PDA

View Full Version : விளையாட்டு



பாரதி
19-07-2005, 11:00 PM
தேதியில்லா குறிப்புகள்
விளையாட்டு

இது வரைக்கும் என்ன என்ன வெளையாட்டு வெளையாடுனோம்னு நெனச்சுப் பாக்கத் தோணுது. நெனவுல வர்றத மாத்திரம் சொல்றேன். ஏதாச்சும் விட்டுப்போச்சுன்னா, பின்னாடி நெனைவு வந்தா சேத்துக்கிறேன். சரியா..?

சேலைல கட்டி வச்சிருப்பாங்களே - தூளி - கொழந்த தூங்குறதுல போயி வெளாடுறியேன்னு திட்டுனாலும் அதப்பத்தி எல்லாம் கவலைப்படாம - அதுல ஊஞ்சல் ஆடுறது ரொம்பப் பிடிக்கும். வீட்டுத்திண்ணைல சறுக்கு விளையாடுறது பிடிக்கும். அப்புறம் கதவுல - அந்தக்காலக் கதவுல - கைப்பிடிக்காகவும், அழகுக்காகவும் பித்தளையிலோ அல்லது மரத்திலோ அலங்காரமா குமிழு செஞ்சு வச்சிருப்பாங்க - அதப்பிடிச்சுகிட்டு ஒத்த கால்ல நின்னுகிட்டு 'சொய்ங்.. சொய்ங்..'ன்னு இங்கிட்டும் அங்கிட்டும் போய்ட்டு வர வெளாட்டு நல்லா இருக்கும். சமயத்துல கதவுல வர்ற "கிரீச்" சத்தமும் கேட்க சுகமா இருக்கும்ல.

கெணத்துல இருந்து தண்ணி எறைக்க வச்சிருக்குற கமலை ஒண்ணு வீட்டுல கிடக்கும். அத பஸ்ஸல டிரைவர் ஸ்டியரிங்க பிடிச்சி ஓட்ற மாதிரி நெனச்சுகிட்டு அடிக்கடி வெளையாடுவேன். தேஞ்ச சைக்கிளு டயரு இல்லாட்டி ரிம்ல சாட்டைக்கம்பு மாதிரி ஒரு குச்சிய வச்சுகிட்டு தெருவ பூராவும் ரவுண்டு அடிப்போம்ல.

சனி, ஞாயித்துக்கெழமைன்னாலும் சரி, லீவு நாள்னாலும் சரி எப்படா வரும்ணு காத்துகிட்டு இருந்து, சாப்பாடப் பத்தி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாம நாள் முழுக்க வெளையாடிகிட்டே இருந்த அந்தக் காலமே வேற.

வீட்ல அக்காவுங்க கூட புளியங்கொட்ட அதான் புளியமுத்துன்னு சொல்வோம்ல.. அத வச்சு பல்லாங்குழி ஆடுறது, சோழி வச்சுகிட்டு தாயம் ஆடுறது, பரமபதம் வெள்ளாடுறது எல்லாம் உண்டு. சோழில ஒண்ணை மாத்ரம் உள்ளங்கைல பிடிச்சி வச்சிகிட்டு, கைய ஒரு மாதிரி வீசி விட்டா நெனக்கிற மாதிரி தாயம் போடுறதுல நான் கில்லாடில்ல.
தட்டாங்கல்லு வெளையாட்டு - இது என்னன்னா ஆத்து மணல்ல கெடைக்கிற வழுவழுன்னு இருக்குற கூழாங்கல்ல வச்சு வெளையாடுறது. முதல்ல ஒரு கல்ல எடுத்து மேல போட்டுட்டு அது கீழ வர்றதுக்கு முன்னாடி அடுத்த கல்ல எடுக்கணும். அடுத்த தடவ ரெண்டு கல்லயும் மேல போட்டு மூணாவது கல்ல பிடிக்கணும்.. இதோட சட்ட திட்டம் சரியா நெனவில்ல. பொண்ணுங்க எல்லாம் இத நல்லா வெளையாடுவாங்க.

ஒடஞ்ச மண்சட்டில இருந்து 'ஓடு' எடுத்து வட்டமா தேச்சு "நொண்டி" விளையாடுறது. "ரைட்டா.. ரைட்டா.." ந்னு கேட்டுகிட்டே கட்டத்த தாண்டுறது. அப்புறம் வீதியில ஆளுக நடக்க எடமில்லாம, எல்லக்கோடு எல்லாம் கிழிச்சு நொண்டிகிட்டே தொட்டுப் பிடிச்சி ஆடுறது எல்லாம் ரொம்ப கோலாகலமா நடக்கும்.

அப்புறம் ரெண்டு கையாலயும் மணல நீளமா குமிச்சு வைச்சு, சங்கை ஒளிச்சு வச்சு விளையாடுற " சியாங் சியாங் பூனக்குட்டி...... எங்க இருக்கு கண்டுபுடி"ன்னு சொல்லிகிட்டே வெளாடுற வெளையாட்டு. ரெண்டு கையயும் மணலுக்குள்ளே வச்சுகிட்டு எதிராளி கவனிக்காம இருக்குறப்ப சங்கை ஒரு இடத்துல ஒளிச்சு வச்சுட்டு வேற இடத்துல வச்ச மாதிரி பாவ்லா காமிக்கிறது. அப்புறம் எதிராளி ரெண்டு கையையும் உத்தேசமா நாம ஒளிச்சு வச்சிருக்கிற சங்கு மேல ரெண்டு கையையும் சங்கிலி மாதிரி பின்னிகிட்டு மணல அமுக்கி பிடிச்சிகிருவான். நாம வச்ச சங்க திருப்பி எடுக்கணும் அதான் வெளையாட்டு.

வெளக்குமாத்துக் குச்சி வெளயாட்டு - ஒரே அளவா நாலு அஞ்சு இஞ்சு இருக்குற மாதிரி வெளக்குமாத்துக் குச்சிகளை எல்லாம் அம்பது நூறுன்னு மொத்தமா போட்டு, ஒரு குச்சியால ஒவ்வொரு குச்சிய மட்டும் தூக்கி, தனியா பிரிக்குற விளயாட்டு. ஒரு குச்சிய எடுக்கும் போது வேற குச்சி அசஞ்சதோ அவ்ளோதான். அடுத்தாளு கைக்கு ஆட்டம் போயிரும். வீட்ல ஒரு வெளக்குமாத்தையாவது விட்டுவைக்கிறாய்ங்களா சனியனுங்கன்னு எல்லா அம்மாக்களும் திட்டத்தான் செய்வாங்க. அதுக்காக வெளையாட்ட விட்ற முடியுமா..?

புளியங்கொட்ட நெறய கிடைக்கிற சீசன்ல " சப்பாத்து"ன்னு ஒரு வெளையாட்டு. விளையாடுறவங்க எல்லார் கையிலும் சின்னப்பலகை மாதிரி இருக்குற கருங்கல்லு இருக்கும். வெளையாடுறவங்க எல்லாரும் ஆளுக்கு அஞ்சு முத்தோ பத்து முத்தோ வச்சு ஒரு எடத்துல ஒண்ணா குமிச்சி ஒரு வட்டத்துக்குள்ள வச்சிருவோம். நல்ல தூரத்துல நின்னுகிட்டு அவங்க அவங்க கல்லை லாவகமா எறியணும். யாரு கல்லு வட்டத்துக்கு பக்கத்துல வருதோ அவங்கதான் மொதல்ல முத்தைப்பார்த்து கல்லை வீசி எறிவாங்க.. கல்லு பட்டு வெளியில சிதறுற முத்து எல்லாம் அவனுக்குத்தான். தவறி அவன் கல்லு வட்டத்துக்குள்ளேயே விழுந்துச்சுன்னா அவனுக்கு பைன். கூட முத்தை வச்சு மறுபடி ஆட்டம் ஆரம்பிக்கும்.

தீப்பெட்டிய எல்லாம் ஒண்ணுக்கு பின்னாடி ஒண்ணா அடுக்கி ரெயில் வண்டி செஞ்சு வெளையாடுவோம். ரெயிலு பெட்டி எல்லாம் தீப்பெட்டிகதான். கலர் குடிப்போம்ல அந்த பாட்டிலோட மூடிதான் ரெயிலு சக்கரம். வெளக்குமாத்து குச்சிதான் ரெண்டு சக்கரத்த ஒண்ணா சேக்குறது. பெட்டியோட சக்கரங்கள சேக்குறதுக்கு என்ன செய்வோம்னா ... கருவேல மர முள்ளு இருக்கு பாருங்க.. அது எல்லாம் இங்கிலீசு "வி" எழுத்து மாதிரி இருக்கும். அத ஒடைக்காம பத்திரமா எடுத்து ரெண்டு பக்க சக்கரத்துக்கும் சப்போர்ட்டா தீப்பெட்டியில குத்தி வச்சிருவோம். அப்புறம் கலர், அலங்காரம் எல்லாம் ஜெகஜோதியா பண்றதுண்டு. யாரோட ரெயிலு பெரிசுன்னு காமிக்கிறதல அம்புட்டு பேருக்கும் போட்டிதான்.

கோலிக்குண்டு பத்தி சொல்லாம இருக்க முடியுமா என்ன..? வீட்டுக்குள்ள இருந்து தெரு, மைதானம், சந்துன்னு எங்க பார்த்தாலும் வெளையாண்ட வெளையாட்டாச்சே..! எத்தனை வகை வெளையாட்டு...!! கலர்கலரா கோலிக்குண்டு.. குட்டியூண்டுல இருந்து "மண்ட" சைஸ் கோலிக்குண்டு வரைக்கும். அது மாத்ரமா...? வெளையாடும் போது கண்ணாடி கோலிகளை ஒடைக்கணும்கிறதுக்காகவே வச்சிருக்குற பால்ரஸ் - அதாங்க இரும்பு கோலிக்குண்டு. அப்புறம் சோடா பாட்ல இருந்து கெடைக்கிற ஊதா இல்லாட்டி நீல நிற கோலிக்குண்டு.. ஹம்.. எவ்வளவோ குண்டு சேத்து வச்சிருந்தேன்.

கோலிக்குண்டுல 'பேந்தாஸ்' வெளையாட்டு, சுவத்தோரமா இல்லாட்டி மரத்தடியில சதுரமா வரஞ்சு ரெண்டு கோலிகுண்டுகளை மட்டும் போட்டு எதிராளி சொல்ற கோலிய மாத்ரம் அலேக்கா அடிக்கிற வெளையாட்டு, பெரு விரல தரையில வச்சுகிட்டு நடு விரல வளச்சு கோலிக்குண்டால வரிசையா அடுக்கி வச்சிருக்குற கோலிக்குண்டுகள எல்லாத்தையும் சிதறடிக்கிற வெளையாட்டு... இப்படி...ஹம். அம்புட்டுப் பேரு டவுசருப் பையும் ஓட்டையாகுறதுக்கு முக்கியமான காரணம் "சலங், சலங்"ன்னு சத்தம் வர்ற மாதிரி குண்டை நெரப்பிகிட்டு திரிஞ்சதுதானே....!

ரோட்ல பட்டாளத்தம்மன் கோயில்லயும், சாவடியிலயும் பெரிசுங்க வெளையாடுற ஆடு-புலி- ஆட்டம் கொஞ்ச நாள் வெளையாண்டிருக்கேனே.! ஒரு சின்ன டிரிக் தெரிஞ்சா போதும், சும்மா அப்படியே வெளையாட்டு காட்டிரலாம்.

'திருடன் - போலீஸ்' வெளையாட்டு வெளையாட ஆச இருந்தாலும், சாயந்திரம் ஆச்சுன்னா என்னய வீட்ட விட்டு வெளிய அனுப்ப மாட்டங்க. அதனால பசங்க போடுற " தப்பைஸ்" சத்தத்த கேட்டு சந்தோசப்பட்டதோட சரி. ஹம். கொடுத்து வச்ச பக்கத்து வீட்டுப்பசங்க..!

அப்புறம் ஒரு மோசமான வெளையாட்டு. மூங்கில் தப்பைய ஒடிச்சி, தப்பையோட ரெண்டு பக்கத்தையும் கயித்தால கட்டி வில்லு கணக்கா செஞ்சு வச்சிக்கிருவோம். சோளத்தட்டை இருக்குல்ல அத அழகா வெட்டி, ஒரு பக்க நுனியில, கருவேல முள்ள சொருகிகிட்டா அதுதான் அம்பு. மைதானத்துல திரியிற வாயில்லா ஜந்துகள்கிட்ட எங்க வீரதீரப்பிரதாபம் எல்லாத்தையும் காட்டுவோம். அதோட சொந்தக்காரங்க வந்தா ஒரே ஓட்டம்தான். ஆனா இப்ப ஏன் அப்படியெல்லாம் செஞ்சோம்னு நெனச்சு ரொம்ப வேதனையா இருக்கு.

மரத்துல ஏறி பசங்க வெளையாடுற " காக்கா - குஞ்சு" ஆட்டம். இது எப்படின்னா பூமில ஒரு வட்டம் கிழிச்சு, ஒரு குச்சிய அதுக்கு நடுவுல வச்சிருவாங்க. யாரு சாட்-பூட்-த்ரீல தோத்துப் போறாங்களோ அவங்கதான் மொதல்ல மத்தவங்கள தொட வரணும். இந்த வெளையாட்டு வெளையாடுறதுக்குண்ணே ரெண்டு மூணு எடத்துல ஆல மரம் வசதியா இருக்கும். நெறய கெளைகளும், விழுதுகளும் இருக்கும் - ஏற இறங்க எல்லாம் வசதியா... பசங்க சும்மா கொரங்கு மாதிரி கெளைக்கு கெளை தாவிகிட்டே இருப்பாய்ங்க. பயங்கிறதே கொஞ்சம் கூட தெரியாத வயசுல்ல. தொட வர்றவன்கிட்ட மாட்டிக்காம கீழே போயி அந்தக்குச்சிய எடுத்துட்டா .. தொட வர்றவன் தோத்துப்போயி திருப்பி வெளையாட்ட ஆரம்பிக்கணும்.

ஆத்துல குளிக்கிறப்ப தண்ணிக்குள்ள ஒளிஞ்சு வெளையாடுற தொட்டுக் கண்டுபிடி ஆட்டம். அதுல யாரு முதல்ல தொட்டு வர்றதுன்னு சொல்றதுக்கு ஒரு வழி இருக்கு. எல்லாரும் "சாட் - பூட் - த்ரீ" சொல்லி ரெண்டு கைகளையும் ஒண்ணா சேர்க்கும் போது யாரு கைய மாத்தி வச்சிருக்காங்களோ அவங்கதான் மொதல்ல தேடுற ஆளா இருக்கணும்னு சொல்றது. இல்லாட்டி நடுவிரலையும் பெரு விரலையும் மடக்கி, தண்ணிக்கு மேலெ வச்சு, தண்ணில படுற மாதிரி சுண்டும் போது"டொபுக்"ன்னு ஒரு சத்தம் வரணும். வந்தா சரி. வரலைன்னா அவந்தான் தேடிக்கண்டுபிடிக்கிற ஆளா இருக்கணும். வெளையாடும் போது தண்ணிக்கு அடில தொட்டா பிரயோசனமில்ல.. தொடலைன்னு ஏமாத்திருவாய்ங்க. அதனால குடுமிய பிடிச்சு தண்ணிக்கு வெளியில காமிச்சாத்தான் தேடுறதுல இருந்து அவனுக்கு விடுதல. யாரு மாட்டிக்கிட்டானோ அவன் தேடுற ஆளா மாறிருவான். வாய்க்கால்ல வெளையாடும் போது பாத்தீங்கன்னா " சேம்ப எலை"க்கும், படர்தாமரைக்கும் நடுவுல ஒளிஞ்சிகிட்டு சும்மா அப்படி ஒரு வெளையாட்டு காட்டுவாய்ங்க பாருங்க... நேரம் போறதே தெரியாது.

அநேகமா களத்து மேடு இல்லாட்டி மைதானத்துல வெளையாடுவோம் - நல்ல வேப்ப மரத்தோட அளவான கெளைய ஒடச்சி, அளவெடுத்து துண்டாக்கி, பட்டைய எல்லாம் சீவி விளையாடுற 'கிட்டி'ங்கிற கிட்டிப்புள் விளையாட்டுப் பத்தி எல்லாருக்கும் தெரியும்தான. ரெண்டு பக்கமும் கூரா இருக்குற சின்ன கம்பை, பெரிய கம்பால ஒரு ஓரமா தட்டி, சின்னக்கம்பு மேல வர்ற சமயம், வசதிக்கு தக்கன, கீழ விழுந்துராம ரெண்டு மூணு தடவை லேசா தட்டி அப்புறம் ஓங்கி தூரமா போய் விழுற மாதிரி அடிக்கிறது. அடிச்ச இடத்துல இருந்து சின்னக்கம்பு போய் விழுந்த தூரம் வரைக்கும் பெரிய கம்பை அடிக்குச்சி மாதிரி வச்சிகிட்டு அளக்குறது.. ஓங்கி அடிக்கிறதுக்கு முன்னாடி சின்னக் கம்பை எத்தனை தடவ தட்டினோமோ அத்தன தடவ அந்த தூரத்த பெருக்கிக்கிறது. மொத்தம் மூணு தடவைல ரொம்ப தூரத்த யாரு காண்பிக்கிறாய்ங்களோ அவங்களே ஜெயிச்சவய்ங்க. ஒரு சமயம் ஒருத்தன் கிட்டி அடிச்சதுல, அது நேரா என் கண்ணுல பட்டு மூணு நாளைக்கு ஒரு கண்ணு பந்து மாதிரி வீங்கிகிச்சே..!!

பம்பரம் - கடையில கெடக்கிற பம்பரத்தை விட நாமளே செய்ற பம்பரம்தான் ஸ்ட்ராங்கா இருக்கும். அந்த வெளையாட்டுல நல்லா வெளையாடணும்கிறத விட அடுத்தவன் பம்பரத்தை எப்படி ஒடைக்கிறதுன்னுதான் அவ்ளோ பயலும் யோசிப்பாய்ங்க. சாட்டைல பம்பரத்தை சுத்தி, காத்துல வீசி, கீழ விடாம உள்ளங்கைலயே சுத்த வச்சு புடிக்கிறது நல்லா இருக்கும்.

தீப்பெட்டிப்படத்தை சேத்து வைக்கிற வெளையாட்டும் இருந்திருக்கே. கோயில்பட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஏழாயிரம் பண்ணைன்னு ஏகப்பட்ட இடத்துல இருந்து கலர்கலரா, விதவிதமா தீப்பெட்டிப் படங்க நெறய வரும். அஞ்சு காசு, பத்துக்காசுன்னு கடல கொடுத்தா, பாக்கெட்டா குடுப்பாய்ங்க. கை நெறய படத்த வச்சுகிட்டு, ஒத்தையா ரெட்டையா வெளையாட்டு வெளையாடி நெறய படம் சேத்துருக்கேன்.

பள்ளிக்கூடத்துல சொல்லித்தந்தது கபடியும், சாப்ட் பால் வெளையாட்டும்தான். கபடி சுமாரா வெளையாடுவேன். ஒரு தடவ என் சைடு ஆளுங்க எல்லாரும் அவுட்டாகிட்டாங்க. நான் மாத்திரம்தான் ஆட்டத்துல இருந்தேன். எதிராளி சீனிவாசன் கபடி பாடி வந்தான். ஒரு ஆளு மாத்திரம் இருக்குறப்ப ஒதைக்கக்கூடாதுன்னு ரூல்ஸ். ஆனா அவன் என் நெஞ்சைப்பாத்து ஒதைச்சான். நான் விடல. அவன இறுக்கப்புடிச்சுகிட்டேன். அவனால திமிர முடியல. மூச்சை விட்டுட்டான். நம்ம பயலுவலுக்கு ஒரே கொண்டாட்டம். ஆனா ஒரு நிமிசத்துக்கு அப்புறமா எனக்கு கிறுகிறுன்னு வருது. ஓரமா போயி படுத்துகிட்டேன். மூச்சு விட முடியல. நெஞ்செல்லாம் சரியான வலி. டாக்டர்கிட்ட போயி காமிக்கிற அளவுக்கு ஆகிப்போச்சு. ரத்தம் கட்டிக்காம இருக்கணும்னு ரெண்டு மாசத்துக்கு ஊசி, மாத்திரைன்னு உசுர வாங்கிட்டாரு டாக்டரு. அதுக்குப் பின்னாடிதான் வலி கொறஞ்சது.

சாப்ட் பால்- வெளையாட்டுல வைக்கோல வச்சு தச்ச பெரிய உருண்டைதான் பந்து!. அத ஓங்கி அடிக்கிற அளவுக்கு எனக்கு அந்த வயசுல தெம்பு கெடயாது. அப்புறம் எதுன்னாலே தெரியாம ஆச வந்து கேட்டது, வெளையாண்டது கிரிக்கெட். நான் ரொம்ப சின்ன பையனா இருந்ததால எனக்கு டீம்ல ஆடுறதுக்கு எல்லாம் இடமே தரமாட்டாய்ங்க,ஹம். ரொம்ப சின்ன வயசுல மொத தடவயா மேற்கிந்தியாவோட இந்தியா வெளையாண்ட கிரிக்கெட் மேச்சோட ரேடியோ கமெண்டரி கேட்டிருக்கேன். அவங்க சொல்றது எதுவும் புரியலைன்னாலும், ஸ்கோரை மட்டும் ஆசையா பேப்பர்ல கிறுக்கி வச்சிக்கிருவேன். உள்ளூர்ல நடந்த ஒரு மேட்சுல நம்மளயும் ஆளா மதிச்சு சப்ஸ்டிடூயூட்டா - அதான் ஒப்புக்கு சப்பாணிம்மாய்ங்கல்ல - அத மாதிரி போட்டாய்ங்க. ஒரு சமயத்துல மிட்டான்ல நின்னுகிட்டு இருக்குறப்ப ஒரு கேச்சு வந்திச்சு. ஆஹா... சூப்பரா பந்தப் பிடிக்கப்போறோம்னு நெனச்சுகிட்டு ஒரு செகண்டு பகல்கனவு கண்டதுல, மூக்கு ஒடஞ்சு ரத்தம் வந்ததுதான் மிச்சம்.. ஹம்.

அப்புறம் டென்னிகாய்ட் கொஞ்ச நாளு வெளையாடினேன். வேலைக்கி சேந்த பின்னாடி கேரம்போர்டு, டேபிள் டென்னிஸ், வாலிபால், பேட்மிண்டன் இதெல்லாம் கொஞ்ச நாளு வெளையாடி இருக்கேன். நெஜம்மா ஆச வந்து கத்துகிட்டு வெளையாடுனது செஸ்ஸ. இந்த வெளையாட்டு பின்னாடி பல வகையிலும் ரொம்ப உதவியா இருந்துச்சு. ரொம்ப நல்லா வெளையாடுற ஒருத்தர ஜெயிச்சு கம்பெனி டீம்ல இடம் பிடிச்சேன். ஒரு எட்டு ஒம்போது வருசம் இருக்கும் - நான் வெளிநாடு வர வரைக்கும் டீம்ல சேர யாரும் என்னய சேலஞ்ச் பண்ணவே இல்ல..!! கொஞ்ச டோர்ணமெண்ட்ல எல்லாம் வெளையாடுற அளவுக்கு அதுல கிறுக்கு புடிச்சி திரிஞ்சிருக்கேன்னா பாத்துக்கங்க.

எல்லா எளவட்டங்களும் கத்துக்குற சீட்டு வெளையாட்டு - ஹாஸ்டல்லயும் பசங்களோடயும் இருந்தப்ப தெரிஞ்சுகிட்டது. ரம்மி, கழுத (!) - அட சீட்டு வெளையாட்டுப் பேருதாங்க - அதையும் கத்துகிட்டேன். பொறுமையும், கவனமும் இருந்தா ஜெயிக்கிறது ரொம்ப ஈஸி. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கொஞ்ச நாளு 'பிரிட்ஜ்' கத்துகிட்டேன். ஆனா அத நல்லா வெளையாடி பழகுறதுக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு வர வேண்டியதால அரகுறையா நின்னு போச்சு.

இப்பல்லாம் பசங்களுக்கு வெளையாட நேரமில்லாம போறதப் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு. கெடைக்கிற கொஞ்ச நேரத்தையும் டிவி பாக்குறதுலதான் இஷ்டம்னு உக்காந்துகிறாய்ங்க. என்ன பண்றது சொல்லுங்க...? கொஞ்ச நாளா நம்ம பசங்க 'சன்பீஸ்ட்' பிஸ்கட்தான் வேணுங்கிறாய்ங்க. காரணம் என்னடான்னு பாத்தா விஜய் படத்த சேத்து வைக்கணுமாம்...!!


தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா

pradeepkt
20-07-2005, 06:14 AM
அருமையான பிள்ளைப் பருவ நினைவுகள் பாரதி அண்ணா.
எங்களுக்கும் எங்கள் சிறு வயதினை நினைவு படுத்தி விட்டது

பரஞ்சோதி
20-07-2005, 06:45 AM
அண்ணா கலக்கல் பதிவு அண்ணா.

நானும் சின்ன வயதில் நிறைய விளையாட்டு விளையாடி இருக்கேன் அண்ணா, அம்மா, அப்பா விளையாட்டுன்னா என்னான்னு தெரியாமல் கூட விளையாடி இருக்கேன். ரஜினி மாதிரி குச்சியை வாயில் போட, அதை பார்த்த என் அம்மா தொடப்பகட்டையால் நாலு சாத்து சாத்த ....

இப்பதிவை பார்த்தால் சின்ன வயசில் என்ன என்ன விளையாட்டுகள் விளையாடினோம் என்பது நினைவுக்கு வரும். எனக்கும் எழுத ஆசையா இருக்குது.

சின்ன வயசில் டூரிங் டாக்கிஸில் பொறுக்கி எடுத்த பிலிம் துண்டுகளை வைத்து பிலிம் காட்டியது. தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாற்றை படித்து நானும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று நினைத்து வீட்டில் இருக்கும் பல்ப், ரேடியோ போன்ற சாதனங்களை பாழ்படுத்தியது. இராமாயணம் டிவியில் பார்த்து அம்பு விட்டு, பக்கத்து வீட்டு ஆச்சி காதில் பாய்ந்தது.

காட்டுக்குள்ளே வேட்டையாட போய் அணில், மைனா, குயில் அடித்து வந்து சாப்பிட்டது, வெள்ளை எலி பிடிக்க போய் அங்கே பாம்பு விரட்ட பின்னங்கால் முதுகில் அடிக்க ஓடியது, வீட்டில் 100 தென்னை மரம் இருக்க, திருட்டு எழனி குடிக்க, ஒரு நாள் தோட்டக்காரன் விரட்ட, முள் வேலியில் விழுந்து வீரத்தழும்போடு வீடு திரும்பியது, கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் கோல்மால் செய்து ரன் எடுத்து எங்க அணி வெல்ல, அடுத்த ஊர்க்காரன் அரிவாளை எடுத்து வெட்ட விரட்டியது, சந்தைக்கு போய் காய்கறி வாங்கி வந்தது, குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு தசராவுக்கு போய் பக்கத்து ஊர் பொண்ணுகளை சைட் அடித்தது, அய்யோ இன்னமும் நிறைய இருக்குதே, எப்படி சொல்றது.

நானும் ஒரு முதலாளி என்ற தொடரலில் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

mania
20-07-2005, 07:17 AM
:) மிகவும் அனுபவித்து எழுதியிருக்கிறாய் பாரதி.......ரசித்து படித்தேன்......"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....நண்பனே.....":D :D
அன்புடன்
மணியா....:D

kavitha
20-07-2005, 11:08 AM
மழலை நினைவுகளை எல்லோர் மனதிலும் கிளறிவிடுகிறீர்கள் பாரதி!
பட்டம் விடறத விட்டுட்டீங்க போல.. (ஐவரணி ஞாபகத்தில் வந்து விட்டது!)

"சேலைல கட்டி வச்சிருப்பாங்களே - தூளி - கொழந்த தூங்குறதுல போயி வெளாடுறியேன்னு திட்டுனாலும் அதப்பத்தி எல்லாம் கவலைப்படாம "
இதெல்லாம் திருட்டுத்தனமா செஞ்சதுண்டு!
உத்திரத்திற்கு உத்திரவாதம் கிடைச்சாபோதும்.
மத்தவங்க பர்மிஷன் பத்தியெல்லாம் கவலைப்பட்டதில்ல.

தாத்தா பாட்டிய யானையாக்கி அம்பாரி போறதும், அவர்கள் காலில் உட்கார்ந்து கொண்டு ஊஞ்சலாடுவதும் ரொம்ப பிடிக்கும். அம்மா, என்னை முதுகில் போட்டுக்கிட்டு காய் நறுக்கிக்கிட்டே, " சாஞ்சாடம்மா, சாஞ்சாடு " பாடுவாங்க.. அதுவும் ரொம்ப பிடிக்கும்.

விவரம் தெரிஞ்சதுக்கப்புறம் கூட உப்புமூட்டை விளையாட்டு விளையாடிருக்கேன்.
யார் பலசாலின்னு பயில்வான்கள் மாதிரி ஒரு மேசை மேலே கைகளை வைத்து
யாருக்கு வாட்டமா கை சாயுதோ, அவங்க பலசாலின்னு தீர்ப்பாகும். தோற்றவர்கள், ஜெயிச்சவங்கள உப்பு மூட்டை தூக்கணும்.
கல்யாணத்துக்கப்புறம் கூட இவர தோற்கடிச்சு (வேணும்னே தோந்தாரோ என்னவோ! ) ஒத்த கையாலே என்னைய மாடி வரைக்கும் தோளில் தூக்கிவர வச்ச நாட்களும் உண்டு.

"ரத்தம் கட்டிக்காம இருக்கணும்னு ரெண்டு மாசத்துக்கு ஊசி, மாத்திரைன்னு உசுர வாங்கிட்டாரு டாக்டரு."
உசிர கொடுத்த டாக்டரை வையறதிலிருந்தே தெரியுதே... உங்களோட விளையாட்டு சுவாரசியம்!

" இதோட சட்ட திட்டம் சரியா நெனவில்ல. பொண்ணுங்க எல்லாம் இத நல்லா வெளையாடுவாங்க."
7 கல்லு ஆட்டம், 5 கல்லு ஆட்டம்னு உண்டு. இதைக்கத்துக்கறதுக்கு எனக்கு ரொம்ப வருசமாச்சு. நல்லா பழகி தூக்கி போட்டு ஒத்த கையாலே ஆடறதுக்கு நிறைய பழகி இருக்கணும்.எல்லா கல்லையும் ஒன்னா சேர்த்து தூக்கிபோட்டு சொடுக்கி பிடிச்சா டபுள் பாயிண்ட்ஸ்!
ஓவ்வொரு கல் ஆட்டத்துக்கும் ஒரு பாட்டு கூட பாடுவாங்க.
பெண்கள் விளையாட்டுனு எடுத்துக்கிட்டா அதுக்கு தனி தலைப்பே கொடுத்து போடவேண்டி இருக்கும்.

"இப்பல்லாம் பசங்களுக்கு வெளையாட நேரமில்லாம போறதப் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு. கெடைக்கிற கொஞ்ச நேரத்தையும் டிவி பாக்குறதுலதான் இஷ்டம்னு உக்காந்துகிறாய்ங்க. என்ன பண்றது சொல்லுங்க...? கொஞ்ச நாளா நம்ம பசங்க 'சன்பீஸ்ட்' பிஸ்கட்தான் வேணுங்கிறாய்ங்க. காரணம் என்னடான்னு பாத்தா விஜய் படத்த சேத்து வைக்கணுமாம்...!!"

தொலைக்காட்சியும் சினிமாவும் கம்யூட்டரும் இப்போது குழந்தைகளின் விளையாட்டு நேரத்தின் பெரும்பகுதியை விழுங்கிக்கொள்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.

தேர்வு சமயங்கள் தவிர மற்ற நாட்களில் குழந்தைகள் விளையாடுவதற்கு நான் தடை விதித்ததே இல்லை. குதித்து, ஓடி விளையாடும்போது தான் சுவாசம் சீராக இருக்கும்; சகோதரத்துவம் வளரும். இந்த இளவயது நினைவுகள் அவர்களுக்குக் கிட்டாமல் போய்விடக்கூடாது அல்லவா?
மண், அழுக்கு படாமல் ஹைஜீனிக் பார்க்கும் இனிவரும் சந்ததிகள் இந்த விளையாட்டுகளை எல்லாம் இண்டர் நெட் மூலமாக மட்டுமே தெரிந்துக்கொள்ளக்கூடிய அபாயமும் உள்ளது. :(

gragavan
20-07-2005, 11:46 AM
அட! இதெப்படி பாக்காம விட்டேன். எப்ப எதப் போட்டாலும் எல்லாரும் அதுக்கு நெறய பதிவு போடுற வசியம் பாரதியண்ணா கையில இருக்கு. நானும் பெருசா இதுக்கு எழுதனும். எழுதுறேன்.

பாரதி
21-07-2005, 12:50 AM
அன்பு பிரதீப்... மிக்க நன்றி.

ஆமாம் பரஞ்சோதி.. விட்டுப்போன விளையாட்டுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அருமையான உங்கள் நினைவுகளும் எங்கள் நெஞ்சில் இடம் இடம் பிடித்துக்கொண்டன. அவசியம் உங்கள் பதிவில் பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

அன்பு மணியா அண்ணா... இதோட உங்க பழய நினைவையும் கொஞ்சம் இங்க கிண்டினா நாங்களும் படிப்போம்ல... சொல்லுங்களேன். அண்ணிகிட்ட எல்லாம் சொல்ல மாட்டோம்.. சரியா..?

அன்பு கவிதா, பட்டம் இதுவரை நான் விடவில்லை. நான் அதை வெளியூர்களில் பார்த்தோடு சரி. இது வரைக்கும் விட்டதில்லை. சிறிய காகிதங்களில் "ஏரோபிளேன்" செய்து வீட்டில் விட்டுப் பார்த்திருக்கிறேன். ஹஹஹா...

நீங்க சொன்ன மாதிரி பிடிச்சவங்க மேலே ஏறி குதிரை விளையாடுறதும் கன ஜோரா இருக்கும்தான். என்னுடைய தந்தை வழி தாத்தா நான் பிறக்கும் முன்னரே காலமாகி விட்டார். தந்தை வழிப் பாட்டி நான் இரண்டாவது மூன்றாவது வகுப்பு படிக்கும் போது காலமாகி விட்டார். தாய்வழிப்பாட்டனாரை மிகவும் சின்ன வயதில் ஓரிரு முறை பார்த்ததோடு சரி. தாய்வழிப்பாட்டி வேறு ஊரில் இருந்ததால் அதிக ஒட்டுதலும் இல்லாமல் போய்விட்டது..!

அப்புறம் நீங்க சொன்ன பலசாலி விளையாட்டு நல்ல சுவாரஸ்யம்தான். ஆனால் முடிவுதான் சரியில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே பலமில்லாமல்தான் தோற்கிறார்கள். அப்படியிருக்க தோற்ற பின்னர் தோற்கிறவர்களையே மூட்டை தூக்க சொல்வது - அதுவும் ஒற்றைக்கையில் தூக்கி வரச்சொல்வது கொஞ்சமாவது நியாயமா?
இப்போது உள்ள பள்ளி மாணவர்கள் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. இந்த சிக்கலில் இருந்து எப்படி அவர்களை மீட்பது என்பது ஆராயப்பட வேண்டிய விசயம்தான். நீண்ட விளக்கத்துக்கு மிக்க நன்றி.

அன்பு இராகவன், உண்மையில் நீங்கள்தான் ஏதாவது காரணத்தை சொல்லி அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று சொல்வீர்கள். இருந்தாலும் நீங்கள் பெரிதாக எழுதப்போவதை மனம் எதிர்பார்ப்பதென்னவோ உண்மைதான். மிகவும் நன்றி.

aren
22-07-2005, 11:01 AM
அருமையான பதிவு. பழைய நினைவுகளை கொண்டுவந்துவிட்டன. என்ன அருமையான நாட்கள். நாங்கள் வெய்யிலை வீணடித்ததேயில்லை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வெளியில்தான் இருப்போம்.

கோலி ஆட்டம்.

நான் சிறு வயதில் எங்கள் ஏரியாவில் பெரிய ஆள். குறிபார்த்து அடிப்பதில் பலே கில்லாடி. பல விதமான ஆட்டங்கள். அதில் ஒன்று பட்றை. ஒரு சிறிய கட்டம் சுவத்தருகில் போட்டு, அதில் இரண்டு சிறிய கோலிகளை போட வேண்டும். ஒரு மூன்று அல்லது நான்கு அடி பின்னால் நின்று எதிர் ஆட்டக்காரர் சொல்லும் கோலியை, பெரிய கோலி (அதாங்க டாமா கோலி) அடிக்கவேண்டும். அப்படி அடுத்துவிட்டால் நாம் வென்றதாகிவிடும். அப்படி அடிக்காமல், ஆனால் டாமா கோலி அந்த கட்டத்தில் சென்று மரியாதையாக வெளியே வந்துவிட்டால் நாம் ஆட்டமிழ்ந்து அவர் ஆட்டத்தை தொடங்குவார். அப்படியில்லாமல், டாமா கோலி உள்ளே தங்கிவிட்டாலோ அல்லது இரண்டு கோலியையுமே அடித்துவிட்டால் அதற்கு பெயர் "பச்சா" என்று அர்த்தம். நாம் ஆட்டம் இழந்துவிடுவோம். அடுத்தவர் வென்றுவிடுவார். நாங்கள் கோலிக்கு கோலி பந்தயம் கட்டுவோம்.

இன்னொன்று பேந்தா கோலிஆட்டம். அதைப்பற்றி பாரதி அவர்கள் எழுதிவிட்டார்கள்.

இன்னொரு கோலி ஆட்டத்தின் பெயர் நினைவில் இல்லை.
எனக்குத் தெரிந்த இன்னொரு கோலி ஆட்டம். நாம் ஒரு கோலியை கீழே போடவேண்டும். அடுத்தவர் அதைப் பார்த்து அடிக்கவேண்டும். அப்படி அடித்தவுடன், மீண்டும் அவர்கள் நம்முடைய கோலிக்கு அருகில் அவர்களுடைய கோலியை போடவேண்டும். அதற்கு "ஜான்" போடுவது என்று பெயர். அப்படி அவர்களுடைய கோலி ஜானுக்கு அதிகமாக இருந்தால் அவர்கள் தோற்றவராகிவிடுவார்.

நீங்கள் கில்லி-தாண்டு ஆடியதில்லையோ. கில்லியில் டபுல்ஸ், டிரிபில்ஸ் அடிப்பதில் நான் கில்லாடி. கில்லி தாண்டில், ஒரு சிறிய பள்ளத்தை கிளறிக்கொண்டு அங்கே கில்லியை வைத்து தள்ளவேண்டும். எதிராளி அதை காட்ச் பிடித்துவிட்டால் நாம் அவுட்டாகிவிடுவோம், அப்படி காட்ச் பிடிக்கவில்லையென்றால், நான் தாண்டை கீழே வைககவேண்டும். அவர்கள் அந்த தாண்டை குறிபார்த்து கில்லியை எறிவார்கள் அப்படி சரியாக எறிந்துவிட்டால், நாம் அவுட்டாகிவிடுவோம். அப்படி குறிபார்த்து எறியவில்லையென்றால், நாம் கில்லியை தாண்டு கொண்டு அடிக்கலாம். ஒரு ஓரத்தைத் தட்டினால் கில்லே மேலே எழும்பும். அதை நேரடியாக அடித்தால் அது ஒன்று. அதற்கு பதில் அதை ஒரு முறை தட்டிவிட்டு மறுபடியும் அடித்தால் அதற்கு பெயர் டபுல்ஸ். அதை இரண்டு முறை தட்டிவிட்டு பின்னர் அடித்தால் அதற்கு பெயர் டிரிபுல்ஸ். நேராக அடித்தால், அடித்த இடத்திலிருந்து குழு இருக்கும் இடம் வரைக்கும் தாண்டால் அளப்பார்கள். அத்தனை பாயிண்டுகள். அது டபுல்ஸாக இருந்தால், அதை இரண்டால் பெருக்கவேண்டும், டிரிபுல்ஸாக இருந்தால், மூன்றால் பெருக்க வேண்டும். யார் முதலில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைகிறார்களோ அவர்கள் வென்றவராக கருதப்படுவார்.

இன்னொரு கில்லி ஆட்டம், ஒரு பெரிய வட்டத்தை கிழித்துக்கொள்ளவேண்டும். அந்த வட்டத்தில் நின்று நாம் கில்லியை மேலே தூக்கிப்போட்டு அதை தாண்டால் அடிக்க வேண்டும். அது விழுந்த இடத்திலிருந்து எதிராளி கில்லியை வட்டத்துக்குள் போடவேண்டும். அப்படி போட்டுவிட்டால் நாம் அவுட்டாகிவிடுவோம், அப்படி போடவில்லையென்றா நாம் மறுபடியும் அங்கிருந்து அடிப்போம். அவர்கள் நம்மை ஓடிவிந்து பிடிக்கவேண்டும். அப்படி பிடிக்கவில்லையென்றால் நாம் மறுபடியும் கில்லியை தூக்கிப்போடு இன்னும் கொஞ்சம் தொலைவு அடிப்போம். அவர்கள் அங்கிருந்து வட்டத்தைப் பார்த்து அடிக்கவேண்டும். இப்படியே அவர்களை தெருவைத்தாண்டி அடுத்த தெருவிற்கு எடுத்துக்கொண்டு போய்விடுவோம்.
அடுத்தது, காத்தாடியைப் பற்றி சொல்லவேயில்லையே. நான் காற்றாடி செய்து மற்றவர்களுக்கு விற்று காசாக்கிவிடுவேன். நான் என்னுடைய சொந்த செலவை செய்து காற்றாடி விட்டதேயில்லை. அனைத்தும் காற்றாடி விற்ற காசில் விட்டதுதான். அதற்கென்று நூல் வாங்கி, பாட்டிலை அரைத்து, மாஞ்சா போடுவோம். அப்பொழுதே வித விதமான உத்திகளைக்கொண்டு மாஞ்சா போடுவோ. ரோஸ் கலர் தான் மிகவும் பிரசித்தம் அந்த காலத்தில். நாங்கள் கலர் போடாமல் வெறும் வெள்ளை கலரில் மாஞ்சா போடுவோம், எங்கள் காத்தாடி பறப்பதைப் பார்த்த வெறும் வெள்ளை நூலில் காத்தாடி விடுகிறான் என்று நினைத்து மற்றவர்கள் எங்களிடம் டீல் போட்டு அவர்கள் காத்தாடி அறுபட்டு போனபிறகு எங்களுடையது வெள்ளை மாஞ்சா என்று தெரிந்துகொள்வார்கள்.

காத்தடிகளில் பலவகை. ஒவ்வொன்றும் ஒரு வகை. குருவி கண் டிசைன் வைத்த காத்தாடிதான் அந்த காலத்தில் நிறைய பேர் விடுவார்கள்.
வேறு என்ன. பாரதி அவர்கள் துடப்பகுச்சி வைத்து விளையாடிய விளையாட்டு, நாங்கள் சூடுகொட்டை என்ற ஒரு விதையை வைத்து விளையாடுவோம். அசையாமல் காயை எடுக்கவேண்டும்.

பல்லாங்குழி ஆட்டம் ஆடியிருக்கிறீர்களா. வாவ்!! பெண்கள் இந்த விளையாட்டில் பலே கில்லாடிகள்.

முதுகு பஞ்சர் ஆட்டம் ஆடியிருக்கிறீர்களா? சில சமயங்களில் செமத்தியாக கிட்டவே மாட்டிக்கொண்டு முதுகில் அடி வாங்கி அது இரண்டு நாட்களுக்கு விலி போகாது. நானும் மற்றவர்களுக்கு திருப்பிக்கொடுத்திருக்கிறேன்.
திப்பெட்டி படத்தை வைத்து மங்காத்த ஸ்டைலில் ஆட்டம் ஆடுவோம். நாம் ஒரு படத்தை போட எதிராளி இன்னொரு படத்தை போடுவார். ஆனால் நாம் போட்ட படம் போலவே எதிராளியும் படம் போட்டார் அவர் வெற்றி பெற்று அனைத்து படங்களையும் அவரே எடுத்துக்கொண்டு விடுவார். நாங்கள் தூங்கி எழுந்தவுடம் பள்ளி போவதற்குள் ஒன்று இரண்டு ஆட்டங்க்கள் ஆடி விடுவோம். அவ்வளவு மும்முரமாக இருக்கும்.

சக்கரம் செய்திருக்கிறீர்களா? சோடா பாட்டிலின் மூடியை எடுத்து வந்து அதை தட்டையாக்க்கி, அதில் இரண்டு துளைகளைப் போட்டு, அதில் நூலை நுழைத்து சுத்தினால் சக்கரம் மாதிரி சுழலும். அதன் ஓரங்க்களை நன்றாக கூர்மையாக்கி, மற்றவர்களுடன் டீல் விடுவோம். அவர்கள் நம்முடைய நூலை குறி பார்ப்பார்கள், நாம் அவர்களுடைய நூலை குறி பார்ப்போம். யாருடையது முதலில் அறுந்துபோகிறதோ அவர்கள் தோற்றவர்களாக கருதப்படுவார்கள். நாங்கள் இந்த சக்கரத்தை கூர்மையாக்க, ரயில் தண்டவாளங்களில் ரயில் வரும்பொழுது வைப்போம். அது ரயில் போனவுடன், நன்றாக தட்டையாகிவிடும். அதன் கூர்மை எதிராளியின் சக்கரத்து நூலை அறுக்க நன்றாக உபயோகப்படும்.

தும்பியை பிடித்து அதில் ஒரு டவைன் நூல் கட்டி பறக்க விட்டிருக்கிறீர்களா?

இன்னும் பல ஆட்டங்கள். நிறைய நினைவில் இல்லை. மறுபடியும் எழுதுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

பாரதி
22-07-2005, 05:35 PM
அருமை.. அருமை ஆரென். விட்டுப்போன விளையாட்டுக்களை மீண்டும் உயிர்பெறச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும் போது மட்டுமா பெரிய ஆள்..? இப்போதும் கூடத்தானே..!! பச்சா, ஜான் கோலி ஆட்டங்களை நினைவு கூர்ந்த விதம் அட்டகாசமாக இருக்கிறது.

காத்தாடி விளையாட்டு விளையாடும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

நீங்கள் சொன்ன கில்லித்தாண்டு என்பதும் கிட்டிப்புள் என்பதும் ஒன்றே. ஆட்டத்தில் நீங்கள் சொன்ன விதிமுறைகள் மிகவும் சரி.

சோடா மூடியை தட்டையாக்கி அதில் நூல் கோர்த்து, நூலை இரு பக்கமும் பிடித்துக்கொண்டு வேகமாக சுழற்றி, சக்கரம் சுழல்வதைப் பார்ப்பதும், நூலின் முனைகளை இழுப்பதிலும், கொண்டு வருவதிலும் சக்கரத்தின் சுழற்சியை அதிக நேரத்திற்கு கொண்டு செல்வதும் அளப்பறிய இன்பம் தருமே..!

அறுவடைக்காலங்களில் நடக்கும் விளையாட்டுக்களே தனிதான்... வாய்ப்பு கிடைக்கும் போது தர முயற்சிக்கிறேன். இல்லை நண்பர்களும் முயற்சிக்கலாம்.

உங்களின் சுவையான பதிவு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறது. மேலும் எழுதுங்கள் ஆரென். ஆவலுடன் படிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறோம்.

ஒரு சிறிய வேண்டுகோள் : உங்களுக்கு தனிமடலோ மின்னஞ்சலோ அனுப்ப இயலவில்லை. தயவு செய்து இளசு அண்ணாவின் தொலைபேசி எண்கள் குறித்தோ, முகவரி குறித்தோ தகவல் தர இயலுமா..? நன்றி.

பரஞ்சோதி
23-07-2005, 09:17 AM
ஆரென் அண்ணா,

உங்க சொந்த ஊர் எது? சிறுவயதில் இருந்த ஊர் எது?

நீங்க சொன்ன விளையாட்டு எல்லாமே நான் ஆடியிருக்கிறேன், எனக்கு திருச்செந்தூர் பக்கம்.

கொஞ்சம் சொல்லுங்களேன்.

aren
23-07-2005, 01:28 PM
பரஞ்சோதி அவர்களே,
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சிங்கார சென்னையில் இருக்கும் கோடம்பாக்கத்தில்.

நான் எழுதிய விளையாட்டுக்கள் அனைத்தும் தமிழர்களின் வீரவிளையாட்டுகளாயிற்றே, ஆகையால் அனைத்து தமிழர்களும் இதை நிச்சயம் ஒரு முறையாவது தன்னுடைய வாழ்க்கையில் விளையாடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
23-07-2005, 02:16 PM
சரியாகச் சொன்னீர்கள் ஆரென்...
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அனைவரும் கண்டிப்பாக இவற்றை ஒரு முறையாவது விளையாடி இருப்பார்கள்.
நாங்கள் விளையாட ஆரம்பித்த போது கில்லி தாண்டுடன் கிரிக்கெட் பிரபலம் அடைந்திருந்ததால், கையில் கிடைத்த கட்டைகளுடன் ரப்பர் பந்துகளை வைத்து விளையாடுவோம். நான் கிரிக்கெட் விளையாடி வந்தால் எப்போதும் வீட்டுக்குள் பின்வாசல் வழியாகத்தான் விடுவார்கள். காரணம், சாக்கடையில் இருந்து பந்தை ஒரு முறையாவது எடுத்திருப்பேன்.
அப்புறம் சிகரெட் அட்டைகளை மடக்கி வைத்து சில்லு வைத்து அடித்து விளையாடும் விளையாட்டு. எங்கள் தாத்தா கடை வைத்திருந்ததால் எனக்கு இந்த விளையாட்டில் பெரும் மரியாதை. அதில் ஒரு சிசர்ஸ் பில்டர் அட்டைக்கு ஐந்து சிசர்ஸ் அட்டை என நிறைய விதிமுறை உண்டு.
கோலிக்குண்டு சேர்ப்பது தாத்தா வீட்டைப் பொறுத்த வரை தேசத் துரோகக் குற்றம். அதற்காக யார் கண்ணிலும் படாமல் குதிர் மூலையில் குண்டுகளை ஒளித்து வைத்து சித்திகளிடம் அடி வாங்கியது தனிக்கதை.
அப்புறம் கோடைக் காலத்தில் வீட்டிலேயே விளையாடுவதற்காக ஏற்பட்ட வர்த்தகம், தாயம், சதுரங்கம் போன்றவை...
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

aren
24-07-2005, 02:02 AM
நாங்கள் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த சமயங்களில் எங்களிடம் மட்டை, பந்து வாங்க காசு கிடையாது. நாங்கள் தென்னை மட்டையை எடுத்து அதை வெட்டி மட்டை மாதிரி செய்து (உண்மையான மட்டை என்று சொன்னால் இதைத்தான் சொல்லவேண்டும்) அதை பயன்படுத்தவோம். பந்திற்கு, நாங்கள் கிழிந்து சைக்கிள் டியூப்களை எடுத்து, அதை சிறியதாக வெட்டி ரப்பர்பாண்ட் மாதிரி செய்து, அதை ஒரு சிறிய கசக்கிய காகிதம் மேல் சுற்றுவோம், அப்படியே சுற்றி ஒரு பந்து அளவு வரும் வரையில் ஒன்றுக்குமேல் ஒன்று நறுக்கிய சைக்கிள் டியூபை சுற்றுவோம். அதை பந்தாக பயன்படுத்துவோம். ஆனால் காலில் பட்டுவிட்டால் வலி உயிர்போய்விடும்.

நன்றி வணக்கம்
ஆரென்

பரஞ்சோதி
24-07-2005, 04:25 AM
நன்றி ஆரென் அண்ணா,

நீங்க சொன்னமாதிரி தமிழர்கள் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடி இருக்க வேண்டும், ஆனால் தற்போதைய காலத்தில் எங்கே விளையாட முடிகிறது, எங்கே இடம் இருக்கிறது, நேரம் இருக்கிறது, அதுவும் தற்போதைய சென்னை போன்ற பகுதியில் அனைத்து குழந்தைகளும் ஒன்று கூடி விளையாடுவதை பார்க்க முடிவதில்லையே.

மேலும் வெளிநாடுகள் வசிக்கும் குழந்தைகள் உண்மையில் பாவப் பிறவிகள் தான். கணினியும், தொலைக்காட்சியையும், கேன்பர்கரைத் தவிர வேற ஒன்றுமே தெரியாதது போல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது.

aren
27-07-2005, 10:16 AM
பரஞ்சோதி அவர்களே,

வெளிநாட்டில் வாழும் குழைந்தகளும் அனைத்தும் அனுபவிக்கிறார்கள். ஆனால் அது இருக்கும் நாட்டைப் பொருத்து விளையாட்டுகளும் மாறுபடும்.

ஐரோப்பா, தென்கிழக்காசியா அல்லது மத்தியகிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் கால்பந்தை விரும்பி ஆடுகிறார்கள்.

வட அமெரிக்காவில் இருப்பவர்கள் பேஸ்பால், கூடைப்பந்து, அமெரிக்க ஃபுட்பால் போன்ற விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள்.

இதை தவிற, நீச்சல் அடிக்கவும் அனைவரும் கற்றுக்கொண்டுள்ளதால், அதையும் சந்தர்பம் கிடைக்கும் பொழுது செய்கிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரை விளையாட்டு இருக்கிறது, ஆனால் நாம் சிறுவயதில் ஆடிய ஆட்டங்கள் அவர்களுக்கு நிச்சயம் தெரியாது. அதில் இருக்கும் சுவாரசியமும் வேறு எந்த ஆட்டத்திலும் வராது என்பது என்னுடைய கருத்து.

பரஞ்சோதி
27-07-2005, 10:50 AM
வெளிநாட்டில் வாழும் குழந்தைகளில் நிறைய பேர் கணினியே கதி என்று கிடக்கிறார்கள், அதை விட்டால் தொலைக்காட்சி, புத்தகம். கூடி விளையாடும் வாய்ப்பு மிக கம்மியாகவே இருக்கிறது. அதுவும் ஒரே இனத்தவர் (தமிழர்) கூடி விளையாடும் வாய்ப்பு மிக குறைவே.

நாம் சின்ன வயதில் விளையாடி தமிழர் விளையாட்டை விளையாட சுத்தமாக வாய்ப்பு இல்லை. வீட்டில் சீட்டு கட்டு விளையாடி மகிழ்கிறார்கள்.

நாமும் வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து தாயம், பல்லாங்குழி போன்றவற்றை விளையாடலாம், நான் சக்திக்கு அனைத்து தமிழக விளையாட்டையும் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன், அதற்கானவற்றை கொண்டு வரவும் இருக்கிறேன், சின்ன வயசில் நம்ம ஊர் குழந்தைகள் மரத்திலான சமையல் உபகரணங்களை (செப்பு) உபயோகித்து விளையாடுவார்கள், அதை திருச்செந்தூர் கோயிலில் கிடைக்கும். அது போன்றவற்றை வாங்கி வர இருக்கிறேன்.

இங்கே ஒரு முறை எங்க கம்பெனியில் ஆண்டு விழா கொண்டாடினார்கள், அதற்கு நிறைய பேர் குடும்பத்தோடு வந்தார்கள், அதில் சில சிறுவர்கள் தரையில் (பாலைவனம்) அமர்ந்து ஒருவர் தலையில் மற்றவரும், அவரவர் தலையில் அவரே மண்ணை போட்டு விளையாடிகள், காரணம் மண்ணை மிதித்து விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு மிகக் குறைவு, அடுக்குமாடிகள் வசிக்கிறார்கள், பிள்ளைகளை கீழே இறங்க விடுவது இல்லை, படிப்பு படிப்பு என்று வேதனைப்படுத்துகிறார்கள்.

aren
28-07-2005, 04:20 AM
பரஞ்சோதி அவர்களே,

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. தமிழ் குழைந்தைகளுக்கு நம்முடைய ஆட்டங்கள் கலாசாராங்கள் அனைத்தும் தெரிவதில்லை. காரணம் அப்படி தெரிந்து கொள்வதற்கு வசதியும் சந்தர்பமும் இல்லாததால். முடிந்தவரை நாம் அந்த சந்தர்பத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். என்னால் முடிந்த்தை நான் நிச்சயம் செய்வேன்.

மன்மதன்
20-08-2005, 07:36 AM
இந்த பதிவை படிக்க படிக்க பழைய நினைவுகளை மனது அசைபோட்டு பார்க்கிறது.. பாவம் இந்த கால பசங்க.. இதையெல்லாம் விளையாடி அனுபவிக்க முடியாமல் போகிறார்கள்.. கம்ப்யூட்டர்களிலும், ப்ளே ஸ்டேஷன்களிலும் பொழுது கழிகிறது.

பாரதி குறிப்பிட்டுள்ள விளையாட்டுகளில் பெரும்பாலும் நானும் விளையாடியிருக்கிறேன். கில்லி, பம்பரம் இரண்டும் அதிக மார்க் பெறுகிறது..


தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அனைவரும் கண்டிப்பாக இவற்றை ஒரு முறையாவது விளையாடி இருப்பார்கள்

கண்டிப்பாக.. சிட்டியோ, கிராமமோ.. அனைவருமே விளையாட்டு பிள்ளைகள்தானே..

நல்ல பதிவு பாரதி.. பாராட்டுக்கள்..

அன்புடன்
மன்மதன்

உதயா
12-10-2005, 07:13 AM
* கோலி, பம்பரம் நான் கில்லாடியாக்கும்.

* அக்காவோடு கட்டங்கா (அதாங்க 5 அல்லது 7 கல் வைத்து விளையடுவது) விளையாடுவது ரெம்ப பிடிக்கும் - இதை இப்ப நிணைத்தலும் என் கண்களில் கண்ணீர் வரும். (அக்கா ஆண்டவனுக்கிட்ட போய்டாங்க)

* அக்காவோடு சேர்ந்து கோலம் போட நாட்கள்.

* கிட்டி கம்பு (கில்லி) நான் அடித்தால், மூன்னு அடியை ஒரு மூச்சில் எடுத்துவர ஆளே இல்லை.

* கிளி தட்டு ஆட்டம், பந்து ஆட்டம் (10முறையில் பந்துகளை அடிப்பது)

* நீச்சல்

* கிரிக்கெட் (அதன் விவரங்களை விவரமாக பதிக்கிறேன்)

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

பரஞ்சோதி
12-10-2005, 07:44 AM
வெற்றி, உங்க விளையாட்டு அனுபவங்களை சோகத்தோடு சொன்னதை படித்து மனம் கலங்குகிறது.

பாரதி அண்ணாவின் இந்த பதிவை படித்து நான் கிரிக்கெட் பற்றிய நினைவுகளை சொல்லியிருக்கிறேன், விரைவில் மற்ற விளையாட்டுகளையும் விரிவாக எழுதுகிறேன், நீங்களும் எழுதலாமே.

இளசு
12-10-2005, 10:17 PM
ரொம்ப நேரம் ஆழ்ந்து படித்தேன் பாரதி.

இராகவன் சொல்வதுபோல் உன் எழுத்துக்கு ஒரு வசியம் இருக்கிறது..
விளையாட்டுகளின் விதிகள், நுணுக்கங்கள் விவரித்த விதம் இந்த பதிவை ஒரு களஞ்சியம் அளவுக்கு உயர்த்தி விட்டது.
முக்கால் வாசி விளையாட்டுகள் - என் ஆட்டோகிராபிலும் உண்டு.

கவிதா, ஆரென், பரஞ்சோதி, பிரதீப் எல்லாம் கலக்கியிருக்காங்க...
வெற்றியின் பதிவு - காலம்(ன்) பூசிய சோகம்...

பரம்ஸ் - உன் கிரிக்கெட், கண்டுபிடிக்கவா போன்ற மெகா பதிவுகளை இன்னும் நெருங்கவே இல்லை.. மெல்ல மெல்ல வந்துவிடுவேன்..

பாரதியின் விளையாட்டு - காலப் பதிவு..கருவூலம்!

பாரதி
13-10-2005, 02:33 PM
பல விளையாட்டுகளையும் மிகவும் சுவாரஸ்யத்துடன் அலசி, கருத்துக்கள் தந்த பிரதீப், ஆரென், பரஞ்சோதி, மன்மதன் ஆகியோருக்கு நன்றி.


கிரிக்கெட் (அதன் விவரங்களை விவரமாக பதிக்கிறேன்)

மிக்க நன்றி வெற்றி. பரஞ்சோதியின் கிரிக்கெட் நினைவலைகளைத் தொடர்ந்து உங்களின் அனுபவமா... வாங்க... வாங்க...


ரொம்ப நேரம் ஆழ்ந்து படித்தேன் பாரதி.

இராகவன் சொல்வதுபோல் உன் எழுத்துக்கு ஒரு வசியம் இருக்கிறது..
விளையாட்டுகளின் விதிகள், நுணுக்கங்கள் விவரித்த விதம் இந்த பதிவை ஒரு களஞ்சியம் அளவுக்கு உயர்த்தி விட்டது.
முக்கால் வாசி விளையாட்டுகள் - என் ஆட்டோகிராபிலும் உண்டு.

கவிதா, ஆரென், பரஞ்சோதி, பிரதீப் எல்லாம் கலக்கியிருக்காங்க...
வெற்றியின் பதிவு - காலம்(ன்) பூசிய சோகம்...

பரம்ஸ் - உன் கிரிக்கெட், கண்டுபிடிக்கவா போன்ற மெகா பதிவுகளை இன்னும் நெருங்கவே இல்லை.. மெல்ல மெல்ல வந்துவிடுவேன்..

பாரதியின் விளையாட்டு - காலப் பதிவு..கருவூலம்!

என்றைக்கும் போல உங்கள் கருத்து ..ம்ம்... அண்ணா.. உங்களுக்கு என் அன்பு. வேறென்ன சொல்ல..?