PDA

View Full Version : உத்தேச பொதுக்கட்டமைப்பு உள்ளடக்கங்கள் எ



இளையவன்
13-06-2005, 06:27 AM
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான உதவி வேண்டி நிற்கும் தமிழ் மக்களுக்கான சர்வதேச நிவாரண உதவிகளைப் பகிர்ந்து கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பின் உள்ளடக்க விவரங்கள் வெளியாகி உள்ளன.


இதன் விவரங்கள்:

பொதுக்கட்டமைப்பின் தேவையும் நோக்கமும்:

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கான மனிதாபிமான தேவைகளுக்கான நிவாரணப் பகிர்வு, மறுவாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள,

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்தப் பணியை நிறைவேற்ற,

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் மீளமைப்புக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய,

இவைகளுக்காக இந்தப் பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

அமைப்பு

இந்த பொதுக்கட்டமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டது.

உயர்நிலைக் குழு,

பிரதேச வாரியான குழு (வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை)

மாவட்டக் குழுக்கள் (6 மாவட்டங்களுக்கு ஒரு குழு)

என்ற படிநிலைகளில் பொதுக்கட்டமைப்பு இயங்கும்.

செயற்பட உள்ள நிலப்பரப்பு:

கடலோரத்திலிருந்து 2 கிலோமீற்றருக்கு உள்ளான பகுதிகளிலேயே இப்பொதுக்கட்டமைப்பு செயல்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை இப்பொதுக்கட்டமைப்புக்கான ஒப்பந்தம் எவ்விதத்திலும் மாற்றியமைக்காது தொடர்ந்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்.

பாகுபாடற்ற நடவடிக்கை

இனம், மதம், மொழி அடிப்படையில் எந்த ஒரு நபருக்கு எதிராகவும் பாகுபாடு காட்டுவதை பொதுக்கட்டமைப்புக்கான ஒப்பந்தமானது தடை செய்கிறது.

செயற்பாட்டுக் காலம்

ஓராண்டு காலத்திற்கு மட்டுமே பொதுக்கட்டமைப்பு செயற்படும். இதில் பங்கேற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்டால் செயற்பாட்டுக் காலம் நீட்டிக்கப்படும்.

உயர்நிலைக் குழு செயற்பாடு

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக உதவி வழங்கும் நாடுகளால் அளிக்கப்பட்ட நிவாரணங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான விதிமுறை உருவாக்கும். மேலும் ஆலோசனை மற்றும் கண்காணிப்புப் பணிகளையும் இது மேற்கொள்ளும்.

பங்கேற்பாளர்கள்

இது 3 உறுப்பினர்களைக் கொண்டது. சிறிலங்கா அரசுப் பிரதிநிதி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பிரதிநிதி, முஸ்லிம் பிரதிநிதி ஆகியோர் இந்த உயர்நிலைக் குழுவில் இடம்பெறுவர்.

கண்காணிப்பாளர்கள்:

உதவி வழங்கும் நாடுகளில் 2 பிரதிநிதிகள் உயர்நிலைக் குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்பர்.

எந்த ஒரு முடிவும் மூன்று பிரதிநிதிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். மூன்று பிரதிநிதிகளிடமும் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் 14 நாள் கால அவகாசம் அளித்து உயர்நிலைக் குழுவிற்கான ஒத்துழைப்பை விலக்கிக் கொள்ளலாம்.

பிரதேச குழுக்களின் செயற்பாடுகள்:

திட்டங்களுக்கான முன்னுரிமை, அங்கீகரித்தல், நிர்வகித்தல் மற்றும் கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

இதில் மொத்தம் 10 உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

சிறிலங்கா அரசுப் பிரதிநிதிகள் இருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பிரதிநிதிகள் ஐந்து பேர், முஸ்லிம் பிரதிநிதிகள் 3பேர் இடம்பெறுவர். பாலின சமத்துவம் இந்தக் குழு நியமனங்களில் பேணப்படும்.

கண்காணிப்பாளர்கள்:

சர்வதேச உதவி வழங்கும் நாடுகளின் இரு பிரதிநிதிகள் இப்பிரதேசக் குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்பர். இதர பார்வையாளர்களையும் அழைக்கலாம்.

இக்குழு மேற்கொள்ளும் முடிவுகளுக்கு 7 உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியம்.

பிரதேச நிதி

6 மாவட்டங்களில் வழங்கப்படும் நிவாரணங்கள், மறுவாழ்வு மற்றும் மீளமைப்புப் பணிகளுக்கான பிரதேச நிதி உருவாக்கப்படும்.

பலதரப்பினரையும் உள்ளடக்கிய நிதியம் அமைக்கப்படும். இந்த நிதியத்தின் பாதுகாப்பில் இந்த நிதி இருக்கும்.

மாவட்டக் குழுக்கள்

செயற்பாடுகள்:

தேவைகள் என்ன என்பதை தெரிவித்தல், திட்ட ஆலோசனைகளை உருவாக்குதலும் பெறுதலும், திட்டங்களின் செயற்பாடுகளை கண்காணித்தல்

உறுப்பினர்கள்

இது 6 மாவட்டங்களில் மட்டுமே தற்போது இயங்கும். இக்குழுக்களில் போதிய முஸ்லிம் பிரதிநிதிகளும் இடம்பெறுவர். இக்குழுவிலும் பாலின சமத்துவம் பேணப்படும்.

பொதுக்கட்டமைப்பின் கீழான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் 6 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அரச, அரச சார்பு நிறுவனங்கள் வழமையான தனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.

இந்த அடிப்படைகளிலேயே உத்தேச பொதுக்கட்டமைப்பு வரைவு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அறிஞர்
13-06-2005, 06:52 AM
தெளிவாக கொடுத்த இளையவனுக்கு நன்றி...... அனைத்து... தமிழர்களுக்கு பணம் கிடைக்க வேண்டுவோம்...