PDA

View Full Version : இடம் பெயர்தல்..rambal
01-06-2005, 07:04 PM
இடம் பெயர்தல்..

பச்சையையும் நீலத்தையும் அள்ளித் தெளித்தது போன்று அந்த இடம் இருந்தது. அந்தச் சமவெளியில் ஒரு குளம்.
குளமெங்கும் தாமரைகள் இலை விரித்து படர்ந்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். மனித நடமாட்டம் அவ்வளவாக
இல்லாத இடம். காற்றில் எப்போதும் ஏதாவது ஒரு பூவின் மணம் மிதந்து கொண்டே இருக்கும். சமவெளிக்கு வகிடெடுத்தாற் போன்று
அதன் நடுவில் செம்மண்ணால் ஆன ரஸ்தா. அதன் இரு ஓரங்களிலும் பூச்செடிகள். வித விதமான வண்ணங்களில் பூக்கள் பூத்திருந்தன.
இந்த இடத்தை கொஞ்சம் தள்ளி நின்று சிறிதாக்கிப் பார்க்க முடியுமானால் அது மோனட்டின் வரையப்படாத அடுத்த ஓவியமாகவே இருக்கும்.
கடும் குளிரும் அல்ல.. பனியும் அல்ல.. ஏறக்குறைய வசந்த காலத்தின் முடிவில் இருந்த காலமது. வானில் பறவைக்கூட்டம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அநேகமாக இந்தப் பறவைக் கூட்டம் இரை தேடிப் போகலாம். அல்லது சாதகமான தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற இடம் தேடி இடம் பெயர்ந்தும்
கொண்டிருக்கலாம். அந்தப் பறவைக்கூட்டம் ஒரு விதமான ஒழுங்கமைவு வடிவில் பறந்து கொண்டிருந்தன. இப்படி வடிவ ஒழுங்குகள் பற்றி அவைகளுக்கு
யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள்? இப்படிப் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருப்பதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பறப்பதற்கு ஆசைப்பட்டோ அல்லது பறவைகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ அவள் நின்று கொண்டிருந்த இடம் அவள் வீட்டு மொட்டைமாடி.
அவள் வழக்கமாக அங்கு நின்றுதான் கண் முழுக்க நிறைந்திருக்கும் பச்சையைக் கண்டு ரசிப்பாள். பச்சை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு புள்ளியில் நீல
நிற ஆகாயத்துடன் கலந்து வானமாக மாறியிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொள்வாள். விதவிதமான ஓசை எழுப்பும் பறவைகளின் சத்தத்தைக் கேட்பாள்.
அது அவளது மனதிற்கு இனிமையைத் தரக்கூடியதாக இருந்தது.

சமவெளிகளில் குறுக்காகச் செல்லும் ரஸ்தா அவள் வீட்டை தொட்டுச் செல்கிறது. அது முக்கியமான ரஸ்தா அல்ல.
இருந்தாலும் கடந்த ஒரு வாரத்திற்குள் அந்த ரஸ்தா வழியாக பல வண்டிகள் சென்று கொண்டிருக்கின்றன. ஒரே திசையில்
அந்த வண்டிகள் சென்று கொண்டிருந்தன. இது அவளுக்கு வேடிக்கையாகவும், அவர்களைப் பார்ப்பது மனதிற்கு உகந்ததாகவும் தோன்றியது.
மொட்டைமாடியில் தான் ஒரு குட்டி இளவரசியைப் போலவும் கடந்து செல்லும் மக்களை குடியானவர்களாகவும் அவள் நினைத்துக் கொள்வாள்.
அதற்காகவே அவள் இப்பொழுது அடிக்கடி மொட்டை மாடிக்கு வருகிறாள். இரண்டு வாரங்களாக இந்தக் காட்சிகள் தொடர்ந்து
நடந்தவண்ணம் இருந்தன. இப்பொழுது அவள் கடந்து செல்பவர்களின் முகங்களைக் கவனிக்கத் தொடங்கியிருந்தாள்.
எல்லோர் முகங்களும் சொல்லி வைத்தது போன்று கவலை ரேகை படர்ந்திருந்தது. அவர்கள் எதையோ இழந்து விட்டு துக்கம்
அனுசரிப்பவர்களைப் போல் இருந்தார்கள். ஒரு நீண்ட பயணத்தின் விளைவாக அனைவரும் சோர்வுற்றிருந்தனர்.
ஆண்களின் முகத்தில் லேசாக தாடி வளர்ந்திருந்தது. பெண்கள் ஏதோ இழந்தது போன்று தோற்றமளித்தனர்.
குழந்தைகள் மட்டும் அந்தப் பிராந்தியத்தில் பூத்திருக்கும் பூக்களையும் பச்சையத்தையும் ரசித்ததின் அடையாளமாக
மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால், பெரியவர்களின் முகமெல்லாம் ஒருவித கோபமும் இயலாமையின் வெளிப்பாடும் தெரிந்தது.
இவர்கள் அப்படி எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள், அதுவும் ஒரே திசையில் தோன்றி மற்றொரு திசையில்? என்பது அவளுக்குப்
புரியாத புதிராக இருந்தது.

ஒரு முறை ஒரு கூட்டம் அந்தத் ரஸ்தாவைக் கடந்து செல்கையில் ஆவல் மிகுதியில் அவர்களை நோக்கி அவள் கை அசைத்தாள்.
ஒருவரும் அவளைக் கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவர்களைத் தன்பக்கம் கவரும் விதமாக அவள் அவர்களை
நோக்கி 'ஹலோ' என்று உரக்கக் கத்தினாள். ஓரிரு முகங்கள் அவளைத் திரும்பிப்பார்த்தன. பின் ஒன்றும் நடவாதது போல் தலையைத் திருப்பிக் கொண்டு
நடக்கத் தொடங்கினார்கள். அவளது அழைப்பு அவர்களை சிறிதும் சலனப்படுத்தவில்லை. இந்நிகழ்வால் அவள் மனம் கொஞ்சம் வருத்தமடைந்தது.
இருந்தாலும் மனம் தளராமல் அவள் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு கூட்டத்தைப் பார்த்துக் கத்திக் கொண்டுதான் இருந்தாள்.
சொல்லிவைத்தாற் போன்று எந்தக் கூட்டமும் அவளை லட்சியம் செய்யவில்லை. அவள் அவர்களின் இச்செய்கையினால் கொஞ்சம்
சோர்வடைந்திருந்தாள்.

இப்பொழுது அவள் அவர்களைப் பார்ப்பதோடு சரி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான கூட்டம் அந்த வழியாகப் போய்க் கொண்டே இருந்தது.
தினம் தினம் நடக்கும் இந்த ஊர்வலங்கள் அவளுக்கு வியப்பாக இருந்தது. இவர்கள் எங்கிருந்து முளைத்தார்கள்.? இப்பொழுது எங்கு போகிறார்கள்?
கண்டிப்பாக அம்மா வயிற்றில் இருந்துதான் இவர்கள் முளைத்திருக்க வேண்டும் என்று அவளது மனது சொன்னது. ஆனால், இவர்கள் இத்தனை
நாள் எங்கிருந்தார்கள்? ஏன் திடீரென்று சொல்லி வைத்தாற்போன்று சோகமாகச் செல்கிறார்கள்? இவர்களுக்கென்று பாடுவதற்கு ஒரு
நாட்டுப்புறப்பாடல் கூடவா இல்லை. நடையின் சோர்வைப் போக்கிக் கொள்ளவாவது இவர்கள் பாடிக்கொண்டே நடக்கலாம்.
பாடல்கள் என்றவுடன் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் வீட்டைச் சுற்றி இருக்கும் வயல் வெளிகளில் எப்போதும் வேலை நடந்து கொண்டே
இருக்கும். தேநீர் இடைவேளையிலோ அல்லது வேலை முடிந்ததுமோ அங்கு வேலை பார்க்கும் மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து கொண்டு
பாட்டுப் பாடுவார்கள். சமயத்தில் போட்டி கூட நடப்பதுண்டு. வேடிக்கையாக இவள் அதை மொட்டைமாடியில் இருந்து பார்ப்பதுண்டு.
சில சமயங்களில் இரவுக் காவலுக்குத் தங்கி இருக்கும் குழு, குளிர் காய்வதற்காக வைக்கப்பட்டத் தீயைச் சுற்றி ஆடிக் கொண்டே இருப்பார்கள்.
அந்த ஆட்டதிற்கு பயன்படும் இசைக்கருவி தோலால் செய்யப்படிருக்கும். அதில் இருந்து எழும்பும் இசையானது கேட்பவரை ஆட வைக்கும்
ஆற்றல் கொண்டது. இதெல்லாம் ஒரு நொடியில் மனதினுள் தோன்றி மறைய அவர்களையும் இப்போது காணவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? கரும்புத் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் கறுப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களின் உடல் இரும்பால் செய்தது போல் இருக்கும். பேரல்களை எந்தக் கஷ்டமும் இல்லாமல் அவர்கள் தூக்கிச் செல்வது யானை ஒன்று மரத்தை தூக்கிச் செல்வது போன்றிருக்கும். இத்தனைக்கும் இது வெயில் காலமோ அல்லது குளிர்காலமோ அல்ல.
வசந்தகாலம் தான். உழவு செய்வதற்கு ஏற்ற காலம்தான். இருந்தபோதிலும் கடந்த சில வாரங்களாக அவர்களையும் காணவில்லை.

இவள் வீட்டிலிருந்து ஒரு கல் தொலைவில் இருக்கும் பக்கத்து வீடுகளில் கூட மனிதர்கள் இருக்கிறார்களா என்று அவளுக்கு சந்தேகம் வந்தது.
இதை நினைத்துப் பார்க்க அவளை அறியாமல் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரம் அமைதியாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கு ஒரு பறவைக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது. இது வேறு ஒரு கூட்டம் என்று எண்ணினாள். அவளது கவனம் இப்பொழுது
பறந்து செல்லும் பறவைகளின் மேல் திரும்பிவிட்டது. எவ்வளவு நேரம் அவள் இந்தப் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று அவளுக்குத்
தெரியாது. பார்த்துக் கொண்டே இருந்தாள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன. திடீரென டிரக் வரும் சத்தம்
தூரத்தில் கேட்க அவள் கவனம் பறவைகள் மீதிருந்து மீண்டும் ரஸ்தா மீது பதிந்தது. மனிதர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த திசையில் இருந்து
ஒரு டிரக் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. எதிர்த் திசையில் செல்லப்போகும் டிரக்கை ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அது இவள் வீட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தது. டிரக் முழுதும் ராணுவ சீருடை அணிந்த நபர்கள் நிறைந்திருந்தனர். அனைவரின் கைகளும்
துப்பாக்கியைத் தாங்கிப் பிடித்திருந்தன. அந்த டிரக், கண்கள் நிறைய விரிந்திருக்கும் பசுமைக்குள் சென்று மறையும் வரை அவள் பார்த்துக்
கொண்டே இருந்தாள். அதன் பின்பு மற்றுமொரு டிரக் அதே திசையில் தோன்றி பசுமைக்குள் சென்று மறைந்தது. டிரக்குகள்
ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் மக்கள் செல்லும் திசைகளின் எதிரே தோன்றி பசுமைக்குள் மறைந்து கொண்டே இருந்தன.
அவள் ஒவ்வொரு டிரக்காக எண்ணிக் கொண்டிருந்தாள். மொத்தம் 32 டிரக்குகளை எண்ணி முடித்த போது அவள் அம்மா அவளை அழைத்தாள்.

இவள் மாடியில் இருந்து கீழே இறங்கி சென்ற பொழுது அங்கு அவள் அம்மா இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்தாள்.
இவளைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டே ஒரு பையை அவளது தோளில் மாட்டினாள். பின் அவள் கையைப் பற்றி வீட்டை விட்டு
நடக்க ஆரம்பித்தாள். இவள் மொட்டைமாடியில் இருந்து பார்த்த மனிதர்கள் எந்தத் திசையில் போனார்களோ அதே திசையில் இவளும் தனது
அம்மாவுடன் நடக்க ஆரம்பித்தாள். டிரக்கின் டயர்கள் வழியெங்கும் இருந்த பூஞ்செடிகளை நசுக்கியிருந்தது.

பாரதி
02-06-2005, 10:50 AM
மீண்டும் ஒரு அற்புதமான படைப்பு.

புதிய இடம் தேடும் பறவைகளும் மனிதர்களும்..!!

பறவைகளுக்கு வேண்டுமானால் அது தற்காலிக இடப்பெயர்ச்சியாக இருக்கக்கூடும். மனிதர்களுக்கு....??

குழந்தையின் மனோநிலையில் இருந்து ஒரு மிக நேர்த்தியான விவரிப்பு.

இது அரசின் ஆக்கிரமிப்பா அல்லது போருக்கான ஆயத்தமா என்பதைப் பற்றி எதுவும் தெரியாத குழந்தையும், இந்த பாதிப்பு பிறருக்குத்தான் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் இறுதிப்பத்தியில் வரும் வார்த்தைகள் மனதை கொஞ்சம் குலுக்கவே செய்கின்றன.

படித்து முடித்ததும் "சர்தார் சரோவர்" திட்டம்தான் நினைவுக்கு வந்தது.

இக்கதை என்றும் மனதை விட்டு இடம்பெயராத படி தடம் போட்டிருக்கிறது. என் மனமார்ந்த பாராட்டுக்கள் ராம்.

karikaalan
02-06-2005, 02:20 PM
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இரு வருடங்களுக்கு முன் வரை இது போன்ற நிகழ்ச்சிகள் சகஜம். முன்னேற்றம் கண்டுவரும் சமாதான சூழலில், எல்லையில் இருக்கும் பல குடும்பங்கள் விவசாயத்தில் தங்களை முழுமூச்சுடன் ஈடுபடுத்தி வருகின்றனர்.

ராம்பால்ஜி, தங்கள் எழுத்து நெருடவே செய்கிறது. படித்து சில நிமிடங்களுக்குப் பின்னரே எதுவும் எழுதத் தோன்றுகிறது.

===கரிகாலன்

rambal
02-06-2005, 04:12 PM
கதையை விமர்சித்த பாரதிக்கும் அண்ணனுக்கும் எனது நன்றிகள்..

97 என்று நினைக்கிறேன். செக்கஸ்லோவேகியா பிரியும் சமயம் அது.
அங்குதான் முதன் முதலில் அகதிகள் முகாமில் குண்டு போடப்பட்டு 60க்கு மேல் பலி.
இது தவறுதலாகப் போடப்பட்ட குண்டு என்று சொல்லப்பட்டது.

இக்கதை எழுத ஆரம்பித்த பிண்ணனி இதுதான்..

ஆனால், காலம் முழுதும் மனதிற்குள் அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி..
பறவைகளில் கூட்டம் இருக்கலாம். மனிதனிலுமா? ஒரு உலகம்.. குளோபல் வில்லேஜ் என்றெல்லாம்
புழங்கப்படும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?

உங்கள் பார்வையில் இக்கதை பாகிஸ்தான் இந்தியாப் பிரச்சினை..

இலங்கையில் வேறு..
பாலஸ்தீனத்தில் வேறு..
செர்பியாவில் வேறு..
ஆப்ரிக்காவில்.. இரு இனக்குழுக்களுக்கிடையில் வேறு...

மொத்தத்தில் உலகம் முழுதும் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை..
பாதிக்கப்படுவது கதையில் வருவது போன்ற சிறுமியும் அப்பாவி மக்களும்தான்..
இவர்களுக்காக இந்த மானுட சமூகம் என்ன செய்யப் போகிறது?

gragavan
03-06-2005, 07:31 AM
ராம்பல் மிகவும் அழுத்தமான கதை..குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்டிருந்தாலும் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லி விட்டீர்கள். நல்ல நயமான நேர்த்தி. உங்கள் மண்டைச்சுரப்பும் அமுதசுரபியென்று நிரூபித்து விட்டீர்கள். முடிக்கும் பொழுது நெஞ்சம் கனப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

karikaalan
03-06-2005, 09:48 AM
ராம்பால்ஜி

மனிதக்கும்பல் விசித்திரமான ஒன்று. தெருவில் இருக்கும் நாய்களைப் போன்றது. சிங்கம், புலிகளும் தங்களது சுற்றிவரும் பிரதேசங்களை அடையாளமிட்டு வைக்கும்.

காவிரி நீர் தமிழகத்துக்குத் தர மறுக்கும்

வீராணம் சென்னை செல்ல மறுக்கும்

பஞ்சாப் சட்லெஜ் யமுனா Link canal-ஐ பூர்த்தி செய்ய மறுக்கும். இதனால் ஹரியானா, ராஜஸ்தானில் வறட்சி.

உத்திரப்பிரதேசம் தில்லிக்கு கங்கை நீர் தர மறுக்கும்.

இன்னும் எத்தனை எத்தனையோ.

தாங்கள் சொல்லியுள்ள எடுத்துக்காட்டுகள் வம்சம் வம்சமாக பாராட்டப் பட்டு அடக்கி வைக்கப்பட்ட விரோதங்கள், வன்மங்கள். ஒரு வம்சத்தினால் சரி செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

===கரிகாலன்

gragavan
03-06-2005, 11:35 AM
ராம்பால்ஜி

மனிதக்கும்பல் விசித்திரமான ஒன்று. தெருவில் இருக்கும் நாய்களைப் போன்றது. சிங்கம், புலிகளும் தங்களது சுற்றிவரும் பிரதேசங்களை அடையாளமிட்டு வைக்கும்.

காவிரி நீர் தமிழகத்துக்குத் தர மறுக்கும்

வீராணம் சென்னை செல்ல மறுக்கும்

பஞ்சாப் சட்லெஜ் யமுனா Link canal-ஐ பூர்த்தி செய்ய மறுக்கும். இதனால் ஹரியானா, ராஜஸ்தானில் வறட்சி.

உத்திரப்பிரதேசம் தில்லிக்கு கங்கை நீர் தர மறுக்கும்.

இன்னும் எத்தனை எத்தனையோ.

தாங்கள் சொல்லியுள்ள எடுத்துக்காட்டுகள் வம்சம் வம்சமாக பாராட்டப் பட்டு அடக்கி வைக்கப்பட்ட விரோதங்கள், வன்மங்கள். ஒரு வம்சத்தினால் சரி செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

===கரிகாலன்கரிகாலன்ஜி, இந்தக் கொடுமைகள்தான் உலக இயக்கம். ஒன்று மற்றும் நன்றாக எனக்குப் புரிந்திருக்கிறது. இந்த உலகம் யாரையும் ஒரேயிடத்தில் இருக்கவிட்டதில்லை. இதத்தூக்கி அங்க போட்டு...அதத் தூக்கி இங்க போட்டு....என்னவோ செய்யுது. தானா மாறிப்போயிட்டா சரி. இல்லைன்னா மாத்திருது. தேங்குன தண்ணீ அழுக்குத் தண்ணீன்னு நெனக்கோ என்னவோ! பாராண்ட பாண்டியனக் காணோம். சோறுடைத்த சோழனைக்காணோம். பின்னால வந்த நாய்க்கரையும் முதலியாரையுங் காணோம். வடக்க பாத்தா எவ்வளவு மாத்தங்கள். அமெரிக்காவப் பாருங்க. அங்க எப்படி இருந்தது. எப்பிடி இருக்குது. ஐரோப்பாவுல மட்டுமென்ன....சாக்சான்னானுக....ஆக்சான்னானுக.....என்னவோ போங்க. குந்தித் திங்க விட மாட்டேங்கே!

அறிஞர்
07-06-2005, 09:36 AM
மனிதர்களின் ஓட்டங்களை.. அழகாக வர்ணித்துள்ளீர்...

சில மனிதர்களுக்குள் உள்ள மிருகங்கள்..
எத்தனையாக மனித இனத்தை மாற்றுகிறது

rambal
15-06-2005, 06:01 PM
நண்பர்களின் விதவிதமான விமர்சணங்களுக்கு நன்றிகள் பல..

செல்வா
19-02-2008, 10:09 PM
ஓரு அருமையான கதையை இந்த மின்னிதழுக்கு கொணரும் நோக்கத்தில் மேலெழுப்புகிறென்....

கதையைப்பற்றி கதையில் சொல்லாத எதை நான் சொல்லிவிட முடியும்.

ராம்பால் அவர்களுக்கு எனது நன்றிகள். இத்தகைய கதையை படிக்கும் பாக்கியம் பெற்றதற்கு.

இளசு
19-02-2008, 10:25 PM
காலம் கடந்தாலும் நல்ல படைப்புகள்
நீரில் அழுந்திய பந்தாய் மேலெழும்பும்...

ராம் ஒரு தேர்ந்த படைப்பாளி..
இலக்கிய உலகில் உன்னதமான ஓரிடம் காத்திருக்கிறது உனக்கு ராம்.

முத்துக்குளிப்பில் முத்துத்தம்பிகள் அமரன், அக்னி, ஓவியன், அன்புவுக்கு
உற்ற துணை செல்லத்தம்பி செல்வா.. பாராட்டுகள் செல்வா!