PDA

View Full Version : ஜூலை 19, செவ்வாய்க்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
19-07-2005, 01:09 AM
பெட்ரோல் எண்ணெய் மான்யம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை
அரசாங்கம் பெட்ரோல் எண்ணெய் மான்யம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய எந்த ஒரு முடிவுகளையும் எடுக்கவில்லை எனவும் ஆனால், அத்திட்டத்தை படிப்படியாக குறைக்கவுள்ளதாகவும் பிரதமர் துறையின் அமைச்சர் Datuk Seri Mohamed Nazri Aziz தெரிவித்தார்.
மேலும், குறைந்த வருமானம் பெறுபவர்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து பெட்ரோல் எண்ணெய் மான்யம் வழங்கும் எனவும், மற்றவர்களுக்கு மான்யம் வழங்கும் திட்டத்தை படிப்படியாக குறைக்கும் எனவும் நேற்று நடைபெற்ற மேளவையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வருடம் பெட்ரோல் எண்ணெய் மான்யம் வழங்க அரசாங்கம் சுமார் 4.8 பில்லியன் ரிங்கிட் செலவு செய்ததாக அவர் கூறினார். தற்போது, உலகச் சந்தையில் பெட்ரோல் எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அரசாங்கம் பெட்ரோல் எண்ணெய் மான்யம் வழங்கும் திட்டத்திற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
-------------------------
பிரச்சனைக்குரிய மேம்பாட்டு திட்டங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்
ஒத்திவைக்கப்பட்ட பிரச்சனைக்குரிய 10 மேம்பாட்டு திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள், திட்டமிட்டப்படி இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என பொதுப்பணித் துறை துணை அமைச்சர் Datuk Mohd Zin Mohamed நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
அதில் மூன்று மேம்பாடு திட்டங்களான Sungai Buloh மருத்துவமனை, Ampang மருத்துவமனை, Simpang Pulai-Lojing-Gua Musang-Kuala Berang நெடுஞ்சாலை ஆகியவை முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் 5 திட்டங்களின் பணிகள் சீராக நடைப்பெற்று வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
Alor Star மருத்துவமனை,Sungai Petani மருத்துவமனை,Persekutuan 5 சாலை நிர்மானிப்பு,Kapar-Sabak Bernam மற்றும் Klang-Banting நெடுஞ்சாலை,Sungai Perai பாலம் அமைப்பு,சபா மலாயா பல்கலைக்கழகம் ( Fasa 2A ) ஆகியவையே அந்த 5 மேம்பாடு திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.போதைப் பழக்கத்தை ஒழிக்க பெற்றோர்களின் பங்கு இன்றியமையாதது
நாட்டில் பரவி வரும் போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசாங்கம் மட்டுமல்லாது போதைப்பித்தர்களின் குடும்ப உறுப்பினர்களும் மற்றும் சமூகத்தினரும் முக்கிய பங்காற்ற வேண்டும் என உள்நாட்டு பாதுகாப்பு துணையமைச்சர் Datuk Noh Omar தெரிவித்தார்.
நிறைய அரசு சார்பற்ற அமைப்புகள் போதைத் தடுப்பிற்கான பல கருத்தரங்குகளை ஏற்பாடு செய்த போதிலும் குடும்ப உறுப்பினர்களும் சமூகத்தினரும் இதன் தொடர்பில் ஆதரவளிக்காவிட்டால் போதைப்பித்தர்களை ஒழிப்பது மிகவும் சிரமமான ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
போதைப்பித்தர்கள் மீண்டும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களது பெற்றோர்கள் அவர்களைக் கண்காணிப்பது மிகவும் அவசியம் என அவர் கூறினார்.

போதைப்பித்தர்களுக்கான மறுவாழ்வு மையங்களில் உள்ள போதைப்பித்தர்கள் குணமடைந்த பிறகு அங்கு வருகை தந்து தங்களின் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுனாமி மற்றும் நிலநடுக்க முன்னெச்சரிக்கை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

சுனாமி மற்றும் நிலநடுக்க முன்னெச்சரிக்கை அல்லது warning system திட்டமிட்டபடி இவ்வாண்டு இறுதிக்குள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் உருவாக்கத் துறை துணை அமைச்சர் Datuk Kong Cho Ha தெரிவித்தார்.
வானிலை தொடர்பான ஆய்வுகள்,ஆராய்ச்சிகள்,தகவல் பரிமாற்றங்கள் போன்ற விஷயங்களில் மலேசிய வானிலை ஆய்வு மையம் மற்ற நாடுகளோடு ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
SMS வாயிலாக சுனாமி மற்றும் நிலநடுக்க முன்னெச்சரிக்கை 10 நிமிடங்களுக்குள் மக்களைப் போய் சேரும் எனவும் இது தொடர்பான மேலும் பல ஆய்வுகளை குறிப்பிட்ட தரப்பினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகரித்துவரும் மாணவர்களின் குற்றச்செயல்கள்

நம் நாட்டிலுள்ள பள்ளிகளில் நடக்கின்ற அச்சுறுத்தல்,பணம் பறித்தல்,பொது உடைமைகளை நாசப்படுத்துதல் போன்ற வன்முறை செயல்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது என துணை கல்வி அமைச்சர் Datuk Hon Choon Kim தெரிவித்தார்.
இவ்வெண்ணிக்கை 0.03 சதவீததிற்கும் கீழ் இருந்தாலும் இது போன்ற பள்ளி வன்முறை செயல்கள் நாட்டின் முக்கிய குற்றச்செயல்களாகவே கருதப்படும் என அவர் மேலும் கூறினார்.
பள்ளி மாணவர்களிடையே நிலவும் இது போன்ற குற்றச்செயல்களைக் களைய அரசாங்கம் 8 திட்டங்களை ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


வெள்ளத்தில் கிராமங்கள் சேதம்
சபாவில் Kota Kinabalu-Tuaran-இல் பெய்த அடைமழையினால் அங்குள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அங்குள்ள Kampung Rampaian, Kampung Tobobon மற்றும் Kampung Giling ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொது மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் பணியில் மீட்பு பணியினரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
Kampung Rampaian என்ற கிராமம் மட்டும் இந்த வெள்ளப்பெருக்கில் அதிகமாக சேதமடைந்துள்ளதாக தீயணைப்புப் படை பேச்சாளர் ஒருவர் கூறினார். சுமார் 200 வாகனங்கள் இந்த வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதாகவும் இதுவரையில் உயிருடர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
-------------------
பெங்களூரில் அடுத்த குண்டு வெடிப்பு - இந்திய உளவு பிரிவினர் எச்சரிக்கை
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக நாட்டில் தொடர் வெடி குண்டு தாக்குதலை நடத்த பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா என்று அழைக்கப்படும் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக உளவுப் பிரிவு இந்திய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
அத்தீவிரவாதிகளுக்கு Al-Qaeda இயக்கம் உட்பட பல தீவிரவாத அமைப்புகள் உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் இந்த தீவிரவாதிகள் அயோத்தி கோவிலை தகர்க்க முயற்சி செய்து அத்திட்டம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது வெறிப் பார்வை பெங்களூர் நகரம் மீது திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
உளவுப் பிரிவினர் வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து பெங்களூர் பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது.
------------------
பாகிஸ்தானில் 17 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே அந்நிய நாட்டு தீவிரவாதிகள் 17 பேரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரும் பலியானார்.
இந்த துப்பாக்கிச் சண்டை வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில் நடந்ததாக ராணுவ தகவல் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி இன்னும் தகவல்கள் தெரியவில்லை என அவர் கூறினார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதிகரித்து வரும் இனவெறி தாக்குதல்

லண்டன் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இனவெறி தாக்குதல்கள் 10 மடங்கு அதிகமாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த 7ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின் இனவெறி தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் 500 இனவெறித் தாக்குதல்கள் நடந்து விட்டதாக புகார்கள் வந்துள்ளன. வழக்கமாக பதிவாகும் இனவெறிக் குற்றங்களை விட தற்பொழுது 10 மடங்கு அதிகமாக பதிவாகி உள்ளதாக போலீசார் கவலைத் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதன் தொடர்பில் இதுவரையில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

FRANKFERT-இல் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்
FRANKFERT-டிற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அரசு பயணம் மேற்கொண்டுள்ளார்.உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக சமூகத்தை அமெரிக்காவும் இந்தியாவும் கொண்டுள்ளன; இவ்விரு நாடுகளும் இணைந்து செயல்படுவது சர்வதேச அளவில் மிகவும் நன்மையைத் தரும் எனவும் நாட்டின் பாதுகாப்பு குறித்தோ, இந்திய தேசப்பற்று குறித்தோ யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

தங்களுக்கு நாட்டுப்பற்றை யாரும் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை எனவும் லண்டன் குண்டுவெடிப்புக்குப் பின், தீவிரவாதம் என்பது சர்வதேச பயங்கரம் என்பதை உலக மக்கள் உணர்ந்து விட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பாதிக்கும் நோய்
ஆசிய நாடுகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பான்மையோர் கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை வலி ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். மனிதனின் செயல்பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் முதுகெலும்பு ஆகும். இயற்கையாலேயோ அல்லது தவறான நடைமுறைப் பழக்கவழக்கங்களினால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது.
அதிக அளவில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோரும் முதுகெலும்பு பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.முதுகெலும்புக் கோர்வையில் நான்கு விதமான குறைபாடுகள் உண்டாகின்றன.
முதுகெலும்பு விலகுதல், ஆஸ்டியோ பொராசிஸ் என அழைக்கப்படும் கால்சியம் குறைபாடு, முதுகெலும்பு மூட்டுகளின் செயல்திறன் குறைதல் ஆகியவற்றால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது.
------------------------------------------------------------
World Rally Championship போட்டியில் Sebastien Loeb வெற்றி பெற்றார்
நேற்று நடைபெற்ற World Rally Championship போட்டியில் France நாட்டின் Citroen அணியைச் சேர்ந்த Sebastien Loeb வெற்றி பெற்றார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 3 மணி 55 நிமிடங்கள் மற்றும் 36.4 வினாடிகள் ஆகும்.
இப்போட்டியின் இரண்டாவது இடத்தை Finland நாட்டின் Peugeot அணியைச் சேர்ந்த Marcus Gronholm வென்றார். அவர் பதிவு செய்த நேரம் 3 மணி 55 நிமிடங்கள் மற்றும் 26.1 வினாடிகள் ஆகும்.
இதனிடையே, இப்போட்டியின் மூன்றாவது இடத்தை Subaru அணியைச் சேர்ந்த Petter Solberg வென்றார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி