அவலங்களுக்கு என்ன தான் தீர்வு என்று சிந்தித்த பொழுது தோன்றிய கவிதை. கருத்தும் கூட என்னுடையது மாத்திரமே அல்ல. பெரியார் சொல்லிய கருத்து தான் இதுவும்.

அழகாகச் சொன்னேன் என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்.

நன்றி

Nanban
17-09-2005, 06:52 PM
ç

நல்ல சிந்தனைதான். அப்படியே அவர்கள் முன்வந்தாலும் ஆண்களை ஒதுக்கிவைப்பதாக ஆகிவிடாதா?

ஆகாது.

உலகம் இந்தத் தீர்வை முன்னோக்கித் தான் நகர்கிறது என்பது அனுமானம். அதனாலயே Cloning என்ற திசுக்களிலிருந்து கடைந்தெடுக்கப்படும் DNAக்களை முறைப்படி சீராட்டி (DNA Culturing) பிரதி எடுத்து ஒரு புதிய மனிதனை உருவாக்கிட முடியும். அப்பொழுது பெண்களுக்கு ஆண்கள் தயவு தேவையிருக்காது. அல்லது ஆண்களுக்கு பெண்கள் தயவு தேவையிருக்காது. ஆனால் அப்பொழுது சமத்துவம் வந்து விடுமா?

இருக்காது.

ஒருவர் தயவு மற்றவருக்கு தேவையிருக்காது என்னும் பட்சத்தில் மிகக்கொடுரமான குடுமிப்பிடி சண்டை நிகழும் - யார் பெரியவர் என்று.

நிற்க மற்றொரு சுவராஸ்யமான புத்தகம்:

ADAMS CURSE - A future without Men என்ற புத்தகம். எழுதியவர் : Bryan Sykes. அவர் முன் வைக்கு வாதம் -

மரபணு விஞ்ஞான இயல்பின் படி ஒரு பெண் இரண்டு X க்ரோமோசோம்ஸ் கொண்டவள். ஆண் ஒரு X க்ரோமோசோம்ஸ்ம் ஒரு Y க்ரோமோசோம்ஸ்ம் கொண்டவன். மொத்தம் நாற்பத்தி ஆறில் இந்த ஒரு க்ரோமோசோம்ஸ் வித்தியாசம் தான் ஆண் பெண் வித்தியாசத்தை நிர்ணயிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது.

கொஞ்சம் நெருங்கி ஆராய்ந்தால் ஆண்களை உண்டாக்கும் இந்த Y க்ரோமோசோம்ஸ் ஆண்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி சொல்லுகிறது. ஆம் - Y க்ரோமோசோம்ஸ்கள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. காலங்கள் கடந்து போகும் பொழுது இந்த Y களை பெண்களின் X ஸ்கள் விழுங்கி கபளீகரம் செய்து விடும். ஆம் நரவேட்டையில் ஆண்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் நண்பர் - அதுவும் ஒன்றே ஒன்றை வைத்திருக்கும் ஆதரவற்றவர் - எளிதில் பெண்களின் மூன்று X ஸ்களிடம் மாட்டிக் கொண்டு உயிர் விட, பரிணாம வளர்ச்சியில் ஆண்களை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளிவிட்டு பெண்கள் ஏறு கொண்ட சிங்கமாய் வீறு நடை போடப்போகிறார்கள். அப்பொழுது அம்மா தாய்மார்களே கருணை காட்டுவீர்களா - இந்த அப்பாவி ஆண்களுக்கு?

மேலும் ஒரு புத்தகம் : Da Vinci Code

இதில் சில விவாதங்கள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது - சரித்திரத்தின் நான்காம் நூற்றாண்டு பக்கங்களிலிருந்து.

கான்ஸ்டாண்டைன் என்ற ரோம் நகரத்து மன்னன் கிறிஸ்துவ மதத்தின் வளர்ச்சியைக் கண்டு அந்த மதத்தில் சேர்ந்து கொண்டு அதன் வளர்ச்சியை தன் சாம்ராஜ்ய வளர்ச்சிக்கு துணையாக்கிக் கொள்ள விரும்பினான். ஆனால் அதே சமயம் கிறிஸ்துவ மதத்தை இயேசு வழங்கிய அதே வடிவில் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. தனக்கு பிடித்த வகையில் கிறிஸ்துவ மதத்தை மாற்றி அமைக்கிறான்.

கிறிஸ்துவை இறைவனாக அறிவிக்கிறான். உருவ வழிபாட்டிற்கு உத்தரவிடுகிறான். கிறிஸ்துவை மனிதனாகக் காட்டிய பழைய பைபிள் பிரதிகள் அழிக்கப் படுகின்றன. புதிய கோஸ்பல்கள் எழுதி இணைக்கப் படுகின்றன. இயேசு இறைவனாகி விட்டார். ஆனால் அவர் குடும்பத்தாரை என்ன செய்வது? குறிப்பாக அவரது காதலி (மனைவி)?
மேரி மகாதலீன்? கான்ஸ்டாண்டைன் யோசித்தான் - தடாலடியாக அறிவித்தான் - மேரி மகாதலீன் ஒரு விபச்சாரி என்று. உலகின் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடி இது. தேவாலயங்கள் அமைதி காத்தன. அவர்களுக்கு இது ஒரு சௌகர்யமே. பெண்கள் விலகிக் கொண்டால் முழுக்க முழுக்க ஆண்களின் கொட்டாரமாகி விடும் சர்ச்சுகள். அதனால் அவர்களும் அரசனுக்கு அவன் விரும்பிய வண்ணமெல்லாம் நடக்க ஆதரவளித்தனர். அன்று தான் கான்ச்டாண்டைன் ஒரு கதையை அவிழ்த்து விட்டான் - ஏவாள் ஆப்பிள் சாப்பிட்டாள் அதன் சாபம் அவள் இனம் அழியும் வரையிலும் கர்ப்பம் சுமப்பாள் என்று. ஆதாம் ஏவாள் கதை நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படும் ஒரு மத சம்பிராதாயம். மத நம்பிக்கைகளுக்குட்பட்டு அதை இறைவணக்க தலங்களில் கடை பிடித்தால் மட்டுமே போதுமானது. ஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படையிலே நீதியும் வழங்க முனையக் கூடாது.

இப்பொழுது கவிதை சமய சம்பிராதாயங்களை தாண்டியும் பொருள் தரும்.

kalvettu
19-09-2005, 06:24 AM
சமிபத்தில் எங்கோ படித்தது....

ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை எற்பட்டால் கருகலைப்பால் மனித இனமே அழிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

எங்கு வாசித்தேன் என்பது ஞாபகமில்லை...ஒருவேளை இங்கு கூட வாசித்திருக்கலாம்.

பெண்களை குழந்தைகள் பெறும் இயந்திரமாக ஆண்கள் நினைப்பது எந்த காலத்திலும் நிற்காது என்றே நினைக்கிறேன்.
இன்றை எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்த பிறகும் இன்னும் பெண்களை சமமாக நடத்த ஆண்கள் மனம் ஒப்புக்கொள்வதில்லை என்பதே உண்மை,அதுவும் தொழிற்கல்வி பயில்பவர்களிடம் பேசிப்பார்த்தால் நன்றாகவே புரியும்.

இவர்கள் இயந்திரங்களை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்..இன்றைக்கு பல்வேறு அமைப்புகள் மாணவர்களை விட்டு ஒதுங்குவதாகவே நினைக்கிறேன் ( அதிலும் குறிப்பாக தொழிற்கல்வி பயில்பவர்களை ) இதில் அமைப்புகள் என்று சொல்லவருவது கம்யுனிசம் மற்றும் பெரியார் அமைப்புகளை மட்டுமே ஏனென்றால் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்ததில் இந்த இரு அமைப்புகளின் பங்கு மிகப்பெரியது . இவர்கள் விலகவிலக மாணவர்களின் சிந்தனை குறுகிக்கொண்டே பொகிறது என்பதே உண்மை.
மேலும் அன்றைக்கு சொன்னபடி வாழ்ந்த தலைவர்கள் இருந்தார்கள்.ஆனால் இன்றைக்கு யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவில் இல்லை.இன்றைக்கு பலர் கருத்துக்களை விட ஜனரஞ்சமாக பேசுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளார்கள் . கருத்துக்களை பேசுபவர்கள் தனக்கென ஒருவட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள் வருபவரிடம் மட்டுமே பேசுவோம் என்று இருக்கிறார்கள்.அன்றைக்கு மிகப்பெரிய எழுச்சியை எற்படுத்த திராவிட கழகங்களால் இன்றைக்கு எதுவும் செய்யமுடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.


பெண்களை மதிக்கிறோம் என்பதும் சம உரிமை என்பதும் இருவேறு நிலையாகவே நினைக்கிறேன்,ஏனென்றால் இன்றைய இயந்திர உலகம் இயந்திரங்களுடன் கூட எப்படி சிரிக்க சிரிக்க பேசுவது என்று கற்றுத்தருகிறது..பெண்களை மதிக்கிறோம் என்பதை இதோடு தான் சம்பந்தப்படுத்தி பார்க்க முடிகிறது.
சிந்தனையில் மாற்றம் எற்படுத்தவேண்டியவர்கள் இன்றைக்கு முடங்கிப் போனார்கள் ஆசிரியர்களையும் சேர்த்து .


இன்றைக்கு தொழிற்கல்வி பயில்பவர்கள் அதிகம்..என்ன தான் சம உரிமை என்று பேசினாலும் சிந்தனையில் மாற்றம் எற்படாதவரை தாக்கும் முறை வேண்டுமானால் மாறலாம் ஆனால் வெற்றியோ தோல்வியோ தாக்குதல் குறையப்போவதில்லை என்றே தோன்றுகிறது.தாக்குதலை நிறுத்த இரண்டு வழிகள் ஒன்று தாக்குபவர் அதை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தாக்குதலை சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.இதில் இரண்டாவது நிலை தான் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.

குங்குமம் இதலில் வாசித்தது... "நாத்திகம் என்பது தெளிவு"


"பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்று பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்"


கனிமொழி சமிபத்தில் பெண்களின் எழுத்தை பற்றிய சர்ச்சையின் போது..இதே கருத்தைத் தான் கூறினார்.."பெண்கள் என்ன எழுத வேண்டும் என்று பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும்...."

kavitha
20-09-2005, 08:38 AM
Quote:
"பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்று பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்"
இந்தக்கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு. பெண்கள் என்ற பட்சத்தில் மட்டுமல்ல. ஒருவரின் செயல்களுக்கும் அவரவரே பொறுப்பாளி என்பதுவும்.

நண்பன் அவர்கள் சொன்னதுபோல ஆண்களை ஒதுக்கி வைப்பது நடவாது என்பது ஆறுதலானச் செய்தி. ஒருகாலம் அப்படி வந்தால் அப்போது நானும் வருத்தப்படுவேன் என்பது மட்டும் உண்மை.

குளோனிங் -ல் அவரவர் முகச்சாயலைப் பிரதி எடுத்துக்கொள்வது ஃபோட்டோ எடுப்பது போல. அவனுக்காக அவளும் அவனுக்காக அவளும் உளப்பூர்வமாய் ஏற்பதென்பதுதான் சிறந்ததாக இருக்கும். யார் தயவும் தேவையில்லை என்றிருக்க எல்லோராலும் முடியும். தனியாகத்தான் வருகிறோம். தனியாகத்தான் போகிறோம். வாழ்வதென்பது கூட தனிமனிதனின் செயல்தான். அவரவர் வாழ்க்கை அவரவர்கையில் என்பது தீர்மானிக்கும் சுதந்திரம் என்பது மட்டுமல்ல. வாழ்வை சுவைக்கும் கலையும் கூட.

ஆனால் ஒற்றுமையில் தான் ஆக்கப்பூர்வ வளர்ச்சியையும் இனிமையையும் காணமுடியும். அதற்கு ஆண்கள் இன்னும் தெளிய வேண்டும். பெண்கள் தம் நிலைகளை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

Nanban
07-10-2005, 10:10 PM
Quote:
"பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்று பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்"
இந்தக்கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு. பெண்கள் என்ற பட்சத்தில் மட்டுமல்ல. ஒருவரின் செயல்களுக்கும் அவரவரே பொறுப்பாளி என்பதுவும்.

நண்பன் அவர்கள் சொன்னதுபோல ஆண்களை ஒதுக்கி வைப்பது நடவாது என்பது ஆறுதலானச் செய்தி. ஒருகாலம் அப்படி வந்தால் அப்போது நானும் வருத்தப்படுவேன் என்பது மட்டும் உண்மை.பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்று பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கனிமொழி தன்னுடைய கவிதை நூலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பாருங்கள் - அவர் ஒரு பெண்ணாக இருந்தும் என்ன வேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஏன் நீங்கள் கூட குறிப்பிடவில்லை.

இப்படியாக ஒவ்வொரு பெண்ணும் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதை விட்டுவிட்டு பெண்கள் தான் முடிவு செய்வோம் என்று பொதுப்படையாக சொல்லிக் கொண்டிருந்தால் அது பல தவறான கருத்தோட்டங்களுக்கு வழி வகுக்கும்.

சிலர் இஷ்டப்படி இன்பம் துய்த்தல் பிற ஆடவருடன் என்றெல்லாம் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் வாய் திறந்து தங்களுக்கு வேண்டிய உரிமைகள் இன்னதென்று சொல்லும் காலம் வந்து விட்டது என்றே கருதுகிறேன்....

இளசு
07-10-2005, 11:51 PM
நண்பனின் கவிதை அவரே சொன்னதுபோல் அழகாய் இருக்கிறது...
நண்பர்களின் கருத்துகள்.. குறிப்பாய் இராகவன், கவிதா, கல்வெட்டு ... நிறைய்ய்ய்ய்ய்ய சிந்திக்க வைக்கின்றன..

என் கருத்து ---

பிள்ளை பெற்றுத்தர மாட்டேனென்று ஒரு சாராரும்
பிள்ளை பெற வைக்க வழி செய்ய மாட்டேன் என மறு சாராரும்
கருத்து மோதலில் சிக்க வைக்கவா விதித்தது இயற்கை?
ஒரே பிரதி நோயாளி டாலியாய் நூற்றுக்கணக்கில் உலாவரவா உத்தேசித்தது இயற்கை?
சரிபாதிகள் சமமாய் இணைந்து வாழாமல் இசங்கள் பேசி வாதம் வளர்க்கவா வழி செய்தது இயற்கை?

என்னைப் பொருத்தவரை காதல், கவர்ச்சி, உயிரையே கொடுப்பேன் என்பதெல்லாம் மாயங்கள்..
இன்னொரு உயிரை - ஆணோ, பெண்ணோ
சமமாய் மதிக்கும் பரஸ்பர மரியாதையே
எல்லா உறவுகளுக்கும் தலையான அடிப்படை.
இது ஆட்டங்காணும் எந்த தாஜ்மகாலும் நிலைக்காது..

பெண்ணே பிரதானம் என்பது ராகுல சாங்கிருத்யாயன் காட்டும் அந்தக் கால சமுதாயம்..
பெண்ணை 'பயனாளும்' இந்தக்கால நிதர்சனம்..

இரண்டுமே செயற்கை...
வெட்கப்படும் இயற்கை..

Nanban
08-10-2005, 12:46 AM
மிக்க நன்றி இளசு.

இந்த பரஸ்பர மரியாதையை வேறு வகையிலும் நான் குறிப்பிடுவேன் - அதுதான் சுயமரியாதை - Self Esteem. இது பங்கப்படாமல் இருந்தாலே போதுமென்பேன். இந்த சுயமரியாதையில் ஆண் பெண் என்ற வித்தியாசங்கள் கிடையாது. சுய மதிப்பீடுகள் என்றுமே ஒருவர் ஆளுமையில் எழுவது தானே? அதைக் காயப்படுத்தாமல் மதிக்கப் பழகுதலே சமத்துவம் வர வழி வகை செய்து விடும்.

இங்கு பிள்ளை பெற மறுத்தல் என்பது எதிர்ப்பைக் குறிக்க ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது - அதன் உபயோகம் அவ்வளவே. மற்றவை - ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்களின் துணையாகக் கற்றது மட்டுமே....

இளசு
08-10-2005, 12:52 AM
நண்பன்,
உங்கள் கருத்தின் ஆழமான ஓட்டம் புரிகிறது.
இப்படி ஒரு எதிர்ப்புக் குறியீடு காட்டுமளவிற்கு இன்றைய நிலை இருப்பதைக் குறித்தே என் விமர்சனம்..
அந்த வேகத்தில்..
அழகிய முறையில் வேதாகம நிகழ்வுகளை நீங்கள் வடித்த அழகினை விவரிக்கத் தவறிவிட்டேன்..
அதுவும் ஆப்பிள், ஆதாமின் ஆப்பிள்.... மிக அருமை!

Nanban
08-10-2005, 12:58 AM
இந்த வேகம் தான் என்னை பிரமிக்க வைக்கிறது.

இனிதான் கற்று கொள்ள வேண்டும் இந்த வேகத்தை...

இளசு
08-10-2005, 01:00 AM
இன்று பௌர்ணமியா என்ன?
எத்தனை காலமாச்சு இப்படி நாமிருவரும் சொல்லாடி?

Nanban
08-10-2005, 01:03 AM
இன்று பௌர்ணமி அல்ல.

ஆனால் உபவாச காலம்

ஆம். ரமதான் மாத நோன்பிற்காக தினமும் அதிகாலையில் உணவருந்த வேண்டிய வேளை. பின் உறக்கம் பிடிக்காது உட்கார்ந்திருக்கும் போது அப்படியே உலா போக வேண்டியது தானே!!! (நடப்பதெல்லாம் மறந்து, இப்பொழுது உலா என்றாலே கணிணியில் சுற்றுவது என்றாகிவிட்டது...)

இளசு
08-10-2005, 01:08 AM
ஏன் இன்னும் உறங்கவில்லை என்று கேட்க நினைத்தேன்..
இது என்ன கேள்வி என்று எனக்குள்ளே கேள்வி..
கேட்காமலேயே பதில் ...
இந்த அதிர்வலைகளைத் தேடித்தானே இணைய உலா?