PDA

View Full Version : லட்சுமி



பாரதி
20-05-2005, 11:27 PM
தேதி இல்லா குறிப்புகள்
லட்சுமி
அன்பு செலுத்துவது மிக மிக எளிதான செயல். ஆனால் அதை தொலைத்து விட்டாலோ அல்லது திரும்ப கிடைக்காமல் போகும் போதோ மனம் ரொம்பவே கஷ்டப்படும். நான் அன்பு வைத்திருந்த சில உயிர்களைப் பற்றி...


எங்கள் வீட்டின் முன்பகுதியில் வாசற்படிக்கு இரண்டு புறமும் பெரிய திண்ணைகள் இருக்கும். தெற்குபக்கம் தலையணை போல வழு வழுவென்று சற்று உயர்ந்த பகுதி இருக்கும். அதன் மேலே ஏறி நின்று பார்த்தால் ( நான் சிறுவனாக இருந்த போது ) மாட்டுத்தொழுவம் தெரியும். மாட்டுத்தொழுவம்... அதற்கே உரிய ஒரு மணம் இருக்கும்தான். ஆரம்பத்தில் அத்தொழுவத்தில் பல மாடுகள் இருந்தனவாம்.மாட்டைக்கட்ட வசதியாக கற்களில் துளையும், மாடுகளுக்கு தேவையான தீவனம் போட கற்களால் கட்டப்பட்ட சிறு சுவரும், தண்ணீர் வைக்க சிறுகல் தொட்டியும் அங்கே இருந்தன.

வீட்டில் பசு இருந்தால்தான் 'செல்வம்' என்கிற நம்பிக்கை எல்லா கிராமத்து சம்சாரிகளின் வீடுகளிலும் இருக்கும். எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல.. லட்சுமி ரொம்ப களையாக, மூக்கும் முளியுமாக இருக்கும். எப்போதும் ரொம்ப சாதுவாக இருக்கும். குடும்பத்தில் ஒருவர் போல..

எனக்கு விபரம் தெரிந்த ஆரம்ப நாட்களில், வீட்டிற்கு ஒரு ஆள் வந்து பசுவை அழைத்துச்சென்று புல்வெளியில் மேயவிட்டு அழைத்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அது சில வருடங்களில் நின்று விட்டது. சொந்தமாக புல்லை அறுத்தோ, அல்லது விற்பனைக்கு வரும் புல்லோ வீட்டிலேயே தீவனம் வழங்குவது வாடிக்கையாகி விட்டது.

காலையில் வயலுக்கு சென்று பச்சை பசேலென்று இருக்கும் புல்லை அறுத்துக்கொண்டு வருவதை ஆவலுடன் காத்திருந்து பார்க்கும். புற்கட்டை பிரிக்கும் முன்பே புற்கட்டை இழுக்கும். வேக வேகமா சாப்பிடுவதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். புற்கட்டு மட்டுமில்லாமல் தேனிக்கு சென்று கடலை புண்ணாக்கு வாங்கி வந்து நன்றாக ஊற வைத்து கரைத்து வைத்தால் ரொம்ப விரும்பி குடிக்கும். இது தவிர சோளத்தட்டை, மக்காச்சோளத்தட்டை, நெற்கதிரடித்த பின் கிடைக்கும் வைக்கோல் போன்றவையும் சேமித்து வைக்கப்பட்டு, தேவையான போது தீவனமாக மாறும். காலத்திற்கு தகுந்தவாறு சில வேளைகளில் மற்ற இழை தழை கொடிகளும் தரப்படும். சீமைக்கருவேலி மரங்களில் இருக்கும் காய்களும் அவ்வப்போது உணவாக மாறும்.

தினம் லட்சுமி தரும் பாலின் மூலம்தான் காப்பி..! எழுந்திருக்கும் போது பெரிய டம்ளரில் தழும்ப தழும்ப அம்மா தரும் காப்பியை படுக்கையில் இருந்து கொண்டே, பல்லைக்கூட விளக்காமல் [ ? ] கண்ணை திறக்காமல் "சர்"ரென்ற சத்தத்துடன் உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்.

அப்போதெல்லாம் தயிரை வீட்டிலேயே கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். வழக்கமா யாராவது ஒரு அக்கா 'மத்து' மூலம் தயிரைக் கடைவார்கள். நான் பக்கத்திலேயே இருந்து பார்ப்பேன். சுவரோரமாக பானையை வைத்திருப்பார்கள். மத்து கவிழ்ந்து விடாமல் இருக்க ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும். மத்தில் ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி கயிறு மூலம் ஒரே விதமாக கடைவார்கள். இடப்பக்கமாகவும், வலப்பக்கமாகவும் ஒரே அளவில் மாற்றி மாற்றி கடையும் போது தயிரில் இருந்து நுரை நுரையாக வெண்ணெய் திரண்டு வரும். மத்தின் பற்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய் படிய ஆரம்பிக்கும். ஓரளவுக்கு சேர்ந்ததும், மத்தை எடுத்து சேர்ந்த வெண்ணெயை ஒரு கிண்ணத்தில் சேகரிப்பார்கள். அவ்வப்போது நான் அதை அப்படியே 'லபக்' செய்து விடுவேன். தயிர் கடையும் போது ஓரளவுக்கு கடைந்ததும் நிறுத்தி விடுவார்கள். இப்போது நான் கடைகளில் பார்க்கும் தயிர்தான் அப்போதெல்லாம் 'மோர்' என்றழைக்கப்பட்டது..!! அப்போது தயிர் மிகவும் கெட்டியாக இருக்கும். மேலே மெல்லிய மஞ்சள் நிற ஆடையுடன் இருக்கும் அந்த தயிரை பழைய சாதத்துடன் பிசைந்து, வெங்காயத்தை கடித்துக்கொண்டு சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் ஏக்கமாக இருக்கிறது.

சேர்த்து வைத்த தயிர் அவ்வப்போது நெய்யாக மாறும். அப்போதும் நான் சமையலறையில் ஆஜராகி விடுவேன். காய்ச்சியது போதுமா இல்லையா என்பதை கண்டுணர முருங்கை இலை அல்லது கறிவேப்பிலையை அதில் இட்டு எடுத்துப்பார்ப்பார்கள். அப்படி பக்குவம் பார்த்து எடுக்கும் அந்த இலைகளின் சுவை... அடடா.... எப்படி சொல்ல..! மீதமாகும் பால், தயிர் போன்றவற்றை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு விற்று அம்மா 'சிறுவாடு'-ம் சேர்த்து வருவார்கள்.!

மாட்டுப் பொங்கல் வந்து விட்டால் போதும் ... லட்சுமியை நாங்கள் கவனிக்கும் விதமே தனி. கொம்பை எல்லாம் சீவி, பெயிண்ட் மூலம் அலங்கரித்து, நெற்றில் திலகமிட்டு, கழுத்தில் மாலையுடன், மகனுடன் ஊரை முழுக்க சுற்றி காட்டி வருவோம். அதில் எனக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கும். எங்கள் லட்சுமிதான் ஊரிலேயே மிகவும் அழகு என்பது என் அலாதியான நம்பிக்கை.

நான் சிறுவனாக இருந்த போது, பிறந்த சில வாரங்களே ஆகி இருந்த கன்றை தடவிக்கொடுக்க மிகவும் ஆசைப்படுவேன். அதுவும் கழுத்தை தூக்கி நான் வருட மிகவும் ஒத்துழைக்கும். ஒரு முறை நான் கன்று அருகில் சென்று அதன் நெற்றியில் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என்னை யாரோ தூக்குவது போல இருந்தது. யாரென்று பார்த்தால் லட்சுமி தன் கொம்புகளால் என் காற்சட்டையின் மூலம் என்னைத் தூக்கி, சற்றே தலையை ஆட்டி தூக்கி எறிந்தது. நல்லவேளையாக நான் விழுந்த இடம் ... சாணி சேமித்து வைத்திருந்த கூடை.! ஏதோ சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பது போல அங்கே விழுந்து கிடந்ததைப்பார்த்து எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. எனக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை. இருந்தாலும் அதற்குப்பின்னர் லட்சுமிக்கு அருகில் செல்ல கொஞ்சம் பயம்தான்.

'லட்சுமி' என்று யாரழைத்தாலும் போதும். தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு உடனே அது திரும்பிப் பார்க்கும். மதிய வேளைகளில் உணவோ, தாகமோ எடுத்தால் ' அம்மா' என்றழைக்கும். அது அழைக்கும் தொனியைக் கொண்டே அம்மா லட்சுமி எதற்காக அழைக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்படுவதும் எனக்கு எப்போதும் ஆச்சரியத்தையே கொடுக்கும். அம்மாவும் கன்றுக்கு போக மீதமிருக்கும் பாலையே கறப்பார்கள். பெருவிரலை உட்புறம் மடக்கிக்கொண்டு, அம்மா பால் கறக்கும் போது லட்சுமி எப்போதும் தொந்தரவே செய்ததில்லை.

என்ன காரணத்தாலோ சில வருடங்களுக்குப் பின் ... [ ஒரு வேளை லட்சுமிக்கு வயதாகி இருக்குமோ..? ] லட்சுமி யாரிடமோ விற்கப்பட்டது. அதற்குப்பின் வேறொரு லட்சுமி வீட்டிற்கு வந்தது. இது பழைய லட்சுமி போல் இல்லை. அளவிலும் பெரிதாக இருந்தது. எனக்கென்னவோ பழைய லட்சுமியைத்தான் பிடித்திருந்தது.

புது லட்சுமி சில மாதங்களில் ஒரு கன்றை ஈன்றது. முதன்முறையாக ஒரு ஜீவன் உதயமாவதை கண்கூடாக பார்த்தேன். புது லட்சுமிக்கு கவனிப்பு அதிகம்தான். பால் நிறைய தந்ததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

புது லட்சுமிக்கு ஒரு முறை உடல் சரியில்லாமல் போனது. உள்ளூர் நாட்டு வைத்தியர் என்னனென்னவோ பச்சிலை மருந்து தந்து பார்த்தார். ஆனால் பலனில்லை. சில தினங்களிலேயே அதன் உடல் மிகவும் மோசமானது. எந்த உணவையும் உண்ண மறுத்து விட்டது. ஒரு நாளிரவு படுத்த லட்சுமியால் மீண்டும் எழுந்திருக்க இயலவில்லை. அதன் வாயில் நுரை வர ஆரம்பித்தது.

உடனே கொடுவிலார்பட்டியில் இருக்கும் ஒரு வைத்தியரை அழைத்து வர வேண்டும் என்று நானும் அத்தானும் நள்ளிரவு ஒரு மணிக்கு சைக்கிளில் கிளம்பினோம். அந்த வைத்தியரை அழைத்துக்கொண்டு வந்து சேரும் போது அதிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. வந்தவர் அவரது வைத்தியத்தை பார்க்க ஆரம்பித்தார். லட்சுமி படும் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை. வீட்டிற்குள் வந்து விட்டேன். கன்று 'அம்மா' என்றழைக்கும் சத்தம் மேலும் வேதனைப்படுத்தியது.

காலை ஆறு மணிக்கு அம்மா அழ ஆரம்பித்தார். அதற்குப் பின் இன்று வரை எங்கள் வீட்டிற்கு எந்த லட்சுமியும் வரவில்லை. வீட்டில் முன்கூரையில் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கும் வாய்க்கூண்டுகள் ஒரு காலத்தில் வீட்டில் இருந்த லட்சுமியை இன்னும் நினைவுறுத்திக்கொண்டிருக்கிறன. மாட்டுத்தொழுவம் இப்போது அறையாக மாறிவிட்டிருக்கிறது..!

-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:


1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்

மன்மதன்
21-05-2005, 10:04 AM
உங்களை தூக்கியெறிந்த லட்சுமி.. இன்னுமும் உங்கள் மனதை விட்டு தூக்கியெறியாமல் நிரந்தர இடம் பிடித்து விட்டது..
அன்புடன்
மன்மதன்

பாரதி
21-05-2005, 10:18 AM
நாம் வைத்திருக்கும் அன்பிற்குத்தான் அத்தனை வலிமை மன்மதன். எத்தனையோ முறை தூக்கியெறியப்பட்டிருக்கிறது அன்பு. ஆனால் ஒரு நாளும் விழுந்ததில்லை. தூக்கியெறிந்தவர்கள்தான் விழுந்திருக்கிறார்கள்.

பரஞ்சோதி
21-05-2005, 10:25 AM
பாரதி உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் நான் எழுத நினைக்கும் எழுத்துக்களாக அமைகிறது.

லெட்சுமியின் மூலம் உங்களது சிறுவயது அனுபவங்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது.

எனக்கு என்னுடைய சிறுவயது அனுபவங்களை எழுத ஆசை, ஆனால் எப்படி தொடங்குவது, எதை சொல்வது என்று சரியாக தெரியவில்லை. எழுதினால் அது மிகப்பெரிய கட்டுரையாக வரும்.

படிக்க படிக்க இனிமையாக இருக்கும் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து கொடுங்கள்.

பாரதி
21-05-2005, 10:51 AM
பாரதி உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் நான் எழுத நினைக்கும் எழுத்துக்களாக அமைகிறது.

லெட்சுமியின் மூலம் உங்களது சிறுவயது அனுபவங்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது.

எனக்கு என்னுடைய சிறுவயது அனுபவங்களை எழுத ஆசை, ஆனால் எப்படி தொடங்குவது, எதை சொல்வது என்று சரியாக தெரியவில்லை. எழுதினால் அது மிகப்பெரிய கட்டுரையாக வரும்.

படிக்க படிக்க இனிமையாக இருக்கும் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து கொடுங்கள்.

அன்பு பரஞ்சோதி,

உங்கள் எண்ணம் போலவே என் எண்ணமும் அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.
உங்கள் தயக்கம் போலத்தான் எனக்கும் இருந்தது. எப்படி எழுதுவது என்று எண்ண வேண்டியதில்லை. என்ன சொல்ல வருகிறோம் என்பதுதான் முக்கியம். தயக்கத்தை கை விடுங்கள். நான் இந்த தேதி இல்லா குறிப்புகளின் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன். இதை எப்படி எழுதுவது, எப்போது எழுதுவது, எந்த கால இடைவெளியில் எழுதுவது, எந்த அளவில் எழுதுவது, எந்த நடையில் எழுதுவது என்பது போற எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதித்துக்கொள்ளவில்லை.

நண்பன் அடிக்கடி சொல்வார். "எழுதுங்கள்... எழுதுங்கள்... எப்போதாவது கவிதை வந்துவிடும்" என்று....

நான் சொல்கிறேன் பரம்ஸ். எழுதியதில் உங்களுக்கு திருப்தி இருக்கிறதா... ? பதிவு செய்யுங்கள். அவ்வளவே.!

எனக்குத் தெரியும். நிச்சயம் உங்களால் முடியும்.

rambal
22-05-2005, 04:43 PM
பாரதி..

பாவண்ணன் எழுதி சமீபத்தில் வந்திருக்கும் புத்தகம்
தீராத பசி கொண்ட விலங்கு. இந்தப் புத்தகம் முழுவதுமே அவர்
அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.அவர் பார்த்த கடல், ரசித்த புகை வண்டி,
புளியம் பிஞ்சு.. இப்படி ஏகத்திற்கு..

அதைப் படித்து விட்டு பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

இந்த அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என்பதுதான் அது.

அதற்கு இந்த மாதிரிப் புத்தகங்கள்தான் ஞாபக அடுக்குகளில்
ஒளிந்திருக்கும் பசுமை மாறா பால்ய நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பாலங்கள்
என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பார்வை. ஒவ்வொருவிதமான காயம்.

ஏதோ ஒரு கணத்தில் ஒரு நிகழ்வு நிகழும் பொழுது அது நம்மை மிகவும் பாதிக்கிறது.
பின் அது கால வெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நம் அடி மனதில் எங்கோ ஒரு மூலையில்
நிரந்தரமாகத் தங்கி விடுகிறது. காலம் பல கடந்தபின்பு எதிர்பாராமல் எங்கோ இடித்துக் கீழே
விழுகையில் அந்த நிகழ்வு எப்படியோ நம் மனதில் மேலே வந்து அர்த்தமுள்ள சிலாகிப்பிற்கு
வழி வகுத்து விடுகிறது.

அந்த வகையில் உங்களது இந்தத் தேதியில்லாக் குறிப்புகளில் நீங்கள் கொடுத்திருக்கும்
'லட்சுமி' பல வகைகளில் சிலாகிப்பிற்குரியது.

இதைப் படித்த கணத்தில் மாட்டுத் தொழுவத்தில் இருந்து கிளம்பும் வைக்கோல் போரின் மணமும், பசுஞ்சாணியின் மணமும் என்னைச் சுற்றிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்த மணங்களை மீண்டும் சுவாசிக்க வைத்ததற்கு நான் உங்களுக்கு நிறையக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தொடரட்டும் உங்கள் தேதியில்லாக் குறிப்புகள்..


(பின்குறிப்பு: இந்த வகைக் கட்டுரைகளை இலக்கியப் பகுதியில் பதியலாம் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம். ஏனெனில், இந்த வகைக் கட்டுரைகள் இலக்கியம் சார்ந்தவை. நம்முடைய மன்றத்தில்
இருக்கும் இலக்கியப் பகுதிதான் இதற்குத் தகுந்த இடம் என்பது என்னுடைய எண்ணம். தவறிருந்தால் மன்னிக்கவும்)

பாரதி
23-05-2005, 04:41 AM
அன்பு ராம்,

நான் பாவண்ணனின் அந்தப்புத்தகத்தை இதுவரை பார்க்கவில்லை. இப்போது படிக்க வேண்டும் என்கிற ஆவல் வந்திருக்கிறது.

நீங்கள் சொல்லி இருப்பதைப்போல் அடுத்தத் தலைமுறைக்கு இத்தகைய அனுபவங்கள் எதுவும் இல்லாமல் போய்விடுமே என்கிற அச்சமும், எனது நினைவாற்றலின் மேல் இருந்த அளப்பரிய நம்பிக்கையின் மீது இப்போது ஏற்பட்டிருக்கும் குறைவுமே காரணம். நகரத்தை அல்லது சிறு நகரத்தை ஒட்டி வசித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு நிச்சயம் இந்த அனுபவங்கள் கிடைக்கப்போவதில்லை. எத்தனை பேர்களுக்கு அதைப் பற்றி ஆர்வம் இருக்கும் என்பதும் ஒரு கேள்விக்குரிய விசயமே.

படித்ததில் மனதை பாதித்த ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் கி.ரா.வின் எழுத்துக்கள் இக்கால தலைமுறைக்கு அவர் அளித்த கொடை. மண் மணம் கமழும் அந்த எழுத்துகளில் என்னையே நான் மறந்திருக்கிறேன்.

எப்படிச்சொல்வது என்பது தெரியாமல் திகைத்த காலத்தில், ஏதாவது ஒன்றைப்பற்றி எழுதுவோம்; படிப்பவர்களுக்கு பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி என்று ஆரம்பித்த பதிவுதான் இது. ஆரம்பித்து சில மாதங்கள் ஆனாலும் மிகக்குறைந்த அளவு பதிவுகளை மட்டுமே இதுவரைக்கும் தர முடிந்திருக்கிறது. காரணங்களாக வேலை, நேரமின்மை என்பவை இடம் வகித்தாலும் எழுத வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெறாததும் ஒரு காரணம்.

ஒரு சில பதிவுகளை ஆரம்பிக்கும் போது இருந்த வேகம் முடிப்பதில் இருந்ததில்லை. எப்படியாவது முடித்தால் போதும் என்கிற எண்ணம் கூட ஓரிரு பதிவுகளில் வந்திருக்கிறது. விடுமுறை நாட்களில் முடிந்த அளவு சொல்ல முயற்சிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.. பார்க்கலாம்.

நான் பெரும்பாலோனோரிடம் நன்கு பேசினாலும், நெருங்கிப்பழகிய நண்பர்கள் மிகச் மிகச்சிலரே. மனதில் தங்கிய எல்லா சம்பவங்களையும் எல்லாரிடமும் சொன்னதில்லை. வாழ்வில் நடந்த மகிழ்வான சம்பவங்களை விட, பாதித்த மற்றும் வருந்திய நிகழ்வுகள்தான் அடிமனதில் தங்கி விடுகின்றன. என்னைப் பொறுத்த மட்டில் படிப்பவர்களை வருத்தவேண்டும் என்கிற நோக்கம் எப்போதும் இருந்ததில்லை. முடிந்த வரை நினைவில் இருப்பதை கொட்டுவதே இப்பதிவின் நோக்கம்.

விலாவாரியாக விளக்க மனம் நினைத்தாலும், படிப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற தேவையற்ற அச்சமும் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.

இது கதையா, கட்டுரையா என்பதைப்பற்றியும் எனக்குத்தெரியவில்லை. எங்கு பதிவதென்றாலும் எனக்கு சம்மதமே. அப்பகுதிக்கு மாற்றுவதுதான் சரி என்று நீங்கள் கருதும் பட்சத்தில் எனது தேதியில்லா குறிப்புகளை இலக்கியப்பகுதிக்கு மாற்றுமாறு மன்ற நிர்வாகிகளுக்கு என் அன்பான வேண்டுகோளை விடுக்கிறேன்.

கருத்து எழுதி பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி ராம்.

மன்மதன்
23-05-2005, 05:46 AM
நாம் வைத்திருக்கும் அன்பிற்குத்தான் அத்தனை வலிமை மன்மதன். எத்தனையோ முறை தூக்கியெறியப்பட்டிருக்கிறது அன்பு. ஆனால் ஒரு நாளும் விழுந்ததில்லை. தூக்கியெறிந்தவர்கள்தான் விழுந்திருக்கிறார்கள்.

சிறு கவிதை படித்த மாதிரி இருக்கிறது..
அன்புடன்
மன்மதன்

majara
23-05-2005, 06:01 AM
இது எமது எல்லோரின் வழ்விழும் நடந்த
பழைய ஏதாவது சம்பவத்தை இக்கதை நினைவு கூர்ந்து இருக்கும் என்பது நிச்சயம் நிச்சயம்

rambal
23-05-2005, 06:38 PM
அன்பு பாரதி,

ஏன் எழுதுகிறோம் என்பதற்கு இத்தாலிய எழுத்தாளர் மூரே பத்து காரணங்களை முன் வைக்கிறார்.
அதில் முதல் இரண்டு காரணங்கள் உங்களுக்குப் பொருந்தும். (அந்தப் பத்து காரணங்கள் பின்பு வேறொரு சமயம்)

முதல் காரணம்:

அதீத தனிமையின் காரணமாக யாருடனும் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வழியில்லாததின்
வெளிப்பாடாய் எழுத்து என்பது அமைகிறது.. ஆரம்பத்தில் ஏறக்குறைய அனைவரும் இதனால்தான்
எழுத ஆரம்பிக்கின்றனர்.

இரண்டாவது:

தன் எழுத்து அடுத்தவரை மகிழ்விக்கிறது எனும் காரணத்திற்காக எழுதுவது. இதுதான்
தலைசிறந்த இலக்கிய எழுத்தாளர்களின் நிலை. மற்றவரை மகிழ்விக்க வேண்டும் எனும் நோக்கதில்
எழுதப் படும் எழுத்தென்பது இலக்கியம் ஆகும்.

உங்கள் பதிலில் நீங்கள் இந்த இரண்டு காரணங்களையும் கொண்டுள்ளீர்கள்.


அடுத்தபடியாக,

தேதியில்லாக் குறிப்புகள் இலக்கியப்பகுதியில் இடம்பெற்றால்தான் அதற்கு மதிப்பு.
அதைப் படித்த முதல் கணமே அது ஒரு பெரிய எழுத்தாளரின் பங்களிப்பாய் தெரிந்தது எனக்கு.
நீங்கள் விவரித்த சம்பவம் ஓர் அருமையான இலக்கியக் கட்டுரை.
வாழ்வியலில் நடந்து முடிந்த சம்பவத்தை அப்படியே முன் வைத்திருக்கிறீர்கள். அதுவும்
அழகான மொழி நடையோடு. நம் மன்றத்தில் இந்த வகை உரை நடையை நண்பன், கரிகாலன்
மற்றும் சிலரிடம் கண்டிருக்கிறேன். இது மிக அரிதானது. அதனால்தான் இதை இலக்கியப்பகுதிக்கு
மாற்றுமாறு சொன்னேன். (பிழையிருந்தால் மன்னிக்கவும்)

வாழ்த்துக்கள்...

முத்து
23-05-2005, 11:13 PM
பாரதி,
இதைப் படித்தவுடன் எனக்குத் தாத்தா வீட்டின் மாட்டுத் தொழுவம் நினைவுக்கு வ்ந்தது, கிட்டத்தட்ட நீங்கள் விவரித்தபடியே இருக்கும்.

pradeepkt
24-05-2005, 05:01 AM
பாரதி என்னுடைய சிறுவயது நினைவுகளையும் கிளறி விட்டு விட்டீர்கள்.
நாங்கள் இருந்த மண்டலப் பொறியியற் கல்லூரிக் குடியிருப்பிலும் இது போன்ற சம்பவங்கள் அதிகம். பக்கத்து கிராமங்களிலிருந்து கால்நடைகளைக் குறிப்பாகப் பசுக்களை அவிழ்த்து விடுவர். அவை இங்கே வந்து நாங்கள் வெளியே வைக்கும் கழனி வாளிகளில் உள்ள கழனியைக் குடித்து விட்டுச் செல்லும் (அறியாத நண்பர்களுக்காக - கழனி என்பது நாம் காய்கறிகளைக் கழுவும் தண்ணீர், எஞ்சிய நீராகாரம், வீணாகிய வெஞ்சனங்கள் அடங்கியது. அதை மாட்டுக்கு வைப்பது வழக்கம் ) அப்படி வரும் விருந்தாளிகளில் ஒருத்திதான் லட்சுமி. என் தாயார் பேரும் அதே என்பதால் என் தந்தைக்கு அதுமேல் ஒரு பாசம். ஒரு முறை என் தாயார் வாசலுக்குப் போய் வாளியை வைத்துவிட்டு "குடி" என்று சொல்லாததால் கோபித்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டாள். அவ்வளவு உரிமை.

இப்படி இருந்த லட்சுமியைக் காலனிப் பையன்கள் ஒரு நாள் பிளாஸ்டிக் காகிதங்களையும் குண்டூசிகளையும் கழனியில் கலந்து வைக்க, அதைக் குடித்துக் கதறியே செத்துப் போனாள். அப்புறம் என் தாயார் எந்த மாட்டுக்குமே கழனி கரைப்பதில்லை. ஏனென்றும் தெரியவில்லை.

அன்புடன்,
பிரதீப்

gragavan
24-05-2005, 05:26 AM
பாரதி இது அக்கிரமம். இப்படியெல்லாம் எழுதக் கூடாது. பிறகு எங்களது பழைய நினைவுகள் எல்லாம் வெளிவருகின்றன. என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். இலக்கியத் தரமாக எழுதுவது, சிறப்பாக எழுதுவது, அருமையாக எழுதுவது என்று அடுக்கிக் கொண்டே போகின்றீர்கள். எங்களால் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. அடுத்து எப்பொழுது போடுவீர்கள் என்று கேட்காமலும் இருக்க முடியவில்லை. சரி. உங்கள் ஒவ்வொரு பதிப்பிலும் இப்படியே திட்ட வேண்டும் என்பதே எனது ஆவல். :-)

அன்புடன்,
கோ.இராகவன்

அடடே! நம்ம பாரதியின் படைப்பு.

பாரதி, உண்மையிலேயே நான் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பின்னால் போய் விட்டேன். புத்தகம் படிக்கும் ஆர்வலர்கள் எல்லாமே சிறுவயதில் ஒரே மாதிரியாகத்தான் நடந்திருப்பார்கள் போல. புத்தகங்கள் மாறலாம். ஆனால் நீங்கள் செய்தவைகளை நானும் செய்திருக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

படைப்பில் அடைப்பு ஏற்படாமல்...............
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=102271#post102271

பாரதி
24-05-2005, 04:57 PM
கருத்துக்கூறிய அன்பிற்கினிய மன்மதன், மஜாரா, ராம், முத்து, கருத்து கூறி கலங்க வைத்த பிரதீப், எப்படியாவது பாராட்டிக்கொண்டே இருக்கும் இராகவன் ஆகியோருக்கு நன்றி.

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ராம். உங்களைப்போன்றவர்களின் கருத்துக்களால் தமிழ்மன்றமும் எழுத நினைப்பவர்களின் படைப்புகளும் செழுமையடையும் என்பதில் சந்தேகமே இல்லை.

இளந்தமிழ்ச்செல்வன்
28-06-2005, 08:00 PM
நண்பர் பாரதி அவர்களே,

உங்கள் தேதியில்லா குறிப்புகள் என்னையும் டவுசர் போட்ட காலத்துக்குள் திளைக்கச்செய்தது.

உஙகள் எழுத்து நடையும், தற்போதைய வயதுக்குறிய சிந்தனையும் கலந்து எதார்த்தமாகவும், அந்த சூழலின் மணத்தையும் கொண்டுவந்து மனதை நிறைத்தது.

இன்னமும் உங்கள் பூதிபுரத்தில் இந்த மணத்தை காண்கிறேன் நண்பரே.

உங்கள் இந்த பதிவின் மூலம் தொலைந்துவிட்டிருந்த என் நினைவுகளை மீட்டது மட்டுமின்றி, பழைய நண்பர்கள் திரு. ராம்பால், முத்து ஆகியோரையும் கண்டதில் மகிழ்ச்சி.

உண்மையில் அடுத்த தலைமுறைக்கு இவையெல்லாம் கிட்டாமல் போகும் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாகவும், அதே சமயம் நம் பெரியவர்கள் அவர்கள் காலத்தை சிலாகித்து கூறியதும் நினைவிற்க்கு வருகிறது.

gragavan
29-06-2005, 06:10 AM
இளந்தமிழ்ச் செல்வன். வருந்த வேண்டாம். எப்பொழுதுமே ஒரு தலைமுறை அனுபவித்தவற்றில் சிலவற்றை...அல்லது பலவற்றை அடுத்த தலைமுறை இழந்தே வந்திருக்கிறது. இதுவும் கால வகையினானே! எல்லாம் நன்மைக்கே! அதனால்தான் இறைவன் எண்ணைப் படைத்து எழுத்தைப் படைத்து அதன் வழியே புலவர்கள் பண்ணைப் படைத்து அவற்றைப் படித்து நடந்தவைகளை தெரிந்து கொள்ள நமக்குக் கண்ணைப் படைத்தான்.

pradeepkt
29-06-2005, 06:33 AM
பல விஷயங்கள் கிடைக்கும், சில விஷயங்கள் கிடைக்காது.
அனைத்தும் நன்மைக்கே.
ஜெயம் படத்தில் ஒரு பாடல் வரி வரும்
"பாட்டனுக்குப் பாட்டன் போனா மாட்டு வண்டிடா
நாம காத்திருந்து பொறந்ததால ரயிலு வண்டிடா"

என்ன சொல்லுறது?

பாரதி
04-07-2005, 02:39 PM
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி இளந்தமிழ்செல்வன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
எப்போதும் மனம் கிடைக்காத ஒன்றைப்பற்றி எண்ணுவதும், கிடைத்த பின்பு பழையதே போதுமானது, அருமையானது என்று எண்ணுவதும் வழமையானதுதானே..!

மாற்றங்கள் வாழ்வில் நிகழ்ந்து கொண்டேதானிருக்கும். நினைவுகள் மட்டுமே மனதில் தங்கியிருக்கும்.

தீபன்
12-01-2006, 04:36 AM
புதிய தலைமுறை சிலவற்றை இளந்தாலும் அவர்கள் பெறப்போகும் பல புதிய விடயங்களை பளைய தலமுறையால் பெற முடியாது... இன்றய புதியன நாளைக்கு பளையதாகயில் அதுவும் பசுமையானதாக தான் இருக்கும்....

இளசு
04-12-2006, 09:58 PM
பழைய லட்சுமியை வாஞ்சையோடு விவரித்த இந்தப்பதிவும் மனதைக் கவ்விக் கொள்ளை கொண்டது பாரதி.

தீவனங்கள், தொழுவ அமைப்பு, திருவிழா என ஓர் ஆவணப் பதிவாகவும் இது ஜொலிக்கிறது.

வெண்ணெய் திருடிய கண்ணனாய், நெய் உருக்கு முருங்கை இலை ரசிகனாய் - படிக்கும் அனைவரையும் பின்னோக்கித் தள்ளும்
'மனநெருக்கப் பதிவு'.


ராமின் அறிவார்ந்த பின்னூட்டமும், பிரதீப்பின் சோகமுடிவான பதிவும்,
ராகவனின் வியப்பான பாராட்டும்...

இந்தப்பதிவின் இலக்கியத் தரத்துக்கு கட்டியங்கள்...

முத்துவை நினைத்தும் என் மனம் ஏங்குகிறது...


பாராட்டுகள் பாரதி.

ஓவியா
05-12-2006, 02:55 PM
பரதியண்ணா தங்களை பாராட்ட எனக்கு வயசில்லை......

பல கிராமத்து விசயங்களை தெரிந்துகொண்டேன்,
(நான் அயல்னாட்டில் பிறந்ததால் மாட்டுதோழுவத்தை பற்றி அவ்வளவாக தெரியாது...)

ரசித்து படித்தேன்,

அனைவரின் பின்னூட்டங்களும் சிறப்பு

நன்றிகள் பல

************************


நீங்கள் சானியில் விழுந்ததை நினைத்தால்.....:eek:

ஒரு முறை வைகுண்ட ஏகாதேசிக்கு கோலம்போட சானியை (கறைக்க) கையில் தொடவே ரொம்ப அச்சம் கொண்டேன்.........

பாரதி
07-12-2006, 07:41 AM
கருத்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா; ஓவியா.

அன்புரசிகன்
08-01-2008, 03:53 PM
படிக்கும் போதே கண்களில் சாதுவான பனி...

நானும் பார்த்திருக்கிறேன். எமது பக்கத்து வீட்டுதலைவர் விம்மி விம்மி அழுதார். அந்த பசுவை வீட்டின் பின்புறத்தில் அடக்கம் செய்ய பெரும் குழி தோண்டப்பட்டது. அதனை அந்த குழியினுள் இறக்க சிலர் வந்திருந்தனர். ஆனால் அவர் சிறிதுநேரம் அவர்களை அந்த பசுவில் தொட அனுமதிக்கவில்லை. பின்னர் மற்றவர்கள் எல்லாம் போய் அவரை சமாதான படுத்தமுயன்றும் பயனற்று போகவே வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்றி அறையில் வைத்து பூட்டிய சம்பவம் இன்னும் என் கண்முன் நிற்கிறது.......

புரிகிறது அதன் தாக்கம்.

சிறுவாடு என்றால் என்னவோ???

மலர்
09-01-2008, 05:30 AM
சிறுவாடு என்றால் என்னவோ???

உபரி வருமானம்

இளசு
09-01-2008, 06:47 AM
உபரி வருமானம்

குறிப்பாய் நம் வீட்டுத் தாய்மார்கள் வீட்டுச்செலவு செய்வதில் கொஞ்சம் கொஞ்சம் மிஞ்சுவதை அரிசிப்பானை அல்லது அஞ்சறைப்பெட்டியில் போட்டு வைத்து வருவார்கள். ஓர் அவசரத்துக்கு சட்டென கை கொடுக்கும்
ஆதிகால தனிப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு திட்டம் அது. சரீங்களா மலர்?

அன்புரசிகன்
09-01-2008, 08:29 AM
விளக்கம் தந்த மலர் மற்றும் இளசு அண்ணலுக்கு நன்றிகள்.

பூமகள்
09-01-2008, 09:13 AM
லட்சுமி பசு பிரிந்ததும், அடுத்த லட்சுமி இறந்ததும் துக்கமாக்கி, மனம் கனக்கச் செய்தது.

ஒரே மகிழ்ச்சி..!! ;)

பாரதி அண்ணாவை லட்சுமி முட்டி...! அவர் சூப்பர் மேன் போல் பறந்து போய் சாணிக் கூடையில் விழுந்தது தான்..!! :D:D

அன்புரசிகன்
09-01-2008, 10:37 AM
உண்மைதான். நான் ஒரு காட்டூன் பார்த்திருக்கிறேன். பெயர் ஞாபகம் இல்லை. ஒரு குழந்தையை யானை மற்றும் சில விலங்குகள் காப்பாற்றுவது போல. மிக பிரபலமான ஒளிச்சித்திரம் என் நினைக்கிறேன்.

அப்படி நினைத்துப்பார்க்கிறேன். பாரதி அண்ணர் சூப்பரா இருக்கிறார்.

பாரதி
09-01-2008, 03:24 PM
நன்றி மலர், அண்ணா, அன்பு.

அடடா... என்ன ஒரு பாசம் பூவுக்கு...!! மெய்சிலிர்க்கிறது. இம்சைஅரசன் 23ம் புலிகேசியை சிரிக்க வைக்க அறைவது போல, பூ சிரிப்பதற்கு மாடு என்னை சாணிக்கூடையில் தள்ள வேண்டுமா என்ன..?? நல்ல வேளை இப்போது லட்சுமி இல்லை.

பின்னூட்டதிற்கு நன்றி பூ.

பாரதி
09-01-2008, 03:26 PM
உண்மைதான். நான் ஒரு காட்டூன் பார்த்திருக்கிறேன். பெயர் ஞாபகம் இல்லை. ஒரு குழந்தையை யானை மற்றும் சில விலங்குகள் காப்பாற்றுவது போல. மிக பிரபலமான ஒளிச்சித்திரம் என் நினைக்கிறேன்.

அப்படி நினைத்துப்பார்க்கிறேன். பாரதி அண்ணர் சூப்பரா இருக்கிறார்.

ஹைய்யா... அவ்வளவு சின்ன குழந்தையாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்....! ஐஸ் ஏஜ் படத்தை சொல்கிறீர்களா அன்பு?

பூமகள்
09-01-2008, 03:30 PM
ஐஸ் ஏஜ் படத்தை சொல்கிறீர்களா அன்பு?
சச்சி.................. முச்சி.............!! (ஓம் சாந்தி ஓம் பட பாணி..!!)
தமிழாக்கம்: நிஜமா?? நிஜமா தான்

கற்பனை செஞ்சி பார்த்தால் சூப்பரா இருக்கு...!! :D

:lachen001::lachen001:

அன்புரசிகன்
10-01-2008, 09:44 AM
ஹைய்யா... அவ்வளவு சின்ன குழந்தையாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்....! ஐஸ் ஏஜ் படத்தை சொல்கிறீர்களா அன்பு?

அதே அதே அண்ணா...

இதோ பாரதி அண்ணர் இந்த படத்தில் இருக்கிறார். (இந்த படத்தில் அந்த குழந்தையாக பாரதி அண்ணாவை நினைத்துப்பாருங்கள். ... :D நன்றாக இருக்கிறதல்லவா???)


http://thecia.com.au/reviews/i/images/ice-age-2.jpg

பூமகள்
10-01-2008, 03:26 PM
அன்புரசிகன் அண்ணா,
படத்துல பெரிய உருவமா, கொம்பு ச்சேச்சே தந்தமெல்லாம் வச்சிட்டு இருக்காரே அவரு தானே பாரதி அண்ணா????!!!

ரொம்ப பெரிய மனிதர் தான் என்பதை சரியா கண்டுபிடிச்சிட்டேன் பாருங்க...! :D:D பூவு எவ்வளோ புத்திசாலி...!! கண்ணு படப்போவுது எனக்கு...!! ;)

சுகந்தப்ரீதன்
30-01-2008, 12:06 PM
பாரதி அண்ணா.. அருமையான எழுத்து நடை..! அன்னம் போல் அழகாய் காட்சிகள் நகர்கிறது மனதில்..! இந்த அனுபவங்கள் அத்தனையும் வாய்க்க பெற்றவன் நான்..!

எங்கள் வீட்டில் இப்போதுதான் நாங்கள் சிந்து வகை பசுவை வளர்கிறோம்..பண்ணையில் பாலூற்ற..! நான் சின்ன பையனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரில் பண்ணையும் கிடையாது சிந்து வகை பசுக்களும் கிடையாது..! வீட்டுக்கு வேண்டி மட்டும் சிலர் நாட்டு பசுவை வீட்டில் வளர்ப்பார்கள்....! எங்கள் வீட்டு நாட்டு லட்சுமி வெள்ளை நிறத்தில் கூரிய கொம்புகளுடன் பார்ப்பதற்க்கு காளை மாட்டு தோற்றத்தில் இருக்கும்...! அதை எங்கள் வீட்டில் எங்கள் தாயாரும் தந்தையாரும் மட்டும்தான் பக்கத்தில் சென்று பிடிக்க முடியும்..!

எனக்கு அதை பார்த்தால் பயமும் ஒருவித உற்சாகமும் இருக்கும்.. பின்ன ஊரில் அந்த மாதிரி காளை மாட்டுதோற்றத்தில் எந்த பசுவும் கிடையாதே..அதில் எனக்கு ஒரு சிறு கர்வம்..! எங்க லட்சுமி தொழுவத்தில் கட்டியிருக்கும் போது தூரத்தில் நின்று ஒவ்வொரு கடலை செடியாய் அதனிடம் தூக்கி எரிந்துவிட்டு அது உண்பதை காண்பதில் எனக்கு அலாதி பிரியம்..அண்ணா..!

இன்னொரு முக்கியமான விசயம்.. நான் பிறந்த அன்றுதான் எங்க லட்சிமியும் பிறந்ததாம்..எங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசு..! ஆனா எனக்கு விவரம் தெரிஞ்சு அதை காண்கையில் நான் லட்சுமியோட கால் உயரம்கூட இல்லை..!

எங்க லட்சுமி பருவத்துக்கு வந்து ரெண்டு கன்றுகளையும் ஈன்றது..! அதோட பாலதான் உங்களை மாதிரி பல்லுவிளாக்காம குடிச்சிட்டு நான் உடம்பை வளர்த்தேன்..! பால் காய்ச்சி முடிச்ச பிறகு அந்த பாத்திரத்தில் இருக்கும் பாலாடையை தின்பதற்க்கு எனக்கும் என் சகோதரிகளுக்கும் பெரிய சண்டையே நடக்கும்..! ஆனால் போட்டியில் ஜெயிப்பது நானாகத்தான் இருக்கும்.. என் சகோதரிகள் எப்போதுமே எனக்காக விட்டுகொடுப்பதையே விரும்புவார்கள்..!

இரண்டு கன்றை ஈன்ற பிறகு கிட்டதட்ட நான்கு வருடங்கள் எங்க லட்சுமி கருத்தரிக்கவே இல்லை..! அதனால் எங்க வீட்டிலும் அதை விற்றுவிட்டார்கள்..! மனிதர்களில் மட்டுமல்ல மாட்டில் கூட கருத்தரிக்கா விட்டால் மதிப்பிருக்காது போலிருக்கு மனிதர்களிடத்தில்..!

அதை வாங்கியவர் லாரியில் ஏற்றிக்கொண்டு போக நான் என் தந்தையிடம் ஏன் லாரியில் ஏற்றுகிறார்கள் கையில் பிடித்துக்கொண்டு போக வேண்டியதுதானே என்றேன்..! அதற்க்கு அவர் நம்ப லட்சுமிய யாரும் இனி வளக்கறதுக்கு வாங்க மாட்டாங்க.. அதனால அதை அடிமாடா வாங்கிட்டு போறாங்கன்னு சொல்லவும்.. நான் அடிமாடுன்னா என்னான்னு கேட்க கறிக்கடைக்குன்னு பதில் வரவும் எனக்கு அழுகை வந்துடுச்சு...!

நானும் லட்சுமியும் ஒண்ணாதாம் பிறந்தோம்.. நான் மனிதனா பிறந்ததால இன்னைக்கும் என் உயிரு இந்த உலகத்துல உலாவிக்கிட்டு இருக்குது.. ஆனா லட்சுமியா பொறந்ததால அதனோட உயிரு...????



அன்பு பாரதி,

ஏன் எழுதுகிறோம் என்பதற்கு இத்தாலிய எழுத்தாளர் மூரே பத்து காரணங்களை முன் வைக்கிறார்.

முதல் காரணம்:

அதீத தனிமையின் காரணமாக யாருடனும் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வழியில்லாததின்
வெளிப்பாடாய் எழுத்து என்பது அமைகிறது.. ஆரம்பத்தில் ஏறக்குறைய அனைவரும் இதனால்தான்
எழுத ஆரம்பிக்கின்றனர்.
...
நன்றி ராம்பால் அண்ணா.. நான் எழுத ஆரம்பித்ததும் இதே காரணத்தால்தான்..!

பாரதி
22-03-2008, 07:52 AM
கருத்தளித்த அனைவருக்கும் நன்றிகள்.

சுகந்தப்ரீதன்
22-03-2008, 11:20 AM
கருத்தளித்த அனைவருக்கும் நன்றிகள்.
யப்பாடி... ஒருவழியாக பாரதி அண்ணா.. இன்றைக்கு நான் எழுதியதை படித்துவிட்டார்.. அதுபோதும் எனக்கு.. மிக்க நன்றி அண்ணா..!!