PDA

View Full Version : புலிகளின் வாகனம் மீது கண்ணிவெடித் தாக்கு



இளையவன்
27-06-2005, 06:57 AM
கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் அடங்கிய அரசியல் பணிப் போராளிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் போராளி ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றுப் பிற்பகல் 2.50 மணியளவில் வெலிக்கந்த மன்னம்பிட்டிய போவத்த என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் அடங்கிய 50 அரசியல் போராளிகள் தரைமார்க்கமாக முற்பகல் பத்து மணியளவில் ஓமந்தை சிறிலங்கா படை சோதனைச் சாவடியிலிருந்து சிறிலங்கா படையினரின் வாகனத் தொடர் பாதுகாப்புடனும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் வழித்துணையுடனும் மட்டக்களப்பிற் கான பயணத்தை மேற்கொண்டனர்.

பிற்பகல் 2.50 மணியளவில் வெலிக்கந்த மருத்துவமனையை அண்டிய ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரத்தைத் தாண்டி போராளிகளின் வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது போராளிகளின் வாகனத்தை இலக்கு வைத்து, பாலம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்ணிவெடி, பாலத்தின் ஊடே வாகனம் பயணிக்கையில் வெடிக்க வைக்கப்பட்டது.
அப்போது வாகனத்திலிருந்த போராளிகளில் பெண் போராளி ஒருவர் காயமடைந்தார். வாகனம் சேதத்துக்குள்ளானது. தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் அருகாமையில் சிறிலங்காப் படையினரின் படை நிலைகளும் வீதியோர காவல் நிலையங்களும் அமைந்துள்ளன.

இத்தாக்குதல் சம்பவம் பற்றி அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் தெரிவிக்கையில், போராளிகள் மீதான இத்தாக்குதலானது இராணுவத்தினரின் உதவியோடே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரத்நாயக்க தெரிவிக்கையில்:-
பிற்பகல் 3.00 மணியளவில் வெலிக்கந்த செனவப் பிட்டியாவிற்கும், கோவத்தை பகுதிக்கும், இடையில் இராணுவப் பாதுகாப்புடன் பயணித்துக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் வாகனம் மீதுகண்ணிவெடித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும் கண்ணி வெடி இலக்கிலிருந்து புலிகள் பயணம் செய்த வாகனம் தப்பித்துக் கொண்டதாகவும், குறிப்பிட்டார். தாக்குதல் காரணமாக வாகனத்தின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் அதில் விடுதலைப்புலிகளின் பெண் போராளி ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் வாகனம் தொடர்ந்து இராணுவப் பாதுகாப்புடன் பயணித்து மட்டக்களப்பை சென்றடைந்திருப்பதாகவும், அவர் மேலும் கூறினார்.இந்த வாகனத்தில் விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட 50 போராளிகள் மட்டக்களப்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாகவும் விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

gragavan
27-06-2005, 11:22 AM
இலங்கைத் தீவில் அமைதி திரும்பி...அனைவரும் இணைந்து வாழ இறைவனை வேண்டுகிறேன். தமிழர்களுக்கு அங்கே நிம்மதியான அமைதியான வாழ்வு கிட்ட வேண்டும்.

அறிஞர்
27-06-2005, 12:37 PM
தேவையில்லாத காரியங்களை.. விட்டு.. இலங்கை அரசு திரும்பவேண்டும்.... அனைவரின் அமைதியான வாழ்க்கையே முக்கியம்.