PDA

View Full Version : கணேசன்



பாரதி
27-05-2005, 12:41 AM
தேதியில்லா குறிப்புகள்
கணேசன்

எங்கப்பா கூட பொறந்தவங்க அஞ்சு பேரு. இதுல ஒரு சித்தப்பா சின்ன வயசுலேயே போயிட்டாராம். அப்பாவுக்கு ரெண்டு அண்ணங்க, ஒரு தம்பி, ஒரு தங்கச்சி.இதுல ரெண்டாவது அண்ணன் பேரு சின்ன காமாஷி. அவருக்கு மூணு பொண்ணுங்க. ஒரு பையன். பையன் பேருதான் கணேசன். எஞ்சோடுதான், ஆனா என்னக்காட்டியும் மூத்தவன்.

கணேசன் படிப்புல ரொம்ப சூட்டிகை. நானும் நல்லாத்தான் படிப்பேன். இருந்தாலும் வீட்டுல எப்பப்பாத்தாலும் சொல்லிகிட்டே இருப்பாங்க - " லேய்.. இருந்தா கணேசம்மாதிரி இருக்கணும்லேய். அவந்தாண்டா புள்ள." அப்டீனு சொல்லியே வெறுப்பேத்துவாங்க. அந்தக் காரணத்துக்காகவே எனக்கு கொஞ்சம் அவம்மேல கோவம் வரும். ஆனாலும் அவன் ரொம்ப நல்லவன். அதனால எனக்கும் அவன ரொம்பப் புடிக்கும்.

என்னைக்காச்சும் லீவு நாள்ல அவன் வீட்டுக்கு போவேன். அவன் வீடுன்னா ஏதோ ரொம்ப தூரத்துலன்னு நெனச்சுக்காதீங்க. எங்க வீட்டுக்கு நேரா பின்வீடுதான். பின்பக்க சன்னல தெறந்து " எலேய் முருகா"ன்னு அம்மா கூப்பிட்டாங்கன்னா அடுத்த நிமிசம் வீட்ல இருப்பேன். அவங்க வீட்ல தண்ணி எறைக்குற 'கமல' இருக்குல்ல.. அதுல இருக்குற சக்கரத்த, பஸ்ஸ டிரைவர் மாதிரி ஓட்டுறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச வெளயாட்டு.

கணேசனுக்கு கடவுள் பக்தி ரொம்ப இருக்கும். கோயிலு கும்புடுன்னா மொத ஆளா இருப்பான். அம்மன் கோயில்ல திருவிழா நடக்கும் போது, திண்ணையில உக்காந்து பெரிய மனுசன் கணக்கா, நெறய கத சொல்லுவான். நேர்ல பாக்குற மாதிரி கத சொல்ற தெறம அவனுக்கு. வீரவாண்டித் திருவிழாவுக்கு போனா அவன் திரும்பி வர்றப்ப கண்டிப்பா ஏதாவது புத்தகங்களோடத்தான் வருவான். விக்கிரமாதித்தன் கதைகள், சித்தர் பாடல்கள், மாயாஜாலக்கதைகள், பாமாலை..அப்டீன்னு விதவிதமா இருக்கும். படிச்சுட்டு அதுல இருக்குற விசயங்கள மனசுல பதியற மாதிரி சொல்வான். அப்ப வந்த சினிமா படங்களலப் பத்தியும் வசனத்தோட கத சொல்லுவான்.

ஆனா வெளயாட்ல எல்லாம் அவனுக்கு விருப்பமில்ல. எப்பவாச்சும் 'காக்கா-குஞ்சு' வெளயாடிருக்கான்னு நெனக்கிறேன். அப்புறம் அவங்கூட அபூர்வமா தாயம், பரமபதம், பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம் வெளாடிருக்கேன். பல்லாங்குழில மொதல்ல எந்த குழி முத்த எடுத்தா நெறய முத்து கெடைக்கும்கிற ரகசியத்த சொல்லிக்கொடுத்தவன் அவந்தான். தாயத்துல ரெண்டு வகை விளையாட்டு இருக்குங்கிறதயும் அவன் மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன்.

படிப்புல மொத வர்ற பத்து பேருக்குல்லதான் அவன் வந்துகிட்டுருந்தான். அவன் ஒம்போதாவது படிக்கும் போது திடீர்னு காணாம போயிட்டான். எல்லாரும் அவன் எங்க போயிருப்பான்னு தலய பிச்சுகிட்டாங்க. ரெண்டு வாரம் கழிச்சு அவனா திரும்பி வந்தான். எங்கடா போயிருந்தான்னு கேட்டா, நடப்பயணமா ராமேசுவரத்துக்கு போயிருந்தானாம்.

தனியா அவன்கிட்டே பேசுனப்ப 'சும்மா தோணிச்சு. அதான் போனேன்'-ன்னான். 'எப்டிறா சமாளிச்ச'ன்னு கேட்டதுக்கு அங்கங்க சாப்பாடு கெடக்கிறதுலல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லன்னான். 'ஏண்டா திரும்பி வந்த'..ன்னு கேட்டதுக்கு சரியான பதில் இல்ல.. வெறும் சிரிப்புத்தான் பதில். அதுக்கப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கொஞ்ச நாள் வந்தான். அப்புறம் நின்னுட்டான். பெரியப்பாவும் படிப்ப அவ்வளவா கண்டுக்கல. படிச்சு என்னத்த கிழிக்க போறாங்க அப்டீங்கிறது ஊர்பெருசுங்களோட வாக்கு. அதுக்கப்புறம் முழுமூச்சா தோட்ட வேல, வயல் வேலய பாத்துகிட்டான்.

எல்லாரும் 'அவன மாதிரி வேல பாக்குறவன் உண்டா'ன்னு ரொம்ப தாங்குவாங்க. அப்பல்லாம் பசங்க பள்ளிக்கூடத்துக்குப் போனாலும் லீவு நாள்ல தோட்ட வேலைல கூடமாட ஒத்தாச பண்றதெல்லாம் சகஜம்தான். நானும் அப்பப்ப தோட்டத்து பக்கம் போனா எனக்கு குடிக்க எளநீ பறிச்சு கொடுப்பான். கல்லாலேயே ஓட்ட போட்டு அப்படியே குடிப்போம். அப்புறம் பக்கத்து தோட்டத்துல இருந்து நிலவள்ளிக்கெழங்கு, கேப்ப, தக்காளி,வெண்டக்கா, மக்காச்சோளம் எல்லாம் தெரியாம எடுத்துக் கொடுப்பான்.

பக்கத்து தோட்டத்துல இருக்குற பூவரச மரத்துல ஏறி, பம்பரம் விட பூவரசங் காயி, அப்புறம் அதோட எலைல 'பீப்பி' எல்லாம் பண்ணிக்கொடுப்பான். அவங்க கெணத்துல மேல இருந்து,தலகீழா டைவ் அடிச்சி, தரைக்கி போயி மண்ணெடுத்துட்டு வருவான். உடம்ப கல்லு கணக்கா வச்சுக்குவான். நின்னுகிட்டு இருக்கும் போது அப்படியே குனிஞ்சி நெத்தி முழங்கால்ல படுற மாதிரி வில்லா வளைவான். எப்டிறா இவனால மட்டும் இப்படியெல்லாம் செய்ய முடியுதுன்னு எனக்குத்தோணும்.

பொங்கலப்ப வீட்டுக்கு வீடு கட்டுவாங்கல " பீழைப்பூ",அப்புறம் சின்னதா சதுர சதுரமா இருக்குற வேலிக்கள்ளி, மாவிலை. கள்ளியும், மாவிலையும் ஊருலயே நெறய கெடைக்கும். வீட்டுல பீழைப்பூ வெலைக்கித்தான் வாங்குவாங்க. ஒரு தடவ கணேசன் 'அரம்மணைப்புதூர், வயப்பட்டில இருக்குற கரட்டுல பீழைப்பூ சும்மா நெறய வெளஞ்சி கெடக்கும். போனா சும்மாவே பிடிங்கிட்டு வந்திரலாம்'னு சொன்னான். எனக்கும் சந்தோசம்தான். ஆனா போறதுன்னா ஒண்ணு தேனிய சுத்திப்போகணும். அது ரொம்ப தூரம். ஊர்ல கெழக்க ஓடிகிட்டிடுருக்குற முல்லையாத்த கடந்து போனா கொஞ்ச நேரத்துலேயே கரட்டுக்குப் போயிரலாம். ஆத்த கடந்து போயிரலாம்னு கணேசன் சொன்னான். அப்பல்லாம் எனக்கு நீச்சல் சரியாத் தெரியாது. எந்த இடத்துல ஆத்துல எறங்குனா எந்த இடத்துல கரையேறலாம், எந்த இடத்துல எவ்வளவு ஆழம் இருக்கும்கிறதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. போறப்ப எனக்கு அவ்வளவு சிரமம் ஒண்ணும் தெரியல.

கரட்டுல ஏறி பீழைப்பூ நெறய பிடிங்கிகிட்டோம். அப்புறம் சின்ன சிகப்பு, கருப்பு கலர்ல இருக்கும்ல குண்டுமணி - அத நெறய பிடுங்கி பைய நெறப்பிகிட்டோம். அப்புறம் 'சூடுகாய்' வேற கெடச்சுச்சு. எனக்கு ஒரே சந்தோசம்.

என்னான்னு தெரில்ல.. வர்றப்ப ஆத்த பாத்தவுடன் பயம் வந்திருச்சு. ஆத்துல தண்ணி நெறய போயிகிட்டு இருந்துச்சு. ஒரு இடத்த காண்பிச்சு 'இங்க குதிச்சா தண்ணி இழுத்துட்டுப்போற வேகத்துல அந்த இடத்துல கரை ஏறிரலாம்'னு அவன் சொன்னான். எனக்கு தயக்கமாவே இருந்துச்சு. அவன் தய்ரியம் சொல்லி 'நான் மொதல்ல குதிக்கிறேன். நீயும் பின்னாடியே குதி, நான் உன்ன பாத்துக்கறேன்'னு சொல்லிட்டு குதிச்சுட்டான். எனக்கும் வேற வழியில்ல. குதிச்சேன். படபடப்பு இருந்ததாலயா, இல்ல கட்டி வச்சிருக்குற பீழைப்பூ போயிரக்கூடாதேங்கிற எண்ணமான்னு தெரியல. தண்ணி இழுத்துட்டுப் போற வேகத்துல நீச்சலடிக்க முடியாம போச்சு. அவன் 'இங்க வாடா'ன்னு சொல்லிட்டு போய்ட்ருக்கான். எனக்கு என்ன பண்றதுண்ணே தெரியல. அழுகையா வருது. தண்ணியோட நான் போறத கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த அவன், அப்புறம் என் கைய பிடிச்சு இழுத்துகிட்டுப் போயி கரையேத்தி விட்டான். இனிமே அவங்கூட எங்கயும் போகக்கூடாதுன்னு நெனச்சுகிட்டேன். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.

அப்புறம் ஒரு தடவ ஊர்ல இருந்து செளடம்மன் கோவிலுக்கு 'தீர்த்தம்' கட்ட மருதமலைக்கு போனாங்க. மொத தடவையா நானும் போனேன். கூடவே கணேசனும் வந்தான். கோயமுத்தூர், பழனியெல்லாம் பாத்தோம். அங்க மத்தவங்க அடிச்ச கூத்த எல்லாம் பாத்துட்டு எனக்கு வெறுப்பாப் போச்சு.

இன்னோரு தடவ வீரப்ப அய்யனார் கோயிலுக்கு போயிருந்தப்ப மலைக்கு மேலே அருவி விழுற இடத்துக்கு கூட்டிட்டுப்போனான். அங்க இருந்த வழுக்குப்பாறைல தண்ணியோட சேந்து வந்து குளிச்சத இப்ப நெனச்சாலும் மனசுல ஒரே கும்மாளம்தான்.

ரெண்டுமூணு தடவ ஒண்ணா சினிமாக்கெல்லாம் போயிட்டு வந்தோம். இடவேளல சமோசா, முறுக்கு எல்லாம் வாங்கிக்குடுப்பான்.

படிச்சதுக்கப்புறம் வேலைக்கு போயி சேந்திட்டனா... கணேசனுக்கு சந்தோசம். 'நம்ம குடும்பத்துல இருந்து ஒருத்தனாவது நல்ல வேலக்கி போய் சேந்திருக்கியே'ன்னு சொன்னான்.

ஒருவாட்டி வீரவாண்டி கெளமாரியம்மனுக்கு, தீச்சட்டி தூக்கிட்டு வர்றதா அவனுக்கு நேர்த்திக்கடனாம். ஆத்தங்கரைல ஒரே கூட்டம். தீச்சட்டி வளத்து, உறுமிமேளம் கொட்ட எல்லாரும் அவனுக்கு அருள் வந்து சாமியாடறத பாக்க காத்துகிட்டிருந்தாங்க. ஆச்சு.. நேரமாகியும் அவனுக்கு சாமி வரல்ல. எல்லாரும் சாமி கும்பிட்டு துண்ணூறு போட்டும் ஒண்ணும் நடக்கல. மேளக்காரன் சளச்சிப்போயிட்டான்.

நான் அவம்பக்கத்துல போயி " என்னடா ஆச்சு?"ன்னு கேட்டேன்.

அவன் "என் கண்ணுக்கு சாமி ஒண்ணும் வர்லியேடா - வராம எப்படித் தூக்குறது?" னு சொன்னான்.

" எல்லாரும் ஒனக்கு சாமி வரும்னு நம்பிகிட்டிருக்காங்க. நீ வரலைன்னாலும் அவங்க விடப்போறதில்ல. பேசாம சாமி வந்த மாதிரி சிலிப்பிகிட்டு தீச்சட்டியத் தூக்கிரு. அப்பத்தான் எல்லாருக்கும் சந்தோசம் வரும்"னு சொன்னேன்.

அவன் ஒண்ணும் சொல்லல. கொஞ்ச நேரத்துல அவன் ஒடம்ப சிலிப்பிகிட்டு, நாக்கை கடிச்சான். " ஆ... வந்திருச்சு.. அருள் வந்துருச்சு. அம்மா... மகமாயி.. தாயே.."-ன்னு எல்லோருக்கும் கன்னத்துல போட்டுகிட்டாங்க. தீச்சட்டி எடுத்துட்டுப்போற வழில அவன் என்னப்பாத்து சிரிச்சான்.

அப்புறமா வேலைக்கு போய் சேந்தப்புறம் அவனப்பாக்குறது, பேசுறது எல்லாம் ரொம்ப கொறஞ்சி போயிருச்சு. பெரியப்பா தவறிட்டாருன்னு சேதி கெடச்சப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்போதைக்கு வர முடியாத சூழ்நிலை எனக்கு. ஊருக்கு வந்தப்ப போயி பார்த்தேன். அவனும் ஒண்ணும் தப்பா எடுத்துக்கல. 'அவங்கவங்க சூழ்நில அப்படி. ஏதோ வரும் போதாவது வந்து விசாரிச்சுட்டுப் போனா சரிதான்'னு சொன்னான்.

அதுக்கப்புறம் ஒரு தடவ தேனிப்பாலத்துல வச்சு அவனப் பாத்தேன். கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம். செலவுக்கு ஏதாச்சும் கொடு-ன்னு சொன்னான். என்னால நம்ப முடியல. பைல இருந்தத கொடுத்தேன். அவனுக்கு ஒரே சந்தோசம். 'திருச்செந்தூர் வந்தா வர்ற வழில வீட்டுக்கு வாடா'ன்னு சொன்னேன். அவனும் 'கண்டிப்பா வருவேன்'னு சொன்னான். ஆனா வரவேல்ல.

ரெண்டு மூணு வருசத்துல பெரியம்மாவும் தவறிட்டாங்க. அப்ப நாள் முழுக்க கூடவே இருந்து ராகத்தோட பாட்டா படிச்சானாம். எந்தப்புத்தகத்துலயும் இல்லாதது எல்லாம் சரளமா அவன் வாயில இருந்து வந்துச்சாம். எல்லாருக்கும் பெரியம்மா தவறிப்போனதுல துக்கம்னாலும் இவன் ராகத்தோட படிக்கிறதப் பாத்து சிலுத்துப்போயிட்டாங்களாம். ம்ம்.. எல்லாம் ஆச்சு.

பெரியம்மா போனதுக்கப்புறம் அவனப் பாத்துக்க ஆளில்ல. அவன்கிட்ட இருந்த காசையும் வீட்டையும் கூடப்பொறந்தவங்க பங்கு போட்டுகிட்டாங்க. அதப்பத்தி சொல்ல எனக்கு விருப்பமில்ல. அவங்க பெரியக்கா அவனுக்கு பொண்ணு பாத்து வைப்பாங்கன்னு எதிர்பார்த்திருப்பான் போல. ஆனா ஒண்ணும் நடக்கல. ஒரு நேரத்துல அவங்க பையனுக்கு பொண்ணு தேடி கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். கொஞ்ச மாசத்துல கணேசன் தானும் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னப்ப, கூட இருந்தவங்க 'இனிமே ஒனக்கெதுக்கு கல்யாணம்'னு கிண்டல் பண்ணாங்களாம்.

அதுக்கப்புறமா அவன சித்தப்பா மகன் கணேசன் [ இவன் சித்தப்பா மகன் ] கல்யாணத்துல வச்சுப்பாத்தேன். கல்யாணத்துக்கு ஊர்ல இருந்து நடந்தே வீரவாண்டிக்கு வந்துருக்கான்! கல்யாணத்துல என்கூடவே இருந்தான். எனக்கு சந்தோசமாயிருந்துச்சு. எத்தன வருசம் கழிச்சு அவனோட இருக்குற வாய்ப்பு..! என் கூடத்தான் ஊருக்கு வரணும்னு சொன்னேன். சாப்பிடற வரைக்கும் கூடத்தான் இருந்தான். மொய் எழுதிட்டுப்பாத்தா ஆளக்காணோம். சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டான்.

ஒரு வருசத்துல, கொஞ்சம் கொஞ்சமா கணேசன கிட்டத்தட்ட யாருமே கண்டுகிறதே இல்லங்கிற மாதிரி ஆகிருச்சாம். வெறுத்துப்போன அவன் சக்திமணியோட வயல்ல பூச்சிமருத்த குடிச்சு செத்துப்போய் கெடந்தானாம். ரெண்டு நாள் கழிச்சுத்தான் விசயம் தெரிய வந்திருக்கு. ஆஸ்பத்திரில எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா அல்லிநகரத்துலேயே எல்லாக் காரியத்தையும் முடிச்சுட்டு வந்தாங்களாம். எனக்கு சொன்னா வருத்தப்படுவேன்னு சொல்லவேண்டாம்னு அப்பா சொல்லிட்டாராம். அதனால எனக்கு இந்த விசயம் ரெண்டு மாசம் கழிச்சுத்தான் தெரிய வந்துச்சு. வாழ வேண்டிய வயசுல போயி சேர்ந்துட்ட கணேசன நெனச்சி ரொம்ப வேதனைப்பட்டேன்.

எல்லாரும் சொன்னாங்க - "கணேசனுக்கு வெவரமில்ல. இருந்தா காச இப்படி தொலச்சிருப்பானா..? கைல நாலு காசு இருந்துச்சுன்னா இப்படி நடந்திருக்குமா?"-ன்னு. இந்த மனுசங்கள நெனச்சா எனக்கு சிரிப்புத்தான் வந்துச்சு. என்ன உலகம்டா இது?

-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்

ஓவியா
09-02-2007, 07:37 PM
பாரதி அண்ணா
அருமையாய் எழுதுகின்றீர்கள், பாராட்டுகிறேன்

கதை மிகவும் சோகம் தான். எனது வருத்தங்கள்

ஓவியன்
26-02-2007, 11:28 AM
பாரதி அவர்களே!
உங்களது சகோதரனைப் பற்றிய குறிப்புக்கள் உண்மையிலேயே என் மனதினைக் கனமாக்கின்றது. உங்களது வரிகள் அப்படியே கிராமத்து வாழ்க்கை முறைகளை கண்முன்னே நிறுத்துகிறது.

நீங்கள் உங்கள் குறிப்பின் முடிவிலே உலகத்தினைப் பற்றிக் கூறியது, நிதர்சனமானது.

உலகம் இப்படித்தான் நெஞ்சத்திலே வஞ்சகம் இல்லாதவர்களை ஏமாற்றிப் பிழைக்கின்றது.

பாரதி
26-03-2007, 06:13 PM
தாமத பதிலுக்கு தயவுகூர்ந்து மன்னிக்கவும்.

கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஓவியா, ஓவியன்.

இளசு
26-03-2007, 08:26 PM
எல்லாம் இருந்தும் எதுவுமில்லாமல் முடிந்தது
கணேசனின் குறையல்ல..

கபடம், சூது-வாதுதான் திறமை, வளர்ச்சி என
தவறான எடைக்கல்லைத் தூக்கி அலையும் நம் சமுதாயத்தின் குறை..

நான் பார்க்காத தம்பிக்காக
இன்று இரு சொட்டு கண்ணீர் சிந்தினேன்....

பாரதி
28-03-2007, 05:55 PM
உங்கள் கண்ணீர் அஞ்சலியில் நானும் இணைந்து கொள்கிறேன் அண்ணா.

mukilan
28-03-2007, 06:48 PM
மறுபடியும் ஒரு முத்தான பதிப்பு. நீங்கள் ஒவ்வொரு முறை உங்களின் பால்ய கிராம நினைவுகளை வர்ணிக்கும் போது நான் இழந்து விட்ட ஏராளமான அனுபவங்களை எண்ணிப்பார்க்கிறேன். நானும் கிராமம்தான் என்றாலும் முற்றிலும் மாறு பட்ட கரிசல்காடு. பீழைப்பூ என்பதை தும்பைப் பூ என்று கூறுவார்களா?

தனிமை எத்தகைய மனச்சிதைவிற்கு வழிவகுக்கின்றது. சிறுவயதில் அனைத்திலும் முதலாக வந்த ஒரு ஆண், நன்கு திறம்பட செயல் படக்கூடிய வாலிபர் தனக்கு மனம் விட்டு பேசக்கூடிய அளவில் நண்பர்கள் இல்லாத்தாலோ, வேறு எவரும் இல்லாததாலோ விபரீத முடிவுகட்கு ஆட் பட வேண்டியிருக்கிறது. பெண்கள் மட்டும் முதிர்கன்னியாக இல்லாமல் நம் நாட்டில் ஆண்களும் முதிர்ந்த பிரம்மச்சாரியாக இருக்க வேண்டிய சாபக்கேடு இன்னமும் இருப்பதை நினைத்தால் நமது மனங்கள் மாற வேண்டியதன் அவசியம் புரிகிறது. ஒரு ஆணோ பெண்ணோ தனக்குத் தேவையான துணையே தானே தேடிக்கொள்ளவும் அதற்கு இந்த சமுதாயம் ஒப்புதல் அளிக்கவும் எத்தகைய மனமாற்றம் தேவையோ அத்தகைய மன மாற்றம் இப்பொழுது எட்டாக்கனிதான். கணேசன் அண்ணனின் ஆன்மா சாந்தியடைவதாக.

இளசு
28-03-2007, 07:46 PM
முகிலனின் பின்னூட்டங்கள் மிக புஷ்டியானவை..
பலமுறை வாசிக்க வைப்பவை..

அந்த பின்னூட்டம் வாங்கவென்றே படைக்க ஆசை வரும்..

மீண்டும் உச்சிமோந்த வாழ்த்துகள் என் தம்பிக்கு..

leomohan
28-03-2007, 07:53 PM
கணேசன் கண் முன் வந்து சென்றார் பாரதி உங்கள் அழகிய கிராமிய மனம் நிறைந்த தமிழில்.
இந்த நன்றியில்லா உலகத்தில் பலே கணேசன்கள் மாட்டிக் கொண்டு அல்லல் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
யாராவது யாரையாவது சாமார்த்தியம் இல்லையென்று சொன்னால் அவர் காசு பார்க்க வில்லை காசு சேர்க்கவில்லை என்பதே பொருளாகிவிட்டது.
தொடரட்டும் உங்கள் dateless diary

ஓவியா
28-03-2007, 08:07 PM
மறுபடியும் ஒரு முத்தான பதிப்பு. நீங்கள் ஒவ்வொரு முறை உங்களின் பால்ய கிராம நினைவுகளை வர்ணிக்கும் போது நான் இழந்து விட்ட ஏராளமான அனுபவங்களை எண்ணிப்பார்க்கிறேன். நானும் கிராமம்தான் என்றாலும் முற்றிலும் மாறு பட்ட கரிசல்காடு. பீழைப்பூ என்பதை தும்பைப் பூ என்று கூறுவார்களா?

தனிமை எத்தகைய மனச்சிதைவிற்கு வழிவகுக்கின்றது. சிறுவயதில் அனைத்திலும் முதலாக வந்த ஒரு ஆண், நன்கு திறம்பட செயல் படக்கூடிய வாலிபர் தனக்கு மனம் விட்டு பேசக்கூடிய அளவில் நண்பர்கள் இல்லாத்தாலோ, வேறு எவரும் இல்லாததாலோ விபரீத முடிவுகட்கு ஆட் பட வேண்டியிருக்கிறது. பெண்கள் மட்டும் முதிர்கன்னியாக இல்லாமல் நம் நாட்டில் ஆண்களும் முதிர்ந்த பிரம்மச்சாரியாக இருக்க வேண்டிய சாபக்கேடு இன்னமும் இருப்பதை நினைத்தால் நமது மனங்கள் மாற வேண்டியதன் அவசியம் புரிகிறது. ஒரு ஆணோ பெண்ணோ தனக்குத் தேவையான துணையே தானே தேடிக்கொள்ளவும் அதற்கு இந்த சமுதாயம் ஒப்புதல் அளிக்கவும் எத்தகைய மனமாற்றம் தேவையோ அத்தகைய மன மாற்றம் இப்பொழுது எட்டாக்கனிதான். கணேசன் அண்ணனின் ஆன்மா சாந்தியடைவதாக.

அமைதியாக உலாவி ஆழமான கருத்திடும் முகிலன். (நன்றி:இளசு) :nature-smiley-003:


அருமையான கருத்துகள் அடங்கிய விமர்சனம். நன்றி முகி.

இளசு
28-03-2007, 08:11 PM
அமைதியாக உலாவி ஆழமான கருத்திடும் முகிலன். (நன்றி:இளசு) :nature-smiley-003:


.

நான் சொல்லி நானே மறந்தவற்றைக்கூட
மேற்கோள் காட்டுவதில் வல்லவர் இனிய பென்ஸ்..

ஓவியாவும் இப்போது..

பூரிக்கிறேன்....நன்றி ...ஓவியா!

ஓவியா
28-03-2007, 08:15 PM
நான் சொல்லி நானே மறந்தவற்றைக்கூட
மேற்கோள் காட்டுவதில் வல்லவர் இனிய பென்ஸ்..

ஓவியாவும் இப்போது..

பூரிக்கிறேன்....நன்றி ...ஓவியா!

தங்களுடைய பதிவுகள் அலசி படிக்கும் பென்ஸில் வலதுக்கை நான்.

இருந்தாலும் குரு போல் என்னால் முடியாது, :icon_good:

எ:க: இளசு வந்தாலே போதும் பதிவு இடவில்லை என்றாலும் பரவாயில்லை

பாரதி
22-03-2008, 08:09 AM
கருத்தளித்த முகிலன், அண்ணா, லியோ மோகன், ஓவியா ஆகியோருக்கு நன்றி.