PDA

View Full Version : ஒரு பிரேதக்குழியின் அழுகை..............Nanban
23-11-2003, 05:57 AM
ஒரு பிரேதக்குழியின் அழுகை..............

பிரேதக்குழியில்
எனையிடும் நேரத்தில் மட்டும் -

எனக்காக கொஞ்சம் அழு - போதும்.

குறைவாக நினைத்துக்கொள் -

அதிகம் வேண்டாம்.எப்பொழுதுதாவது

சில சந்தோஷ தருணங்களை நினை.

வேட்டி, சட்டையை

நானுடுத்துப் பார்த்த நிமிடத்தை

திருட்டுப் பார்வையால்

என் நாணத்தோடு பங்கு வைத்து

சிரித்த கணங்களை வைத்துக் கொள்....பற்றியெரியும் வரவு செலவு துண்டுகளின்

ஞாபக வங்கிக் கணக்கை முடித்துவிடு.

இறந்த மனைவியின் நினைவுகள்

உன் இயலாமைக்குப் பொறுப்பேற்காது!வெகுதொலைவில் அழைப்புக்கு

காத்து, காத்து, சலித்து

நானே விளிக்கும் பொழுது

நூறு ஆயுசாக வியந்து கொள்வது போல

அப்பவோ, இப்பவோ என்று

எப்பவோ கொஞ்சம் நினைத்துக் கொள் -

அதிக நினைப்பு அலுக்கச் செய்யும்.உன் கூடாக்கோபங்களுக்கும்

நேசிப்பை காதலுடன் கொடுக்க

வாழும் உயிர்க்காலத்தில்

உன் நினைவுகள்

வாழ்பவர்களுடன் மட்டுமே இருக்கட்டும்....

கொஞ்ச நேர 'என் நினைப்புகள்'

கொஞ்சமாக அழட்டும், போதும்.உன் ஆங்காரத்தையும்

புருஷ மேம்போக்கையும் மீறி

நீ என்னை நேசித்தாய் -

நேசத்தைக் காட்டும் கலை அறியாமலே.நான் ஒரு கோபத்தில்

தூங்கும் பாசாங்கில் உன்னைத் தவிர்க்க -

என் தூக்கத்தைப் பார்த்துக் கொண்டே

என் பெயரை மெல்லியதாக உச்சரித்தது போல

இனி எப்பொழுதுமே உச்சரித்துவிடாதே..யாருக்கு என்ன லாபம்.?

கல்லறைக் குழியினுள் நான் அழுவதால்.....

இளசு
23-11-2003, 06:09 AM
சில உறவுகள் மல்லிகைப்பந்து

அடுத்தவர் தூரத்தில் இருந்து

பார்க்கும்போதே "மணக்கும்"..சில உறவுகள் பலா

முள்ளும் முரட்டுத்தோலும்

கையில் ஒட்டும் பிசினோடு சக்கையும்

எண்ணெயிட்ட கையால்

கத்தி கொண்டு

அறுத்து, எடுத்து

அனுபவித்தவர்க்கு மட்டுமே "இனிக்கும்"...மல்லியை புகழ்வதும்

பலாவை இகழ்வதும்

இரண்டுமே மேம்போக்கு

அடுத்தவர் செய்தால்...ஆழமும் அழகும்

அவஸ்தைகள் கிழித்து

வெளிக்காட்டும்

உரியவர் சொன்னால்...பாராட்டுகள் நண்பன்.

Nanban
23-11-2003, 12:53 PM
மிக்க நன்றி இளசு..........

சில உறவுகள் வெளி அழகு நிறந்தது. சில உறவுகள், பறையடித்துக் கொள்ளாமல், நீரோட்டம் போலிருக்கும், சில் சுழிகள மட்டும் அங்குமிங்கும் இருக்கும். இதுவும் அந்த வகையினதானது........

rika
25-11-2003, 09:27 AM
பெண்மை கலந்த வரிகள்..

வியப்பு ஏற்படுகிறது..

என் எழுத்தில் ஆண்மை வாசம் வீசுவதாகத் தோழிகள் சொல்வர்..

ஆனால், முதல் முறையாக பெண்மை வாசம் வீசும் வரிகள் எழுதியதைக் காணும்

பொழுது மகிழ்வாய் இருக்கிறது..அருமையான கவிதை என்பதை விட..

(இருண்மை கலக்காமல்..)

முரட்டுத்தனமான வாசிப்பு இருந்தால் மட்டுமே

புரிபடும் கவிதை வரிகள் அழகு..உங்களுடைய பசுவதைக்கு விமர்சனம் செய்ய அனுமதி கோரியிருக்கிறேன்..

Nanban
25-11-2003, 12:04 PM
பெண்மை கலந்த வரிகள்..

வியப்பு ஏற்படுகிறது..

என் எழுத்தில் ஆண்மை வாசம் வீசுவதாகத் தோழிகள் சொல்வர்..

ஆனால், முதல் முறையாக பெண்மை வாசம் வீசும் வரிகள் எழுதியதைக் காணும்

பொழுது மகிழ்வாய் இருக்கிறது..அருமையான கவிதை என்பதை விட..

(இருண்மை கலக்காமல்..)

முரட்டுத்தனமான வாசிப்பு இருந்தால் மட்டுமே

புரிபடும் கவிதை வரிகள் அழகு..உங்களுடைய பசுவதைக்கு விமர்சனம் செய்ய அனுமதி கோரியிருக்கிறேன்..மன்றத்திற்கு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் எனது வாழ்த்துகள்.............

மிக்க நன்றி...........நீங்கள் குறிப்பிட்ட இருண்மை - அது தான் என்னுடைய ஸ்டைல்.........இப்பொழுது வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறேன்........விமர்சிப்பதற்கு அனுமதி எல்லாம் தேட வேண்டாம். எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு... தாராளாமாய் விமர்சிக்கலாம்.............உங்கள் ஆண்மை வீசும் எழுத்துகளைக் கொஞ்சம் படையுங்களேன்.........

rambal
08-04-2004, 04:42 PM
நான் ஒரு கோபத்தில்

தூங்கும் பாசாங்கில் உன்னைத் தவிர்க்க -

என் தூக்கத்தைப் பார்த்துக் கொண்டே

என் பெயரை மெல்லியதாக உச்சரித்தது போல

இனி எப்பொழுதுமே உச்சரித்துவிடாதே..


யாருக்கு என்ன லாபம்.?

கல்லறைக் குழியினுள் நான் அழுவதால்.....

இந்தக் கவிதையின் ஒட்டு மொத்த ஜீவன் இந்த வரிகளில்

அடங்கியிருக்கிறது..

நண்பனின் சொல் வீச்சுக்கு தலை தாழ்த்தி வந்தனங்கள்..

Nanban
10-04-2004, 04:06 PM
இந்தக் கடைசி வரிகளைப் படித்த பொழுது, கண்கள் பணித்தன... எழுதும் பொழுது இல்லாத துயரம் இப்பொழுது....பிரிவு, துயரமானது தான்...மீண்டும் ஒருமுறை படிக்க சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்த ராமிற்கு நன்றி....

அசன் பசர்
11-04-2004, 04:57 PM
நண்பன் அவர்களே

அப்படியே என் இதயத்தை பிழிந்த வரிகளில் வெகு நாட்களுக்குப்பிறகு கொடுத்திருக்கிறீகள்ஏன் இதுவரை புத்தகம் போடவில்லை

இதுவரை எழுதியவைகளை என்னிடம் கொடுங்கள்

பிறகு நான் தங்களுக்கு புத்தகமாக தருகிறேன்

Nanban
11-04-2004, 06:26 PM
மிக்க நன்றி, அசன்... அப்படியே செய்யலாம்... கொஞ்ச நாட்கள் போகட்டும் பார்க்கலாம்....

மன்மதன்
21-09-2005, 06:05 AM
படித்துக்கொண்டே வருகையில் கடைசி வரிகள் என்னமோ செய்து விட்டன.. ராம்பால் சொன்ன மாதிரி சொல்வீச்சில் எங்களை அடித்துபோட்டிருக்கிறீர்கள்...அப்பவோ, இப்பவோ என்று

எப்பவோ கொஞ்சம் நினைத்துக் கொள் -

அதிக நினைப்பு அலுக்கச் செய்யும்.

Nanban
21-09-2005, 05:04 PM
நன்றி மன்மதன். திடீரென்று மேலே கொண்டு வந்து வைத்ததற்கும் கொஞ்சமாவது விளக்கமா எழுதியதற்கும்.

Nanban
21-09-2005, 05:30 PM
நண்பன் அவர்களே

அப்படியே என் இதயத்தை பிழிந்த வரிகளில் வெகு நாட்களுக்குப்பிறகு கொடுத்திருக்கிறீகள்ஏன் இதுவரை புத்தகம் போடவில்லை

இதுவரை எழுதியவைகளை என்னிடம் கொடுங்கள்

பிறகு நான் தங்களுக்கு புத்தகமாக தருகிறேன்

நன்றி அசன். நீங்கள் என்னுடைய கவிதைகளயெல்லாம் புத்தகம் போடலாம் என்று சொல்லி ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது. ஆனால் புத்தகம் தான் இன்னும் போட்ட பாடில்லை. உங்களை குறை சொல்லவில்லை.

இன்னமும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. என்னுடைய கவிதைகள் கூட புத்தகம் போடும் தகுதியை அடைந்து விட்டதா என்று.

இப்பொழுது திரும்பிப்பார்த்தால் - அப்படி என்ன பிரமாதமாக எழுதி விட்டேன் என்று தோன்றுகிறது. சிறந்த கவிதைகளைத் தேட்ந்தெடுக்கலாம் என்று முனைந்தால் என்னால் இதுவரையிலும் மொத்தமாகவே ஒரு இருபது கவிதைகளைத் தான் தேர்ந்தெடுக்க முடிகிறது. அதுவும் பாதி நீங்கள் கேட்டதற்கு அப்புறம் எழுதியது. இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாது சிறு குழ்ந்தை தவழுவது போல தெரிந்தவற்றையெல்லாம் தன்னால வாசித்து வாசித்து ஏதோ க்ற்றுக் கொண்டது தான் இத்தனையும். அதிலும் பாதி ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டது. இப்பொழுதும் கவிதைகளை எழுதவும் விமர்சிக்கவும் கற்றுக் கொள்வதெல்லாம் ஆங்கிலத்தில் தான். எழுதுவது மட்டும் தான் தமிழாக இருக்கிறது.

அதனால் இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். இந்தியாவில் இருந்து இதுவரையிலும் வாங்கிக் கொண்டு வந்த அனைத்துப் புத்தகங்களையும் வாசித்து முடிக்கும் வரைக்கும் என் கவிதைகளைப் புத்தகங்களாக தொகுப்பதை இன்னும் கொஞ்சம் தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன்.

இத்தனை தவிப்புடன் விலகிச் சென்றாலும் - சிலருடைய கணிப்பு - என்னிடம் இலக்கியத் திமிர் இருக்கிறது என்று. அவர் சொன்னது உண்மையாக் இருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அதே சமயம் அதை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும் விரும்பவில்லை,

ஒருவேளை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் கொஞ்சம் அதிகமாகவே அழுத்தமாகவோ விமர்சித்து நண்பர்களைக் காயப்படுத்தி விடுகிறேனோ என்ற அச்சம் கூட இருக்கிறது. அல்லது நான் மேலாகக் கருதும் உறவுமுறைகளை அல்லது கொள்கைகளை யாராவது ஏளனம் செய்தால் கொஞ்சம் அதிகப்படியாகவே எதிர்வினை புரிந்து விடுகிறேனோ என்று தெரியவில்லை.

ஆனாலும் எல்லோருமே அவர்கள் எழுதும் கவிதைகள், கதைகள் பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என்றே விரும்புகிறார்கள் என்றும் தோன்றுகிறது.

ஆக என்னை கவிஞனாக நானே நினைத்துக் கொள்ளும் முன்பு என்னிடமே கொஞ்சம் விசாரணை செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. நான் என்ன தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. நிறைய கேள்விகளுக்கு நான் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்தத் தேடுதல்களுக்கு நடுவே கொஞ்சம் ஏடாகூடாமான கவிதைகளையும் எழுதி வைத்திருக்கிறேன். எல்லோருமே கொஞ்சம் மிரண்டு போய்விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. நண்பனிடம் மாட்டிக் கொண்டால் வம்பு என்று விலகிப் போவது போல தோன்றுகிறது. அவர்களுக்குத் தெரியாது - நா அதிர்ந்து கூட பேச மாட்டேன் - சில சமயங்களைத் தவிர என்று. முன்பு இளசு, ராம்பால், இக்பால், முத்து என்று எதற்கும் தயங்காது பதில் சொல்லும் நண்பர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள் - அதனால் நம் கவிதைகள் என்ன தரம் என்று அறிய முடிந்தது. ஆனால் இப்பொழுது எழுதுவதற்கு அத்தகைய விமர்சனங்கள் வருவதில்லை என்பதால் எனக்குத் திருப்தி ஏற்படுகிறாதா இல்லையா என்பது ஒன்றே அளவு கோலாக வைத்திருக்கிறேன். என்னுடைய அளவுகோல்கள் மிக இறுக்கமானதும் கண்டிப்பு மிக்கதானதாலும் நான் தேர்ந்தெடுத்த கவிதைகள் மிக கொஞ்சம்.

அந்தக் கவிதைகளை http://nanbanshaji.blogspot.com/ என்ற என் வலைப்பூவில் போய்ப் பாருங்கள். உங்கள் விமர்சனங்களைத் தாராளமாக எழுதலாம். பெயரிட விரும்பாத பொழுது - anonymous ஆக.

நன்றியுடன்
தொடர்ந்து என்னையே தேடிப்பார்க்கும்
நண்பன்

rknarasi
21-07-2006, 10:02 AM
அருமையன கவிதை

இனியவன்
21-07-2006, 10:57 AM
ஒரு பிரேதக்குழியின் அழுகை..............

யாருக்கு என்ன லாபம்.?

கல்லறைக் குழியினுள் நான் அழுவதால்.....

அண்ணன் அறிவுமதி உயிர் விடும் மூச்சு சிறுகதையில் ஓர் உத்தியைக் கையாண்டிருப்பார். கடைசி வரியைப் படிக்கும் போது தான் உண்மை இதயத்தை உலுக்கும். அதே உத்தி உங்கள் கவிதையிலும். மன்மதன், அசன்பசர் போன்ற அன்பு உள்ளங்களோடு இதோ நானும் வாழ்த்துகிறேன். நம் மன்றமும் வாழ்த்துகிறது. தொடருங்கள் உங்கள் சொல் வீச்சை.

இளசு
23-07-2006, 10:31 PM
பல தரமான படைப்புகளை - ( பல என்னால் விளங்கமுடியா பருண்மை கொண்டிருந்தவை) வழங்கிய இரு பிரம்மாக்கள்..

ராம்பால்... நண்பன்.

ராம் பணிச்சுமையாய் இருக்கலாம்... படைப்பு உதயநேரம் அமையும்போது ராமைக் காண்பேன் என்று நம்புகிறேன்.

நண்பன் கொஞ்சம் மனச்சுமையோடு விலகி இருக்கிறார்... பெரிய லட்சியப்படைப்பை நோக்கிய அவர் பயணம் வெற்றி அடைய வாழ்த்தி...
இந்தப் பழைய திரியை மீள்நினைவாய் இங்கே தருகிறேன்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=2475( இந்த திஸ்கியைக் காப்பி செய்து யூனிகோடாக்கி படிக்க நம் தளப்பக்கத்தின் அடியில் வசதி உள்ளது..)

பென்ஸ்
26-07-2006, 07:06 PM
நண்பனின் கவிதைகள்...

மன்றத்தில் நான் நுழைந்த நாட்க்களில் திரும்ப திரும்ப விரும்பி படித்தவை...

வாழ்த்துக்கள் நன்பண்...