PDA

View Full Version : சென்னை உண்ணாநிலை அறப்போர்!!



இளையவன்
29-06-2005, 04:38 AM
இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் நேற்று பாரிய உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர்.


சென்னை தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை எதிரே நேற்று காலை 10.30 மணிக்கு இந்த உண்ணாநிலை அறப்போர் தொடங்கியது.

முதலில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் இந்த உண்ணாநிலை அறப்போருக்கு முன்னிலை வகிக்குமாறு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழின உணர்வாளர் புதுக்கோட்டை பாவாணன் ஆகியோரை கேட்டுக்கொண்டர்.


http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628005.jpg

இன்றைய உண்ணாநிலை அறப்போர் ஏன் நடத்தப்படுகிறது, இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தால் தமிழீழத் தமிழர்களுக்கு ஏற்படப் போகும் துன்ப துயரங்கள் குறித்து சுருக்கமாக ஒரு அறிமுக உரையாற்றிய தொல். திருமாவளவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசனை இப்போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்ற அழைப்பு விடுத்தார்.

உண்ணாநிலை அறப்போரை தொடங்கி வைத்துப் பேசிய பெ. மணியரசன், சிறிலங்காவிற்கு எந்த நாட்டிடமிருந்தும் ஆபத்து இல்லாத சூழ்நிலையில் எதற்காக இந்திய அரசு இராணுவ ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது? ஒட்டுமொத்த தமிழினத்தை அழிப்பதற்காக, முதலில் தமிழீழத் தமிழினத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டுத் தமிழனையும் அழிக்கவே இந்திய-சிறிலங்கா இராணுவ கூட்டுறவு ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவசியம் எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இந்த இராணுவ ஒப்பந்தங்களுக்கு முன்னதாக இந்திய-சிறிலங்கா இராணுவ தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு இருநாடுகளும் ஏற்கனவே இராணுவ பரிமாற்றங்களை செய்து கொண்டு இருக்கின்றன என்றும் தெரிவித்த அவர், சிங்களப் பேரினவாதிகளை தமது கட்சி மாநாடுகளில் பங்கேற்க வைத்த இந்திய இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் செயலை வன்மையாகக் கண்டித்தார். இந்தியாவின் இச் செயலால் இலங்கையில் இன்னொரு போர் மூண்டால் தமிழீழக் குடியரசு உருவாவது நிச்சயம் அது இந்தியாவில் தனித்தமிழ்நாடு உருவாக விதை விதைக்கும் என்றும் எச்சரித்தார்.

http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628006.jpg


இயக்குநர் சீமான் பேசுகையில், இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் ஏற்பட்டால் தமிழ்நாடு காஸ்மீராவது தவிர்க்க இயலாதது. நாங்கள் இந்தியாவுடன் இருப்பதா இல்லையா என்பதை இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்த பிரச்சனை மூலம் இந்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

பின்னர் இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இம்முழக்கங்களை தொல். திருமாவளவன் எழுப்ப குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் உரத்து முழக்கமிட்டனர்.


http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628007.jpg

வீரவணக்கம் வீரவணக்கம் ஈழ விடுதலை களத்திலே இன்னுயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம். கைவிடு கைவிடு இந்திய அரசே இந்திய அரசே இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தைக் கைவிடு. அனுமதியோம் அனுமதியோம் சிங்களவருக்கு ஆதரவாக தமிழருக்கு எதிராக செயல்பட அனுமதியோம் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் விண்ணதிர எழுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து பேசிய ஓவியர் வீரசந்தானம், தமிழீழத்தில் அனைத்துத் துறைகளும் உருவாக்கப்பட்டு மிகச் சிறந்த நிர்வாகம் அங்கே நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகளில் படிக்கிறோம். தமிழீழம் என்பது அங்கீகரிக்கப்படாத ஒரு நாடாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தச் செய்தி எங்கள் நெஞ்சை படபடவைக்கிறது. ஏனென்றால் எங்கள் கண்முன்னே குதறப்பட்ட குட்டிமணி முன்தெரிகிறார்... அதனால் எங்கள் நெஞ்சுபடபடக்கிறது. தமிழர்களே உரத்து குரல்கொடுத்து இந்த ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துவோம் என்றார்.

முனைவர் தமிழப்பன் உரையாற்றுகையில், முப்படைகளுடன் வலுவான நிலையில் இருக்கும் தமிழீழ இராணுவத்துடன் இந்தியப் படைகள் மோதும் நிலை ஏற்பட்டால் இந்தியப் படைகள் தோற்பது உறுதி. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் இரத்தக் களரி ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்றார்.

http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628008.jpg

தமிழீழத்தில் அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வரும் மக்கள் போராட்டங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய புதுவை மணிகண்டன், பொறுத்தது போதும் பொங்கியெழு தலைவா என்று தமிழீழத் தமிழர்கள் குரல் கொடுக்கும் அளவிற்கு தலைவரின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் பொறுமையை சோதிப்பவர்களே! விரைவிலேயே தமிழரின் கொடி ஐ.நா. மன்றத்தில் பறக்கும் என்று கூறினார்.

அடுத்துப் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் முன்னாள் தமிழ்நாட்டு அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், சிறிலங்கா அரசின் பேச்சைக் கேட்டு இந்திய ராணுவத்தை அனுப்பி அடிவாங்கியது இந்திய அரசு. அதனால் சூடு, சொரணையுள்ள ஒரு அரசாக இந்திய அரசு இருக்குமானால் மீண்டும் சிறிலங்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும் அப்படியான ஒப்பந்தம் ஏற்படுகிற போது அதன் கோபம், ஆத்திரம் தமிழ்நாட்டில் எதிரொலிப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்றும் எச்சரித்தார்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும் மூத்த பெரியாரியல்வாதியுமான வே. ஆனைமுத்து உரையாற்றுகையில், இந்தப் பிரச்சனையை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழரின் நியாயத்தை எடுத்துச் செல்லும் வகையில் நாம் செயல்பட வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தி தமிழ் மக்களிடத்தில் மீண்டும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628009.jpg

தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு உரையாற்றுகையில் இந்த இராணுவ ஒப்பந்த்தின் பின்னணி குறித்து வரலாற்றுச் செய்திகளோடு விளக்கினார்.

அவர் பேசுகையில்,

முன்னைய ராஜீவ் காலத்து இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை. அந்த ஒப்பந்தங்கள் மூலமே ஆயுதங்களை இவர்கள் பெற முடியும். பிறகு ஏன் புதிய ஒப்பந்தம் என்கிறீர்களா?


http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628010.jpg

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எத்தணை ஆண்டுகாலம் இப்படி போரை நீட்டிக்கப்போகிறீர்கள்? என்று..அதற்குப் பதிலளித்த தலைவர் பிரபாகரன், எமது தலைமுறை மட்டுமல்ல. அடுத்த தலைமுறையும் போராடும். தொடர்ந்து போராடும்...சிங்களவன் களைத்து ஓய்ந்து போய் அவர்கள் தனியரசாகவே இருந்துவிடட்டும் என்கிற நிலை வரை போராட்டம் தொடரும் என்றார்.

ஆம், இப்போது சிங்களவர்கள் களைத்துப்போய் உள்ளார்கள். இனப்பிரச்;சனைக்குத் தீர்வு காண்பதிலே விருப்பம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிறிலங்கா குடியரசுத் தலைவர் சந்திரிகாவோ, சிங்களவர்களே நீங்கள் கவலைப்படாதீர்.. நமக்கு இந்தியா இருக்கிறது. இதோ இராணுவ ஒப்பந்தம் போடப்போகிறோம். ஓய்ந்துவிடாதீர்கள். தொடர்ந்து போராடுங்கள் என்று உற்சாகமூட்டவே இந்த புதிய ஒப்பந்தம் என்றார்.

பாவலர் அறிவுமதி பேசுகையில், ஆழிப்பேரலை சீற்றத்தின் போது முதல் அலை வந்து அள்ளிக்கொண்டு போனது. அடுத்த அலை வருவதற்குள் தமிழ் மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் காப்பாறினார்கள். ஆழிப்பேரலையை காரணமாக வைத்து உதவிகளும் போனது. உளவு அமைப்புகளும் போயின. அவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டு வந்தார்கள். அங்கே தனியரசு ஒன்று நடக்கிறது என்கிற உண்மையை உணர்ந்து கொண்டு வந்தார்கள். மக்களுக்காக போராளிகள் என்ற நிலை மாறி இப்போது மக்களே போராளிகளாக அங்கு இருக்கிறார்கள். 80களில் ஒரு பிரபாகரன் இருந்தார். இப்போது ஒவ்வொரு போராளியும் பிரபாகரனாக, பிராபகரியாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தன்முனைப்புத் தலைவர்கள் இங்கே இருக்க தன்னைப் போலவே அத்தனை தகுதிகளையும் கொண்ட போராளிகளாக அத்தணை பேரையும் தலைவர் பிரபாகரன் வளர்த்தெடுத்து இருக்கிறார்.


http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628011.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதியை நேசிக்கிறார்கள். உலக அறமன்றங்கள் உண்மையை உச்சரிக்கத் தொடங்கும் போது ஏ...அகிம்சை தேசமே ஆயுதங்களை நீ ஏன் வழங்குகிறாய்... டில்லியின் தென்வளாகத்துக்கு ஒற்றை விழுக்காட்டு பார்ப்பனர்களின் குரல் இப்போது இந்தியக் குரலாக இருக்கிறது. தேர்தல் பாதையில் டில்லி நாடாளுமன்றம் செல்லுகிறவர்கள் இப்போது வாய்திறந்தாக வேண்டும். அவர்கள் இந்த ஒப்பந்தத்தைத் தடுக்க வேண்டும். நீங்கள் ஆயுதங்களை எப்படித்தான் குவித்துக் கொடுத்தாலும் அது எங்கள் போராளிகளிடத்தில் போய்த்தான் சேரும். அமெரிக்காக்காரன் என்ன எந்தப் படைக்காரன் வந்தாலும் அரசியல், போர் ஆற்றல் பெற்ற எங்கள் தலைவன் பிரபாகரனிடத்தில் தோற்றுத்தான் போவீர்கள் என்று கூறினார்.

ஓவியர் புகழேந்தி உரையாற்றுகையில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆதரவு களத்தைத் தமிழீழத் தமிழர்கள் மலைபோல் நம்பி இருக்கிறார்கள். தாங்கள் அனாதைகள் ஆக்கிவிடப்பட்டோமோ என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. தங்களது பிரச்சனையில் தமிழகம் கை கழுவிட்டதாக கருதுகிறார்கள். அந்த மக்களுக்கு ஆதரவாக நம் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்க வேண்டும். சிங்களவர்களுடனான ஒப்பந்தத்தை நாம் தடுத்தாக வேண்டும் என்றார்.

இறுதியாக நிறைவுரையாற்றிய தொல். திருமாவளவன், தமிழ்நாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் உண்ணாநிலை அறப்போர் மேற்கொண்டது, தியாக தீபம் திலீபன் உண்ணாநிலை அறப்போர் ஆகியவற்றை விளக்கிப் பேசினார்.

http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628012.jpg


தமிழ்நாட்டில் தமிழீழத் தமிழர் பற்றி பேசுவதும், தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்துப் பேசுவதும் தமிழர்கள் செய்கிற பாரிய குற்றம் என்கிற உணர்ச்சியை தமிழனுக்குள் திணித்துவிட்டார்கள். அதை உடைத்தெடுப்போம். இந்த உண்ணாநிலை அறப்போருடன் நாம் கலைந்துவிடக் கூடாது. இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்தை தடுக்கும் வரை போராட எங்களது அய்யா பழ. நெடுமாறன் அவர்களது வழிகாட்டலை நாங்கள் கோருகிறோம்.

இந்த ஒப்பந்ததின் பாரிய விளைவுகளை எடுத்துரைக்கும் வகையில் இந்திய தலைமை அமைச்சர், இந்திய குடியரசுத் தலைவர் ஆகியோரை தமிழ்நாட்டுத் தமிழர்கள் குழு நேரில் சந்திப்பது போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளை அய்யா பழ.நெடுமாறனின் வழிகாட்டுதலோடு மேற்கொள்வோம் என்று கூறினார்.

உண்ணாநிலை அறப்போரை மாலை 6.00 மணிக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மருத்துவர் நா.சேதுரமான், பழ.நெடுமாறனுக்கு பழச்சாறு அளித்து முடித்து வைத்தார்.

http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628013.jpg


நிகழ்ச்சியில் சிந்தனையாளர் பேரவையின் சா. சந்திரேசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் இராசேந்திர சோழன், தமிழர் தேசிய இயக்கத்தின் அன்புதென்னரசன், மக்கள் பாவலர் இன்குலாப், விடுதலைச் சிறுத்தைகள் இணை பொதுச் செயலாளர் செல்வப்பெருந்தகை, மறுமலர்ச்சி திமுகவின் வழக்கறிஞர் சிவசங்கரன், முகம் மாமணி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சர்வதேச ஊடகவியலாளர் நேர்காணலையொட்டி சென்னை ஆனந்த் திரையரங்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பழ. நெடுமாறன் அவர்கள் நடத்திய நிகழ்ச்சிதான் தமிழீழ விடுதலை ஆதரவுக்கான இறுதி நிகழ்ச்சி. அடுத்து பொடா சட்டம் ஏவிவிடப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலை ஆதரவுக் குரல் முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் மீண்டும் நீறுபூத்த நெருப்பாய் இருந்த தமிழ்நாட்டின் உணர்வு வெடித்துக் கிளம்பியுள்ளது என்றால் மிகையில்லை.

தமிழீழத் தனியரசு கட்டமைப்பு குறித்த அனைத்துத் தகவல்களையும் நாளாந்த தமிழீழ நிகழ்வுகளையும் மேடையில் உரையாற்றிய தலைவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். தமிழீழம் மலர்ந்துவிட்டது. அதை ஊடகங்கள் மறைத்துக்கொண்டு இருக்கின்றன என்ற உண்மையை வெளிப்படுத்தினார்கள்.


http://www.eelampage.com/d/p/2005JUNE/20050628014.jpg

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக வருங்கால தலைமுறையினரே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதும், தமிழீழத் தேசியத் தலைவரின் பெயரை உச்சரிக்கப்பட்ட பொழுதெல்லாம் உற்சாகக் குரல் எழுப்பி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

உண்ணாநிலை அறப்போர் நிகழ்விடத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த புத்தகக் கடைகளிலும் தமிழீழ விடுதலை ஆதரவு ஏடுகளும் நூல்களும் நிறையவே விற்பனைக்கு வைக்கப்பட்டன.

உண்ணாநிலை மேடை, அதைச் சுற்றி அமர்ந்திருந்த கூட்டம் வரத்தொடங்கிய அதிகமான கூட்டத்தால் சாலையின் எதிர்ப்புறத்தே கொளுத்தும் வெயிலிலும் நாற்காலிகளில் உட்கார்ந்து இருந்தனர். சாலையின் இருபுறங்களிலும் இந்த உண்ணாநிலை அறப்போர் நடந்ததால் மக்களிடம் இப்பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்பதில் ஜய்யமில்லை.

பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களும் உண்ணாநிலை அறப்போரை பதிவு செய்துகொண்டனர்.

நன்றி: புதினம் (www.puthinam.com)