PDA

View Full Version : மரம் அனுப்பும் கவிதை..rambal
04-06-2005, 03:23 PM
மரம் அனுப்பும் கவிதை..

மரம் உதிர்த்த
இலைகள் மண்ணை
நோக்கி வருகின்றன..

எனக்கான கவிதைகள்
ஏதேனும் அதில்
எழுதப்பட்டிருக்கலாம்
எனும் எதிர்பார்ப்போடு
காத்துக் கொண்டிருக்கிறேன்..

காற்றில் கவிதைகள்
கரைந்து போக
இலை என்னை
வந்து அடையும் கணத்தில்
பயனற்றதாகிப் போய்விடுகிறது
வழக்கம்போலவே...

Nanban
04-06-2005, 04:48 PM
காற்றில்
கவிதைகள்
கரைந்து கரைந்து
சரியான
ஈரப்பதத்தில்
குளிர்விக்கிறது
எம் மண்ணில்....

கவிதைகள் சுமக்கும்
இலைகளற்ற
பாலையில்
வறண்ட காற்று
சருமம்
உரித்துக் கொண்டிருக்கிறது....

மன்மதன்
05-06-2005, 04:26 AM
வறண்ட காற்று
சருமம்
உரித்துக் கொண்டிருக்கும்
வேளையில்
எங்கேயோ
சில இலைகளோடு
உதிர்ந்த
என் கவிதைகளை
தேடிக்கொண்டிருக்கிறேன்..

மண்ணோட
மண்ணாக மக்கிப்போன
இலைகளில்
கவிதைகள்
அழிந்திருந்தாலும்...
அதில் இன்னமும்
ஒளிர்ந்திக்கொண்டிருக்கும்...
என் காதல்..

-
மன்மதன்

பாரதி
05-06-2005, 01:47 PM
ராமைத் தொடரும் நண்பன், மன்மதனின் கவிதைகளும் நன்று. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இக்கவிதைகளைப் படித்ததும் என் மனதில் தோன்றிய வரிகள்:

காற்றில் கரைந்த கவிதைகள்
வியர்வைநீர் போல் குளிர்ச்சியாய்....

வெப்பக்காற்றும் மறந்து போகும்
வெற்றிடத்திலும் கவிதை சுரக்கும்

வேர் விரல் எழுதும் கவிதைகளை
அசை போட்டபடி மண்.

Nanban
05-06-2005, 05:53 PM
வேர்விரல்கள்

தொட்டுத்துழாவிய

மண்

படைத்த கவிதை

செடியாகியது.பசியாற

செடிகள் இலைகளை

விரித்த பொழுது

வெய்யில் எழுதி வைத்தத

ஒரு கவிதையை

பற்றிக் கொண்டு

இலைகள்

தரையிறங்கத்

தயாராகியது.

மலர் பறிக்க

சாய்ந்த

ஒரு பெண்ணின் மணம்

இலைகளில் படிய

காதலோடு கவிதை

மன்மதன் மடியைத் தேடி....

Nanban
05-06-2005, 05:57 PM
அற்புதம் மன்மதன்.....

வாழ்த்துகள்.....

ஒரு வினா.... ஒளிர்ந்து? அல்லது ஒளிந்து? நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள்?

உற்சாகமாயிருக்கிறது, உன் கவிதை.....

rambal
05-06-2005, 06:34 PM
நான் ஒன்று நினைத்து ஆரம்பிக்க
நண்பன் அதைத் தொடர..
மன்மதன் வேறுவிதமாய் ஆரம்பிக்க..
பாரதியும் கிடைத்த சந்தர்ப்பத்தில் தொடர..

மகிழ்ச்சியாகயிருக்கிறது....

விமர்சணங்களுக்குப் பதிலாக கவிதையாவே தொடர்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

rambal
05-06-2005, 06:34 PM
தரைகீழ்த் தாவரத்தின் காற்றுக் காதலி பற்றிய நான்கடுக்குக் கவிதை..

நானொரு தரைகீழ்த் தாவரம்..
எனது வேர் மண்டலங்கள்
உன்னைச் சுகிக்கத் தேடுகின்றன..

உன் மீதான மோகத்தை
என் வேர் முடிச்சுக்களில்
பதுக்கி வைத்திருக்கிறேன்
தபசியின் பசியாய்...

எனது காமம்
கனிந்து மொட்டாகி
தரைக்கு மேல் உனக்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றன
விலகிய மேலாடையை
அநிச்சையாய் காணும் கண்களாய்...

வேர்ச்சிக்கலில்
குடியேறிய நுண்ணியிரிகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
உண்டு கொண்டிருக்கின்றன
எனது காமத்தை..

அது கரைந்து போம் முன்
வந்தென்னைத் தழுவு..
உனது கிளைகள் பரப்பி
என்னைக் கூடு கட்ட அனுமதி..
எனக்குள் புகுந்து
இரண்டறக் கலந்து போம்..
அப்பொழுது தகிக்கும் வெப்பத்தில்
நான் மரிக்க வேண்டும்..

பிரியன்
05-06-2005, 07:26 PM
மரித்தல்
எனக்கு
புது பிறப்பானது.
தனிந்திருந்த நான்
உன்னுள்
கலந்து விட்டதால்

பரஞ்சோதி
05-06-2005, 08:42 PM
ஆகா, அருமை அருமை, கவிகள் கூடி கவிதை மழை பொழியக் கண்டேன், நானும் உங்கள் கானமழையில் நனைக்கிறேன்.

என்னால் முடிந்தது இவ்வளவு தான்.

மன்மதன்
06-06-2005, 04:47 AM
அற்புதம் மன்மதன்.....

வாழ்த்துகள்.....

ஒரு வினா.... ஒளிர்ந்து? அல்லது ஒளிந்து? நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள்?

உற்சாகமாயிருக்கிறது, உன் கவிதை.....

இப்பொழுது எனக்குத்தான் உற்சாகம். ஒளிந்து என்றுதான் எழுதினேன். அப்புறம் என் காதல் கொஞ்சம் ஒளிரட்டுமே என்று 'ளி' சேர்த்துக்கிட்டேன்.. நன்றி குரு நண்பன்.

ராம், நண்பன் கவிதைகளுக்கு கீழே இரண்டு வரிகள் எழுதி அந்த இருவரிடமும் பாராட்டு பெற்றாலே அதுதான் ஆனந்தம்...

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
06-06-2005, 03:10 PM
மிக அழகான
கவிதை மொழிகள்....
தொடர்ந்த
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....


மரித்தல்
எனக்கு
புது பிறப்பானது.
தனிந்திருந்த நான்
உன்னுள்
கலந்து விட்டதால்
உன்னுள்
கலந்து விட்டதால்..
எனக்கொரு
வடிவம்
வந்து....
இன்புறுகிறேன்....

ஆதவா
20-08-2007, 09:21 AM
அழகான கவிதைப் போர்.... ராமின் இயல்பான கவிதை மனதை நெருடுகிறது.. வாழ்த்துக்கள். ராம்.

நண்பன் தனக்கே உரிய நடையில் விளாசியிருக்கிறார்..

மன்மி...???? இப்படி ஒரு திறமை இருப்பதை ஏன் ஒளிக்கிறீர் மன்மதன் அவர்களே??

சிவா.ஜி
20-08-2007, 09:32 AM
ஆஹா..கவித்தேன் மழையில் நனைந்து அத்தனையையும் சுவைத்தேன்.எப்படிப்பட்ட கவிஞர்களைக் கொண்டிருக்கிறது இந்த மாமன்றம்.அதன் ஒரு கிளையாய் இருப்பதில் பெருமிதம்.

kampan
20-08-2007, 10:11 AM
ஆகா என்ன வரிகள்

வேர் உம் கவிதையைக் கேட்டிருந்தால்
உம் வீட்டுக்குள் முளைகொண்டிருக்கும்
இலைக்கு இதன் அர்த்தம் விளங்கியிருந்தால்
இரவோடு இரவாக உம் வாசல் விழுந்திருக்கும்
கிளைக்கு உம் கவிதை கிட்டியிருந்தால்
உம் வீட்டு அடுப்புக்கு தன்னை ஆகுதி ஆக்கியிருக்கும்.

மொத்தத்தில் நீர் எழுதிய கவிதை மரத்திற்கு உயிரோட்டம் கொடுத்து அதனை உறவாட வைத்துவிட்டது.

மன்மதன்
20-08-2007, 11:03 AM
மன்மி...???? இப்படி ஒரு திறமை இருப்பதை ஏன் ஒளிக்கிறீர் மன்மதன் அவர்களே??

நானும் அவனைத்தான் தேடிக்கிட்டிருக்கேன் ஆதவா.. (ஆமாம் அந்த 'அவர்களே' யாருப்பா?? :D :D)

பூமகள்
01-06-2008, 09:43 AM
சூப்பரோ சூப்பர்...!!

ஆஹா.. எனக்கும் கை பரபரக்குதே... ஆங்.. மாட்டேன்.. தனித்திரியில் தான் அசத்துவேன்.. ஹீ ஹீ... (சும்மா சும்மா...! :D:D)

ராம்பால் அண்ணாவின் மரவிலை கவித் தேடல் தொடங்கி... வறண்ட காற்று சருமம் உரிக்கும் நண்பன் அண்ணாவின் கவிதை தொடர.. கவிதையை அதில் ஒளித்து வைத்த மதன் அண்ணாவின் பின்புலம் விளங்க.... வேர் விரலோடு மண் அசைப்போட்ட கவிதை புனைந்த பாரதி அண்ணா... என ஒட்டுமொத்த கவிஞர்களுக்கும் எனது பாராட்டுகள்..!!

அசத்துங்கள்..!! ரசிக்கும் ரசிகர்களில் கடைக்கோடி ரசிகையில் ஒருத்தியாய் நானும் இருப்பதில் மகிழ்ச்சி...!! :)

சூரியன்
01-06-2008, 10:23 AM
அனைத்து கவிஞர்களும்
தனது கைவரிசையை காட்டியுள்ளனர்.

shibly591
01-06-2008, 10:31 AM
இயல்பான காட்சிப்படிமம்..அழகோ அழகு