PDA

View Full Version : சிறைக்கம்பிக்குள் விடுதலை..........Nanban
28-05-2003, 08:58 PM
பேச்சு வார்த்தைகள் முடிந்தன
தீர்மானிக்கப் பட்டன எல்லைக் கோடுகள்
மூன்று முடிச்சுகள்.

எல்லைகள் தாண்டவும் மீளவும்
விண்ணப்பம் செய்ய வேண்டும் விசாவிற்கு -
விரல்களில் வைரமோதிரம்.


அடிக்கடி மோதலும் யுத்தமும்
உச்சி மாநாட்டு ஒப்பந்தத்தின் விலை -
ஊமைக் குயில்.

புழுப் பூச்சி புலம்பல்களின் அலம்பல்
அறையின் நீள, அகலத்தும் இறைந்து கிடக்கும் -
கட்டிலில் நத்தையாய் புருஷன்.

விதைத்து விதைத்துப் பார்த்து
விளைந்ததை வெட்டி வெட்டி எறிவர் -
ஆண்மைக்கு உரைகல்.

நஞ்சை, புஞ்சை புறம்போக்காய்
தங்கையை வளைத்துப் போட ரகசியப் பேரம் -
நாட்டாமை அரசியல்.


நாதியற்ற பேதை நாடினாள் விடுதலை
கையில் மீண்டும் கிடைத்ததோர் ஆயுதம் -
மூன்று முடிச்சுக் கயிறு.

கட்டிய கயிற்றைப் பறிக்க வந்தவன்
கழுத்தில் முத்தத்துடன் மூன்று முடிச்சு இறுக்கினாள் -
விடுதலை சிறைக்கம்பிக்குள்.

rambal
29-05-2003, 11:05 AM
சிறைக்கம்பிக்குள் விடுதலை..

தலைப்பே அருமையான முரண்..
லௌகீக வாழ்க்கையும்.. அதில் பெண்களின் நிலையும்..

அருமை.. பாராட்டுக்கள் நண்பன் அவர்களே..

prabha_friend
29-05-2003, 11:23 AM
அருமையான கவிதை .
பேச்சு வார்த்தைகள் முடிந்தன
தீர்மானிக்கப் பட்டன எல்லைக் கோடுகள்

இதைப் படித்தவுடன் இந்தியா பாகிஸ்தானை பற்றி ஏதோ சொல்லப்போகிறீர்கள் என நினைத்தேன் . ஆனால் முழுவதும் படித்த பிறகுதான் தெரிகிறது விஷயமே வேறு என்று .

gankrish
30-05-2003, 05:06 AM
நண்பா புரிந்தும் புரியாதது போல் உள்ளது எனக்கு இக்கவிதை.

Nanban
30-05-2003, 09:52 AM
நண்பா புரிந்தும் புரியாதது போல் உள்ளது எனக்கு இக்கவிதை.

கல்யாணப் பேச்சு முடிந்து, திருமணம் நடந்தது.
வரதட்சனைக் கொடுமை ஒழியவில்லை. அவள் வீட்டிற்குப் போகவும் வரவும் தடை விதிக்கப் பட்டு, இறுதியாக வைர மோதிரம் கொடுக்கப்பட்டு, அமைதிப்படுத்தப் படுகிறது. மேலும் மோதல்கள் - சமாதானப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில், எதிர்த்துப் பேசக்கூடாது என்று கட்டளை. ஊமையாகிறாள். வயிற்றில் வளரும் கருவைக் கலைத்து விடுகிறார்கள். பின்னர் வீட்டில் ஒரு புழு, பூச்சி பூக்கவில்லை என்ற ரீதியில் குற்றச் சாட்டு வேறு. அதயே காரணம் காட்டி, அவளின் தங்கையையும் மணமுடிக்க முயல்கின்றனர். மீதியிருக்கும் சொத்தையும் அபகரிக்க. ஆண்வர்க்க கிராம அரசியல் ஒத்துழைக்கிறது. பட்ட இன்னல்கள் எல்லாம், ஒரு தாலிக்கொடிக்காக என்ற பட்சத்தில், அதற்கும் பங்கம் வரும் பொழுது வெகுண்டு எழுகிறாள். தங்கையின் வாழ்க்கையை வேறு காக்க வேண்டும். கணவனை கழுத்தை இறுக்கிக் கொள்கிறாள். சிறை செல்கிறாள். விடுதலை பெற்ற உணர்வையும் பெறுகிறாள்.

Narathar
30-05-2003, 10:36 AM
ஆஹா! அருமையாகச்சொன்னிர்கள்

அபாரம்! உங்கள் கற்பனை

prabha_friend
30-05-2003, 04:05 PM
கவிதை அருமை . அதன் விளக்கம் அதைவிட அருமை . பாராட்டுக்கள் நண்பரே .

karikaalan
30-05-2003, 04:17 PM
நண்பரே!

அருமையான கவிதை. கணவனைக் கொன்றதே சரியான செயல். இல்லையேல் இன்னும் எத்தனை எத்தனை பேரை சித்திரவதை செய்வானோ!


===கரிகாலன்

நிலா
30-05-2003, 09:22 PM
நல்ல கவிதை!வாழ்த்துக்கள் தோழரே!

முத்து
01-06-2003, 03:02 AM
நல்ல கவிதைச் சிறுகதை..... பாராட்டுக்கள்..மீண்டும் தொடருங்களேன்..

poo
02-06-2003, 08:14 AM
எவ்வளவு பெரிய விளக்கம்... அந்த கவிதைக்குள்.. ஒரு படம் எடுக்கலாம்போல உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றையும்!!!

பாராட்டுக்கள் நண்பரே..

Nanban
02-06-2003, 09:44 AM
எவ்வளவு பெரிய விளக்கம்... அந்த கவிதைக்குள்.. ஒரு படம் எடுக்கலாம்போல உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றையும்!!!

பாராட்டுக்கள் நண்பரே..கதையைச் சுற்றி கவிதை படைப்பது, உங்களுக்கும் கை வந்த கலைதானே - என்றென்றும் காதலில் இல்லாத நிழல் ஓவியமா?

மன்மதன்
21-09-2005, 05:59 AM
கவிதை அருமை.. சொன்னவிதம் அதை விட.. ஹைக்கூ தொகுப்பை போன்ற தோற்றத்தில் அமைந்தவிதம் நன்றாக இருக்கிறது.

gragavan
21-09-2005, 06:18 AM
அட இதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். எப்படி பார்க்காமல் விட்டேன் உங்கள் கவிதையை.

நல்ல கவிதை. ஆனால் முடிவில் சிறு மாற்றம் வேண்டும். அவள் அந்தத் தாலியை அறுத்தெரிந்து விட்டு விடுதலை தேடியிருந்தால் சிறப்பாக இருக்கும். நாலு பேர் பேசுவார்கள். ஏசுவார்கள். ஆனால் சிறைக்கம்பிக்குள் விடுதலை தேடுவதை விட சுதந்திரப் பறவையாவது மேல். இல்லையா?

அதென்ன கதையையே கவிதை வடிவில் சொல்லி விட்டீர்கள். பிரமாதம் என்று சொல்ல வேண்டியிருக்கிறதே. :)

மன்மதன்
21-09-2005, 06:39 AM
அட இதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். எப்படி பார்க்காமல் விட்டேன் உங்கள் கவிதையை.

நல்ல கவிதை. ஆனால் முடிவில் சிறு மாற்றம் வேண்டும். அவள் அந்தத் தாலியை அறுத்தெரிந்து விட்டு விடுதலை தேடியிருந்தால் சிறப்பாக இருக்கும். நாலு பேர் பேசுவார்கள். ஏசுவார்கள். ஆனால் சிறைக்கம்பிக்குள் விடுதலை தேடுவதை விட சுதந்திரப் பறவையாவது மேல். இல்லையா?

அதென்ன கதையையே கவிதை வடிவில் சொல்லி விட்டீர்கள். பிரமாதம் என்று சொல்ல வேண்டியிருக்கிறதே. :)

தன் தங்கையை குறி வைக்கும் அவனை விட்டு விட விருப்பமில்லாமல் இருக்கலாம்.. அவள் அவனை விட்டு விட்டால் தன் தங்கையின் கதி??

gragavan
21-09-2005, 07:37 AM
தன் தங்கையை குறி வைக்கும் அவனை விட்டு விட விருப்பமில்லாமல் இருக்கலாம்.. அவள் அவனை விட்டு விட்டால் தன் தங்கையின் கதி??வேறு மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதானே. புருஷனே இல்லையென்று ஆன பின்பு தங்கையைத் தொட விடாமல் தன் கையைக் கொண்டு காக்க வேண்டியதுதான்.

Nanban
21-09-2005, 05:11 PM
நன்றி மன்மதன் - ராகவன்.

முன்பு கவிதைகளைப் பற்றி அத்தனை அறியாத பொழுது சிறுகதைகளைக் கொண்டு கவிதை எழுதிக் கொண்டு இருந்தேன். ஒரு பயிற்சிக்காக. சொல்ல வந்த விஷயத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதற்காக. இப்பொழுதெல்லாம் இவ்வாறு எழுதுவதை விட்டுவிட்டேன்.

முற்றிலுமாக கவிதை எழுத கற்றுக் கொண்டு விட்டேன் என்பதனால் அல்ல. இப்பொழுது கற்றுக் கொள்வதில் அடுத்த நிலை. அவ்வளவே.