PDA

View Full Version : ஜூன் 13, திங்கட் கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
13-06-2005, 05:51 AM
2009 இல் மலேசியாவின் முதல் நீர்மூழ்கிக்கப்பல்

மலேசியாவின் முதல் நீர்மூழ்கிக்கப்பல் 2009 ஆண்டின் மத்திக்குள் தயாராகி விடும் என துணைப்பிரதமரும், தற்காப்பு அமைச்சருமான Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.

France-ஐச் சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனம் DCN and Thales-உம் மலேசியாவும் இணைந்து மேற்கொள்ளும் இக்கட்டுமானப்பணி 35% நிறைவு பெற்றுள்ளது.

France-இல் நடைபெற்று வரும் அந்நீர்மூழ்கிக்கப்பலின் கட்டுமானத்தைப் பார்வையிட்ட பின்னர் துணைப்பிரதமர் இதை தெரிவித்தார்.

DCN நிறுவனத்தின் நீர்மூழ்கிப் பயிற்சிப் பள்ளியில் பயின்று வரும் 70 பயிற்சியாளர்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.

அந்த பயிற்சியாளர்களுக்கு நீருக்கடியில் வழங்கப்படும் பயிற்சிகளும் முழுமையாக அளிக்கப்படவுள்ளதாக Datuk Seri Najib தெரிவித்தார்.


மலேசியாவின் கருத்துக்கு இந்தோனேசியா ஆதரவு
மலாக்கா நீரிணையின் பாதுகாப்பை அந்தந்த கடல்பகுதியைச் சேர்ந்த நாடுகளே பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும், இதற்காக அந்நிய நாடுகளின் உதவியை நாடவேண்டியதில்லை என்னும் மலேசியாவின் நிலையை இந்தோனேசியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்நிய நாட்டுப் பாதுகாப்புக் கருவிகளையும், உபகரணங்களையும் பயன்படுத்தி மலாக்கா நீரிணை வட்டாரத்திலுள்ள மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளே அவ்வட்டாரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் என இந்தோனேசிய அதிபர் Susilo Bambang Yudhoyono தெரிவித்தார்.

மேலும் இப்பகுதியின் வலுவான பாதுகாப்புக்காக மூன்று நாடுகளின் ஆயுதப்படைத் தலைமை அதிகாரிகள் சந்தித்து கூட்டு நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டுமென இந்தோனேசிய அதிபர் விருப்பம் தெரிவித்தார்.



மலேசிய ஆயுதப்படைத் தலைமை தளபதி Tan Sri Mohd Anwar Mohd Nor மற்றும் இந்தோனேசிய அதிபருக்கு இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் இத்தகவல் வெளியிடப்பட்டது.

பல்லின மக்களின் ஒற்றுமையே மலேசியாவின் பலம்

நம் நாட்டிலுள்ள பல்வேறு இனம் மற்றும் மதம் சார்ந்த மக்களின் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் நம் நாட்டிற்கு பின்னடைவு அல்ல; ஆனால்,அதுவே நம் நாட்டின் பலம் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.

இந்த பலம் உலகிலுள்ள வேறெந்த நாட்டிற்கும் இல்லை என MERDEKA சதுக்கத்தில் நடைபெற்ற 2005-ஆம் ஆண்டின் Tadau Kaamatan and Gawai Dayak திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட போது பிரதமர் தெரிவித்தார்.

இந்த இன ஒற்றுமை,நாட்டின் அமைதிக்கும் சுபிட்சத்துக்கும் நிலையான அரசியல் சூழ்நிலைக்கும் ஆணிவேராக இருக்கின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.



மேலும் இதுபோன்ற பல்லின மக்களின் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுவதால்,அனைத்து இன மக்களிடையேயும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் வலுவடைகின்றது என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகரிக்கப்படும் மருத்துவக்கல்வி இடங்கள்

மருத்துவக் கல்விக்கான இடப்பற்றாக்குறையினால்,கடந்தாண்டு SPM தேர்வில் சிறப்பாக தேறிய 128 மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து,இவ்வாண்டு உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரித்ததுடன்,போதனை வசதிகள் மற்றும் மருத்துவக் கல்வி தொடர்பான உபகரணங்களின் தரத்தையும் உயர்கல்வியமைச்சு மேம்படுத்தியுள்ளது என அதன் அமைச்சர் DATUK DR.SHAFIE MOHD SALLEH தெரிவித்தார்.

கடந்தாண்டு,மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்காத அம்மாணவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் பயில கல்விக்கடனுதவி வழங்கப்பட்டது.



இம்மாத இறுதிக்குள், இவ்வாண்டின் பல்கலைக்கழக நுழைவிற்கான தகவல்கள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்தில் நான்கு பேர் பலி

குவாந்தான்-கோலாலம்பூர் 89.5-வது கி.மீ-இல் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் நான்கு பேர் மரணமுற்றனர்.

மேலும் ஆறு பேர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Kancil ரக கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த Toyota ரக கார் ஒன்றுடன் மோதி இப்பயங்கர விபத்து சம்பவம் ஏற்பட்டதாக Maran மாவட்ட போலிஸ் தலைவர் ASP Md Nor Ali தெரிவித்தார்.



இதனிடையே, அவ்விரு கார் ஓட்டுனர்களும் பயங்கர காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நால்வர் லேசான கயங்களுடன் Maran மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தீ விபத்து

பழைய கிள்ளான் சாலை, Lorong Seputeh-வில் சற்று முன்பு ஏற்பட்ட தீச்சம்பவத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு சாமான் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று முற்றிலும் தீயில் கருகி அழிந்தது.

நேற்று காலை ஏற்பட்ட இச்சம்பவத்தில், அப்பகுதியில் கடும் சாலை நெரிசல் ஏற்பட்டதாக தீயணைப்புப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும், சேத மதிப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



இத்தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்

சிங்கப்பூரில் இருந்து Port Klang நோக்கி வந்து கொண்டிருந்த MV New Glory என்ற கப்பல், நேற்று முன் தினம் Undan தீவுக்கு அருகே தீப்பிடித்து எரிந்தது.

அக்கப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உண்டான தீ, மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது என மலாக்கா கடல் போலீஸ் தலைமை அதிகாரியான ASP Rodzi Abu Hassan தெரிவித்தார்.

இவ்விபத்தினால் கப்பலின் 30 சதவீத பகுதி தீயில் கருகியது என்றும், அமெரிக்காவிலிருந்து 216 சரக்குப்பெட்டிகளை அக்கப்பல் ஏற்றி வந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கப்பலின்
மாலுமி உட்பட 19 சிப்பந்திகள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
நிறைவேறும் தமிழர்களின் நெடுநாள் கனவு

தமிழ்நாட்டின் தென்மாவட்ட மக்களின் நெடுநாள் கனவான சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழா வரும் 23ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் என தெரிகிறது.

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியக்கடல் பகுதியில் மிகப்பெரிய கால்வாய் தோண்டும் இத்திட்டத்தால், இனி கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்லாமல் தமிழகத் துறைமுகங்களை ஒட்டிச் செல்லும்.

இதனால் தமிழகத் துறைமுகங்கள் அபரிதமான வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலகோடி மதிப்பீட்டிலான இத்திட்டம் சுமார் 100 ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த விழா என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக சிறப்பு ரயில்கள் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

இலங்கைக்கு இந்தியா வழங்கும் நவீன பாதுகாப்புக்கருவிகள்

இலங்கைக்கு நவீன ராடார் கருவிகள் மற்றும் வான் பாதுகாப்பு சாதனங்களை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக உடன்பாடு செய்து கொள்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் 20 மின்னணு நூலகங்களை அமைக்கும் முன்னோடித் திட்டத்திற்கும் இந்தியா நிதி உதவி அளிக்கவுள்ளது. மேலும் 450 இலங்கை போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.



விடுதலைப்புலிகள் இயக்கம் விமானப்படையை நிறுவியுள்ளதாக வந்துள்ள தகவல்களை அடுத்து இரு நாட்டு அரசாங்கங்களும் இம்முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

வதந்தியால் வந்த வினை

கணினி வைரஸ்களைப் பரப்பி கணினிகளின் செயல்பாட்டைப் பாதிப்படையச் செய்யும் நபர்களின் நடவடிக்கைகள் உயர்ந்து கொண்டே வருகின்றன.

நேற்று பெரும்பாலான கணினிகளுக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் பிரபல பாப் இசைப்பாடகர் Micheal Jackson தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

Micheal Jackson தற்போது பாலியல் தொடர்பான வழக்கினை எதிர்கொண்டு வருவதுடன், இன்னும் சில தினங்களில் அவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதனால் இந்த பரபரப்பான செய்தியைப் படிப்பதற்காக கணினியில் அச்செய்தியைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பொய்ச்செய்தியைப் படித்தவர்களின் கணினியை Trojan horse என்ற வைரஸ் தாக்கியதுடன், கணினியின் செயல்பாட்டிலும் பாதிப்பினை உண்டாக்கியது.



கணினி வைரஸை பரப்பும் கும்பல் அச்செய்தியுடன் வைரஸை இணைத்து அனுப்பியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதிலும் சீனாவுக்கே முதலிடம்!


சீனாவில் போலி கரன்சி நோட்டுகள் அதிக அளவில் புழங்குவதன் காரணமாக இந்திய வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு சீனாவில் யூனான் மாநிலத் தலைநகரான Gunming-கில் நடந்த ஏற்றுமதி-இறக்குமதி கண்காட்சியில் பங்கேற்ற இந்திய வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை நடந்தது.

ஆனால் விற்பனைக்குப் பின்னரே வசூலான பணம் அத்தனையும் போலி நோட்டுகள் எனத் தெரிந்தது.



போலி நோட்டுகள் புழங்குவது குறித்து சீன அரசு எச்சரித்திருந்தால் தங்களுக்கு நஷ்டம் வந்திருக்காது எனவும், தங்களின் நஷ்டத்தை சீன அரசே ஈடுகட்ட வேண்டுமெனவும் இந்திய வணிகர்கள் தெரிவித்தனர்.

சதாமின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை

சதாம் உசேன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனை கிடைக்கும் என ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சதாம் மீது 500 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்தில் விசாரணை தொடங்கவுள்ளது.

அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என்றும் இந்த குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம் என ஈராக் பிரதமர் Ibrahim Al Jabari கூறியுள்ளார்.

ஆனால் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட பிறகே தண்டனை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இதற்கிடையில் இடையில் சிலகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை மீண்டும் ஈராக்கில் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கனடாவில் களை கட்டிய மோட்டார்பந்தயம்

கனடா நாட்டில் நடைபெறும் Grand Prix Formula 1 கார் பந்தயம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிக்கான பயிற்சி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் Mercedes Mclauren அணியின் Spain- ஐச் சேர்ந்த Betro Dila Rosa பந்தய தூரத்தை 1 நிமிடம் 14.662 விநாடிகளில் கடந்து முதல் இடம் பெற்றார்.

கடந்த பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற Ronald அணியின் Spain-னின் Alonsa இம்முறை மூன்றாவது இடத்தையே பெற்றார்.

இது வரை ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற Germany-யின் Micheal Shoemaker 16 வது இடத்தைப் பெற்று பெரிதும் ஏமாற்றம் அளித்தார்

இப்போட்டியில் Alonsa மற்றும் Kimi Raikonan இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி வணக்கம் மலேசியா.காம்

மனோ.ஜி

அறிஞர்
13-06-2005, 06:29 AM
நல்ல செய்திகள்.. மனோ...

நீர்முழ்கி கப்பல் தனியாய் தயாரிக்கிறார்கள்... வாழ்த்துக்கள்..

சேது சமுத்திர திட்டம்.... வெற்றியடைவது குறித்து அனைவருக்கும் சந்தோசம்.