PDA

View Full Version : ஜூலை 20, புதன் கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
20-07-2005, 01:08 AM
NKVE நெடுஞ்சாலை தொடர்பாக அமைச்சரிடம் விளக்கமளிக்கப்பட்டது
தமது 10 நாள் விடுமுறையை உடனே ரத்து செய்த பொதுப்பணித் துறை அமைச்சர் Datuk Seri S.Samy Vellu, கடந்த ஜூலை 10-ஆம் தேதியன்று NKVE நெடுஞ்சாலை இடிந்த சம்பவம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தனது லண்டன் பயணத்தை ரத்து செய்த அமைச்சர் KLIA விமான நிலையத்தில் மலேசிய நெடுஞ்சாலை நிர்வாக துணை மேலாளர் Datuk Ghazali Md Nor-உடன் அச்சம்பவம் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாத்தித்துள்ளார்.
இருப்பினும், பொதுப்பணித் துறையின் அறிக்கையை தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.அதன் பிறகு,அந்நெடுஞ்சாலை தொடர்பான பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் எனவும் அவ்விபத்தில் பாதிக்கப்பட்டோ ரின் குடும்பத்தினர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.
-----------------------------------------------------------
வாகனத்தை செலுத்தும் வேளையில் SMS அனுப்புபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும்போது SMS அனுப்புவது கடுமையான குற்றமாகும் எனவும் அக்குற்றத்தை புரிபவர்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் Datuk Seri Chan Kong Choy தெரிவித்தார்.
ஆதலால்,மோட்டார் சைக்கிளோட்டிகள் தங்களுடைய பாதுகாப்பிற்கும், சாலையை உபயோகப்படுத்தும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
PUTRAJAYA-வில் www.panducermat.org.my (http://www.panducermat.org.my/) எனும் இணைய தளத்தை அறிமுகப்படுத்திய பின் அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த இணைய தளம் சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான குற்றச்செயல்களின் எண்ணிக்கை,சாலை விபத்தை தடுப்பதற்கான வழிமுறைகள்,சாலை பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.


லஞ்ச ஒழிப்பு இலாகாவில் 1,204 ஊழியர்கள்
தற்போது,நாடளவில் BPR எனப்படும் லஞ்ச ஒழிப்பு இலாகாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 1,204 ஊழியர்கள் பணிபுரிவதாகவும் புலன் விசாரணைப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இலாகா அமைச்சர் Datuk Seri Mohamed Nazri Aziz தெரிவித்துள்ளார்.
இன்னும் 530 பணியாளர்கள் அவ்விலாகாவிற்கு தேவைப்படுவதாகவும் விரைவில்,அவ்விடங்கள் பூர்த்தியாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வப்போது,லஞ்ச ஒழிப்பு இலாகா ஊழியர்களுக்கு புலன்விசாரணை தொடர்பான பயிற்சிகள்,பரீட்சைகள் ஆகியவை கொடுக்கப்பட்டு வருவதாகவும் நேற்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு கார்கள் மீது மலேசியர்கள் நாட்டம்

மலேசியர்கள் கார் விரும்பிகள் மட்டுமல்ல;கார்கள் மீது அதிகளவு நாட்டம் அல்லது மோகம் கொண்டவர்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன.தற்போது,உள்நாட்டு கார் சந்தையில் 200 வகைகளுக்கும் மேலான கார்கள் உள்ளதாகவும் மலேசியர்கள் இறக்குமதி கார்களையே அதிகம் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2003-இல் 320,524 கார்கள் விற்பனையாகின;கடந்தாண்டு இவ்வெண்ணிக்கை 380,568-ஆக உயர்ந்துள்ளது.மலேசியர்களின் இறக்குமதி கார்கள் மோகத்திற்கு இதுவே ஆதாரமாக திகழ்கின்றது.
AP எனப்படும் வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகார உரிமம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதற்கு இதுவே காரணமாகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மீண்டும் நிலநடுக்கம்
நேற்று அதிகாலை 3.37 மணியளவில் இந்தோனிசியா Molucca கடற்பகுதிக்கு அருகில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கடற்பகுதி சபா மாநிலத்திற்கு அருகில் இருப்பதால் அங்கு நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என மலேசிய வானிலை ஆராய்ச்சி இலாகா வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் எந்தவொரு உயிருடர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடைமழையினால் வெள்ளம்

இரு நாட்கள் தொடர்ந்து பெய்த மழையினால் Kota Kinabalu, Telipok பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மாணவர்களின் பள்ளி படிப்பு உட்பட பொது மக்களின் அன்றாட பணிகளும் பாதிப்புக்குள்ளாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.
அங்குள்ள St Peter இடைநிலைப்பள்ளி வெள்ளம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இம்முறை ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப் பெருக்கு மிகவும் மோசமானதாக கருதப்படுவதாக அங்கு வசிப்பவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
எனினும் வெள்ளப் பெருக்கு தற்பொழுது குறைய தொடங்கி உள்ளதால் அங்கு துப்புரவு பணியில்
பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
-------------------------------------------------------------
இந்தியாவில் கோயில்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
அனைத்து பெரிய கோயில்களின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மையில் அயோத்தியில் ராமர் கோயிலைத் தகர்க்க தீவிரவாதிகளால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங்களில் நடக்காமல் இருக்க முக்கியமான பெரிய கோயில்களில் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதால் அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய அரசு இதர மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துத்துள்ளது.
--------------------------------------------------------------
ஸ்பெயின் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் பலி
ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி 11 தீயணைப்பு வீரர்கள் உடல் கருகி மாண்டனர். ஸ்பெயின் நாட்டின் மத்தியப் பகுதி காடுகளில் தீ ஏற்பட்டுள்ளது.
தலைநகர் மாட்ரீட்டின் கிழக்கில் உள்ள குவடலஜரா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு தீயில் அழிந்து விட்டது. இதுவரையில் இத்தீயில் 14 பேர் கருகி பலியாகிவிட்டனர்.
அதில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 11 தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். அவர்கள் பயன்படுத்திய இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயில் சாம்பலாகி விட்டன.
தீ பரவிய காட்டுக்கு அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.எனினும் தீ தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.



16 துறைகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம்
3 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் தங்கியிருக்கும் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜார்ஜ் புஷ்சை சந்தித்து பேசினார்.
அவ்வேளையில் எரிசக்தி, தொழில்நுட்பம், தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அணுசக்தி துறை, பொருளாதார ஒத்துழைப்பு உட்பட 16 துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் கூட்டு பிரகடனம் வெளியிட்டனர்.



தீவிரவாத தடுப்பின் கீழ் லண்டனில் 6 பேர் கைது

தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு பேரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர். லண்டன் குண்டுவெடிப்புக்கும் அவர்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் அவர்களிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, லண்டனில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவர், லண்டன் லீட்ஸ் மேற்கு யார்க்ஷயரில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாத தடுப்புச் சட்டம் 2000த்தின் கீழ் அவர்களை மேற்கு யார்க்ஷயர் போலீசார் கைது செய்துள்ளனர்.
------------------------------------------------------------
ஜிம்பாப்வே நாட்டுக்கு நியூசிலாந்தின் கிரிக்கெட் அணியின் பயணம் ரத்து
ஜிம்பாப்வே நாட்டுக்கு கிரிக்கெட் பயணம் செல்வதை ரத்து செய்யும் வகையில் தனிச்சட்டம் இயற்ற மறுத்து விட்டது நியூசிலாந்து அரசு.ராபர்ட் முகாபே தலைமையிலான ஜிம்பாப்வே அரசு, அங்கு வசிக்கும் வெள்ளை இன மக்களைத் துன்புறுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன; ஜிம்பாப்வே அரசுடன் சகலவித தொடர்புகளையும் துண்டிக்க வற்புறுத்துகின்றன.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வே பயணம் செல்கிறது. இந்தத் தொடரை ரத்து செய்யவேண்டும் என நியூசிலாந்து அரசு விரும்புகிறது.ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,)மறுக்கிறது.
நியூசிலாந்து அணி திட்டமிட்டபடி ஜிம்பாப்வே பயணம் மேற்கொள்ளவேண்டும். தொடரைப் புறக்கணிக்கும் பட்சத்தில் பல கோடி நஷ்டஈடு கொடுக்கவேண்டும் என எச்சரித்துள்ளது.
அதேசமயம், ஜிம்பாப்வே உடன் விளையாட்டு உட்பட அனைத்து விதத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக நியூசிலாந்து அரசு சட்டம் இயற்றும் பட்சத்தில், இந்தத் தொடரை ரத்து செய்யலாம் என ஐ.சி.சி., தெரிவித்தது.


நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி