PDA

View Full Version : நிழல்கள்........Nanban
12-01-2004, 09:52 AM
எதிரியாய்

பழிக்கும் அன்பானவளே

ஏன் ஒதுக்கவில்லை?

மயங்கும் மாலையில்

நீண்டு வந்து

உன்னைத் தொடும்

என் நிழலை!

Nanban
12-01-2004, 10:09 AM
முட்டாள் நிழலே!

எனக்கே இடமில்லாத

அவள் பிடிக்கும்

குடையினுள்

நீ ஏன் நுழைய

முயற்சிக்கிறாய்?

Nanban
12-01-2004, 10:13 AM
நீயும் நானும்
தட்டுத் தடுமாறி
ஒரு குடையினுள்
ஒட்டிக் கொள்ள
தடுமாறுகையில்
பிணக்கில்லாமல்
ஒன்றாகிப் போயிருந்தது
நம் நிழல்கள்.....

Nanban
12-01-2004, 10:19 AM
மாலை நேர

இருட்டை விரட்ட

சன்னல் கதவுகளைத் திறந்தேன்.

வெளிச்சமாக உள்ளே

நுழைந்தது

மாடியில் பாடம்

படிக்கும்

உன் நிழல்.....

Nanban
12-01-2004, 10:34 AM
மின்சாரம்

தடைபட்டால்

நிஜம்மாகவே

இருண்ட காலம் தான்...நேருக்கு நேராய் நின்றும்

பார்த்துக் கொள்ள

இயலாத இருளில்

நம்மை பேசிக் கொண்டிருந்தது

நம் நிழல்கள்....

Nanban
12-01-2004, 10:45 AM
தகிக்கும் வார்த்தைகளால்
தர்க்கம் நிகழ்த்துகிறோம்
எதிரும் புதிருமாக
நாம்.

மௌனயுத்தம் நடத்துகின்றன
நம் நிழல்கள்
ஓரே திசையில்.....

Nanban
12-01-2004, 10:48 AM
கைம்பெண் நிலை
வருத்தும் உன்னை.
என்னைப் பார்க்க வரும்
உன் நிழல் மட்டும்
எல்லோரையும் போல....

Nanban
12-01-2004, 10:50 AM
நிழல்கள் மெலிந்து போனது -
இலையுதிர் காலத்தில்
மொட்டை மரம்.

Nanban
12-01-2004, 10:53 AM
நட்சத்திரங்கள்
கண் துடிக்கின்றன -
எத்தனை
சிமிட்டினாலும்
வருவதில்லை
நிழல் என்று.....

Nanban
12-01-2004, 11:01 AM
உன் தாவணி
பிடித்து
நீ தவிர்க்க நினைத்த
வெய்யில்
உன் கைகளை
மாலையாக்குகிறது
என் நிழலுக்கு....

Nanban
12-01-2004, 11:02 AM
மழை ஓய்ந்த நேரத்து
வெய்யிலில்
சூடாக என் தேகம்.

எனக்கும் சேர்த்து
நடுங்குகிறது
ஓடும் நீரில்
என் நிழல்....

Nanban
12-01-2004, 11:08 AM
விறகு கட்டைகள்
அடுக்கி
துணி போர்த்து
நீயும் நானும்
கட்டிய வீட்டின்
நிழல்
மொட்டை மாடியில்
இன்னமும் இருக்கிறது -
ஒதுங்க ஆள் இல்லாமல்.

Nanban
12-01-2004, 12:11 PM
எப்போதும்
என்னை ஒட்டிக் கொண்டிருக்கும்
நிழலே
நீ எங்கே தூங்குவாய்?
என் படுக்கையின் கீழா?

Nanban
12-01-2004, 04:37 PM
என்னைப்
புதைக்க
இருளிலே
தூக்கிச் செல்லுங்கள்.
என் நிழலுக்குத்
தெரிய வேண்டாம்
இனி எப்போதும்
பிறப்பில்லை அதற்கென்று.........

இளசு
12-01-2004, 09:47 PM
அயல்தேச வாழ்க்கை பற்றி இசாக் குருதிச்சுவடு தர
தோழி, மழை என ஒரு பொருள் -பல கவிதை அசன் பசர் தர
தேடல்களில் திளைத்த நண்பன்
நிழல்களில் இளைபாறல்..

நன்று..தொடருங்கள்..
தொகுத்து சிறுநூலாய் சமையுங்கள்...

Nanban
13-01-2004, 05:27 AM
நன்றி, இளசு.........

புத்தகமாக தொகுக்கும் அள்விற்கு, நான் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்றே கருதுகிறேன்.......

என்றாவது ஒரு நாள் உங்கள் வார்த்தைகள் நிறைவேறட்டும்.......

rambal
13-01-2004, 01:00 PM
மரண வீட்டினுள்
செல்லத்தயங்கி
வாசலில் நான் நிற்க
தைரியமாய் சென்று திரும்பியது
நிழல்..

Nanban
13-01-2004, 01:49 PM
கட்டுப்பாட்டு கோட்டை
மதிப்பதாகச் சொல்லும்
எதிரிகள்
எல்லையில்.....
நீளும் நிழல்கள்
நம் நிலத்தில்....

Nanban
13-01-2004, 01:50 PM
நன்றி ராம்பால், வெகு காலம் கழித்து, உங்கள் கருத்து, கவிதை காண கிடைக்கிறது........... நன்றி........

Nanban
13-01-2004, 03:34 PM
மனிதர்களுடன்
அவர்கள் நிழலும்
வீச்சரிவாள் வீசியது -
எதிரிகள் மீது.

ரத்தம் சிந்தி
வீழ்ந்தவன் கூடவே
அவன் நிழலும்....

ரத்தம் சிந்தாமல்
வலித்து அலறாமல்
துடித்து செத்தது
நிழல்....

Nanban
14-01-2004, 07:16 AM
எதுவும் ஆகவில்லை
நிழல்கள்
தொட்டுக்கொண்ட பொழுது
உரசிக் கொண்ட பொழுது

நிஜங்கள்
தொட்டுக் கொண்ட பொழுது
உரசிக் கொண்ட பொழுது
உயிர் போகும்
அவஸ்தையில் நான்......

நிகழ்ந்தது விபத்து
சாலையில்......

Nanban
14-01-2004, 07:22 AM
அட, இதென்ன, ஒருத்தர் கூட படிக்க வரலை..... ஏளிமையாய் வேணும் என்று தான் இப்படி........ ஒருவேளை பிடிக்கலையோ.............

Nanban
14-01-2004, 12:37 PM
எழுந்து நிற்கும்

ஒவ்வொரு பொருளோடும்

ஒட்டுதல்.ஆன்மாவோடு அலையும்

மனிதனை மட்டுமல்ல -

ஜடத்தையும் கூட

அண்டி நிற்றல்.எஜமானனின்

அத்தனை பராக்கிரமத்துக்கும்

கொடுப்பது,

எல்லோருக்கும் போல

ஒரு புறகோட்டு வடிவம்.....ஒரு துண்டு வெளிச்சம் -

தீக்குச்சி முனை முதல்

அண்ட வெளியின்

அணு உமிழல் வரை

ஒரு கீற்று வெளிச்சம்.....ஒரு துண்டு வெளிச்சம்

வழி மறிக்கும் ஒரு வடிவம்

போதும் -

நிழல் என்று பெயரெடுக்க.

இளசு
14-01-2004, 07:09 PM
சிந்தனை கிளப்பும் நிழலோவியங்கள்...

கோட்டோவியங்கள் போல்....

தொடருங்கள் நண்பன்..

சிறுநூல் உங்களுக்குப் பெரிதல்ல...

Nanban
16-01-2004, 05:55 AM
நன்றி இளசு அவர்களே......

உங்கள் கருத்தையும் நினைவில் கொள்கிறேன்......

இ.இசாக்
16-01-2004, 06:07 AM
அன்பு நண்பன் அவர்களே
மிக சிறப்பான சிந்தனாவோட்டம்.
வாசிக்கும் நெஞ்சுள் இயல்பாய் அமர்ந்துக்கொள்ளும்
குறும் வடிவம்
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு நண்பன் அவர்களே.
என் போன்ற சாதாரணமானவர்களுக்கான வடிவத்து எழுத்துக்கு.

Nanban
06-04-2004, 06:42 PM
நன்றி - இசாக்.....

நிழல்களின் மீது காதல், தனிமையைக் கொண்டாடும் மனது, உண்மையைத் தேடித் திரிவது என்று பல.....

நிறைய சமயங்களில், ஒரு சலிப்பு மிஞ்சும்.... ஏன் இப்படி எல்லோரையும் விட்டு தனித்தவனாக இருக்கிறேன் என்று....

சிதறிப் போகாமல் காப்பது - சில காதல்களும், நட்புகளும், புத்தகங்களும், எழுத்துகளும் மட்டும் தான்......

Nanban
10-04-2004, 05:03 PM
வெளிச்சமற்ற இரவில்

சில நிழல்கள்

தொடர்கின்றனஇருக்காது என்றே

அமைதிப் படுத்தி

நடக்கிறேன்நிழல்கள்

நடந்து நடந்து

சப்தமெழுப்புகின்றன...

திரும்பிப் பார்க்கச் சொல்லி...நின்று திரும்பி

பார்த்து

நிழல்களைக்

கண்டிக்க ஆசை...எத்தனை

கோணத்தில் திரும்பினாலும்

நிழல்களை மட்டும்

காணமுடியவில்லைநிழல்களின்

சப்தம் மட்டும்

கேட்டுக் கொண்டே தான்

இருக்கின்றது -

மனதினுள்......

இக்பால்
11-04-2004, 06:07 AM
இரவில் தனியாக இருந்தாலே ஏற்படும் அனுபவம்.
அழகாகக் கொடுத்திருக்கிறீர்கள் நண்பன்.
பாராட்டுக்கள்.-இக்பால்.

Nanban
11-04-2004, 06:19 PM
இவை பேய் பூதங்களைப் பற்றிய பயமல்ல, இக்பால்.... இதற்கு தனித்தலைப்பிட்டு கொடுத்துள்ள கவிதையில் விளக்கம் இருக்கிறது....

அறிஞர்
09-06-2005, 02:21 PM
ஒவ்வொன்றும் சிந்தனையை வெளிப்படுத்தும்.. ஓட்டங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது..... நண்பரே....


மனிதர்களுடன்
அவர்கள் நிழலும்
வீச்சரிவாள் வீசியது -
எதிரிகள் மீது.

ரத்தம் சிந்தி
வீழ்ந்தவன் கூடவே
அவன் நிழலும்....

ரத்தம் சிந்தாமல்
வலித்து அலறாமல்
துடித்து செத்தது
நிழல்....

அருமையான எண்ணங்களின் ஓட்டம்....
வெகு அருமை.....

மன்மதன்
10-06-2005, 08:17 AM
மழை ஓய்ந்த நேரத்து
வெய்யிலில்
சூடாக என் தேகம்.

எனக்கும் சேர்த்து
நடுங்குகிறது
ஓடும் நீரில்
என் நிழல்....

அருமை.. அருமை.. அனைத்து நிழல்களுமே.. நிழல்கள் தொடருமா ??

அன்புடன்
மன்மதன்

rambal
12-06-2005, 05:57 PM
நிழல்கள்...

ஒரு வார்த்தையை விதவிதமாக பொருள் உணர முடியும் என்பதற்கு இந்தக் கவிதைத்தொகுப்பு சான்று..
நண்பனின் ஆழ்ந்த ஆளுமையைக் காண மீண்டும் அமைந்த வாய்ப்பு இது.. தொடருங்கள் நண்பன்...

Nanban
23-06-2005, 02:55 PM
நன்றி அறிஞர், மன்மதன், ராம்பால்....

தொட்ர்வதைப் பற்றி யோசிக்கலாம்.....

மன்மதன்
25-06-2005, 04:51 AM
கண்டிப்பாக நண்பன்.. தொகுப்பே போடலாம்..
அன்புடன்
மன்மதன்

Nanban
17-09-2005, 07:18 PM
நன்றி மன்மதன்.

மீண்டும் தொடர்வேன் என்ற நம்பிக்கையுடன்

Nanban
17-09-2005, 07:24 PM
என் நிழலை
உனக்குப் பரிசாகத் தர
விருப்பம்.

என்னிடமிருந்து
என் நிழலை
பிரித்தெடுத்துச் செல்ல
உன்னால் முடியுமென்றால்...

சூரியனாய்
என்னைச் சுற்றி சுற்றி
என் நிழல்களை
பிரசவித்துக் கொண்டிருந்த நீ
ஒரு நாள் இறந்து போனாய் -
என் நிழலை எடுத்துக் கொண்டு.

இப்பொழுது
நாள் முழுவதும்
ஒரு இருட்டறையில்
ஒரு முழக்கயிற்றுடன்
வாழ்கிறேன் - நிழலற்று.

Nanban
29-09-2005, 02:53 PM
நிற்கும் வரையில் தான்
நிழலும் நம்முடன்.
வீழ்ந்தோமென்றால்
நிழலுமில்லை
நம்முடன்.