PDA

View Full Version : மன்றத்து காட்சிப் பாவும் - கவிப் பார்வையும்



kavitha
04-07-2005, 05:42 AM
கவிதைகள் எழுதுவது சுமக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் சுகம் என்றால்
வாசிப்பது, பூவுக்குள் நம்மை பூட்டிக்கொண்டு தூங்குவது போன்ற சுகம்... முன்னதைவிட பின்னது அலாதியானது.
களைப்பு தெரியாமல் வாசித்துக்கொண்டே செல்லச் சொல்வது ஒரு நடை என்றால்
ஒரு வரியின் முற்றுப்புள்ளிக்கு முன்பே நம்மை மூர்ச்சையாக்குவது ஒரு சில நடை.
அப்படி ஒற்றை வரிக்குள்ளே ஒருமணி நேரத்தை தொலைத்த நாட்களும் உண்டு.
இங்கே நம் மன்றத்தில் படித்த காட்சி பாக்களில் எனது பார்வையை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
இதை ஆரம்பித்து தினம் ஒரு காட்சிக் கவிதையாவது பதித்து நித்தம் ஒரு அழகை ரசிக்கச் செய்த இளசு அண்ணாவிற்கு எனது
தாழ்மையான நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இளசு அண்ணா மீண்டும் காட்சிக் கவிதைகள் எழுதும் நாளை ஆவலோடு எதிர் நோக்கி.. இதைப்பதிக்கிறேன்.




படுக்கையை உதறினேன்
நொறுங்கி விழுந்தன
கனவுகள் - பப்பி

மன்றத்தில் பார்த்த மட்டிலும்
பப்பி அவர்கள் தந்த குறும்பாக்கள் நெத்தியடிகள்
இந்தக் குறும்பாவைப் பார்க்கும்போது
இழப்பினைச் சொல்வதாக தோற்றம் தந்தாலும்
உற்று நோக்கும்போது நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் உள்ளது.
இதன் ஒரு அர்த்தம் படுக்கையை விட்டு எழும்போது கனவுகள் அத்தோடு கரைந்துபோகின்றன
என்பதாகவும்,
படுக்கையை உதறினேன் - தூக்கத்தையே தவிர்த்தேன்
நொறுங்கி விழுந்தன கனவுகள் - கனவுகள் முற்றிலும் போனது, இனி எல்லாமே சாத்தியம் தான்
என்பதாக அமைந்துள்ளது.




நொறுங்கிய கனவுகளை
கண்ணாடிப் புட்டியில் அடைத்தனர் -
சோதனைச் சாலையில் நான்.
- நண்பன்

விருப்பமில்லாத பாடத்தில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோரின் நிலை தான்
இந்தக்கவிதை படித்ததும் எனக்கு தோன்றியது.


மறுஜென்மமோ
இடுகாட்டில்
பூக்கள்
- பப்பி

பூக்கள் வழி ஓரத்திலும் பூக்கின்றன. பூஜைக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
ஆனால் இவரது உவமையைப்பாருங்கள்!
இடுகாட்டுப்பூக்களெல்லாம் இறந்த மனிதர்களின் மறு ஜென்மமாய் தெரிகிறது!
எத்தனை அழகு! இனி "பூக்களைப்பறிக்காதீர்கள்" என்று இங்கேயும் கூட படம் வைத்துவிடலாம்.


படித்துக் கொண்டிருந்தான்
நடுச்சாமம் கழிந்த பின்பும் -
நித்திரை கொள்வதெப்படி?
- நண்பன்

சமீபத்தில் இதே போல் ஒரு குறும்பா படித்தேன்:

"பிரசங்கம் நடக்கிறது
அமைதியாக இருப்பது எப்படி?"

முன்னுக்குப்பின் முரணான காட்சிகள்;
அபத்தமாகத் தோன்றினாலும் அங்கேயே அறியாமையின் இறுதியும் விழிப்புணர்வின்
ஆரம்பமும் தோன்றிவிடுகிறது.
கேள்விகள் எப்போது தோன்றுகின்றன என்றால் பதில் தேவைப்படும்போது...
ஆனால் இங்கேயோ பதில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கேள்வி
எனில், என்ன அர்த்தம்? அங்கே அந்த பதில் போதுமானதாக இல்லை என்பது தானே!


புள்ளகுட்டிக்கு
கஞ்சி ஊத்த மரம் வெட்டினான்
மரத்தில் குஞ்சுகள்
- சிறுதுளி

வாழ்க்கைச்சக்கரத்தை 3 வரிகளில் சொல்லிவிட்டார் சிறுதுளி.
இவரது துணுக்குக்கவிதைகள் துளி என்றாலும் ஆழம் அபாரமானது.

குருவிகளுக்கு புழு கிடைத்தது
கூட்டில் தேடுமோ
பட்டாம்பூச்சி?


வீட்டைக் கூட்டினேன்.
குப்பையானது
தெரு.
- மதுரைக்குமரன்

நடைமுறையில் நிகழ்வதை அப்படியே முரண்காட்சிப்பாவில் சொல்லியிருக்கிறார்.
எங்கோயோ நிகழும் சுத்தம், இன்னொன்றில் அழுக்கு.
நேர்மறையும் எதிர்மறையும் இருக்கும், இல்லாது போனால்
இருப்பது இல்லாது போகும்.


பல முறை படித்தும்
புரிந்ததே இல்லை
பெண் -அகராதி..


இவர் பெயர் மட்டுமல்ல; கவிதையும் அதையே கூறுகிறது.
குறும்புத்தனமாக ரசித்தாலும், அகராதியிலே இல்லாது போனால்
எங்கே தேடுவது? வார்த்தையே அர்த்தம் சொல்லுமா?


தீண்டதகாதவன் தண்ணீர் ஊற்றுகிறான்
தீட்டு பார்க்கமால் குடிக்கிறான்
இளநீர் - பப்பி

இன்றும் நடக்கும் அவலம் இது! பலமுறை நானே
நேரில் பார்த்திருக்கிறேன்.
பல தலைமுறைகளாக இப்படிக் கை கட்டியவர்கள்
செல்வத்தால் உயர்ந்த பிறகு கைக் கொட்டவைத்திருக்கிறார்கள்.
வளர்க செல்வம்! வாழட்டும் வையகம்!!


அனுமதி இலவசம்
போக மட்டும் பயம்
மரணம்
- பப்பி

மீண்டும் ஜென்மம்
இல்லாதுபோனால்
பயமின்றி வருவேன்



என் முகமூடிகள் வசை பாடுகின்றன
மீண்டும் அணியவில்லை
என்பதற்காக!! -சோழியன்

முகமூடிகள் மட்டுமல்ல,
முகத்தைப் பார்ப்பவர்களும் கூட
சில சமயம் வசைபாடக்கூடும்... எ.கா. நடிக, நடிகைகள்

ஜோதிடக் காரரிடம்
கை காட்டினான்
முகத்தில் கவலை ரேகைகள்
- சிறுதுளி
பெரும்பாலான ஜோசியர்கள் கதை விடுவது இந்த ரேகைகளைப்
பார்த்து தான்! முதல் கவலையே அவருக்கு எவ்வளவு
தரவேண்டுமோ என்பதாகத்தான் இருக்கும் :)


இரப்பர் மரங்களுக்கிடையே
பால் எடுக்க......
காலில் செருப்பில்லாமல்.
-சிறுதுளி

இருந்தும் இல்லாமல்....

உழைப்பவன் உண்ணுவதில்லை
நெய்பவன் உடுத்துவதில்லை
கட்டுமரக்காரன் கரைசேர்வதில்லை
ஏணிகள் ஏற்றிவிட மட்டும் தானோ!

எங்கே அடக்கம் தன்னைக்காட்டிக்கொள்வதில்லையோ
அங்கேயே அது உயர்வு பெறுகிறது.
காட்டிக்கொள்ளாததைக் காண்பது அரிது.


காலையில் மேஜையில்
செய்தித்தாளும், காபியும்
நான் கலக்கு கலக்கு என......
- பப்பி

இதைப்படித்ததும் வாய்விட்டு சிரித்தேன். சில பேருக்கு
இது இரண்டும் இருந்தால் தான் இரண்டே இருக்கமுடியும்!
மூன்றாவது வரியை மீண்டும் படியுங்கள்.

புகைப்படம்...........

பழுப்பாக நினைவுகள்
வீட்டுச் சுவற்றில் தொங்குகிறது -
நிஜங்கள் கல்லறையில்....
- நண்பன்

நினைவுகள் பழுப்பானால்
மனம் எப்போது வெள்ளையாகும்?

நீயே நினைவானால்
கல்லறையில் கூட தூக்கமில்லை



தலைமுறை கோபம்
இடிவிழ இடிவிழ
அதிரும் பாறை
- பப்பி


தலைமுறைத் தலைமுறையாய் கல்லாய்
இருந்ததினால் கோபமோ?

கல்லுடைக்கும் சிறுவனின்
தலைமுறைக் கோபமோ?



- இன்னும் வரும்...

என்றும் நட்புடன்,

கவிதா

thempavani
04-07-2005, 09:39 AM
நல்ல முயற்சி கவிதா...மன்ற நண்பர்களின் கவிதையும் தங்களின் விளக்கமும் நன்று..தொடருங்கள்...

பாரதி
04-07-2005, 02:51 PM
கடினமான பணி.. ஈடுபாடு இல்லாவிட்டால் இப்படிப்பட்ட செயலை செய்வது மிகவும் கடினம். ஒவ்வொரு கவிதையையும் உங்கள் பார்வையில் காண்பதில் மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது. அண்ணனின் கவிதைகளை மீண்டும் உங்கள் பார்வையில் தந்திருப்பதற்கு என் தனிப்பட்ட முறையில் நன்றி. உங்கள் பார்வை அனைவருடைய கவிதைகளின் மேலும் பட வாழ்த்துக்கள்.

kavitha
14-07-2005, 03:42 AM
தேம்பா, பாரதி - தொடர்ந்து பதிக்க உதவும் உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றிகள் பல

ஆதவா
09-08-2007, 12:11 PM
நல்ல நறுக். கவிதைகள் கவிதா... எல்லாமே ரசிக்கத் தக்கனவாக இருந்தன..

ஓவியா ஒரு குறும்பா எழுதியிருந்தார்..

ஆசைக்கு எச்சமாக்கினான் ஒருமுறை
நாளிதழ்களோ காசுக்குப் பலமுறை
- கற்பழிக்கப்பட்டவள்

மன்றத்தில் சமகாலத்தில் நான் மிகவும் ரசித்த குறும்பா.. பாவில் தேர்ந்தவர்கள் மன்றத்தில் இல்லாத காரணத்தினால் என்னைப் போன்றவர்களின் வளர்ச்சி கெடுகிறது....

அருமையான நினைவுகள்....

இளசு
21-04-2011, 10:24 PM
பாரதிதாசன் கவிதைகள் திரிதேடி வந்தவன் பார்வையில் பட்டது தங்கை கவிதாவின் பா-இரசனைத் திரி..

நுண்ணிய இரசனைகளை வளமாய் வடிக்கவல்ல கவிதா..

நலமா கவீ?