PDA

View Full Version : நுழைவுத் தேர்வுகள் ரத்து!



பாரதி
06-06-2005, 04:53 PM
தமிழகத்தில் பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து!:
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 'சீட்'!!ஜூன் 6, 2005

சென்னை:

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டு முதல் (20052006) பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. பிளஸ்2 தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.

மேலும் பிளஸ் டூ இம்ப்ரூவ்மெண்ட் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான கல்லூரிகளில் இடங்கள் குறைவாக இருந்த நேரத்தில், ஏராளமான மாணவர்கள் அதில் சேர விண்ணப்பித்ததால் கடந்த 1984ம் ஆண்டில் நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. அதே நேரத்தில் மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகளுக்கு இன்னும் கூடுதல் இடங்கள் தேவைப்படுகின்றன.

இந்த விஷயத்தில் அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இப்போதுள்ள பொது நுழைவுத் தேர்வு முறை பொற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெரும் மனச் சோர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நுழைவுத் தேர்வு முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளால் பாதிக்கப்பட்டு தொழில் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். பிளஸ் 2 படித்து முடித்தவுடனேயே தொழில் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக தங்களை மிகக் கடுமையாக தயார் படுத்த வேண்டிய சூழல் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோருக்கும் மன உளைச்சலைத் தருகிறது.

அனைத்து மாணவர்களின் நலன் கருதியும், குறிப்பாக கிராமப் புற மாணவர்களின் நலன் கருதி இந்த நுழைவுத் தேர்வு முறையில் உடனடியாக மாற்றம் தேவை என உணர்கிறேன்.

இந்தக் கல்வி ஆண்டு முதலே (20052006) முதலே இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. அதன்படி பிளஸ்2 தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இந்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கப்படுவார்கள். புதிதாகவும் மாணவ, மாணவிகள் விண்ணிப்பிக்கலாம். இதற்கான கால நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும்.

பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூலை மாத தொடக்கத்தில் கவுன்சிலிங் நடக்கும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தொழில் கல்லூரிகளில் சேர தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த புதிய திட்டம் பிஇ, பிடெக், பி.ஆர்க் மற்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், விவசாயம், வெட்னரி சயின்ஸ், சட்டம் ஆகிய படிப்புகளுக்கு பொருந்தும்.

வெறும் பிளஸ் டூ மார்க் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். வேறு எந்த வகையிலும் நுழைவுத் தேர்வு முறை கிடையாது. அதிக மதிப்பெண்கள் பெற்று இந்தப் படிப்புகளில் சேர தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிங்கிள் வின்டோ முறையில் கலந்தாய்வு நடத்தி படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.
நுழைவுத் தேர்வு ரத்தாவதால், பிளஸ் டூவில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு ரத்தாகிறது. இந்த ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.

இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அறிஞர்
07-06-2005, 02:47 AM
இன்று காலை செய்தியை கண்டேன்..

ஆச்சரிய படுத்தியது.... எப்படி முதல்வர் திடீரென மனமாறினார் என..

கிராம மக்களை குளிர்விக்க நல்ல செயல்....

இதனால் நகர மாணவர்களுக்கு இழப்பு...... பின் தங்கிய பகுதியில் உள்ள மாணவர்கள்..... முன்னேற வாய்ப்பு....

என்ன தான் செய்தாலும் மாணவிகள்.. மாணவர்களை விட அதிக இடங்களை பிடிக்கிறார்கள்......

பிரியன்
07-06-2005, 03:47 AM
இன்று காலை செய்தியை கண்டேன்..

ஆச்சரிய படுத்தியது.... எப்படி முதல்வர் திடீரென மனமாறினார் என..

கிராம மக்களை குளிர்விக்க நல்ல செயல்....

இதனால் நகர மாணவர்களுக்கு இழப்பு...... பின் தங்கிய பகுதியில் உள்ள மாணவர்கள்..... முன்னேற வாய்ப்பு....

என்ன தான் செய்தாலும் மாணவிகள்.. மாணவர்களை விட அதிக இடங்களை பிடிக்கிறார்கள்......

முதல்வர் தெளிவாக இருக்கிறார். மீண்டும் முதல்வராவதற்கு...
மனம் திறந்து வாழ்த்துகிறேன். பின் தங்கிய மாணவர்களுக்கு இது ஒரு வரம். பெற்றோர்களுக்கும் சற்று நிம்மதியை கொடுத்திருக்கும்...இதே நேரத்தில் கல்விக் கட்டணங்களையும் குறைத்தால் நன்றாக இருக்குமே...

pradeepkt
07-06-2005, 04:14 AM
இது ஒரு முன் முயற்சி. இந்த நுழைவுத் தேர்வு முறை நல்லதா கெட்டதா என்று பட்டிமன்றங்கள் நடந்தவாறு உள்ளன.

நமது பொதுத்தேர்வுகள் இயல்பாகவே மாணவர்களது நுண்ணறிவுத் திறனைச் சோதிக்கும் வண்ணம் இல்லை. நாம் ஒத்துக் கொள்கிறோமோ இல்லையோ, நெட்டுருப் போடும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் மனிதர்களால் திருத்தப் படுவதால் இதில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். அதிக பட்சம் 10 மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள் வருவதால் குத்துமதிப்பாக 1 மதிப்பெண் குறைத்தாலும் அதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் ஆயிரமாயிரம். நுழைவுத் தேர்வு என்பது எங்கள் காலத்தில் எல்லாம் கண்டிப்பாக புரிந்து படித்தால் மட்டுமே மதிப்பெண் பெறும் வகையில் இருந்தது. இப்போது எப்படி என்று புரியவில்லை. மேலும் கணிப்பொறியினால் திருத்தப் படுவதால் தவறு ஏற்பட வாய்ப்பு மிக மிகக் குறைவு. இப்போதெல்லாம் இணையத்திலேயே நீங்கள் எண்ணைக் கொடுத்தால், எந்தக் கேள்விக்கு என்ன விடை, நீங்கள் என்ன எழுதி இருந்தீர்கள், அதனால் உங்களுக்கு எத்தனை மதிப்பெண் போயிற்று, வந்தது என்பதெல்லாம் கண்கூடாகத் தெரிகிறது. நானே பார்த்தேன்.

கிராமப்புற மாணவர்களுக்கு இதனால் நிறைய வாய்ப்பென்று கூறுவோர் உண்டு. இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். இப்போது முடிந்த தேர்வுகளிலும் பெரும்பான்மையான பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் நகரங்களில் உள்ள மாணவர்களே! நிறைய கிராமப்புற மாணவர்களும் நன்மதிப்பெண் பெற்றிருக்கின்றனர், மறுக்கவில்லை! ஆனால் சதவிகிதத்தைப் பாருங்கள் புரியும். எனவே இதற்குக் காரணம் நுழைவுத் தேர்வு இல்லை. தரமான அரசுப் பள்ளிகள், சொல்லிக் கொடுக்கும் ஆர்வமுள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதரவான பெற்றோர் என்று ஏராளம் உண்டு.

இது எல்லாம் போக இந்த வருடமே இதை எடுத்திருக்க வேண்டுமா என்பதையும் சிந்திக்க வேண்டும். இதை நம்பிய மாணவர்களின் கதி என்ன?

தொடர்ந்து பல வருடங்களாக மாணவர்களைச் சுற்றி இருந்திருக்கிறேன், நுழைவுத் தேர்வு, மற்றும் பொதுத்தேர்வு எழுதுபவர்களோடு தொடர்பிலிருக்கிறேன். எத்தனையோ குறைகள் இருக்கலாம். ஆனால், பொதுத் தேர்வின் குளறுபடிகளை எல்லாம் சரி செய்யாமல் நுழைவுத் தேர்வை ரத்து செய்திருப்பது, அதுவும் இந்த வருடமே ரத்து செய்திருப்பது தவறு.

ஆந்திரா போன்ற மாநிலங்களில் நுழைவுத்தேர்வை வைத்து மட்டுமே பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நண்பர்கள் விரும்பினால் மேலும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.

பரஞ்சோதி
07-06-2005, 04:32 AM
மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

மேலே பிரியன் சொன்னது, பிரதீப் சொன்னது இரண்டுமே சரியாகப்படுகிறது.

நுழைவுத்தேர்வு என்பது நன்றாக படித்து, தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக மதிபெண்கள் குறைந்தாலும் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருந்தது.

என்னுடைய பள்ளி பருவத்தில் எங்கள் மொத்த பள்ளிக்கே மதிப்பெண்கள் குறைவாக கிடைத்தது. அதே ஆண்டு தான் புதிய பாட புத்தகங்கள் வெளிவந்தது, அரையாண்டு முடியும் வரை கணித ஆசிரியரிடம் (அவரும் அப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்) மட்டுமே ஒரு புத்தகம் உண்டு, வேதியியல் புத்தகங்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே எங்களிடம் இருந்தது. இதை எல்லாம் மீறி தேர்வு எழுதி, தேர்வு தாட்கள் திருத்தும் போது ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்ய, அப்போ இருந்த கலைஞர் ஆட்சி, ஆசிரியர்களை சமாதானப்படுத்த தாமதம் செய்யம், எங்க தமிழ் ஆசிரியர் அறிவியல் தாட்கள் திருத்தியதாக சொன்னார், அதுவும் ஒரு மாணவனுக்கு 100 ரூபாய் என்று கொடுத்தார்கள், வீட்டிற்கு கொண்டு வந்து திருத்தினேன், ஏதோ என்னால் முடிந்தவரை மாணவர்களுக்கு உதவி செய்தேன் என்றார், எங்களுக்கு குலை நடுங்கி விட்டது, தேர்வு முடிவு வந்தப்பின்பு நான் வீட்டை வீட்டு ஓடிவிடலாமா என்று நினைக்கும் அளவிற்கு நன்றாக படித்து எடுத்த மதிபெண்கள் மிகவும் குறைவு, நல்ல நிலைக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் பலரின் கதி அதோ கதியாகி விட்டது. திறமைமிக்கவர்களில் ஒரு சிலர் நுழைவுத்தேர்வின் போது திறமையை காட்டி முன்னேறிவிட்டார்கள், சிலர் மீண்டும் திருத்தம் செய்யச் சொல்லி மதிபெண்களை கூட்டிக் கொண்டார்கள், ஒரு சிலர் அதிக மதிபெண்கள் பெற்று காட்டுகிறேன் என்று சொல்லி சில ஆண்டுகளை வீணாக்கிக் கொண்டார்கள், அதிஷ்டம் காரணமாக நானும் ஏதோ முன்னேறி இருக்கிறேன், ஆனால் எதுவும் இல்லாத ஏழை மாணவர்கள் கதி அதோ கதி தான். இப்போ அந்த திறமையான மாணவர்களை சந்திக்கும் போது பழைய கதையை சொல்லி, நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவது உண்டு.

ஆக மொத்தம் அரசாங்கம் இனிமேல் நல்ல கல்விக்கூடங்கள், தரமான கல்வி, பாட புத்தகங்கள், குறைந்த கட்டணம், திறமையான ஆசிரியர்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும், தேர்வு தாட்களை திருத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வேண்டும். இவை அனைத்தும் செய்து முடித்தால் அரசாங்கம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.

இக்பால்
07-06-2005, 04:37 AM
20 வருட காலமாக இருந்த மருத்துவ, பொறியியல் பி.இ., பி.ஆர்க்., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்(பல்மருத்துவம் ) ,பி.பார்ம்,பி.வி.எஸ்.சி.(கால்நடை மருத்துவம் ) , பி.எஸ்.சி.விவசாயம் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் இந்த கல்வி ஆண்டில் இருந்தே ரத்து செய்யப் படுகிறது.

கிராமப்புற, வெளிநாட்டில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

சொல்லப் போனால் எல்லோருக்குமே நல்ல செய்திதான்.

செய்தி கொடுத்த பரஞ்சோதி தம்பிக்கு நன்றிகள்.
-அன்புடன் இக்பால்.

pradeepkt
07-06-2005, 04:43 AM
இதைவிட முக்கியமான அறிவிப்பு "இம்ப்ரூவ்மெண்ட்" தேர்வுகள் இனி இல்லை என்பதுதான்.
ஏதோ ஒரு மாணவர் தேர்வில் தோல்வி அடைந்தால் அடுத்த தடவை தலையால் தண்ணீர் குடித்தாவது மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று விடலாம். அதே மாணவர் சரியாக பாஸ் மார்க் வாங்கி இருந்தார் என்று வையுங்கள். இப்போது அவர் வாழ்வில் என்றும் இருட்டுதான்.

இந்த அரசு முடிவுகள் பல சமயங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என இருந்து பின்னர் வாபஸ் பெறப் பட்டுள்ளன. பெற்றோர்-ஆசிரியர் கழகத்திடம் கூட ஆலோசிக்காமல் இப்படி விட்ட அறிவிப்புகள் என்னதான் ஆகுமோ? அவை போல் இதுவும் திரும்பப் பெறப் பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

அறிஞர்
07-06-2005, 04:54 AM
இந்த வருடம் முதல் என முடிவு எடுத்தது தவறு என்றே படுகிறது....

எத்தனை பேர் சிரமப்பட்டு படித்து செலவழித்து இருப்பர்........ எல்லாம் பாவம்...

இம்ப்ரூவ்மெண்ட் என்பது தேவை இல்லை என்பது என் கருத்து... எல்லா பாடங்களையும் ஒரே முறையில் எழுதி கிடைக்கும் மதிப்பெண்தான்... தரத்தை வெளிப்படுத்தும்

pradeepkt
07-06-2005, 05:00 AM
இம்ப்ரூவ்மெண்டை வைத்து பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்குச் சேர வழிவகை செய்வது அநியாயம்தான். அது அந்த வருடம் சிரமப் பட்டுப் படித்து வ்அந்த மாணவர்களின் நலனைப் பாதிக்கும். நானும் ஒத்துக் கொள்கிறேன். எனவே அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டாம்.

ஆனால் ஒரேயடியாக இம்ப்ரூவ்மெண்டை ஒழிப்பது பற்றி என் கருத்தைச் சிந்தியுங்கள் அறிஞரே! ஏதோ அறியாமல் ஒருமுறை குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் ஒரேயடியாக வாழ்வை இருட்டாக்க வேண்டாமே! இது கொஞ்சம் படித்ததற்கு அவர்களுக்குக் கிடைத்த தண்டனையா? தோல்வி அடைந்தாலே பரவாயில்லை என்ற நிலைமைக்கு அவர்களைத் தள்ளலாமா?

நான் சொன்னதுபோல் ஒருமுறை தேர்வில் தோல்வி அடைந்த மாணவனுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப் படுகிறது. அதேபோல் இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கினால் தொழிற்கல்விப் படிப்பு இல்லையென்றாலும் ஒரு நல்ல கல்லூரியிலாவது போய் சாதாரணப் பட்டப்படிப்பாவது படிக்கலாமே?

இந்தக் கூத்தில் ஒரு எதிர்க்கட்சி கூட இந்த வருடமே இதை நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. திமுக, பாமக என எல்லாருமே அவர்கள் போராட்டம் நடத்தியதாலேயே ஜெ. பயந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார் என அரசியல் பேசுகிறார்கள்.

அறிஞர்
07-06-2005, 05:12 AM
நான் சொன்னதுபோல் ஒருமுறை தேர்வில் தோல்வி அடைந்த மாணவனுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப் படுகிறது. அதேபோல் இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கினால் தொழிற்கல்விப் படிப்பு இல்லையென்றாலும் ஒரு நல்ல கல்லூரியிலாவது போய் சாதாரணப் பட்டப்படிப்பாவது படிக்கலாமே?
நானும் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்....
ஆனால்... கடினப்பட்டு படித்து ஒரு முறையில் மதிப்பெண் எடுப்பவர்கள்.. பின்னே தள்ளப்படுவது சரியல்ல....

முக்கிய தொழிற்கல்விக்கோ அல்லது.... சிறந்த கல்லூரிகளுக்கோ... முதல் முறை பெற்ற மதிப்பெண்ணை மாத்திரம் பார்க்கவேண்டும்... என்பது என் எண்ணம்...

pradeepkt
28-06-2005, 09:54 AM
நுழைவுத்தேர்வு ரத்து செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
நன்றி: தினமலர்.

சென்னை:"மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த 'உத்தரவு செல்லாது' என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்து செய்ததை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தலாம் என்றும், ஏற்கனவே இம்ப்ரூவ்மென்ட் தேர்வு நடந்து விட்டதால் இந்த ஆண்டுக்கு அதை ரத்து செய்வது சரியாக இருக்காது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 19 நாட்களாக நிலவிய பரபரப்பிற்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு கடந்த 21 ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடந்து, முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக சில அரசியல் கட்சிகள் அறிவித்தன. இந்நிலையில், திடீரென்று நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தொழிற் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்தது. முதலில் பெற்ற மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 9ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். "தொழிற் கல்லுரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், திடீரென்று மாணவர்கள் சேர்க்கைக்கான நடைமுறைகளை மாற்றுவதற்கு அரசுக்கு உரிமையில்லை. அரசின் அறிவிப்பின்படி நாங்கள் செயல்பட்டுள்ளோம். ஓராண்டாக கஷ்டப்பட்டு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். திடீரென்று ரத்து செய்வதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்' என்று அந்த மனுக்களில் மாணவர்கள் கூறியிருந்தனர். இதேபோல், மதுரை ஐகோர்ட் கிளையிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசாணையை ஆதரித்து தொழில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, பா.ம.க., மாணவர் அணி ஆகியவையும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் முதலில் நீதிபதி பி.டி.தினகரன் முன் விசாரணைக்கு வந்தது. பொதுநலன் கருதியும், மதுரை ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருப்பதாலும் மனுக்களை தலைமை நீதிபதிக்கு, நீதிபதி தினகரன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, இந்த மனுக்கள் அனைத்தையும் "முதல் பெஞ்ச்' விசாரிக்கும் என்றும், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கலாகும் மனுக்களையும் இங்கு மாற்ற வேண்டும் என்றும் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய "முதல் பெஞ்ச்' இரண்டு நாட்களாக இந்த மனுக்களை விசாரித்தது. மாணவர்கள் சார்பில் சீனியர் வக்கீல்கள் விஜயன், ஆர்.காந்தி, சி.செல்வராஜ், நளினி சிதம்பரம், ஜெயராமன், டி.ஆர்.ராஜகோபாலன், அரவிந்த் தத்தார், பி.எஸ்.ராமன் மற்றும் வக்கீல்கள் என்.பால் வசந்தகுமார், கே.செல்வராஜ் ஆகியோர் ஆஜராயினர். அரசு தரப்பில் டில்லி சீனியர் வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட்ஜெனரல் என்.ஆர்.சந்திரன், கூடுதல் அட்வகேட்ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர்கள் கார்த்திகேயன், டி.கிருஷ்ணகுமார் ஆகியோரும், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சீனியர் வக்கீல் மாசிலாமணி, கல்லுரிகள் கூட்டமைப்பு சார்பில் சீனியர் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க., மாணவர் அணி சார்பில் சீனியர் வக்கீல் ஆர்.தியாகராஜன் ஆகியோரும் ஆஜராயினர்.

இருதரப்பு வக்கீல்களின் வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் 27ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று காலை முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய "முதல் பெஞ்ச்' அளித்த தீர்ப்பு வருமாறு:

* பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் அது பாரபட்சமானது. ஏனென்றால், பிளஸ் 2 தேர்வில் மாநில போர்டு, சி.பி.எஸ்.இ., போர்டு மற்றும் ஐ.எஸ்.சி., போர்டு ஆகியவை உள்ளன. இவைகள் வெவ்வேறு பாடத் திட்டங்கள், கேள்வித் தாள்கள், மதிப்பெண்கள் முறையை கொண்டது.

* சுப்ரீம் கோர்ட் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளின்படி பொது நுழைவுத் தேர்வு என்பது சட்டப்பூர்வமானது. இதை ரத்து செய்ய முடியாது.

* தமிழக அரசு பிறப்பித்த அரசாணை இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.

எனவே, பொது நுழைவுத் தேர்வை பொறுத்தவரை, கடந்த 9ம் தேதி உயர்கல்வித் துறை பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இம்ப்ரூவ்மென்ட் தேர்வை பொறுத்தவரை, அதை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு. சட்ட விதிகளை, அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக இருந்தாலொழிய, பொதுவாக, அரசின் கொள்கை முடிவில் இந்த கோர்ட் தலையிடுவதில்லை. இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்து செய்வதால் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்வதற்காக மாணவர்களுக்கு அரசு அளித்த சலுகை தான் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை இம்ப்ரூவ்மென்ட் தேர்வும், நுழைவுத் தேர்வும் நடந்து முடிந்து விட்டன. எனவே, இந்த ஆண்டுக்கு நடந்து முடிந்த இம்ப்ரூவ்மென்ட் தேர்வை ரத்து செய்வது முறையாக இருக்காது. ஆனால், அடுத்த ஆண்டு முதல் (2006-07) இம்ப்ரூவ்மென்ட் தேர்வை நடத்த வேண்டியதில்லை.

இவ்வாறு "முதல் பெஞ்ச்' தனது உத்தரவில் கூறியுள்ளது.

இந்த உத்தரவை "முதல் பெஞ்ச்' பிறப்பித்ததும் சீனியர் வக்கீல் விஜயன் எழுந்து, "அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டின் படி, நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது' என்றார். அதற்கு அட்வகேட்ஜெனரல் என்.ஆர்.சந்திரன், "ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அரசு முடிவெடுத்தால் அதற்கான வழிமுறைகள் பிறப்பிக்கப்படும்' என்றார். இதையடுத்து, "முதல் பெஞ்ச்' தனது உத்தரவில், "நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வை ரத்து செய்வதற்கு முன்பாக பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையான வழிமுறைகளை அரசு குறிப்பிட வேண்டும். சம்பந்தப்பட்ட படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இந்த உத்தரவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்' என்று கூறியது. ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பை அடுத்து 19 நாட்களாக நிலவிய பரபரப்பு முடிவிற்கு வந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்?: "நுழைவுத் தேர்வு ரத்து செல்லாது' என்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்யும் எனத் தெரிகிறது.

"நுழைவுத் தேர்வு ரத்து செய்தது செல்லாது; இம்ப்ரூவ்மென்ட் தேர்வை ரத்து செய்தது செல்லும். ஆனால், அடுத்த ஆண்டு முதல் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு ரத்தை அமல்படுத்த வேண்டும்' என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுமுறை கால கோர்ட்டில் தான் முறையிட வேண்டும். அல்லது சுப்ரீம் கோர்ட் திறந்த பின் முறையிட வேண்டும். அடுத்த மாதம் 11ம் தேதி தான் சுப்ரீம் கோர்ட் திறக்கிறது. நீதிபதி தர்மாதிகாரி அடங்கிய "பெஞ்ச்' விடுமுறை காலத்தில் செயல்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இந்த "பெஞ்ச்' கூடும். பா.ம.க., மாணவர் அணி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் பா.ம.க., மாணவர் அணி சார்பில் அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்படுகிறது.

தொழிற் கல்லுரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பல்வேறு முரண்பாடுகளை களையும் விதமாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய அரசியலமைப்பு பெஞ்ச் விசாரித்த மனுக்கள் மீது விரைவில் உத்தரவு வெளிவர உள்ளது. சுப்ரீம் கோர்ட் திறந்த பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். எனவே, சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அறிஞர்
29-06-2005, 07:49 AM
இந்த சூழ்நிலை மாணவர்களை மிகவும் பாதிக்கும்...

அரசை நடத்துபவர்கள் முன்பே யோசித்து.. சில மாதங்களுக்கு முன் தெளிவான முறையை அறிவித்து இருக்கவேண்டும்.....

அடுத்த வருடம் தெளிவான நிலை உருவாகும்..

pradeepkt
29-06-2005, 08:28 AM
சரியாகச் சொன்னீர்கள் அறிஞரே...
இப்போது நுழைவுத் தேர்வு ரத்து என்றதும் எண்ணிலடங்கா மாணவர்கள் நல்ல தனியார்க் கல்லூரிகளைத் தஞ்சமடைந்தார்கள்.
மீண்டும் நுழைவுத் தேர்வு வந்ததும் அவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இப்போது அவர்கள் கட்டிய கட்டணத்தில் பெரும்பங்கைத் தனியார் கல்லூரிகள் தர மறுக்கின்றன.
தீர்ப்பு வெளியாகியும் இன்னும் அரசின் நிலை தெளிவாகவில்லை.

அறிஞர்
29-06-2005, 12:07 PM
சரியாகச் சொன்னீர்கள் அறிஞரே...
இப்போது நுழைவுத் தேர்வு ரத்து என்றதும் எண்ணிலடங்கா மாணவர்கள் நல்ல தனியார்க் கல்லூரிகளைத் தஞ்சமடைந்தார்கள்.
மீண்டும் நுழைவுத் தேர்வு வந்ததும் அவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இப்போது அவர்கள் கட்டிய கட்டணத்தில் பெரும்பங்கைத் தனியார் கல்லூரிகள் தர மறுக்கின்றன.
தீர்ப்பு வெளியாகியும் இன்னும் அரசின் நிலை தெளிவாகவில்லை. ஒரு நல்ல அரசாங்கமாக இருந்தால் உடனே சட்டசபை கூட்டி விவாதித்து.... ஒரு சில நாளில் அனைவரும் விரும்பும் புதிய சட்டத்தை இயற்றலாம்.. அதில் நீதிமன்றம் தலையிடுவது சற்று கடினம்..

சாதரணமாக சட்டசபை கூட்டவே தயங்குபவர்கள்.. இதற்கு கூட்டுவார்களள....

gragavan
30-06-2005, 05:12 AM
அவசரத்தில் அள்ளித் தெளித்த முடிவு எடுத்திருக்கிறது. இப்பொழுது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போகின்றார்களாம். எப்படியோ! எப்படியாவது மக்கள் வாயில் விழ வேண்டும் என்று அரசு முடிவெடுத்து விட்டது தெரிகிறது. மாட்டிக் கொண்டவர்கள் மாணவ மாணவியர்கள்.

அறிஞர்
04-07-2005, 10:22 AM
இன்று உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதி மன்ற.. தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்...

தமிழக அரசின் நிலை பாவம்....

இந்த வருட நுழைவு தேர்வுகள் ரத்து இல்லை...

pradeepkt
05-07-2005, 06:32 AM
எண்ணிலடங்கா மாணவர்கள் மனதில் இப்போதுதான் நிம்மதி பூத்தது.

அறிஞர்
05-07-2005, 10:58 AM
நான் இங்கு முன்பு குறிப்பிட்ட படி.. சட்டமன்றத்தை கூட்ட பா.ம.க. முயற்சிக்கிறது..... என்ன ஆகிறது என பார்ப்போம்

pradeepkt
05-07-2005, 11:03 AM
அவசரச் சட்டம் வந்தாலும் அதை எதிர்த்து வாதாடி வெல்லலாம் என்கின்றனர் ஒரு சாரார்