PDA

View Full Version : ஓய்வு



Nanban
22-08-2005, 07:14 PM
ஓய்வு.....




' போகலாம்'
காலமிட்ட கட்டளை
வந்து சேர்ந்த அன்று
இந்த வெளிவிட்டு
வெளியேறுகிறது அந்தப் பறவை.
உச்சம் தொடும் பறத்தலின் ஒலியில்
கீழே கிடக்கும் மௌனம் சிதைந்தாலும்
இந்த பறவையின் நுரைப்பூவாய உற்சாகத்தில்
விரியும் இறக்கைகளை சலனப்படுத்தவில்லை.

விரிந்த இந்த இறகுகள் மடிந்து
மார்போடு இறுகுகையில்
அந்தப் பறவையின்
கனத்த இதயத்தின் ஈரக்கசிவு
உலராது பரவுகிறது எங்கும்.


உடலும் மனமும் எடுபிடி செயலில் புதைய
இன்று பறத்தல் மறந்து நடக்கிறது.
சில நேரங்களில் அரிதாக அமைந்துவிடும்
நள்ளிரவின் தனிமையில்
ஒருசில சங்கீத சங்கதிகளையோ
ஒருசில மந்திர வசனங்களையோ
முணுமுணுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்
பிரபஞ்ச மௌனங்களின் எல்லையற்ற வெளியில்
காலகாலத்துக்கும் அலைந்து கொண்டிருக்கும் -
ஏதாவது ஒரு புதிய பறவை ஒன்றை
சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடன்.

எவராலும் உருவாக்கிட முடிவதில்லை
வெற்றிடங்களை.
வெளிகள் எப்பொழுதும் நிரம்பிக் கொண்டேயிருக்கின்றன
புதிய பறவைகளால்
புதிய சிறகுகளால்
புதிய உயிர்ப்புகளால்
அவைகளும் என்றாவது ஒருநாள்
ஒரு பழைய பறவையைச் சந்தித்து
ஒரு அடி தாழப் பறந்து
வணக்கம் சொல்லி புன்னகைத்துப் போகலாம்.

அவைகள் என்றென்றும்
தங்களைத் தயார்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
நன்றியுடன் போய்வா சொல்லி அனுப்புகின்றன.
ஓரிடம் காலியானாலன்றி
ஒரு புதிய சிறகு விரிய இடமில்லை என்பதை
காலம் தெரிந்தே வைத்திருக்கிறது.

gragavan
23-08-2005, 04:46 AM
இன்னொரு முறை படிக்கிறேன். படித்துவிட்டு கருத்திடுகிறேன்.

kavitha
23-08-2005, 06:24 AM
உயிர்ப்பறவையைப்பற்றிச் சொல்கிறீர்களா நண்பன்?

பிரியன்
23-08-2005, 06:42 AM
இல்லை கவிதா. தலைப்பிலே உங்கள் கேள்விக்கான பதிலிருக்கிறதே

gragavan
23-08-2005, 06:50 AM
ம்ம்ம்ம்....நான் முதலில் உயிர்ப்பறவை என்று நினைத்தேன். பின்னர் இரண்டாம் முறை படித்துப் பார்க்கையில் இது அலுவலக ஓய்வென்று தெரிந்தது. நல்ல வரிகள் நண்பன்.

நான் மிகவும் ரசித்தது இந்தக் கடைசி மூன்று வரிகளைத்தான். அதுதான் நிதர்சனம். உண்மை.

ஓரிடம் காலியானாலன்றி
ஒரு புதிய சிறகு விரிய இடமில்லை என்பதை
காலம் தெரிந்தே வைத்திருக்கிறது.

பிரியன்
23-08-2005, 06:53 AM
ம்ம்ம்ம்....நான் முதலில் உயிர்ப்பறவை என்று நினைத்தேன். பின்னர் இரண்டாம் முறை படித்துப் பார்க்கையில் இது அலுவலக ஓய்வென்று தெரிந்தது. நல்ல வரிகள் நண்பன்.

நான் மிகவும் ரசித்தது இந்தக் கடைசி மூன்று வரிகளைத்தான். அதுதான் நிதர்சனம். உண்மை.

ஓரிடம் காலியானாலன்றி
ஒரு புதிய சிறகு விரிய இடமில்லை என்பதை
காலம் தெரிந்தே வைத்திருக்கிறது.

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ராகவன். அது அலுவலக ஓய்வைப் பற்றிய கவிதைதான்...

கடைசி மூன்றூ வரிகள் நிதர்சனமான உண்மை. இந்த பக்குவம் அனைவருக்குமே ஒரு கட்டத்தில் வந்துவிடுகிறது. அரசியல்வாதிகளைத் தவிர

pradeepkt
23-08-2005, 07:05 AM
அருமை... நான் மிக ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
மிகப் பரபரப்பாக தினமும் பணிபுரிந்த அலுவலகத்திலிருந்து திடீரென்று ஒரு நாள் "போய்வா" என்று அனுப்பிய பிறகு பறத்தல் குறைந்த பறவைகளின் நுண்ணுணர்வுகளைச் சரியாகப் படம் பிடித்திருக்கிறது இக்கவிதை.
குறிப்பாக
எவராலும் உருவாக்கிட முடிவதில்லை
வெற்றிடங்களை.
உண்மையில் இதுதான் உணர வேண்டிய உணர்த்தப் படவேண்டிய உண்மை. சில நேரங்களில் தாமில்லாத அலுவலகம் எப்படி இருக்கும் என்று ஏங்குபவர்கள் அறிய வேண்டியது.
புதிய பறவைகள் பழைய பறவைகளுக்கு ஒரு அடி தாழப் பறந்து வணக்கம் சொல்வதையும் ரசித்தேன். அப்போது பழைய பறவைகளும் பறந்து கொண்டுதானே இருக்கின்றன. இந்த வெளியில் இல்லையென்றாலும் பறத்தல் பறவையின் பண்பன்றோ?

பிரியன்
23-08-2005, 04:48 PM
±¾¡÷ò¾Á¡É ¯ñ¨Á§Â À¢Ã¾£ô

Nanban
23-08-2005, 04:53 PM
நன்றி ராகவன், கவிதா, பிரியன், பிரதீப்....
கவிதை அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறும் மனிதனின் மனநிலையைத் தான் சொல்லுகிறது. கம்ப்பீரமாகப் பறந்து திரிந்த காலம் போய், இன்று சிலபல ஏவல்களை சிரமேற்று பணி செய்து காலம் கடத்துவதையும், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கும் பொழுது மனோதைரியத்திற்காக சில மந்திர வசனங்களை உச்சரிப்பதோ அல்லது உற்சாக மனநிலையில் இருந்தால் சில ராகங்களை பாடிக் கொண்டோ இருக்கும் சூழல் தான் மேற்சொன்னது.
எப்பொழுதாவது புதிய பறவைகளை சந்திக்க ஆவலுடன் இருக்கிறது என்பதும் தன்னுடைய பல வருட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தன்னைத் தேடி புதியவர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் தான். ஒரு நல்ல மனிதனுக்காக இன்று அதிகாரத்தில் இருந்தாலும் கொஞ்சம் பணிவு காட்டி புன்னகைத்துப் போகக் கூடிய மனித நேயம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.
பறவையின் இயல்பு பறத்தல் அன்றோ? ஆமாம். ஆனால் அந்தப் பறத்தல் ஆற்றல் மிக்கதாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மேலும் எந்த வெளிகளில் பறக்க வேண்டும் என்பதும் வேறுபடலாம்.
நன்றி நண்பர்களே

மன்மதன்
24-08-2005, 04:40 AM
சில பேருக்கு பணியிலிருந்து ஓய்வு பெறுவதே பிடிக்காது.. அப்படியே பழகி போன பிறகு, ஓய்வு எடுத்த பிறகும் அலுவலகத்தை கடந்து செல்கையில் மனதில் நினைவுகள் வருடும். அழகாக வடித்திருக்கிறீர்கள் நண்பன்..
அன்புடன்
மன்மதன்

பிரசன்னா
09-09-2005, 05:53 PM
எவராலும் உருவாக்கிட முடிவதில்லை
வெற்றிடங்களை.
உண்மையில் இதுதான் உணர வேண்டிய உணர்த்தப் படவேண்டிய உண்மை.

Nanban
17-09-2005, 06:58 PM
நன்றி மன்மதன், பிரசன்னா....