PDA

View Full Version : தீராப்பசி.. (தீபங்கள் பேசும் கவிதைத் தொகுபrambal
27-05-2005, 06:20 PM
தீராப்பசி.. (தீபங்கள் பேசும் கவிதைத் தொகுப்பு குறித்து )

ஒரு வீதி நாடகக் கலைஞனைக் கொன்றீர்கள்
சில வருடங்களுக்கு முன்பு.
ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளனைக் கொன்றீர்கள்
சில மாதங்களுக்கு முன்பு.
.......
......
.....
அடுத்து நீங்கள் கொல்வது
அநேகமாக ஒரு கவிஞனாகவே இருக்கும்.
அதற்கான அடையாளங்களுடனேயே
இந்தக் கவிதையைத் தீட்டித் தீட்டி
நான் எழுதிப் பார்க்கிறேன்.

- கல்யாண்ஜி, நிலாபார்த்தல்

இப்பொழுது கூட
உடம்பு ஒத்துழைத்தால்
கவிதை எழுதுவதை விட்டு விட்டு
வேறு வேலைக்குப் போய்விடலாம்...

- வண்ணநிலவன், 90களின் ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில்

இது பழையகதைதான்.. ஏன் எழுதுபவர்களைக் குதறிக் கொண்டே இருக்கிறது மொழி?

இந்தத் தீராப்பசிக்கு இரையான கணக்கில் இன்னும் எத்தனை பேர் பாக்கி?

எத்தனை பேரைக் குதறித் தின்றாலும் இதில் மாட்டிக் கொள்ளவே விட்டில் பூச்சிகளாய் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீபங்கள் பேசும்... இன்னுமொரு படைப்பு.

கவிஞர்களுக்கு சங்க இலக்கியத்தில் பரிச்சயம் வேண்டும் என்று விக்ரமாதித்யன் அடிக்கடி சொல்வதுண்டு.
ஏனெனில், அப்போதுதான் கவிதை எழுதும் பொழுது அதன் மொழி சந்தங்களோடு கூடிய மென்மையை அடைந்திருக்கும்.
அது ப்ரியனின் எல்லாக் கவிதைகளிலும் காணக் கிடைக்கின்றன.
எதுகை மோனைகள் நிறைந்து ஒரு வகை சந்தம் தென்படுகிறது.

இவைகளை எல்லாம் விட கவிதை எழுத முக்கியம் கவிதை மனதிருக்க வேண்டும். அல்லது காதலிக்க வேண்டும்.
இவர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர் என்பது இவரது எழுத்துக்களில் தெரிகிறது. இத்தொகுப்பில் இதுவரை 18 கவிதைகள் மட்டுமே காணக்
கிடைத்த சூழலில் எனது கருத்தைப் பதிக்கிறேன்.. இது விமர்சணம் அல்ல.

காதல் எப்போதும் ஒரு வகை கிளர்ச்சியைத் தரவல்லது. விஞ்ஞானரீதியில் ஹார்மோன்கள் செய்யும் ரகளை என்கிறார்கள் சிலர்.
எதையும் காவியமாகப் பார்க்கவல்லது என்கிறார்கள் சிலர். பருவ வயதில் ஏற்படும் குறுகுறுப்பு என்கிறார்கள் சிலர்.
எந்தவிதமான வியாக்கியானமாக இருக்கட்டும். என்னைப் பொறுத்தவரை காதல் காதல்தான். தன்னலமற்றதுதான் காதல்.
மீண்டும் காவியம் பற்றி எழுதவில்லை. ருக்மணி வைத்த துளசிக்கு கிருஷ்ணனின் தட்டு சரிநிகர் ஆன போதே தூய்மையான காதல்
சின்னச் சின்ன விசயங்களில் இருந்து மட்டுமே ஜனிக்கிறது என்பது தெளிவாகிறது.


இவரது கவிதைகளில் இந்த மாதிரியான விசயங்கள் காணக்கிடைக்கிறது.


இவர் கவிதைகளுக்கு எதிர் கவிதைகளை சில சமயங்களில் குறும்புடனும் சில சமயங்களில் உரிமையுடனும் ஒருவர் எழுதயிருக்கிறார்.
எழுதியவர் உங்களுக்குத் தெரியும். (இதுவும் ஒரு வகை விமர்சணம்தான்)
இருந்த போதும் மனம் தளராமல் இந்தப் பதிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இது கவனிக்கப்படவேண்டிய முக்கிய விசயம். ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை இந்த சமயத்தில்தான் வெளிப்படும்.
இவர் என்னைப் போல் முன் கோபி அல்ல. தான் எழுதியது அப்படித்தான் என்று வாதிடவும் இல்லை.
நீங்கள் பதிலாக நான்கு வரிகளில் விமர்சணம் எழுதுங்கள். இல்லாவிட்டால் கவிதையாக எழுதுங்கள். கவலைப்படாமல் நான்
எழுதியதை பதிந்து கொண்டிருப்பேன் என்று போய்க் கொண்டிருக்கிறார். இது கவனிக்கத் தக்க ஆளுமை.

இவரது கவிதைகளைப் பற்றிச் சொல்வதென்றால்..

18 கவிதைகளையும் பற்றி இங்கு சொல்ல முடியாது. சில இடங்களில் கவிதையில் பளிச்சென்று வார்த்தைகளோ படிமங்களோ
தென்படுகின்றன. இது ஒரு பெரிய கவிஞராவதற்குரிய அறிகுறிகளைக் காட்டுகின்றன.

இவர் எழுதியதில் மிகவும் பிடித்ததென்றால் அது.. ஆறாவது கவிதையின் இறுதி வரிகள்தான்.

"மனிதனின் விலா எழும்பிலிருந்து
அவனுக்கானத் துணையை கடவுள் படைத்தார்"

பைபிளின் ஆதியாகமத்தில் வரும் வாசகம் இது.

இந்த வாசகத்தை தனது கவிதையில் அற்புதமான குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.
சட்டென இந்தக் கவிதை படித்ததும் மனதினுள் எழுந்த வாசகம் இது.
இதை விரிவுபடுத்திப் பார்த்தால் ஆதியில் ஆதாமின் வழித்தோன்றலாகத் தன்னையும் ஏவாளின் வழித்தோன்றலாக அவளையும்
கட்டியமைத்திருக்கிறார்.

ஆறாவது கவிதை

-------
------

நீ தொட்ட பூவில்
பதிந்த ரேகையில்
என் விலாவின் வாசம்
தெரிகிறதா எனத்
தொடர்கிறதென்
தேடல்
"பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ நெருஞ்சி முள்ளா?
குறிஞ்சி இதழா!!"


பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்
நீ குறிஞ்சி இதழா?
நெருஞ்சி முள்ளா?


இது மாறியிருக்க வேண்டும்.. மாறியிருந்தால் அழகான கவிதையாக இருக்கும்.

மற்ற கவிதைகள் தென்றல் ரகம்.. படிப்பதற்கு இதமான வரிகள்...

ப்ரியனுக்கு...

எழுதுங்கள்.. நிறைய எழுதுங்கள்.. பெரிய கவிஞராவதற்குரிய அறிகுறிகள் ஏராளமாகத் தென்படுகின்றன உங்களிடம்.

பாரதி
27-05-2005, 06:38 PM
அன்பு ராம், உங்களின் விரிவான அலசல் பிரியன் போன்ற கவிஞர்களுக்கு மிக்க மகிழ்வை அளிக்கும்.

பின்குறிப்பு: அவருடைய 'தீபங்கள் பேசும்' கவிதைகள் அனைத்தும் ஏற்கனவே தமிழ்மன்றத்தில் { திஸ்கி } உள்ளன. அவரது கவிதைத் தொகுப்பை புத்தகமாகவும் வெளியிட அவர் ஏற்பாடுகள் செய்துள்ளார்.

Iniyan
27-05-2005, 07:06 PM
என்னவொரு தீர்க்கமான அலசல்.? கவிஞனை கொல்லும் அள்வு இன்னும் தமிழகம் மேம்படவில்லை (!) என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிஞனை கொல்லத் தான் காதல் உள்ளதே பற்றாதா என்ன???

பிரியன்
27-05-2005, 08:25 PM
மிக்க நன்றி ராம்பால்... தெளிவான விமர்சனம் தந்தமைக்கு....

தாங்கள் குறிப்பிட்டது போல எனது காதலே எனக்கு கவிதையை தந்தது.

ஆறாவது கவிதையில் என் எண்ணங்களில் பதிந்த அந்த பிம்மப்த்தின் நிலையை குறிக்கவே பயன்படுத்தி இருந்தேன். பைபிளில் வரும் வாசகம் என்று தெரியாது ஆனால் அதைப்பற்றி செவி வழி கேள்விப்பட்டிருக்கிறேஎன்..

பார்வை பதிக்கிறாய் கவிதையில் தாங்கள் சொன்ன மாற்றங்கள் அதன் அழகை கூட்டுவதை உணர்கிறேன். இதே கருத்தை நண்பர் பிரதீப் முன்பு சொல்லியிருந்தார். நான் கவிதைகள் எழுதி வந்தாலும் எனது வாசித்தல் மிகவும் குறைவு. ஆகவே பல இடங்களில் தீர்மானமான முடிவுக்கு வராமல் என் மனதிற்கு இதமளித்ததை எழுதியிருந்தேன்...தொடர்ந்து எழுதுவேன்... இத் தொகுப்பு முடிந்தவுடன் மற்ற கருத்தியல் தளங்களிலும் கவிதைகள் எழுதுவேன்.. அதற்கு நிறைய படிக்க வேண்டும், பயிற்சி செய்ய வேண்டும்.

மன்மதன்
28-05-2005, 06:08 AM
இவர் கவிதைகளுக்கு எதிர் கவிதைகளை சில சமயங்களில் குறும்புடனும் சில சமயங்களில் உரிமையுடனும் ஒருவர் எழுதயிருக்கிறார்.
எழுதியவர் உங்களுக்குத் தெரியும். (இதுவும் ஒரு வகை விமர்சணம்தான் ) இருந்த போதும் மனம் தளராமல் இந்தப் பதிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.


என்னை பற்றி சொல்கிறீர்களா.. அப்படியிருந்தால் அது சரி என்கிறீர்களா.. இல்லை தவறு என்கிறீர்களா.. கொஞ்சம் விளக்கம் தேவை ராம்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
28-05-2005, 07:07 AM
சரிதான் மன்மதன்....உங்கள் பதில் கவிதைகள் ஒரு விமர்சனம் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். ஆஅகையால் தவறேதுமில்லை...

rambal
28-05-2005, 02:47 PM
அன்பு மன்மதன்,

நீங்கள் செய்தது சரிதான் என்று சொல்லியிருக்கிறேன்..

ப்ரியனைப் பற்றி சொல்லும் போது கவிஞர்களின் மன நிலையைப் பற்றிப் பேச வேண்டியதகிவிட்டது..
அதனால்தான் என்னை முன்கோபி என்று கூட எழுதியிருந்தேன்..
இதற்காக நான் ராம்பாலைக் கோபிக்கமுடியுமா?

மன்மதன்
21-09-2005, 04:45 PM
நீங்கள் ஏன் சமீப காலமாக மன்றத்தில் எழுதுவதில்லை ராம்.. (தாமதமாக கேட்பதற்கு மன்னிக்கவும்.)

Nanban
21-09-2005, 05:36 PM
இவர் எழுதியதில் மிகவும் பிடித்ததென்றால் அது.. ஆறாவது கவிதையின் இறுதி வரிகள்தான்.


"மனிதனின் விலா எழும்பிலிருந்து
அவனுக்கானத் துணையை கடவுள் படைத்தார்"

பைபிளின் ஆதியாகமத்தில் வரும் வாசகம் இது.

இதைத் தான் சொன்னேன் -

வித்தியாசமான கற்பனைகள் - காட்சிகள் - சொல்லாடல்கள்

இவைகள் தான் கவிதைக்குத் தனித்துவம் தரும்.

நல்ல வரிகள்.

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாது அனைத்து வரிகளும் இந்த நயம்பட வந்தால் தான் கவிதை மெருகேறும்

வாழ்த்துகள்

அன்புடன்