PDA

View Full Version : பிள்ளையார்



பாரதி
24-05-2005, 09:36 PM
தேதி இல்லா குறிப்புகள்
பிள்ளையார்

சின்ன வயசுல எனக்கு கடவுள் பக்தி ரொம்ப இருக்கும். [ இப்ப எப்படின்னு ஏடாகூடமா கேட்காதீங்க... ! ] ஏதாவது தப்பு பண்ணுணோம்னா கடவுள் கண்ண குத்திருவாருன்னு வீட்டுல இருக்குறவங்க அடிக்கடி சொன்னதுனால பயமும் ரொம்பவே இருக்கும். கடவுள் கூட இருந்தாருன்னாத்தான் நல்ல மார்க் வாங்க முடியும்னு எல்லோரும் சொல்லுவாங்க.

வீட்டுலயும் நெறய சாமிப்படங்க இருக்கும். மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் அனுமார், திருப்பதி, முருகன், சாமுண்டீஸ்வரி, பிள்ளையார், சரஸ்வதி, அஷ்ட லட்சுமி இப்படி... நெறய சாமிங்க. எல்லாம் கண்ணாடில பிரேம் போட்டு வரிசையா வச்சிருப்பாங்க. அதோட சின்னதா புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் சிலையும், பிள்ளையார் சிலையும் குத்துவிளக்கு பக்கத்துல இருக்கும். தினம் சாயந்திரம் பத்திக்குச்சி, சூடம் எல்லாம் ஏத்தி சாமி கும்பிட்டு, துண்ணூர நெத்தி பூரா பூசிகிட்டு வாயிலயும் கொஞ்சம் போட்டுகிட்ட அப்புறம்தான் சாப்பாடே..!

இதுல வழக்கம் போல பிள்ளையார்னா எனக்கும் பிடிக்கும். காரணம் மத்த சாமிங்க மாதிரி எங்கடா கோயில் இருக்குன்னு தேடிகிட்டு போக வேண்டிய அவசியமில்ல. ரோட்டோரத்துலயே இருப்பாரு. போற வழியிலேயே தெருவுல நின்னே கும்பிட்டுக்கலாம். கோவுச்சுக்கவும் மாட்டாருல்ல. அதே மாதிரி ஏதாவது தப்பு பண்ணிட்டோம்னா 'உக்கி' போட்டா போதும். உச்சி குளுந்துருவாருல்ல..!

பெரிய தெருவுக்கு திரும்புறதுக்கு முன்னாடியே அந்த சின்னப் பிள்ளையார் கோயில் இருக்கும். அங்க கூட்டமும் ரொம்ப இருக்காது. ரொம்ப அமைதியா இருக்கும். தினம் காலைல அந்த பூசாரி கோயில கழுவி விட்ருப்பாருங்கிறதால அந்த கல்தரை ஈரத்தோடதான் இருக்கும். பிள்ளையாருக்கு பின்னாடி ஒரு சின்ன வெளக்கு - கண்ணாடில பண்ணிருப்பாங்க - அது சுத்திகிட்டே இருக்கும். புள்ளையாருக்கு முன்னாடி அவரோட வாகனம் சுண்டெலியும் பெரிய சிலையா இருக்கும். பெரும்பாலும் வெள்ளப்பூவுதான் மாலையா இருக்கும். கோயிலோட சுவத்துல " வாக்குண்டாம்.. நல்ல மணமுண்டாம்..." அப்புறம் "பாலும் தெளிதேனும்..." இத மாதிரி கொஞ்சம் பாட்டு எல்லாம் கல்லுல செதுக்கி வைச்சிருப்பாங்க. சும்மா சூடம் வாங்கிட்டுப் போனாலே ஆராதனை நடத்தி துண்ணூறு கொடுப்பாரு பூசாரி.

விநாயக சதுர்த்தி அன்னைக்கு மட்டும் பிள்ளையார பிடிக்க முடியாது. அவலும் கொலுக்கட்டையும் கோயில்ல நெரம்பி வழியும். அது போக சொல்ல மறந்துட்டேனே... தெனம் சாயங்காலம் போனா சுடச்சுட சக்கரப் பொங்கலு வாழயிலல வச்சு பிரசாதமா தருவாங்க.. ரொம்ப நல்லா இருக்கும்.

ஹைஸ்கூல்ல படிக்க ஆரம்பிச்சதுக்கு பின்னாடி காலைல வாய்க்காலுக்கு போயி குளிக்கிறதுங்கிறதுதான் ஆம்பள பசங்களுக்கு அழகு. அதனால வெள்ளனவே துண்டு, சோப்பு, பல்லுப்பொடியோட கெளம்பிருவேன். ஹைஸ்கூலுக்கு பின்னாடி கொஞ்ச தூரத்துல படித்துறை இருக்கும். அந்த இடத்துலதான் நான் குளிக்கிறது. கொஞ்சம் பெரியவனா ஆனதுக்கு அப்புறம் குளிக்கப் போன இடம் வேற. ஊரப்பத்தி சொல்லும் போது சொல்றேன்.

ஒரு மூணு கருங்கல்லு, நல்ல பெரிசா இருக்கும். ஒவ்வொரு கல்லும் ரெண்டடி அகலம், எட்டு ஒம்போதடி நீளமிருக்கும். அந்தக் கல்லுகளா படியா வச்சு வாய்க்காலுக்குள்ள எறங்குறதுக்கு வசதியா பன்ணியிருப்பாங்க. ரெண்டு பக்கமும் மண்ணுல கட்டுன கைப்பிடி சுவரும் இருக்கும். அந்த சுவத்துல இருக்குற ஓட்டைகள்ல சோப்ப வச்சிட்டு குளிப்போம். அந்த படித்துற முகப்புலேயே சின்னதா அழகா ஒரு புள்ளையார். சின்ன கல்லு கட்டிடத்துல மேல அவரும் அவர் வாகனமும் மட்டும்தான். கோபுரம் எல்லாம் கெடையாது. வெட்ட வெளில 'நான் எல்லாருக்கும் சொந்தம்' அப்டீன்னு சொல்லுற மாதிரி இருப்பார். அப்பப்ப எண்ணெக் குளியல் நடந்தது மாதிரி சும்மா அவர் உடம்பு மினுமினுக்கும். இடுப்புல செவப்புக்கலரு துண்டு - கைத்தறி - கட்டிருப்பாரு. தெனம் செம்பருத்திப்பூ வச்சிருப்பாரு. அந்தப்பூ ஸ்கூல் பக்கத்துலேயே கிடைக்கும். இல்லாட்டி நந்தவனத்துல இருக்குற செடியில இருந்து யாராவது கொண்டு வந்து வச்சிருப்பாங்க. எப்பாச்சும் யாராவது ஸ்பெசலா கவனிச்சா அவர் கழுத்துல மால தொங்கும். ஆனா ஒண்ணு எப்ப போனாலும் துண்ணூறு கெடைக்கும். குங்குமம் எப்பாச்சும் கெடைக்கும்.

காலைல வாய்க்கால்ல குளிச்சுட்டு - ஹம். அப்பல்லாம் வருசம் முச்சூட தண்ணி ஓடிகிட்டுத்தான் இருக்கும் - படித்துறைல இருக்குற புள்ளயாருக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்தோம்னா அன்னைக்கு நாள் பூரா நிம்மதி அப்டீங்கிற மாதிரி நம்பிக்கை. பரீட்சை வந்திருச்சுன்னா போதும் ரெண்டு புள்ளையார்கிட்டேயும் தவறாம ஆஜாரகிடுவோம்ல. வழக்கமான " அப்பா..புள்ளையாரப்பா... என்னக் காப்பாத்துப்பா.. நான் நெனச்சதெல்லாம் நடக்கணும்பா.. வீட்ல எல்லாரும் நல்லாருக்கணும்பா.. சாமி... நீதான் காப்பாத்தணும்" - இது மாதிரி சொல்றதோட பரீட்சைல மொத ரேங்க் வாங்கணும் அப்டீங்கிறதும் சேந்துக்கும். அவரும் ஓரளவுக்கு நம்மள நல்ல ரேங்க்லதான் வச்சுருந்தாரு. முழுப்பரீட்சைல பாஸாகிட்டோம்னு வச்சுக்கங்க... ஒரு அபிசேகமும் நடக்குறது உண்டு. அப்பவும் சரி.. எப்பவும் போல புள்ளையார் கெழக்க பாத்துகிட்டு ஒரே மாதிரி அருள்பாளிச்சுகிட்டு இருப்பாரு.

பெரியவனாகி, படிச்சு வேற ஊர்ல வேலைக்கி சேந்ததுக்கப்புறம் புள்ளையாரப் பாக்கப் போனதே இல்ல. சரீ.. நெறய வருசம் ஆகிப்போச்சேன்னு ரெண்டு மூணு வருசம் முன்னாடி வாய்க்காலுக்கு போய்ட்டு வருவோம்னு போனேன். வாய்க்கால்ல சுத்தமா தண்ணியே இல்ல. அது கூட பரவால்ல. சாக்கடத் தண்ணிய அங்க போயி விட்டிருக்காங்க.. ஹம். என்னத்த சொல்ல..? அது கூடப் பரவால்ல... படித்துறய பாத்தப்ப 'பகீர்'ன்னு ஆகிப்போச்சு. படித்துற புள்ளையாரக் காணோம். அவர் இருந்த கல்லுக் கட்டிடம் மாத்திரம் இருந்துச்சு. என்னடான்னு விசாரிச்சா... யாரோ ராவோட ராவா பிள்ளையார தூக்கிட்டுப் போய்ட்டாங்களாம். ஏன்னா திருடிப்போய் வக்கிற புள்ளையாருக்குத்தான் சக்தி அதிகமாம். அதனால எவனாவது தூக்கிட்டுப் போயிருப்பானுங்க அப்டீன்னு சொன்னாங்க...! புள்ளயாரக் காப்பாத்த சொல்லி யாருமே வேண்டிகிட்டதில்லையோன்னு தோணுது.

-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்

pradeepkt
25-05-2005, 04:45 AM
நல்லாச் சொன்னீக ஐயா.
புள்ளையாரக் காப்பாத்த அவரயேதேன் வேண்டீருக்கணும். பயபுள்ளைக சொன்னக் கேக்குறாய்ங்களா?
சும்மா தேதி போடவே தேவையில்லாத குறிப்புகளையா இவை.
பின்னுங்க நீங்க. படிச்சுச் சந்தோசப் படுறோம் நாங்க.

gragavan
25-05-2005, 06:22 AM
பாரதி, நீங்கள் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ரெட்டியபட்டி என்று கேள்விப்பட்டிருக்கின்றீகளா? எனது தாய்வழிச் சொந்தங்கள் இருக்கும் ஊர். அங்கே ஒரு நந்தவனம் இருந்தது. கிணறு இருந்தது. கிணற்றில் தண்ணீரும் இருந்தது. ஊர்ப்பயல்கள் அதில் குதித்துக் குதித்துக் களைத்துப் போவார்கள். நான் பார்ப்பதோடு சரி.

அந்த நந்த வனத்தில் ஒரு மரத்தடியில் ரெண்டு சின்ன பிள்ளையார் சிலைகள் இருந்தன. அவற்றிற்கு நாங்களக குளிப்பாட்டி பொட்டு வைத்து திருநீறு பூசிவிட்டு புளியங்காய், கம்பந்தட்டை, சுட்ட கேப்பைப் படையல் வைப்போம். புளியங்காய் கடுங்காயாக இருந்தால் சுட்டு வைப்போம்.

விடுமுறைக்குத்தான் அங்கு போவது வழக்கம். ஒருமுறை போன பொழுது ஒத்தைப் பிள்ளையாராக இருந்தார். யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள். அப்படித் திருடிக் கொண்டு போனவன் இறந்தோ/நொடிந்தோ போய்விட்டான் என்றும் சொன்னார்கள். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. நான் வளர்ந்து விட்டிருந்ததால் இருந்த ஒத்தைப் பிள்ளையாருக்குப் பூவலங்காரமும் படையலும் செய்ய கூச்சமிருந்தது.

பாரதி
25-05-2005, 05:53 PM
கருத்து எழுதி ஊக்கம் தரும் பிரதீப்பிற்கு நன்றி.

அன்பு இராகவன், நீங்கள் குறிப்பிட்ட அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு நடந்த சம்பவமும் என்னை நெகிழ வைத்தது. அப்படியெனில் ஊருக்கு ஊர் பிள்ளையாருக்கு பாதுகாப்பே இல்லையா..?

முத்து
25-05-2005, 11:42 PM
பாரதி,
கிராமங்களில் பிள்ளையார் காணாமல் போவது அடிக்ககடி நடக்கிறது

முத்து
25-05-2005, 11:45 PM
///பாரதி, நீங்கள் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ரெட்டியபட்டி என்று கேள்விப்பட்டிருக்கின்றீகளா? ///

ராகவன்,
ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் போகும் வழியில் இருக்கும் ரெட்டியபட்டியையா சொல்கிறீர்கள் ?. அடிக்கடி அந்த வழியாய்ப் போயிருக்கிறேன்.

gragavan
26-05-2005, 06:33 AM
///பாரதி, நீங்கள் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ரெட்டியபட்டி என்று கேள்விப்பட்டிருக்கின்றீகளா? ///

ராகவன்,
ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் போகும் வழியில் இருக்கும் ரெட்டியபட்டியையா சொல்கிறீர்கள் ?. அடிக்கடி அந்த வழியாய்ப் போயிருக்கிறேன்.அதே அதே. ராஜபாளையத்திலிருந்து போகையில் முக்குரோட்டு விலக்கில் நேராகப் போக வேண்டும். இப்பொழுது சாலை மிகவும் மட்டமாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அங்கே ரெட்டியபட்டியில்தான் அரசாங்க மருத்துவமனையுண்டு. சுற்றுப்பட்டு எங்கும் கிடையாது. அதற்கு அந்தக் காலத்தில் எங்கள் தாத்தாதான் நிலம் கொடுத்தார்கள். இன்றைக்கும் அந்த மருத்துவமனை ஊருணிக்குப் பக்கத்தில் ரோட்டுக்கு மேலேயே இருக்கிறது. எனது நெருங்கிய சொந்தங்கள் இன்றும் அந்த ஊரில் இருக்கின்றார்கள்.

பிரியன்
26-05-2005, 07:06 AM
கள்ளப் பிள்ளையாருக்கு சக்தி அதிகம் என்ற நம்பிகை கிராமங்களில் பரவலாக
காணப்படுகிறது . ஆகையால்தான் அடிக்கடி அவர் காணமல் போய் விடுகிறார்.அல்லது கடத்தி விடுகிறார்கள்...
பாரதி எனக்கு பிள்ளையார் மிகவும் பிடித்த நண்பன். அவர் வயிறு, பார்க்கும் தோரனை எல்லாமே நமக்கு அருகாமையில் இருப்பதாய் உணர்வேன்

நன்றி பாரதி

மன்மதன்
26-05-2005, 12:43 PM
இளமைக்காலத்தை நல்லாவே அசை போடுகிறீர்கள் .. உங்களுடம் நாங்களும்..
அன்புடன்
மன்மதன்

முத்து
26-05-2005, 01:58 PM
கள்ளப் பிள்ளையாருக்கு சக்தி அதிகம் என்ற நம்பிகை கிராமங்களில் பரவலாக
காணப்படுகிறது . ஆகையால்தான் அடிக்கடி அவர் காணமல் போய் விடுகிறார்.அல்லது கடத்தி விடுகிறார்கள்...
பாரதி எனக்கு பிள்ளையார் மிகவும் பிடித்த நண்பன். அவர் வயிறு, பார்க்கும் தோரனை எல்லாமே நமக்கு அருகாமையில் இருப்பதாய் உணர்வேன்
நன்றி பாரதி
பாரதி,
அந்த நம்பிக்கை தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டதாம். உண்மையில் வேறு மாதிரியாய் இருந்ததாம். அதாவது பிள்ளையாரைக் திருடியவன் அடிபட்டு சாவான், ஆனால் கவனிப்பாரில்லாமல் கிடக்கும் பிள்ளையாரைக் கடத்திக் கோவில் கட்டினால் சக்தி அதிகம் என்பதாய் முன்பு நம்பிக்கை இருந்ததாம். நம்பிக்கையை மாற்றி விட்டார்கள் போலத் தெரிகிறது. பிள்ளையார்தான் பாவம். நிம்மதியாய் ஒரு இடத்தில் இருக்க விடமாட்டார்கள் போலத் தெரிகிறது...... :)

முத்து
26-05-2005, 02:01 PM
அதே அதே. ராஜபாளையத்திலிருந்து போகையில் முக்குரோட்டு விலக்கில் நேராகப் போக வேண்டும். இப்பொழுது சாலை மிகவும் மட்டமாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அங்கே ரெட்டியபட்டியில்தான் அரசாங்க மருத்துவமனையுண்டு. சுற்றுப்பட்டு எங்கும் கிடையாது. அதற்கு அந்தக் காலத்தில் எங்கள் தாத்தாதான் நிலம் கொடுத்தார்கள். இன்றைக்கும் அந்த மருத்துவமனை ஊருணிக்குப் பக்கத்தில் ரோட்டுக்கு மேலேயே இருக்கிறது. எனது நெருங்கிய சொந்தங்கள் இன்றும் அந்த ஊரில் இருக்கின்றார்கள்.

பஸ்ஸில் போகும்போது அங்கு ஒரு மருத்துவமனையப் பார்த்த ஞாபகம். அதுதான் நீங்கள் சொல்வதாய் இருக்குமென நினைக்கிறேன். அந்த முக்கு ரோட்டில் ஜெயவிலாஸ் என்ற மில் கூட இப்போது இருக்கிறது.

பாரதி
26-05-2005, 05:26 PM
முத்து, பிரியன், இராகவன், மன்மதனுக்கு நன்றி. முத்துவின் பதிவில் இருந்தபடி நம்பிக்கை இருந்திருக்கக்கூடும்தான். ஆனால் பிள்ளையாரை திருடுவதற்கு சாக்கு என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

இப்போது புதிய சந்தேகமும் வருகிறது. எல்லா ஊர்களிலும் இருக்கும் பிள்ளையார்களில் பெரும்பாலானவர்கள் கடத்தி வரப்பட்டு சீராட்டப்படுகிறவர்கள்தானா...???

rambal
26-05-2005, 07:57 PM
அன்பு பாரதி,

தேதியில்லாக் குறிப்புகளை இலக்கியப்பகுதியில் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்.


பிள்ளையாரை காக்கச் சொல்லி யாரும் வேண்டவில்லை என்று கேள்வியோடு
தொக்கி நிறைவடைகிறது இந்தக் கட்டுரை.

வேறொரு கோணத்தில் பார்த்தால்,
கடவுளிடம் பேரம் பேசும் மக்கள் கடவுளைப் பற்றி நினைப்பதில்லை.

மறுபுறம் கடவுள் பெயரால் நிகழும் அவலங்கள்.

இவ்விரண்டையும் விட்டு விட்டுப் பார்த்தால்,

குழந்தைகளுக்கு மாத்திரமே உரிய அறியாமையின் வெளிப்பாடாய் விரிவு கொள்கிறது இந்தக் கேள்வி.

குழந்தைமை பற்றி ஒரு சிறு கதை. எழுதியவர் பெயர் நினைவில் இல்லை.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முந்தியது.

அதில் ஒரு குழந்தை வரும்.
நட்சத்திரங்களைப் பற்றி அப்பாவிடம் கேள்வி கேட்கும்.
அதற்கு அப்பா ஒவ்வொரு குழந்தையும் உண்மை பேசும் பொழுது
கடவுள் புன்னகைப்பார். அதன் விளைவுதான் நட்சத்திரம் என்று விளக்கம்
கொடுப்பார்.
அடுத்த நாள் அந்த குழந்தை தனியாக நின்று வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். சிறிது நேரம் கழித்து அழுது கொண்டே
வீட்டினுள் நுழையும். விசாரிக்கும் பொழுது நட்சத்திரம் ஒன்று உதிர்ந்து விழுவதை பார்த்ததாகச் சொல்லும். அப்படியென்றால் ஏதோ ஒரு குழந்தை
பொய் சொல்லிவிட்டது என்று தானே அர்த்தம். பார்த்துக் கொண்டிருந்த
எனக்கே மனசு தாங்கவில்லை. கடவுளுக்கு எப்படி வலிக்கும் என்று யோசித்துப்பார்த்தேன். பாவம் கடவுள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும் என்று சொல்லும்.

கடவுளின் மனசு புண்படும் என்று அழ முடிவதெல்லாம் குழந்தைமையினால்தான். உங்கள் இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் என்றோ படித்த
அந்தக் கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.

பழைய சிறந்த கதைகளை மீண்டும் நினைவு கூர்தலுக்கு உட்படுத்தும் உங்கள் கட்டுரைகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

தொடரட்டும் உங்கள் பணி..

(பின் குறிப்பு: பிள்ளையார் சிலையைத் திருடித்தான் வைக்க வேண்டும் என்பது ஒரு ஐதீகம். காலங்காலமாக நம் சமூகத்தில் இது நடந்து வருகிறது.)

பாரதி
27-05-2005, 05:07 PM
அன்பு ராம்பால்,

கருத்துக்கு மிக்க நன்றி. அத்துடன் உங்கள் நினைவில் தங்கிய சிறு கதைகளையும் எங்களுடன் பரிமாறிக்கொள்வது மிகவும் மகிழ்வைத்தருகிறது. குழந்தைகளின் மனநிலையை அற்புதமாக படம் பிடிக்கிறது நீங்கள் கூறிய அச்சிறுகதை. படிக்கும் போது கதாபாத்திரத்தின் நிலையில் இருந்து நோக்கினால் அக்கதையின் வலி நன்றாகப் புலப்படும்.

கடவுள் பெயரால் நடைபெறும் அவலங்கள் - முற்றிலும் உண்மை. நேரிலேயே பல சம்பவங்களைப்பார்த்தவன் நான். என்றாவது வாய்ப்பு வருமெனில் சொல்வேன்.

பிள்ளையார் சிலையைத் திருடித்தான் வைக்க வேண்டும் என்று காலம்காலமாக இருந்து வரும் நம்பிக்கை - இது திருட்டை ஊக்குவிக்க பயன்படும் வகையில் அல்லவா இருக்கிறது? ஒரு வேளை இந்த நம்பிக்கை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் கூட சிற்பிகளால் படைக்கப்பட்டவர்கள்தானே என்பதை ஏன் எல்லோரும் மறந்து விடுகிறோம் என்பது தெரியவில்லை. ஊருக்கு ஊர் பிள்ளையார்கள் நிறைந்திருக்கும் இந்தியாவில் இன்னும் இந்த நம்பிக்கை இன்னும் நீர்த்துப்போகாமல் இருப்பது ஆச்சரியம்தான்.

M.Jagadeesan
10-04-2011, 01:11 PM
பாவம்! பிள்ளையாராகப் பிறந்தால் நிறைய துன்பத்தை அனுபவிக்கவேண்டும் போல இருக்கிறது.சிலர் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள்.விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் ஏரியிலோ,குளத்திலோ எறிந்துவிடுகிறார்கள்.பகுத்தறிவுவாதிகள் பிள்ளையார் சிலைகளை நடுத்தெருவில் போட்டு உடைக்கிறார்கள்.

பாரதி
10-04-2011, 07:30 PM
ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பிள்ளையாரை நீங்கள் தேடிக்கொணர்ந்தது வியப்பை அளிக்கிறது ஐயா! பின்னூட்டத்திற்கு நன்றி.