PDA

View Full Version : உளறல்கள்பிரியன்
27-11-2004, 05:59 PM
உளறல்கள்

கோலம் போட்டுச்செல்கிறாய்
எ‎ன் வீட்டுக்கும் உன்வீட்டுக்கும்
நடுவே...
வைக்கபட்ட ஒவ்வொரு புள்ளியிலும்
கைதியாய் நா‎ன் ..
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்ககு தெரியாது
பூச்சரத்தின்
ஒவ்வொரு சுருக்கிலும்
நா‎ன் மாட்டிக்கொண்டிருப்பது
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உயிரை கொடுத்து
உயிரை எடுப்பாய்
தெரிந்தும்்,
காத்து கொண்டு இருக்கிறேன்்.
உன்
முத்தத்திற்காக
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அணு ஆயுத போர்கள்
கூடாதென்கிறார்கள்.
முட்டாள்கள்
நீயும் நானும்
பார்த்துகொண்டிருப்பது
அறியாமல்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உளறல் தொடரும்

இளசு
27-11-2004, 09:44 PM
தொடரட்டும் ப்ரியன்..
உதட்டின் உரசல்களும்
உள்ளத்தின் உளறல்களும்..

புள்ளிகளில்..பூச்சர முடிச்சுகளில் சிக்கிக்கொண்ட
சுகவேதனைகள் இன்னும் இன்னும் தொடரட்டும்..
வாழ்த்துகள்..

பிரியன்
29-11-2004, 02:53 PM
பார்வை பதிக்கிறாய்

நெஞ்சம் கிழிக்கிறாய்

நீ நெறிஞ்சி முள்ளா ?

குளிர் இதழா ?

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

களவு புரிந்தே‎ன்.

கைதாகவில்லை

உ‎ன்னுள்

சுதந்தரமாய் நா‎ன்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நகைக்கடை -

நா‎ன் கொலுசை

பார்க்கிறேன் ஆசையாய் ,

நீ மெட்டியை

பார்க்கிறாய் ழமாய் .

xxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஊடலால் இடைவெளி

வி‏ட்டு அமர்ந்தோம்.

அனிச்சயாய் கூடுகி‎ன்றன

நம் உயிர்கள் ..

சிரிக்கும் சி‎ன்ன

குழந்தையின் உதட்டில்

xxxxxxxxxxxxxxxxxxxxxநமக்கு திருமணம் .

நகைப்பில் நீ

நடுக்கத்தில் நா‎ன் .

என்ன சிவக்கிறாய் ?

கள்ளி.நேசக்குளிரால் - xxxxxxxxxxxxxxxxxx

உளறல்கள் தொடரும்பிரியன்

பிரியன்
02-12-2004, 11:28 AM
எல்லாம் எல்லாம் உளறல்தா‎ன்


பூங்காவில் உதிர்ந்த
பூக்களை அள்ளி எறிகிறேன்.
நட்சத்திர பூக்களாய்
விண்ணில் ஒட்டி கொண்டது
எல்லாம் எல்லாம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பரணில் கிடந்த ஊஞ்சல்
உடைந்த கண்ணாடி ,
பாடாத வானொலி,
கசக்கி எறிந்த காகிதங்கள்
ரசிக்கிறே‎ன்
எல்லாம் எல்லாம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உரக்க குரலெழுப்பி
பாடுகிறே‎ன்,
தெறித்து ஓடும்
குயில் கூட்டத்தையும்
கவனியாமல் ..
எல்லாம் எல்லாம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தந்தையை உப்புமூட்டை தூக்கிகொண்டு,
தாயி‎ன் கழுத்தில் பின்னிக்கொண்டு ,
தங்கையின் கன்னம் கிள்ளிக்கொண்டு ,
கண்ணாடி மு‎ன் நாணிக்கொள்கிறேன்
எல்லாம் எல்லாம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
வானுக்கும் ,மண்ணுக்கும்
நடுவே தனியே எனக்கென
சொர்க்கம் ‏வந்தது
எல்லாம் எல்லாம்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxநி‎ன் காதலை சொ‎ன்ன
கணப்பொழுதிலிருந்துதான்

பிரியன்
07-12-2004, 03:59 PM
காதலி வருகிறாளருகே....

உளறலாய் வெளியோட துடிக்கிறது மொழி....
விரைவில்

பிரியன்
08-12-2004, 02:46 PM
நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து ,
மண் கிளறி கிளறி
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு இதயம் நனைக்க
துடித்த நம் முதல் சந்திப்பு,,,,
******************************************
காதலியாய் உ‎ன் முதல் கேள்வி.
என் நேசம் உண்மையாயெ‎‎ன்று ?
கேட்டுவிட்டு கண்கள் பார்க்கிறாய்..
நா‎ன் ஊமைகுயிலானேன்..
எந்த‎ன் இசை நி‎ன் இதழோர
புன்னகையாய் ..
********************************************

தெ‎ன்றல் கலைத்துபோன
கூந்தலை சரி செய்யாவா என்றேன் ..
தள்ளி நடந்தாய் ‏...,,
முறைத்து நம்மருகே வரும்
நாயாருக்கு ந‎ன்றிகள்..
எ‎ன் விரலிடுக்கில் நீ
உ‎ன் விரலிடுக்கில் நா‎ன்
****

பிரியன்
15-12-2004, 03:00 PM
விடுமுறைக்கு செல்வாதால்
விடை பெற வந்தாய்....

ஆசையாய் எனக்காக பரிசு
தந்து என் கண்களை பார்க்கிறாய்
அலட்சியமாய் பாராமுகம்
செய்கிறேன் .....
வாடிய மலராகி போனாய் ..........

அருகே வந்தமர்கிறாய்...
ஏக்க பார்வை பார்க்கிறாய் ...
விலக முயல்கையில்
விழியோரம் நீர்..

அப்பா என்னாலும் நடிக்க முடிகிறது
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பிரியன்
21-12-2004, 05:30 PM
எனை பார்த்தபடி படியிறங்க

தவறி விழுந்தாய்-

உன்னருகே குனிந்து

கை கொடுத்து ஏம்மா

என கேட்க

சட்டையை பிடித்து

கண்களில் முத்தமிட்டாய்..........

என்ன செய்ய

இன்றும் வெற்றி உனக்குதான்

இளசு
21-12-2004, 09:57 PM
விகடனின் தபூசங்கர் பக்கம் போல்
இங்கே நம் மன்றத்தில் ப்ரியனின் உளறல்கள்..

எல்லாம் கோடைக்கால நுங்காகவும்
வாடைக்கால கனப்பாகவும்
இதமாய் இருக்கு..

அன்று அவனாலும் நடிக்க முடிய
அடுத்தநாள் அவள் வெற்றி அடைய

காதல் சுகமானது..

உளறல்கள் இனிதே தொடரட்டும்..

பிரியன்
22-12-2004, 04:54 PM
மின்சாரமில்லா
மழை இரவில்
இமை மூடாமலே
அருகிலமர்ந்து-
இதழ் பிரிக்காமலே
பேசிக்கொள்கிறோம்
அங்கே நானும்
இங்கே நீயுமாய்
.....
அய்யகோ ............
விடியல் விரைகிறது..
தடுத்திட யாரேனும்
வாருங்களேன் .......

இளசு
22-12-2004, 10:17 PM
இரவை விடியாதே என்பதும்
நிலவை அஞ்சல்காரியாக்க விழைவதும்

பகைவர் போல நடிப்பதும்
பாவனைகளாலே பேசுவதும்..


ஒரு முற்றிய நோயின் அடையாளம்..

நோய் இன்னும் முற்றட்டும் என
வாழ்த்துவதே என் பணியாகும்..


வாழ்த்துகள் ப்ரியன்..

manitha
23-12-2004, 11:54 AM
Originally posted by priyan@Dec 23 2004, 01:54 AM
மின்சாரமில்லா
மழை இரவில்
இமை மூடாமலே
அருகிலமர்ந்து-
இதழ் பிரிக்காமலே
பேசிக்கொள்கிறோம்
அங்கே நானும்
இங்கே நீயுமாய்
.....
அய்யகோ ............
விடியல் விரைகிறது..
தடுத்திட யாரேனும்
வாருங்களேன் .......
விடியலே இல்லாத இரவைப்ப்டைத்திட
நான் இறைவனுக்கு மனு கொடுக்கிறேன்
அதுவும்
உங்கள் சார்பாகவே!!!!!!!!

ப்ரியனின் உளறல்கள் அனைத்துமே
தமிழ்த்தாய் தவமிருந்து
பெற்றெடுத்த பிள்ளைகள் போலும்.......

பிரியன்
23-12-2004, 02:30 PM
விடியலே இல்லாத இரவைப்ப்டைத்திட
நான் இறைவனுக்கு மனு கொடுக்கிறேன்
அதுவும்
உங்கள் சார்பாகவே!!!!!!!!

ப்ரியனின் உளறல்கள் அனைத்துமே
தமிழ்த்தாய் தவமிருந்து
பெற்றெடுத்த பிள்ளைகள் போலும்.......

[/quote]


இந்த பாராட்டுக்கு நான் தகுதியுடையவந்தானா என என்னையே கேட்டு கொள்கிறேன்..
மனு கொடுத்த மனித நேயத்திற்கு நன்றி மனிதா........

மருந்துண்டால் அதிகமாகும் இந்த நோய் தீராது இளசு அவர்களே ..........

பிரியன்
25-12-2004, 04:48 PM
<span style='color:red'>நீ படிக்கும் பெண்கள் கல்லூரிக்குள்
உள்ளே நுழைகிறே‎ன்...
கூச்சமாய், பதட்டமாயும்,
யாரேனும் தடுத்திடுவார்களோ
எ‎ன வியர்த்து கொட்டிட
ஒவ்வொரு கட்டிடமாய் தேடுகிறே‎ன்..

உ‎ன்னை கண்டு வேகம் கூட்டிட்ட
கால்களுக்கு தடையாய்
உ‎ன் தோழியர் கூட்டம்...
நலமா எ‎‎ன்கிறார்கள்
உனை மறைத்து
எனை மறிக்கிறார்கள்...

எ‎ன்ன செய்ய
ஆண்டவ‎ன் ----- கொடுத்தாலும்
இந்த பூசாரிகள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</span>

பிரியன்
27-12-2004, 09:16 AM
துப்பட்டாவை கட்டி கொண்டு
கை பற்றி இழுத்து
ஓர் ‏இருக்கை ஊஞ்சலில்
மடியில் வைத்து,
கேசம் விலக்கி
காது கடித்து
உதட்டோடும்
காதல் செய்ய
கனா காண்கிறே‎ன்.

அணைத்தால்
சூரியின் பார்த்த
பனியாகிடுவே‎ன்
என அறியாமல்,,,,,,,,,,,,,,,,,

பிரியன்
02-01-2005, 05:20 PM
புகை வண்டியில்
நீ விட்டுப்போன
கை பை எடுத்து
தேடி தேடி பார்க்கிறேன்

கைக்குட்டை,
சி‎ன்ன கண்ணாடி,
வண்ண தோடுகள்,
‏கொண்டை ஊசிகள்..
புது நூறு ரூபாய் தாள்கள்
என எல்லாம் ‏இருக்கிறது
உ‎ன் புகைப்படம் தவிர்த்து..

எ‎ன்ன செய்ய தடையிடும்
மூளைக்கு தெரிவதில்லை
கானல் நிழலில்
இளைப்பாறும்
நெஞ்சத்தி‎ன் கனம்

பிரியன்
03-01-2005, 03:19 PM
நிற்காது உளறல்........

எ‎‎ன் மேல் கோபம் -
பேச மாட்டே‎ன் -
பிடிக்க வில்லை-
போ‏கிறேன் -
கடைசி சந்திப்பு
என நீ பிரிந்து போனதற்கு
நா‎ன்‎ கேட்காமலே
ஆறுதல் சொல்லுகிறார்கள்

எதிர்பதங்கள்
அருஞ்சொற்பொருளாகும்
நம் கூட்டி‎ன் அகராதி
படிக்காதவர்கள்...


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxநாணத்தோடு ஒதுங்கி போன
தம்பியி‎ன் மவுனம் கலைத்து
ஆகாயமாய் அவனை நிறைத்த உ‎ன் அ‎ன்பு

கூந்தலை உ‎ன் கையில் தந்து
சுகமாய் மடியில் உறங்கும் தங்கை

தங்கையோடு ‏இங்கும் சண்டையட்ட
கோவத்தில் அவ‎ன் காதை திருகியும்
சிரிக்கையில் தா‎ன் தெரிந்தது

நம் திருமணத்துக்கு முன்னேயே
நீ தாயாகிவிட்டது

pradeepkt
04-01-2005, 02:55 AM
எதிர்ப்பதங்கள் - அருஞ்சொற்பொருட்கள்.
காதல் அகராதியில் இலக்கணம் படைக்கிறீர்கள், ப்ரியன்.
இல்லையில்லை, காதல் இலக்கணத்திற்கு அகராதி எழுதுகிறீர்கள்!

கலக்கல், தொடருங்கள்.

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
04-01-2005, 06:50 PM
Originally posted by pradeepkt@Jan 4 2005, 07:55 AM
எதிர்ப்பதங்கள் - அருஞ்சொற்பொருட்கள்.
காதல் அகராதியில் இலக்கணம் படைக்கிறீர்கள், ப்ரியன்.
இல்லையில்லை, காதல் இலக்கணத்திற்கு அகராதி எழுதுகிறீர்கள்!

கலக்கல், தொடருங்கள்.

அன்புடன்,
பிரதீப்

94060நன்றி பிரதீப்....
இந்த மாதம் முழுதும் உளறல்தான்...
பிப்ரவரி 14ம் தேதி காதலர்தினத்தன்று இத்தொகுப்பை நிறைவு செய்கிறேன்.......

அன்புடன்
பிரியன்

pradeepkt
06-01-2005, 04:29 AM
எனக்கு இது ஒரு புதிரான போராட்டமாகத் தோன்றுகிறது.
காதலித்த பின்னே ஜாதகத்தாலோ உறவாலோ மரபு மாற அதனால் துடிக்கும் மனதின் வலிதான் எனக்கு முதலில் புரிகிறது.
சாதாரணமாகப் பல கவிதைகளில் பல கவிஞர்கள் கையாண்ட சூழ்நிலைகள் "ஓருயிரீருடலாவதும்", தலைவன் தலைவி நன்மை கருதி வேறு மணம் புரியக் கூறுவதும்!

"என்னை வேசியாக்கிடாதீங்க"
"தனித்தனி மரணமில்லை"
என்று
அதை நீங்கள் வார்த்தையில் வடித்த விதம்தான் வலியைத் தூண்டுகிறது.

நான் புரிந்த விதம் சரியா என்று புரியவில்லை. ஆனால் மூளையின் வழி வரும் கவிதையை விட மனதின் வலி வழி வரும் கவிதைக்கு வலி(மை) அதிகம்.

பாராட்டுகள் பிரியன்,

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
06-01-2005, 12:56 PM
உளறல் தவிர்க்க இயலாத காரணத்தால் இத்துடன் நிறைவு பெறுகிறது ...........

பாரதி
06-01-2005, 03:54 PM
உளறல்கள் என்ற தலைப்பில் இருப்பதால் யாரும் கவனிக்க மாட்டார்களோ என்கிற எண்ணத்தில் சொல்லி இருக்கிறீர்களா என்று தெரியவில்லை பிரியன். முதலில் கவிதை சரியாக (எனக்கு) பிடிபடவில்லை. நீங்கள் சொன்னது போல கடைசிவரை காத்திருக்க வேண்டும் போல்தான் இருக்கிறது.

தாலிப்பொருத்தம் இல்லா ஜாதகம் என்றால் பின் மனதைக் கரைக்க தூதுப்படலங்கள்...? அப்படியென்றால் திருமணம் வேண்டாம் என்பதை வலியுறுத்த ஜாதகம் ஒரு சாக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா..? "விரும்பியதற்கு விதவையாக வேண்டுமா.." இந்த வரிகள் எந்த சூழ்நிலையில் வந்ததுள்ளது என்பதை அனுமானிக்க முடியவில்லை. மகள் என்கிற மரபு மருமகள் ஆக்குவதை தடுக்கிறது என்பதாக சொல்கிறீர்கள். சமூகத்தின் பார்வையிலிருந்து விலகுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லையே..! நேசத்திற்கும், நேசிப்பவர்களுக்கும் உண்மையான மரணம் என்றுமில்லை என்பதுதான் என் எண்ணம்.

(நான் உங்கள் கவிதையை பதிவிறக்கி வைத்து சரியாக புரிய முடியாமல் தவித்து, இப்பதிலை எழுதி வைத்துக்கொண்டு வந்து பார்த்தால் ...முடிவடைகிறது... என்று எழுதியிருக்கிறீர்களே...?இப்போது பதியவில்லை என்றாலும்... எழுதி வைத்துக்கொள்ளுங்கள். சமயம் கிடைக்கும் போது தாருங்கள் பிரியன்.)

pradeepkt
07-01-2005, 03:26 AM
என்னய்யா திடீரென்று?
சரி, பாரதி சொன்னது போல் இப்போது இல்லையென்றாலும் எப்போதாவது உங்களுக்கு உங்கள் வலிகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றும்போது போடுங்கள். ஏனெனில் நட்பு என்பது உவகையைப் பங்கிட்டுக் கொள்ள மட்டுமல்ல! உங்கள் அனைத்து ரணங்களும் விரைவில் ஆற என் வேண்டுதல்கள்!
ஆனால் எழுதி வைத்துக் கொள்ள மறக்காதீர்கள்

அன்புடன்,
பிரதீப்

மன்மதன்
08-01-2005, 04:20 AM
இந்த தொகுப்பை திடிரென்று நிறுத்தியதற்கான காரணத்தை தெரிந்ததும் கவலையடைந்தேன்.. நீங்கள் மறுபடி இந்த கவிதையை தொடர வேண்டும்.. பல சமயங்களில் உளறல்கள் நம் மனதின் காயங்களை ஆற்றும்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
08-01-2005, 03:16 PM
[quote=மன்மதன்,Jan 8 2005, 09:20 AM]
இந்த தொகுப்பை திடிரென்று நிறுத்தியதற்கான காரணத்தை தெரிந்ததும் கவலையடைந்தேன்.. நீங்கள்

வலியை தாங்கும் வல்லமை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி மீண்டும் தொடங்குகிறேன்..இனி வருகிற இடங்களில் குழப்பம் நேர்ந்தாலும் உங்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள் இறுதியில் என் விளக்கம் இருக்கும் கவிதை உங்களுக்கு விளக்கா விட்டால் ....ஏதோ விளையாட்டாக உளறல்கள் என்று தொடங்கினேன்.ஆனால் என் வாழ்நாள் சேமிப்பாய் காலத்தின் கட்டாயத்தில் எனக்கென தரப்பட்டிருக்கிறது.....நான் மனதளவில் சிதையாமல் போக இந்த வெற்றுப்பாலையில் எனக்கு கிடைத்த நண்பனாய் தமிழ்மன்றத்தை கருதி உங்கல் நிழலில் நானும் கொஞ்சம் இளைப்பாற போகிறேன். இந்த மாதம் முழுதும் இந்த உளறலில் மட்டும்தான் என் பதிவு இருக்கும்

நாளை நமக்கு திருமணம்


நாளை முதல்
‏இருவருக்கான
தனிச்சொர்க்கம்...
நம் பார்வைக்குள்
நம் அறைக்குள்

உ‎‎ன்னில்
உன்னால்,
உனக்காக
தொடங்கும்
எ‎ன் விடியல்கள்...

தாயி‎ன் கதகதப்பாய்
எ‎ன்னை துளைத்து
நேசம் சொல்லப்போகும்
உ‎ன் மூச்சுகாற்று ...

சுவாசம் ரசித்து
உறங்க போனே‎ன்.
கண்கள் சொ‎ன்னது ...

இன்று எ‎ன்‎னை சிறைப்படுத்தாதே..
அத்தனை விண்மீண்களுக்கும்‏
சொல்ல வேண்டும் .
நீங்கலெல்லாம் உறங்கி
நாளை வாருங்கள்..
உயிர் நிறைக்கும்
என்னவள் விழியி‎‎ன்
ஒளியை காண ...


‏xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பிரியன்
08-01-2005, 05:18 PM
பூரிப்பு நிரம்பிய விழிகளோடு,
நாணம் சூடி
என்னருகேயிருக்கும்
உன்னிடம்

என் உயிரையும்
உணர்வையும்,
உலகத்தையும்,
உள்ளத்தின் மஞ்சள் கலந்து
மங்கல நாணலாக்கி சூடுகிறேன்........

இரண்டாவது முடிச்சிற்கு
உரிமை கொண்ட தங்கையின்
கரம் தட்டி நானே சூட
உதிர்ந்த வெட்கத்தில்
கண்டேன் பேரழகியாய்....

ஆரவார இரைச்சலையிம் மீறி
தேனாய் கேட்டது ...
மாட்டிகிட்டியா கள்ளா
என நீ சொன்னது.........

பிரியன்
08-01-2005, 05:26 PM
உங்கள் புரிதல் தவறு பாரதி.....மருமகளள் அல்ல ,நம் வீட்டிற்கு வருபவள் இன்னொரு மகள் என்று சொல்லும் பெற்றோரும் மரபு வழி நம்பிக்கையின் விளைவாக அந்த திருமணத்திற்கு தயங்குவதாய் அமைத்திருந்தேன்... முழுதும் இப்போது என்னால் சொல்ல முடியாது...சற்று பொறுத்திருங்கள்..
என் சுயத்தை எப்படி உண்ர்திருக்கிறேன் என்பதன் விடை இந்த தொகுப்பில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மிகுந்த வலியோடு தொடர்கிறேன்.............

தொடர்ந்து படியுங்கள்.....இறுதியில் சொல்லுங்கள் என் எண்ணங்கள் சரிதானா என்று.......

பரஞ்சோதி
09-01-2005, 03:24 AM
நண்பர் பிரியன் தன்னுடைய கவிதை தொகுப்பை மீண்டும் கொடுத்தமைக்கு நன்றி. கருத்துக்கள் கூறவில்லை என்றாலும் தொடர்ந்து படித்து வருகிறேன். தொடருங்கள். விமர்சனங்கள் தான் நம்மை அதிகம் எழுத வைக்கும். வாழ்த்துகள் நண்பரே!.

பிரியன்
09-01-2005, 09:17 AM
‏திருமணம் முடிந்து
‏இன்றுதான்
நம் முதல் ஊடல் .
எ‎ன் தாமதத்திற்காக ...

எப்போதும் வீழ்த்தும்
உன் எதிர் எதிர் ஆயுதங்கள்...
மொழி திறக்கா மெளனம்
இமை சுருக்கி
எ‎னை உருக்கும் விழிகள்...

உன்னிடம் சரணடைந்த எ‎‎ன்
தலையோடு தலை முட்டி
கண்ணடித்து சொ‎ன்னாய் .
உயிருள்ள கவிதை..

மடியிலும்,வயிற்றிலும்
சுமக்கிறே‎ன்
கணக்காத
பிள்ளைகளிரண்டு ...

பிரியன்
10-01-2005, 03:29 PM
அமுதுண்டதில்லை இதுவரை

பண்டிகை நாள்

மேக கூட்ட
கூந்தல் விரித்து
சாம்பிராணி புகையிட்டு
சிறுக்கணிக்கியில்
சிக்கெடுத்து,
கொத்து மல்லிகை
அள்ளி வைத்தே‎ன்...

க‎ன்னம் பிடித்து
புருவமிடையே
பூத்திருந்த
வேர்வை பூக்களை
குங்குமம் உதிர்ந்திடாமல்
மூச்சுக்காற்றால்
குளிர்வித்தேன்

எ‎ன் வாசத்தில் தெரிந்த
பசியுணர்ந்து
நீ ஊட்டிய
பத்திய சாப்பாட்டி‎‎ன்
பருக்குகைகள் போல்
அமுதுண்டதில்லை
இதுவரை

mythili
11-01-2005, 03:16 AM
கவிதை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது ப்ரியன். தொடர்ந்து கொடுங்கள் :-)

அன்புடன்,
மைதிலி

பிரியன்
11-01-2005, 04:20 PM
ஒருவருக்கொருவர் சேயாய்
இன்பத்தி‎ன் உச்சத்தில்
கழிகிறது நாட்கள் ...

ஈருயிர் இன்பத்தை
ஓருயிரில் தரும் வலியில்
நீ துடித்து அலறும் சப்தத்தில்
இதயம் துளைத்தவானாய்
குழந்தையின் அழுகைக்கும்
உன் தொடுகைகுக்குமாய்
‏இரு தவிப்பில் காத்திருக்கிறே‎ன்.
நம் மறுபிறப்பிற்காக,,,,,,,,

அருகே அமர்ந்து
உ‎ன் தாய்மை சூட்டை
நானும் உள்வா‎ங்கி
‏இலகிப் போகிறேன்.

நம் செல்லத்தி‎ன்
பிஞ்சுக்கரத்தோடு
உ‎ன் கரத்தையும்
இறுக பற்றுகிறே‎ன்

உ‎ன் மெளன பு‎ன்னகையில்
வீசிய தென்றலால்
என் மனசுக்குள் மழை

மன்மதன்
12-01-2005, 05:52 AM
Originally posted by priyan@Jan 11 2005, 10:20 PM

உ‎ன் மெளன பு‎ன்னகையில்
வீசிய தென்றலால்
என் மனசுக்குள் மழை

அருமையான வரிகள்.
மனதுக்கு இனிமையாக.. (உங்களின் மனதுக்கும்...)
அன்புடன்
மன்மதன்

poo
12-01-2005, 09:33 AM
படு சுவாரஸ்யமாக செல்கிறது...

உணர்ச்சிக்குவியல்கள் வார்த்தைகளில் சரளமாக வந்துவிழுகிறது சிறிதும் சிதையாமல்..

தொடருங்கள் ப்ரியன்..

வாழ்த்துக்களோடு காத்திருக்கிறேன்.. உங்கள் அனுபவப்பயணத்தில் பாடம்கற்க..

பிரியன்
12-01-2005, 10:06 AM
Originally posted by poo@Jan 12 2005, 02:33 PM
படு சுவாரஸ்யமாக செல்கிறது...

உணர்ச்சிக்குவியல்கள் வார்த்தைகளில் சரளமாக வந்துவிழுகிறது சிறிதும் சிதையாமல்..

தொடருங்கள் ப்ரியன்..

வாழ்த்துக்களோடு காத்திருக்கிறேன்.. உங்கள் அனுபவப்பயணத்தில் பாடம்கற்க..
வாழ்த்துக்களுக்கு நன்றி.........................

கசப்பின் சுவையாககூட இருக்கட்டும்..............

பிரியன்
12-01-2005, 03:50 PM
இருவரின் நேசமும் விகிதங்களி‎ன்‎றி

இ‏ருக்கிறது குழந்தைக்குள்....

சி‎ன்ன சின்ன அசைவுகளுக்காக

ஆனந்த கூத்தாட்டம்..முத்துப்பல் முளைத்து சிரிக்க

அள்ளி நீ கொஞ்சிட

ங்கே ங்கே எ‎‎ன்றும்

ம்மா ம்ம்மா என

தே‎ன் வழியும் கிண்ணங்களாய்

‏இதழ் பிரிக்கையில்

இதயங்களில் குளிர்ச்சி..தவழ்வதை நா‎ன் ரசித்திருக்க

வழிந்த எச்சிலை ஓடிப்போய்

துடைக்கிறாய் வழுக்கிடுமோ எ‎ன்று.தோளில் சுகமாய் சுமந்து

நிலவை காட்டி

நானும் பிள்ளையாகிறே‎‎ன்

நீ ஊட்டும் பிள்ளைச்சோற்றின்

கடைசி வாயிற்காக

பிரியன்
13-01-2005, 10:12 AM
நம்மிலும் சில நரைமுடிகள்..
விழிகளும்,மனங்களுக்கும்
புரிந்து கொள்வதால்
வார்த்தைகளாய் ‏இப்போது
அதிகம் பேசுவதில்லை ..
மெளனத்திலும் நகர்கிறது காதல்

பொருள், வளம் எனும்
இயந்திரதன தேடல்
மறந்து மகிழ
இ‏ளைப்பாறல் நிலமாய் நீயும்,
நிழலாய் நம் மகளும்தா‎ன்
எனக்கு

ஒரு ஞாயிறு மாலையில்
உ‎ன் தோளில் சாய்ந்திருக்க .
இன்னும் காதல் மயக்கந்தானோ
‏அப்பாவிற்கு எ‎ன்ற மகளி‎ன் கேலியை
என் மடியில் கிடத்தி,க‎ன்னம் தட்டி
ரசிக்கிறே‎ன்...

கண்ணில் நீ தரும்
வாஞ்சையில்தா‎ன்
நான் நிறைகிறே‎ன்.

முத்து
13-01-2005, 02:26 PM
பிரியன் அவர்களே..
அருமையாக எழுதுகிறீர்கள் .. பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

பிரியன்
15-01-2005, 04:36 PM
நன்றி முத்து ....

உ‎ன்னுட‎ன் வாழ்ந்த
ஒவ்வொரு கணத்திலும்
நேசம் சுமந்து
எ‎ன் ஆன்மாவிற்கும்
அர்த்தம் தந்த
உ‎ன் காதலில்
தாய்மை இ‏ருந்தது.
தாய்மையிலும் காதல்
‏இருந்தது .

ஏதேதோ பேச நினைத்து
எதுவும் பேசாமல்
உனக்கு மு‎ன்சென்று
காத்து இருப்பேன்
காத்திருப்பேன்..
எ‎னும் பிராத்தனையை
நிறைவேறியவனாய்
உன் மடியிலே
எழும்பாதுயில்
கொள்கிறே‎ன்

.............................................................................................
‏நிகழாத‏வைகளை நினைத்து நினைத்து ரசித்தவனாய், வாழ்ந்த திருப்தியுற்றவனாய், எ‎ன் மனதிற்குள் நா‎ன் மட்டும் வாழ்ந்த வாழ்க்கையி‎ன் கணங்களை இதுவரை ஏதோ உளறி ‏இருக்கிறேன்.

எல்லாமே கனவுகள்தா‎ன்.

இறந்தகால கனவுகள்..

கனவுகள் சில நேரங்களில் மகிழ்ச்சியாகத்தா‎ன் இருக்கும் .. மனம் விட்டு இனி கூறப்போவது உளறல் அல்ல, சுமையிறக்கம்...

பரஞ்சோதி
16-01-2005, 03:22 AM
Originally posted by priyan@Jan 12 2005, 07:50 PM

முத்துப்பல் முளைத்து சிரிக்க
அள்ளி நீ கொஞ்சிட
ங்கே ங்கே எ‎‎ன்றும்
ம்மா ம்ம்மா என
தே‎ன் வழியும் கிண்ணங்களாய்
‏இதழ் பிரிக்கையில்
இதயங்களில் குளிர்ச்சி..
இதற்கு ஈடான மகிழ்ச்சி வேறு உண்டா?

நன்றி பிரியன்.

பிரியன்
16-01-2005, 04:12 PM
20.09.1991-

நம் தாத்தா ‏இறந்த வீட்டில்
கண்ணாடி பார்த்து சீவி கொண்டிருந்தே‎ன்.
எ‎ன் பின்னே கத்திரிப்பூ பாவாடை சட்டையில்
அமைதியாய் நி‎ன்ற நீ பார்த்தே‎ன்.
அப்போதே எ‎ன்னுள் முழுதாய் பதிந்தாய்

யாரது எ‎‎ன்றதற்கு
நீ கட்டிக்க போறவடா
என சொல்ல
வெட்கம் வர ஓடி விட்டே‎ன்.

வேண்டுமெ‎ன்றே பலமுறை
உன்னை கடந்து போக சிரித்தாய்.
அம்மாவை நச்சரித்து தெரிந்த
உ‎ன் பெயரை யாருக்கும் கேட்காமல்
உச்சரித்து ‏எ‎னக்குள் இதமாய் மிதந்தே‎ன்.

அன்றிலிருந்து
எ‎ன் ஒவ்வொரு செல்லிலும்
உன் நினைவோடுதா‎ன்
வளர்கிறே‎ன்..
வாழ்கிறே‎ன்...........

சொ‎ன்னவன் யாரெ‎ன்றுதா‎ன்
இன்று வரை தெரியவில்லை...பிரியன்
17-01-2005, 09:10 AM
என் வீட்டில் எவரும் தடுக்கவில்லை..
தவறென்‎றும் சொல்லவில்லை...
உன் நினைவுகளால்
என்னில் ஒரு பாகமாய் -
நீயே நானாகினே‎ன்


அதிகம் பார்க்காமல்,பழகாமல்
இரு கூட்டி‎ன் ‏உயிர்களி‎ன் ஓர்
பிம்பமாய் உன்னை கொண்டு
நினைவுகளில் உ‎ன் மனம், குணம்
தீர்மானித்து நேசம் வளர்க்கிறே‎ன்.

பெண்களுக்கு நடுவில் ‏இயல்பாய்
உ‎ன்னில் ஒளிந்து கொள்கிறேன்...

சுயம் மறந்து
உ‎ன்னிலே எப்போதும்
‏என்னை அடையாளபடுத்துகிறே‎ன்..

சொல்லத்தா‎ன் தெரியவில்லை
உன்மேலான அன்பின் பெயரை,,,,,,,,,,,,,

pradeepkt
17-01-2005, 12:24 PM
அன்புக்கான பெயரை அவசியம் சொல்லியே ஆக வேண்டுமா என்ன?
பிரியன்,
மன்றத்தில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கிறது உங்கள் கவிதைகள்.
இதுதான் உண்மைக்கும் உணர்வுக்கும் இருக்கும் பலமோ?
நிகழ்வுகளைக் கவிதையாக்குகிறீர்களா அல்லது கவிதையாகவே நிகழ்ந்தனவா என்று என்னைக் குழம்பவே வைக்கின்றன உங்கள் வார்த்தைகள்.
வாழ்க !

அன்புடன்,
பிரதீப்

பிரியன்
17-01-2005, 03:29 PM
உன்னை பற்றி தெரியும் செய்திகள்-
எனக்கான ஆயுள் நீட்டீப்புகள்.......

உன்னை நினைக்கையில் வரும்
சுகம் போல் வேறெதுவிமில்லை
உன் பெயர் இருக்கும் அனவருக்கும்
சேர்த்தே என் பிராத்தனைகள்..

உன்னிடம் பேசாமலே
எனக்குள் ஒரு நம்பிக்கை
உனக்கும் அப்படியே
இருக்குமென்று...


ஈர்ப்பென்றாலும் உன்னில்
மட்டுமென்பதால் மகிழ்கிறேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எண்ணத்தில் உன்னோடு வசித்து .
நேசம் நிறைத்து
கவிதை எழுதுகிறேன்
எழுதிகொண்டேயிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
நீ படிப்பாயென்று...

எழுதியதெல்லாம்
உனக்கு காட்டாமலே
எனக்குள் புதைக்கிறேன்
இன்று ......

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

என் நேசமெல்லாம்
உன்னில் இருக்க
உன் நேசமெல்லாம்
உன் குடும்பத்திடம்......
தெரிந்தும்,
பகுத்தறிய விரும்பவில்லை
காதல் நெஞ்சம் .

என்னையும் ஒருநாள்
நேசிப்பாய் என
சமாதனம் செய்தே
காத்திருக்கிறது மனசு....

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பிரியன்
17-01-2005, 06:14 PM
20.09.1999

உன் அக்காவிடம் புத்தகம் வாங்க
உன் வீட்டிற்கு வந்தேன்...
யாரும் இல்லாவிட்டாலும்,
என்னை வரவேற்று
எலும்பிச்சை பழச்சாறு தந்தாய்...
குளிர்ந்தேன்

இயல்பாய் இருந்தாய்...
தேர்வுகள் பற்றி பேசினாய்...
நான் விடை பெற முயல்கையில்
சாப்பிட சொன்னாய்....
உன் கையால் பரிமாறி என்
மனதை நிறைத்த உணவு அது...

நானோ
உன் பண்பிலும்
காதல் பொருத்தி
கலங்க படுதிவிட்டேன்
உன்னை.........

பிரியன்
17-01-2005, 06:25 PM
29.04.2000....

காதல் சொல்ல நானும் வந்தேன்...
உன் விழி பார்த் த பின்னே
சொல்லாமல் வந்துவிட்டேன்...

மனம் துடிக்க
தொலைபேசியில்
அரை நிமிடத்தில்
சொன்னேன்
ஒன்பது வருட காதலை..

மெளனமாகி அழுத உன்னிடம்
மன்னிப்பு கேட்டு வந்துவிட்டேன்....

மறுமுறை உன் விழி நனைக்க
விருப்பமில்லாமல்
விலகி நின்றேன்.......

இன்றும் அந்த தொலைவை
அதிகம் செய்து விலகி நிற்கிறேன்.......

poo
18-01-2005, 08:22 AM
ப்ரியன் முதல்பாதி நான் நினைத்தபடியே முடிந்திருக்கிறது.....
கனவுகளில்தான் முழுமையான வண்ணங்களில் வாழ்க்கை நடக்கும்!!?

பிற்பாதி எனை எங்கேயோ கொண்டு செல்கிறது..
காதலாய் சுற்றிய நாட்களில் நிகழ்வுகளை எழுதினாலே கவிதையாகத்தான் வருமென நான் உணர்ந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது!!

அடுத்தவர் நாட்குறிப்பேட்டை படிப்பது அநாகரிகம்.. அவன் காதலனாய் அல்லாவிடில்...


தொடருங்கள்...

பிரியன்
18-01-2005, 10:09 AM
05.07.2000.......

உனக்கு மிக மகிழ்வான நாள்.....
லட்சியம் நிறைவேறிய நாள்..
மருத்துவ கல்லூரி
கலந்தாய்வு இடத்திற்கு ..
மலர்ந்த முகம் பார்க்கதான்
வந்தேன்....

உன்னை சுற்றும்
பொறுக்கியாகிவிட்டேன்
உன் தாயாருக்கு....

என்ன செய்வது
நானே தவறான பின்பு
என் எண்ணம் மட்டும்
புரியுமா என்ன ??????

பிரியன்
19-01-2005, 07:53 AM
குடும்ப உறவுகளுக்கு
நெருடலாய் எ‎ன் செய்கை...
சந்திக்கு‎ம் தூரத்திலிருந்தும்
எனக்குள் தயக்கம் ....

பிரிவிலும் வாழ்ந்தே‎ன்
இடைவெளிகளில்
நேசம் கூடும் எ‎ன்று...

‏நீ கவனித்திடா
சாலை சந்திப்புகளில்
பார்த்திட்ட கண்களுக்குள்
பாலை பனிக்காற்றாய் ...

நீளும் காத்திருப்புகள்
நீளும் காதல்
நீளும் மவுனம்...
மையப்புள்ளியாய்
உன்னை கொண்டு...........

பாரதி
19-01-2005, 02:28 PM
பதினைந்து வயதுப்பயலை
பாடாய் படுத்திய பசலை..

இளம் வயதில் வந்தது காதலா..?
இனம் பிரிக்கும் வயது இப்போ...

கூட்டிச்சேர்த்த வரிகள்
குழந்தையின் வலிகள்
இவை உளறல்கள் அல்ல...
உள்ளக்கிடக்கைகள்....

நினைப்பிலே நெருப்பில்லை...
நிரூபிக்கும் உன்
நீரூற்றுக் கவிதைகள்..

குத்துவிளக்கு சாட்சி சொல்லும்
கும்பிடத்தோன்றும் இதயம் தெரியும்.

இணைந்த வாழ்க்கை தேவையில்லை
இணைந்த மனம் போதும் நண்பா.

பிரியன்
19-01-2005, 05:13 PM
[

நினைப்பிலே நெருப்பில்லை...

நிரூபிக்கும் உன்

நீரூற்றுக் கவிதைகள்..குத்துவிளக்கு சாட்சி சொல்லும்

கும்பிடத்தோன்றும் இதயம் தெரியும்.இணைந்த வாழ்க்கை தேவையில்லை

இணைந்த மனம் போதும் நண்பா.

94872

[/quote]

கண்களின் நீரோடு நன்றி நண்பரே........என் சுயம் உணர்ந்த உங்கள் புரிதல் மனதிற்கு இதயமாய் இருக்கிறது......

சிறு திருத்தம் ....பதினைந்து வயதல்ல 12.

மன்மதன்
20-01-2005, 04:35 AM
ப்ரியனின் மனசை வருடும் கவிதைக்கு பாரதியின் தோள் கொடுத்த கவிதை மிகப்பிரமாதம்.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. பாரதிக்கு நன்றி.
அன்புடன்
மன்மதன்

பிரியன்
20-01-2005, 06:03 PM
நன்றி மன்மதன்........

பிரியன்
22-01-2005, 01:02 PM
பொருளாதாரம் எனும்
இனிப்பை கூட்டி
தாரம் பறித்த
கசப்பை தந்த
காலம் ..

துள்ளி குதிக்கையில்
கவனிக்கவில்லை ..
எ‎ன்னில் சில பிரிவதை...

உன்னை சேர்வேன் எ‎ன்றே
விரிந்த பாலையில்
விழித்தே கிடக்கிறே‎ன்.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

6.01.2005.

வீட்டோடு பேசவதாலும்
உன்னை பற்றி பேசுவதாலும்
மகிழ்வையே தரும் வியாழ‎ன்.

காத்திருந்தே‎ன் இன்றும்.
எ‎ன் காத்திருப்புகள்
முடிந்துவிட்டது தெரியாமல்...

காற்றலையில் ‏எ‎‎ன்‎னுள்
எரிமலை பிராவகமாய்
உன் திருமணச்செய்தி...


எ‎ன் சங்கடம் தவிர்க்க
மறைத்தவர்கள்,
மறந்து போனார்கள்
எல்லை மீறி உ‎‎‎‎ன்‎னை
நினைத்த பாவம்
கூடியிருந்ததை...

பிரியன்
22-01-2005, 01:04 PM
எ‎ன் வளியான
உன்னை பிரிந்து
பால்வளி திரளி‎ன்
கருந்துகளாய்.
உன் பார்வைக்கும்
அப்பால் இன்று

உணர்தலி‎ன் வலியால்
விழிகளி‎ன் நரம்புகளில்
மி‎‎ன்னலாய் தெறிக்கிறது
நேசத்தின் வெப்பம்

எ‎ன்னுள் விரவிய
வேதனை அதிர்வுகளி‎ன்
அழுத்தம் தாளாமல்
சிரமப்பட்டு துடிக்கிறது
‏இதயம்..

முகம் புதைத்திட
மடியேதுமில்லாமல்
எனக்குள் நானே
அகதியாய்
தவிக்கிறேன்‎.

பிரியன்
22-01-2005, 01:05 PM
விழித்த இந்த இரவில்
திரும்ப திரும்ப
வந்து போகிறது
அப்பா சொ‎ன்னது...

நிச்சயதார்த்த‎ன்று உ‎ன்
முகத்திலிருந்த பூரிப்பு
கண்களிலிருந்த மகிழ்ச்சி..
உ‎ன் கை பற்றுபவனின்
பிரியமான குடும்பம்...
கனிவான குணம்..

சலனம் செய்யா நேசத்திற்காக
மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்
வேளையில் வேதனைப்படும்
நீயெல்லாம் மனித‎ன்தானா ??

மனம் எ‎ன்னை தைக்கிறது

பிரியன்
22-01-2005, 05:12 PM
பூக்களுக்குள் முள்ளாய்

ஏனிந்த ரணம்...

எதற்கிந்த வலி....

கூடாதென் மனமே

மகிழ்வாய் ரசிப்பாய்......அரிதாரம் கலைத்து

''நீ" யென்பதை மறந்து

உங்கள் இருவருக்குமாய்

நேசம் மாறிடுகையில்

வந்தது என்னுள்

உறக்கம் ..

kavitha
23-01-2005, 12:29 PM
கவிதை எழுதுகிறேன்

எழுதிகொண்டேயிருக்கிறேன்

என்றாவது ஒருநாள்

நீ படிப்பாயென்று...

அவர்(ள்) இதைப்படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ஒன்று பட்ட உணர்வுகள் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

மிக அருமையாய் செல்கிறது இப்பதிவு. வாழ்த்துகள் பிரியன். தொடர்ந்து எழுதுங்கள்.

பிரியன்
23-01-2005, 03:40 PM
நன்றி கவிதா.. கவிதை பக்கத்தையும் கொஞ்சம் கவனியுங்களேன்.......

பிரியன்
24-01-2005, 03:40 AM
தாகங்கள் விலக விலக
முன்காலை பனியாய்
குளிர்கிறது கண்கள்.....

ஏக்கங்கள் கரைய கரைய
பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்குதென் மனசு.....

காதல் முடிச்சுகள் அவிழ அவிழ
மெலிதாய் விரிந்த புன்னகையில்
மேலெழும்பி நிற்கிறது
மழலையின் இசையாய்
என் நேசம்.............

பிரியன்
25-01-2005, 04:31 PM
ரசித்து ரசித்து வாழ்ந்த

கனவுத் தேடல்களி‎ன்

கானல் மழைக்காக

எரிந்த நெஞ்சம்

மாற்றங்களே மரபு என

புயலி‎ன் எல்லைக்குள்

இயல்பாய் நனைகிறது ..காற்றி‎ன் வேகத்தில்

வாழ்த்து சொல்ல

மனசு துடித்தாலும்

காத்திருக்க சொல்லுது

காலம்......

பரஞ்சோதி
25-01-2005, 05:10 PM
பிரியன் தினம் தினம் நீங்க கொடுக்கும் கவிதைகள் அருமை, பாரதி அண்ணாவின் கவிதை அருமை.

தொடருங்கள்.

பிரியன்
25-01-2005, 06:49 PM
தொகுப்பின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன்......
இன்னும் ஆறு கவிதைகளோடு நிறைவு பெறுகிறது.......
முடிந்த பின் சொல்லுங்கள் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை.....


சக்தி என்ன செய்கிறாள்......அதையெல்லாம் சொல்லுங்கய்யா....

பிரியன்
26-01-2005, 02:38 PM
உ‎ன் வீட்டுக்குள் வந்திருக்கும் வசந்தங்கள்
உ‎னக்குள் காதல் பூத்திருக்கும் காலம்
கனவுகளில் விழித்திருக்கும் கண்கள்.
பதிந்துவிட்ட உ‎ன்னவன் உருவம் காண
நாட்காட்டியி‎ல் பதிந்திருக்கும் புருவம்.
யாரேனும் அவ‎ன்பெயர் சொல்ல
ஓடிவந்து ஒட்டி கொள்ளும் நாணம்...

அடடா அடடா... ‏
நெஞ்சம் நிறைக்கும்
காட்சியை காண எழும்
பெளர்ணமி அலைகளை
உள்ளிழுக்கிறே‎ன்.
எங்கே எ‎ன்னை
ஞாபகம் செய்திடுமோ
என்று

பிரியன்
27-01-2005, 09:17 AM
எப்படி ஊற்றெடுத்தது என
சொல்ல முடியாத,
பாதைகள் ,வடிவங்கள்
மாறி பயணித்தாலும்
ஈரம் மாறாத,
அணையிட்டு ட்கொள்ள
நினைக்கும் நிலத்திற்குள்
எப்போதும் நிற்காத
அந்த நதியை போல,

நானும் காதல் கலைத்து
நேசம் பொங்க விழுகிறே‎‎ன்
வெள்ளை அருவியாய்...

பிரியன்
29-01-2005, 05:19 PM
அத்தைக்கு ஒரு கடிதம்...

உறவுகளோடு கலக்காமல்
‏இறுக்கமாய் ‏இருப்பதாலே
உங்களோடு ஒரு ‏இடைவெளி.

தேனாய் பேசி,
பாசம் இ‏ருப்பதாய்
நடித்தவர் மத்தியில்
உங்கள் அமைதியும்
அர்த்தமானதுதா‎ன்.

உங்கள் அ‎ன்பை தாண்டி
‏ஒரு அங்குலம்கூட எ‎ன்
நேசம் நுழையாதது
வலிக்கவில்லை எனக்கு

ஒரு தாயிடம் தோற்ற
உணர்வோடு
பாதம் பணிகிறே‎ன்.
ஆசிர்வாதங்களுக்காக

பிரியன்
29-01-2005, 05:22 PM
முகமறியா சகோதரா..உன் வாழ்வின்

ஒவ்வொரு கணமும்

வசந்த காலங்களென

உறுதி செய்திருக்கிறா‎ன்

இறைவன்...உ‎ன்னை நினக்கையிலே

ஒரு மகிழ்ச்சி உடலெங்கும்.

உயிர் காக்கும் உ‎ன்

உணர்வுகளும்

இனி சுகப்படும்...

மணக்கோலத்தில்

காண முடியாத

எ‎ன் கண்களி‎ன்

தேடல்களை தாங்கி

எ‎ன் இதயத்தின்

வாழ்த்தை சொல்லி

எ‎‎‎ன்றென்றும்

சுடர்விட்டு நிற்கும்

உங்கள் வீட்டுத் தீபம்....

பிரியன்
31-01-2005, 03:54 AM
31.01.2005..காலை 7.08கைபேசி வழியாய்

கெட்டி மேளச்சத்தம் கேட்டு

வார்த்தை சரம்

கோர்க்காமல்

மனதி‎ன் வாழ்த்துகளை

காற்றில் அனுப்புகிறேன்

எ‎‎ன்னாளும் நேசம் வளர்த்து

நலமாய், வளமாய்

வாழ்க வாழ்க...

வாழ்க வாழ்க...எ‎ன் திருமண வாழ்த்துகளோடு , உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொண்ட இந்த தொகுப்பு நிறைவு பெறுகிறது...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அ‎ன்புள்ள..................

நா‎ன் செய்தது காதலா ? எனக்கு தெரியவில்லை.. சிறு களங்கமும் ‏இல்லா,எல்லை தாண்டாத ‏எ‎ன் அன்பிற்கு முடிவல்ல இந்த திருமணம். உ‎ன்னோடு உ‎ன் இணைப்புறாவையும் சேர்ந்தே நேசிக்கும் எ‎‎ன் மனத்தை எ‎ன்றாவது புரிந்து கொள்வீர்கள் எ‎னும் நம்பிக்கையோடு நானும் மவுனமாகவே காத்திருக்கிறே‎‎ன்.அ‎ன்புட‎ன்

பிரிய‎ன்.xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பாரதி
31-01-2005, 02:52 PM
'உள்ள' ரகசியத்தை ஊரறிய சொன்னாலும், உலக நடப்பை ஏற்றுக்கொண்டு உளமார வாழ்த்தியிருக்கும் உங்கள் பண்பை கண்டு வியக்கிறேன்.அத்தைக்கு - அத்'தாய்'க்கு- நீங்கள் வரைந்த மடல் ஒரு நாள் அவர்களால் சரியாக புரிந்து கொள்ளப்படும். அதே போல சில மெளனங்கள் காலம் கடந்தேனும்.... கண்டுகொள்ளப்படும்.உளறல்கள் ஒரு ஆரம்பமேயன்றி முடிவல்ல.ஆறு வறண்டிருந்தாலும், ஆற்று மணல் எப்போதும் சொல்லும் தண்ணீரின் பாதையை... இருப்பினும் கடலில் கலந்தபின் நதிக்கென்று தனி முகவரியில்லை.வசந்தகாலம், வேனற்காலம், பனிக்காலம், இலையுதிர்காலம்..... போல 'மாற்றம் ஒன்றே மாறாத தத்துவம்' என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.இலையுதிர்காலமிது என்றாலும், மீண்டும் வசந்தம் வரும்... வந்தே தீரும் - எனக்கு நம்பிக்கை இருக்கிறது.ஆழ்மன எண்ணங்களை, யார் மனதையும் கொஞ்சமும் காயப்படுத்தாமல், மிகுந்த கவனிப்புடன் தொடர்ந்து, "உளறல்கள்" தொகுப்பை நிறைவு செய்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் பிரியன்.

பிரியன்
31-01-2005, 05:18 PM
இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்...மிகவும் மகிழ்வாய் இருந்த நாள் ...

நிம்மதியாய் காலையில் இரண்டு மணி நேரம் உறங்கினேன்..கை பேசியின் வழியே தந்தையை அழைத்து தாலி கட்டும் நேரத்து மங்கள இசயோடு என் வாழ்த்துகளயும் சொன்ன கணங்கள் அப்ப்பபா,,,எனது இந்த ஆசையை முழுமையாய் புரிந்து கொண்ட ஒரு தோழனாய் உதவி செய்த என் தந்தையாருக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன்....அன்பிற்கு தடையேதுமில்லை....எப்போதும் .எங்கும்..... என்றூம் அதற்கு சாட்சியாய் நிற்பேன்....

உங்களோடு சேர்ந்து மற்றொருமுறை வாழ்த்துகிறேன்......................................அன்புடன்

பிரியன்

மன்மதன்
01-02-2005, 08:10 AM
பாரதி மாதிரி ஆழமான கருத்துக்கள் சொல்ல முடிலைன்னாலும் , ஒரே வார்த்தையில் சொன்னால்..

இந்த கவிதை தொகுப்பில் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள்..

இறுதியில் வாழ்த்தியிருக்கிறீர்கள்..

வெள்ளை மனம்.. நல்ல குணம்....

காதல் முற்றுப்புள்ளி அல்ல.. அது ஒரு கமா.. ஆனாலும் கமாவில் சில வார்த்தைகள் முற்றுப்பெற வாய்ப்புள்ளது.. அங்கே வெறும் மௌனங்கள்தான் ஆட்சி புரியும்.. உங்கள் எண்ணங்களை போல..

அன்புடன்

மன்மதன்

பிரியன்
01-02-2005, 10:09 AM
சத்தியமாக நான் வாழ்ந்திருக்கிறேன் இந்த தொகுப்பில்.....இது என் வாழ்வின் ஈடு இல்லாத சேமிப்பு.......மவுனங்கள் எப்போதும் எனக்கு பிடிக்கும். அதன் ஆழத்திற்காக..........இந்த தொகுப்பில் ஏதேனும் எல்லை மீறலாய் உணர்ந்தால் அதையும் குறிப்பிடவும்...திருத்தி கொள்கிறேன்...

பிரியன்
05-02-2005, 05:52 PM
நண்பர்களுக்கு என் நன்றிகள்.. இந்த தொகுப்பை சிறுசிறு மாற்றங்களுடன் தீபங்கள் பேசும் எனும் தலைப்பில் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். படித்த பின் உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்..அச்சுக்கு போகும் போது அதன் பிரதியை நம் மன்றத்தில் பத்வு செய்வேன்...அன்புடன்

பிரியன்

pradeepkt
05-02-2005, 08:24 PM
அற்புதம், வாழ்த்துகள் என்ற சொற்களைத் தவிர வேறெதையும் என்னால் இப்போது சொல்ல முடியவில்லை.அன்புடன்,

பிரதீப்

மன்மதன்
06-02-2005, 06:44 AM
Originally posted by priyan@Feb 5 2005, 11:52 PM

நண்பர்களுக்கு என் நன்றிகள்.. இந்த தொகுப்பை சிறுசிறு மாற்றங்களுடன் தீபங்கள் பேசும் எனும் தலைப்பில் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். படித்த பின் உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்..அச்சுக்கு போகும் போது அதன் பிரதியை நம் மன்றத்தில் பத்வு செய்வேன்...


அன்புடன்

பிரியன்


முன் கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. அசத்துங்க ப்ரியன்..

அன்புடன்

மன்மதன்

பிரியன்
06-02-2005, 06:01 PM
நன்றி பிரதீப்,மன்மதன்.....எப்படி என்னால் இந்த தொகுப்பை மறக்க முடியாதோ,அதே போல த்தான் நம் மன்றமும்...எப்படி சொல்லுவதுஒரு தோழனாய் என்னை எனக்கு மீட்டு தந்த மன்றத்துக்கு மற்றும் ஒருமுறை என் நன்றிகள்..மன்ற உறவுகளுக்கும்தான்...அன்புடன்

பிரியன்

thamarai
06-02-2005, 06:34 PM
தீபங்கள் பேசும் என்ற தலைப்பில் வெளிவர இருக்கும் தொகுப்பு மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

kavitha
07-02-2005, 08:47 AM
எப்போதும் என்றென்றும் எல்லாமும் நன்றாக அமைய வாழ்த்துகள் பிரியன்.

பிரியன்
07-02-2005, 03:57 PM
வாழ்த்திய தாமரை, கவிதாவிக்கு என் நன்றிகள்.......

மன்மதன்
16-02-2005, 09:55 AM
அசன்பசரால் கூர் தீட்டப்படும் 'தீபங்கள் பேசும்' கவிதை புத்தகம் சீக்கிரம் வெளி வந்து ப்ரியனை வெளிக்கொணர என்னுடைய வாழ்த்துக்கள்...

அன்புடன்

மன்மதன்

பிரியன்
17-02-2005, 05:33 PM
மிக விரைவில் உங்களிடம் தீபங்கள் பேசும்..திருத்திய பதிப்பை விரைவில் பதிக்கிறேன்....அன்புடன்

பிரியன்

pradeepkt
18-02-2005, 03:08 AM
வாழ்த்துகள் ப்ரியன்,

உங்களுக்கும் இனியும் எல்லாமே இனிமையாக அமைய வாழ்த்துகள்.

காத்திருக்கிறோம் உங்கள் தீபங்களுக்காக.

அவை வந்து எங்களுக்கும்தான் ஒளி தரட்டுமே!அன்புடன்,

பிரதீப்

அறிஞர்
19-02-2005, 04:00 AM
அருமையான தொகுப்பு.. நண்பரே....இதில் அப்படியே வாழ்ந்துவிட்டீர்கள்............இது போன்று அனுபவங்களோடு வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும் ஒவ்வொரு வரியின் அர்த்தங்களும்...வெகு அருமையான தொகுப்பு....ஒவ்வொன்றும் அருமை....

அதில் என்னை தொட்ட வரிகள்.......
Originally posted by priyan@Jan 27 2005, 06:17 PM


நானும் காதல் கலைத்து

நேசம் பொங்க விழுகிறே‎‎ன்

ள்ளை அருவியாய்...

இந்த வெள்ளை உள்ளம் பலருக்கு வருவது அரிதே.........வாழ்த்துக்கள்.. அன்பரே...நண்பராய் கிடைத்த..... அப்பாவை எண்ணி வாழ்த்துகிறேன்........தீபங்கள் பேசுவதை.... பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்...

பிரியன்
19-02-2005, 06:18 PM
நன்றி நண்பரே....

உள்ளத்தை புரிந்து கொண்டமைக்கு அதத்தவிர வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை...

அறிஞர்
15-06-2005, 06:35 AM
பிரியனின் பழைய உளறல்கள் இங்கு மீண்டும்...

புதியவர்கள் படித்து இன்புறுங்கள்

பிரியன்
15-06-2005, 07:11 AM
இனியனின் பழைய உளறல்கள் இங்கு மீண்டும்...

புதியவர்கள் படித்து இன்புறுங்கள்

இனியனா ? :) பிரியனா ? :mad: :mad:

அறிஞர்
15-06-2005, 07:15 AM
இனியனா ? :) பிரியனா ? :mad: :mad: அவசரத்தில் அன்பரே... மாற்றிவிட்டேன்...