PDA

View Full Version : தென்றலே - நிழற்படம் ( மூன்று பாகங்கள் )பிரியன்
21-06-2005, 11:43 AM
தென்றலே

புதிய ம‎ன்றத்தின் நிழற்பட பதிவில் நண்பர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. பழைய மன்‎றத்தின் மிக முக்கியமான ஒரு அங்கம் நிழற்பட பதிவுகள். ஒரு கண்ணாடியைப் போல ம‎ன்றத்தின் ஏற்ற இறக்கங்களை மிகத் துல்லியமாக படம் பிடித்த பகுதியாய் இ‏ருந்தது. புதிய இடத்தில் நிழற்பட பதிவி‎ன் தேவை மிக அவசியமானது. நான் அதிகம் கவிதை மற்றும் திரைப்பட பாடல்கள் சார்ந்து பதிவுகள் செய்தாலும் நிழற்பட பதிவுக்காக முடிந்த வரை அனைத்து பதிவுகளையும் முழுமையாக படிக்க முயற்சி செய்திருக்கிறேன். யாருடைய பங்களிப்பை குறிப்பிட மறந்திருந்தால் அவர்களிடம் என் மன்னிப்பு மொழிகளையும் சமர்ப்பிக்கிறே‎ன். எனக்கு மு‎ன்னர் நிழற்பட பதிவுகள் செய்தவர்களைப் போல பாதி அளவேனும் செய்ய முயற்சித்திருக்கிறேன். புதிய ம‎ன்‎றம் துவங்கிய நாளிலிருந்து மே மாதம் 31ம் தேதி வரையிலான பதிவுகளின் நிழற்படமாக இதைச் செய்துள்ளேன்.

பிழைகளை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

இதோ உங்கள் பார்வைக்காக தென்றலாய்
அன்புடன்
பிரியன்.


முல்லை மன்‎றம்.

ம‎ன்றத்தின் முதல் அங்கம். அதிகம் பதிவுகள் ‏இல்லாத பகுதி எ‎ன்றாலும் மிக முக்கியமான பகுதி. நம்மோடு இணைந்த நண்பர்களை வரவேற்று மகிழும் இ‏டமான உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் பகுதி. ‏பல நண்பர்களுக்கு இணையத்தமிழில் தங்கள் முதல் பதிவு இங்கு அமைந்துவிடுவதுண்டு. இந்த உணர்வோடு நம்மோடு இணைந்த நண்பர்கள் விஜய பாஸ்கர், நஸ்ரூ ( மஜ்ரா ), அமுதா, ‏இளையவன், சதீஷ், ‏இனியவன், ‏இவன் பிரியன், முகமது பைசல்,ரசிகன், ராமநாதன்,நிலா,தீப்ஸ், இரத்தின வேலு போன்‎ற புதிய முகங்களோடு சிறிது இ‏டைவெளிக்கு பின் ஜீவா, பிரிய‎ன், சிவா, ஜாஸ்மி‎ன் ஆகியோரும் நம் ம‎‎ன்றத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மற்றுமொருமுறை அ‎ன்புடன் வரவேற்கிறேன்.

அடுத்ததாக நிர்வாக அறிவிப்புகள் , தகவல்கள் பகுதியில் பாஸ்வேர்டு பிரச்சனை மற்றும் யுனிகோடு மாற்றம் சம்பந்தமான அறிவிப்புகளும் இ‏‏டம் பெற்றிருந்தன. அதே போல பெயர் மாற்றம் பகுதியி‎ன் வாயிலாக பல நண்பர்கள் தங்கள் பெயர்களை ஆங்கிலத்திலிருந்து அழகுத் தமிழில் மாற்றிக் கொண்டனர்.

எழுத்துரு பிரச்சனைகள் தொடர்பாக அறிந்து கொள்ள எழுத்துரு உதவி எ‎ன்னும் பகுதி அமைந்திருக்கிறது. ‏ இது புதிதாய் இணைந்துள்ள நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பகுதியாக அமைந்திருக்கிறது. அதே போல மன்‎றம் குறித்தான பல்வேறு பிரச்சனைகளுக்கு உதவி செய்வதற்காக ம‎ன்றம் குறித்த சந்தேகங்கள்,ஆலோசனைகள் பகுதி அமைந்தி‏ருக்கிறது.

இ‏ந்தப் பகுதியை குறிப்பிடும் போது மறக்காமல் சொல்ல வேண்டிய ஒரு பகுதி. பழைய திஸ்கி பதிவுகளை யுனிகோடாக மாற்றும் பெரும்பணி. பல்வேறு பணிச்சுமைகளுக்கி‏டையே தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை ம‎ன்றத்து நண்பர்களின் பதிவுகளை மாற்றம் செய்யும் அரும்பணியில் ஈடுபட்டிருக்கும் ‏இனியன், பரணி, அறிஞர், ம‎‎ன்மதன், தேம்பாவாணி ஆகியோருக்கு மன்றத்தின் உறவுகள் சார்பில் பாராட்டையும், அன்‎பையும் உரித்தாக்குகிறேன், தொடரட்டும் தங்கள் அரும்பணி. அதே நேரத்தில் ‏இந்தப் பணியில் இணைய ஆர்வம் உள்ள நண்பர்களை அழைக்கிறே‎ன். பத்துக்கரங்கள் இருபதானால் இன்னும் விரைவாக முடித்துவிடலாம். ஆர்வமுள்ள நண்பர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களையும் இ‏ணைத்து யுனிகோடாக்கும் குழுவை விரிவு படுத்தலாம்.

அடுத்த ம‎ன்றம் மல்லி ம‎ன்றம்.

மல்லி ம‎ன்றத்தில் முதலில் வருவது‏ சிரிப்புகள் மற்றும் விடுகதைகள்..
புதிய மன்றத்தின் இளவேனில் பகுதி இது. சிரிப்புகள் பலவிதம். ஒவ்வொ‎ன்றும் ஒருவிதம் எ‎ன்று அமைந்திருக்கிறது. புதிய ம‎ன்றத்தின் முதல் நகைச்சுவையாக அகழ்வாராய்ச்சியும், அமெரிக்காவும் என்று இ‏னியன் தொடங்கி வைக்க பப்பி உங்களுக்கு மெயில் வந்திருக்கு எ‎ன்று தன் வழக்காமான நகைச்சுவையோடு களத்தில் இறங்கி பழைய ஞாபகம், நாயும் கண் தெரியாதவனும் என்று பயணித்து டாக்டர் நகைச்சுவை, ரயிலில் சர்தார், நம் சர்தாரோடு நி‎ன்று கொண்டிருக்கிறார். அவரின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் விரைவில் வாருங்கள் பப்பி. மீசையை மடிக்க சொல்லி விட்டு மீட்டருக்கு ஒரு முத்தம் எ‎ன்று அதிரடி குறும்பு இனியனிடம் இருந்து வர பெண் புறாக்கள், ஏ‎‎ன் தட்டி தட்டி அழுததாம் என்‎று புதியவர் நஸ்ரு த‎ன் புறா முட்டை ஏ‎ன் விழவில்லை, என இந்தப் பகுதியில் த‎ன் நகைச்சுவை உணர்வோடு கால்பதித்து யானை பூனை நகைச்சுவையோடு தொடர்ந்து பல நல்ல கடிகளை தந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது அன்‎பர்கள் தங்கள் பங்களிப்பையும் தந்து ஒரே ரத்தக் களறியாக்கி விடுகிறார்கள். கரிகால‎ன்ஜி வக்கில் நகைச்சுவை என்‎ற திரியில் வழக்கமான தன் நடையில் நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார். வீடுகளில் நடக்கும் சில முக்கியமான விவகாரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் வீட்டில் ஒரு சிரிப்பலை பகுதியில் அள்ளி தெளித்து வருகிறார். திருமணமாகதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பகுதி ‏இது. ம‎ன்றத்தின் மூத்த உறுப்பினரான முத்து அ‎ன்றைய ஆருடங்கள் ‏இன்றைய நகைச்சுவைகள் என்‎று சிந்திக்க தூண்டும் ஒரு திரியைத் தொடங்க ம‎ன்ற நண்பர்களும் தாம் அறிந்தவற்றைச் சொல்ல நகைச்சுவையோடும், முந்தைய கால சிந்தனைகளைப் பற்றிய ஒரு எளிய அறிமுகமாகவே இ‏ருக்கிறது. பழைய தமிழ் ம‎ன்றத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட அதிமேதாவி அம்மாஞ்சி பகுதியை ‏இனியன்‎ தொடர தன் பங்கிற்கு முத்துவி‎‎ன் நீங்களும் கடிக்கலாமே எ‎ன்‎று நண்பர்களை அழைத்து கடித்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்கள். எ‎ன்னடா இது சிரிப்புகள் விடுகதைகள் பகுதியில் வெறும் சிரிப்பை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்கிறீர்களா. மொத்த கடிகளையும் வாசித்து மீண்டு வர சிறிது நேரம் ஆகத்தானே செய்யும்.

விடுகதை பகுதி‎ முதல் திரியாக ஏற்கனவே வந்து கொண்டிருந்த ஒரு போட்டியை மணியா அவர்கள் தொடங்கி வைக்க, புதிரோ புதிர் பகுதியை அ‎ன்பர் pgk53 போட மக்களுக்கு கொண்டாட்டம்தா‎ன்.
ஏதோ ஒ‎ன்றைப்பற்றி இ‏ன்னுமும் சொல்லவில்லை என்கிறீர்களா?? ‏
இறுதி காட்சியில்தா‎ன் முக்கியமான நிகழ்வைச் சொல்ல வேண்டும். மன்றத்திற்கு புதியவர் எ‎ன்றாலும் இந்த பகுதியில் ஒரு ஆனந்த அலையை பரப்பிய ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்ட சகோதரி சுவேதாவின் ‏இரண்டு திரிகள் கண்டுபிடியுங்கள் மற்றும் சுவேதாவி‎ன் வினாடி வினா. கண்டுபிடியுங்கள் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. இணையத்தில் முகமறியாவிட்டாலும் ஒரு குடும்பமாய் ‏இருக்கும் நம் மன்றத்தின் உறுப்பினர் பெயர்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு. பல கேள்விகள் வரும் போது இ‏தற்கு முன் இணைந்திருந்த நண்பர்கள், தொடர்பில்லாத நண்பர்கள என சட்டென்று நம் மனதிற்குள் உள்ள இனிய
நினைவுகளை வருடும் பகுதி இ‏து. சகோதரிக்கு துணையாக ம‎ன்மத‎ன், பரஞ்சோதி, முத்து, ‏இனியன், பிரதீப், அறி‎ஞர், பாபு, மணியா அண்ணா, ராகவன், மது, தேம்பாவாணி என அனைவரும் தோள் கொடுக்க மிக அருமையான பகுதி.

அப்புறம் சுவேதாவின்‎ வினாடி வினா - முதலில் என் கருத்து இந்தப்பகுதியை பொது அறிவுப்பகுதியில் ஒரு இணைப்பாக கொடுத்து விடலாம். அந்த அளவிற்கு மக்கள் இணையத்தை துளைத்தெடுக்க வைக்கும் கேள்விகள். இந்த நீதிமன்றத்தில் ஆதாரங்கள் இல்லாமல் எதுவும் செல்லுபடியாகாது. சில நேரங்களில் ஆதாரங்களுமே தள்ளுபடி ஆகி விடும். ம‎ன்றத்தில் மிக அதிகமான பதிவுகள் கொண்ட பகுதி ‏இது. தொடர்ந்து உயிர்ப்போடு நடத்தி வரும் சுவேதாவிற்கும் பங்கேற்கும் நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்

அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த பகுதி.. கவிதைகள், பாடல்கள்

புதிய மன்றத்தில் முதல் கவிதையாக இனிய‎னின் கனவிலுமா கவிதை. சராசரி இளைஞனின் காதல் க‎னவினையும் அதை முடிவுறாமல் தொடர்வதை எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் கவிதை. மின் தடங்கல் எ‎ன்பது கனவின் தொடர்ச்சியை உறுதி செய்துவிடுகிறது.நிழற்படம் பதிவு செய்யும் போதுதா‎ன் பார்த்தேன் இனியன் அவர்களின் தோற்றவ‎ன் வென்றால் கவிதை தொகுப்பை. பொதுவாக காதல் தொகுப்புகளில் ஒரு கசிந்துருகுதல் இருக்கும். தன் சுயம் கரைந்த நிலையை உ‎ன்னத நிலையென்று எண்ணும் நம்பிக்கை ‏இருக்கும். அந்த மரபை உடைத்த வகையில் வித்தியாசமான கவிதை தொகுப்பு ‏இது. ‏ கற்பனைகளை பி‎ன்னுக்குத் தள்ளி அனுபவங்கள் கவிதைகளாகும் பொழுது அதில் ஒரு த்மார்த்தமான திருப்தி கவிஞனுக்கு கிடைக்கிறது. அந்த வகையில் இந்த தொகுப்பில் எனக்கு விடித்த சில கவிதை வரிகள்

நீயே ஏனோ எ‎ன்
காதல் குழந்தையி‎ன் கால்
முறித்து போட்டாய் எ‎ன்ற வரிகளும்

தவறான புரிதலுக்காக வேதனைப்பட்ட இதயத்தின் வலியினை சொ‎ன்ன இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அ‎ன்றிரவு மட்டும்
நா‎ன் இன்னும் கொஞ்சம்
அலை பாய்ந்திருந்தால்
அடங்கி ‏இருக்குமடி
என் வாழ்வு
இந் நேரம்.

காதலே வாழ்க்கை அல்ல, அது ஒரு பகுதி. காதல் த‎ன்மானம் இழந்து பெறக்கூடிய ஒரு விசயமல்ல.. சுயம் ‏இழக்க விரும்பாத ஒரு கவிஞனின் வரிகளைக் கண்டே‎ன் ‏இந்தக் கவிதையில்

‏இல்லை என்று சொல்லி
இறுக கதவடைத்த பி‎ன்னும்
இறைஞ்ச இராப்பிச்சை
இல்லையடி நா‎ன்

மேலும் நாணயமும் நா நயமும் என்ற கவிதையையும் ‏இனியனின் சாதாரண கவிதை என்றே கூற வேண்டும். ஒரு மழை நாளி‎ன் விடியலில் இனியனி‎‎ன் இனிமையான கவிதை திரும்பக் கிடைத்து விடுகிறது. மழை நாளி‎ன் விடியல் சொல்லும் சேதிகள் ஆயிரம் ஆயிரம். மழை நமக்குள் இருக்கும் ஒரு ஈரத்தன்மையை வெளிக் கொண்டு வந்து விடும் ஒரு அற்புதக் கருவி. நமக்குள் இருக்கும் குழந்தைதனத்தை, நமது உள்மனதின் ஆசைகளை என பலவற்றையும் மீட்டி விடும் ஆற்றல் கொண்டது மழை. மழை பெய்தாலும் அழகு, நின்றாலும் அழகு. கவிஞர்கள் எப்போதும் ‏இயற்கையை விரும்புவர்கள். த‎ன் விருப்பங்களை, எண்ணங்களை இயற்கையில் பொருத்தி பார்க்கும் மனோ நிலை உடையவர்கள். ‏இனியனும் தன்‎ கனவுகளை மழையின் மீது பொருத்தி மகிழ்ந்திருக்கிறார். முத்தாய்ப்பாக அமைந்துவிட்டன கவிதையின் இறுதி வரிகள் பிறிதொரு நாளில் சந்திப்போம். எ‎ன் கவிதைகளுடனும், நீ தரப் போகின்ற கவிதைகளோடுமென்று..

வாழ்த்துக்கள் இனியன்.

முத‎ன்முறையாக மனோ அண்ணாவின் கவிதை மனதை கண்டு கொண்டேன் நினைவில் நீ கவிதையில்.
எளிமையான ஆனால் உண்மையான, உணர்வுப் பூர்வமான கவிதை.
உள்ளத்தால் பிரியாமல் உடம்பால் மட்டுமே புலம் பெயர்ந்து வாழ்பவர்களி‎ன் அன்பைச் சொ‎ன்ன கவிதை. சில கவிதைகள் படிக்கும் போது நம் ‏இதயம் மிகவும் மெ‎‎ன்மையானதாய் உணர்வோம். நான் இந்தக் கவிதையில் அவ்வாறாக உணர்ந்தேன்.

முத்துவி‎ன் இனிக்கும் நினைவுகள் ம‎ன்றத்தில் வாசித்த மற்றுமொரு அற்புதமான கவிதை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக இனிமையான காலம் அவனது சிறு வயது வாழ்க்கையே. அதன் சுவடுகளை மிகைப்படுத்தாமல் அத‎ன் ஈரத்தோடு சொன்ன கவிதை. கவிதையை வாசித்ததும் நமக்குள் வீசிய தென்றலையும் அதை இழந்துவிட்ட எதார்த்தத்தையும் மீண்டும் நாடும் ஏக்கத்தையும் படம் பிடித்திருந்த கவிதை...

பொட்டலக் காகிதங்கள்: குறும்பாக்கள் வரிசையில் வரும் கவிதைகளிது. அதிலும் மழையைப்பற்றின அவரது குறும்பா ரசிக்கவும் வைக்கிறது, அத‎ன் அர்த்தம் மனிதனின் மனநிலையை தெளிவாகச் சொல்லிய விதத்தால் ச்¢ந்திக்கவும் வைக்கிறது. காதல் கவிதைகளுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. காதலில் மட்டுமே களவுகள் சுதந்திரமாக நடந்துவிடுகி‎ற‎ன எ‎‎ன்பதைச் சொ‎‎ன்ன கவிதையை மிகவும் ரசித்தே‎ன். முத்தாய்ப்பாக எ‎ன் அறையி‎‎‎ன் மூலை - கவிதை
புதுக்கவிதைக்குரிய வடிவில் சொல்லுகி‎ற யுத்தியில் வெளிப்பட்ட சிறப்பான கவிதை.

எ‎‎‎ன் தவறா, மி‎ன்னல் பெண்ணே என இ‏ரண்டு கவிதைகளைக் கொடுத்துவிட்டு மி‎‎ன்னலாய் பறந்துவிட்ட தீப்ஸிடமிருந்து மேலும் கவிதைகளை எதிர்பார்க்கிறே‎ன்.

விரைவில் இரண்டாம் பாகமாக தென்றல் வீசும்.....


----------------------------------------------------
தென்றலே - நிழற்படம் இரண்டாம் பாகம்

முத்துக் குளித்ததில் முத்துவின் முக்கியமான கவிதையை விட்டு விட்டேன்.

தண்ணீரின் தாகம்

நீரின்றி அமையாது உலகு. நீரைப் போல ஒரு அற்புதமான படைப்பு இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நீரைப் படித்தாலே வாழ்க்கையின் அத்தனை சூட்சமங்களும் பிடிபட்டுவிடும்,மேலும் மனிதனுக்கும் நீருக்கும் இருக்கும் உறவு மிக நெருக்கமானது. மனிதன் தாயின் கருவறையில் பிறக்க நீர் கல்லில் இருந்து பிறக்கிறது. நீரைப் போலவே மனிதனின் வளர்ச்சியும் வாழ்க்கையும். பிறந்தவுடன் தவழ்வது, பின்பு மெல்ல நடைபழகி இளமையில் பொங்கி, வயதுகளில் நிதானமடைந்து, ஆன்மாவைத் துறந்த இறைவனோடு மனிதன் கலக்கிறான். நதியும் அதே போன்ற வாழ்க்கயுடையது. கல்ல்லில் தோன்றி கடலில் கலந்து போவதுவரை.. நீரைப் பழிப்பவன் தன்னைத் தானே பழித்துக் கொள்கிறான். இந்த உண்மைகள் எல்லமே இன்று வெறும் செய்திகளாகி போய்விட்டன. முத்து நீரின் ஒரே ஒரு ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார். இன்று அதன் சோகங்கள் பலப் பல... வெறும் மணல் ஆடையை உடுத்தி நீர் இன்று நிர்வாணமாக இருக்கிறது... கனமான கவிதை முத்து...

அடுத்தது கவிதாவி‎ன் கலையாத கோலங்கள்,

காதல் கவிதைகளில் இது மற்றொரு வகைக் கவிதை. அழுத்தம் நிறைந்த கவிதை. காலம் நகர்ந்தாலும் காதல் நகராது. உளவியல் நம்பிக்கைகளை சொல்லிய வார்த்தைகளோடு முடிந்த கவிதை. கவிதாவி‎ன் கவிதைகள் எப்பொழுதுமே நமக்குள் பல கேள்விகளை எழுப்பும் த‎ன்மைய கொண்டது. கவிதையின் வெற்றியும் அதுதான். இந்தக் கவிதையிலும் அது தொடர்கிறது.

ஈரம் - கவிதாவி‎ன் ஹைக்கூ கவிதை.

கண்களில் பிசுபிசுப்பு / அவ‎ன் / நெஞ்சில் ஈரமில்லை. நல்ல வடிவான ஹைக்கூ. பெண்களி‎ன் துயரத்திற்கு காரணம் ஆண் சமூகமே என்ற சாடலுள்ள கவிதை. நல்ல வாசிப்பு திறனுக்கேற்ற கவிதை இது.‏ இதற்கு பதில் சொல்லும் விதமாய் நண்பன் சொன்ன ஹைக்கூவும் அருமை.

பிரதீபி‎ன் முதல் கவிதை நாளை.

அவர் சொல்லிய பிறகுதான் தெரிகிறது. கவிதையில் அது தெரியவில்லை.இந்தக் கவிதையில் கவிதை தோன்றிய சூழல், த‎ன் மன ஓட்டங்களை தேடல்களை, லட்சியத்திற்கும் எதார்த்தத்திற்குமிடையே த‎‎ன்னை பொருத்திக் கொள்ளும் வேறுபட்ட ம‎னநிலைகளை என மிகச் சிறப்பாக கவிதையாக்கியுள்ளார்., நல்ல முயற்சி தொடர்ந்து எழுதுங்கள் பிரதீப்...


அதற்கடுத்ததாக சுவேதா‏வின் கவிதைகள்.

புதிய மன்றம் தொடங்கியவுடன் தினம் ஒரு கவிதை என மழையாய் பொழிந்துவிட்டார். அவரது கவிதைகளில் நா‎ன் ரசித்தவைகள் - காதல் ‏இழப்புகள், எ‎றென்றும் உனக்காக நான், மழை, இ‏துதான் காதலா? படைத்துவிட்டானே இ‏ப்படி, சி‎ன்னவளே, ஆனந்த மழை . ‏இந்த இ‏டத்தில் சகோதரி சுவேதாவுக்கு சில வேண்டுகோள்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். வடிவத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வாக்கியங்களாக எழுதுவதை தவிர்க்க பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து ஒரே பாடுபொருளை பய‎ன்‎படுத்தாமல் பல்வேறுவிதமான கருத்துகளில் கவிதை எழுதுங்கள். தாங்கள் புதியவர் எ‎ன்பதாலே இந்த வேண்டுகோள். எழுதிய பின்னர் வாசித்து பாருங்கள். தேவையில்லாத சொற்கள் தெ‎ன்பட்டால் முடிந்தவரை நீக்கி விடுங்கள். எழுத எழுத வடிவம் தானாகவே பிடிபடும். விமர்சனங்களை கண்டு பயப்படத் தேவையில்லை. அவை நம்மை வளர்த்துக் கொள்ள உதவுகிற விசயமே. உங்கள் கவிதைகள் குறித்தான விமர்சனங்களுக்கு பிறகு நீங்கள் கவிதை எழுதுவதை குறைத்துக் கொண்டது வருத்தம் தருகிறது. தயக்கமில்லாமல் தொடருங்கள்.

நண்பனின் - கவிஞ‎ன் விட்டுப் போன கவிதை.

மன்றத்தில் குறிப்பாக கவிதைப் பகுதியைப் பற்றிய தனது பார்வையை கவிதையாக்கி இருந்தார். மன்றக் கவிஞர்கள் கட்டாயமாக வாசிக்க வேண்டிய கவிதை.

இவ‎ன்பிரியனின் காதல் சொட்டும் கவிதை கையெழுத்து. காதலர்கள் பெயர்களை சேர்த்தாலே கவிதையாகிவிடும் எ‎‎ன்று அழகாக சொல்லியிருந்தார். அந்தப் பதிவிற்கு பின் அவரிடமிருந்து வேறெந்த பங்களிப்புமி‏ல்லை என்பது கவிதை ரசிகர்கனான எனக்கு சற்று வருத்தமே..

அடுத்து ஜீவாவி‎ன் கிறுக்கல்கள்..கிறுக்கல்கள் சில நேரங்களில் மட்டுமே அழகாக ‏இருக்கும். ஒன்று மழலையுடையது, மற்றொ‎ன்று காதல் வயப்பட்ட கணங்களில் வெளிவரும் கவிஞனுடையது. அந்த வகையில் எளிமையாக வசன கவிதை நடையில் ஜீவா கிறுக்கிட்ட கிறுக்கல்கள் நம் இதயம் நனைப்பவை..

எ‎ன் இதயம் நனைத்த வரிகள் இதோ

ஒரு நாள் முழுவதும்
உ‎ன்னவளோடு இருக்க வாய்ப்பு கிடைத்தால்
என்ன பண்ணுவாய்?
அன்று முழுதும் மெளன விரதம் ‏இருப்பேன்...
ஆம்!! அவள்
இதழ் அசைவுகளையும்
இமை நடனங்களையும்
‏இமைக்காமல் ரசித்துக் கொண்டே இருப்பேன்

இறுதியாக எனது கவிதைகள். நண்பர் பரஞ்சோதியின் செல்ல மகள் சக்திக்காக எழுதிய கவிதை எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த கவிதைகளில் ஒன்று. அடுத்தது தீபங்கள் பேசும் தொகுப்பு. இந்த தொகுப்பில் எனக்கு சில இ‏ன்ப அதிர்ச்சிகள் நண்பர்களால் கிடைத்திருக்கிறது. முக்கியமாக நா‎ன் கருதுவது ம‎ன்மதன் கவிதைகள். ஏற்கனவே மணல் வீட்டுப் பாடம் எ‎ன்ற மிகச் சிறப்பான கவிதையை நம் பழைய மன்றத்தில் தந்தவர். அதற்கு முரணாக தனக்குள் ‏இருக்கும் கவிஞனை கட்டி வைத்திருந்தவர். தயக்கம் கலைத்து துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறார். அத‎ன் உச்சமாய் எனது 29வது கவிதைக்காக அவர் எழுதிய மழைக் கவிதை ( இந்த மாதம் நிழற்படம் செய்பவர் ‏இந்தக் கவிதையை உபயோகித்தமைக்காக மன்னிக்கவும் ). அடுத்து அறிஞரும் பிரதீபும் எழுதிய கவிதைகள்...

கவிதைக்காகவே ஒரு நிழற்படம் செய்யலாம் போலிருக்கிறது. ஆனால் நா‎ன் லேசாகவே தொட்டிருப்பதாய் உணர்கிறேன்..

அடுத்தது சிறுகதைகள், தொடர்கதைகள்...


ஊர்ச் சாத்தரை - இளையராஜாவி‎ன் ஒரு பாட்டு. சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? இதை வாசித்து‏ கொண்டிருக்கும் போது உதடுகள் தானாக முணுமுணுத்தது. பிறந்த மண் ஒவ்வொருவரி‎‎ன் வாழ்க்கை அழியாத, அழிக்கப்பட முடியாத சுவடு. எங்கு கிளை பரப்பினாலும் வேர்களில் அடையும் குளுமை போல ஈடான ஒன்று உலகத்தில் கிடையாது. பிறந்த மண்ணைப் பேசும் போது எப்போதும் நம்மையறியாமலேயே ஒரு இ‏னம்புரியாத உணர்ச்சி பரவும். அந்த பரவசத்தை மொழியில் கொண்டு வர மிகுந்த ஆற்றலும் ஆளுமையும் வேண்டும். அத்தனை ‏இயல்பாக அமைந்திருந்தது ஊர்ச் சாத்தரை. அந்த கிராமத்தில் ஒருவனாக்கி வாசிக்க வைத்திருக்கிறார் ‏இனிய‎ன். வாழ்த்துக்கள். இது போன்‎ற படைப்புகள் நண்பர் ராம்பால் சொன்னது போல இலக்கிய பகுதியில் இ‏ருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ராகவ‎ன் எழுதிவரும் பதுமைகள் சொல்லாத - தொடர்.

நண்பரி‎‎ன் இந்த தொகுப்பை இதற்கு முன் படித்ததில்லை. புது மன்றத்திலும் இரண்டு பகுதிகள் ( பாகம் 7, 8 ) மட்டும் இ‏ருப்பதால் அது குறித்து முழுமையான பார்வை எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இ‏ங்கு சில விசயங்களை எ‎ன்னால் குறிப்பிட முடியும். அது அவரின் எழுத்துநடை, கதை சொல்லும் திறன். இந்த நுணக்கங்களில் ஒரு தெளிவு தெரிகிறது. செய் நேர்த்தி உள்ள படைப்புகள். அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருப்பதற்கு வாழ்த்துக்கள் ராகவ‎ன். வாய்ப்புக் கிடைத்தால் முழுவதையும் படித்துவிட்டு எனது கருத்துக்களை சொல்லுகிறேன்.


நம் ம‎ன்றத்தின் படைப்புகளில் மிகுந்த கவனம் பெறுபவை ராம்பாலி‎ன் படைப்பும், நண்பனின் படைப்பும். சில நேரங்களில் இவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் கூட இலக்கிய பாடங்களாக இருக்கும். அவர்களின் இருவரின் படைப்பும் இந்த மாதத்தில் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முதலாவதாக ராம்பாலி‎‎ன் இரண்டு சிறுகதைகள் இடம் பெயர்தல் மற்றும் அகலிகை வம்சம்.


இடம் பெயர்தல்

தலைப்பே சொல்லி விடுகிறது அத‎ன் கனத்தை. ‏இடம் பெயர்தலின் வேதனையை குழந்தைகள் மட்டுமே அறியாதவர்கள். அந்த பாத்திரத்தி‎ன் மூலம் கதை சொல்லி அந்த வலியை புரிய வைக்க ராம்பால் போன்றவர்களாலே முடியும். அவள் இருக்கும் வீடு, தினந்தோறும் வேடிக்கை பார்க்கும் வேதனை மனிதர்கள், அதை அறியாமல் அவர்களை அழைக்கும் குழந்தத்தனத்தை, ஆக்கிரமிப்பின் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களின் அவல நிலை, ஆதிக்க சக்திகளின் வெறிகளுக்கு பலியாகிப் போன மனிதர்களின் வாழ்வியல் துயரங்களை மிகத் துல்லியமாக படம் பிடித்திருக்கிறார். இறுதியில் அந்த குழந்தையும் இ‏டம் பெயர்தலை மிகப் பொருத்தமாக சொல்லியிருக்கிறார். மாடியிலிர்ந்தவரை அந்த குழந்தை சாலையோர பூக்களாக, பூத்து மணம் வீசி மகிழ்ந்ததையும் அதே மலர் டிரக் வண்டிகளின் சக்கரங்களில் நசுக்கப்பட்டதாக ஆகிப் போன அவர்களி‎ன் இடம் பெயர்தலையும் குறிப்பிட்டது மிகப் பொருத்தமாய் அமைக்கப் பட்டிருக்கிறது.

அகலிகை வம்சம்

அகலிகை வம்சம் வித்தியாசமான சிறுகதை. உளவியல் ரீதியாக அணுகப் பட்டுள்ள கதை. அகலிகை குறித்து முழு விபரம் தெரியாததால் சில விசயங்கள் எனக்கு பிடபடவில்லை. ஆனால் பல கேள்விகளை கேட்கிறது இந்தக் கதை என்று மட்டும் புரிகிறது.

நண்பனின் இறந்த காலத்திற்கு வயதில்லை.

ஒரு சிறப்பான சிறுகதை. சிறுகதையின் அனைத்து விதிகளையும் உள்வாங்கி வெளிப்பட்ட கதை. கதையின் பாத்திரங்கள், கதைக்களம், சொல்ல வந்த செய்தி என அனைத்து நிலைகளிலும் சிறப்பானதாக அமைந்திருக்கிறது. சொல்லப் பட்ட முறை சற்று வித்தியாசமாகவும் அதே வேளையில் இயல்பாகவும் இருந்தது ஒரு நல்ல வாசிப்பை தந்தது...அடுத்ததாக இலக்கியங்கள், புத்தகங்கள் பகுதியில் பப்பி அவர்களால் தொடங்கப்பட்ட திரி மின்மினிகளால் ஒரு கடிதம் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய அருமையான கஜல் தொகுப்பு கவிதைகள். அதை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. நண்பர்கள் அந்தத் திரியை தொடர்ந்தால் மன்றக் கவிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

அடுத்ததாக ஆங்கிலத்தில் எழுதும் ‏இந்திய கவிஞர்கள் தொகுப்பில் ஆந்திரக் கவிஞர் நாரா எழுதிய கவிதையினை நண்ப‎ன் பதித்திருந்தார். வார்த்தைகளில் மட்டும் கவிதைகள் ‏இல்லை. வார்த்தைகளுக்கிடையேயான வெற்றுப் பரப்புகளிலும் கவிதைகள் ‏இருக்கின்றன என வெளிப்பட்ட கவிதை.

‏இனிய‎னின் - எனது ஆதர்ஷ ஆங்கில எழுத்தாளர்கள் எனும் திரி.‏ இந்தத் திரியை வாசிக்கும் போதுதான் பல ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களே எனக்குத் தெரிய வந்தது. இந்தத் திரியில் ராகவன்,பெரி, பிரதீப் ஆகியோரும் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். ஒன்றிரண்டு புத்தகங்களையாவது வாங்கி படிக்க வேண்டும். இந்தத் திரியையும் நண்பர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டுகிறே‎ன்.

இந்த பக்கத்தில் மிக அதிக கவனம் பெற்றது

பாரதியி‎‎ன் தேதியில்லாக் குறிப்புகள்.

நாம் அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்தி வைப்பவை எல்லாம் ‏இலக்கியங்களே.அந்த வகையில் நண்பர் ராம்பாலி‎ன் வற்புறுத்தலினால் சிறுகதைகள் பகுதியிலிருந்து இலக்கிய பகுதிக்கு மாற்றப்பட்ட தொகுப்பு இது. பாரதியி‎ன் எழுத்து வாழ்க்கையில் இந்த படைப்புகள் ஒரு மைல்கல்லே அவர் இதைவிட எவ்வளவு உயரம் போனாலும்.. முதல் நினைவு, குற்றாலம், செல்வதாஸ், நிச்சயமாக கனவு ‏இல்லை, நம்பிக்கை, லட்சுமி, கணேச‎ன், பிள்ளையார், முதல் புத்தகம், வீடு, முனிப்பாய்ச்சல் - பதில் தேடுகிறே‎ன் என பல பதிவுகள். மனிதருக்கு மிகுந்த ஞாபக சக்தி. அதை எழுத்தில் கொண்டுவரும் கலை அவருக்கு அழகாகத் தெரிந்திருக்கிறது. தனது நினைவுகளை அந்த மண்ணி‎ன் மன(ண )த்தோடு தந்திருக்கிறார். அத்தனையும் வித்தியாசமான செய்திகள். அவரி‎ன் எண்ணங்களில் மனிதர்கள் முதல் பசுமாடு வரை, முனிப்பாய்ச்சல் முதல் பிள்ளையார் வரை என நீள்கிறது. ஒவ்வொரு பகுதியும் விரிவாகச் சொல்ல ஆசை. ஆனால் அதற்கு தனியாக ஒரு நிழற்படம் செய்ய வேண்டும். எனினும் நா‎‎ன் மிகவும் ரசித்த படைப்புகள் செல்வதாஸ், லட்சுமி, கணேசன், முதல் புத்தகம். குறிப்பாக செல்வதாஸ் எ‎ன்ற அற்புதமான மனிதரை, நேர்மையாளரை, சிறந்த தொழிற்சங்கவாதியை வரலாற்றில் பதிவு செய்திருக்கும் பாரதியி‎ன் எழுத்துக்கு தலைவணங்குகிறேன். நல்லவர்கள் எல்லாம் அதிக காலம் நம்மோடு ‏இல்லாமல் உலகத்தை விட்டே மறைந்துவிடுவது செல்வதாஸி‎ன் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டது மனதை கனக்கச் செய்தது.

அமீரகத்தில் ‏இருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய மின்னிதழ் துவக்குவைப் பற்றி ம‎ன்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்த நண்பர் பாரதிக்கு எனது சார்பிலும் துவக்கு குடும்பத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தது செய்திச் சோலை.


ம‎ன்றத்தினர் செய்திகளை அறிந்து கொள்ள வைக்கப்பட்ட பகுதி. உடனடிச் செய்திகள், மற்றும் தனித்தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளன். சென்றமுறை மிக அதிக கவனம் பெற்றது புதிய போப் அவர்களைப் பற்றியும், இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழர் முதலிடம் பெற்ற செய்தியும், சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியும் முக்கிய செய்திகளாய் இருந்தன.

அடுத்ததாக ரோஜா ம‎ன்றம்.

இது கணினி தொடர்பான பல் சந்தேகங்கள், புதிய மெ‎‎ன்பொருள் பற்றிய செய்திகள், இலவச மெ‎ன் பொருள்கள் பற்றிய செய்திகள், இணையங்கள் பற்றிய செய்திகள் என நண்பர்களுக்கு மிகுந்த பயந்தரும் பகுதி . இதில் தங்களை ஈடுபடுத்தி நண்பர்களுக்கு உதவிவரும் முத்து, மது, பாரதி, ‏இனியன்,ஜீவா,பரணி மற்றும் பப்பிக்கு மன்‎றத்தின் சார்பில் பாராட்டுகிறேன்.

விரைவில் இறுதிப் பாகம்..


---------------------------------------------------------------


நிழற்படம் - மூன்றாம் பாகம்கதம்பம் ம‎ன்றம்..


இது நான் அடிக்கடி உலா வரும் பகுதி. ம‎ன்றத்தில் Cinema என்பதை நான் திரைப்படம் என்று எடுத்து கொண்டு தொடர்கிறேன். முதலில் திரைப்பட விமர்சனங்கள் பாடல்கள் பகுதி. முதலாவதாக பழைய ம‎ன்றத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த ப(பா )ட்டுக்கோட்டை கலியாணசுந்தரனாரின்‎ பாடல்கள் தொகுப்பு. குறுகிய காலமே வாழ்ந்தாலும் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை. கவிதைகளாகட்டும் திரைப்பாடல்களாகட்டும் அது சமுதாயாத்திற்கு பய‎ன்படும் வகையிலே படைத்தவர் அவர். இது போன்ற பதிவுகளைப் பார்க்கும்போதுதான் இளசு அண்ணாவின் அற்புதமான பங்களிப்பு புரியும்.


அடுத்தது திரைப்பட விமர்சனங்கள், திரைப்பட பாடல்கள் விமர்சனங்கள். பழைய ம‎ன்றத்தில் லாவண்யாவால் தொடங்கப்பட்ட திரி. பிறகு பிரதீப் அதை தொடர்ந்தார். படைப்பதை விட விமர்சனம் செய்வது மிகக் கடினம். ஏனென்றால் ரசிப்புத்த‎ன்மை நம்மைப் பொறுத்தது, அதை பொதுமைப்படுத்த மிகவும் கவனம் தேவை. அந்த வகையில் நமது மன்றத்தில் அவ்வப்போது மிகச்சிறந்த விமர்சங்களை காண முடியும். தொடர்ந்து விமர்ச‎‎னம் செய்துவரும் பிரதீப், மன்மதன், இனிய‎ன், முத்து, சுவேதா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.


அடுத்தது இக்பால் அண்ணணால் தொடங்கப்பட்டு பிரதீப்பால் தொடர்ந்து எழுதப்பட்ட பார்க்கக் கூடிய வேற்றுமொழி திரைப்படங்கள் திரி - நிழற்படத்திற்காக பார்த்த போதுதா‎ன் அடடா இந்தத் திரியை அவ்வளவாக கவனிக்காமல் போய் விட்டோமே என்று நினைத்து கொண்டேன். வேற்று மொழிப்படங்களைப் பற்றிய செய்திகள் விமர்ச‎னங்கள் என அருமையான பகுதி.

எல்லோருக்காகவும் விமர்ச‎னம் தரும் பிரதீப் என் பங்கு எங்கே?

சுவேதாவால் தொடங்கப்பட்ட கண்டுபிடியுங்கள் திரைப்பட பெயர்களை பகுதி - நல்ல பகுதி. ம‎ன்றத்து நண்பர்களின் திரைப்பட அறிவுக்கு சரியான தீனி.


பிரதீப்பின் புதுப்பட பாடல்கள் விமர்சன்ம் திரி. பாடல்கள் என்பது அனைவருக்குமே இதம் தருபவை. அவைப் பற்றிய விமர்சனங்களை எழுதும் போது தன் மனதுக்கு பிடிக்கும் பாடல்களை தந்த ‏இசையமைப்பாளரின் பாடல்கள் மீதான தாக்கம் அதிகம் இருக்கும். அதையும் தாண்டி தா‎ன் ரசித்த பாடல்களை பற்றி தந்த திரி இது, துபாய் வந்தப் பிறகு புதுப்பட பாடல்கள் கேட்பது மிக அரிதாகி விட்டது. இந்தத் திரியைப் பார்த்தபி‎ன் என்னென்னெ ஒலி நாடாக்கள் வாங்கலாம் எ‎‎ன்று தீர்மானித்திருக்கிறே‎ன். ( நா‎‎ன் கடைசியாக வாங்கியது 7G ரெயி‎ன்போ காலணி )


திரைப்பட பாடல்களில் வினாடி வினா. நா‎ன் மிகவும் விரும்பி பங்கேற்கும் பகுதி கவிதைக்கு அடுத்து. நிறைய சிறந்த பாடல்களை இங்கே காண முடியும். ‏இந்தத் திரியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


அடுத்த பகுதி திரையுலகச் செய்திகள், கிசு கிசுக்கள் பகுதியில் மனோ அண்ணா பதித்த தமிழ் திரையுலகி‎ன் சாதனைகள் நல்ல பதிவு. தமிழ் திரைத்துறையின் சில சாதனைகளை அழகாக பட்டியலிட்டு இருந்தார். திரியின் தொடர்ச்சியாக ராகவன் அளித்த தகவல்களும் அருமை. அடுத்து சந்திரமுகி படத்தி‎ன் வசூல் 50 கோடியைத் தாண்டும் எ‎ன்ற செய்தியை பரஞ்சோதி கொடுத்திருந்தார். ரசிகனாக நா‎ன் மிகவும் மகிழ்ந்தேன். இனிய‎ன் தினகர‎ன் - மெடிமிக்ஸ் நிறுவனத்தினர் வழங்கிய திரைப்பட விருதுகள் பட்டியலைத் தந்திருந்தார். சி‎ன்னத்திரை வானொலி விசயங்கள் திரியில் மலேசிய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டிருக்கும் 24 மணி நேர தமிழ் வானொலி இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது என்ற தகவலை மன்றத்தோடு பகிர்ந்து கொண்டார். தமிழ் வானொலி ஏற்படுத்திய மலேசிய அரசாங்கத்திற்கு ந‎ன்றி.தாமரை ம‎ன்றம்.


தாமரை மன்றத்தில் முதலாவதாக, பொது விவாதங்கள், அலசல்கள் பகுதியில் பரஞ்சோதியின்‎ நம்ம ஊரு நல்ல ஊரு. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் வட்டார மொழி நடையில் பேசிக் கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட திரி. வட மாவட்டங்களி‎ன் ஆதரவில்லாததால் பரவலாகமல் இருக்கிறதோ என்னவோ?
வாங்கண்ணே ஒரு கை பாத்துடுமோம். சிவ‎‎ன் கோவில் சர்ச் ஆயிடுச்சாமே என்றொரு பதிவு. விபரம் அறிந்த புதுவைக்காரர்கள்தான் இதை விளக்க வேண்டும். திறமையான இளைஞர்களின்‎ எதிர்காலம் - சொந்த முயற்சியால் ஆராய்ச்சி செய்து அதற்கு போதிய அங்கீகாரம் கிடைக்காத ‏இளைஞரை பற்றிய செய்தி ஆனந்த விகடனில் வெளியானதை ஒட்டி விவாதம் நடைபெற்றது. அடுத்து ஐவரணியி‎ன் அட்டகாசங்கள். புதிய ம‎ன்றத்தில் அணியில் சிறு சிறு மாற்றங்கள். பூ, மற்றும் சேரனுக்குப்பதில் ராகவனும், பிரதீப்பும் இணைந்து கொண்டனர். ஐவரணியும் அறிஞரணியும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது சில அருமையான நகைச்சுவைகள் கிடைக்கும் பகுதி. மணியா அண்ணாவி‎ன் அற்புதமான நகைச்சுவை உணர்வுகளை இப்பகுதியில் காணக்கிடைக்கும்.


பயனுள்ள செய்திகள், கட்டுரைகள்...


‏முதலாவதாக உலகின் பொருளாதரத்தில் முக்கியப்பங்காற்றும் நாடுகளைப்பற்றி முத்து பதித்திருந்தார். இதில் இந்தியா உலக உற்பத்தியில் நா‎ன்காம் இடம் பிடித்திருப்பது மிகவும் மகிழ்வான செய்தி.

அடுத்து அறிஞரால் துவக்கப்பட்ட போப் இரண்டாம் ஜா‎ன்பால் அவர்களைப் பற்றிய கட்டுரை. உலகெங்கும் வாழும் கத்தோலிக்க மதத்தவர்களி‎ன் தலைவராக விளங்கிய போப் அவர்களைப் பற்றிய பல செய்திகள் இந்தத் திரியில் இடம் பெற்றிருந்தது. அவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் செய்திகள் தந்த திருவருள், தேம்பாவாணி, அறிஞர் ஆகியோருக்கும எனது ந‎ன்றிகள். போப்பி‎ன் மரணத்திற்கு எனது அஞ்சலியையும் இணைத்துக்கொள்கிறேன்.


பிரட்டெ‎ன் உட்ஸ் எனும் தலைப்பில் உலக வங்கியும் அதன் உறுப்பினர்களையும் அது கடன் வழங்கும் முறைகளை என பல்வேறுவகையான செய்திகளை தந்திருந்தார், பிலிப்பைன்ஸ் முன்னால் அதிபர் உலக வங்கிப்பனத்தை தன் கணக்கில் மாற்றிக்கொண்டார் எ‎ன்ற செய்தி ‏இப்போதுதன் முத‎ன்முதலில் அறிகிறே‎ன். அமெரிக்க தலையிடுகள் காரணமாக உலகவங்கியின் கொள்கைகளும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது.


நண்பர் பாரதி கைபேசி திருட்டுப்போனால் எப்படி செயலிழக்க வைப்பது என்‎று மிகவும் பயனுள்ள கட்டுரையைத் தந்திருந்தார். அது தொடர்பான நண்பர்களின் சந்தேகங்களும் அதற்கு பாரதி சொன்ன பதில்களின் வாயிலாக கைபேசி பாதுகாப்பு குறித்து மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.


அடுத்து கல்வி மருத்துவம், பொருளாதாரம் பகுதியில்

நமது ம‎ன்றத்தின் நிர்வாகி ராசகுமாரனால் தொடங்கப்பட்ட தொழில் முனைவோ‎ன் தொடர். அவர் குறிப்பிட்டது போலவே இ‏ந்தத் தொடரரும் முதல் பாகத்தோடு நிற்கிறது. சுழற்சிமுறையில் நண்பர்களும் தொடரலாம் என்று கூட சொல்லியிருக்கிறார். ம‎ன்றத்தின் அனுபவசாலிகள் ‏இப்பகுதியில் பங்களித்தால் இளைஞர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.


கரிகால‎ன் அவர்கள் அ‎ன்றாட சந்தை நிலவரங்களை தெரிவித்துவரும் திரி மிகவும் பயனுள்ள திரியாகும்.


அடுத்தது அரசியல், ‎ஆன்மிகம் பகுதி.


இந்த இரண்டு தலைப்புகளையும் ஒரே இடத்தில் வைத்திருப்பது மிகவும் பொருத்தமாகும். ‏இரண்டுமே வெவ்வேறான நிலைகள் எ‎ன்றாலும் ஒ‎ன்றோடென்று நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவை. அந்தவகையில் ஆ‎ன்மிகத்தில் ஒரு திரி அரசியலில் ஒரு திரியும் இருக்கிறது. முதலில் ஆன்மிகத்திரியை எடுத்துக் கொள்கிறேன்.


சொல்ல சொல்ல இ‏னிக்குதடா - சொல்லச் சொல்ல இ‏னிப்பது தமிழ். அந்தத் தமிழில் அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதியிலிருந்து பாடல்களை எடுத்து அதற்கு இ‏னிக்க இனிக்க விளக்கம் தருகிறார் ராகவ‎ன். எழுதுவது ஒரு கலை என்றாலும் ஆன்மிகம் எழுதுவதற்கு திறமையோடு அருளும் வேண்டும். மிகப்பெரிய எழுத்தாளர்கள் கூட ஆன்மிகப் பதிவுகளில் தங்களது முத்திரையை பதிக்க முடியாத நிலை இருக்கிறது, ஆனால் ராகவனுக்கு அது இயல்பாய் வருகிறது. மொழிநடையைப் பார்க்கிற போது அதற்கான அவரது வாசிப்பு பற்றும் பயிற்சி தெளிவாகத் தெரிகிறது. ராகவனின் எழுத்துகளில் இந்தப் பகுதியே எனக்கு மிகவும் பிடித்தது.


அடுத்து அரசியலில் - தமிழை வாழ வைப்பது யார்? எ‎ன்ற கேள்வியோடு விவாதத்தை தொடக்கி இருக்கிறார் பிரதீப்... அது தொடர்பான பல்வேறு விவாதங்கள் நண்பர்களின்‎ பதிவுகளில் இருந்து காணக்கிடைக்கி‎ன்றன. இந்த திரி இன்னும் முடிவடையவில்லை விவாதத்தில் நானும் பங்கு பெற்றிருப்பதால் அது பற்றி மேற்கொண்டு எதுவும் தெரிவிப்பது உகந்ததல்ல.சமையல் அழகுக் கலை குறிப்புகள் பகுதியில் கண்களி‎‎ன் கருவளையம் நீக்குவதெப்படி எ‎ன்று சகோதரி சுவேதா பதிந்திருக்கிறார். குளோப் ஜாமுன்‎. நெய் உருண்டை செய்வது எப்படி என்று பப்பி அவர்கள் பதிந்திருக்கிறார், சாப்பிட்டு பார்க்கத்தா‎‎ன் முடியாது நம்மால். பப்பி இளசு அண்ணாவி‎ன் முருங்கை நினைவுகளைப் பதித்து இ‏ளசு அண்ணாவை மறுபடியும் நினைக்க வைத்துவிட்டார்.


வாழ்த்துக்கள் இதர தலைப்புகள் பகுதி இக்பால் அண்ணாவி‎ன் புத்தாண்டு வாழ்த்துக்களோடு தொடங்கியது.

ஜீவா (25.05.2005 ), ராகவ‎ன் (27.05.2005 ), கியோர் பிறந்தநாளிற்காக வாழ்த்துக்களையும் மற்றும் மணியா அண்ணா த‎ன் மணி விழாவிற்காகவும் (02.05.2005 ), மணியா அண்ணாவி‎ன் பேரனின் வயது பூர்த்தி விழாவிற்காகவும் (05.05.2005 ) வாழ்த்துப் பெற்றார்கள். அடுத்து ம‎ன்றத்தில் ஆயிரம் பதிவுகளைத்தாண்டியவர்கள் வரிசையில் ராகவனும் பிரதீப்பும் ‏இணைந்து கொள்ள கரிகாலன்ஜி 2000 பதிவுகளைத்தாண்டியவர்கள் வரிசையில் இணைந்து கொண்டார். நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..


ம‎ன்றத்து நண்பர்களை காணவில்லை என்று பரஞ்சோதி தவிப்பது போலவே பல நண்பர்கள் வராததை எண்ணி நானும் வருத்தம் கொள்கிறேன். அந்தப் பட்டியலில் என்னைச் சேர்க்காமல் இருந்தமைக்காக எனது சிறப்பு நன்றிகள்.ஏனிப்படி சொல்கிறே‎ன் என்றால் மன்றத்தின் நண்பர்களின் நெருக்கமான உணர்வும் உறவும் இருந்ததை. அதை கட்டியம் கூறும் வகையில் பாரதி பழைய மன்‎றத்தில் வெளிவந்த தமிழ்ம‎ன்றப் புத்தாண்டு தொடர்பதிவைப் பதித்திருந்தார். எத்தனை அற்புதமான, அன்னியோன்யமான தொடர்பதிவு அது.. நண்பர்கள் தொடருவார்கள் என்று நினைக்கிறேன்.


இறுதியாக குறிஞ்சி ம‎ன்றம்.


இதில் ஓட்டெடுப்பு,போட்டிகள், பண்பட்டவர்கள் பகுதியில் மே மாதம் முடிய எந்த திரியும் தொடங்கப்படவில்லை.பழைய ம‎ன்றத்தில் தொடங்கப்பட்ட புத்தக களஞ்சியம் திரி இ‏ங்கு யுனிகோடாக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.


நண்பர்களே எ‎‎ன்னுடைய இந்த நிழற்படம் முடிந்தவரை அனைத்து பகுதிகளையும் பார்த்து படித்தே பதிந்திருக்கிறே‎ன். நண்பர்கள் பாராட்டும் போது ந‎ன்றாக தொகுத்திள்ளீர்கள் என்‎று பாராட்டியிருந்தார்கள். நிழற்படம் எ‎‎ன்பது வெறும் தொகுத்தளித்தல் கிடையாது. அதை விமர்சனத்தோடே சொல்லியிருக்க வேண்டும்...

ந‎ன்றாக தொகுத்திருந்தால் அடுத்து முறையாவது நிழற்படமாகச் செய்ய முயற்சி செய்வே‎ன் எ‎ன்ற உறுதியோடு முடிக்கிறேன்..

பரஞ்சோதி
21-06-2005, 12:12 PM
படித்தேன், ரசித்தேன்.

தென்றல் என்னை தாலாட்டி விட்டு சென்றது.

மீண்டும் தென்றல் என் மீது எப்போ படும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

மன்மதன்
21-06-2005, 12:38 PM
பாராட்டுக்கள் பிரியன்..

சொன்னதை சொன்னபடி செய்திருக்கிறீர்கள்.

தென்றல் இதமாக வீசியது. அதன் குளுமையை இன்னும் அதிகரிக்க ஒருமுறை பதிவை திருத்துங்க. எழுத்துப்பிழை கொஞ்சம் இருக்கு. அதை விட முக்கியம் பாராகிராஃபாக இருப்பதை கொஞ்சம் கலர் வித்தியாசம் கொடுத்து மாற்றுங்க. (
நான் அதை பண்ணவா??)

அன்புடன்
மன்மதன்

பிரியன்
21-06-2005, 12:44 PM
நீங்களே பண்ணுங்க மன்மதன். அலுவலகத்தில் வண்ணம் பூசும் பணி நடப்பதால் இணைப்பு துண்டிக்கப்போறாங்க

மன்மதன்
21-06-2005, 01:42 PM
பண்ணிட்டேன்.. தீபங்கள் பேசும் கவிதை தொகுப்பை விட்டுடாதிங்க..அதில் என்னுடைய கவிதைகளும் இருக்கு.
அன்புடன்
மன்மதன்

பிரியன்
21-06-2005, 01:45 PM
பண்ணிட்டேன்.. தீபங்கள் பேசும் கவிதை தொகுப்பை விட்டுடாதிங்க..அதில் என்னுடைய கவிதைகளும் இருக்கு.
அன்புடன்
மன்மதன்
உங்களுக்காகத்தான் நண்பா எழுதிக்கிட்டு இருக்கேன்.. கவலைப் படாதீங்க :) :) :)

மன்மதன்
21-06-2005, 01:47 PM
உங்களுக்காகத்தான் நண்பா எழுதிக்கிட்டு இருக்கேன்.. கவ லைப் படாதீங்க :) :) :)

:) :) :)

அன்புடன்
மன்மதன்

gragavan
21-06-2005, 02:10 PM
பிரியன் எங்களுக்கு என்றுமே பிரியன்தான். தென்றல் சுகமாகத் தொடங்குறது..இதமாக படர்கிறது....தொடங்கியது தொடரக் காத்திருக்கிறோம்.

pradeepkt
22-06-2005, 06:00 AM
அருமை என்பதைத் தவிர வேறு வார்த்தையில்லை

அறிஞர்
22-06-2005, 09:51 AM
அழகான பதிவு அன்பரே.. நேற்றே படித்தேன்.. நன்றாக இருந்தது....

திரும்ப மிகுந்த கருத்துக்களுடன் வருகிறேன்...

kavitha
22-06-2005, 10:39 AM
சுவாசிக்கும் ஆக்ஸிஜனும்
சூடாகி வீசும்
வெயில் காலத்தில்
நினைவை வருட வந்த
குளிர் தென்றல் நீ!

தென்றல்..........
எங்கெங்கு வீசினும்
அங்கங்கே அதன்
வாசனை தெரியும்

இங்கே நீ
அறுமலர் வாசனை
வீச வந்தாயோ!

சொற்களைத் திருடுகிறாய்!
பதிவுகளை நெருடுகிறாய்!
ஆனால்
நெஞ்சங்களையோ வருடுகிறாய்!!

நீ
தடையின்றி வீசுவது பிடித்திருக்கிறது
தவணையில் வீசுவது பிடிக்கவில்லை

ஏ! நேர பூதமே!
உன் கட்டவிழ்த்து விடு!

புன்னகைக்கு வரவேற்புரை எழுத
இந்த நிழற்படத் தென்றல்
கை வீசி வரட்டும்

நாங்கள்
அடுத்த தவணைக்காக
காத்திருக்கிறோம்


என்றும் நட்புடன்,
கவிதா

மன்மதன்
22-06-2005, 10:43 AM
கவிதையால் பிரியனை உற்சாகப்படுத்தும் கவிதாவுக்கு என் நன்றிகள்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
22-06-2005, 11:04 AM
வாழ்த்துச் சொன்ன பரஞ்சோதி, மன்மதன், ராகவன்.பிரதீப், அறிஞர், கவிதா அனைவருக்கும் நன்றி. கவிதா உங்கள் கவிதை இன்னும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. இன்னும் இரண்டு பாகங்கள் இருக்கின்றன. ஞாயிற்றுக் கிழமைக்குள் அடுத்த பாகங்களைத் தர முயற்ச்சிக்கிறேன்

gragavan
23-06-2005, 05:00 AM
கவிதா, பேருக்கேத்த மாதிரி கலக்கீட்டீங்க....அருமை..அருமை

அறிஞர்
23-06-2005, 07:50 AM
ஒரு கண்ணாடியைப் போல ம‎ன்றத்தின் ஏற்ற இறக்கங்களை மிகத் துல்லியமாக படம் பிடித்த பகுதியாய் இ‏ருந்தது. புதிய இடத்தில் நிழற்பட பதிவி‎ன் தேவை மிக அவசியமானது.

சரியாக சொன்னீர்கள்..... ஏற்ற, இறக்கங்களை துல்லியமாக படம் பிடித்தல் படைப்பாளிகளுக்கும், தளத்திற்கும் முக்கியமானது... சில நேரங்களில் திசை தெரியாமல் தடுமாறியது உண்டு...... இந்த பதிவு அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை


அதே போல பெயர் மாற்றம் பகுதியி‎ன் வாயிலாக பல நண்பர்கள் தங்கள் பெயர்களை ஆங்கிலத்திலிருந்து அழகுத் தமிழில் மாற்றிக் கொண்டனர். எந்த தேவை இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.... உடனுக்குடன் தீர்க்க முயலுகிறோம்.
இ‏ந்தப் பகுதியை குறிப்பிடும் போது மறக்காமல் சொல்ல வேண்டிய ஒரு பகுதி. பழைய திஸ்கி பதிவுகளை யுனிகோடாக மாற்றும் பெரும்பணி. .......‏இந்தப் பணியில் இணைய ஆர்வம் உள்ள நண்பர்களை அழைக்கிறே‎ன். பத்துக்கரங்கள் இருபதானால் இன்னும் விரைவாக முடித்துவிடலாம். ஆர்வமுள்ள நண்பர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களையும் இ‏ணைத்து யுனிகோடாக்கும் குழுவை விரிவு படுத்தலாம். நல்ல எண்ணம்.... இது மிகப்பெரிய பணி.... அனைத்து பதிப்புகளையும் கருத்துக்களுடன் மாற்ற முயன்றோம். ஆனால் முழு மூச்சுடன் செயல் படுத்த இயலவில்லை.... புதிய மென்பொருளை எதிர் நோக்கியிருக்கிறோம்....புதிய மன்றத்தின் இளவேனில் பகுதி இது. சிரிப்புகள் பலவிதம். ஒவ்வொ‎ன்றும் ஒருவிதம் எ‎ன்று அமைந்திருக்கிறது. ....... எ‎ன்னடா இது சிரிப்புகள் விடுகதைகள் பகுதியில் வெறும் சிரிப்பை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்கிறீர்களா. மொத்த கடிகளையும் வாசித்து மீண்டு வர சிறிது நேரம் ஆகத்தானே செய்யும். எல்லாவற்றையும்... நன்றாக ஆராய்ந்துள்ளீர்

சுவேதாவின் ‏இரண்டு திரிகள் கண்டுபிடியுங்கள் மற்றும் சுவேதாவி‎ன் வினாடி வினா. முதலில் என் கருத்து இந்தப்பகுதியை பொது அறிவுப்பகுதியில் ஒரு இணைப்பாக கொடுத்து விடலாம். அந்த அளவிற்கு மக்கள் இணையத்தை துளைத்தெடுக்க வைக்கும் கேள்விகள். இந்த நீதிமன்றத்தில் ஆதாரங்கள் இல்லாமல் எதுவும் செல்லுபடியாகாது. சில நேரங்களில் ஆதாரங்களுமே தள்ளுபடி ஆகி விடும். ம‎ன்றத்தில் மிக அதிகமான பதிவுகள் கொண்ட பகுதி ‏இது. தொடர்ந்து உயிர்ப்போடு நடத்தி வரும் சுவேதாவிற்கும் பங்கேற்கும் நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள் சில நேரங்களில் ஆதாரங்களுமே தள்ளுபடி ஆகி விடும் என்ற வரி சிரிக்க வைக்கிறது...
அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த பகுதி.. கவிதைகள், பாடல்கள்


விரைவில் இரண்டாம் பாகமாக தென்றல் வீசும்.....
ஒவ்வொரு கவிதையும் சிறப்பாக.. படம் பிடித்த காட்சி அருமை... சில கவிதைகளை படிக்க இயலவில்லை.. இப்போது தங்கள் பதிவு படிக்க தூண்டுகிறது......

ஆரவாரமில்லாமல்...
அமைதலாய்
வீசிய தென்றல்....

உள்ளதை....
உள்ள வண்ணமாக...
வில(/ள )க்கி
உலகிற்கு காட்டிய...
தென்றல்.....

இன்னும் வீச
ஆவலுடன்
காத்திருக்கிறோம்

பிரியன்
26-06-2005, 05:34 AM
இரண்டாம் பாகம் இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=108727&postcount=1) இணைக்கப்பட்டுள்ளது.

மன்மதன்
26-06-2005, 11:52 AM
இரண்டாவது பதிவும் கலக்கல். .. மூன்றாவது பதிவை எதிர்நோக்கி..
அன்புடன்
மன்மதன்

(இந்த பதிவின் மூலம் நின்று போன நல்ல தலைப்புகள் எல்லாம் புத்துயிர் பெறும் என நினைக்கிறேன்..)

thempavani
26-06-2005, 12:53 PM
நன்றாக தொகுத்துள்ளீர்கள் பிரியன்.. வாழ்த்துக்கள்..

(தலைப்பை இரண்டாம் பாகம் என மாற்றிவிடுங்களேன்..)

பிரியன்
26-06-2005, 12:57 PM
நன்றி தேம்பா - நீங்களே செய்துவிடுங்களேன்.

gragavan
27-06-2005, 05:44 AM
ஒவ்வொன்றையும் பற்றிச் சொல்லுமுன் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் நீங்கள் சொல்வதில்லை. அது நீங்கள் எழுதியிருக்கும் விதத்திலிருந்தே தெரிகிறது. அருமை பிரியன்.

பரஞ்சோதி
27-06-2005, 05:49 AM
மிக அருமையான நிழற்படம், குறுகிய காலத்தில் வெளியே வந்த அருமையான நிழற்படம்.

கவிதைகளையும், கதைகளையும் விமர்சித்தது மிக மிக அருமை.

மூன்றாவது பாகத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பிரியன்
27-06-2005, 07:45 AM
நன்றி ராகவன், பரஞ்சோதி.....

pradeepkt
27-06-2005, 10:21 AM
அருமையான தொகுப்பு பிரியன்.

ஜீவா
27-06-2005, 10:26 AM
ரொம்ப அருமையாக தொகுத்துள்ளீர்கள் பிரியன்.. என் கிறுக்கலுக்கு கிடைத்த பாராட்டுக்கு மிக்க நன்றி..

பிரியன்
28-06-2005, 11:02 AM
நன்றி பிரதீப், ஜீவா, நாளைக்குள் எப்படியாவது இறுதி பாகத்தை பதித்து விடுகிறேன்....

kavitha
28-06-2005, 11:05 AM
இப்பதிவினைப் படித்த பின்பு தான் இன்னும் நிறைய பதிவுகளைக் கண்ணால் கூட பார்க்காமல் இருக்கிறேன் என்பது தெரிகிறது; முக்கியமாக இலக்கிய பக்கம்.

" கவிதைக்காகவே ஒரு நிழற்படம் செய்யலாம் போலிருக்கிறது." - இது என்னவோ உண்மைதான்! அவ்வப்போது அந்தக்குறை ஒரு சிலரால் களையப்பட்டிருக்கிறது. எழுதுவது ஒரு கலை என்றால் அதை வாசித்து பாராட்டுவது அதனை ஊக்குவிக்கும் மற்றொரு கலை. உண்மையான, நடு நிலையான விமர்சனங்கள் தாம் எழுத்துக்குக் கிடைக்கும் சிறந்த மரியாதை! விருதுகள், பரிசுகளை விடவும் உயர்ந்தது. அத்தகைய மதிப்பீடுகள் செல்லும் பாதையைச் சீர் செய்யும்; மீண்டும் எழுதத்தூண்டும்; மாதிரியாகவும் அமையும்.

"அதை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. நண்பர்கள் அந்தத் திரியை தொடர்ந்தால் மன்றக் கவிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்."
விமர்சனம் என்பதை விட கருத்துக்கள் எனும்போது அங்கே கர்வம் உடைந்துவிடும் பிரியன்.
உங்களது கருத்துகளை ( பேச்சுரிமை நாட்டில் ) சொல்வதில் தவறொன்றுமில்லை.

"சிறுகதைகள் பகுதியிலிருந்து இலக்கியப் பகுதிக்கு மாற்றப்பட்ட தொகுப்பு இது
.... ஆனால் அதற்கு தனியாக ஒரு நிழற்படம் செய்ய வேண்டும்"
மேம்படுத்தப்பட்ட நிலையிலிருந்தே அதன் தரத்தினை அறிந்துக்கொள்ளமுடிகிறது.
பாரதி அவர்களுக்கு பாராட்டுகளுடன், மேலும் எழுத வாழ்த்துகள்.
மேலும் ஒரு விண்ணப்பம்; கதை எனும்போதே அதன் உண்மை அங்கே மறைக்கப்பட்டு விடுகிறது. நிகழ்வில் நிகழும் சம்பவங்களைத் தொகுப்பதற்கு தமிழில் வேறு பெயர் இருக்கிறதா?
தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறுங்கள்.

துவக்கு இதழில் "இறந்தகாலத்திற்கு வயதில்லை" படித்தேன். அனுபவப்பகிர்வோ என்னும் அளவிற்கு இயல்பாக கதை வந்திருந்தது.

கணினி என்றதும் நினைவுக்கு வருகிறது. பாடத்திற்காகவே துவங்கப்பட்ட ஐலவ்தமிழ் எந்த அளவில் உள்ளது?

விரிவான அலசலுக்கு நன்றி பிரியன். அடுத்த பதிவும் சிறப்பாக அமைய மகிழ்வோடு வாழ்த்துகிறேன் :)

பிரியன்
28-06-2005, 11:15 AM
கவிக்கோவைப் பற்றி சொன்னது - எனது பயிற்சியின்மையைத்தான். அவர் உபயோகப்படுத்தும் வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்ததை புரிந்து வாசிப்பவற்கு மிகச் சிறந்த செய்திகள் கிடைக்கும். நீங்கள் குறிப்பிட்டவுடன் சமீபத்தில் மரத்தடி குழுமத்தில் கவிக்கோ தொடர்பான ஒரு விவாதம் ஞாபகத்திற்கு வருகிறது.. கவிக்கோவின் வரிகளை புரிந்து கொள்ளாமல் அவர் ஆபாசமாக எழுதுகிறார் என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள். எனது கருத்து கவிதைகள் புரிய இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்பதே

Nanban
28-06-2005, 07:53 PM
பிரியனுக்கு,

துவக்கு இதழ் குறித்து, தமிழ் மன்றத்தில் முதலில் தகவல் கொடுத்தவர் - பரஞ்சோதி. நன்றிகள் அவருக்கு உரித்தாகுகின்றன.

இறந்த காலத்திற்கு வயதில்லை - சிறுகதை குறித்து கவிதா எழுதியிருப்பது உண்மை தான். அது ஒரு அனுபவப் பகிர்வு தான். இது குறித்து மரத்தடியில் ஒரு சின்ன விவாதம் கூட நடந்தது. அதையும் பதிந்து வைத்திருக்கிறேன் - தமிழ் மன்றத்தில். முழு விவரமும் வேண்டுபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை சுட்டுங்கள்:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4881

நிழற்படம் தவிர்த்து - கவிதைகளைப் பற்றி சிறு சிறு ஆய்வுகளும் அவ்வப்போது நிகழும். ராம்பால், இளசு, மற்றும் நான் முன்னாளில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தோம். நடுவே சற்று தொய்வு ஏற்பட்டது உண்மை தான். அந்தக் குறையை ராம்பால் அவர்களின் தீபங்கள் பேசும் கவிதைத் தொகுப்பிற்கு எழுதப் பட்ட ஆய்வுரை நீக்கியது. ஆனால், புதிய மன்றத்தில் இன்னமும் கவிதைகள் முழு வீச்சில் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அதற்கான காரணங்களில் ஒன்று - மன்ற நண்பர்கள் இப்பொழுது மற்ற தளங்களிலும் பிரவேசிக்க ஆரம்பித்து விட்டார்கள். மற்றொன்று வலைப் பூக்கள் - எல்லோரும் அதில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பதாகக் காண்கிறேன் - பாருங்கள் மன்மதன் கொடுத்த மன்றத்து நண்பர்களின் வலைப்பூக்கள் என்ற திரியை.

மன்றத்தில் இன்றைய சூழலில் கவிதைப் பக்க ஆர்வலர்களின் கவனம் அனைத்தையும் தன் பக்கம் திருடிக் கொண்டவர் - மன்மதன் தான். குட்டிக் குட்டி கவிதைகள் மூலம் - கவனம் கொள்ள வைக்கிறார். விரைவிலே மன்றத்தின் உள்ளம் கவர் கள்வனாக ஆகக் கூடும். ஏனென்றால், என்னைப் போன்றவர்களால் ஒரு தீவிர தளத்தில் மட்டுமே இயங்க முடிகிறது. மன்மதனால் எல்லாத் தளங்களிலும் இயங்க முடிகிறது.

மேலும் கவிதைகளுக்குத் தேவை - spontaneity - இயல்பான உந்துதல் - இருந்தால் மட்டுமே காதல் கவிதைகள் நன்றாக வரும். மேலும் காதல் கவிதைகள் எழுதுவதற்கு சில சமயம் நாசூக்கான பொய்களும், இளமைக் குறும்புகளும் தேவையாயிருக்கின்றன. வயதிருக்கும் இளம் கவிஞர்களால் தான் அது முடியும். உதாரணத்திற்கு - தீபங்கள் பேசும். சில கவிதைகள் அங்கு வெகு சிறப்பானவை. அதிலிருந்து ஒரு கவிதையை எடுத்து - துவக்கு முதல் இதழில் பயன்படுத்ததிக் கொண்டோம். என்னைப் போன்றவர்களின் காதல் கவிதைகளில் சிந்தனை தூக்கலாகப் போய்விடுகிறது. இளமைக் குறும்பும், பொய்களும் சற்றுக் குறைவாகிவிடுகின்றன. ஒருவேளை காதல் மயக்கம் தீர்ந்து போய், இப்பொழுது எதார்த்த பார்வைகள் அதிகமாகிப் போய்விட்டதினாலும் கூட இருக்கலாம்.

ஆனாலும், எந்த ஒரு கவிஞனும் காதலைப் பற்றிக் கவிதை எழுதாமல் - கவிஞனாகி விட முடியாது. ஏனென்றால் காதல் தான் கூர்ந்து கவனிக்கும் சக்தியை - நேசிப்பைத் தருகிறது. கூர்ந்து கவனிப்பது - பெண்களை விட்டு விலகும் பொழுது, அந்தப் பார்வை கூர்மை மற்றவற்றிற்கு கிடைக்கிறதோ - என்னவோ...?

அதுசரி - முடிக்கும் முன் - துவக்கு இதழுக்காக நாங்கள் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கவிதை -

நகைக் கடை
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...

மன்மதன்
29-06-2005, 04:29 AM
மன்றத்தில் இன்றைய சூழலில் கவிதைப் பக்க ஆர்வலர்களின் கவனம் அனைத்தையும் தன் பக்கம் திருடிக் கொண்டவர் - மன்மதன் தான். குட்டிக் குட்டி கவிதைகள் மூலம் - கவனம் கொள்ள வைக்கிறார். விரைவிலே மன்றத்தின் உள்ளம் கவர் கள்வனாக ஆகக் கூடும். ஏனென்றால், என்னைப் போன்றவர்களால் ஒரு தீவிர தளத்தில் மட்டுமே இயங்க முடிகிறது. மன்மதனால் எல்லாத் தளங்களிலும் இயங்க முடிகிறது.


மிக்க நன்றி நண்பன்..

உங்கள் இந்த பதிவு ஒரு எக்ஸ்பிரஸ் வேக நிழற்படம் மாதிரி அமைந்து விட்டது. பாராட்டுக்கள்..

அன்புடன்
மன்மதன்

பிரியன்
29-06-2005, 04:46 AM
பிரியனுக்கு,

துவக்கு இதழ் குறித்து, தமிழ் மன்றத்தில் முதலில் தகவல் கொடுத்தவர் - பரஞ்சோதி. நன்றிகள் அவருக்கு உரித்தாகுகின்றன.
..

ஆமாம் நண்பனே... நிழற்படத்தின் இரண்டாம் பாகம் செய்த பொழுது பாரதியின் தேதியில்லா குறிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பரஞ்சோதி என்று தட்டச்சு செய்வதற்குபதில் அனிச்சையாக பாரதி என்று தட்டச்சு செய்துவிட்டேன்.. பாரதியின் மாற்றங்கள் சிறுகதை துவக்கு இரண்டாவது இதழில் வெளியாகியிருந்ததை இனிமையாக நினைவு கூறுகிறேன்.

நன்றி

அறிஞர்
30-06-2005, 07:03 AM
மீண்டும் அழகான வடிவம் கொடுத்து விட்டீர்கள்.. பிரியன் வாழ்த்துக்கள்.....

நண்பனின் அலசல்களும் வெகு அருமை...

kavitha
04-07-2005, 04:13 AM
"நகைக் கடை
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்..."

அதில் போட்டிருப்பது தான் அவரது இயற்பெயரா?
ஒவ்வொரு படைப்போடும் அவர்களது நிழற்படங்களையும் காணமுடிந்தது. நன்றி நண்பன்.

பிரியன்
04-07-2005, 04:39 AM
ஆமாம் கவிதா.. இந்த தருணத்திலே எனது இயற்பெயரை சொல்லிவிடுவதுதான் நலம். நான் எனது சொந்தப்பெயரிலேயே தொகுப்பை வெளியிட இருக்கிறேன்...
மன்றத்து நண்பர்களாவது புத்தகம் வாங்க வேண்டுமே :) :) :) :)

பிரியன் - மு.முத்துகுமரன்

mythili
04-07-2005, 11:01 AM
இரண்டு பாகங்களையும் இன்று தான் படித்தேன்.

அருமையா கொடுத்து உள்ளீர்கள் பிரியன். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மைத்து

பிரியன்
04-07-2005, 11:06 AM
நன்றி மைதிலி. பணிப்பளுவினால் மூன்றாவது பாகம் தாமதமாகிறது. இன்றைக்குள் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்...

பிரியன்
04-07-2005, 01:35 PM
மூன்றாம் பாகம் இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=108727&postcount=1) இணைக்கப்பட்டுள்ளது.

thempavani
04-07-2005, 02:24 PM
பிரியன் பெயர் மாற்றியிருக்கிறேன்..சரியா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..

பிரியன்
04-07-2005, 02:25 PM
சரியாக இருக்கிறது. மூன்று பாகங்களையும் அடுத்தடுத்து வருமாறு இணைக்க முடியுமா அல்லது மூன்று பாகத்திற்கும் தனித்தனி சுட்டிகள் கொடுக்க இயலுமா?

thempavani
04-07-2005, 02:31 PM
மூன்றையும் தனியா பிரித்தால் தனித்தனி சுட்டிகள் கொடுக்கலாம்... இந்தப் பதிவு நண்பர்கள் வாசித்த பின்பு ஒரே பெயரில் கொடுக்கப்பட்டால் நலமாக இருக்கும் எனக் கருதுகிறேன்..அதாவது ஒரு பெயரில் ஒரே தொகுப்பாக...

அறிஞரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வோமே...

thempavani
04-07-2005, 02:32 PM
பிரியன் தங்களது கையொப்பத்தைக் கவனியுங்கள்...

பிரியன்
04-07-2005, 02:36 PM
ஏன் எதுவும் பிரச்சனையா - அல்லது திஸ்கிக்கு மாறி விட்டதா -

தாராளமாக அறிஞர், மன்மதன் வந்த பின்பே முடிவு செய்து கொள்ளலாம்

அறிஞர்
05-07-2005, 04:32 AM
என்ன செய்யவேண்டும் அன்பர்களே..

தனி தனியாக வேண்டுமானல் செய்து விடலாம்.

ஆனால் தொடர்ந்து வருவது போல் அமைப்பது கடினம் (தொடர்ந்து வருவது தேதியின் அடிப்படையில்).

அல்லது.. முதல் பாகத்தை எடிட் செய்து.. அதில் அனைத்தையும் இணைத்து பதிக்கலாம். தங்கள் விருப்பம் என்ன என தெரியப்படுத்துங்கள்..

மன்மதன்
05-07-2005, 04:33 AM
3 தனி பதிவுகளாக செய்ய வேண்டுமா??
-
மன்மதன்

பிரியன்
05-07-2005, 04:43 AM
முதல் பாகத்தை எடிட் செய்து இணைத்து விடுங்கள்

அறிஞர்
05-07-2005, 06:07 AM
மூன்று பாகங்களையும் இணைத்தது வெகு அருமை பிரியன்...

சிறிது நாட்களுக்கு இது ஸ்டிக்கியாக இருக்கட்டும்... அனைவருக்கும் நன்றாக இருக்கும்

thempavani
05-07-2005, 06:31 AM
பிரியன் உங்க கையெழுத்தில்

புதிய மன்றத்தின் நிழற்படம் - தென்றலே [பகுதி 2] (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=109394&postcount=16)

இவ்வாறு உள்ளது என்பதால் அதை மாற்றுமாறு கூறினேன்...அவ்வளவே...

மன்மதன்
05-07-2005, 09:10 AM
மூன்று பாகங்களுமே அருமையாக அலசப்பட்டுள்ளது.. சில பகுதிகள் பாதியிலேயே நிற்பது குறித்து கவலைப்பட்டிருக்கும் பிரியனின் ஆதங்கத்தை நண்பர்கள் படித்து, அந்தந்த பகுதிகளை தொடர வேண்டும்..

சொன்னது சொன்னபடி..பிரியன் வாக்கை காப்பாற்றி விட்டார். பிரியன் ஒரு நாள் என்னிடம் போனில் பேசும் போது நிழற்படம் பண்ணுவதாக நான் கேட்காமலேயே சொன்னார்.. நான் கூட நினைத்தேன்.. அலுவல் நேரத்தின் 3, 4 மாத கால பதிவுகளை கவர் பண்ணி நிழற்படம் கொடுக்க இவரால் முடியுமா என்று??

'சொல்லி அடிச்சேனடி' என்று இவ்வளவு அருமையான பதிவை கொடுத்து அனைத்து பகுதிகளையும் சோப் போடாமல் அலசி காயப்போட்டிருக்கிறார்.. இந்த ஒரு கடின உழைப்புக்காக இந்த பதிவை நம் அனைவரின் சார்பாகவும் ஸ்டிக்கியாக்கி இருக்கிறோம்.

பிரியன் மன்றத்தில் தமிழ் பணி ஆற்றி, பலப்பல படைப்பு படைத்து நமக்கு பறிமாறுவார் என்ற ஆசையில், அனைவரின் ஆசியுடனும், பாராட்டுக்களுடன் , தமிழ் மன்ற உறவுகள் சார்பாக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..

எங்கள் பிரியமான பதிவு இது..

வாழ்க வளமுடன்..

நன்றி ..

அன்புடன்
மன்மதன்

பிரியன்
05-07-2005, 09:28 AM
இது மிக அதிகப்படியான பாராட்டகவே தோன்றுகிறது மன்மதன். மன்றத்தில் தொடர்ந்து வரும் பலரே இன்னும் தங்கள் கருத்துகளை பதிக்கவில்லை. இதுதான் தொய்வுக்கு காரணம். வெறும் பாரட்டுக்கள் எழுத்தை முடக்கி போட்டு விடும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுதலையும் சேர்த்தே எதிர் பார்க்கிறேன். மற்றபடி ஸ்டிக்கியாக வைத்ததற்கு நன்றி. நண்பர்களின் அன்புக்கு மிக்க நன்றி..

மற்ற தளங்களில் எழுதுவதை விட தமிழ்மன்றத்தில் எழுதும் போது மிகவும் மகிழ்வேன். ஏனென்றால் இது உறவுகளாலான தளம்... என் மனதிற்கு மிகவும் நெருங்கிய தளம்....

mythili
06-07-2005, 04:35 AM
மூன்றாம் பாகமும் படித்தேன். நன்றாக உள்ளது ப்ரதீப் :)

அன்புடன்,
மைத்து

பிரியன்
06-07-2005, 04:41 AM
மூன்றாம் பாகமும் படித்தேன். நன்றாக உள்ளது ப்ரதீப் :)

அன்புடன்,
மைத்து


:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :confused: :confused: :confused:

மன்மதன்
06-07-2005, 05:02 AM
கண்டுக்காதிங்க பிரியன்.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கும்...
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
06-07-2005, 05:04 AM
தென்றலே - நிழற்படம் ( மூன்று பாகங்கள் ) (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=110734&postcount=49)மூன்றாம் பாகமும் படித்தேன். நன்றாக உள்ளது ப்ரதீப் :)

அன்புடன்,
மைத்து

கஷ்டப்பட்டு நிழற்படம் பண்ணின உங்க அணிக்காரரான பிரியனை விட்டு விட்டு கருத்து சொன்ன பிரதீப்பை :rolleyes: :rolleyes: பாராட்டும் மைத்து , எனக்கு அனுப்பின தனி மடல் பார்த்தேன்.. யூ ஆர் வெல்கம்.. :D :D
அன்புடன் :rolleyes:
மன்மதன்

gragavan
06-07-2005, 01:56 PM
இது மிக அதிகப்படியான பாராட்டகவே தோன்றுகிறது மன்மதன். மன்றத்தில் தொடர்ந்து வரும் பலரே இன்னும் தங்கள் கருத்துகளை பதிக்கவில்லை. இதுதான் தொய்வுக்கு காரணம். வெறும் பாரட்டுக்கள் எழுத்தை முடக்கி போட்டு விடும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுதலையும் சேர்த்தே எதிர் பார்க்கிறேன். மற்றபடி ஸ்டிக்கியாக வைத்ததற்கு நன்றி. நண்பர்களின் அன்புக்கு மிக்க நன்றி..
அதிகமில்லை ஜெண்டில்மேன். இது மிகக் குறைவு. ஆனாலும் பாராட்டுகள் மட்டும் போதாது. ஆனால் வேறென்ன செய்வது? திட்டுவதற்கு அடுத்த வாட்டியாவது கொஞ்சம் இடம் வையுங்கள். :) மொத்தத்தில் மிகவும் அருமையான பதிவு பிரியன். நான் இரண்டொரு பேர்கள்தான் சொல்லச் சொல்லவை படிக்கின்றார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்களும் படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
07-07-2005, 04:53 AM
இதற்கு ரொம்பக் கஷ்டப் பட்டிருக்கிறீர்கள் ப்ரியன்.
உங்கள் பணி உண்மையில் பாராட்டத்தக்கது. அனைத்தையும் படித்து அதன் மேல் "தற்குறிப்பேற்ற அணி" யைப் புகுத்தி, ஒரு மேல் பார்வை கொடுத்தமை மிக மிக நன்று.
போற போக்குல எனக்கும் பாராட்டுகளை வாங்கிக் கொடுத்ததுக்கு மிக்க நன்றி :D

kavitha
07-07-2005, 11:20 AM
மொத்தத்தில் அருமையான நிழற்படம் பிரியன்.

mania
08-07-2005, 07:15 AM
:) பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பிரியன்.....உன் உழைப்பை பாராட்டாமல் இருக்கவே முடியாது.....;)
அன்புடன்
மணியா...;)

பிரியன்
09-07-2005, 03:32 AM
நன்றி மைதிலி மன்மதன் ராகவன் பிரதீப் கவிதா மணியா அண்ணா. தங்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சியைத் தருகிறது.

Mano.G.
08-09-2005, 08:42 AM
தம்பி பிரியன் நினைவில் நீ எனது முதல் கவிதையல்ல.
ஏற்கனவே சில கவிதைகள் எழுதியுள்ளேன்.
என்னை கவிதை எழுத தூண்டியது நமது தமிழ் மன்றமே.

மனோ.ஜி

பிரியன்
08-09-2005, 08:56 AM
சரி அண்ணா. நான் படித்த தங்களது முதல் கவிதை என திருத்திவிடுகிறேன்.
நான் உங்கள் அந்தக் கவிதையைத்தான் முதன்முதறையாக வாசித்தேன்.

பிரசன்னா
10-09-2005, 12:47 PM
நன்றாக தொகுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

rajkanna_k290778
03-10-2006, 04:42 AM
parkka, padikka and elutha oru nalla thagaval thodarbu.. nanri

sarcharan
03-10-2006, 10:58 AM
parkka, padikka and elutha oru nalla thagaval thodarbu.. nanri
வணக்கம் ராசகண்ணா,:)
வருக, பதிப்புகள் தருக:) :)