PDA

View Full Version : அகலிகை வம்சம்...rambal
19-05-2005, 05:21 PM
அகலிகை வம்சம்...


ஆறடி உயரத்தில் அங்கொரு சிலை நின்று கொண்டிருக்கிறது. ஏறக்குறைய மனிதனை வார்ப்பில் எடுத்தது போலவே இருக்கும் அந்தச் சிலையை யாராவது இரவில் பார்த்தால், உயிருள்ள ஒரு நபர் நின்று கொண்டிருப்பதாகவே நினைப்பார்கள். அந்தச் சிலையின் கணுக்கால் வரை சாக்கடை நிறைந்து ஓடுகிறது. அந்தச் சாக்கடை ஒரு காலத்தில் நதியாக இருந்தது என்று சொன்னால் நம்புவது கடினம். பின்னாளில் நதிக்கரையில் நாகரிகம் மட்டும் வளர நதி கைவிடப்பட்டு அநாதரவாகி விட்டது. ஒரு காலத்தில் இந்த நதிக்கரையில் வேத பாடசாலைகள் இருந்தன என்று சொன்னல் அது நகைப்பிற்குரியது. ஆனால், நதிக்கரைதனில் நடந்து முடிந்தவைகளுக்கு சாட்சியாக அந்த சிலை மட்டும் நின்று கொண்டிருக்கிறது. தொல் பொருள் ஆய்வாளர்களால் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டிருக்கும் அந்தச் சிலை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முந்தியது. அதற்கு மேல் அதைப் பற்றிய வரலாற்று விபரங்கள் தெரியாததால், சிலையை அவர்கள் பெரிதாக லட்சியம் கொள்ளவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நாயக்கர் மகாலும், மீனாட்சி அம்மன் கோவிலும்தான். மற்றவைகள் வெறும் குறிப்புகள் மட்டுமே. நதியைப் போலவே அந்தச் சிலையும் ஒரு காலத்தில் உயிருள்ளதாக இருந்தது. வேதம் கற்றது. தருக்கம் புரிந்தது. தீராத அலைக்கழிப்பில் சிக்கித் தவித்தது.000மின்னலெனத் தெறித்து ஓடும் பச்சை நரம்புகள் கழுத்தில் தெரிந்தன. பஞ்சுத் துகள்களை ஒட்டி வைத்தாற் போன்று காதோரம் சிறு பூனை மயிர் இருந்தது. கண்களின் ஓரம் தீற்றிய மை காண்பவரது உயிரைக் குறி பார்ப்பதாய் இருந்தது. ஒரு பறவையின் இறகாய், மரத்தில் இருந்து உதிர்ந்த இலை மண்ணை அடைவதற்குள் ஆடும் லாவகமாய் அவள் உடல் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. ஒய்யாரமாய் விழிகளால் அம்பு ஏந்தி பார்வைகளை வீசிக் கொண்டிருக்கிறாள் எட்டுத் திக்கிலும். அவளது அம்புறாவில் இன்னும் எத்தனை அம்புகள் மிச்சமிருக்கின்றதோ அது எனக்குத் தெரியாது. ஆனால், அத்தனை அம்புகளும் ஆடவர்களை குறி வைத்தே எய்யப்படப்போகின்றன. ஏன் எனக்கு மனம் இப்படிப் போகிறது? நான் ஒரு வித்யாகர்த்தியல்லவா? சித்தாந்தம் பயிலும் மாணக்கன் மனதை இப்படித் தறிகெட்டு அலையவிடலாகுமோ? என்னைப் போலவேதான் இங்கு குழுமியிருக்கும் அனைவரின் மனங்களும் இருக்குமா? இவர்களுக்கு இருக்கலாம். ஆனால், என்னைப் போன்ற வேதம் பயிலும் ஒருவனுக்கு இருத்தல் பிழை. இது தவறு. காமமென்பது மாயை. காமம் கிளர்த்தெழ வைக்கும் பெண் மாயை. அவளின் கண்களும் மாயை. மாயைகளால் சூழப்பட்ட உலகில் சிற்றின்பங்களில் இருந்து தப்பவே வேதங்களும் உபநிசத்துகளும் வழிபுரிகின்றன. இந்தக் கோவில் திருவிழாவில் தேவரடியார் ஆட்டத்தைக் காண்பது தவறு. இந்தக் கணிகை சுத்தமானவள் அல்ல. ஆதலாலேயே அவள் கணிகை. இவளைக் கண்ணால் காணுதல் பாபம். அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்தேன். காதுகளில் இருந்து பாடல் சத்தமும் கூட்டத்தின் இரைச்சலும் விலகிய பின்பு என்னை அறியாமல் என் கழுத்து அநிச்சை நிகழ்வாய் திரும்பியது. மண்டபத்தில் இருந்து இரண்டு கண்கள் என்னைப் பார்ப்பதை உணர்ந்தேன். பின் விடுவிடுவென்று திரும்பிப்பாராமல் நடந்து பள்ளித் திண்ணைக்கு வந்தேன்.உள்ளே மணக்க மணக்க சமையல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் சாப்பிட அழைப்பு வந்ததும் உண்டு விட்டு திண்ணையிலேயே உறங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை எழுந்து சந்தியாவந்தனம் முடித்துவிட்டுக் குருகுலத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எதிரில் திடீரென்று சந்தணத்தின் மணமும் மரிக்கொழுந்துவின் மணமும் கலந்த புதுவித மணம் என் நாசியைத் தாக்கியது. திரும்பிப் பார்த்தேன். அவள்தான். நேற்றிரவு கோவில் மண்டபத்தில் என்னை கலங்கச் செய்த காதோரப் பூனைமயிர், கழுத்து பச்சை நரம்புகளுக்குச் சொந்தமான அதே கணிகை. ஓரவிழியில் என்னைப் பார்த்தபடியே கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். என் மனம் ஒரு கணம் தன்னை மறந்தது. என்னை அறியாமல் என் உதடுகள் ஒரு புன்னகையைப் பூத்தது. அதைக் கண்டதும் அவள் தன் முகத்தை சட்டென்று திருப்பிக் கொண்டாள். எனக்குள் ஏதோ ஒன்று அறுந்து விழுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. பின் விடுவிடுவென்று குருகுலம் நோக்கித் திரும்பிப் பாராமல் நடக்க ஆரம்பித்தேன். ஆனால், முதுகை மட்டும் ஏதோ மெலிதாய் வருடுவது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. திரும்பிப் பார்க்க அவள் அங்கேயே நின்று கொண்டு என்னைப் பார்த்த வண்ணம் இருந்தாள். எல்லாம் மாயை. சிலந்திகள் விரிக்கும் வலை அற்புதமானது. ஆனால், அதில் சிக்கும் சிறுபூச்சிகள்? வேண்டாம் அருங்கேதா.. வேண்டாம். நீ சிறுபூச்சி அல்ல.. உலகை வெல்லும் தருக்க சிந்தாந்தங்களை விட பெண்கள் ஒன்றும் மேலானவர்கள் அல்ல. அவள் பார்வை முதுகை வருட நான் நடந்து குருகுலத்தை அடைந்தேன்.மாலை நேர ஸ்நானத்தைக் குளத்தில் முடித்துவிட்டு கோவில் பிரகாரத்துப் படிக்கட்டுகளில் ஏறும் பொழுது படிக்கட்டுகளின் ஓரமாய் அவள் அமர்ந்திருந்தாள். அவள் மயக்கவைக்கும் அலங்காரங்கள் ஏதுமன்றி, மோகனப் பார்வைகள் அற்று, நடை சாத்தப்பட்ட நேரத்து அம்மன் போல் இருந்தாள். அவளது அலங்காரங்கள் ஏதுமில்லாவிட்டாலும் அவள் ஒரு தாசி என்பதை அவள் முகக்களை சொல்லியது. மெல்லிய புன்னகையுடன் யாருக்கும் தெரியாதவாறு குனிந்தவாறு என்னைப் பார்த்தாள். அவள் பார்வையைக் கண்டதும் மனம் துள்ளியது. ஆயிரம் வீணைகள் உயிர்பெற்றது போல் என் உடல் அதிர்ந்தது. அந்தப் பார்வை காமம் அல்ல. காதலா? கணிகையிடம் காதல் சாத்தியமா? தவறு.. இது தவறு.. இன்னும் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. போயும் போயும் ஒரு தாசியிடமா மனதை இழப்பது. ஏன் என் மனம் இப்படி அலைபாய்கிறது? ஆண் என்கின்ற அகம்பாவமா? படித்த செருக்கா? எனக்கு விளங்கவில்லை. இருந்தாலும் இவள் வேண்டாம். இது மாயை. அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். முதுகை மட்டும் அவளது பார்வைகள் வருடிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதன்பிறகு கோவிலில் நிற்க மனமில்லாது கோவிலை விட்டு வெளியேறினேன்.அன்று இரவு அந்தப் பார்வை என்னைத் தூங்கவிடவில்லை. கண்களை மூடினால் அவள் பார்வைகள் எனக்குள் ஊடுருவி என் அடிவயிற்றைப் பிசைந்தது. காதுகளில், சதுர் ஆடிய அவளது சலங்கை ஓலி இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. அதன் பின் எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அவளைப் பற்றிய சிந்தனைகளே தீய சக்தியாய் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது. அந்த நினைவுகளினூடே நடந்து வந்தேன். சிந்தனைகள் வடிந்த பொழுதுதான் தெரிந்தது. நான் தேவரடியார் வீதி முகப்பில் நின்று கொண்டிருக்கிறேன் என்று. வீதியெங்கும் சலங்கை ஒலியும் சிரிப்பொலிகளும் பல்லக்குகள் வந்து போவதுமாய் இருந்தது. சில பல்லக்குகள் அந்த வீதியில் சில வீட்டு முகப்புகளில் நின்று கொண்டிருந்தது. அதைச் சுமந்து வந்த தூக்கிகள் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். சில தலைகள் முக்காடு போட்டுக் கொண்டு என்னைக் கடந்து சென்றன. அந்த முக்காடுகளுக்கு சொந்தக்காரர்கள் கண்டிப்பாக ஊருக்குள் முக்கியமான உத்யோகத்தில் இருப்பவர்களாய் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளிருந்து எச்சரிக்கை உணர்வு எழுந்தது. தேவரடியார் வீதி முகப்பில் அருங்கேதனைக் கண்டேன் என்று யாராவது குருவிடம் சொல்லிவிட்டால்.. அல்லது இங்கு வந்தது குருவிற்குத் தெரிந்தால்.. இந்த எண்ணமே என்னை ஒவ்வொரு துண்டமாய் வெட்டியது. ஏதோ குற்றம் புரிந்ததாய் மனம் ரணமானது. இது தவறு. திரும்பி நடக்க ஆரம்பித்தேன். எல்லாம் அடுத்த நாள் இரவு வரைதான்.இந்த முறை அந்த வீதிக்குள்ளேயே நுழைந்துவிட்டேன். சில வீட்டு முகப்புகளில் ஆண்களைப் போன்ற தோற்றமுடைய சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்து சைகை காட்டுவது தெரிந்தது. அதில் ஒரு வீட்டு முகப்பில் இருந்து ஒரு ஆண் என்னை நோக்கி வந்தான். அவன் ஏறக்குறைய ஆண் போலவே இருந்தான். அவன் பேச ஆரம்பித்த பிறகு அவன் ஆண் என்ற சந்தேகம் எனக்குள் வந்தது. அவனிடம் அவளின் அடையாளங்களைச் சொல்லி விசாரித்தேன். அதற்கு அவனோ அவளுக்கு விலை அதிகம் என்றான். உன்னிடம் அவ்வளவு பணம் இருக்காது. உனக்கு இந்த வீதியின் இறுதியில் இருக்கும் குமுதவல்லி வீடுதான் சரியாய் இருக்கும் என்று கூறினான். நான் ஏன் இப்படி மாறினேன். நான் யார்? அருங்கேதன். இந்த உலகை வெல்வதற்காகவே அத்தனை நூல்களையும் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு அசாதாரணமானவன். நான் ஏன் இவனிடம் பேச வேண்டும்? சிந்தனைகள் வலுக்க அவளது பெயரை மட்டும் கேட்டேன். அவள் பெயர் மதிவதனி என்றான். அதன் பின் அந்த இடத்தை விட்டு அகன்றேன்.அடுத்த நாள் அவளை கோவிலில் சந்தித்தேன். அவளது பெயரைச் சொல்லி அழைத்தேன். அவள் திரும்பிப் பார்த்தாள். அவள் பெயர் அதுதான் என்று ஊர்ஜிதம் ஆனது. ஆனால் எப்படித் தொடங்குவது. அதன் பின் அவளிடம் ஒன்றும் பேசவில்லை. மௌனியாக இருந்தேன். அவள் என்னைப் பார்த்து மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு ஒயிலாக நடந்து சென்றாள். அவள் நடந்த நடை சற்று விநோதமாகப்பட்டது. அவள் என்னைக் கவரும் விதமாய் இருக்கவேண்டும் என்பதற்காகவே இடுப்பை வெட்டி நடக்கிறாள் என்று புரிந்தது.இவள் மாயை. இந்த உணர்வு மாயை என்றால் மனதிற்குள் பொங்கி வரும் பிரவாகத்திற்கு பொருள் என்ன? காமமா? உடலின் வேட்கையா? தினவெடுத்த உடலின் பசியா? அதைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்? அவளோடு கூடுவதா? அப்படியென்றால் இந்த சிந்தாந்தங்கள்? படித்த சித்தாந்தங்கள்? எது மாயை? கண் முன் காணுகின்ற பெண்ணும் அவளது வளைவுகளுமா? இல்லை இவைகளை மாயை என்று சொல்லுகின்ற உபநிசத்துக்களா? ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், என் பார்வை அவளது பின்னழகை மட்டும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த உணர்வு அவளுக்குள் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். தூரத்தில் இருந்து அவள் திரும்பிப் பார்த்தாள். பின் வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள். அந்தக் கண நேரப் பார்வை என்னை அணு அணுவாய்க் கொல்ல ஆரம்பித்தது. இவளது பார்வைக்கு மட்டும் அப்படி என்ன சக்தி?அவளது வீட்டிற்குள் விடுவிடுவென்று நுழைந்தேன். அங்கிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள். அம்மனின் மறு உருவம் என்று எண்ணும் அளவிற்கு தடித்த பெண் ஒருவள் நகைகளை வாரிச் சூடியிருந்தாள். அவள் உடலில் ஒரு பாகம் கூடத் தெரியவில்லை. அவ்வளவு நகைகள் அணிந்திருந்தாள். என்னைக் கண்டதும் அவள் சத்தம் போட ஆரம்பித்தாள். அவள் சத்தம் கேட்டு மாடியிலிருந்து படபடவென்று ஓடி வரும் கொலுசொலி கேட்டது. மேலே பார்த்தேன். அங்கு மதிவதனி நின்று கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் சிரித்து விட்டாள். அந்தச் சிரிப்பு என் ஆண்மையை சோதிப்பதாக இருந்தது. என்னை இழிவுபடுத்துவதாக இருந்தது. பின் அவள் உள்ளே சென்று மறைந்து விட்டாள். அதற்குள் அந்த வீட்டில் இருந்த ஆண்கள் என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள். "அவளின் விலை எதுவாக இருந்தாலும் கொடுக்கத் தயார்" என்றேன். "அதெல்லாம் உன்னால் முடியாது.. பேசாமல் போ.." என்று விரட்டி விட்டார்கள். ஒரு கணம் நான் செய்த தவறைக் கண்டு மனம் வருந்த மனம் போன திக்கில் நடந்தேன். கிருதுமால் நதி வந்தது. அதில் மூழ்கி எழுந்தேன். செய்தது பாவம் என்று மனம் வதைத்தது. கிருதுமாலில் பாவங்கள் கரைந்து போக வேண்டும் என்று வெறி கொண்டு மூழ்கி மூழ்கி எழுந்தேன். உடல் சுத்தமானது. மனது? கேள்விகள் மீண்டும் எழ ஆரம்பித்து விட்டன. இவைகளில் இருந்து தப்பவே முடியாதா என்னால்? ஆடை முழுதும் நனைந்திருக்க அப்படியே எழுந்து குருகுலம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வழியில் குரு வந்து கொண்டிருந்தார். அழும் குழந்தைக்கு தாயைக்கண்டதும் ஏற்படும் பரவசம் எனக்குள் பிரவகித்தது. நடந்த சம்பவங்களை அவரிடம் சொல்லி ஏதேனும் பிராயச்சித்தம் கிடைக்க வழி பண்ண வேண்டும். அவரை விட்டால் எனக்கென்று யாரிருக்கிறார்கள் இவ்வுலகில்?"குருவே என்னை மன்னியுங்கள்.. நான் ஒரு பிழை செய்துவிட்டேன்.."

"என்ன பிழை? விளக்கமாகச் சொல்" என்றார். நடந்த அனைத்தையும் சொன்னேன்."நீ குருகுலத்தில் இருக்கும் விதிகளை மீறிவிட்டாய். நீ செய்த பிழைக்கு விமோசனம் கிடையாது.. இச்சைகளில் வீழ்ந்தவனுக்கு கிடைக்கும் தண்டனை என்னவென்பதை குருகுலத்தில் பயிலும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்""காமம் பிழையா? பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் இச்சைக்கு நான் என்ன செய்வேன்?""முடியும்.. மனதை தன் கைக்குள் வைத்திருக்கவேண்டும். அவனால் மட்டுமே இவ்வுலகை வெல்ல முடியும். நீ செய்த பிழைக்கு.. இந்தக் கிருதுமால் நதிக் கரையிலேயே கல்லாகச் சமைவாய்..""ஸ்வாமி.." என் உதடுகள் இவ்வார்த்தைகளைச் சொல்லி முடிக்கும் முன் கல்லாகி...

முத்து
19-05-2005, 07:28 PM
நன்றி இனியன்,
ராம்பாலின் இந்த அருமையான கதையை மீண்டும் பதிந்ததுக்கு.

gragavan
23-05-2005, 07:25 AM
அடடா! அற்புதமான கதை. அருமை ராம்பல். நீண்ட நாட்கள் கழித்து உங்கள் கதையை...வருணனையை....படிப்பது ஆனந்தம்.

கருத்துக்கு வருவோம். அந்தச் சிலைக்குப் பக்கதிலேயே மற்றொரு சிலை. அது குருவினுடையது. இயல்வை மறுத்துரைத்து அதற்குச் சாபமும் இட்ட குற்றத்திற்கு இயற்கைத் தேவதையே கொடுத்த சாபம்.

rambal
01-06-2005, 07:03 PM
கதைக்கு சரியான விமர்சணம் வராத நிலையிலும்..
எனது அடுத்த கதையைப் பதிகிறேன்..

karikaalan
02-06-2005, 02:33 PM
அகலிகை வம்சம்.......

அருங்கேதன்.... அவள் உடலளவிலும் சோரம் போகிறாள்; இவன் மனதளவில், உடலின் உந்துதலினால் சோரம் போனதாகக் குரு சொல்கிறார். அதற்கு தண்டனையும் வழங்குகிறார்.

அகலிகைக்கு ஒரு இராமன்; இவனுக்கு யாரோ!

===கரிகாலன்

rambal
15-06-2005, 06:03 PM
இது கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டிய கதை.. விளக்கங்களுடன் விரைவில்..
அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

kavitha
20-06-2005, 05:58 AM
கதை பல சிந்தனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. உங்கள் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன். நன்றி.

இளசு
11-10-2005, 10:26 PM
ராம், நலமா?
உனக்கே உரித்தான தனித்துவ நடை, பாணி..
உரையாடல்கள் கொஞ்சம். மன விசாரணைகளே பிரதானம்.
பஞ்சுத்துகள், பறவை இறகு என்று வர்ணனைகள் தெளிக்கப்பட்டிருந்தாலும், கதையின் மைய ஆழக்கருத்தை அவை சிதறடிக்க முடியவில்லை.

கதையைப் பற்றி,
அண்ணல் சொன்னது போல்---
உடலால், மனதால் --- ''நெறி'' பிறழ்வோர் வம்சம்...
ஆண்= பெண் என்னும் சமநோக்கு..
இப்படி சிந்தனைகள் போனாலும்,
உன் விளக்கங்கள் அறிய நானும் ஆசைப்படுகிறேன்.

( சின்ன சந்தேகம்- சந்தியா வந்தனம் என்பது மாலையில் செய்யப்படுவதல்லாவா?)

gragavan
12-10-2005, 08:04 AM
இளசு, காலைச் சந்தி மாலைச் சந்தி என்று இரண்டு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

இளசு
12-10-2005, 10:35 PM
நன்றி இராகவன்.. நான் இதுவரை கேள்விப்படாதது.

நாலு(ளு)ம் தெரிந்து கொள்ள நம் மன்றம் நல்ல இடம்..

aren
02-01-2006, 02:05 PM
அற்புதமான கதை. ஆனால் ஒரு பெண்ணை நினைத்தது பாவமா? அதற்கு இந்த அளவு தண்டனையா? கொஞ்சம் மனதை நெருடுகிறது.

அருமையான வர்ணனையில் அழகாக எழுதியிருக்கும் கதை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
07-02-2008, 08:23 AM
அருங்கேதனுக்கு ஏற்பட்ட இச்சை இத்தனை பெரிய தண்டனைக்குகந்ததா..?
குரு முழுதுமாய் ஞானம் பெறவில்லை என்பதையே அவருடைய அவசர சாபம் காட்டுகிறது.தொட்டால் சுடும் என்று சொல்வதற்கும் தொட்டுபார் என்று வலியுறுத்தி சுட்டதை உணர்ந்து கொள்ள வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.வயதும்,அந்த வயதில் ஏற்படு இயற்கையான உணர்வுமே அவனை அந்த வீதிக்கு நடத்திச் சென்றது...இதில் குற்றம் யாருடையது என்ற தர்க்கம் அவசியமில்லை.
விலை கொடுக்க முடியாது என்று விரட்டப்பட்டபின் தான் செய்ய நினைத்தது தவறு என்று உணர்ந்து பாவம் போக்க நதி நீராடுகிறான்.அதே நிலையில் குருவிடம் மனம் திறக்கிறான்.
இதில் இரண்டு விஷயம்...ஒன்று அனுமதிக்கப்பட்டிருந்தால் அவன் அந்த சுகத்திலேயே அமிழ்ந்திருப்பான்.அல்லது இவ்வளவுதானா இது என்று தெளிந்து திரும்பியிருப்பான்.

ஆனால் எதுவுமே நிகழவில்லை...இருந்தும் அதை நினைத்ததே குற்றமென்று தண்டனையும் பெற்றது சரியில்லை.என்னைப் பொறுத்தவரை குருவே குற்றவாளி.

எழுத்து மிகப் பிரமாதம்.எண்ண ஓட்டங்கள் சொல்லப்பட்ட விதம் அருமை.

மதி
07-02-2008, 08:41 AM
எது குற்றம்?
இச்செயல் செய்தால் குற்றம்..இச்செயல் புரிதல் நன்மை என்று பகுத்துரைத்தவர் யார். யாரோ வகுத்த பாதையில் இன்று பயணிக்கிறோம். கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொண்டு.

அருங்கேதனுக்கு கிடைத்த தண்டனை சரியா.? சொல்லத் தெரியவில்லை. குருக்குல கல்வி எப்படிப்பட்டது? அதனால் எவ்வாறு மனதினை கட்டுப்படுத்த இயலும்.. என்றெல்லாம் தெரியாவிடினும்.. சிஷ்யனின் பாவ மன்னிப்புக் கதறலைக் கூட சரியாக கேளாமல் அவசர அவசரமாய் சாபமிட்ட குருவும் குற்றவாளியே..

அருமையான நடையில் பல வர்ணனைகளுடன் எழுதப்பட்ட கதை.. இதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவள் பெயர். "மதிவதனி". அப்பா எனக்கு முதன்முதலில் வைத்தப் பெயர்.. மதிவதனன். வழக்கில் அது இல்லாவிடினும் அப்பெயர் கொண்டோர் யாரேனும் உளரா என வெகுநாள் தேடியிருக்கிறேன். இன்று கதையில் இப்பெயர் கண்டதும்.. எழும் சந்தோஷத்திற்கு அளவில்லை..

நன்றி ராம்பால்.

யவனிகா
07-02-2008, 09:57 AM
யார் இந்த ராம்பால்...ஆவல் மேலிடுவதை அடக்க முடியவில்லை. கதையோட்டத்தில் சிறு மாறுதல் வரும் பட்டத்தில் இன்னும் சுவை கூடியிருக்கும். அருங்கேதன் சிலைடாக சபிக்கக் படாமல்...ரிசியாக மாறியிருந்தாலும் கல்லுக்குச் சமம் தான்..வேதங்களும் உபநிசத்துக்களும் உச்சரிக்கும்,மனதையும் உடலையும் அடக்கி வைத்திருக்கும் கல்...அவனது குருவைப் போலவே...

அசரடிக்கும் எழுத்தும் எண்ணமும்...ராம்பால் போன்ற சகோதரர்கள் மீண்டும் மன்றத்தில் எழுத மாட்டார்களா?

அகலிகை வம்சத்தினர்...அறியாத் திரையின் பின் எத்தனை பேரோ..குற்றம் செய்யாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டு?