PDA

View Full Version : அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்



gragavan
11-08-2005, 09:46 AM
அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்

சென்ற மாதம் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். அந்தச் சுற்றுலாவிலே திருவரங்கனையும் கண்டு வர எண்ணங் கொண்டு திருவரங்கம் சென்றேன்.

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!
இளங்கோ வாக்கு. பார்க்காத கண்ணென்ன கண்? அப்படிப் பார்க்கையில் இமைக்கின்ற கண்ணென்ன கண். கவிநயந் ததும்ப இளங்கோ எழுத வேண்டுமென்றால் அந்தப் பரந்தாமனின் அழகை என்ன சொல்வது? எப்படிப் பார்க்காமல் செல்வது?

அலையாழி அரிதுயிலும் மாயனைக் காண, மாலை நிறத்தவனைக் காண மாலையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம். முன்பு சிறுவயதில் திருச்சியும் திருவரங்கமும் திருவானைக்காவலும் சமயபுரமும் சென்றிருக்கிறேன். அப்பொழுது திருவரங்கமும் ஆனைக்காவும் திருச்சிக்கு வெளியே இருக்கும் ஊர்கள்.

ஆனால் இன்றைக்கு திருச்சிக்குள்ளேயே இருக்கின்றன திருவானைக்காவும் திருவரங்கமும். திருவானைக்காவல் என்ற அழகிய தமிழ்ப் பெயர் மருவி பேருந்துகளில் திருவானைக் கோவில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். யாராவது திருத்தக் கூடாதா?
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவதற்காகவே ஓங்கி உயர்ந்த கோபுரம். பலவண்ணங்களை வீசிக் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. தமிழ் கட்டடக் கலை முறையில் அமைந்திருந்த கோபுரம் சிறப்பாக இருந்தது.

இன்னமும் இருள்கவியாத மாலையாயினும் மக்களின் நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுவர்களும் சிறுமியர்களும் வீதிகளில் விரைந்து கொண்டிருந்தனர். அங்காடிகளில் பொருட்களை விற்பவர்களும் வாங்குகின்றவர்களும் மிகுந்து நெரிசல் உண்டாகத் தொடங்கியிருந்தது.

இவர்களோடு அரங்கணைக் காண வந்த கண்ணிரண்டையும் சுமந்து வந்திருந்த கூட்டத்தினர். அவர்களோடு சேர்ந்து இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே கோயிலை அடைந்தோம்.

விரைந்து உட்சென்ற வேளையில் திருக்கதவம் சாத்தி வைத்திருந்தார்கள். இன்பத்தை பாக்கி வைக்காமல் தருவாய் என வேண்டி வந்த வேளையில் கதவைச் சாத்தி வைத்திருந்தது அங்கிருந்த அன்பர்களை முணுமுணுக்க வைத்தது. அடுத்த தரிசனம் இன்னும் அரைமணியில் என்றனர். காத்திருந்து உள்ளே சென்றோம். கூட்டம் சிறிது சிறிதாகப் பெருகி நிறைந்து கொண்டிருந்தது. பத்து ரூபாய் வரிசையில் போனால் விரைவாகப் பார்க்கலாம் எனக் கருதி அந்த வரிசையில் நின்றோம். அங்கு ஒரு இருபது நிமிட காத்திருத்தல்.

பிறகு உள்ளே விட்டார்கள். பெரிய மணி ஒலிக்க திருக்கோயிலினுள்ளே நடப்பது சுகானுபவம். பட்டால்தான் அதன் சுகம் புரியும். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆண்டவனைத் தரிசிக்கப் போகும் ஆவலும் மிகுந்தது. ஆக்கப் பொறுத்தும் ஆறப் பொறாதார் பலர் வரிசையில் நெருக்கினார்கள்.
உள்மண்டபத்தில் புதிதாக வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். கருங்கற்றூண்கள் புதிதாக போடப்பட்டிருந்தன. சுவற்றிலும் புதிதாக கற்களைப் பதித்திருந்தார்கள். பாரம்பரியம் மிக்க கோயிலுக்குள் இருக்கும் உணர்வு குறைந்து கொண்டே வந்தது. பழைய தூண்களோடு ஒட்டியிருந்த கிராணைட் ஸ்லாபுகள் ஆங்காங்கே கீழே விழுந்திருந்தன. பழசும் புதுசும் ஒட்டவில்லை போலும்.

இதோ பரந்தாமன் படுத்திருக்கின்றான். எங்கே ஒரு முறை முழுதாகப் பார்க்கலாம் என்று ஆவலுடன் பார்ப்பதற்குள், "நகருங்கள்! நகருங்கள்!" என்று சொல்லி விரைவு படுத்தினர். லேசுமாசாக பள்ளிகொண்டவனைக் கண்களில் கைது செய்து விட்டு வெளியே வந்தோம்.

எங்கும் நிறைந்தவனை எங்கும் காணலாம். அப்படியிருக்க சீரங்கத்தில் மட்டும்தான் போய்ப் பார்க்க வேண்டுமா? தேவையில்லைதான். ஆனால் அந்தக் குமிழ்ச் சிரிப்பும், பொய்த் தூக்கமும், அழகு திருவடிகளும் சிற்பியின் கைவண்ணமோ! மாயவன் மெய்வண்ணமோ! அதை எங்கே பார்க்க முடியும்? சமணராகிய இளங்கோவே "கண்ணெண்ண கண்ணே" என்று பாடியிருக்கிறார் என்றால், நான் எந்த மூலைக்கு.

ஆனால் ஆவல் முறையாகப் பூர்த்தியாகவில்லை. நின்று நிதானமாக தரிசிக்க முடியவில்லை. வெளிப்பிரகாரம் சுற்றி விட்டு ஐயங்கார் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாக வாங்கி உண்டோம். வயிறு நிரம்பியபின் ரெண்டே ரெண்டு வடைகளை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, திருச்சிக்கான பேருந்தைப் பிடித்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான்.

வண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன். நேரங் கிடைக்கையில் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நேரமும் வந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு (நான் அதெல்லாம் பார்ப்பதில்லை. சாப்பிட்டு விட்டு போனால் கோவித்துக் கொள்ள மாட்டார் என்று நம்பிக்கை.) வண்டியில் விரைந்தேன்.

கூட்டம் இருக்கவில்லை. உள்ளே அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் கண்ணிறையத் தெரிந்தான். படுக்கை பெரிய படுக்கையாதலால் கருவறையும் பெரிது. மூன்று கதவுகள். மூன்றின் வழியாகவும் பரந்தாமனைப் பார்க்க முடிந்தது.

அடிமுதல் முடிவரை, அழகை அங்குலம் அங்குலமாக கண்கள் அள்ளிப் பருகின. இமைக்க மறந்த கண்களால் அழகை அளக்க அளக்க ஆசையும் ஆவலும் தீரவேயில்லை.

வலக்கை ஒதுங்கி படுக்கைக்கு வெளியே நீட்டிக் கொண்டு, படுத்துக் கொண்டிருந்தாலும் பிடிப்பதற்கு இந்தக் கையை நீட்டிக் கொண்டிருப்பது சொல்லமலேயே விளங்கிற்று. இளங்கோ சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.

வங்கக் கடல் கொண்ட மாயவனைக் கேசவனை அரங்கத்தில் பார்ப்பேன் என்று தேடிச் சென்றேன். உலகமே அரங்கம். அது கடவுள் அருளுக்குக் கிறங்கும். அங்கு இருப்பவனே இங்கும் எங்கும் இருந்து நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து அருள் புரிவான் என்ற உண்மை விளங்கியது. கைகளைக் கூப்பித் தொழுதேன். கண்களை மூடிக் கொண்டேன். இதென்ன கூத்து.....கோயிலுக்கு வந்து கண்களை மூடிக்கொண்டா ஆண்டவனை வணங்குவது? கண்ணை மூடினாலும் திறந்தாலும் தெரிகின்ற ஆண்டவனை எப்படித் தொழுதால் என்ன!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! நின் சேவடி செவ்வித் திருக்காப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

karikaalan
11-08-2005, 01:44 PM
ராகவன்ஜி

ஸ்ரீரங்கத்தில் தங்களது அனுபவமே பலருக்கும். தற்போது சமயபுரத்திலும் நிலைமை இப்படியே!

யார் என்ன சொன்னாலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நிர்வாகிகளும் என்னதான் செய்வார்கள்?

"கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!" அருமையான வரி. நன்றிகள்.

===கரிகாலன்

pradeepkt
11-08-2005, 05:23 PM
திருவரங்கத்தில் எப்போதுமே இப்படித்தான் கரிகாலன் அண்ணா!
பள்ளி கொண்ட பெருமானைக் காண விடமாட்டார்கள்.
அதே சமயம், திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளரை என்ற ஊர் இருக்கிறது. பழமையான மொட்டைக் கோபுரம், ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஸ்வஸ்திக் கிணறு என்று எத்தனையோ உண்டு அங்கே...
ஆனால் பாருங்கள், அந்தக் கோயிலுக்குச் சென்றால் நீங்கள் மட்டும்தான் இருப்பீர்கள். அவ்வளவு தனிமை. அதிலும் அங்கு தாயாருக்குத்தான் முதல் மரியாதை. அங்கிருக்கும் பெருமாளுக்குப் புண்டரீகாக்ஷப் பெருமாள் என்று பெயர்.

திருச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் இருந்து ஒரு சிறு பிறை வழியாக நோக்கினால் திருவரங்கமும் உச்சிப் பிள்ளையார் கோயிலும் ஸ்பஷ்டமாகத் தெரியும்.

எனக்குப் பல நேரங்களில் மன அமைதி அளித்த கோயில்களில் இதுவும் ஒன்று. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.

gragavan
12-08-2005, 06:01 AM
ராகவன்ஜி
"கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!" அருமையான வரி. நன்றிகள்.

===கரிகாலன்பாருங்கள் கரிகாலன். என்ன அருமையான கவித்துவ வரிகளை இளங்கோ எழுதியிருக்கிறார். அவர் கவிஞர்......சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் அவர் சொல்லாட்சியே நடத்தியிருக்கிறார். கவிச்சுவைக்குக் கம்பனைச் சொல்வார்கள். நான் இளங்கோவைத்தான் முன் வைப்பேன்.

கானல்வரிப் பாட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்....
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்
மண்ணும் மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி.......

இன்னும் நிறைய நிறைய இருக்கின்றன.

gragavan
12-08-2005, 06:04 AM
திருவரங்கத்தில் எப்போதுமே இப்படித்தான் கரிகாலன் அண்ணா!
பள்ளி கொண்ட பெருமானைக் காண விடமாட்டார்கள்.
அதே சமயம், திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளரை என்ற ஊர் இருக்கிறது. பழமையான மொட்டைக் கோபுரம், ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஸ்வஸ்திக் கிணறு என்று எத்தனையோ உண்டு அங்கே...
ஆனால் பாருங்கள், அந்தக் கோயிலுக்குச் சென்றால் நீங்கள் மட்டும்தான் இருப்பீர்கள். அவ்வளவு தனிமை. அதிலும் அங்கு தாயாருக்குத்தான் முதல் மரியாதை. அங்கிருக்கும் பெருமாளுக்குப் புண்டரீகாக்ஷப் பெருமாள் என்று பெயர்.

திருச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் இருந்து ஒரு சிறு பிறை வழியாக நோக்கினால் திருவரங்கமும் உச்சிப் பிள்ளையார் கோயிலும் ஸ்பஷ்டமாகத் தெரியும்.

எனக்குப் பல நேரங்களில் மன அமைதி அளித்த கோயில்களில் இதுவும் ஒன்று. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.உண்மைதான். கோயில் கூட்டம் குவியும் பொழுது என்ன செய்ய முடியும்.

ஆனால் தஞ்சைப் பெரிய கோயிலிலும் சுவாமிமலையிலும் தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலிலும் நல்ல தரிசனம். மூன்று கோயில்களிலும் அனுபவித்து மகிழ்ந்தோம் என்றால் மிகையாகாது.

திருவெள்ளரையா.....ஒரு முறை போய் வந்து விட வேண்டியதுதான்.

gragavan
12-08-2005, 06:15 AM
தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்ற மாதம் சென்றிருந்த பொழுது ஆவுடையாரை வணங்கிவிட்டு வெளியே வந்தேன். மாலை வேளை. அங்கே பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். இருள் கவியக் கவியப் பாட்டு மழையில் தென்றலோடு நனைந்து மகிழ்ந்தேன். ஆனால் வாய்ப்பாட்டு அல்ல. வீணைக் கச்சேரி. கடம், வயலின், மிருதங்கம், மோர்சிங் துணையோடு. அதிலும் அந்த மோர்சிங் கலைஞர் நல்ல ரசிகர். மிருதங்க வித்துவான் பாட்டின் மயக்கத்தில் பாடலில் பாவத்தை மறந்த பொழுதெல்லாம் முகம் சுழித்து வருந்தினார். எந்த்த நேர்ச்சின என்று தெலுங்கு கீர்த்தனையில் தொடங்கினாலும்....நன்றாகவே ரசிக்க முடிந்தது.

பிறகு அப்படியே தமிழ்ப் பாடல்களும் வந்தன. சின்னஞ் சிறு கிளியேயும் வாசித்தார்கள். பாடலைப் பாடாததால் இசையை வைத்தே என்ன பாடல் என்று கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. சின்னஞ்சிறு கிளியே இசையில் சொக்கி மிருதங்க வித்துவானும் வீணை வித்துவானும் சுறுசுறுப்பாக வாசிக்கத் தொடங்கியதும் மோர்சிங்கரின் முகம் சுழித்தது. அது மிகச் சரி. ஒரு தாலட்டுப் படலை இனிமையாக வாசிக்கிறேன் என்று சுறுசுறுப்பாக வாசித்தால்? தூங்க வேண்டிய குழந்தை எழுந்து ஆட்டம் போடுமல்லவா! இருந்தாலும் உட்கார்ந்து ரசித்து மகிழ்ந்தோம். அருமையோ அருமை.

kavitha
09-09-2005, 07:03 AM
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!
உண்மைதான் அண்ணா.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அங்கே இருந்தும் எங்களது திருமணத்திற்குப் பிறகு தான் திருவரங்கத்தானை தரிசிக்க முடிந்தது. பாற்கடலில் பள்ளிக்கொண்ட அப்பெருமான், எத்தனையோ நிலைகளில் தரிசனம் தந்தாலும் தூங்குவது போன்ற பாவனையில் ஆதிசேசனின் மேல் வீற்றிருக்கும் பிரம்மாண்டம் தான் என்னை அதிகம் ஈர்த்தது. ஆதலினால் சிறுவயதிலிருந்தே கிலியுடன் கூடிய
ஒரு ஆவல் இருந்துவந்தே இருந்தது. நான் 5ம் வகுப்பு படிக்கும்போது பெரம்பலூரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு எனது தோழி பத்மாவதி
அழைத்துச் சென்றாள். அவளது தந்தை தான் அந்தக் கோவிலுக்கு மேற்பார்வையாளராக இருந்தார். கோவிலும் வீடும் அருகருகே என்பதால் பள்ளி மதிய உணவு இடைவேளையில் அந்தக் கல்தூண்களில் ஒளிந்து விளையாடுவது எங்களுக்கு வழக்கமாயிருந்துவந்தது. அவ்வாறு விளையாடும்போது ஒருநாள்
நான் அவளைப்பிடிப்பதற்காகத் தேடிச்சென்றேன்.விசேச தினங்களில் மட்டும் தான் கோவிலில் ஆள் நடமாட்டம் இருக்கும். அன்று வேறு யாருமே
அந்த மதிய வேளையில் அங்கே இல்லை. அவளைத்தேடிக்கொண்டு ஒவ்வொரு அறையாக சென்றபோது ஒரு தேரின் மீது ஓர் ஆள் அடி உயரமுள்ள ஐந்து தலை நாக விக்ரகம் வைக்கப்பட்டிருந்தது. அறையும் இருள்கவ்வி இருக்கவே, அதைக்கண்டு அலறி மிரண்டவள் அதன்பிறகு அந்தப்பக்கமே செல்லவில்லை. எனது பயத்தினை தெளியவைப்பதற்காக அவளே சிலவாரங்கள் கழித்து "அது வெறும் விக்ரகம் தான், நாம் தொட்டுக்கூட பார்க்கலாம். ஒன்றும் செய்யாது " என்று மீண்டும் அழைத்துச்சென்றாள்.
பெருமாள் அவதாரங்களின் கதைகளையும் பற்றி அவள் சொல்ல சொல்ல பயம் மெல்ல மெல்லத் தெளிந்தது. சில நாட்கள் கனவுகளில் கூட அதேபோல் கண்டு
தரிசித்திருக்கிறேன். அது எனது நினைவுப்பதிவுகளாக இருந்திருக்கலாம்.
நாங்கள் திருவரங்கத்தானை தரிசிக்கச் சென்றபோதும் இதேபோல் தான் அவசர அவசரமாய் தள்ளிச்சென்றார்கள். அடுத்த விடுமுறையிலாவது
நிதானமாய்ச் சென்று பார்த்துவரவேண்டும்.


சென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான். வண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன்.
அப்படியா? இதேபோல் மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும் பார்க்கவேண்டும் என்றிருக்கிறேன். எப்போது 'அவர்' அருள்புரிவாரோ!!

gragavan
09-09-2005, 08:20 AM
போய்ப் பாருங்கள் கவிதா. கயிலை அனைய மயிலை என்பார்கள். அங்கே கற்பகாம்பாளைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அந்தக் கோயிலில்தான் அனிதா ரத்னத்தின் நடனத்தைப் பார்க்க நேர்ந்தது. என்ன பாவம். என்ன நெளிவு சுளிவுகள். அதிலும் புதுமைகளைப் புகுத்தி "அந்தரி" என்ற தலைப்பில் நாட்டியம். அருமையோ அருமை.

kavitha
09-09-2005, 10:02 AM
அந்தக் கோயிலில்தான் அனிதா ரத்னத்தின் நடனத்தைப் பார்க்க நேர்ந்தது. என்ன பாவம். என்ன நெளிவு சுளிவுகள். அதிலும் புதுமைகளைப் புகுத்தி "அந்தரி" என்ற தலைப்பில் நாட்டியம். அருமையோ அருமை. தாங்கள் கொடுத்துவைத்தவர் தான். கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் உப தரிசனங்களும் காணக்கிடைக்கின்றன. :)