PDA

View Full Version : இளசு அண்ணா



பாரதி
17-07-2005, 08:10 PM
தேதி இல்லா குறிப்புகள்
இளசு அண்ணா

என்னுடன் பிறந்தவர்கள் அனைவரும் தமக்கையர்கள் மட்டுமே. எனக்கு உடன் பிறந்த அண்ணனோ, தங்கையோ, தம்பியோ இல்லாததால் நான் வேலை பார்த்த இடத்தில், பெரும்பாலும் அனைவரையும், அண்ணன் என்றோ அண்ணாச்சி என்றோ தம்பி என்றோ அழைப்பது வழக்கம். என்றாலும் உண்மையிலேயே இவருக்கு நான் உடன் பிறந்த தம்பியாக இருக்கக்கூடாதா என்று ஏங்கியது வெகுசிலரை கண்டுதான். அப்படிப்பட்டவர்களை மட்டுமே "அண்ணா" என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.

வளைகுடாவில் அபுதாபியில் வேலை கிடைத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி, தனியாக வசிக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக காணாமல் போய்விட்டது. அப்போது மனதிற்கு ஆறுதலளித்த சில விசயங்களில் இணையத்தொடர்பும் ஒன்று. பொழுது போகாத நேரங்களில் யாருடனாவது, எதையாவது கதைப்பது என்பதிலிருந்து தமிழில் எழுதுவதையும், காண்பதையும் அறிந்து கொண்டதும், "தமிழ்மன்றம்" தளத்தை அறிந்து கொண்டதும் என்னை புதிய உலகத்தில் இருப்பதைப் போல உணர வைத்தது. தனியாக இருப்பதை மறந்து, ஒரு நண்பர்கள் குழுவில் இணைந்ததைப்போல, ஒரு குடும்பத்தில் வசிப்பது போல தமிழ்மன்றத்தில் இருப்பதை உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் தமிழ்மன்றத்தின் கண்காணிப்பாளர் அல்லது மட்டுறுத்துனர்களில் ஒருவராக இளசுவும் இருந்து வந்தார். மன்றத்தில் எல்லோருடைய பதிவுகளையும் படித்து, சில வரிகளாவது படைத்தவர்களை ஊக்குவித்து எழுதுவது என்பது அவருடைய வழக்கமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட மன்றத்தில் இருந்த அனைவருமே யார் பதிலளிக்கிறார்களோ இல்லையோ, தங்களது படைப்புகளுக்கு அவரது பதில் எப்போது வரும் என்பதைக்காண மிகுந்த ஆவலாக இருப்பார்கள்.

மன்றத்தில் இணையும் முன்னரே பல அருமையான கவிஞர்களும், கட்டுரையாளர்களும் தங்களது படைப்புகளை மன்றத்தில் பதிவு செய்திருந்தார்கள். புதிய தளத்தில் நாமும் ஏதாவது செய்தாக வேண்டுமென்று மற்றவர்களின் பதிவுகளில் கருத்து எழுதுவதை ஓரளவுக்கு செய்து வந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் அறிமுகமானதும், நட்புடனான கிண்டலும் கேலியும் சில பகுதிகளில் கொடி கட்டிப்பறந்தது. உற்சாகமடைந்த நான் மற்றவர்களின் படைப்புகளில் இருந்த விசயங்களை கொஞ்சம் விமர்சனமும் செய்யும் அளவுக்கு எனது "திறமை" வளர்ந்து விட்டதாக நினைத்தேன்.

ஒரு நண்பரின் பதிவில் கருத்துப்பிழையுடன் கூடிய ஒரு வாக்கிய அமைப்பைப் பார்த்தேன். உடனே அதைப்பற்றி விமர்சனம் செய்து பதில் கருத்து பதித்தேன். அதன்பின்னர் மன்றத்தின் வேறு பகுதிகளில் உலாவிக்கொண்டிருந்த போது நான் எழுதிய கருத்திற்கு பின்னர் இளசுவின் கருத்தும் பதிவானதைக் கண்டேன். என்ன எழுதி இருப்பார் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்தில் அங்கு சென்று அவரது கருத்தைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன்.

அதன் முழுமையான வாக்கியம் நினைவில் சரியாக இல்லை என்றாலும் அதன் முக்கிய கருத்து கீழ்வருமாறு : "முதலில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு வந்திருக்கிறோம் - வந்த இடத்தில் வேலையை ஒழுங்காக செய்கிறோமா என்பதில் கவனம் இருக்கட்டும். மன்றத்திற்கு வந்தோமா, படித்தோமா என்று இருங்கள். மன்றத்தில் மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில், கிண்டல் செய்து கருத்து எழுதுவதை நிறுத்துங்கள்".

அதைப்படித்ததும் உண்மையிலேயே எதுவும் புரியவில்லை. உடனடியாக என் மனதில் தோன்றியது எங்கே மன்றத்தில் இருந்து என்னை நீக்கி விடுவார்களோ என்கிற அச்சம்தான். எனது மனதும் மிகுந்த வேதனை அடைந்தது.

உடனே விளக்கமாக நான் எழுத்துப்பிழை இருந்த இடங்களில் எப்படி சுட்டிக்காட்டினேன் என்பதையும், கருத்துப்பிழை இருந்த இடங்களில் எப்படி சுட்டிக்காட்டினேன் என்பதையும் விரிவாக எழுதி, உண்மையிலேயே நான் யாரையும் கேலி செய்து கருத்தைப் பதிக்கவில்லை என்பதை உணர்த்துமாறு அவரின் பதிவிற்கு கீழே பதிக்க சென்றால் ...! அங்கே அவருடைய - என்னைக் குட்டிய - பதிவைக் காணவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பார்க்கும் போது இருந்த பதிவு பின்னர் எப்படி மறைந்தது என்று எனக்குப் புரியவில்லை.

ஆனாலும் நான் எழுதிய கருத்தையும், நான் பார்த்த அவரது பதில் பதிவு மறைந்து போனதையும் எடுத்துக்கூறி அவருக்கு தனிமடல் அனுப்பினேன். சில மணித்துளிகளில் அவரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. முதலில் கோபத்தில் அவ்விதம் எழுதியதாயும், பின்னர் அதைப்படித்து என் மனம் புண்படக்கூடும் என்பதால் எடுத்து விட்டதாகவும், அவர் நீக்குவதற்கு முன்னரே என் கண்களில் எப்படியோ பட்டு விட்டது என்பதைக்குறித்தும் எழுதி வருத்தம் தெரிவித்திருந்தார். என்னைத்தவறாக புரிந்து கொண்டு விட்டதாகவும், முன்பு பல உறுப்பினர்கள் கிண்டலாக எழுதியதால், அவ்விதம் அவருக்கு தோன்றியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பின்னரே நான் சற்று நிம்மதியடைந்தேன்.

யாருமறியா இந்த சிறு மோதலுக்கு பிறகு, அவர் என் மீது வைத்த நம்பிக்கையும் அன்பும் எல்லை இல்லாதது. அவ்வப்போது மன்றத்தில் கடிதப்பரிமாற்றங்களும் செய்து கொள்வோம்.

அதன் பின்னர் மற்ற வலைத்தளங்களில் இருந்து திரட்டிய சில வித்தியாசமான செய்திகளை ஒரு பதிவில் இட்டேன். அதில் குறிப்பிட்டிருந்த சில விபரங்கள் தவறானவை என்றும் , இது போன்ற விபரங்களை வெளியிடும் முன்னர் அவை உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்து வெளியிட வேண்டும் என்றும், நான் எழுதிய ஒரு வாக்கியத்தில் எழுத்துப் பிழை இருக்கிறது என்பதையும் அறிவுறுத்தி இருந்தார். அவ்வாறு அவர் எழுதிய வாக்கியத்தில் அவரறியாமல் எழுத்துப்பிழை ஒன்றும் வந்திருந்தது. தவறு என்றால் திருத்தி விடும்படியும், அவரது தம்பி என்பதால் பிழை என்பது அவரைப்போலவே எனக்கும் வந்து விடுகிறது என்றும் நகைச்சுவையாக சுட்டிக்காட்டி பதில் அளித்தேன். அதை மிகவும் ரசித்தார். அவர் பின்னர் அடிக்கடி பதிவுகளில் சொல்லும் வாக்கியமான " மானுடம் போற்ற மூளை வேண்டாம் - இதயம் போதும்" என்று சொல்லி என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி விட்டார்.

இப்போது இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும் - நான் தந்த விபரங்களில் அவர் தவறு என்று சுட்டிக்காட்டிய - "மனிதனின் உடலில் வலிமையான தசை - நாக்கு " என்ற அதே விபரத்தை பல மாதங்களுக்குப் பின்னர் பப்பி ஒரு பதிவில் வெளியிட்டார். அப்போது இளசு அண்ணா அதே விபரத்தை மிகவும் பாராட்டி எழுதி என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டார். இந்த சம்பவத்தை வலியுறுத்தியே நான் தமிழ்மன்றபுத்தாண்டு விழா தொடர் பதிவில் நகைச்சுவையாக எழுதி இருந்தேன். அதற்கும் தனியாக அண்ணனிடம் இருந்து பாராட்டு கிடைத்தது.

நண்பர் பூவுடன் அவருக்கு நல்ல நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

சில மாதங்களில் என்னுடைய தொலைபேசி எண்ணை கடிதம் மூலம் பெற்றுக்கொண்ட அவர் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை இரவு நேரத்தில் அழைப்பார். எங்களது பேச்சு அனைத்தும் மன்றத்தைப்பற்றியும், மன்றத்தின் உறுப்பினர்களைப்பற்றியும் மட்டுமே அமைந்திருக்கும். பல நண்பர்களைக் குறித்தும் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

தனது சொந்த விபரங்களை அவர் அதிகம் வெளிக்காட்டிக்கொண்டதில்லை. அவரது சொந்த ஊர் சென்னை விருகம்பாக்கம் என்றும் தற்போது இங்கிலாந்தில் பணி புரிந்து வரும் ஒரு ஆலோசனை முறை மருத்துவர் என்றும் கூறி இருந்தார். மற்றவர்களின் மனதைப்படிப்பதிலும் அவருக்கு ஆற்றல் இருந்தது. பல நேரங்களில் அவரது கணிப்பு மிகச்சரியாக அமைந்திருந்தது. அவருக்கு உணவைப் பற்றி அதிகம் கவலையில்லை - தயிர்சாதம் மட்டும் இருந்தாலே போதும் என்பார். கைபேசி அதுவரை உபயோகித்ததில்லை என்றும் உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் தொலைபேசி எண்ணைத் தருவதாகவும் எனக்கு உறுதி அளித்தார்.

அவரே எப்போதும் தொலைபேசியில் அழைப்பார் - பெரும்பாலான சமயங்களில் தனிமடலில் தொடர்பு கொள்ளப்போவதைக் குறித்து முன்பே தெரிவித்து விடுவார். என்னுடன் பேசுவதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பார். மிக எளிமையாக தங்கு தடையில்லாமல் உரையாடுவார். சில நேரம் மணிக்கணக்கில் உரையாடிக் கொண்டிருப்போம். அவருக்கு அதிகம் செலவாகுமே என்பேன். அவர் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டார்.

முழுமையாக ஆங்கிலவழி கல்வி பயின்றதாலோ என்னவோ அவருக்கு தமிழ் மேல் மிகுந்த பற்று. பல கட்டுரைகளிலும், கவிதைகளிலும் அவரது திறமை நன்கு பளிச்சிடும். தான் கூற வந்ததை படிப்பவர் மனதில் தங்கும் படி எழுதுவதிலும் அவர் வல்லவர். சமையற்கலை, பாடல்கள், நகைச்சுவை போன்ற பல பகுதிகளிலும் அவரது பங்களிப்பு இருந்து வரும்.

அவரே ஒரு முறை - மன்றத்தில் பதிவுகள் குறைந்த நேரத்தில் - எங்களது உரையாடல்கள் குறித்து விரும்பினால் எழுதிக்கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்தார். அந்த நேரத்தில் மன்ற உறுப்பினர்களின் சந்திப்பு குறித்து சுவாரஸ்யமான பதிவுகள் சில வந்திருந்தன. ஆனால் என்ன காரணத்தாலோ எனக்கு எழுத வேண்டும் என்கிற ஆவல் வரவில்லை.

ஒரு முறை தொலைபேசி குறித்து உரையாடிக்கொண்டிருக்கும் போது, குடும்பத்தினர் விடுமுறையில் இருந்த நாட்களில், படிப்பிற்காக அந்த நாட்டில் வந்து தங்கி இருக்கும் மாணவர்களுக்கு தன் வீட்டில் இலவசமாக இடமளித்திருந்ததை தற்செயலாக அவர் குறிப்பிட்டார்.
எனக்கு கவிதை எழுதுவதில் எந்தவிதமான பயிற்சியும் இருந்ததில்லை - சில நேரங்களில் நாட்குறிப்பில் கிறுக்கியிருக்கிறேன் என்பதைத் தவிர. இருந்தாலும் ஒரு முறை எழுதிப்பார்க்கலாமே என்கிற எண்ணம் வளர்ந்த போது, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 'வாழ்வுரிமைப் போராட்டம்' என்று ஒன்றை எழுதினேன். பல பெரிய எழுத்தாளர்கள் எழுதும் கவிதைகளைப்படிக்கும் போது நாமெல்லாம் அப்படி எழுத இயலுமா என்கிற ஐயப்பாடும் தயக்கமும் வரும். அதன் பின்னர் கவிதைப்பக்கங்களைப் படிப்பதுடன் சரி. சில நேரங்களில் சில கவிதைகளைப் படித்தவுடன், இதற்கு இப்படி பதில் எழுத வேண்டும் என்று தோன்றினால் உடனே பதில் எழுதிவிடுவேன்.

லாவண்யா அவர்களின் 'பிடித்த கவிதை முத்தம்' என்கிற கவிதைக்கு பதிலாக வந்த கருத்துக்கள் அனைத்தும் கவிதைகளாகவே மலர்ந்தன. அதில் சில சமயங்களில் அவர் எழுதும் கவிதைகளுக்கு போட்டியாக ஏதாவது எழுத வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக நானும் சில பதிவுகள் எழுதினேன். அவருடன் ஒரு முறை பேசும் போது அதைப்பற்றியும் அவர் குறிப்பிட்டார். வேண்டுமென்றே சில பதிவுகளை எழுதி, அதற்கு என்னுடைய பதில் பதிவுகள் இப்படித்தான் வருமோ என்கிற ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருந்ததாகவும் கூறி இருந்தார்.

கவிஞர் மீரா அறக்கட்டளை [ என்று நினைக்கிறேன் ] நிதியாக அன்பு நண்பர் இசாக் திருமணத்தின் போது கவிக்கோவிடம் மணியா அண்ணா, பூ, சேரன் ஆகியோர் மூலம் ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக தந்தார். அதைப்பற்றிய விபரமே பின்னர் நண்பர் பூ-வால்தான் தெரிய வந்தது. செய்வதை விளம்பரப் படுத்திக் கொள்ளாத என்ற அவரது எண்ணம் என்னை மிகவும் கவர்ந்தது.

தமிழ்மன்ற நண்பர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று சேர வேண்டும் என்றும் அன்றைக்கு ஆகும் செலவு முழுமையும் தானே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் வெளிப்படையாகவே அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தது எந்த அளவுக்கு அவர் தமிழ்மன்றத்தையும் நண்பர்களையும் நேசித்தார் என்பதற்கு சான்று.

முத்துவையும் என்னையும் அவர் அளவுக்கதிகமாக பாராட்டுவார் என்பது பலருக்கும் தெரியும். நான் அவரிடம் இதைக்குறித்து பலமுறை முறையிட்டும் பலனில்லை. தாம் செய்வது சரிதான் என்று வாதிடுவார். தமிழ்மன்ற உறுப்பினர்களில் சிலரைப் போல என்னையும் தம்பி என்றே எப்போதும் அழைப்பார். ஒரு முறை நண்பர் ஒருவர் காரணமின்றி என்னை நையாண்டி செய்த போது, இளசு அண்ணாவின் பதிவில் கோபத்தை காண முடிந்தது. நான் அதைக்குறித்து அவருடன் பேசும் போது அப்படிக்கோபப்படுவதைத் தவிர்த்திருக்கலாமே என்று கூறியதற்கு, எல்லா நேரத்திலும் அவ்விதம் பொறுமைக்காக்க இயலாது என்று தெரிவித்தார். சில கவிதைகளிலும் அவரது கோபம் வெளியானது.

எந்த அளவுக்கு அவர் நேசிப்பு இருந்ததோ, அந்த அளவுக்கு அவருடைய கோபத்திலும் மிகுந்த நியாயம் இருக்கும். சில குறிப்பிட்ட உறுப்பினர்களைக் குறித்து அவருடைய கோபம் அவரளவில் சரியானதாகவே இருந்தது. அவர் அடைந்த மன வருத்தத்தை பற்றியும் ஒரு முறை கோடிட்டு காட்டினார். இதைப்பற்றி தற்போது அதிகம் சொல்வதற்கில்லை.

அன்பு நண்பர் இசாக் அவர்கள், ஒரு தமிழ் வலைத்தளத்தின் பொங்கல் வெளியீடுக்காக சிறுகதை ஒன்று எழுதித்தருமாறு அன்புக்கட்டளை இட்டார். அதுவரை எனக்கு எப்படிக்கதை எழுதுவது என்பதே தெரியாது. ஆரம்பத்தில் மறுத்தாலும், ஒரு வழியாக சில தினங்களுக்குப் பிறகு ஒரு கதையை எழுதி அவருக்கு அனுப்பினேன். அதன் பிரதியை இளசு அண்ணனுக்கும் அனுப்பினேன். நண்பர் இசாக்கிடம் அந்தக்கதை குறிப்பிட்ட இதழில் வந்த பின்னர் தமிழ்மன்றத்திலும் அதை பதிக்க வேண்டும் என்கிற விருப்பத்தைச் சொன்னேன். பின்னர் ஏதோ காரணத்தால் அந்த பொங்கல் வெளியீடு வரவில்லை. ஆகவே என்னுடைய கதையும் வரவில்லை. மிகுந்த காலதாமதம் ஆனதால் இசாக்கிடம் கூறி விட்டு தமிழ்மன்றத்திலேயே 'எனது முதல் முயற்சி' எனக்குறிப்பிட்டு அந்த 'மாற்றங்கள்' கதையை பதித்தேன். அதற்கு பின்னர் நான் எழுதுவது முதலில் தமிழ்மன்றத்தில் வந்தால் மிகவும் மகிழ்வேன் என்று அண்ணா தெரிவித்தார். இன்று வரை அவர் சொல்லை மதித்து வந்திருக்கிறேன். என்னுடைய கிறுக்கல்கள் அனைத்தும் தமிழ்மன்றத்தில்தான் முதலில் வந்திருக்கின்றன.

ஒரு சில வாரங்கள் யாரேனும் வரவில்லை எனில் மிகுந்த கவலைப் படுவார். ஒரு சமயம் அவர் மன்றத்தில் விடுப்பு சொல்லாமல் சென்ற சில தினங்களில் அவரைக்காணவில்லை என்று தேடி வந்த பதிவுகள் பல. அவரே மன்ற உறுப்பினர்களின் அன்பில் திண்டாடிப் போய் " இனி மன்றத்தில் சொல்லாமல் எங்கும் செல்ல மாட்டேன்" என்று சொன்னார். மிகச்சில சமயங்களில் எங்காவது கூட்டத்திற்கு செல்வதென்றால் மின்னஞ்சலில் அது குறித்து விளக்கி எழுதி இருப்பார்.
மன்றத்தில் வெளிவந்து கொண்டிருந்த " இந்த மாத சிறந்த பங்காளர்" பகுதியை மிகச்சிறப்பாக அவர் செய்து வந்தார். ஒரு சமயம் ஏதோ காரணத்தால் அவர் வராமல் இருந்த போது, குறிப்பிட்ட நாளில் அத்தகவல் வராமல் இருக்கக்கூடாதே என்கிற காரணத்தால் நான் தொடர நேர்ந்தது.

தமிழ்மன்ற நண்பர்கள் அனைவரையும் மிகவும் நேசித்த அந்த அன்புள்ளம், சென்ற வருடம் டிசம்பர் திங்கள் சுனாமித் தாக்குதலுக்கு முன் தினம் வந்ததாக மன்றத்தில் உள்ள சான்றுகள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் சுனாமி பேரலையால் தமிழகம் பாதிக்கப்பட்டது. இளசு அண்ணன் வராததால் தமிழ்மன்ற மனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர் வராததாலேயே பல நண்பர்கள் சோர்வடைந்து மன்றம் வருவது குறைந்தது. பல நண்பர்களும் சந்திக்கும் போது தவறாமல் கேட்கும் கேள்வி " இளசு அண்ணாவுக்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் வரவில்லை?" என்பதுதான்.

குறுகிய காலப் பழக்கம் என்றாலும், இது வரைப் பார்த்ததில்லை என்றாலும் மனதில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. அவரைத் தொடர்பு கொள்ள நான் எடுத்த முயற்சிகளில் இதுவரை வெற்றி கிட்டவில்லை. என்ன காரணத்தால் அவர் வரவில்லை அல்லது வர இயலவில்லை என்று தெரிந்தாலாவது சற்று ஆறுதலாக இருக்கும். ஏழு மாதங்களாக மன்றம் செல்லும் ஒவ்வொரு முறையும் தவறாமல் அவர் வந்திருக்கிறாரா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். நினைப்பவற்றை எல்லாம் எழுத்தில் கொண்டு வர முடிவதில்லையே..?? ஏன் அண்ணா... எங்களைக் காண வரமாட்டீர்களா..?

தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்

aren
18-07-2005, 01:10 AM
பாரதி அவர்களே,

அருமையான பதிப்பு. இளசு அவர்களை காணவில்லை என்று ஒவ்வொரு நாளும் கவலைப்படுபவர்களில் நானும் ஒருவன். அவர் நம் மன்ற உறுப்பினர்கள் பலரிடமும் நட்பு வைத்திருந்தார்.

எங்களுடைய தனிமடல் பரிவர்த்தனையில் ஒரு நாள் நான் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து செல்லப்போகிறேன் என்று சொன்னவுடன் நாம் எப்படியாவது சந்தித்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் லண்டன் மட்டுமே இங்கிலாந்தில் செல்வதாகவும் அதுவும் ஒரு நாள் மட்டுமே தங்கப்போவதாகவும் சொன்னேன். அவர் மான்சஸ்டர் அருகில் இருப்பதாலும் மேலும் அவருக்கு அன்று ஆலோசனைக்கூட்டம் இருப்பதாலும் தன்னால் லண்டன் வர இயலாது என்று சொல்லிவிட்டு நான் அயர்லாந்தில் தங்கியிருந்த ஓட்டலுக்கு போன் செய்து பேசினார். எனக்கு கிடைத்த மிக சிறந்த நண்பர்களுள் இவரும் ஒருவர்.

இளசு அவர்கள் பல நாட்கள் மன்றம் வராததால் நான் அவர் வேலை செய்யும் இங்கிலாந்து மருத்துவமனை போன் செய்தேன் அப்பொழுது அவர்கள் இளசு அவர்கள் அயர்லாந்தில் ஒரு மருத்துவமனையில் இருப்பதாகவும் சொல்லி அந்த மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை எனக்கு கொடுத்தார்கள். நான் அந்த மருத்துவமனைக்கு போன் செய்து இளசு அவர்களுடன் பேசினேன். அப்பொழுது அவர், ஒரு ரிஸர்ச் பிராஜெக்ட் விஷயமாக இங்கே வந்ததாகவும் ஒரு ஆறு மாதம் அயர்லாந்திலேயே தங்கப்போவதாகவும் கூறினார். அந்த ஆறுமாதம் இப்பொழுது முடிவடைந்துவிட்டது.

என்ன காரணத்தினாலோ அவர் இன்னும் மன்றம் வரவில்லை. அவருடைய பிராஜெக்ட் இன்னும் முடியவில்லையோ என்னவோ?

மற்ற மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொன்றாக திரும்பி வந்து கொண்டிருப்பதால், இளசு அவர்கள் கூடியவிரைவில் மன்றம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

அவர் வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம், அதுவே மற்ற மன்ற நண்பர்களின் விருப்பமாகவும் இருக்கும் என்று நிச்சயமாகத் தெரியும்.

நன்றி வணக்கம்
ஆரென்

Mano.G.
18-07-2005, 01:15 AM
தம்பி பாரதி,
நண்பர் இளசு அவர்களை மன்றத்தில் அவரது
ஊக்கமூட்டும் பதில்களை காணாதது என்னையும் சோர்வடைய செய்துள்ளது
அவரின் பதிப்புகளுக்கு நான் விமர்சனம் எழுதும் பொழுதும் பாராட்டும் பொழுதும் "எனது முன்னோடி" என எனையும் திரும்ப பாராட்டி மகிழ்ந்த உள்ளம் அது. இந்த மன்றத்தில் நாம் அனைவரும் உறவுகளே என அனைவரையும் ஒரு பந்ததில் இணைத்தது அவரே.
அவரை மன்றத்தில் மீண்டும் காண மிக மிக ஆவலாய் உள்ளவர்களில் நானும் ஒருவன்.

மனோ.ஜி

சுவேதா
18-07-2005, 01:51 AM
பாரதி அண்ணா எனக்கு இளசு அண்ணா பற்றி தெரியாது உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அன்பான அண்ணாவுடன் நான் ஒரு நாளும் கதைத்தது கிடையாது காரணம் நான் புதியவர். அண்ணா எப்பொழுது வருவார் அவருக்காக நானும் காத்திருக்கிறேன்!

aren
18-07-2005, 02:35 AM
சுவேதா அவர்களை, கவலை வேண்டாம். கூடியவிரைவில் இளசு அவர்கள் மறுபடியும் மன்றம் வந்து நம்மை மகிழ்விப்பார் என்று நம்புவோம்.

பரஞ்சோதி
18-07-2005, 04:22 AM
பாரதி அண்ணா, உங்க மனசில் இருப்பதை அப்படியே சொல்லிட்டீங்க, எனக்கும் சொல்ல ஆசையாக இருக்குது.

என்னை தமிழ்மன்றத்திற்கு அழைத்து வந்ததே இளசு அண்ணா தான். இணையத்தில் கண்ணை கட்டி காட்டில் விட்ட போது கிடைத்த மிகப்பெரிய வழிகாட்டியாக இளசு அண்ணா திகழ்ந்தார்.

பாசத்தோடும், கண்டிப்போடும் நடந்துக் கொள்ளும் அவர் ஒர் ஆசான். மன்றம் தவிர்த்து குடும்ப வாழ்க்கை பற்றியும் ஆலோசனை செய்யவும், அறிவுரை வழங்கவும் அவரைப் போல் ஒர் அண்ணா கிடைப்பாரா என்று தெரியவில்லை.

தினம் தினம் அவரை காணாது தவிக்கும் உள்ளத்தில் நானும் ஒருவன்.

அவரை மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். காலம் நல்ல பதில் சொல்லும் என்று நம்புகிறேன்.

mania
18-07-2005, 04:23 AM
யார் என்ன சொன்னாலும் இளசு இல்லாமல் மன்றம் பொலிவிழந்து தான் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை......பழைய நினைவுகளை கிண்டி என்னை சோகத்தில் ஆழ்த்திவிட்டாய் பாரதி....ஆரென் தன் முயற்சியை கைவிடாமல் மீண்டும் மீண்டும் இளசுவிடம் தொடர்பு கொண்டு எப்படியாவது அவரை மீண்டும் மன்றம் வரவழைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
மணியா....

poo
18-07-2005, 06:43 AM
வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வுகள்..

அவரை நினைக்காத நாளில்லை..
(மன்றமே வந்திராத என் மனைவிகூட தினமும் கேட்பாள்.. இளசு அண்ணன்
வருகிறாரா என..)

அண்ணன் மீண்டும் வரவேண்டும்... வருவார்!!

தலை சொல்வதைப்போல எல்லோருக்குமுள்ள உள்ள சோகத்தை உலக உருண்டையாய் உருவெடுக்க வைத்துவிட்டீர்கள் பாரதி!

உருகிக் கேட்கிறோம் அண்ணா.. வேறு உருவிலாவது
எங்களுடன் உலாவுங்கள்.. உங்கள் வரிகளும்.. வார்த்தைகளும்
போதுமெங்களின் உற்சாகத்திற்கு!

baranee
18-07-2005, 01:39 PM
இளசு அவர்கள் பல நாட்கள் மன்றம் வராததால் நான் அவர் வேலை செய்யும் இங்கிலாந்து மருத்துவமனை போன் செய்தேன் அப்பொழுது அவர்கள் இளசு அவர்கள் அயர்லாந்தில் ஒரு மருத்துவமனையில் இருப்பதாகவும் சொல்லி அந்த மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை எனக்கு கொடுத்தார்கள்.

இப்பதான் இருவாரங்களுக்கு முன் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தினை சுற்றி இருவார பயணம் செய்தோம்.
முதலிலேயே தெரிந்திருந்தால் சந்திக்க முயற்சி செய்திருப்பேன்.

பாரதி
18-07-2005, 05:42 PM
இங்கு வந்திருக்கும் பதிப்புகளைப் பார்த்தாலே தெரிகிறது அவருடைய பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதென்று.. மனதில் அடங்கிக்கிடக்கும் நினைவுகள்தான் வெளி வந்திருக்கிறதே தவிர யாரையும் வருத்த அல்ல. உங்களுடைய கருத்துக்கள் பார்த்து அண்ணன் வருவாரேயானால் அதை விட மகிழ்ச்சியான செய்தி வேறொன்றும் இருக்கப்போவதில்லை. அல்லவா..??

அன்பு ஆரென், தயவு செய்து நீங்கள் தொடர்பு கொண்ட அந்த மருத்துவமனையின் தொலைபேசி எண்களையோ அல்லது அவரைத் தொடர்பு கொள்ள உதவும் வேறு எண்கள் ஏதேனும் இருந்தாலோ எனக்கு தனிமடலில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பி உதவ முடியுமா..?

பரஞ்சோதி
19-07-2005, 04:28 AM
பாரதி அண்ணாவின் மூலமாக இளசு அண்ணா மீண்டும் நம்மிடம் வந்து சேருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பாரதி அண்ணா, உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

gragavan
19-07-2005, 06:21 AM
பாரதியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

இளசு அவர்கள் மீண்டும் மன்றத்திற்கு வந்து உலாவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவருடன் பழக்கமில்லை எனக்கு. இருந்தாலும் மன்றத்து உரிமையில் அழைப்பு விடுகிறேன்.

மன்மதன்
20-08-2005, 08:25 AM
இளசு கண்டிப்பாக மன்றம் வருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பல பேரை மன்றத்தில் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். அதில் நானும் ஒருவன். கண்டிப்பாக வரவேண்டும்.. அந்த நாளை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
மன்மதன்

kavitha
22-08-2005, 06:41 AM
இளசு கண்டிப்பாக மன்றம் வருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பல பேரை மன்றத்தில் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். அதில் நானும் ஒருவன். கண்டிப்பாக வரவேண்டும்.. அந்த நாளை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
மன்மதன்

உண்மைதான் மன்மதன்; மன்றம் வரும்போதெல்லாம் புற்றீசல் நினைவுகளாய் மனம் குடைகிறது. காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் வாருங்கள் அண்ணா.

பாரதி
22-03-2008, 08:22 AM
கருத்தளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

சுகந்தப்ரீதன்
22-03-2008, 09:22 AM
மேலெழுப்பியமைக்கு மிக்க நன்றி பாரதி அண்ணா..!!

இளசு அண்ணா சிலகாலம் விடுமுறையில் செல்வதாக அறிவித்திருக்கும் இந்த வேளையில் இளசு அண்ணாவுடனான உங்கள் அனுபவங்களை படிக்க தந்தமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...!!


கருத்தளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

ஏனிந்த காலதாமதம் தங்களுக்கு என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது உங்களிடத்தில் உதிப்பதுண்டு பாரதி அண்ணா..!!

poornima
31-03-2008, 04:52 PM
பத்தாயிரம் தாண்டிய பதிவுகள்.. அவரைப் பற்றி எவ்வளவோ தெரிந்து
கொள்ள ஆவலாய் இருக்கிறது மேற்கண்ட நண்பர்கள் அனைவரது பதிவுகளில் இருந்தும்..

ஓவியன்
02-04-2008, 07:55 AM
பத்தாயிரம் தாண்டிய பதிவுகள்.. அவரைப் பற்றி எவ்வளவோ தெரிந்து
கொள்ள ஆவலாய் இருக்கிறது..

மன்றத்துடன் தொடர்ந்தே இணைந்திருங்கள் பூர்ணிமா அண்ணலைப் பற்றி நீங்களே நிறைய விடயங்களை அறிந்து கொள்வீர்கள்..!! :)