PDA

View Full Version : முதல் புத்தகம்



பாரதி
23-05-2005, 12:36 AM
தேதி இல்லா குறிப்புகள்
முதல் புத்தகம்

இது வந்து பள்ளிக்கூடத்துல படிச்ச மொத வகுப்பு தமிழு புத்தகம்னு நினச்சீங்கன்னா .. அது தப்பு. என் இஷ்டத்துக்கு நானா தனியா போயி கடைல வாங்குன புத்தகம் பத்தித்தான் சொல்ல நெனச்சேன்.

சின்ன புள்ளையா இருக்குறப்போ அம்புலி மாமா, இரும்புக்கை மாயாவி மாதிரி புத்தகங்கள்ல வர்ற படத்த பாக்குறதும், எழுத்தக்கூட்டி படிக்கிறதும் எனக்கு ரொம்ப புடிக்கும். யார் வீட்டுக்கும் நான் போறதில்லங்கறதால எப்பயாவது அக்காங்க கொண்டு வர்ற புஸ்தகங்கள திருப்பி திருப்பி வாசிச்சுகிட்டே இருப்பேன். அந்த புஸ்தகங்கள்ல வர்றதெல்லாம் நெசம்னு நம்பிகிட்டு இருந்த நேரமும் உண்டுதான்.

ம்ம்... ஒரு ஏழாவது எட்டாவது படிச்சுகிட்டு இருந்திருப்பேன்னு நெனக்கிறேன். விருந்தாளிக வந்தா கொடுத்துட்டுப்போற நயாபைசாக்களை எல்லாம் சேர்த்து வச்சுகிட்டிருந்தேன். தேனியில "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் " புத்தக கண்காட்சி போட்டுருக்குன்னு போஸ்டர்ல பார்த்தன, எப்படியாவது அங்க போகணும்னு ஆசை. ஏன்னு கேக்குறீங்களா...? அப்பல்லாம் நோட்டு, புத்தகத்துக்கு எல்லாம் காக்கி அட்டை போடறதெல்லாம் இன்ஸ்பெக்சன் அப்ப மாத்திரம்தான். மத்த நேரத்துல எந்த அட்டை வேணும்னாலும் போட்டுக்கலாம். அப்ப பழய சோவியத் யூனியன் புத்தகங்களை எல்லாம் வெலைக்கி விப்பாங்க...! 20, 25 காசுன்னு. ஒரு புத்தகம் வாங்குனா நெறய நோட்டுக்கு அட்டை போடலாமே..! அதும்மில்லாம அந்த புத்தகங்களோட பேப்பரு...! கலர் கலர் போட்டோக்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லாருக்கும். ஒலிம்பிக் வெளாட்டுல வெளாடுனவங்க படம், ராக்கெட் படம், பூக்களோட படம் இப்படி.. எல்லாமே பார்த்து பிரமிச்சு போயிருக்கேன். அந்த புத்தகம் இங்கிலீஷ், தமிழ் ரெண்டுலயும் வரும். இங்கிலீஷ் புத்தகத்துல பக்கமெல்லாம் நெறய இருக்கும். தமிழ் புத்தகத்துல பக்கமெல்லாம் கொஞ்சம் கம்மி. படங்களும் கம்மியாத்தான் இருக்கும்.

அதனால பழய புத்தகங்களை வாங்குறத விட நாமளே புதுப்புத்தகத்த வாங்குனா படிக்கிறதுக்கும் வசதி. அப்புறம் அட்டையும் போட்டுறலாம்னு அய்யாவோட திட்டம். அதோட சேர்த்து சோவியத் யூனியன் காலண்டரும் கிடைக்கும்னு பழைய புத்தகத்துல படிச்ச நெனவு வேற.

அப்படி நான் சேர்த்து வச்ச காசோட, வீட்டுலேருந்து [ அழுது ] வாங்குன காசையும் சேர்த்துகிட்டு மொத தடவையா புத்தகம் வாங்க தனியா தேனிக்கு நடந்தேன்.

தேனி பஸ்ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளி, கெழக்க புதுசா ஒரு கீத்துக்கொட்டாய் போட்டு வெளில ஒரு பேனர் கட்டியிருந்தாங்க. எல்லாப் புத்தகத்தையும் வரிசையா அடுக்கி வச்சிருந்தாங்க. இப்ப நெறய கடக்கி போயிருந்தாலும் அப்போதைக்கு அது எனக்கு ரொம்ப பெரிய புத்தக கண்காட்சியா தோணிச்சு. நல்ல வேளையா புத்தகத்த எல்லாம் நான் பார்க்கக்கூடிய அளவு உசரத்துலதான் வச்சிருந்தாங்க.

ஒவ்வொரு புத்தகமாக பாக்க பாக்க ரொம்ப ரொம்ப ஆசயா இருந்துச்சு. அங்கெல்லாம் இருந்த கட்டிடங்க, சுத்துப்பயணம் போற இடங்க, அறிவியல் சம்பந்தமான கதைக, சின்ன குழந்தைக்களுக்கான புத்தகம்.. இப்படி... எல்லாத்தையும் அப்பிடியே வீட்டுக்கு அள்ளிகிட்டு போகணும்னு தோணிச்சு. பைல இருந்த காச எண்ணிப்பார்த்தேன். பத்து ரூபாய் அளவுக்குத்தான் இருந்துச்சு. ஹம்.

மூணு வருசத்துக்கு சந்தா கட்டுனாத்தான் சோவியத் யூனியன் புத்தகத்தோட காலண்டர் தருவாங்கன்னு சொன்னாங்க. மூணு வருசத்துக்கும் சேர்த்து சந்தா எத்தன ரூபான்னு இப்ப மறந்து போச்சு. ஆனா என்கிட்ட இருந்த ரூபா நிச்சயமா பத்தாது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அழுகையா வருது.

நிச்சயம் வேற ஏதாவது புத்தகம் வாங்கிட்டுத்தான் போகணுங்கிற வெறி வந்துச்சு. இருந்த பத்து ரூபாய்க்கும் ஏதாவது வாங்கிறணும்னு நானும் அந்த கடைய சுத்தி சுத்தி வந்தேன். கடேசில ரெண்டு புஸ்தகம் வாங்குனேன்.

ஒரு புத்தகத்தோட பேரு " மறைந்த தந்தி". இன்னொரு புத்தகத்தோட பேரு " உலகை குலுக்கிய பத்து நாட்கள்".

மறைந்த தந்தி புத்தகத்தோட அட்டை ரொம்ப கெட்டி. புத்தகத்தோட அளவும் பெரிசா இருக்கும். இப்ப எங்க்ரேவ்ட்-னு சொல்றாங்க பாருங்க அது மாதிரி - அந்த அட்டையில படமும் எழுத்துக்களும் இருக்கும். புத்தகம் பூரா படமா நெறம்பி இருக்கும். படத்த எல்லாம் நல்லா வரஞ்சிருப்பாங்க. பேப்பரும் சும்மா வழுவழுன்னு இருக்கும். படம் பார்த்துகிட்டே படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். புத்தகத்தோட வெல 3ரூபா 75 காசு.

அந்த ரெண்டாவது புத்தகம் " உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" - எழுதுனவரு பேரு ஜான் ரீட். வெல 5ரூபா 50 காசு. அந்தப்புத்தகம் வாங்குனதுக்கு காரணம் அந்தப் புத்தகத்தோட அட்டை... சிகப்பு வெல்வெட் துணியில தச்சிருந்தாங்க. அந்த அட்டைக்கே அந்த காசு பெறுமே..! அப்புறம் புத்தகத்தோட பக்கம்.. ஆயிரம் பக்கத்துக்கும் மேலே.. எடைக்குப் போட்டாலும் நல்ல வெலைக்குப் போகுமே..!!

புத்தகத்த வாங்கிட்டு வீட்டுக்கு நான் நடந்து வரும்போது பாக்கணுமே.. அவ்ளோ ஒரு சந்தோசம், அப்படி ஒரு கெத்து எனக்கு. அப்பப்ப பைல இருந்து எடுத்து எடுத்து பாத்துட்டே வந்தேன். வீட்டுலயும் ஒருத்தரயும் தொட விடலயே.

இதுல முதலாவதா சொன்னேன் பாருங்க "மறைந்த தந்தி" - அத எழுதுனவரு பேரு மறந்து போச்சு. ஆனா கத அப்படியே நெனவு இருக்கு. மாஸ்கோவுல ஒரு வீட்டுல ரெண்டு குட்டிப்பசங்க இருப்பாங்க. அவங்க எப்போவும் அவங்களுக்குள்ள சண்ட போட்டுக்குவாங்க. ஒரு நா அவங்க அம்மா அவங்ககிட்ட அவங்க அப்பா அவரு வேல பாக்குர பனிப்பிரதேசத்துக்கு வரச்சொல்லி இருக்காருன்னு சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்துட்டு இருப்பாங்க. அவங்க பிரயாணத்துக்கு மொத நாளு ஒரு தந்தி வரும். அந்த நேரம் வீட்டுல அம்மா இருக்க மாட்டாங்க. வழக்கம் போல சண்ட போடுற ரெண்டு பசங்களும் எதிர்பாராத விதமா அந்த தந்திய பனியில தொலச்சிருவாங்க. எங்கே அம்மா அடிப்பாங்களோங்கிற பயத்துல ரெண்டு பேரும் ராசியாகி அம்மாட்ட சொல்லக்கூடாதுன்னு முடிவுக்கு வந்திருவாங்க. வீட்டுக்கு வந்த அம்மாவுக்கோ இவங்க கம்னு இருக்குறத பாத்து கொஞ்சம் சந்தேகம்தான். ஆனா ஒண்ணும் கண்டு பிடிக்க முடியல.

அடுத்த நாளு ரெயில்ல அவங்க எல்லாம் போவாங்க. போற வழில அவங்க பாக்குற இடம், ஆளுங்க, கனவு - எல்லாம் அழகான படமா அங்கங்க இருக்கும். ஸ்டெப்பி புல்வெளி, பைன் மரங்கள், பனி மலைகள் இப்படி வழியெல்லாம் பாத்துட்டே போவாங்க. அவங்க போய் சேர வேண்டிய ஸ்டேசனுக்குப் போய் சேந்தவங்களுக்கு ஒரே அதிர்ச்சி! அவங்கள கூட்டிட்டுப்போக யாருமே வரல. அவங்களுக்கு என்ன பண்றதுண்ணே தெரியாது. ஒரு வழியா நாய்கள் இழுக்குமே - 'ஸ்லெட்ஜ்' வண்டிய வாடகைக்கு வச்சுகிட்டு, ரொம்ப நேரத்துக்கு அப்புறமா அவங்க போயி சேர வேண்டிய அந்த தூரதேச இடத்துக்கு போய் சேருறாங்க. அங்கேயும் ஆச்சரியம் அவங்களுக்கு காத்துகிட்டிருக்கு. அங்கேயும் யாரும் இல்ல. பக்கதுல வீடுகளும் கெடயாது. ஆளுங்களும் கெடயாது!

கூப்பிட்டு வந்த வண்டிக்காரன அவங்களுக்கு பிடிக்கவே இல்ல. ஆனாலும் அவனோட ஒதவில்லாம அங்க காலத்த தள்ள முடியாது. எக்கச்சக்கமா பனி மூடிட்டு இருக்குற பிரதேசம் அது. தண்ணி எடுத்துட்டு வர, ரொட்டிகளை ரெடி பண்ண - இப்படி அவன் ஒதவி பண்ணுனாலும் அவன் எப்போவும் கடுகடுன்னே இருப்பான். ரெண்டு மூணு நாளைக்கப்புறம் அந்த வண்டிக்காரன் காணாம போயிடுவான். அவங்க அம்மா படாதபாடு பட்டு அவங்களுக்கு சாப்பாடு பண்ணுவாங்க. அந்த நேரத்துல அந்த பசங்க படுற பாடு, பயம் எல்லாம் படத்துல அப்படியே தத்ரூபமா வரஞ்சிருப்பாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அந்த வண்டிக்காரன் திரும்பி வருவான். அவங்ககிட்டே சொல்லாமலே, ரொம்ப தூரத்தில இருக்குற அவங்க அப்பாகிட்ட ஸ்கீயிங் மூலமா தனியா போயி பேசிட்டு வந்திருக்காங்கிற விசயம் தெரிய வரும். வந்தவன் அவங்க அப்பா கிருஸ்துமஸக்கு முந்துன தினம் அங்கே வருவார்ங்கிற நல்ல சேதிய சொல்லுவான்.

சொன்ன மாதிரியே கொஞ்ச நாள்ள அவங்க அப்பா கூட்டத்தோட வந்திருவார். வந்ததுக்கு அப்புறந்தான் தெரியும் - இன்ன மாதிரி தொழில் விசயமா, அவசரமா வேற இடத்துக்குப் போறேன்; இப்போதைக்கு ஊருக்கு கெளம்ப வேணாம்; நான் மறுபடி தந்தி அனுப்புனதுக்கப்புறமா வந்தா போதும்..ன்னு தந்தி கொடுத்திருந்தாருன்னு. அவர் அனுப்புன அந்த தந்தியத்தான் அந்த குட்டிப்பசங்க காணாம போட்டது! ரொம்ப தூரத்தில் இருக்கும் மாதா கோவில் மணியோசைய கேட்டுகிட்டு, அக்கார்டியன் வாசிச்சுகிட்டு எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க அப்டீங்கறதோட கத முடியும்.

அந்த ரெண்டாவது புத்தகம் "உலகை குலுக்கிய பத்து நாட்கள்" - அந்த புத்தகத்தை நான் கொஞ்ச வருசத்துக்கு அப்புறம்தான் படிச்சேன்! படிச்சு முடிக்க கொஞ்ச மாசம் ஆச்சு..! அந்தப்புத்தகம் வந்தது சோவியத்திலிருந்துன்னாலும் எழுதுனவரு ஒரு அமெரிக்கரான ஜான்ரீட் அப்டீங்கிறதுதான் ஆச்சரியம். சோவியத்தில் மக்களாட்சி வர்றதுக்கு முன்னாடி என்ன என்ன நடந்திச்சு அப்டீங்கிறத கூடவே இருந்து பாத்து அவரு எழுதிய உண்மை சம்பவங்கள விவரிக்கிற புத்தகம்தான் அது. கசாக்குகள், போல்ஷ்விக்குகள்... அப்டீன்னு எல்லா குரூப்போட பேரும் வித்தியாசமா இருக்கும்; லெனின் பேசின பேச்சுக்கள், கூட்டங்கள், அங்க அப்பப்ப நடந்த சண்ட பத்தியெல்லாம் ரொம்ப வெலாவாரியா இருக்கும். முக்கியமான படங்களும் நெறய இருந்திச்சு. படிச்சதுக்கு அப்புறமா, நான் வாங்குன புத்தகம் அவ்வளவொன்னும் மோசமில்லன்னு நெனச்சுகிட்டேன்.

இப்ப நெனச்சா நெனச்ச புத்தகத்த வாங்க முடியுதுன்னாலும் மொதல்ல வாங்குன அந்த புத்தகங்களுக்கு ஈடு இருக்க முடியாது! ரொம்ப ரொம்ப பத்திரமா வச்சிருந்த அந்த புத்தகங்களை, ஏழு, எட்டு வருசத்துக்கு முன்னாடி படிச்சுட்டுத்தரேன்னு சொந்தக்காரங்க சொன்னத தட்ட முடியாம எடுத்துக் கொடுத்தேன். இன்னிக்கு வரைக்கும் என் கைக்கு திரும்பி வரலே. இனிமே வரும்னு நம்பிக்கையும் இல்ல. அதனால என்ன.. எப்பவும்தான் என் நெனைவுல இருக்குமே..!



-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:


1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்

gragavan
24-05-2005, 05:18 AM
அடடே! நம்ம பாரதியின் படைப்பு.

பாரதி, உண்மையிலேயே நான் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பின்னால் போய் விட்டேன். புத்தகம் படிக்கும் ஆர்வலர்கள் எல்லாமே சிறுவயதில் ஒரே மாதிரியாகத்தான் நடந்திருப்பார்கள் போல. புத்தகங்கள் மாறலாம். ஆனால் நீங்கள் செய்தவைகளை நானும் செய்திருக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

படைப்பில் அடைப்பு ஏற்படாமல்...............
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=102271#post102271

பரஞ்சோதி
24-05-2005, 05:24 AM
அண்ணா உங்கள் சிறுவயது அனுபவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன்.

நான் எழுத்துக் கூட்டி மூன்றாவது படிக்கும் போது படித்த 1500 பக்கங்களுக்கும் அதிகமான கந்தபுராணம் மறக்க முடியாதது.

மன்மதன்
24-05-2005, 06:15 AM
அடடே! நம்ம பாரதியின் படைப்பு.

பாரதி, உண்மையிலேயே நான் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பின்னால் போய் விட்டேன். புத்தகம் படிக்கும் ஆர்வலர்கள் எல்லாமே சிறுவயதில் ஒரே மாதிரியாகத்தான் நடந்திருப்பார்கள் போல. புத்தகங்கள் மாறலாம். ஆனால் நீங்கள் செய்தவைகளை நானும் செய்திருக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

எல்லோருக்கும் பொருந்தும் வரிகள்.. அட எனக்கும்தான்...
இப்பொழுதெல்லாம் படிக்க நேரம் கிடைக்க மாட்டேங்குது. டிவில எல்லா நேரமும் கழிந்து விடுகிற மாதிரி தோணுது..
அன்புடன்
மன்மதன்

majara
24-05-2005, 06:22 AM
பாரதி யரோ என்று நினைத்தேன்...

பாரதியாரே என்று கலக்கிவிட்டீர்கள்

majara
24-05-2005, 08:10 AM
ஒரு முழு திரைப் படம் பார்த்து
பின் அதனுடன் வரும் அடுத்த திரைப் படத்தின் விளம்பரத்தையும் .. பொதுவாக "சிடி" யில் போடுவார்கள்

அது போல்
முதல் கதை முழுப் படமாகவும்
இரன்டாவது கதை விளம்பரமாகவும்
இருந்தது.

வாசி ( ரசி ) த்தேன்

நன்றி

பாரதி
24-05-2005, 05:06 PM
நன்றி இராகவன், பரஞ்சோதி, மன்மதன், மஜாரா.

pradeepkt
25-05-2005, 04:11 AM
அருமை பாரதி.
நானும் சின்ன வயசில எங்க சித்தியோட போயி ரஷ்யப் புத்தகம் ஒண்ணுதான் வாங்கினேன். அப்பல்லாம் மதுரைத் தமுக்கம் திடல்லயும் காந்தி மியூசியத்திலயும் இந்த மாதிரி புத்தகக் கண்காட்சி போடுவாக. சின்னப் புள்ளைக புத்தகம் எல்லாம் சல்லிசாக் கெடைக்கும்.
நான் அப்ப வாங்கின புத்தகம் பேரு "கஃபூர் குல்யாம் சிறுவன்". வீட்டுல சண்டை போட்டுகிட்டு ஓடிப் போற ஒரு பையன் படுற அத்தனை பாட்டையும் நகைச்சுவையாச் சொல்லியிருப்பாக. அத்தோட அங்க இருந்த இசுலாமியப் பழமைவாதிகளையும் ஒரு இடி இடிச்சிருப்பாக. கம்யூனிசத்தால் நல்லதாவும் கெட்டதாவும் பாதிக்கப்பட்ட நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை அப்படியே உரிச்சிக் காட்டியிருக்கும் புத்தகம். அது வரைக்கும் ரஷ்யான்னா தங்கமும் வைரமும் கொட்டிக் கெடக்கும்னு நெனைச்சிருந்த எனக்கு ஒட்டகக் கறிக்குழம்பும், சோளத்தட்டை சூப்பும் ரொம்பப் புதுசா இருந்திச்சு. காலப்போக்கில அந்தப் புத்தகம் என்ன ஆச்சுன்னே எனக்குத் தெரியலை. இப்பக் கெடைச்சாலும் அதைப் படிச்சிட்டுத்தான் ஓய்வேன்.

பாரதி
25-05-2005, 05:48 PM
அருமையாக உங்கள் நினைவலைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி பிரதீப்.

அறிஞர்
26-05-2005, 12:04 PM
பாரதி, பிரதீப்பின் நினைவலைகள்.... உள்ளத்தை கொள்ளை கொண்டன.....

இருவருக்கும் நன்றி....

பாரதி
27-05-2005, 05:43 PM
நன்றி அறிஞரே... இனி தேதியில்லாத குறிப்புகள் இலக்கியம், புத்தகங்கள் பகுதியில் தொடரும்.

kavitha
04-07-2005, 10:01 AM
எனது மழலை நினைவுகளையும் கிளறிவிட்டது பாரதி! தனியாகச் சென்று புத்தகம் வாங்குவதெல்லாம் இப்போது தான்; முன்பெல்லாம் சிறுவர் மலரும், அம்புலி மாமா, பூந்தளிர் தான் கிடைக்கும். நாவல்கள் என்று எதுவும் படித்ததில்லை. கேட்டாலும் உதை விழும். ஏதோ பாடப்புத்தகங்கள் மட்டும் தான் புத்தகம் என்றும், மற்றவை எல்லாம் நேரத்தை வீணடிப்பவை என்றும் அர்ச்சனை கிடைக்கும்.
தமிழில் இரண்டாம் தாளுக்காக ஒரு இணைப்புத்தருவார்களே அது தான் என் முதல் கதைப்புத்தகம். நானாக வாங்க ஆரம்பித்தது என்பதை விட மறக்கமுடியாத முதல் புத்தக பரிசு எனது தோழன் அளித்தது. "சிக்ஸ் டேல்ஸ் பை ஷேக்ஸ்பியர்". அப்புறம் சித்தி, சித்தப்பா என்று பஞ்ச தந்திர கதைகள், ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள், புராணங்கள், பைபிள் என்று படித்த புத்தகங்களை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

பாரதி
04-07-2005, 02:58 PM
புத்தக வாசிப்பு மிகவும் குறைந்தவிட்ட நிலையில் நினைவுகளை மீட்டெடுத்து படித்த புத்தகங்களை நினைவு கூறுதல் மகிழ்வைத் தருகிறது. அதிகம் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் நேரமும் சூழலும் பெரும்பாலான நேரங்களில் ஒத்துழைப்பதில்லை. இப்போதெல்லாம் படிப்பு என்பது இணையத்துடன் முடிந்து விடுகிறது. கைபேசியிலேயே புத்தகங்கள் வாசிக்கும் அளவு விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.. ! எதிர்காலத்தில் இன்னும் என்ன மாற்றம் வருமோ.?

அன்புரசிகன்
09-01-2008, 08:58 AM
சின்ன புள்ளையா இருக்குறப்போ அம்புலி மாமா, இரும்புக்கை மாயாவி மாதிரி புத்தகங்கள்ல வர்ற படத்த பாக்குறதும், எழுத்தக்கூட்டி படிக்கிறதும் எனக்கு ரொம்ப புடிக்கும். யார் வீட்டுக்கும் நான் போறதில்லங்கறதால எப்பயாவது அக்காங்க கொண்டு வர்ற புஸ்தகங்கள திருப்பி திருப்பி வாசிச்சுகிட்டே இருப்பேன். அந்த புஸ்தகங்கள்ல வர்றதெல்லாம் நெசம்னு நம்பிகிட்டு இருந்த நேரமும் உண்டுதான்.

அப்பல்லாம் நோட்டு, புத்தகத்துக்கு எல்லாம் காக்கி அட்டை போடறதெல்லாம் இன்ஸ்பெக்சன் அப்ப மாத்திரம்தான். மத்த நேரத்துல எந்த அட்டை வேணும்னாலும் போட்டுக்கலாம். அப்ப பழய சோவியத் யூனியன் புத்தகங்களை எல்லாம் வெலைக்கி விப்பாங்க...! 20, 25 காசுன்னு. ஒரு புத்தகம் வாங்குனா நெறய நோட்டுக்கு அட்டை போடலாமே..! அதும்மில்லாம அந்த புத்தகங்களோட பேப்பரு...! கலர் கலர் போட்டோக்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லாருக்கும். ஒலிம்பிக் வெளாட்டுல வெளாடுனவங்க படம், ராக்கெட் படம், பூக்களோட படம் இப்படி.. எல்லாமே பார்த்து பிரமிச்சு போயிருக்கேன். அந்த புத்தகம் இங்கிலீஷ், தமிழ் ரெண்டுலயும் வரும். இங்கிலீஷ் புத்தகத்துல பக்கமெல்லாம் நெறய இருக்கும். தமிழ் புத்தகத்துல பக்கமெல்லாம் கொஞ்சம் கம்மி. படங்களும் கம்மியாத்தான் இருக்கும்.



உண்மை தான். முன்பெல்லாம் ஒரு கதையை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். ராணிக்கமிக்ஸ் அம்புலிமாமா கோகுலம் கழகக்கதைகோவை ஆலந்துர் மோகனரங்கனின் கதைகள் போன்றவை.... தேடிப்பிடித்து படித்தகாலமும் உண்டு. எனது தந்தையார் உள்ளூராட்சி திணைக்களத்தில் பணிபுரிந்ததால் அவர்களது பொது நூலகத்தின் பழைய புத்தகங்களை மூட்டை கட்டி வேறு ஒரு இடத்திற்கு இடம் மாற்றுவார்கள். (அதாவது மிக மிக பழைய புத்தகங்கள்.) அவற்றை இடைநடுவில் அந்த நூலக அலுவலருடன் சேர்ந்து அபேஸ் பண்ணிவிடுவேன்.

புத்தகங்களுக்கு உறைபோடுவதற்கென்றால் எனது முதல் தெரிவு SPORTS STAR தான். அதுவும் விளையாட்டுவீரர்களை முன்பக்கத்திற்கு வரவைக்கும் பணி இருக்கிறதே... ரொம்ப கஷ்டப்படுவேன். அதிலும் நடுப்பக்கத்தில் வரும் பெரிய பக்கத்திற்கு வீட்டில் அண்ணன் மார்களுடன் போட்டி. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவருக்கென ஒதுக்கப்படும். :p அடுத்த தெரிவு INDIA TODAY தான். :D

பழைய நினைவுகள் வந்து சென்றன. வாசிக்கும் போதே ஒருவித அசாதாரண உணர்வு மனதில். ஊருக்கு மீண்டும் செல்வவைக்கிறீர்கள் அண்ணா. ஆனால் நாட்டில் தான் பிரச்சனை. சரியாக போய்வரமுடியாது உள்ளது.
மிக்க நன்றி.

ஒரே ஒரு சந்தேகம் மீண்டும். கெத்து என்றால் என்ன???

rocky
09-01-2008, 02:11 PM
அன்புள்ள பாரதி அண்னனுக்கு,

உங்களின் முதல் புத்தகம் படித்தவுடன் எனக்கும் என் முதல் புத்தகம் எதுவென்ற சிந்தனை வந்தது. சரி புத்தகம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போடும் போது கூட நான் என்னுடைய முதல் புத்தகத்தையும் என்னை முதலில் படிக்க வைத்த மனிதரையும் குறிப்பிட மறந்துவிட்டேன், ஆனால் இந்த பகிர்தலை என்னுடைய திரியில் போடுவதைக்காட்டிலும் இந்தத் திரியில் பதிப்பதில் மிகவும்
மகிழ்கிறேன்.

நானும் சிறுவயதில் அனைவரையும் போல் மாயாவியும், சிறுவர்மலரையும் படித்திருக்கிரேன், ( சிறுவர்மலருக்காக மட்டுமே எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை செய்தித்தாள் வாங்குவார்கள் ). பிறகு என்னுடைய பத்தாம் வகுப்பு ஆசிரியரின் வீட்டிலிருந்து முதன் முதலாக ஓஸோ வினுடைய புத்தகத்தை எடுத்து வந்தேன், கொண்டு வந்த அடுத்த நாளே முதல் வேளையாய் அந்த புத்தகத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன் ஒன்றுமே புரியாததால். (பின்னே எடுத்தவுடனே சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டா இப்படித்தான் டக் அவுட்டாகனும்). அதன்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் புத்தகத்தின் பக்கமே செல்லவில்லை. நான் டெக்ஸ்டைல் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறேன் எனது முதலாளிக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது, ஒரு நாள் அவரிடமிருந்து ஏதாவது புத்தகம் வாங்கி படிக்கலாம் என்று தோன்றியது கேட்டவுடன் ஒரு புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தார் அது "சிந்து முதல் கங்கை வரை" என்ற புத்தகம். மிகவும் நன்றாக இருந்தது முதன் முதலில் படித்ததே வரலாற்று புத்தகமானதால் தொடர்ந்து அந்த வகைப் புத்தகங்களையே படித்துக்கொண்டிருந்தேன், பிறகு ஒருமுறை அவரிடமிருந்தே :சேக்குவேரா" வினுடைய வாழ்க்கை வரலாறு என்ற புத்தகம் கிடைத்தது, படித்து பரமித்துப்போனேன், மிகவும் நல்ல புத்தகம்,
ஆனால் அதிலிருந்த பெயர்கள் மட்டும் நினைவில் நிற்பதாக இல்லை. மிகவும் அரிய புகைப்படங்களுடன் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்தது, நானும் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே மாறும் அளவுக்கு. (இப்போது நான் மன்றத் தோழர்களே என்று போடுவதற்க்கான காரணம் உங்களுக்கு புரிந்திருக்கும்). ஆனால் என் முதலாளியிடமிருந்து எனக்கு தொடர்ந்து புத்தகங்கள் கிடைக்கவில்லை. அதற்கு காரணமுண்டு நான் படித்த புத்தகங்கள் பற்றிய பேச்சு அலுவலகத்தில் வரும்பொழுது அவர்கள் கூறும் கருத்தை பெரும்பாலும் நான் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்வாதம் செய்வதுதான். நான் படித்த போது எனக்குத் தோன்றிய கருத்தை கூறமுயல்வேன் ஆனால் அலுவலகத்தில் அது அதிகப்பிரசங்கித்தனமாகக் கருதப்படும். பிறகு நான் எத்தனைமுறை கேட்டாலும் அவரிடமிருந்து எனக்குப் புத்தகங்கள் கிடைக்கவில்லை.

அதன்பிறகு நானாக வாங்க ஆரம்பித்தேன், வழக்கமாக படிக்கும் வரலாற்றுப் புத்தகங்களையே தொடர்ந்து படித்துவந்தேன், ஒருமுறை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஜெயகாந்தன் அவர்கள் விருதுபெற்றதர்க்காக பாராட்டிப் பேசினார் அவருக்கு விருது எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது இது மிகவும் தாமதம் இருந்தாலும் அவருக்கு இந்த விருது கிடைத்ததில் அவரைவிட அவருடைய ரசிகராய் நான் மிகவும் மகிழ்கிறேன், என்று கூறினார். நான் தமிழ் சினிமாவில் மதிக்கும் கலைஞர்களில் கமல் முதலாமவர். அவருடைய பேச்சினாலேயே ஜெயகாந்தன் அவர்களுடைய புத்தகங்களைத் தேடிப் படித்தேன். இதுவரை அவரின் நான்கு நாவல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்பையும் படித்திருக்கிறேன், பிறகுதான் கமல் அவர்கள் பாராட்டியது குறைவோ என்று தோன்றியது. அதன்பின் பாலகுமாரன் அவர்களின் சில நாவல்களும் படித்தேன், ஆனால் நினைவில் நின்றது சிலவே முக்கியமாக "கல்திரை" நான் மிகவும் ரசித்த ஒரு நாவல், பிறகு மிக மிக முக்கியமான ஒரு புத்தகம் "பொன்னியின் செல்வன்". அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் தான் நான் முதலில் படித்தது பிறகு அவரின் மற்ற புத்தகங்களையும் வாங்கிவிட்டேன். (இப்போதுதான் தெரிகிறது அத்தனையும் நம் மன்றத்திலேயே மின் புத்தகமாக இருப்பது). இப்பொழுது அவருடைய "அலை ஓசை"யின் இரண்டாம் பாகம் படித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக புத்தகங்கள் என் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இப்பொழுது நான் வெட்டியாக செலவலிக்கும் நேரங்கள் மிகக்குறைவு. இன்னும் பல நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். படிப்பேன். நன்றி.

மயூ
09-01-2008, 02:25 PM
நானும் புத்தகஙகளைப் பற்றி ஒரு பதிவிட்டேன்.. ஆனால் உங்கள் பதிவின் அரைவாசி கூட அது இல்லை அருமயான பதிவு அண்ணா!

உங்கள் தேதியில்லாக் குறிப்புகள்ளைப் பார்த்து நானும் எழுதத் தொடங்கினேன் என்பதை இங்கே குறிப்பிட்டாகவே வேண்டும்!

பாரதி
09-01-2008, 03:41 PM
நன்றி அன்பு.. கெத்து என்பது சில நேரங்களில் பெருமை அல்லது கர்வம் என்ற பொருளைத் தரக்கூடிய வட்டார வழக்கு.

அன்பு ராக்கி,
அருமையான புத்தகங்களைத்தான் நீங்கள் படித்திருக்கிறீர்கள். அந்தப்புத்தகங்களை நானும் படித்திருக்கிறேன் - ஆனால் பல வருடங்களுக்கு முன்பு. சேகுவேரா பற்றிய பல புத்தகங்களும் நன்றாகத்தான் இருக்கும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மட்டும் எப்போதும் கைவிட்டு விடாதீர்கள். அருமையான மீண்டுமொரு நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.


அன்பு மயூ,
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒரு விதத்தில் சிறப்புடையனவையே.. நீங்கள் எழுதிய கதையும் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மயூ..